Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

November 28, 2016

திங்கள் கிழமை

தோல்வி அடைந்தவனின் ஞாயிற்றுக்கிழமை தான்
எவ்வளவு மோசமானதாய் இருக்கிறது?

குழந்தைகளின் பழுப்பேறிய சீருடைகளைத் துவைக்கும் போது அடுத்த மாதமாவது புது சீருடைகள் வாங்கித்தரவேண்டும் என வருந்த வைக்கிறது.

பக்கத்து வீட்டு கறிக்குழம்பு வாசனை வராமல் சாளரத்தை அடைக்க வைக்கிறது.

நீண்ட நேரம் மணி ஒலிப்பதாய் தோன்றும் ஐஸ்கிரீம் வண்டி விரைவாக கடந்து விடவேண்டுமே என பதற வைக்கிறது.

மாலை வேளைகளில் பக்கத்து வீட்டு குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதை பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்ப்பதை சகிக்க வேண்டியிருக்கிறது.

எந்தப் புள்ளியில் இணையுடன் சண்டை துவங்குமோ என பதைபதைப்புடன் இந்த நாள் விரைவாய் கடந்து விடாதா என எண்ண வைக்கிறது.

சாக்கு சொல்ல முடியாமல் விசேஷங்களில் கலந்து கொண்டு அவமானப் படவேண்டி இருக்கிறது.

இந்த வாரமும் நோயுற்ற பெற்றோரைச் சென்று சந்திக்க முடியவில்லையே என வேதனைப் பட வைக்கிறது.

இத்தனை பிரச்சனைகளையும் மறக்க வைத்துவிடும் திங்கள் கிழமையே போற்றி போற்றி

August 11, 2016

ஆண்களின் வசந்தகாலம்

ஆண்களுக்கு எது வசந்த காலம்? என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும் குறிப்பாக பொருளாதாரத்தில் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஆணுக்கு. 20-21 வயதில் படிப்பு முடிக்கும் ஆணுக்கு குறைந்தது 4-5 ஆண்டுகளில், அதிகபட்சம் 10-12 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது. சராசரியாக படிப்பு முடிந்து 7 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த காலம் மாதிரியான ஒன்று அவன் வாழ்வில் திரும்ப வரவே வராது.

முன்னர் எப்படியோ, ஆனால் இப்போது இந்த வயதில் இருக்கும் ஆண்களுக்கு பெரும்பாலும் குடும்பப் பொறுப்பு இருப்பதில்லை. வரதட்சனை கொடுக்காமல் அக்கா வாழாவெட்டியாக இருக்கிறார், தங்கைக்கு சீருக்கு பணம் சேர்க்க வேண்டும், தம்பி படிப்புக்கு அப்பா காசு கேட்கிறார் போன்ற பேச்சுக்கள் இப்போது பெருமளவில் இல்லை. மத்திய வர்க்க பெற்றோர், தன் மகனிடம் எந்த பண உதவியும் எதிர்பார்க்காமல் தங்கள் கடமைகளை முடிக்கும் நிலையிலேயே இப்போது உள்ளனர். விதிவிலக்குகள் இருக்கலாம். நம்மை பொருளாதார ரீதியாக எதிர்பார்க்காமல் இருக்கும் பெற்றோர் அமைவது ஒரு வரம். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் திருமணத்திற்கு முன்னான காலத்தை வசந்தகாலம் ஆக்கும்.


அமெரிக்காவில் உள்ள ஏடி அண்ட் டி ஆராய்ச்சி சாலையில் நடந்ததாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அங்கு ஒரு ஆராய்ச்சியாளர், தன் மேலதிகாரியிடம் சென்று இவ்வாறு கேட்டாராம், “நானும் என்னுடன் பணிபுரிபவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் இங்கே ஒரே நாளில் தான் வேலைக்குச் சேர்ந்தோம். இருவரும் அறிவைப் பொறுத்தவரையிலும் ஒரே அளவில் தான் இருந்தோம். ஆனால் தற்போது அவர் என்னைவிட அறிவும் அதிகமாகி. பதவி உயர்வும் பெற்றுவிட்டார். இது எப்படி?”.

அதற்கு அவரின் மேலதிகாரி “நீ உனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்துக் கொடுத்தாய். ஆனால் வேலை நேரம் முடிந்த உடன் அலுவலகத்தை விட்டு கிளம்பி விட்டாய். ஆனால் அவனோ தினமும் 2 மணி நேரம் உன்னை விட அதிகமாக இருந்து இங்கே மற்ற விஷயங்களை கற்றுக் கொண்டான். அவனுடைய மூளையில் நீ கற்றுக் கொண்டதை விட அதிகமான தகவல்கள் குடியேறின. மேலும் இரண்டு விஷயங்களை தெரிந்தவன் அதோடு தொடர்புடைய மூன்றாவது விஷயத்தை, எந்த விஷயமும் தெரியாதவனை விட விரைவாக கற்றுக் கொள்வான். இதனால் அவன் கற்றுக் கொள்ளும் வேகம் அதிகரித்தது.

எந்த ஒரு வேலையோ அல்லது பிரச்சனையோ வரும் போது நம் மூளையானது நம்மிடம் உள்ள தகவல்களைக் கொண்டே அதற்கான தீர்வை எடுக்க முனையும். அதிகமான தகவல்களை கொண்டவன், விஷயங்கள் புரிந்தவன், அதற்கு எளிதான தீர்வை எடுத்து விடுவான். 

தினமும் 2 மணி நேரம் என்பது குறைவான நேரம். ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகள் இரண்டு மணி நேர உழைப்பு என்பது அவனுடைய அறிவை உன் அறிவை விட பல மடங்கு மேலாக்கிவிட்டது. அதனால் எந்த வேலையையும் அவனால் இப்போது உன்னை விட சிறப்பாக செய்ய முடிகிறது என்றார்.


