November 12, 2022

கமல்ஹாசனின் கேரக்டர் ஆர்க்

தமிழ்சினிமாவில் ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் பெரும்பாலும் சில டெம்பிளேட்களில் அடங்கி விடும். கல்லூரி மாணவன், இள வயது காதலன், நல்லது செய்யும் ஊர் பெரிய மனிதர், சோதனைகளை எதிர்கொண்டு அதை சாதனைகளாக்கும் நல்லவன், போலீஸ் அதிகாரி, டான் என சில டெம்பிளேட்களிலேயே தமிழ்சினிமா ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் அடங்கிவிடும். கமல்ஹாசன் தன் ஆரம்பகால கட்ட படங்களில் இருந்தே இந்த டெம்பிளேட்டிற்குள் அடங்காமல் தன் ஹீரோ கேரக்டர் ஆர்க் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்கு முக்கிய காரணம் கே பாலசந்தர் மற்றும் கமலுக்கு கிடைத்த மலையாள பட வாய்ப்புகள். அது போக அவரது இலக்கிய பரிச்சியமும் அவருக்கு பல கேரக்டர்களை பரீட்சித்துப் பார்க்க உதவியது. சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பிறகு ஏன் அவர் ஏற்காத கேரக்டர்களைக் கூட கமல்ஹாசன் ஏற்று நடித்திருக்கிறார். அப்படி அவர் ஏற்று நடித்த கேரக்டர்களில் முக்கியமான ஒரு பிரிவு மனநிலை பாதிக்கப்பட்ட, மூளை வளர்ச்சி குறைந்த கேரக்டர்கள். ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்வார், நானும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை என் படங்களில் சித்தரித்து இருக்கிறேன். அவர்களை கேலிப் பொருளாக அல்ல. நாயகர்களாக என்று சொல்வார். அந்த கேரக்டர்களை திரையில் கொண்டு வந்து அவர்களின் வலியை பார்வையாளனுக்கு கடத்துவது கடினமான ஒன்று. அதை கமலால் எளிதாகச் செய்ய முடிந்ததற்கு காரணம் அவருக்குள் இருந்த திரைக்கதை ஆசிரியன். இரண்டரை மணி நேரப் படத்தில் நான்கைந்து பாடல்கள், ஒரு காமெடி ட்ராக் எனப் போய்விட்டால் 70-80 காட்சிகளே தேறும். அவற்றை புதிதாக, க்ளிஷே இல்லாமல் எழுதினால் தான் புதிதான ஒரு கேரக்டரை நம் மனதில் நிறுத்த முடியும். இல்லாவிட்டால் அது பத்தோடு பதினொன்றாய் போய் நம் மனதில் எந்த ஒரு இம்பாக்டையும் ஏற்படுத்தாமல் போய் விடும். கமல் நடித்த பல கேரக்டர்கள் பலர் மனதில் இருந்தும் அகலாமல் இருக்கக் காரணமே அந்த கேரக்டர்களுக்குத் தேவையான எழுத்துப் பின்புலமும் அதை நேர்த்தியாக திரையில் பிரதிபலித்ததும்தான். அது போல கமல் நடித்த சில மன நலம், மூளை வளர்ச்சி தொடர்பான கேரக்டர்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மறக்க முடியாதவை. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். சிகப்பு ரோஜாக்கள் பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனால் சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். தனக்கு ஆதரவளித்தவரும் பெண் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட இன்னும் வீறு கொண்டு எழுகிறது அந்த மிருகம். இரையைத் தேடும் புலி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பதுங்கியே இருப்பது போல அந்த மிருகத்தை ஒளித்து வைத்து விட்டு சமூகத்தில் இயல்பாக உலா வரும் வேடம். அந்த வேடத்தை மிசச்சிறப்பாக செய்திருப்பார். ஒரு எலைட் பிஸினஸ் மேனாக, பின் பெண்களை பாலியல் துன்புறுத்தி கொல்பவனாக, தவறு உணர்ந்து வாடுபவனாக ஒரு முழுமையான சுற்றாக அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதை அனாயாசமாக கையாண்டிருப்பார். உல்லாசப் பறவைகள் காதலி தீ விபத்தில் இறந்து விட அதனால் மனநலம் பாதிக்கும் இளைஞனின் வேடம் கமலுக்கு. பின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று, குணமாகித் திரும்பும் வேடம். கல்யாண ராமன் மூளை வளர்ச்சி குறைந்த பாத்திரம். இன்னொரு கேரக்டர் வழக்கமான கேரக்டர். இரண்டிற்கும் நடை,உடை பாவனைகள் மட்டுமில்லாது, எத்துப்பல், வாய்ஸ் மாடுலேசன் என மெனக்கெட்டிருப்பார். மூளை வளர்ச்சி குறைந்தவனுக்கு வரும் காதல், அது தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகள், ஏன் அவனுக்கு ஒரு நல்லது நடக்கக்கூடாது என்ற கேள்வி வரும் வகையில் அந்தக் கேரக்டர் அமைக்கப்பட்டு