June 24, 2008

தமிழ்சினிமாவில் இயக்குநர்களின் பொற்காலம் எவ்வளவு?

தமிழ்நாட்டு இயக்குநர்கள் பலரின் சிறந்த படங்கள் எல்லாமே அவர்கள் துறைக்கு வந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ( கல்யான சாப்பாடு இயக்குநர்களான எஸ் பி முத்துராமன்,பி வாசு,கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், ஹரி போன்றவர்கள் பட்டியலில் இல்லை) உதாரணமாக

ஸ்ரீதர் – காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம்
பாலசந்தர் – எதிர் நீச்சல், பாமா விஜயம், அவள் ஒரு தொடர்கதை (எல்லா மெகா சீரியலுக்கும் இப்படம்தான் ஆணிவேர்)
மகேந்திரன் – உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும்
பாரதிராஜா – பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்
பாக்யராஜ் - இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள்
டி ராஜேந்தர் – ஒரு தலை ராகம், இரயில் பயணங்களில்
மணிரத்னம் – மௌனராகம், நாயகன்

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்பின் எடுக்கப்பட்ட இவர்களது படங்கள் முந்தைய படங்களைப்போல் சிறப்பாக இல்லை. இவை காரணமாக இருக்குமா?

1) துறைக்கு வராததற்கு முன் சமூகத்துடன் இணைந்து பழகி தங்களை பாதித்த, தாங்கள் உணர்ந்த சம்பவங்களுடன் படம் எடுத்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது.

2) வாய்ப்பு கிடைக்கும்வரை தங்கள் கதைகளை அசை போட்டு அசை போட்டு மெருகேற்றியவர்கள், அதன்பின் தொடரும் வாய்ப்புகளால் அதற்குரிய நேரம், சிரத்தை எடுத்துக்கொள்ளாதது

3) மாறும் மக்கள் ரசனை, புதிய தொழில்நுட்பங்களை (மணிரத்னம் இதில் விதிவிலக்கு) கணக்கில் எடுத்துக்கொள்ளாதது

4) சாச்சுரேஷன்?

5) தொடர் வாசிப்புகள், தேடல்களை குறைத்துக்கொள்வது.


இப்பொழுது உள்ள பாலா, அமீர், மிஷ்கின் போன்றோர் தங்கள் வசந்த காலத்தில் உள்ளார்கள். இவர்களும் நீர்த்துப் போவார்களா இல்லை காலத்தை வெல்வார்களா?

காலத்தை வென்று சிறந்த படங்களை இவர்கள் தொடர்ந்து தர வாழ்த்துவோம்

June 07, 2008

தமிழ் சினிமாவில் சிறு நகரங்களின் சித்தரிப்பு


தமிழ் சினிமாவின் கதைக்களம் பொதுவாக இரண்டு எல்லைகளில் அடங்கிவிடும். கிராமபுற அல்லது பெருநகர படங்கள். அவர்கள் பாஷையில் சொல்வதானால் சிட்டி சப்ஜெக்ட், வில்லேஜ் சப்ஜெக்ட். இந்த சிட்டி வகையறாவில் வெளிநாடு,ஊட்டி போன்றவை அடங்கும். வில்லேஜ் வகையறாவில் பாரதிராஜா,சேரன்,அமீர்,தங்கர் பச்சான் போன்றோர் எடுக்கும் இயல்புக்கு ஓரளவு ஒட்டிய படங்களும், கே எஸ் ரவிக்குமார், ஹரி, சங்கிலி முருகன் போன்றோர் எடுக்கும் மசாலா கிராம படங்களும் அடங்கும். இரண்டுக்கும் நடுவே தாலுகா தலைநகரம் என்ற அளவில் இருக்கும் சிறு நகரங்களை பிரதிபலிக்கும் படங்கள் 75 ஆண்டு தமிழ்சினிமாவில் மிகக்குறைவே


டி ஆரின் ஒரு தலை ராகம், ராபர்ட் ராஜசேகரின் பாலை வனச் சோலை, பாக்கியராஜின் இன்று போய் நாளை வா, சுபாஷின் ஏழையின் சிரிப்பில், பாலாவின் சேது மற்றும் பாலாஜி சக்திவேலின் கல்லூரி போன்ற சில படங்கள் மட்டுமே நம் உடனடி நினைவுக்கு வரும் சிறு நகர மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள். தென்மாவட்ட கிராமங்களை பாரதிராஜா, சேரன் போன்றொரும், மேற்கு மாவட்டங்களை உதயகுமார் போன்றவர்களும், வடக்கு மாவட்டங்களை தங்கர் பச்சானும் அவர்களின் இயல்புகளுடன் சித்தரித்தனர். கே எஸ் ஆர்,ஹரி. பி.வாசு போன்றவர்கள் இந்த லிஸ்ட்டில் இல்லை. அவர்கள் கிராமத்தை ஒரு பேக் டிராப்பாக மட்டும் உபயோகப்படுத்தினார்கள்.


