January 22, 2015

சுதாகர்


திரையுலகில் எந்தப் பின்புலமும் இல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்து நடிக்க வந்த ஒருவர் இரண்டே ஆண்டுகளில் நான்கைந்து வெற்றிப்படங்களைக் கொடுப்பது, பல வித்தியாசமான கதைகளில் நடிப்பது என்பது எல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் அந்த இரண்டே ஆண்டுகளுக்குப் பின்னால் அவர் கண்காணாமல் போய்விடுவதும், யாரும் அவரைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதும் சற்று ஆச்சரியமான விஷயம்தான்.

சுதாகர் 1979 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயிலில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தின் அபார வெற்றியினால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறியப்பட்டார். தொடர்ந்து பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமான “சுவரில்லாத சித்திரங்கள்”, பாரதிராஜாவின் “நிறம் மாறாத பூக்கள்”, தேவராஜ் மோகன் இயக்கத்தில் அம்பிகா அறிமுகமான “சக்களத்தி”, பி மாதவன் இயக்கத்தில் “குருவிக்கூடு” , ஜி என் ரங்கராஜனின் ”ருசி கண்ட பூனை” என முக்கிய இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.

சுதாகர் நடித்த படங்களின் தலைப்புகளைப் பார்த்தால் படத்தின் தலைப்பே கதையைச் சொல்லும் அளவுக்கு தனித்துவமாக இருக்கும். ஒருத்தி மட்டும் கரையினிலே, நதி ஒன்று கரை மூன்று, தரையில் வாழும் மீன்கள், நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், ஆயிரம் வாசல் இதயம், கரை கடந்த ஒருத்தி, பெண்ணின் வாழ்க்கை, கல்லுக்குள் ஈரம், கரும்புவில், அழைத்தால் வருவேன்,அன்னப் பறவை என அழகிய தமிழ் தலைப்புகள்.

சுதாகர் தன்னுடன் கிழக்கே போகும் ரயிலில் அறிமுகமான ராதிகாவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ராதிகா நடிக்கிறார் என்றாலே சுதாகர் மெயினா? என்று அக்காலத்தில் கிராமப்புறங்களில் கேட்பார்கள். நிறம் மாறாத பூக்கள், சின்னஞ் சிறு கிளியே, எங்க ஊர் ராசாத்தி, தை பொங்கல், ஆயிரம் வாசல் இதயம், நதி ஒன்று கரை மூன்று, இனிக்கும் இளமை, சந்தன மலர்கள், எதிர் வீட்டு ஜன்னல் என பல படங்களில் இணைந்து நடித்தார்கள்.

அப்பொழுது மிகப் பிரபலமாக விளங்கிய, வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பபடும் பாடல்களில் பெரும்பான்மை சுதாகர் நடித்த படங்களில் இருந்து இருக்கும். கிழக்கே போகும் ரயிலில் இருந்து மாஞ்சோலை கிளிதானோ, நிறம் மாறாத பூக்களில் இருந்து ஆயிரம் மலர்களே மலருங்கள், சுவரில்லாத சித்திரங்களில் இருந்து “காதல் வைபோகமே”, கரும்புவில்லில் இருந்து ”மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” எங்க ஊரு ராசாத்தியில் இருந்து ”பொன் மானைத் தேடி நானும் ஊர்கோலம் வந்தேன்” ஆகிய பாடல்கள் சுதாகர் தமிழ்ப்படங்களில் நடிப்பதை விட்டுச் சென்ற பின்னும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அதிலும் குறிப்பாக மீன் கொடித் தேரில் பாடலின் புகழ்பெற்ற ஹம்மிங்கான ஓலா ஒலா ஓலலல்லா ஒலிக்கத் தொடங்கிய பின்னர், கரும்புவில் படத்தில் இருந்து உங்கள் அபிமான பாடல் என தொகுப்பாளர் சொல்வதற்குள் மக்கள் பாடல் வரிகளை முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இவற்றை விட கிராமப்புற பகுதிகளில் பெரும் ஹிட்டான பாடலென்றால் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம்பெற்ற ஓரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டி வருது பாடல்தான். சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போதும், இளம் பெண்கள் சைக்கிளில் வரும் போது கிண்டல் செய்யவும் இந்தப் பாடல் பயன்பட்டது. ஒரு பெண் சைக்கிளில் வரும் போது பையன்கள் இந்தப் பாடலைப் பாடினால் அது ஈவ் டீசிங்கிற்கு இணையாக கருதப்பட்டது.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்படி பட்டி தொட்டி எங்கும் அறிமுகமான நடிகர் திடீரென்று திரையுலகில் இருந்து காணாமல் போவதும் அதை யாரும் பொருட்படுத்தாமல் இருப்பதும். சுஜாதா திரையில் எழுதிய வசனங்களில் முக்கியமான “மரணத்தை விட கொடுமையானது, மறக்கப்படுவது” தான் ஞாபகம் வருகிறது. தமிழை விட்டு தன் தாய் மாநிலமான ஆந்திராவிற்குச் சென்ற சுதாகர் மிகச் சில படங்களில் நாயகனாக நடித்துவிட்டு முழுநேர காமெடியனாக மாறினார். ரஜினியின் அதிசயப்பிறவியிலும், 90களின் ஆரம்பத்தில் தெலுங்கில் இருந்து டப்பாகி வந்த படங்களிலும் சுதாகரைப் பார்க்க முடிந்தது. அதில் எல்லாம் வித்தியாசமான வாய்ஸ் மாடுலேசன்களை கொண்டு காட்சிகளை சுவராசியப்படுத்துவார்.