இருக்கும். சுவாதி முத்யம் இந்தப் படம் இன்னும் ஸ்பெஷல். மூளை வளர்ச்சி குறைந்த ஒருவன், அவன் கணவனை இழந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணின் துன்பத்தை நீக்க அவளை மணக்கிறான். கடைசி வரை அவளை ஒரு ராணியாக உணரவைத்து தன் முயற்சியில் வெற்றி பெறுகிறான். கமல் நடித்த ஏராள வித்தியாச கேரக்டர்களில் இந்தப்படத்திற்கு தனி இடம் உண்டு. குணா ஒரு ஆணுக்கு மிகப்பெரிய வலியைத்தரும் வசவு வார்த்தை பாலியல் தொழிலாளி மகன் என்பது. அதுவே வாழ்க்கையாக இருந்தால் எவ்வளவு சிதைவு அடையும் அவன் மனது? அந்த சிதைவை, அதனால் அவன் அனுபவிக்கும் வேதனையை திரையில் கொண்டு வந்திருப்பார் கமல். அதில் இருந்து வெளியில் வர அவன் என்ன முயற்சிகளை எடுக்கிறான், அதில் வெற்றி பெற்றானா? என அந்தச் சூழலில் வளர்ந்த ஒருவனின் சித்திரம் தான் குணா. தெனாலி இலங்கையில் இருந்த போர்ச்சூழலால் மன பாதிப்படைந்த ஒருவனின் கதை. நகைச்சுவைப் படம் என்றாலும் அவன் வேதனை, அவன் பக்க நியாயங்கள், அவன் மீண்டு வருவது என தேவையற்ற மன பயம் கொண்டவர்களின் உருவமாக கமல் இருப்பார் இந்தப் படத்தில். ஆளவந்தான் தாய் இறந்து விட, தந்தையாலும், சித்தியாலும் கொடுமைக்கு ஆளாகி மனச்சிதைவுக்கு ஆளாகும் வேடம். தாய் தவிர மற்ற பெண்கள் எல்லாமே கொடுமைக்காரிகள் என்கிற சித்திரம் மனதில் படிந்து விட, தன் உடன்பிறந்தவனின் மனைவியையே கொல்ல முயற்சிக்கிறான். அந்த முயற்சிக்கு தன் உடன்பிறந்தவனே தடையாய் வர அவனையும் கொல்ல முயற்சிக்கும் சிக்கலான மன சிதைவு கொண்ட வேடம். இது போன்ற கேரக்டர்கள் தவிர மூன்றாம் பிறை படத்தில் விபத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி குணப்படுத்தும் வேடம், நாயகன் படத்தில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகன் ஒரு மூளை வளர்ச்சி குறைந்தவன் என அறிந்து அவனை பரிவுடன் பார்த்துக் கொள்வது என காட்சி அமைத்திருப்பார். மனநிலை பாதிக்கப்படுவது ஒரு நோய். அதற்கு சிகிச்சையும் பரிவும் தான் தேவையே தவிர கிண்டல் அல்ல. போலவே மூளை வளர்ச்சி குறைபாடும். அது அவர்களின் தவறு அல்ல. சமூகம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற மறைமுகச் செய்தி அவரின் படங்களில் இருக்கும்.

Kamal Hassan Fight Scenes

கமல்ஹாசன் மீது ஏராளமான பிம்பங்கள் இருந்தாலும் உடன் நினைவுக்கு வராத பிம்பம் சண்டைக் காட்சிகளில் கலக்கும் நடிகர் என்பது. தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கமல்ஹாசன் என்றாலே நல்ல நடிகர், காதல் காட்சிகளில் கலக்குபவர், நன்றாக பாடக் கூடியவர், நன்றாக நடனம் ஆடக்கூடியவர், காமெடி படங்களிலும் வல்லவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தவர் யார் என்று பார்த்தால் அதில் கமலே முண்ணனியில் இருப்பார். தமிழ்சினிமா சண்டைக்காட்சிகள் என ஒரு வரலாற்றைப் பார்த்தால் ஆனந்தன், எம் ஜி ராமச்சந்திரன் காலத்தில் வாள் வீச்சு பிரபலமாக இருந்தது. பின்னர் சாண்டோ சின்னப்பா தேவர் – எம்ஜியார் இணை சிலம்ப சண்டைக்காட்சிகளை கொண்டு வந்தது. பின் வழக்கமான சினிமா சண்டைகளே தமிழ் சினிமாவை ஆக்ரமித்து இருந்தன. ஒளிப்பதிவாளர்- இயக்குநர் கர்ணன் தன் படங்களில் குதிரை சண்டைகள், பைக்-கார் சேஸிங் என விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளை கொண்டு வந்தார். மற்ற இயக்குநர்களின் படங்களில் மாஸ்டர்கள் வழக்கமான சண்டைக் காட்சிகளையே அமைத்து வந்தார்கள். இந்நிலையில் எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் ஆரம்பம் வரை ஹாலிவுட் படங்கள் முக்கியமாக புரூஸ்லியின் எண்டர் தி ட்ராகன் போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இது மாதிரி சண்டைக் காட்சிகள் தமிழ்சினிமாவில் வராதா என ரசிகர்கள் ஏங்கிய போது இந்த சண்டைக்காட்சிகளின் பாதிப்பில் ஜூடோ ரத்னம், சூப்பர் சுப்பராயன் போன்ற மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்க ஆரம்பித்தனர். கமலின் ஆரம்ப காலப் படங்களிலும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட், சீன