இந்த அதிக நேரமானது நமக்கு திருமணத்திற்கு முன்னரே கிடைக்கும். திருமணத்திற்கு முன் நம்மை நம் வீட்டிலோ,உறவு வட்டங்களிலோ அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன் தங்கையின் பிரசவத்திற்கு போகாத அண்ணனைக் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் திருமனத்திற்குப்பின் தங்கை மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கூட அது ஒரு பிரச்சனையாகும். பெற்றோர்களே கூட திருமணத்திற்குப் பின் தங்கள் மகன் தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்யாணத்துக்கு முன்னாடிலாம் இப்படி இல்லை. அவ வந்து தான் இப்படி என்று அவள் காதுபட வேறு சொல்லி, தேவையில்லாத பஞ்சாயத்துகளில் நம் நேரத்தை விரயமாக்குவார்கள். நம் சுற்றத்தாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போகாவிட்டால், எங்கள் வீட்டிற்கெல்லாம் நீங்கள் வருவீர்களா, கல்யாணத்துக்குப் பின்னாடி கண்ணு தெரியலை என்று குமைவார்கள். அதைவிட மனைவி வீட்டு விசேஷங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம். அவர்களின் ஒன்றுவிட்ட சித்தியின் மகள் வளைகாப்புக்கு கூட நாம் போயாக வேண்டும். சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மனைவிகள், அலுவல நேரத்தில் பணி புரிய அனுமதிக்கிறார்கள். அதற்கு மேல் அங்கு நேரம் செலவு செய்து விட்டு தாமதமாக வந்தால் நாம் வேறு வகை செலவுகளை செய்தாக வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் அது தொடர்பான விஷயங்களுக்கு இப்பொழுது அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. எனவே திருமணத்திற்குப் பின் நம் நேரம் நம் கையில் இல்லை.

வேலைக்காக இன்னொரு ஊருக்கு வந்து, திருமணமாகாத காலகட்டத்தில், நம் இளைஞர்கள் செய்யும் இன்னொரு நேரச் செலவு, உணவு தேடி அலைவது. வார நாட்களின் இரவுகள், வார இறுதி நாட்களில் சாப்பிட என்று பைக்கில் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் என்பவர்களைத்தான் மன்னிக்கவே முடியாது. அத்தியாவசிய சமையலைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாத்திரம் கழுவுவது, அதனால் ஏற்படும் சண்டைகள், வீட்டுக்கு சாமான் வாங்குவது, சிறு சிறு ரிப்பேர்கள் செய்வது என தங்களின் வசந்த காலத்தை வீணடிப்பவர்கள் இவர்கள். இந்த வேலைகளை எல்லாம் அதிகபட்சம் மூன்று மாதங்களில் திருமணத்திற்குப் பின் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில் வேறு ஊருக்கு வந்து வேலை பார்க்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் இருக்கிறது. மூன்று வேளை சாப்பாடு நேர நேரத்திற்கு கிடைத்து விடும். செலவும் மிகக் குறைவு. ஆண்களுக்கு இது போல ஒர்க்கிங் மென்ஸ் ஹாஸ்டல் இருந்தால் நலம். அதே போல பிரயாண நேரம். தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கிக் கொள்வது நமது நேரம் அனாவசியமாக செலவாவதை குறைக்கும். திருமணத்திற்குப் பின் மனைவிக்கு ஏதுவாக, குழந்தைகளின் கல்விக்காக, எல்லோருக்கும் சிரம்மில்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். மாமியார் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற மனைவியின் நிபந்தனைக்காக தினமும் நான்கைந்து மணி நேரம் பயணம் செய்யும் பலரை நான் அறிவேன்.

இப்போதைய மத்திய வர்க்க இளைஞன் தன் பெற்றோர்க்கு பணம் அனுப்பத் தேவையில்லாத காரணத்தால் சிக்கனமாக செலவழித்தால் நிறைய சேமிக்கலாம். ஏழாண்டுகள் இப்படி சேமிக்கும் பணம், ஒரு மிகப்பெரிய கையிருப்பாக மாறும். அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பினால் அந்நேரத்தில் அது கை கொடுக்கும். அம்மாதிரியான சேமிப்பை நாம் திருமணமான பின் செய்வது மிகக் கடினம்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் அங்கே நம்மை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். வருமானத்தையும் சரியாக சேமித்துக் கொண்டால், நாம் இருக்கும் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மேலே உயர ஏதுவாக இருக்கும். 

இந்த வசந்த காலம் ஒரு ஸ்பிரிங் போர்ட் போன்றது. ஊன்றி அழுத்தி எவ்வினால் சமூக பொருளாதார நிலையின் அடுத்த தளத்திற்கு தாவி விடலாம். இல்லையென்றால் நம் மகனுக்கு பின்னாட்களில் தெரியப்படுத்துவதற்காக இதை எழுதிக் கொண்டிருக்கலாம். 

July 18, 2016

ராஜாதி ராஜா

கேபிள் மூலம் வரும் சானல்களையே பெரும்பாலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த 90களின் இறுதியில் இப்படி ஒரு கதை சொல்வார்கள். ஒருவன் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆக்ஸிடெண்ட் ஆகி, தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று விட்டானாம். பல ஆண்டுகள் கழித்து குணமான அவனுக்கு, பழைய ஞாபகங்கள் ஏதும் இல்லாமல் போனதாம். ஒரு கைக்குழந்தைக்கு மூளையில் இருக்கும் தகவல் அளவுக்கே அவன் மூளையில் தகவல்கள் இருந்ததாம். எனவே தொடர்ந்து, ஞாபகத்தை வரவழைக்க எவ்வளவோ சிகிச்சைகள் செய்தார்களாம். எந்தப் பலனும் இல்லையாம். அதனால் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவன் வீட்டுக்கு வந்ததும் ஓ இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையா என்றானாம். வீட்டாருக்கு, ஆஹா நினைவு திரும்பிவிட்டதே என்று ஒரே சந்தோஷம். ஆனால் வேறு எதுவும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை. அப்பா, அம்மா, அவன் பெயர் கூட தெரியவில்லை. அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமை என்பதை மட்டும் சரியாகச் சொன்னான் என எல்லோருக்கும் குழப்பம். சிறிது நேரம் கழித்துத்தான் அதற்கு பதில் தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா ஓடிக்கொண்டிருந்தது.

ஆம் அந்த அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது. ஒரு மனிதனுக்கு எது வேண்டுமானாலும் மறந்து விடும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பகலில் ராஜாதி ராஜா போடுவது மட்டும் மறக்காது. அவன் ஜீனில் கூட அந்த செய்தி கலந்து விடும் என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.