சுதாகர் நடிக்க வந்த காலகட்டம் புதிய கிராமம் சார்ந்த கதைகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த காலகட்டம். அந்த கதைகளுக்கு திராவிட முகமும் உருவமும் கொண்ட சுதாகர் பொருத்தமாக இருந்தார். அப்போதைய கிராமங்களில் இரண்டு விதமான இளைஞர்களைப் பார்க்கலாம். ஒன்று கடுமையான உடல் உழைப்பைக் கோரும் விவசாயம் சார்ந்த பணிகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவர்கள். இன்னொன்று கடின உடல் உழைப்பு தேவைப்படாத சிறு கடைகள் நடத்துவோர், சிறு தொழில்கள் செய்வோர், படித்து விட்டு அரசு/தனியார் வேலைக்குச் செல்லும்/எதிர்பார்த்திருக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள். இந்த இரண்டாவது வகையறா இளைஞர்களைப் பிரதிபலிக்கும் முகமாக சுதாகர் இருந்தார்..

அப்பொழுது வந்த படங்களும் இம்மாதிரியான இளைஞர்களை பாத்திரமாகக் கொண்ட கதைகளாக இருந்தன. அவற்றிற்கு ஏற்ற வகையில் சுதாகர் பொருந்தினார். கிழக்கே போகும் ரயிலில் பாடலாசிரியனாக விரும்பும் நாவிதர் மகன், நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியேவில் அப்பாவி இளைஞன் என பெரும்பாலும் கிராமத்து இளைஞன் வேடம்தான். சுவரில்லாத சித்திரங்கள், ருசி கண்ட பூனை போன்ற சில படங்களில் தான் நகரத்து இளைஞனாக நடித்தார்.
சுவரில்லாத சித்திரங்களில் வசதியான சிறு நகர இளைஞன் கதாபாத்திரம். தான் காதலிக்கும் பெண்ணைக் கவர அந்தத் தெருவில் இருக்கும் தையல் கடையில் டேரா போடும் இளைஞன். அந்தக் கடையில் நுழைய தயக்கம், பின்னர் அங்கு செட்டிலாவது என நுணுக்கமாக பாக்யராஜ் காட்சிப் படுத்தலுக்கு ஏற்ப நன்கு நடித்திருப்பார்.

சுதாகர் நடித்த படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான். அதை அவரது படங்களின் தலைப்பில் இருந்தே அறியலாம். கதை இருந்தால்தான் நல்ல தலைப்பே வைக்க முடியும். அப்படி கதையிருந்த, சிறு முதலீட்டுப் படங்கள் உருவான காலகட்டத்தில் அவருக்கான இடம் தமிழில் இருந்தது. 80களுக்குப் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் பாதிப்பில் நாயகன் தொடர்பாக திரை உலகம் மாறிய போது சுதாகருக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆக்ரோசமாக சண்டை போடத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நளினமாக ஆடுவது போல் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட போது சுதாகரிடத்தில் அதற்கான பதில் இல்லை.  