படங்களின் பாதிப்பில் தான் இருக்கும். ராம் லட்சுமண் படத்தில் வரும் சிலம்பு, ஜூடோ, கராத்தே சண்டை, சகல கலா வல்லவனில் ஒரு சகதி சண்டை, சிலம்பு சண்டை, கார் சேஸிங் என மசாலா படங்களுக்குரிய சண்டைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். , தூங்காதே தம்பி தூங்காதேயில் உட்காரும் பெஞ்ச் வைத்து போடும் சண்டையும் ரசிகர்களை கவர்ந்த ஒன்று. அதன் பின் வந்த காக்கிச் சட்டையில் ட்ரைலர் லாரியில் நடக்கும் சண்டைக்காட்சி மறக்க முடியாத ஒன்று. அப்படம் வந்து சில ஆண்டுகள் வரை ட்ரைலர் லாரியை அடையாளம் சொல்ல காக்கிச்சட்டை படத்துல வர்ற லாரி என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். காக்கி சட்டை படத்தில் ஒரு கையால் தண்டால் எடுப்பது, குழாயைப் பிடித்து சரசரவென ஏறுவது என பல காட்சிகள் இருக்கும். ஒரு கைதியின் டைரி படத்தில் புது ரோசாப் பூவு பாடலில் கமலுக்கு சற்று உயரத்தில் ஒரு கூண்டினுள் நின்று நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். படப்பிடிப்பில் திடீரென கூண்டு அறுந்து கமலின் வயிற்றின் மீது நடிகை கூண்டோடு விழுந்தார். அனைவரும் பதறி விட்டனர். ஆனால் கமல் தன் மூச்சை இழுத்துப் பிடித்து வயிற்றைக் கல்லாக்கியதால் தப்பித்தார். இதன் பின்னரே கமல் தன் ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு இன்சூரண்ஸ் எடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தார். புன்னகை மன்னன் படத்தில் தற்கொலை செய்ய குதித்து மரத்தில் தொங்கும் காட்சி போல பல ரிஸ்கான காட்சிகளில் அக்காலத்தில் நடித்து வந்தார். அப்போதிருந்த மாஸ்டர்கள் வழக்கமாக ஒரே மாதிரி ஹீரோ அடித்தால் வில்லன் அடியாட்கள் பறந்து போய் விழுவது போன்றே காட்சிகள் அமைத்து வந்தார்கள். கமலுக்கு அதில் திருப்தி இல்லை. அவர் அலைவரிசைக்கு ஏற்ப கொஞ்சம் ரியலிஸ்டிக்காகவும் இருக்க வேண்டும், பார்வையாளனை பரபரப்பில் ஆழ்த்த வேண்டும் எனவும் நினைத்தார். அதனால் புதுப்புது திறமைகளை உள்ளே கொண்டுன் வந்தார். விக்ரம் (1986) படத்தில் தர்மாவை ஊக்குவித்தார். அந்தப் படத்தில் வரும் சேஸிங் காட்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்தன. கமல் அப்போது சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லும் போது, படம் பார்த்துட்டு வர்றவன் நெஞ்சை நிமித்திட்டு வர்ற மாதிரி இருக்கனும், யாராச்சும் தப்பு செஞ்சா சட்டையப் பிடிச்சு உலுக்கிற மாதிரி ஒரு வெறி ஏறனும் என்பார். .நாயகன் படமே சண்டைக் காட்சிகளிலும் கமலுக்கு திருப்பத்தை தந்தது எனலாம். அதன் பின்னரே அவர் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளின் பக்கம் திரும்பினார். சர்க்கரை கரைசலால் ஆன பாட்டிலை சண்டைக் காட்சிகளுக்கு பயன்படுத்தினார். ரத்தத்திற்குப் பதில் சிகப்பு சாயம் ஊற்றுவதை நிறுத்தினார். அதற்கென சில பொருட்களை பயன்படுத்தினார். காயங்கள் காயம் போலவெ தெரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த சத்யா படத்தில் சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளே இடம் பிடித்தன. பாலத்தின் மீதேறி தப்பி ஓடும் கமலின் நண்பனை காலில் வெட்டும் காட்சிகள் அப்போது தமிழுக்குப் புதிது. தேவர்மகனில் இன்னும் மெருகேறியது சண்டைக் காட்சிகள். சிலம்பு குச்சியில் சுண்ணாம்பு தடவி பொட்டு வைப்பது, நாசருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை என சிறப்பாக அமைந்தது. அதில் நாசரின் தலை தனியே பூமியில் விழுந்திருப்பதில் கமலின் மேக்கப் ஈடுபாடு பயன்பட்டிருக்கும். மகாநதி படத்தில் கையை வெட்டிக் கொள்ளும் காட்சி லாஜிக்கலாக அமைந்தது. குருதிப்புனலின் ரயிலின் முன் தாவும் காட்சி, சில துப்பாக்கிச் சூடு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். இந்தியனில் சுதந்திர போராட்ட வீரனின் சண்டைக் காட்சிக்கும், மகல் கமலின் சண்டைக் காட்சிக்கும் பெரிய வேறுபாடு இருக்கும். பெரியவராக வர்மக்கலை உபயோகித்து