December 28, 2016

பாண்டியராஜன்

1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும், எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி வெளியிட்டார்.

அது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக் கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது. அந்தப் படம் கன்னிராசி.
இயக்குநர் பாண்டியராஜன்.

இந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம் உருவாக்கத்திற்கு துணையாக இருக்கின்றன. இந்தப் படத்தின் காட்சிகள் அப்போது கூட இந்த அளவுக்கு சிலாகிக்கப்படவில்லை. வீட்டிற்கு வரும் தம்பியை சிறப்பாக கவனிக்கும் அக்கா, அது கண்டு புகையும் மாமா என காலத்திற்கும் நிற்கும் நகைச்சுவை காட்சியை அந்தப் படத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன். தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் எங்கே தன் தம்பிக்கு மணமுடித்தால், அவன் இறந்து விடுவானோ என்று அஞ்சும் அக்கா, அவர்கள் திருமணத்தை தடுக்கும் எளிய கதை. அதை மிக இயல்பான காட்சிகளால் ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் பாண்டியராஜன்.

அதே ஆண்டில் அவர் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து இன்னொரு படமும் வெளிவந்தது. 30 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஏராளமானவர்கள் சிலாகிக்கும் ஆண்பாவம் தான் அது. திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் போது, தவறுதலாக வேறு பெண்ணைப் பார்ப்பதால் வரும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்ன படம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் அனைவரும் இன்னொரு திறமையான இயக்குநர் தமிழ்சினிமாவுக்கு கிடைத்து விட்டார் என்றே நம்பினார்கள்.

கோபக்கார இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் அனைவரும் ஆர்வம் கொண்டிருந்த காலம் அது. மாற்றாக பாக்கியராஜ் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் சற்று அதிகமாக குறும்புத்தனத்தை கலந்து ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தை கொண்டுவந்தார் பாண்டியராஜன். அந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அடுத்து பாண்டியராஜன் இயக்கிய ”மனைவி ரெடி” திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் அவரது கேரக்டரை ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.

எனவே தொடர்ந்து அவருக்கு நாயக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாண்டியராஜனும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு ஏற்றார் போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் அவரை நடிப்பதற்காக புக் செய்ய வந்த ஒரு தயாரிப்பாளர், யாரை இயக்குநராகப் போடலாம் எனக் கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன், மணிரத்னம் இயக்கிய படங்களைப் பார்த்தேன். அவரைக் கேளுங்கள் என்றாராம். தயாரிப்பாளரும் மணிரத்னத்தை அணுகினாராம். இதை மணிரத்னம் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். என்ன காரணத்தாலோ அந்தப் படம் துவங்கவில்லை.

இடையில் பாண்டியராஜன் நடித்த சில படங்கள் சறுக்கியபோது இயக்கத்தை கையில் எடுத்தார். அப்படி எடுத்த படம் நெத்தி அடி. இந்த திரைப்படம் ஒரு வகையில் ட்ரெண்ட் செட்டர் எனலாம். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளை விஸ்தாரமாக காண்பித்துள்ளார்களே தவிர, இறந்த வீடு, அதில் செய்யப்படும் சடங்குகள் பற்றி நிறைய காட்டி இருக்கமாட்டார்கள். நெத்தி அடி திரைப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரு இறப்பைச் சுற்றிய காட்சிகள் தான். அதுவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இதே பாணியை பின்னாளில் எம் மகன் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்கள். மதயானை கூட்டம் படத்தில் ஏராளமான டீடெயில்களுடன் இந்தக் காட்சிகளை அமைத்திருந்தார்கள்.

இதற்குப்பின் அவர் நாயகனாக மட்டும் நடித்த படங்களும் பெரிய வெற்றியைக் கண்டன. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய கதாநாயகன், கலைப்புலி சேகரன் இயக்கத்தில் வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய படங்கள் நூறுநாட்களை கடந்து வெற்றி பெறவும், பாண்டியராஜன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். எல்லாமே சராசரி முதலீட்டுப் படங்கள். அவை எதுவுமே பெரிய வெற்றியைக் காணவில்லை என்றாலும் சராசரியாக ஓடிய படங்கள்.