இப்போதைய விமலை இந்த இடத்தில் வைத்துப் பார்க்கலாம். சுதாகர் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர், விமல் கூத்துப் பட்டறைக்காரர். சுதாகருக்கு கதை அம்சமுள்ள கிராமியப் படங்கள் என்றால் விமலுக்கு காமெடி அதிகமுள்ள சிறு நகரப் படங்கள். இருவருமே குறுகிய இடைவெளியில் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்கள், சிறு முதலீட்டுப் படங்களின் நாயகர்கள், சம்பள விஷயத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர்கள் மேலும் தங்களால்தான் இந்தப் படம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாதவர்கள். இப்படி படமெடுக்கும் போக்கு மாறும் போதோ அல்லது இவர்களை விட நல்ல சாய்ஸ் கிடைக்கும் போதோ இவர்களின் வாய்ப்புகள் திடீரென காலாவதியாகிவிடும். அதனால்தான் சுதாகர் தமிழில் இருந்து தெலுங்குக்கு ஒதுங்கினார்.  

சுதாகர் நடித்த ”மாந்தோப்பு கிளியே” சுருளிராஜனின் லேண்ட் மார்க் படம். இன்றளவும் காமெடிக்காக பேசப்படும் படம். கஞ்சத்தனம் என்றால் என்ன? என்பதற்கு வரையறையாய் சுருளிராஜன் வாழ்ந்து காட்டிய படம். அப்போது வானொலி ஒலிச்சித்திரங்களில் அடிக்கடி இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் ஒலிபரப்பப்படும். அந்தப் படத்தில் சுதாகர்,  பின்னாளில் ஒரு காமெடி நடிகராக பரிமளிப்பார் என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லாமல் பிரேமில் வருவார்.

முழுநேர காமெடி நடிகராக நடிக்க வந்து பின்னாட்களில் நாயகர்களாக மாறியவர்கள் தமிழில் அதிகம். ஆனால் ஒரு வெற்றிப்பட நாயகனாக அறிமுகமாகி நான்கு வருடங்களுக்குள் முழு நேர காமெடி நடிகனாக மாறியது சுதாகராகத்தான் இருக்கும். மக்கள் அவரை மறந்து விட்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்தின் அதிசயப்பிறவி படத்தில் காமெடியனாக தோன்றினார். ஏய் இவர் சுதாகருல்ல? என்றே பலரின் புருவங்களும் ஆச்சரியத்தில் உயர்ந்தன. ”இதுதாண்டா போலிஸ்” திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற உடன் ஏராளமான தெலுங்கு மசாலாப் படங்கள் டப்பாகி தமிழுக்கு வந்தன. அப்பொழுதுதான் அவர் தெலுங்கின் முக்கிய காமெடியனாக மாறி இருந்தது பெரும் பாலோனோர்க்கு தெரிய வந்தது.

நன்றாக வாழ்ந்த இடத்தில் அதை விட சுமாரான வாழ்க்கையை வாழ்வது யாருக்குமே மனச் சங்கடத்தைத் தரும். அதனால் சம்பளம் குறைவாகக் கிடைத்தால் கூட வேறு ஊருக்குச் சென்று வாழ்வை பலர் அமைத்துக் கொள்வார்கள். புகழ் போதையும், அது தரும் ஈகோவும் நிறைந்த சினிமா உலகில் இது அதிகமாகவே இருக்கும். எனவே வாய்ப்பில்லாத போது, உடனடியாக தங்கள் நிலையை விட்டு இறங்காமல் சில காலம் கழித்து,  எல்லா வித ரோல்களையும் ஏற்றுக் கொள்வார்கள். சுதாகர் ஆந்திராவிற்குச் சென்று தன்னை காமெடியனாக நிலை நிறுத்திக் கொண்டார். அதியசப் பிறவியின் ஒரிஜினலான ”யமுடுக்கி மொகுடு” படத்தின் தயாரிப்பாளர்களில் சுதாகரும் ஒருவர். அதனால் தான் அந்தப் படத்தில் தலை காட்டினார். அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிக்க எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை.


காலம் தனக்கேற்றவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பதைப் போல திரை உலகமும் தன் போக்கிற்கு ஏற்ப சிலருக்கு வாய்ப்பை அளிக்கிறது. அந்த வாய்ப்பைப் பெறுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதுடன், அடுத்த கட்ட போக்கை உன்னிப்பாய் கவனித்து, அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டால் நிலைக்க முடியும். இல்லையென்றால் விலக்கப்பட்டு நினைவுகளாகத்தான் தங்கி இருக்க முடியும் என்பதற்கு சுதாகர் ஒரு உதாரணம்.


January 20, 2015

பரம்பரை

10 நாட்கள் இருக்கும். முதுகை சற்று வளைத்து, குரலில் பவ்யம் கூட்டி, சார், மதியம் அரைநாள் லீவு வேணும் என்று கேட்ட போது, கண்ணைச் சுருக்கி, முகத்தில் ஒரு கடுமையைக் கொண்டுவந்து, எதுக்கு? என்று கேட்டுவிட்டு, நாளைக்கு ஆடிட் ஸ்டேட்மெண்ட் ஹெட் ஆபிஸ்ல சப்மிட் பண்ணனுமே என்றார் மேனேஜர்.