போடும் சண்டைகளும் செம ஸ்டைலாக இருக்கும். (நெடு முடி வேணுவை தாக்கி தப்பிக்கும் காட்சி). அதன்பின் எடுத்து கைவிடப்பட்ட மருதநாயக ட்ரெயிலரிலேயே நான்கைந்து சண்டைக் காட்சிகள் இருக்கும். வேலால் ஒருவர் குத்த வரும் போது, அடித்துப் போட்டு விட்டு எருமை மாட்டில் ஏறி தப்பிப்பது, அருவியின் மீதிருந்து பெரிய பாறையை உருட்டி விட்டு பலரை கொள்வது என. அந்த ட்ரெய்லரில் குதிரையின் கண்களில் கூட ஒரு கோபம் இருக்கும். காட்சி எடுக்கும் முன்னர் அக்குதிரையை சீண்டுவாராம் கமல். பின் வந்த ஆளவந்தானிலும் திரில்லுக்கு குறைவில்லை. சிறை கான்கீரீட்டை பல்லாலேயே கடித்து, சகோதரனின் தம்பி மனைவி மீது ஆக்ரோஷமாக துப்புவது. சகோதரனைக் கொல்ல துரத்துவது என. ஆளவந்தான் படத்திற்கு சண்டைக் காட்சி அமைக்க வந்த மாஸ்டரை வைத்து தமிழ் சினிமா ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறையும் நடத்தினார் கமல்ஹாசன். பின் வந்த பம்மல் கே சம்பந்தத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆளாகவே நடித்தார். விருமாண்டியில் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் காட்சி, ஓடும் வண்டியில் இணைக்கப்பட்ட கட்டையில் புல் அப்ஸ் எடுப்பது, சுற்றி உடலை வளைப்பது, கொத்தாளத் தேவர் வீட்டில் அரிவாள் எரியும் காட்சி, நல்லம நாயக்கர் தோட்டத்து ஆட்களை கொல்ல வரும் காட்சி என பல சிறப்பான காட்சிகள் உண்டு. காரில் வரும் போதே ஜன்னல் வழியாக அரிவாள் வீசுவது என கமலின் டைரக்டர் டச் அதில் தெரியும். கிளைமாக்ஸான சிறைக் கலவரம் காட்சியும் மறக்க முடியாத சண்டைக் காட்சி. தசாவதாரத்தில் நம்பி போடும் பழங்கால சண்டை, பிளட்சரின் வெறித்தன சண்டை, ஜப்பானிய கமலின் குங்பூ சண்டை என வித்தியாச சண்டை காட்சிகள். அதிலும் பிளட்சரின் ஆரம்ப சண்டைக் காட்சியும், சிதம்பர சண்டைக் காட்சியும் விறு விறுப்பாக இருக்கும். விஸ்வரூபத்திலும் சண்டை காட்சிகள் வித்தியாசமாக அமைந்தன. சொல்லப்போனால் தன் சுயரூபத்தை காட்டும் ட்ரான்ஸ்பர்மேசன் சீன் தான் படத்தையே தாங்கியது எனலாம். கார் வரும் போது ஜன்னல் கண்ணாடியை சுட்டு, காரினுள் குதிப்பது, பாலைவனத்தில் நடக்கும் ஆயுத தாக்குதல்கள் எல்லாம் ரசிக்க வைக்கும். விக்ரம் (2022) படத்தில் குழந்தையை காப்பாற்றச் சென்று அந்த வீட்டில் போடும் ஒரு சண்டைக் காட்சி போதும். குழந்தைக்கு சத்தம் கேட்டு விடக்கூடாதே என்று போடும் சண்டையும், பின்னர் பால்பாட்டில் எடுக்க மீண்டும் வீட்டில் நுழையும் போது போடும் துப்பாக்கிச் சண்டையும் பார்வையாளனை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடும். கமல் தனக்கென சண்டைக் காட்சிகளில் ஒரு பாணியை வைத்துக் கொள்ளாமல் கேரக்டரின் குண நலனுக்கு ஏற்ப சண்டை போடுவதாலேயே இத்தனை வித சண்டைக்காட்சிகளை கொடுக்க முடிந்தது. மேலும் அவர் சேகரிக்கும் வித வித பொருட்களும் சண்டைக் காட்சிகளை உயிர்ப்புடன் வைக்கின்றன. கலைஞனில் ஸ்டிலட்டோ, விஸ்வரூபத்தில் மூன்றாய் பிரியும் கத்தி, நாயகனில் நிஜ துப்பாக்கி என சண்டைக்காட்சிகளுக்கு வலு சேர்க்க முடிகிறது. விஸ்வரூபம் படத்திற்கு அவர் சேகரித்து வைத்திருந்த ஆயுதங்கள் தான் விக்ரமுக்கும் பயன்பட்டன. அடுத்து வரும் கமலின் படங்களிலும் இது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் கமல்ஹாசன்

25 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகம் படத்தின் வெள்ளோட்ட காட்சித் தொகுப்பு ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. முடிந்தபின்னர் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அந்தப் படத்தின் இயக்குநர் கமல்ஹாசனுடன் உரையாடினார்கள். அப்போது குங்குமம் பத்திரிக்கையில் இருந்த மாலன் அவர்கள் மற்றவர்களையும் நல்லா நடிக்க வச்சிருக்கீங்க அது முடியும் ஆனால் குதிரையும் அந்தக் காட்சிக்கு ஏற்ற சினத்தை கண்ணில் காட்டியதே எப்படி? என்று கேட்டார். அந்தக் காட்சிக்கு முன் குதிரையை குச்சியால் சீண்டிக் கொண்டே இருந்தேன் என்றார் இயக்குநர் கமல்ஹாசன். தமிழ்சினிமாவில் கமல்ஹாசன் மூலம் வெளிச்சம் பெற்ற, ரீ எண்டிரி கொடுத்த நடிகர்கள், நடிகைகள், திரைக்கதை வசனகர்த்தாக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உண்டு. பொதுவாக ஒரு இயக்குநர் மூலம் தான் பலரது திறமைகள் வெளிச்சம் பெறும். ஆனால் சமகால இயக்குநர்களுக்கு நிகராக ஏன் அவர்களை விட அதிகமாகவே பல திறமைகளை தனிழ்சினிமாவிற்கு கொண்டு வந்தவர் கமல்ஹாசன். ஏனென்றால் கமல்ஹாசனிடம் இருப்பது நாயக மனம் அல்ல. இயக்குநர் மனம். 