முதன் முதலில் ராஜாதிராஜா படம் அறிவிக்கப் பட்ட போது ஓரளவு எதிர்பார்ப்பே இருந்தது. அப்போதெல்லாம் ஆண்டுக்கு மூன்று நான்கு ரஜினி படங்கள் வரும். இப்போது போல மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அல்ல. எனவே பட அறிவிப்பு வரும் போது ஏற்கனவே ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். இந்தப் பட அறிவிப்பின் போது கொடி பறக்குது படம் திரையரங்குகளில் இருந்தது. அந்தப் படமும் சரி, அதற்கு சற்று முன்னர் வெளியாகி இருந்த, ரஜினி நடித்த முதல் ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோனும் சரி பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் “ராஜாதி ராஜா” என்ற செய்தி கேள்விப்பட்டதும், இந்த டைரக்டர் ரஜினிக்கு செட் ஆவாரா எனவே ரஜினி ரசிகர்கள் பலரும் சந்தேகப்பட்டனர். பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச் சிமிழ், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே என ரிப்பீட் ஆடியன்ஸ் வரும் சில்வர் ஜூபிலிகளை அவர் கொடுத்திருந்தாலும் ரஜினியின் ஏரியாவான ஸ்டைல், சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் அவர் வீக். நல்ல திரைக்கதை, இளையாராஜாவின் பாடல்கள், நகைச்சுவை இதுதான் அவரது கோட்டை. எனவே எப்படியும் பாட்டு நல்லா இருக்கும். இளைய ராஜா சொந்தப் படம் வேறு, சரி பார்ப்போம். என்ற சராசரி எதிர்பார்ப்பே அந்தப் படத்துக்கு இருந்தது.

1989 ஐ தமிழ்சினிமாவின் தங்க வருடம் எனச் சொல்லும் அளவுக்கு ஏராளமான வெள்ளி விழாப் படங்களும், நூறு நாள் படங்களும் வெளிவந்தன. பிப்ரவரியில் வருசம் 16 வெளிவந்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மார்ச்சில் ராஜாதி ராஜா வெளியானது, வழக்கமான ஆள் மாறாட்டக் கதை என்றாலும் பாடல்கள், ரஜினி, நகைச்சுவை என மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிலாக்ஸாகப் போயி உட்கார்ந்து வரலாம்பா என பேசிக் கொள்வார்கள். அதற்கடுத்த மாதம் அபூர்வ சகோதர்கள், இரண்டு மாதம் கழித்து கரகாட்டக்காரன் என ஆல் டைம் பிளாக் பஸ்டர்களாக தொடர்ந்து இறங்கினாலும், ராஜாதி ராஜா சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. மதுரையில் ஒரே சமயத்தில் இந்த நான்கு படங்களும் வெவ்வேறு மூலைகளில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆர் சுந்தர்ராஜன் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்ற விதியை இந்தப் படம் மெய்ப்பித்து மேலும் ஒரு படி மேலே சென்றது. அந்த சமயத்தில் தான் கொடைக்கானலில் இருந்து தூர்தர்ஷன் ஒளிபரப்பு துவங்கி ஏராளமான வீடுகளில் கலர் டிவி வாங்கினார்கள். அவர்கள் அவ்வப்போது விசேஷ நாட்கள், உறவினர் வருகையின் போது வீடீயோ பிளேயர் மற்றும் சில கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் பார்ப்பார்கள். எங்க வீட்டுல ”டெக்கு” வாடகைக்கு எடுத்து படம் பார்த்தோம் என்று சொல்வது அந்நாளைய நடுத்தர வகுப்பு மக்களின் ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தது.

எப்படி அந்தக் காலத்தில் மக்கள் புது டேப் ரிக்கார்டர் வாங்கும் போது, ஒரு சுப்ரபாத கேசட்டை வாங்கிக் கொள்வார்களோ அது போல, இந்த டெக் எடுக்கும் போதெல்லாம் ராஜாதி ராஜா கேசட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்த டெக் கடையில் நான்கைந்து ராஜாதி ராஜா கேசட் வைத்திருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் வருசம் 16, அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரனோட ஒப்பிட்டால் ராஜாதி ராஜா சிறந்த படம் அல்ல. ஆனாலும் ரஜினி என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தப் படங்களுக்கு ஈடு கொடுத்து அந்நாட்களில் ஓடியது மட்டுமல்லாமல் தொடர்ந்து ரிப்பீட் ஆடியன்ஸ்களை பல ரூபத்தில் பெற்று வந்தது ராஜாதி ராஜா. அந்தப் படத்தில் ரஜினி ”மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி” பாடலில் அணிந்து நடித்த வெள்ளை சட்டை, வெள்ளை பேகி பேண்ட், சின்ன பெல்ட்,கூலிங்கிளாஸ் பள்ளி மாணவர்களிடையே செம ஹிட். பெரும்பாலானவர்கள் அடுத்த ஆண்டு வெள்ளைச் சீருடையை பேகி மாடலிலேயே தைத்தார்கள்.

பத்தாம் வகுப்பு வரை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடும் படி அருகில் உள்ள பள்ளியிலேயே படித்த நான், பதினொன்றாம் வகுப்பிற்கு ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன். முதல் ஒரு வாரம் எல்லாமே புதிதாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. எல்லோரும் சகஜமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு வாரம் கழித்து குரூப் குரூப்பாக பிரிந்து கொண்டார்கள். ஆறாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டலில் இருப்பவர்கள் தங்களுக்குள் சில குரூப்புகளாகவும், ஒன்பதாம் வகுப்பில் இருந்து படிப்பவர்கள் அவர்களுக்குள் சில பிரிவுகளாகவும் பிரிந்து கொண்டார்கள். பதினொன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்தவர்கள் ஊர் மற்றும் படித்த பள்ளி அடிப்படையில் தங்களுக்குள் சில பிரிவாக பிரிந்து கொண்டார்கள். நான் கிட்டத்தட்ட தனி மரமாக விடப்பட்டேன்.

பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் சில நாட்களிலேயே ஹாஸ்டல் வாழ்க்கை வெறுத்துப் போனது. டேஸ்காலர் மாணவர்களிடம் கிளாஸ் நேரத்தில் அரட்டை அடிக்க முடியாத படி ஆசிரியர்கள் எல்லாம் மிலிடரி ஆபிசர்களாய் இருந்தனர். என்னை வீட்டுக்கு அழைத்துப் போய் விடுங்கள் என கதறி வீட்டுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரும் எழுதிவிட்டேன். வீட்டில் இருந்து வந்து, சில நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விடும் இல்லையென்றால் ஊருக்கு கூட்டிப்போய் விடுகிறோம் என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

இந்நிலையில் தான் சரவணன் என்னும் நண்பன் கிடைத்தான். அவனும் பதினொன்றாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்தவன் தான். ஓரிரு வாரம் கழித்தே சேர்ந்திருந்ததால் அவனும் எந்த குரூப்புடனும் ஐக்கியமாகாமல் இருந்தான். மாலை வேளைகளில் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தது மனதை இலகுவாக்கியது. ஹாஸ்டல் பிடித்துப் போனது. சரவணன் நல்ல கலகலப்பான சுபாவம் கொண்டவன், சுயநலம் குறைவாக பொதுநலம் அதிகமாக எண்ணுபவன். நாளடைவில் எங்கள் குரூப்பில் இன்னும் ஒரு நண்பனும் சேர்ந்தான். நான் கமல் ரசிகன்,சரவணன் ஒரு அதி தீவிர ரஜினி ரசிகன். புதிதாய் சேர்ந்த சேகரும் ரஜினி ரசிகன். ஆனாலும் எனக்கும் சரவணனக்கும் இருந்த நட்பு நாள்தோறும் கூடிக் கொண்டே வந்தது. ரஜினி,கமல் சண்டை வந்தாலும் பரஸ்பரம் கிண்டல் கூட செய்து கொள்ள மாட்டோம். எங்களின் நட்புக்கு அடுத்துதான் சேகருக்கு இடம் இருந்தது.

எங்கள் ஹாஸ்டலில் அப்போது மாதம் ஒருமுறை வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து படம் திரையிடுவார்கள். அந்த மாதம் ராஜாதி ராஜா திரையிட்டார்கள். இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்தாச்சு என்று நான் ரூமிலிலேயே ரெக்கார்ட் எழுதிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். சரவணனும், சேகரும் படம் பார்த்துவிட்டு வந்தார்கள். ரூமிற்கு வந்தும் அவர்களிடையேயான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக நான் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன்.

அவர்களுக்கிடையே சிலாகித்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. தொடர்ந்து ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பணக்காரன்,அதிசயபிறவி, தர்மதுரை என இரண்டு ஆண்டுகளில் ரஜினி படங்கள் வந்து கொண்டே இருந்தன. அவர்களுக்கிடையேயான பேசு பொருளும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இருவருக்கிடையேயான நட்பில் மூன்றாவது ஆளாய் வருபவர் யாராவது ஒருவருடன் மிக நெருங்கி விட்டால் இன்னொருவருக்கு ஏற்படும் மனத்துயரம் அதிகமாக இருக்கும். ஏறக்குறைய காதலி, இன்னொருவனை காதலிப்பது போல சொல்லொண்ணா மனத்துயரத்தில் ஆழ்த்தும். அந்த துயரை அப்போது நான் அனுபவித்தேன்.

ஒரு வழியாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஹாஸ்டலில் சக மாணவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது அப்போது பெரிய சம்பிரதாயமாய் இருந்தது. ஒரு தாய் வயிற்றில் அடுத்துப் பிறப்போம் ரேஞ்சுக்கு எழுதிக் கொடுப்பார்கள். ஸ்டடி ஹவர்சில் இந்த கொஸ்டினைப் படிச்சிட்டு நாலு ஆட்டோகிராப் எழுதிட்டு அடுத்து அந்த கொஸ்டினைப் படிக்கணும் என்று ஷெட்யூல் போட்டெல்லாம் ஆட்டோகிராப் எழுதுவார்கள். பொதுவாக முதலில் பொது நண்பர்களிடம் வாங்கிவிட்டு, மிக நெருக்கமான நண்பர்களிடம் கடைசி நாள் அன்றுதான் வாங்குவார்கள்.

எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. சரவணன் நிச்சயம் சேகரை விட எனக்குத்தான் அதிக உணர்வுடன் எழுதித்தருவான் என. கடைசிப் பரிட்சையான பயாலஜியை முடித்துவிட்டு ஆட்டோகிராப் நோட்டை நீட்டினேன். அவன் நோட்டில், அவன் இல்லாவிட்டால் நான் ஊருக்கே திரும்பி இருப்பேன் என்பது முதற்கொண்டு என் நட்பையெல்லாம் கொட்டி இருந்தேன். அவனும் சம்பிரதாய வார்த்தைகளாய் சிலாகித்து எழுதி இருந்தான். அடுத்து நான் ஒரு குறுகுறுப்பில் சரவணன், சேகருக்கு என்ன எழுதி இருக்கிறான் என்று பார்த்தேன். ”இந்த விடுதியிலேயே என் ஆத்ம நண்பன் நீதான்” என்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தான்.

எனக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது. அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது.

January 30, 2016

நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் திருமணம் பற்றிய தற்போதைய எதிர்பார்ப்புகள்.

1. மாப்பிள்ளையின் வயது கண்டிப்பாக 30க்குள்தான் இருக்க வேண்டும். மாப்பிள்ளையின் வயது என்ற கேள்விக்கு இருவத்தி என்று ஆரம்பித்தால்தான் காது கொடுக்கிறார்கள். 25க்கு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சரி, என்ன வேலை என அடுத்து தொடர்கிறார்கள்.

2. அரசு வேலை, சாஃப்ட்வேர், மக்கள் அறிந்த பெரிய கம்பெனிகளில் வேலை என்றால்தான் அடுத்த கேள்வி தொடங்குகிறது.


3. முப்பதாயிரத்துக்கு குறைவான சம்பளம் என்றால் மேல படிக்கணும்னு ஆசைப்படுறா என அசால்டாக கட் செய்துவிடுகிறார்கள்.

4. அரசு வேலை, பேங்க் அல்லது பொறியியல் படித்தவர்கள் என்றால் சரி. டிப்ளமோ, பி ஏ என்றால் போய்யா என்று சொல்லி விடுகிறார்கள்.