பையனோட ஸ்கூல்ல இன்னைக்கு கட்டாயம் வரணும்னு சொல்லி இருக்காங்க சார். போயிட்டு வந்து ராத்திரி முடிச்சுக் குடுத்துடறேன் சார் என்றேன். அரை மனதுடன் சம்மதித்தார்.

வேளச்சேரி சிக்னலில் நிற்கும் போது பையனின் டைரியில் அவர்கள் அடிக்கடி எழுதும் புவர், கான்செண்ட்ரேட் ஆன் மாத்ஸ், லோ பெர்சனல் ஹைஜீன் போன்ற வார்த்தைகள் மனதுக்குள் வட்டமிட்டன.
பேரண்ட்ஸ் மீட்டிங் நடக்கும் ஹாலில் என் பையன் படிக்கும் கிளாஸின் டீச்சரை நோக்கி சினேக பாவத்துடன் சென்றேன். அவரிடம் அதற்கு மதிப்பில்லை. எடுத்த எடுப்பிலேயே சார், “சொல்றோம்னு தப்பா நெனச்சுக்காதீங்க, உங்க பையன் இந்த ஸ்கூலுக்கு செட் ஆக மாட்டான் சார், அடுத்த வருஷம் வேற ஸ்கூல் பாத்துக்குங்க” என்றார்.
தொடர்ந்து “சரியாவே ஹோம் ஒர்க் பினிஷ் பண்ணுறதில்ல, கிளாஸ்ல கவனிக்கிறதே இல்ல, எந்த ஆக்டிவிட்டியும் டைமுக்கு சப்மிட் பண்ணுறது இல்ல, சுத்தமாவும் இருக்குறதில்ல, ஏதாச்சும் கேள்வி கேட்டா தலையைக் குனிஞ்சுக்கிட்டே நிக்கிறான், பதிலே சொல்ல மாட்டேன்கிறான், சோசியல் தவிர இந்த டெஸ்ட்ல எல்லாப் பாடத்துலயும் பெயில் ” என்று அடுக்கினார்.

வகுப்பறையில் இருந்து வந்தவனைப் பார்த்தேன். தலையைக் குனிந்தவாறே வந்தான். ஷூ அழுக்கடைந்து போயிருந்தது, லேஸ் சரியாக கட்டப்படாமல் இருந்தது,  தலை கலைந்து, உடை கசங்கி தளர்ந்து நடந்து வந்தான்.

மேடம், இனி நல்லா கான்செண்டிரேட் பண்ணி பார்த்துக்கிறேங்க. என்றேன். இப்படித்தான் அடிக்கடி சொல்லுறீங்க என்று சலித்துக் கொண்டார். பள்ளி நேரம் முடிந்து விட்டதால், என் பைக்கிலேயே அழைத்துக் கொண்டு வீடு நோக்கி கிளம்பினேன். தலையை வலிக்க ஆரம்பித்ததால், வழியில் இருந்த டீக்கடையில் நிறுத்தினேன். எனக்கு வடை வேண்டும் என்றான். சுள்ளென்று கோபம் வந்தது. திங்க மட்டும் தெரியுது, ஆனா ஒழுங்கா படிக்க மாட்ட என்று கேட்க, தலையைக் குனிந்து கொண்டான். குடியிருக்கும் ஒண்டுக்குடித்தன காம்பௌண்ட் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அலுவலகத்துக்கு கிளம்ப எத்தனித்த போது, லேட்டாகுமா? சாப்பாடு வேணாமில்ல? என்று மனைவி கேட்டார். ஆமா லேட்டாகும், சாப்பிட்டு விட்டு வந்துடறேன் என்று பதிலளித்துவிட்டு கிளம்பினேன்.