90களின் ஆரம்பத்தில் குணா, தேவர் மகன் படங்களில் காகா ராதாகிருஷ்ணனுக்கும் தேவர் மகன் படத்தில் கள்ளபார்ட் நடராஜன் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். பிரமாதப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட எல்லோரும் மறந்திருந்த நடிகர்களை ஞாபகம் வைத்து அழைத்து வந்தது இன்னாருக்கு இன்ன ரோல் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் கமல்ஹாசனின் இயக்குநர் மனம். போலவே கிரேசி மோகனுக்கு கொடுத்த அபூர்வ சகோதரர்கள் வசனகர்த்தா வாய்ப்பு, மருதநாயகத்தில் பசுபதி, தேவர் மகனில் வடிவேலுக்கு ஒரு குணசித்திர நடிகர் வாய்ப்பு, எஸ் என் பார்வதிக்கு கொடுத்த தொடர் வாய்ப்புகள், நாசருக்கு என தனியாக சிந்திப்பது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது என சொல்லிக் கொண்டே போகலாம். குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சோதனை எட்டு ஒன்பது வயதில் இருந்து தங்கள் பதின் பருவத்தை கடக்கும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் கிரீடம் இழந்த இளவரசனின் மன உளைச்சல். அதிலும் ஆண் நடிகர்கள். பத்து வயதுக்கு மேல் அதிக ரோல்கள் கிடைக்காது. குரல் உடைந்து விடும். பெரிய வேடங்களுக்கு 18 வயது வரை பொறுத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதும் சங்கடமாக இருக்கும். அந்தக் காலத்தில் ஒருவன் தன்னை எப்படி தகவமைத்துக் கொள்கிறான் எனபதே அவன் பிற்கால வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமையும். கமல்ஹாசனைப் பொறுத்த வரையில் அந்த வயது காலத்தில் தொடர்ந்து நடனப்பயிற்சி எடுத்து வந்தார். ஒரு நாட்டிய நாடகம் நடத்தும் எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தன் டீன் ஏஜை கடக்கும் போது அவருக்கு இயக்கத்தின் மீது நான் நாட்டம் அதிகமானது. அதை அவர் ஆரம்ப கால படங்களைப் பார்த்தால் அதை உணரலாம். கமல்ஹாசன் எழுபதுகளின் ஆரம்பத்தில் பணியாற்றிய படங்களைப் பார்த்தால் உதவி இயக்குநர், உதவி நடன ஆசிரியர் என்றே இருக்கும். நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி படங்களில் உதவி இயக்குநர். நூற்றுக்கு நூறு படத்தின் இயக்குநர் கே பாலசந்தரிடம் ஏற்பட்ட அறிமுகத்தால் அரங்கேற்றம் படத்தில் பெயர் சொல்லும் படியான கேரக்டர். அடுத்து சொல்லத்தான் நினைக்கிறேனில் நடிப்போடு சேர்த்து உதவி இயக்குநர் வேலையும். இந்த காலகட்டத்தில் கமலின் ஒரே குறிக்கோள் இயக்குநர் ஆவதாகத்தான் இருந்தது. இயக்குநர் ஆர் சி சக்தியின் முதல் படமான உணர்ச்சிகளில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் கதை விவாதத்தில் இருந்து, வசனம், உதவி இயக்கம் வரை கமலின் பங்களிப்பு இருந்தது. தொடந்து கே பாலசந்தரின் படங்களான அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு என எல்லாப் படங்களிலும் அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகவே செயல்பட்டார் கமல்ஹாசன். தான் விரைவாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த கமல்ஹாசனுக்கு ப்ரேக் போட்டவர் பாலசந்தர் தான். நீ இயக்குநரா இருக்கும் போது ஹீரோ தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாம உன்கிட்ட ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கிற ஹீரோ இருந்தா நல்லது தானே? முதல்ல நடிச்சு உன்னை நிலை நிறுத்திக்கோ என்றார் கே.