5. தொப்பை, கண்ணாடி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். வழுக்கை என்றால் பெரிதும் யோசிக்கிறார்கள்

6. மிலிட்டரி, போலீஸ், வக்கீல் மற்றும் அரசியல் சார்புள்ள குடும்ப வரன்களை இந்த கேட்டகிரியில் இல்லாதவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.


7. வெளிநாட்டு வேலை மாப்பிள்ளை என்றால் பொறியியல் சார்பு பணி ஒன்றுக்கு மட்டுமே மார்க்கெட். மற்ற வேலைகளில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்கு சிரமம்தான்.
8. வீட்டில் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த அக்காவோ, திருமணமாகாத தங்கையோ ஏன் தம்பி இருந்தால்கூட யோசிக்கிறார்கள்.

9. மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணச் செலவுகளை ஏற்கவேண்டும், நாங்கள் இது மட்டும்தான் செய்வோம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார்கள்.

10. மாப்பிள்ளை வீட்டார் தங்களை விட வசதியில் ஒரு படி அதிகமாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

December 27, 2015

வீட்டோடு மாப்பிள்ளை



வீட்டோடு மாப்பிள்ளையாய் இருப்பவர்கள் அல்லது வீட்டில் மனைவியின் அம்மா உடனிருப்போரைக் கண்டறியும் வழிகள்.

அலுவலகத்திற்கு பெரும்பாலும் எல்லா நாட்களும் மதிய சாப்பாடு கொண்டுவந்து விடுவார்கள்.

மாலை அலுவலக வேலை எவ்வளவு நேரம் இழுத்தாலும் முகம் சுளிக்காமல் இருப்பார்கள்.

அனாவசியமாக லீவ் எடுக்க மாட்டார்கள்.

தீபாவளி,பொங்கல்,சரஸ்வதி பூஜை, புத்தாண்டு என எந்த விழாக்காலங்களிலும் பரபரப்பின்றி இயல்பாக இருப்பார்கள்.

அனாவசியமாக கடன் வாங்க மாட்டார்கள்.

வாசிங் மெசின், பிரிட்ஜ், டிவி இவற்றில் எது புது மாடல், விலை விபரம் போன்றவையெல்லாம் தெரியாது. அது குறித்து அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

கெட்-டு-கெதர்களில் பங்கெடுக்க தயங்குவார்கள்,

சக வயது திருமணமான ஆசாமிகளிடம் இருந்து விலகி இருப்பார்கள். திருமணமாகாத இளைஞர்களிடம் ஓரளவு பழகுவார்கள்.

வேலையில் நன்கு கவனம் செலுத்துவார்கள்.

ரகசியமாக பணம் கையிருப்பு எப்போதும் வைத்திருப்பார்கள்.

December 25, 2015

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி

தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பரொருவர் சொல்லுவார், ’என் ஒய்ஃப் கவர்மெண்ட் சர்வண்ட்டுங்க. தமிழ்நாட்டோட எந்த மூலைக்கு அவங்களை ட்ரான்ஸ்பர் பண்ணினாலும் கவலைப்படாம கிளம்பிடுவோம், ஏன்னா எப்படியும் அங்க ஒரு இஞ்சினியரிங் காலேஜ் இருக்கும்ல’. இது போன்ற சூழ்நிலை இல்லாத 80களில் எங்கள் ஊர் பையன்களுக்கு கனவே கலை அறிவியல் கல்லூரிகள் தான்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, மெஜுரா காலேஜ், தியாகராஜா கலை அறிவியல் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, திண்டுக்கலில் ஜிடி நாயுடு கல்லூரி, உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தா கல்லூரி, உத்தம பாளையம் காஜி கருத்த ராவுத்தர் கௌதியா கலைக் கல்லூரி, திருவேடகம் விவேகானந்தா கல்லூரி ஆகியவையே எங்கள் ஊரில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்த கல்லூரிகள். எங்கள் ஊர் பேஸ்கட்பால் விளையாட்டுக்கு புகழ்பெற்றது என்பதால் திருச்சி செயிண்ட் ஜோசப் போன்ற கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும்.

இவற்றுள் எந்த கல்லூரி கிடைத்தாலும் சேர்ந்துவிடும் எங்கள் ஊர்காரர்கள் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என்றால் மட்டும் மிகவும் யோசிப்பார்கள்.

அது ஏனென்றால்…..

எங்கள் ஊரில் சங்கு பிரியாணி ஸ்டால் என்னும் ஒரு கடை இருந்தது. தினமும் நண்பகல் 12 மணிக்கு திறந்து மதியம் 2 மணிக்கு அடைத்து விடுவார்கள். மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, தால்சா, கரண்டி ஆம்லெட், தயிர் வெங்காயம், கொஞ்சம் தயிர்சாதம் இதுதான் மெனு. இதை சாப்பிட்டாலும் பார்சல் என்றாலும் ஒரே பேக்கேஜாகத்தான் கொடுப்பார்கள். ஞாயிறுகளில் பிளாக்கில் கூட பார்சல் போகும். வெள்ளாட்டு கறி மட்டும் தான் உபயோகிப்பார்கள். ஆம்லெட்டுக்கு நாட்டுக்கோழி முட்டை, தால்சாவுக்கு நெஞ்செலும்பு மட்டும், வீட்டு எருமைத்தயிர் தான் சாதத்துக்கும், தயிர் வெங்காயத்துக்கும்.

காமாட்சி அவ்வா என்று ஒருவர். மதிய சாப்பாட்டை கணவனுக்கு பரிமாறிவிட்டு இரண்டரை மணியளவில் வீட்டிலேயே தன் வடைக்கடையைத் திறப்பார். ரெண்டே அயிட்டங்கள் தான். தவலை வடை மற்றும் பஜ்ஜி. சட்னி சாம்பார் எதுவும் கிடையாது. அவ்வளவு பக்குவமாக தவலை வடைக்கு எப்படி அரைப்பார் என்றே தெரியாது, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கூட ஈஸியாக வாங்கிவிடலாம் ஆனால் இந்த பார்முலாவை கடைசிவரை யாராலும் வாங்கமுடியவில்லை. மதியம் 2 மணியில் இருந்தே கையில் தூக்குச் சட்டி, பாத்திரங்களுடன் சிறுவர்கள் காத்திருப்பார்கள். இந்தக் கடையும் நான்கு மணிக்கு மூடப்படும்.

