August 19, 2011
ரெ.வெற்றி நிலவன் இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர்
துயில் கலைந்த உடன், தெருவில் இருக்கும் சேவல்களை எழுப்பி கூவச் சொல்லிவிட்டு பத்திரிக்கை முகவரும் நண்பருமான பாலனின் பணியிடத்திற்க்கு சென்று பணிகளை மேற்பார்வையிடுவார் வெற்றி நிலவன். அன்றுவந்த செய்தித்தாள்கள், வார மற்றும் பருவ இதழ்கள் அனைத்தையும் நான்கைந்து கோப்பை தேநீர் துணையுடன் வாசித்து முடிப்பார்.
பின்னர் வீட்டில் குளித்து, வெள்ளுடை அணிந்து நகர கழகத்திற்கு வருவார். அங்கு வந்து முரசொலியை சுவாசித்துவிட்டு, அருகிலிருக்கும் பட்டுக்கோட்டை அழகிரி படிப்பகத்து சுவற்றில் எழுத வேண்டிய செய்திகளை எழுதிக் கொடுப்பார்.
பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோராமல் மரம் வெட்டும் விவகாரம், கண்மாய்க்கு நீர் வரவேண்டிய ஓடைகளில் ஆக்ரமிப்பு போன்ற பிரச்சினகளை அலசிவிட்டு நன்பகல் 12 மணி அளவில் நண்பரது அசைவ உணவகத்துக்கு வந்து காசாளர் இருக்கையில் அமர்வார்.
இப்பொழுது ஓரளவுக்கு அவரது பின்புலம் புலப்பட்டிருக்கும். ஆம் அவர் ரெ.வெற்றிநிலவன், இளங்கலை (வரலாறு), பொதுக்குழு உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணாவின் பேச்சாலும், எழுத்தாலும், கொள்கைகளாலும் கவரப்பட்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டவர். ஜெயச்சந்திரன் என்ற பெயரை வெற்றிநிலவன் என மாற்றிக் கொண்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய தளகர்த்தராக விளங்கியவர். தொடர் வாசிப்புகளால் பகுத்தறிவாளராகவும் விளங்கியவர்.
தன் தாயார் இறந்தபோது, அந்தக் காலத்தில் தீப்பெட்டி என்று ஒன்று இல்லாததால்தான் கொள்ளிப்பானை என்ற வழக்கம் வந்தது. இப்போது அது எதற்கு என பெரியாரின் வார்த்தைகளை பேசி கொள்ளிப்பானை தூக்க மறுத்தவர். ஆனால் தன் ஒரே மகனுக்கு பெயர் சூட்டும் வைபவத்தில்தான் வீட்டில் முதன் முதலாக தன் கொள்கைத் தோல்வியைச் சந்தித்தார்.
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்விட்ட தாளமுத்து, நடராஜன், அசுரன் என்று வர்ணிக்கப்பட்ட ராவணன், என இவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் தன் மகன் பெயர் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் மனைவியின் எதிர்ப்பால் பின் வாங்கினார். எண்ணியலின்படி, பிறந்த நட்சத்திரத்திற்க்கு ஏற்ப ச,சு,செ வில் பெயர் அமையலாம் என்றதும், “செல்ல உதய சூரியன்” என்றார். மனைவி ”சுரேஷ்” என்றார். பின் மிதிவண்டியில் செல்ல உதய சூரியன் என எழுதி திருப்திப் பட்டுக்கொண்டார்.
தொடர்ச்சியான கழகப் பணிகளால் தலைமையின் கவனத்தை ஈர்த்தார். நகரச் செயலாளர் பதவி கிடைக்க வேண்டிய சூழ்நிலையில், மாவட்ட அரசியல் நிர்ப்பந்தங்களால் வேறொருவருக்கு அது தாரை வார்க்கப்பட்டது. அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையின் பேரில், ஆறுதல் பரிசாக பொதுக்குழு உறுப்பினர் பதவி வரப் பெற்றார்.
அவர் நண்பர் சிறிது முன்கோபப் பேர்வழி. உணவகத் தொழிலுக்கு பொறுமை அவசியம். அதுவும் அவ்வூரில் கூடுதலாகவே தேவைப்படும். நன்றாகவேயிருந்தாலும், ”இவ்வளவு மட்டமான குழம்பை வைத்து வியாபாரம் செய்துதான் இவர்கள் தங்கள் மனைவியருக்கு பூ வாங்கித்தர வேண்டுமா?” என அர்ச்சனை செய்பவர்கள் அங்கே அதிகம். அப்படிப் பட்டவர்களை சமாளிப்பது நண்பருக்கு கடினமான ஒன்று. மேலும், வழக்கமான வாடிக்கையாளர்களின் மனதறிந்து பரிமாறுபவர்களை வேலை வாங்குவதிலும் வெற்றிநிலவன் கைதேர்ந்தவர்.
மூன்று மணி அளவில் கணக்கை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு மாலை கழக அலுவலகத்திற்கு திரும்புவார். இரவானதும் மீண்டும் காசாளர் பணி. கழகம் அறிவிக்கும் அறப் போராட்டம், பொதுக்கூட்டம், தேர்தல் காலங்களுக்கு இந்த நேர அட்டவணை பொருந்தாது.