வாய்க்கொழுப்பு, புருசன் எனக்கு அரசன், பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இருந்தாலும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவே.

நெத்தி அடி இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுப்ரமணியசாமி படத்தை இயக்கி நடித்தார். இந்தப் படமும் சராசரியாக ஓடியது. அதற்குப்பின்னர் அவர் குருநாதர் பாக்யராஜின் கதையில் தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் நடித்தார். பின்னர் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுதான் இவருடைய கடைசி பெரிய ஹிட் எனச் சொல்லலாம். அதற்கடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இடைவெளிகளில் டபுள்ஸ், கபடி கபடி ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக தன் மகன் பிருத்விராஜை வைத்து கை வந்த கலை படத்தை இயக்கினார்.

ஆரம்பத்தில் பெரிய இயக்குநராக வருவார் எனக் கருதப்பட்ட பாண்டியராஜன் 10 படங்கள் கூட இயக்கவில்லை. ஆனால் 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இந்த தலைமுறை அவரை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சிறிய நடிகர் என்றே எண்ணுகிறது. பாண்டியராஜன் இயக்கிய படங்களின் பொது அம்சம் இயல்பான நகைச்சுவை தான். ஒரு சிறிய சிக்கல் உறவுகளுக்குள் ஏற்படும். அது தீர்ந்தவுடன் சுபம். அந்த முடிச்சை அவிழ்ப்பதில் பாண்டியராஜன் தனக்கென ஒரு பாணி வைத்திருப்பார்.

பாண்டியராஜன் அப்போதிருந்த கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவானவர். எனவே ஆக்ரோஷமான வேடங்கள் எல்லாம் செய்ய முடியாது. கதாநாயகனுக்கு உரிய முகவெட்டும் இல்லை. ஆனாலும் தைரியமாக தனக்கு ஏதுவாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அதற்கு அவருக்குள் இருந்த இயக்குநர் உதவி செய்தார். கதாநாயகன் படம் மலையாள ரீமேக். அதே போல் அடிக்கடி அவர் மலையாளப் படங்களின் ரீமேக்குகளை தொடர்ந்து செய்து வந்தார். சுப்ரமணிய சுவாமி, கோபாலா கோபாலா போன்று அவர் இயக்கிய படங்களும் மலையாள ரீமேக்குகளே. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால் அவர் ஏதும் புதிய முயற்சியில் இறங்கவில்லை.

இயக்குநராக இருந்து நடிக்க வந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்சினிமாவில் இரண்டு வகை உண்டு. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோ பாலா போல பல்வேறு காரணங்களால் படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டபின் குணசித்திர வேடம், நகைச்சுவை வேடத்துக்கு தாவியவர்கள் மற்றும் பரபரப்பான இயக்குநராக இருக்கும் போது நடித்தவர்கள்.
பாக்யராஜ்,டி,ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் இந்த வகையில் வருவார்கள். முதல் இரண்டு பேர்களும் தாங்கள் உச்சத்தில் இருந்தபோது அடுத்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜ் மட்டும் நட்புக்காக நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், விதி போன்ற சில படங்களில் தலைகாட்டினார். டி ராஜேந்தர் இப்பொழுதுதான் கே வி ஆன்ந்த் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். பாண்டியராஜனும், பார்த்திபனும் தான் இரண்டு படங்கள் இயக்கிய உடனேயே நடிகராக மாறிவிட்டார்கள்.