இது போல இன்னும் பல கடைகள். சரசவ்வா ஆப்பம், கோவிந்தம்மா பாட்டி பணியாரம், தாயார் அவ்வா காரச்சீயம் என வகைக்கொன்றாக ஸ்பெஷாலிட்டி கடைகள் இருக்கும். ராஜு ஆப்பக் கடையில் புரோட்டாவிற்கு மட்டும் ஆறு வகைகளில் குழம்பு சட்டிகள் இருக்கும். சாப்பிடுபவர் தேவைக்கேற்ப பல வித பெர்முடேசன் காம்பினேசன்களில் அதைக் கலந்து தருவார்கள்.

இப்படித் தின்றே பழகியவர்களுக்கு ஹாஸ்டல் சாப்பாடு என்பது தூக்கு தண்டனைக்குச் சமம். அதனால் மதுரையில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே சேருவார்கள். ஏனென்றால் மாலை வேளைகளில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாம். அப்படியும் சனி, ஞாயிறுகளில் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்கள். திங்கட் கிழமை போகும்போதும் முறுக்கு,சீடை,இட்லிப் பொடி, பருப்புப் பொடி என அள்ளிக்கொண்டு போவார்கள். இத்தனைக்கும் ஹாஸ்டல் சாப்பாடு நன்றாகவே இருக்கும்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியானது சைவ மடத்தால் நடத்தப்படும் கல்லூரி. அங்கே கைக்குத்தல் அரிசி சாப்பாடுதான் போடுவார்கள். சிற்றின்ப ஆசையை தூண்டவல்ல லாகிரி அயிட்டங்கள் எல்லாம் சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சப்பென்றே சாப்பாடு இருக்கும். சுற்றி 5கிமீ தூரத்துக்கு கடையே இருக்காது. அதனால் இரண்டே நாட்களில் எங்கள் ஊர்ப் பையன்கள் சுவரேறி குதித்தாவது ஓடிவந்து விடுவார்கள்.

அதிகாலை எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிப்பதும் எங்களுக்கு ஒவ்வாமை. சித்திரை மாதத்தில் கூட வெந்நீர்தான். அதிலும் என்னைப்போன்ற சிலர் வெறும் வயிற்றில் பல் கூட துலக்க மாட்டோம். உமட்டிக்கிட்டு வருது என்று சொல்லி, காபி குடித்துவிட்டுத்தான் பல் விளக்குவோம். ஆனால் விவேகானந்தாவில் அதிகாலை எழுந்து பச்சைத்தண்ணியில் குளித்து பிரேயர் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும்.

அதுவும் எல்லோருக்கும் பரிமாறி முடித்த உடன் தான் சாப்பிட வேண்டும். ஆனால் எங்கள் மக்கள் அடுப்படியில் இருந்து வந்தால் கூட தோசை ஆறிவிடும் என்று சமையல்கட்டிலேயே சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள். சூட்டை விடுங்கள். உணவைப்பார்த்து விட்டால் ஏன், உணவு இருக்கிறது என்று தெரிந்தாலே தேடி எடுத்து தின்று விடுவார்கள். அமாவாசை போன்ற விரதங்களுக்கு கூட சுத்தபத்தமாக சமைக்க முடியாது. கொதிக்கும் வடைச்சட்டியில் கூட கைவிட்டு வடை எடுத்து விடுவார்கள், அவ்வளவு ஏன்? ,எங்கள் ஊரில் பெண்கள் அவ்வை நோன்பு என்று ஒன்று இருப்பார்கள். அதற்கு கொழுக்கட்டை செய்து வழிபடுவார்கள். அந்தக் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிடக்கூடாது ஏன் பார்க்கவே கூடாது என ஒரு ஐதீகம். பார்த்தால் கண் போய்விடும் என அக்காக்கள் பயமுறுத்தி ஒளித்து வைப்பார்கள். ஆனால் எங்கள் பையன்களோ அந்த பாத்திரத்தை தேடி எடுத்து கொழுக்கட்டையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட பையன்களுக்கு பசியோடு தட்டை முன்னால் வைத்து காத்திருக்கச் சொன்னால்?. மேலும் எங்கள் ஊரில் மூட்டிய கைலி மட்டும் தான் கட்டுவார்கள். வேஷ்டி எல்லாம் விசேஷங்களுக்குத்தான். அங்கே ஒற்றை வேஷ்டி கட்டவேண்டும். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு பள்ளிக்கூட பையன்களுக்கு ஒரு வைராக்கியமே பிறந்துவிடும். மதுரை காலேஜ்ல சீட் வாங்குற அளவுக்கு படிச்சிடனும்டா என களத்தில் இறங்கிவிடுவார்கள்.

சில பெற்றோர்கள் மட்டும் வற்புறுத்தி அங்கேயே படிக்க வைத்து விடுவார்கள். இப்போது கவனித்துப் பார்த்தால், அந்த குருகுல முறைக் கல்லூரியில் படித்ததால் கெட்ட பழக்கத்தை விட்டவர்கள் என்பது குறைவு. அங்கு செல்லும் முன் என்னவெல்லாம் செய்தார்களோ அதை திரும்பிவந்தும் செய்தார்கள், என்ன புதிதாக எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்.

17 முதல் 20 வரையிலான வயது ஒரு மாதிரியான வயது. எதையும் செய்யாதே என்றால் செய்யத்துணியும் வயது. அலைபாய்வது, எதையும் முயற்சி செய்யத் துடிப்பது. அந்த வயதில் அதற்கான வாய்ப்புகளை குறைப்பது என்ற வகையில் விவேகானந்தா கல்லூரி நல்ல கல்லூரி.