சிறுநகர மனிதர்களின் உளவியல் கிராமப்புற மற்றும் பெருநகர மனிதர்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களின் பூர்வீகம் கிராமமாக இருந்தாலும் அவ்ற்றுடன் அவர்கள் இயைந்து போவதில்லை. பெருநகரங்களுக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்தாலும் அங்கும் இரண்டற கலக்க முடிவதில்லை. திரைப்படம்,தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் யாவும் கிராமம் அல்லது பெரு நகரத்தை மட்டுமே முன்னிருத்துவதால் அவர்களின் அடையாளத்தை அதில் காணமுடியாம்ல் சலிப்படைகிறார்கள். தேவி என்னும் வாரப்பத்திரிக்கை ஓரளவுக்கு நெல்லை, கன்னியாகுமரி சிறு நகரங்களை பற்றி பேசுவதால் அப்பத்திரிக்கை அப்பகுதிகளில் மட்டும் நன்கு விற்கிறது

கிராமங்களுக்கு வயல்,ஆறு சிட்டிக்கு பீச், ஷாப்பிங் மால்,காம்பிளக்ஸ் தியேட்டர்கள், பெரிய கல்லூரிகள் என அவுட்லெட்கள் பல உள்ளன. சிறு நகரங்களில் என்ன அவுட்லெட் இருக்கிறது? அவர்களின் பொழுது போக்கு, வாழ்வியல் என்ன என்பதை தமிழ் சினிமா பேசவே இல்லை. இதற்கு காரணம் என்ன?


1) பெரும்பாலான இயக்குனர்கள் கிராமப்புரத்தில் இருந்து வந்தது
2) சிறுநகர மக்கள் பெருங்கனவுகள் இல்லாமல் வளர்க்கப்படுதல்
(படி, வேலைக்குப் போ, வீடு கட்டு அப்புறம் செத்துப்போ)
3) அவர்களின் கற்பனையை வளர்க்கும் கூறுகள் சிறு நகரத்தில்
இல்லாமை
4) சிட்டி சப்ஜெக்ட்னா கல்லூரி, காதல், தாதா வில்லேஜ்னா ஜாதி,நாட்டாமை,பழி வாங்குதல். இங்க என்னத்தை வைக்கிறது?
5)இயக்குனர்களின் வாழிடச்சூழல் (பால சந்தர், மணி ரத்னம் - உயர் நடுத்தர வர்க்க படங்கள், பாலா - நோயுறு தன்மை)

நான் சிறுவயது முதல் சிறு நகரங்களில் வசித்தவன். என்னால் எந்த படைப்புகளுடனுடம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அய்யா புண்ணியவான்களே நாங்களும் இருக்கோம். எங்களையும் கண்டுக்கோங்க

June 06, 2008

திண்ணையும் திருவிழாவும்


எங்கள் தெருவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது முன்பொரு காலத்தில். தொலைக்காட்சிகள் தங்கள் கொடூர கரங்களால் குடும்ப உறவுகளை குலைத்திராத காலத்தில் அந்த திண்ணைகள் மகளிரால் நிரம்பி வழிந்தன. கணேஷ் அப்பா வந்துட்டார், குமார் அப்பா வந்துட்டார் போன்ற குரல்கள் கேட்டதும் அவருக்குரியோர் தத்தம் இல்லங்களுக்கு திரும்புவோர். மாலை 6 மணி அளவில் தொடங்கும் இந்த சந்திப்புகள் இரவு 8 மணி அளவில் முடிவுறும். அக்காலத்தில் எல்லார் வீடுகளிலும் மின்விசிறி இல்லாததும் அவர்களை திண்ணைக்கு வரவழைத்தது. புரணி என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது அங்குதான். பெரும்பாலும் பழைய சினிமா கதைகள், பிறந்த புகுந்த வீடு பெருமைகள் சில கிசுகிசுக்கள் பரிமாறப்படும்.