இதனால் நண்பர் அளிக்கும் மதிப்பூதியமே குடும்பத்தின் வருமானமாக இருந்து வந்தது. 89ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றதும் அவர் மனைவி விடிவுகாலம் வந்ததென அகமகிழ்ந்தார். ஆனால் வெற்றிநிலவனோ தனக்கென சில கொள்கைகளை வைத்திருந்தார். வருடத்துக்கு இரண்டு வேலை வாய்ப்புகள், மாறுதல் உத்திரவுகளுக்கு மேல் அமைச்சர்களை தொந்திரவு செய்யக்கூடாது, அதுவும் அத்தியாவசியமாக தேவைப்படுபவர்களுக்கே என்பது போல. ”ஊதியக்குறைவு மணாளனுக்கு வாழ்க்கைப்பட்ட மங்கையருக்கு மாவரைத்து விற்பதுதான் மாவட்ட ஆட்சியர் உத்தியோகம்” என்னும் புதுமொழிக்கு ஏற்ப அவர் மனைவி அத்தொழில் புரிய தலைப்பட்டார்.
96ல் மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்தது. வெற்றிநிலவனின் போக்கில் எந்த் மாறுதலும் இல்லை. இப்பொழுது வீட்டில் அவர் மனைவியின் கை கொஞ்சம் ஓங்கத் தொடங்கியிருந்தது. அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக செவ்வாடை அணிந்து ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இணைந்தார். மகனும் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்து ஒரு வேலையில் அமர்ந்தான். கழகத்தில் புதுப்புது முகங்கள் தென்பட்டன. வைகோவின் நண்பராக இருந்தும் அவர் வெளியேறிய போது கழகத்திலேயே இருந்ததால் அவரின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் பங்கம் வரவில்லை. ஆனால் எந்தவித ஏற்றமும் கிடைக்கவில்லை.
வீட்டிலும், கட்சியிலும் செல்லாக்காசாக அவர் மாறியிருந்த நேரத்தில் தான் அவர் மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது சங்கராச்சாரியார் கைதாகி இருந்தார். வந்த மருமகளோ ரிக், யஜூர் வேதத்தைப் படித்தவளைப் போல ஆச்சாரங்களைக் கடைபிடிக்கத் தொடங்கினார். பிராமணர்களைப் போல ஆக முயற்சிப்பவர்களை “நியோ பிராமணர்கள்” என்று குறிப்பிடும் சமூகம், பிராமணர்களை விட அதிக ஆச்சாரம் கடை பிடிப்பவர்களுக்கான குறியீட்டை கண்டுபிடிக்காதது ஆச்சரியமான ஒன்று.
2006ல் மீண்டும் கழக ஆட்சி. அவருக்குத்தான் அது பெருஞ்சோதனையாக அமைந்தது. நண்பரின் உணவகத்தின் பொறுப்பை அவரது மகன் ஏற்றிருந்தார். வெற்றிநிலவன் உதாசீனப் படுத்தப்பட்டார். மதிப்பூதியமும் இல்லாது மதிப்பிழந்தார்.
மனைவியோ இப்போது வார வழிபாட்டு மன்றத் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். மகனுக்கோ தன் மனைவி கடைபிடிக்கும் ஆச்சாரங்களால் தான் தன் வாழ்வு உயர்ந்ததென்று எண்ணம். வீட்டிலும் மிகவும் அன்னியப்பட்டார். பட்டுக்கோட்டை அழகிரி படிப்பகம் மட்டுமே இப்போது அவரது ஒரே ஆறுதல்.
பெயரன்கள் இருவர். காலை வேளைகளில் அவர்களை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பு இப்போது அவருக்கு. அதனால் காலை உணவுக்கு கவலையில்லை. இரவும் அவர்களுக்கு கதை சொல்லி, சாப்பாடு ஊட்டி, உறங்க வைப்பதால் உணவு கொடுத்து விடுகிறார்கள். ஆனால் மதியம் தான் இறைஞ்ச வேண்டியிருக்கிறது. அண்ணா காலத்து ஆளாயிற்றே. சுயமரியாதை சிறிதாவது இருக்காதா? என்ன?
சமீபத்தில் கழக பொருளாளர் கைதை ஒட்டி நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். கைதாகி, திருமண மண்டபத்தில் இருந்த போது மூன்று மணி அளவில் காவலர்களால் வழங்கப்பட்ட எலுமிச்சை சாதம் தான் இந்த ஆண்டில் அவர் சாப்பிட்ட முதல் மதிய உணவு.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இது கதையில்லை தானே... :(
திமுகாவில் இம்மாதிரி அடிமையாய் இருப்பவர்கள் நிறைய பேர். இவருக்காவது மதிய சாப்பாடு மட்டும்தான் இல்லை.:)
neengal unnum niria elutha vendum
I don't think this is just story, DMK had lot party members similar to the story line.
In fact, the story fits for Karunanidhi too.
Post a Comment