மனத்திற்கான பிரீசர் என்று கூட சொல்லலாம். 17 வயதில் இருக்கும் கெட்ட பழக்கங்களோடே 20 வயதில் வெளிவருவார்கள். 20 வயதில் 17 வயதுக்கான தீய பழக்கங்களோடு இருப்பதும் ஒரு நல்லதுதானே?
மற்றவற்றை விடுங்கள். உடல்நலத்தை சீராக்கி விடுவதில் வல்லது இந்தக் கல்லூரி. எந்த பட்டை தீட்டலும் இல்லாத கைக்குத்தல் அரிசியில் தேவையான சத்துக்கள் இருக்கும். புரதச்சத்துக்காக அவித்த பயறு வகைகள், கொண்டைக்கடலை என உப்புக் குறைவாகப் போட்டு, எண்ணெய் குறைத்து தாளித்து தருவார்கள். காலை விரைவாக எழுதல், உடற்பயிற்சி, யோகா, தியானம் என உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் அங்கு பல உண்டு.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் அங்கே கிடைக்கும் இன்னொரு நன்மை. பொதுவாக எல்லா ஹாஸ்டல்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சில இடங்களில் பிளெக்சிபிள் டைமிங் இருக்கும். இங்கே அதே நேரத்தில் பிரேயருக்கு அப்புறம் சாப்பாடு என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிடுவார்கள்.

ஒரு பிரபலமான ஆய்வுச்சாலை சோதனை நிறையப்பேர் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சோதனைச் சாலையில் இருந்த விலங்குகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் ஒரு மணியை அடித்து விட்டு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் உணவுப்பொருளின் வாசனையை விட மணிச்சத்தத்திற்கே வயிற்றில் ஜீரணிப்பதற்கான என்சைம்கள் சுரக்கத் தொடங்கியதாம். அதுபோலவே விவேகானந்தா மாணவர்களுக்கும் பிரேயர் சாங்கை எங்காவது கேட்டாலே பசிக்கத் துவங்கிவிடும்.

இப்போதும் பி,காம் போன்ற துறைகளுக்கு இடம் கிடைப்பது அங்கு கடினம் தான். தன்னாட்சி பெற்று, NAAC அக்கிரிடிடேசன் பெற்று நன்கு நடந்து வரும் கல்லூரி. ஆனால் இந்த தலைமுறை நடுத்தர வகுப்பு மாணவர்கள் மிகவும் தயங்கும் அளவுக்கு சட்டதிட்டங்கள் இருக்கிறது.

December 24, 2015

சத்துணவு



நான் படித்த துவக்க பள்ளியில் கரும்பலகைக்கு கரி பூசுதல் என்பது ஒரு முக்கியமான சடங்கு. கரும்பலகையில் சில மாத உபயோகத்திற்குப்பின் சாக்பீசால் எழுதும்போது கிரீச் என்ற ஒலி கேட்க ஆரம்பிக்கும். எழுத்து சரியாக விழாது. எனவே காலாண்டு,அரையாண்டுத் தேர்வு முடியும் நாளில் கரி,ஊமத்தை இலை போன்றவற்றை நீர் சேர்த்து  மருதாணி போல அரைத்து சீராக கரும்பலகையில் பூசுவார்கள். ஒரு நாள் காய்ந்து விட்டால் புதுப்பொலிவுடன் கரும்பலகை இருக்கும். இதற்கு ஐந்தாம் மற்றும் நான்காம் வகுப்பு லீடர்கள் தான் இன்சார்ஜ். எப்பொழுதும் கடைசி நாள் பரிட்சையாகநீதி போதனைதான் இருக்கும். அதுவும் மதியத்துடன் முடிந்துவிடும்

நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது என் தெருப்பையன் ஒருவன் தான் கிளாஸ் லீடர். விரைவாக எழுதிவிட்டு கரி அரைக்க வருமாறு டீச்சர் சொல்லவும், அவன் என்னையும் துணைக்கழைத்துப் போனான். ஐந்தாறு பேர் சேர்ந்து எல்லாப் பலகையையும் பூசி முடிக்க 2 மணிக்கு மேலாகிவிட்டது. அந்தக் காலகட்டம் இப்போது போல ஸ்கூல் வேன்,ஸ்கூல் பஸ் இல்லாத காலம். பெரும்பான்மையான மாணவர்கள் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடுவார்கள்.
கைகழுவி விட்டு கிளம்ப எத்தனித்த போது, ஒருவன் மட்டும் சாப்பிடலைடா என்றான். அவன் மதிய உணவுத்திட்ட மாணவன். டீச்சரும் எல்லாரும் சாப்பிட்டுட்டு போங்கடா எனச் சொல்ல சாப்பிடப் போனோம்.
அரிசியா, கோதுமையா எது என பிரித்து அறிய முடியாமல் கொழ கொழவென இருந்த ஒரு சாதக்கலவையை, கரிப்பிடித்த ஈய வட்டாவில் இருந்து ஒரு கரண்டி வைத்தார்கள். அந்தப் பசியிலும் என்னால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிடமுடியவில்லை. நண்பனிடம் நைஸாக தள்ளிவிட்டுவிட்டேன்.

இத எப்படிடா அவன் சாப்பிடுறான் என வீடு திரும்பும்போது நண்பனிடம் கேட்டேன். அவன் அதற்குஅவங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்டா, இது இல்லாட்டி இவன் ஸ்கூலுக்கே வரமாட்டாண்டாஎன்றான்.
அதுபோல அப்போது நிறைய மானவர்கள் இருந்தார்கள். 83ஆம் ஆண்டில் எனது பள்ளிக்கட்டணம்  ஆண்டுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே. அவ்வளவு ஏன்? 1989ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுக்கட்டணம் பன்னிரெண்டு ரூபாய்தான், அதைக் கூட செலுத்த முடியாத மாணவர்கள் ஏராளமாக இருந்தனர். படிப்புத்தான் ஒரு மனிதனை முன்னேற்றும் என்ற கருத்தில், எப்படியாவது பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்று காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நல்ல பலனைக் கொடுத்துவந்தது. அப்போது இருந்த நிதி ஆதாரத்திற்கு காமராஜரால் அந்த அளவு தரத்தில்தான் உணவுதான் கொடுக்க முடிந்த்து. இன்றும் கூட நான் சந்திக்கும் பல அதிகாரிகள் அந்த திட்டத்தின் மூலம் ஆளானவர்கள்தான்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் ஒரு பரபரப்புத் தோன்றியது. அஞ்சாப்பு வரைக்கும் இருக்குற பிள்ளைகளுக்கெல்லாம் சத்துணவு போடப்போறாங்களாம் என பேச்சு அடிபட்டது. அரிசி சாப்பாடு, பருப்பு கலந்து சாம்பார் மாதிரி கொடுக்கணுமாம்,காயும் கொஞ்சம் இருக்குமாம் என பேசிக் கொண்டார்கள்.  ஏற்கனவே காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தில் இருந்த மாணவர்களுடன் புதிதாகவும் மாணவர்களை அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்கள். அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள், தோட்டம் துறவு வைத்திருப்பவர்களின் பிள்ளைகள் தவிர மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். சமையல் அறை வெள்ளை அடிக்கப்பட்டது. புதிதாக பாத்திரங்கள், விறகு வந்திறங்கியது