இப்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்களிலும் உறவுச்சிக்கல்கள் தான் அடிநாதமாக இருக்கும் என்றாலும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுபோய் தீர்ப்பார்கள். ஆனால் பாண்டியராஜன் படங்களில் அதை எளிதாக தீர்ப்பார்கள். பாண்டியராஜனின் பாணி என்பது குசும்புத்தனம் கொண்ட, பயந்த சுபாவம் உள்ள நல்லவன் கேரக்டர். இதைத்தான் தான் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் அவர் கடைப்பிடித்தார். பாக்யராஜும் கிட்டத்தட்ட இதே பாணிதான் என்றாலும் இருவருக்கும் இடையே சிறு வேற்றுமை உண்டு. பாக்யராஜின் கேரக்டரில் எமோஷனல் அதிகம் வெளிப்படும். ஆனால் பாண்டியராஜனின் கேரக்டரில் அந்தளவு எமோசனல் இருக்காது. இவர்களுக்கு நேர் எதிரியாக டி.ராஜேந்தர் எமோஷனல் மட்டுமே இருக்கும். பார்த்திபன் சில படங்களுக்கு பிறகு இயல்புத்தன்மை குறைந்து பேண்டஸியும் சற்று கலக்க ஆரம்பித்தார்.

இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பாண்டியராஜனும், பார்த்திபனும் நடிக்க வந்துவிட்டதால் அவர்களின் ஆரம்ப படங்களைப் போல பின்னாட்களில் இயக்கிய படங்களில் முத்திரை பதிக்க இயலவில்லை. ஆனால் பாக்யராஜும், டி ராஜேந்தரும் நிறைய வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தார்கள். இயக்கம் என்பது நடிப்பை விட பல மடங்கு உழைப்பைக் கோரும் வேலை. நடிகராக ஒப்பீட்டளவில் எளிதான வேலையைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் இயக்கத்துக்கு திரும்பி வரும்போது பெரிய வெற்றிகளைப் பார்ப்பதில்லை. இதற்கு பாண்டியராஜன் வாழும் எடுத்துக்காட்டு. அவரது முதல் இரண்டு படங்கள் 30 ஆண்டுகள் கழித்தும் இப்போதைய இளைய தலைமுறையினரால் கொண்டாடப் பட்டு வருகின்றன. நெத்தி அடி படம் கூட முதல் பாதி வரை மிக நன்றாக இருக்கும். ஆனால் பாண்டியராஜனின் சிக்கல்களை தீர்க்கும் எளிய பாணியில் இல்லாமல் பேண்டஸியாக சிக்கலைத் தீர்க்கும் பிற்பகுதியை வைத்திருப்பார். அதனால் பலராலும் நினைவு கூறப்படவேண்டிய அந்தத் திரைப்படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இடையில் அவர் நடிக்கப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பகுதிகளை நன்கு மெருகேற்றியிருப்பார்.

நடிப்பிலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் 1988-89ல் அமைந்தது. கதாநாயகன், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே எல்லாம் எல்லா செண்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். அந்தப் படங்களுக்கு பாண்டியராஜனின் குறும்புத்தனம் கொண்ட அப்பாவி இளைஞன் இமேஜ் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து அம்மாதிரி வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை.

பாண்டியராஜனிடம் இருந்த இன்னொரு குறைபாடு அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களிலும் அவர் பாண்டியராஜனாகத்தான் தெரிந்தார். உடல் மொழியிலோ, உச்சரிப்பிலோ எந்த வித மாறுபாடும் காட்டியதில்லை. எனவே தான் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் 2000க்குப் பின் அவருக்கு நாயக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கதைகளை நடிக்க அடுத்த செட் நடிகர்கள் வந்துவிட்டார்கள்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாஸ், அவர் பாண்டியராஜன் பாணி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளை புரம் ஆகிய படங்கள் எல்லாமே பாண்டியராஜன் பட சட்டகத்தில் அமைந்தவைதான். கருணாஸும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து சில வெற்றிகளைப் பார்த்தார்.
இயல்பான கதாபாத்திரங்கள், குறும்புத்தனமான வசனங்கள் கொண்டு மக்களை மகிழ்விக்கும் நல் உணர்வுப்படங்களை தொடர்ந்து கொடுத்திருக்க வேண்டிய பாண்டியராஜன் நடிப்பின் பக்கம் சென்றது தமிழ்திரைக்கு ஒரு இழப்பே.