சாதாரண நாட்களில் டல்லடிக்கும் இந்த திண்ணைகள் திருவிழா சமயங்களில் டாலடிக்கும். அந்நாளைய பதின்மவயது பெண்களின் தேசிய உடையான பாவாடை சட்டை மற்றும் தாவணிகளால் திண்ணை அலங்கரிக்கப்படும் . (இப்போதும் அணிகிறார்களே சுடிதார் நைட்டி :-(( ). அவர்கள் போடும் கோலமும் அதற்கு நண்பிகளின் கமெண்ட் என தெருவே கலகலப்பாக இருக்கும். மாட்டுப்பொங்கல் அன்று எல்லோரும் திண்ணையில் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது, மருதாணி வைப்பது என அமர்க்களப்படும். தீபாவளி அன்று அவர்கள் திண்ணையில் நின்று கொண்டு அண்ணன் தம்பிகள் வெடிவெடிப்பதை கலாய்ப்பார்கள். அதெல்லாம் ஒரு வசந்த காலம்.



இந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வெறிச்சோடிய திண்ணைகள் என்னை வரவேற்றன. பல திண்ணைகள் வீட்டின் வரவேற்பரையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த 6 – 8 ல் அவர்கள் நெடுந்தொடர் கதாபாத்திரங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தனர். வாம்மா திண்ணையில உட்கார்ந்து பேசலாம் என்ற என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள் அம்மா. வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும் தயிர்,வளையல் விற்போர், ஈயம் பூசுதல்,பிளாஸ்டிக் ரிப்பேர் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது மட்டும்தான் இப்பொது திண்ணைகள் உயிர் வாழ்கின்றன.

தலை பாலபாரதி ஆரம்பித்து சென்ஷி சொன்னதற்காக முதலில் எழுதி விட்டேன். ஆர்வமுள்ளவர்கள் திண்ணை பற்றி எழுதலாம். ஆர்வம் தெரிவித்த முத்துலட்சுமி அவர்களை அடுத்து எழுத அழைக்கிறேன்

திண்ணை பற்றிய அணைத்து பதிவுகளையும் காண

இரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்


முட்டை இல்லாமல் கூட ஆஃபாயில் போட்டு விடலாம் ஆனால் பாலபாரதி மற்றும் லக்கிலுக் இல்லாமல் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவது முடியாத காரியம். வரும் ஜூன் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் சென்னையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலை தனிக்கட்டை பிரச்சினை இல்லை. லக்கி தான் வீட்டை ஏமாற்றிவிட்டு கலந்து கொள்ளவேண்டும். கடந்த பதிவர் சந்திப்புகளிலேயே அவர் தன்னிடமிருந்த பொய்களை காலி செய்து விட்டதால் இந்த சந்திப்புகளுக்கு அவசரமாக இரண்டு பொய்கள் தேவைப்படுகின்றன. கைவசம் வைத்திருப்போர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சிறந்த காரணத்துக்கு கீழ்க்கண்ட பரிசுகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்

(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்
(2) வீராசாமி பட டி வி டி
(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்
(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி

பதிவர் சந்திப்பு பற்றிய விபரங்களுக்கு

June 05, 2008

ஜூன் 15 பதிவர் சந்திப்பில் உண்மைத்தமிழன் விவகாரம்


சமீப காலமாக உண்மைத்தமிழன் தினமும் ஒரு பதிவுக்கு 50 முதல் 100 வரை பின்னூட்டம் போடுவது பதிவர்கள் யாவரும் அறிந்ததே. இந்த தனி நபர் பின்னுட்ட சுனாமியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல பதிவர்கள் கவலைப்பட துவங்கிஉள்ள நிலையில் ஜூன் 15 தமிழ்மண நிர்வாகிகள் மட்டும் பதிவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.இதன் காரணமாக பின்னூட்ட உயரெல்லை மீண்டும் அமலுக்கு வந்தால் என்ன செய்வது என கும்மி மட்டுமே அடிக்கும் அமீரக பதிவர்கள் தங்கள் வருத்தங்களை சென்னை பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதால் அவர்கள் இந்த பிரச்சினையை அன்றைய தினம் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இப்படி ஏதும் விவாதம் நடைபெற்றால் அதை எதிர்த்து தீக்குளிப்போம் (டீ இல்லை) என்று உன்மைத்தமிழன் ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காரணத்தால் அன்று காவல் துறை பாதுகாப்புடன் பதிவர் சந்திப்பு நடைபெறும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்று எந்த பிரச்சினையும் நடக்காமல் எப்படி சந்திப்பு நடத்துவது என்பதற்காக அமெரிக்க எஃ பி ஐ யிடம் பயிற்சி பெற்ற திரு பாஸ்டன் பாலா அவர்கள் ஜுன் 8 ஆம் தேதி சென்னை பதிவர்களின் மெக்காவான மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் பயிற்சி கொடுக்க உள்ளார்.

அனைவரையும் வருக வருக என சென்னை பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்

மேலதிக விபரங்களுக்கு இங்கே