பி. தொடர்ந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தினாலும் ஒரு இயக்குநராக என்னெவெல்லாம் என்ன திறமையெல்லாம் தேவையோ அதை எல்லாம் தேடித் தேடி சேர்த்துக் கொண்டே தான் இருந்தார் கமல்ஹாசன். பாரதி ராஜா, பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் துவங்கி ரா கி ரங்கராஜன், சுஜாதா போன்ற கதாயாசிரியர்கள் வரை அவர் நட்பிலேயே இருந்தார். அவர்களிடம் இருந்த கதைத்திறமையை உள்வாங்கிக் கொண்டார். ஒரு கம்பெனியின் சி ஈ ஓ ஆக விரும்புபவர்கள் தாங்கள் இருக்கும் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளைப் பற்றியும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன் துறையிலும் ஒரு சி ஈ ஓ வைப் போலவே யோசித்து செயலாற்ற வேண்டும். அப்படித்தான் ஒரு இயக்குநர் மனநிலையிலேயே தான் கமல் திரைத்துறையில் செயல்பட்டு வந்தார். கதை, தன் கேரக்டர், உடன் நடிப்பவர்களின் பெர்பார்மன்ஸ், மற்ற எல்லா தொழில்நுட்ப விசயங்களிலும் ஒரு அறிவிக்கப்படாத இணை இயக்குநராகவே செயல்பட்டு வந்தார். சட்டம் என் கையில் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி என் பாலுவின் அடுத்த படம் சங்கர்லால். படப்பிடிப்பின் பாதியிலேயே அவர் இயற்கை எய்தி விட, மீதிப் படத்தை ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதனுடன் சேர்ந்து இயக்கி முடித்தார். இதன் பின்னர் 80களின் மத்தியில் கமல் விரைவாகவே ஒரு படத்தை இயக்கி முடிப்பார் என்று திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கமல் நிறைய முன் தயாரிப்புகளை செய்து கொண்டு இருந்தாரே தவிர களத்தில் இறங்க வில்லை. தன் பெயரில் வரும் முதல் படம் தமிழ்சினிமாவால் மறக்க முடியாத படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அதற்கான களம் மருதநாயகம் படத்தில் அமைந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தடைப்பட்டது. தமிழில் பெரிய வெற்றி பெற்ற அவ்வை சண்முகியை இந்திக்கு கொண்டு சென்றார். அங்கே படத்தை இயக்க வந்தவருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கிரியேட்டிவ் டிபரன்ஸில் அவர் விலகிக் கொள்ள கமலே படத்தை இயக்கினார். கஷ்டமான மேக் அப், உடன் நடிக்க அம்ரீஷ் பூரி, ஓம் பூரி, தபூ என தேர்ந்த நடிப்பு பட்டாளம். நகைச்சுவையை திரையில் இருந்து பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய கட்டாயம் இவை அனைத்தையும் எளிதாக சமாளித்து படத்தை வெற்றியாக்கினார், அடுத்து கமல்ஹாசன் இயக்கிய படம் ஹேராம். மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. டாக்கு-பிக்சன் ஜானரில் தமிழ்நாட்டின் முக்கிய படமாக இன்றளவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு ரெபரன்ஸாக இருக்கக் கூடிய படமாகவும் இருக்கும். அதற்கடுத்து இயக்கிய விருமாண்டி திரைப்படமும் திரைப்பட ஆர்வலர்களிடமும் தற்போதைய இளைய சமுதாயத்திடமும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இருபது ஆண்டுகள் ஆகப்போகும் வேளையிலும் அப்பட கதாபாத்திரங்கள் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அதன் பின்னர் கமல் இயக்கிய விஸ்வரூபம் திரைப்படமும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தியது. யோசித்துப் பார்த்தால் மூன்று திரைப்படங்கள் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் இதற்கு இணையான தரத்தில் தமிழ்சினிமாவில் மூன்று படங்களை கொடுத்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இந்தப் படங்களை இயக்க கமல் எடுத்துக் கொண்ட் முன் தயாரிப்பு பெரிது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடு வாங்குவதைப் போல அவர் தன் திரைப்பயணத்தில் கற்றவற்றைக் கொண்டு இந்தப் படங்களை இயக்கினார். இனி எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை என்ற போதிலும், சில மாதங்கள் முன்பு அமெரிக்கா சென்று திரைக்கதை பயிற்சிப்பட்டறையிலும் கலந்து கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் பெற்ற சமூக அனுபவம், அரசியல் அனுபவத்தையும் கொண்டு மேலும் சில தமிழ் சினிமா மறக்க இயலாத படங்களை கமல் இயக்க வேண்டும்.