இப்போதைய மதுரை,திண்டுக்கல்,தேனி ஆகிய மூன்று மாவட்டங்களும் இணைந்து ஒரே மதுரை மாவட்டமாக அப்போது இருந்தது. அதன் அப்போதைய ஆட்சித்தலைவர் சந்திரலேகா எஸ். எம்ஜியாருக்கு ராசியானது திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி. அந்த தொகுதிக்கு உட்பட்ட எங்கள் ஊரான வத்தலக்குண்டில் இந்த திட்டத்திற்கான ஆரம்பவிழா நடத்த முடிவானது. அன்னை தெரசா அவர்கள் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். உண்
மையிலேயே வரலாறு காணாத கூட்டம்

மூன்றே மாதம் தான். இந்த திட்டத்தின் வெற்றி உளவுத்துறை மூலம் கோட்டையை எட்டியது. உடனே எம்ஜியார் இதை உயர்நிலைப்பள்ளி வரை  விரிவாக்கச் சொன்னார். நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆடிப்போனார். அதிகாரிகளும் தான். ஆனால் எம்ஜியார் அதில் உறுதியாய் இருந்தார். அடுத்த ஆண்டிலேயே அந்தத் திட்டம் அமுலுக்கு வந்தது,
சத்துணவுக்கென தனி துறை உருவாக்கப்பட்டது. எப்படியாவது அதற்கு நிதி ஆதாரம் கொண்டுவரவேண்டும் என அவர் உறுதியாய் இருந்தார். பட்ஜெட்டில் சில துறைகளின் நிதியை இதற்கு திருப்பிவிட்டார். பல தொழிலதிபர்களிடம் நிதி கேட்டார், பரிசுச்சீட்டு குலுக்கல் நடத்தினார்

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், சத்துணவு பணியாளர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது, ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் உள்ள  பள்ளிகளுக்கு சேர்த்து ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். நிறைய பேருக்கு வேலை கிடைத்தது. ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றனர். ஒரு மினி எமர்ஜென்ஸிக்கு இணையான வேகத்துடன் இந்தத் திட்டத்துக்கான கோப்புகள் பறந்தன. 

இந்த திட்டத்தின் மூலம் எம்ஜியாருக்கு பெரும்பாலான மக்களின் மனதில் பெரிய இடம் கிடைத்தது. இதை அப்போதைய மக்களின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். நாங்கள் இப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் தங்கள் பகுதியில் தளத்தை இடித்துவிட்டு டைல்ஸ் பதிக்கும் வேலையைத் தொடங்கினார். தளத்தை பெயர்த்தெடுக்கவந்த பணியாளர்கள் கிறுகிறுத்துப் போய் அடுத்த நாள் வேலைக்கே வரவில்லை. அவ்வளவு கெட்டியான தளமாக அது இருந்தது.
இதைப்பற்றிச் சொல்லும் போது வீட்டு உரிமையாளார், ‘’85 வாக்குல இந்த வீட்டைக் கட்டுனேன்பா, வேலைக்கு அவ்ளோ பேர் வருவாங்க. பணப்புழக்கம் இப்ப மாதிரியா இருந்துச்சு? நல்லா வேலை பார்க்கலைன்னா ஆள மாத்திடுவோம்னு விழுந்து விழுந்து வேலை பார்ப்பாங்க” என்றார், கூலியும் மிகக் குறைவாகவேதான் இருக்குமாம்.

இப்போது போல ஏராளமான சிறு வேலை வாய்ப்புகள் அப்போது இல்லை. இப்போது தண்ணீர் கேன் சப்ளை முதல்  செக்யூரிட்டி வரை ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடி ஒரிஸ்ஸா,பீகார்காரர்கள் வருமளவுக்கு தமிழ்நாட்டில் இப்போது நிலவரம் இருக்கிறது.
எனவே அந்தக் காலகட்டத்தில் பலருக்கு வாழ்வு கொடுதத்தாக இந்த சத்துணவுத் திட்டம் இருந்தது. இப்போது இந்த அளவு தமிழகம் செழிப்பதற்கான (மற்ற வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில்) காரணங்களில் ஒன்றான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும் 84ல் எம்ஜியார் யதார்த்தமாக ஆரம்பித்ததுதான். 

1989ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சத்துணவில் மாத்த்திற்கு 2 முட்டை கொடுத்தார். பின் அது வாரத்திற்கு ஒரு முட்டை ஆகி, இரண்டாகவும் ஆனது.  அடுத்து வந்த ஜெயலலிதா  முட்டை போடும் நாட்களில் அதற்கு ஈடாக சைவ அயிட்டம் ஒன்றையும் வழங்க உத்தரவிட்டார். 

எவ்வளவோ தொலை நோக்குடன் திட்டங்கள் வகுக்கலாம். ஆனால் எப்போதும் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்றும் இருக்கும். அந்த காலகட்டத்தில் தேவைப்பட்ட மாணவர்க்கான உணவை ஒரு கடமையாகச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் செய்தார் எம்ஜியார்.
அரிசி,பருப்பு கொள்முதலில் இருந்து, அது உணவாக மாறி மாணவனுக்குப் போய்ச் சேரும் வரை கவனம் செலுத்தினார். சத்துணவு தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டங்களில் பேசும்போது நான் கையேந்தியாவது நிதி சேர்த்துத் தருகிறேன் என்று உறுதி அளித்தார். அந்த விஷயத்தில் அவர் காட்டிய உறுதி ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பயத்தைக் கொடுத்து இந்தத் திட்டம் கொடுத்து குறைவான தவறுகளுடன் மட்டுமே செயல்பட வைத்தது.