April 23, 2008

சிவாஜியின் சாதனையை தசாவதாரம் முறியடிக்குமா?

தமிழ் வலையுலக வரலாற்றிலேயே அதிக பதிவுகள் போடப்பட்டது சிவாஜி பட விமர்சனத்துக்குத்தான். பின் நவீனப்பதிவர் முதல் கும்மி பதிவர் வரை, ஆன்மிக பதிவர் முதல் பெண்ணிய பதிவர் வரை மற்றும் ஏனைய ஆணிய,பகுத்தறிவு பதிவர்களும் சிவாஜியை துவைத்து தொங்கப் போட்டனர். நான் தேடிய வரையில் 200க்கும் அதிகமான பதிவுகள் தென்பட்டன. அதையடுத்து சென்னை பதிவர் பட்டறை, சுஜாதா மரணம் ஆகியவை அதிகளவில் பதியப்பட்டாலும் சிவாஜியின் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தசாவதாரம் பதிவுகள் இப்பொழுது ஆரம்பித்துள்ளன. பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டுக்கே பத்து பதினைந்து பதிவுகள் வந்துவிட்டன. இனி பாடல் விமர்சனம், பார்த்த அனுபவம், திரை விமர்சனம் என பல கும்மிகள் பாக்கி உள்ள நிலையில் இவை சிவாஜியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. மேலும் பல பதிவர்கள் டிராப்ட் தயாராக வைத்து இருப்பதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.

1)தசாவதாரம் திரைப்படத்தில் பின் நவீனத்துவ கூறுகள்

2) நானும் பார்த்துட்டேன்

3) இந்து மத்ததை இழிவு படுத்தும் தசாவதாரம்

போன்ற தலைப்புகளில் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

April 18, 2008

இந்திய இறையாண்மையை கெடுக்கப்போகும் IPL

IPL ன் கமிசனர் மற்றும் தலைவரான லலித் மோடி சமீபத்திய பேட்டி ஒன்றில் IPL ன் வெற்றி Regional rivalry யை உருவாக்குவதை சார்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இம்மாதிரி செய்கைகள் காலப்போக்கில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? மற்ற நாடுகளில் இம்மாதிரி போட்டிகள் (EPL,County cricket) நடந்தாலும் அங்கே நம் நாடு போல் அதிக பிரிவினைகள் இல்லை. தொடங்கட்டும் பார்ப்போம்.

April 10, 2008

உலகமயமாக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகள்

உலகமயமாக்களால் இந்தியாவிற்கு நன்மையா? தீமையா? என்ற விவாதம் பல மட்டங்களில் நடந்து கொண்டு இருக்கிறது. மற்ற களங்களில் எப்படியோ குழந்தைகள் விசயத்தில் மிகப்பெரும் தீமையே.

உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கால இந்தியாவிற்கு மிகப்பெரும் சுமையாகவே மாறுவார்கள். விளம்பரங்களின் தாக்கத்தால் நமது தட்ப வெட்ப நிலைக்கு மற்றும் உடல் கூறுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நாளடைவில் நிரந்தர நோயாளியாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. விழிப்புணர்வு உள்ள பெற்றோர்களாலேயே இதை தடுக்க இயலவில்லை. இதை விட கொடுமையான விசயம் தவறான கற்பிதங்களினால் மனநலம் பாதிக்கப்படுதல். சிகப்பு நிறம் மற்றும் மெல்லிய உடல் தான் அழகு என்ற கற்பிதத்தால் பல குழந்தைகள் முக்கியமாக பெண் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை மன வளர்ச்சி அடையுமுன் உடல் வளர்ச்சி அடைதல். இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் உணவுப்பழக்கமே. HYPER ACTIVE என்று சொல்லப்படும் சராசரிக்கு மிக அதிகமான சுறுசுறுப்போடு இருக்கும் குழந்தைகள் (இவர்களால் ஓரிடத்தில் அமைதியாக இருக்க முடியாது மற்றும் கவன குறைபாடும் இருக்கும்). இதை அதிகப்படுத்துபவை செயற்கை வண்ணங்கள்,பதப்படுத்தலுக்கு பயன்படும் வேதிப்பொருட்கள் மற்றும் கொழுப்புகள். இவை அனைத்தும் குழந்தைகள் அதிகம் உண்ணும் பொருட்களில் தவறாமல் இப்பொது இடம் பெறுகின்றன. விளம்பரங்களும் இதை உண்பதற்கு குழந்தைகளை ஊக்குவிக்கன்றன. பெற்றோர்களுக்கு புலம்புவதை தவிர வேறுவழியில்லை. இதற்கு என்ன வழி?