August 27, 2022

ஆணும் சமைக்கனும்

கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் 23 வயது வரை வளர்ந்தவன் நான். உணவோ, உடையோ, சினிமாவோ, புத்தகங்களோ எதுவுமே கேட்காமலே கிடைக்கும் வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். அதுவும் ருசியான உணவுக்கு பஞ்சமேயில்லாத வாழ்க்கை. தந்தை அரசு அதிகாரி. போஜனப் பிரியர். வாரத்தில் இரண்டு நாள் காலை சாம்பார் வடை ஹோட்டலில் வாங்குவோம், வீட்டில் அரைக்கும் சட்னி தவிர்த்து. இரண்டு நாள் இரவு புரோட்டாவுடன். புதன், ஞாயிறு வீட்டில் நிச்சய அசைவம். சாமி கும்பிட கோவிலுக்குப் போவதாக இருந்தால் கூட, முதல் நாள் இரவு, புளிக்காய்ச்சல் தயாராகும்.தயிர் சுமாரா உறைஞ்சாப் போதும், காலையில பாலை சூடு பன்ணி ஊத்துவோம், அப்பத்தான் மதியம் சாப்பிட புளிக்காம இருக்கும் என்ற பக்குவங்கள் பகிரப்படும். இரவே லாலா கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கப்பட்டிருக்கும். முக்கு கடையில் பருப்பு வடை வாங்குடா, உளுந்த வடை மதியம் தாங்காது என உத்தரவுகள் பறக்கும். காலையில் புதினா சட்னி அரைத்து புளியோதரை பேக் செய்த பின்னால் தான் எல்லாம் ரெடி, எந்த கோவிலுக்கு என்ற கேள்வியே எழும்பும். எங்கள் வீடாவது பரவாயில்லை. என் அம்மாவின் அக்கா வீடு இன்னும் ஒரு படி மேல். என் அம்மாவின் தந்தை ஒரு நிலச்சுவான் தார். முதல் மகளுக்கு அரசு அதிகாரியாகவும் வேண்டும், நிலபுலன்களும் இருக்க வேண்டும் எனப் பார்த்து எக்கச்சக்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் உறவுக்காரரும் கூட. என் பெரியம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் 10 வயது வித்தியாசம். இடைப்பட்ட காலத்தில் விவசாயம் சற்று நொடிக்க, என் அம்மாவிற்கு அரசு அதிகாரி என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதனாலோ என்னவோ என் பெரியம்மாவிற்கு அம்மா மேல் கூடுதல் கரிசனம். அவருக்கு ஒரு பையன், இரண்டு பெண். வீடே விவசாய விளை பொருட்களாலும், விருந்தினர்களாலும் நிறைந்திருக்கும். கிராமத்தில் இருந்து ஊருக்கு வருபவர்கள் என் பெரியம்மா வீட்டிற்குத்தான் வருவார்கள். எல்லோரும் கூடும் மையமாக அந்த வீடு இருந்தது. தினமும் நான்கைந்து பேராவது காப்பி சாப்பிட வந்துவிடுவார்கள். மதிய சாப்பாடு ஒன்றிரண்டு பேருக்கு கூடுதலாகவே செய்யும் படி இருக்கும். காப்பி பொடி அரைப்பது, வத்தல் வடகம் போடுவது, சாம்பார் பொடி அரைப்பது எல்லாம் விழா போல நடக்கும். என் பெரியம்மாவின் பையன், பெரும்பாலான ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படித்தவர். அதனால் நான் தான் அந்த வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. கடை கண்ணிக்கு சலிக்காமல் போய் வருவேன். என் பெரியப்பாவிற்கு சிகரெட் பழக்கம் உண்டு, அதுவும் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். பெரியம்மாவின் வீடு இரண்டு தெரு தான் தள்ளி இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் குடுகுடுவென ஓடிப்போய் அங்கே கொடுத்துவிட்டு, அங்கே என்னவோ அதை எங்கள் வீட்டிற்கு வாங்கி வருவேன். அதனால் ஒவ்வொரு வேளை சாப்பாடும் வெரைட்டியாக இருக்கும். சின்ன மகன் என்றுதான் என் பெரியம்மா என்னைக் குறிப்பிடுவார். டேய், நாளைக்கு கம்மாய்ல விரால் மீன் பிடிச்சுக் கொண்டு வராங்கடா. உங்க அம்மாவ சமைக்க வேணாம்னு சொல்லி என சொல்லி விடுவார். என் அம்மாவும் தன் பங்குக்கு, காலை சாப்பாடு நான் கொடுத்து விடுறேன். உங்க பெரியம்மாகிட்ட சொல்லிட்டு வா என்பார்கள். மாலை வேளைகளில் பள்ளி முடிந்த உடன் அவர்கள் வீட்டிற்குத்தான் போவேன். முறுகலாக இரண்டு நெய் தோசை, பில்டர் காபி மூத்த அக்கா போட்டுத் தருவார்கள். வெரைட்டியைப் பொறுத்தே இரவு உணவு எந்த வீட்டில் என முடிவு செய்வேன். திருவிழா சமயங்களில் பாட்டி ஊருக்குப் போனால், இன்னும் விசேஷம். பெரிய வீடு. மாமா அத்தைகள் என நிறைந்திருக்கும். கெடா, சாவ என்றுதான் பேச்சே இருக்கும். நான் அன்னிய மாப்பிள்ளையின் பையன் என்பதால் என் தந்தைக்கு ஏதும் கோபம் வந்து விடக்கூடாதே என இன்னும் சிறப்பாய் கவனிப்பார்கள். யோசித்துப் பார்த்தால் என் இளமைக்காலத்தில் ஒரு வேளை கூட பட்டினியாய் இருந்ததில்லை என்று சொல்வதை விட ருசியான சாப்பாடு இல்லாத வேளையே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு சமையல் நடந்தாலும் எங்கள் வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க மாட்டார்கள். அதில் தான் கையே கழுவுவார்கள். சமையல் கட்டுக்குள் யாரும் நுழைந்ததே இல்லை. பாசமாக இருப்பார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஹோட்டலில் வாங்கலாம் என்றுதான் நினைப்பார்களே தவிர தப்பித்தவறி கூட நாம் செய்து தருவோமே என நினைக்க மாட்டார்கள். தண்ணீர் குடிக்க நான் அடிப்படிக்குள் போனால் கூட, நீ ஏண்டா இங்க வர்ற, கொண்டு வர மாட்டோமா என்றுதான் அம்மா, பெரியம்மா கோபிப்பார்கள். இதனாலேயே என்னவோ எனக்குள் ஆண் சமையலறைக்குள் செல்லவே கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்து விட்டது. திருமணத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். என் மனைவியும் சிறப்பாக சமைக்க கூடியவர். மேலும் என் மாமனார்-மாமியார் இருவரும், அவர் என்ன சொன்னாலும் கேட்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என உருவேற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். நான் வீட்டில் ஏதாவது வேலை செய்தால் கூட அவர்கள் பார்த்து விட்டால் என் மனைவியைக் கோபிப்பார்கள். இதனால் இன்னும் என் சுக வாழ்க்கை நீடித்துக் கொண்டே போனது. சமையலில் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும் அதுவும் நம் கடமை என்ற எண்ணம் துளிக்கூட ஏற்படவில்லை. மேலும் என் மூத்த மகன் ஹைபர் ஆக்டிவ். எனவே மாலை வேளைகளில் அவனை சமாளிப்பது மட்டுமே என் வேலை என்றும் ஆகிவிட்டது. அவனை வெளியே விளையாட அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது இதோடு என் கடமை முடிந்தது என இருப்பேன். பதினைந்து ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டன. வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை. இரவு உணவு ஹோட்டலில் வாங்கி விடலாம் என்றாலும், காலை ஏழரைக்குள் பையன்களுக்கு காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் முடிக்க வேண்டிய சூழல். முதல் ஒரு வாரம் ஹோட்டலில் பூரி, பொங்கல் என மாற்றி மாற்றி வாங்கி கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் கூட சாப்பிடுற பசங்க கிண்டல் பண்றாங்கப்ப. நல்லாவும் இல்ல என்றார்கள்.எனக்குத் தெரிந்தது நூடுல்ஸ், ஆம்லேட், டீ போடுவது மட்டும். கஷ்டப்பட்டு சாதம் வைத்து, தயிர் சாதமாக்கி ஆம்லேட் போட்டு கொடுத்து விட்டேன். அடுத்த வாரத்தில் ரசம் பழகினேன். இரண்டு நாள் தயிர் சாதம், இரண்டு நாள் ரசம் சாதம், இரண்டு நாள் ஹோட்டல் என மாற்றி மாற்றிக் கொடுத்து விட்டேன். சரி சாம்பார் பழகுவோம் என முயற்சி செய்கையில் மனைவி ஓரளவு குணமாகி நான் பார்த்துக்கிறேங்க என என்னை விடுதலை செய்தார். அப்பாடா தப்பிச்சோம்டா என வழக்கத்திற்குத் திரும்பினேன். அதன்பின் ஓராண்டு ஆகியிருக்கும். எனக்குள் சில எண்ணங்கள். என்னடா இது, நாம் பெரியார் என்கிறோம், சமத்துவம் என்கிறோம். ஆனால் மனைவிக்கு சமையலில் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்வதில்லை. செய்தால் அவருக்கும் கொஞ்சம் இலகுவாக இருக்குமே என்று தோன்றியது. ஒரு நாள் காலை அலாரம் அடித்த உடன் விழித்து, அவரை எழுப்பாமல் டீ போட்டு வைத்து விட்டு, இரண்டு டம்ளர் அரிசியை குக்கரில் போட்டு விட்டு, கொஞ்சம் வெங்காயம் உரித்து வைத்து விட்டு எழுப்பினேன். ஒரு வைர நெக்லஸ் வாங்கித்தந்திருந்தால் கூட அப்படி ஒரு சந்தோசத்தை அவரின் முகத்தில் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. இப்போதெல்லாம் காலை வேளையில் உடன் நின்று சமையலில் உதவி செய்கிறேன். ஞாயிறுகளில் நானே சமைக்கத் துவங்கியிருக்கிறேன். இத்தனை நாட்கள் உடன் உதவி செய்யாததை நினைத்து வருந்துகிறேன். என் மனைவியிடம் மட்டுமல்ல. என் பாட்டி, பெரியம்மா மற்றும் அக்காக்கள், அம்மா, மாமியார் என என்னை சமையலறைக்குள் விடாமல் என்னை சுகவாசியாக வளர்த்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். காலம் பூராவும் அடுக்களையில் நின்ற உங்களுக்கு கொஞ்சமாவது விடுதலை கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தித் தான் உறைத்திருக்கிறது. இன்னுமே உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை சமையலறைக்குள் அனுமதிக்கப் போவதில்லை தான். உணவு பரிமாற, எடுத்து வைக்கவாவது என்னை விடுங்கள். என்னால் முடிந்ததெல்லாம் இனி என் மகன்களை சமையலில் பயிற்றுவிப்பதுதான்.