வேலை முடிய தாமதமாக, மானேஜர் வார்த்தைகளில் விஷம் தடவினார். சகித்துக் கொண்டு, முடித்துவிட்டு வெளியே வந்த போது மணி 10. பழக்கமான நடைபாதை வண்டிக் கடைக்குச் சென்று நாலு இட்லி என்று சொல்லிவிட்டு, மனைவி ஏதும் அழைத்திருக்கிராறா என்று சைலண்ட் மோடில் போட்டிருந்த செல்லில் பார்த்தேன். ஏமாற்றம். கடைக்காரரின் 10 வயதுப் பையன் சுறுசுறுப்பாக தட்டுக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். எட்டு மணிவரை அங்கேயே உட்கார்ந்து அவன் ஹோம் ஒர்க் செய்வதையும் பார்த்திருக்கிறேன். முதல் இட்லியை முடித்த போது, என் அலுவலக சக பணியாளர்கள் இருவர் வந்தனர். எனக்கும் அவர்களுக்கும் 20 வயது வித்தியாசம். நக்கலாக என்னை ஒரு பார்வை பார்த்தபடி, கடைக்காரரிடம் ஆர்டர் கொடுத்தார்கள்.

வீட்டுக்கு திரும்பிய உடன், பையனின் டைரியைப் பார்த்தேன். எங்க செஞ்ச ஹோம் ஒர்க்க காட்டு என்றதற்கு, மீண்டும் தலையைக் குனிந்து நின்றான். இருந்த ஆத்திரத்தையெல்லாம் திரட்டி கண் மண் தெரியாமல் அடித்து விட்டேன். ஊமை அழுகை அழுதவாறே அப்பொழுதும் தலையைக் குனிந்தே நின்றான். விரக்தியுடன் படுத்தால், தூக்கம் வரவில்லை.

படிக்காவிட்டால் கூட பரவாயில்லை. 12 வயதாகிறது. இன்னும் சரியாக பல் விளக்க வரவில்லை, டாய்லெட் போனால் கையை வளைத்து பின்புறம் சென்று கழுவ வரவில்லை, பனியன் போடத் தெரியவில்லை, ஷூ – லேஸ் கட்ட இன்னும் 5 ஆண்டுகளாவது ஆகும் போலிருக்கிறது.
விரக்தி அதிகமாக அதிகமாக புத்திக்கு சட்டென்று ஒன்று உறைத்தது. நீ மட்டும் சரியா? என்று. 45 வயதில், 25 வயது ஆட்களோடு, அவர்கள் செய்யும் அதே வேலையை, அதே சம்பளத்துக்குத் தானே செய்கிறாய்? நீ 12 வயதில் எப்படி இருந்தாய்? கோபால் பல்பொடியை ஒன்றுக்கு இரண்டாக பல்லில் தேய்த்துவிட்டு, சில சமயம் தின்று விட்டு திரிந்தவன் தானே?, ஆற்றங்கரையோரம் காலைக் கடன் கழித்ததால் எளிதில் சுத்தம் செய்து கொண்டாய். கல்லூரி வரும் வரை பனியன் போட்டதில்லை, இன்றுவரை ஷூவே அணியவில்லை. உனக்கென்ன நியாயம் இருக்கிறது அவனை அடிக்க? என்று மனது உலுக்க ஆரம்பித்தது.

மகனைப் பார்த்தேன். கோணல் மானலாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அடிக்கடி இரவில் படுக்கையை நனைக்கும் பழக்கமும் அவனுக்கு உண்டு. எழுப்பி சிறுநீர் கழிக்க வைத்தேன். தொடரும் நாட்களை நினைத்து பயம் வந்தது.

மறுநாள் காலை செல் கூவ, விழித்தேன். ஊரில் இருந்து சித்தி. “என்னப்பா ஏதும் விசாரிச்சியா” என்றார். பார்த்துக்கிட்டு இருக்கேன் சித்தி என்று பதில் சொல்லிவிட்டு, பையனை பள்ளிக்கு கிளப்ப ஆரம்பித்தேன்.
அலுவலக உணவு இடைவேளையில், சாப்பிடப் பிடிக்காமல், சோற்றை அளைந்து கொண்டே இருந்தபோது, சித்தியின் ஞாபகம் வந்தது. என் சித்தப்பா, திருமணமான சில வருடங்களில் இறந்து விட, தன் ஒரே பையனை கஷ்டப்பட்டு வளர்த்தவர் சித்தி. இப்போது அவனுக்கு  34 வயது. ஊரில் ஒரு தனியார் மில்லில் ஆபிஸ் அசிஸ்டெண்ட். இன்னும் திருமணம் ஆகவில்லை. அது விஷயமாகத்தான் சித்தி அடிக்கடி போனில் பேசுவார்.

15 வருடங்களுக்கு இருந்ததை விட பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல மடங்கு அதிகரித்து உள்ளது. அப்போதே எனக்கு பெண் கிடைக்க வில்லை. நான்கு வருட காத்திருப்பின் பின்னர், பெண் கிடைத்தது. வறுமை, சரியில்லாத ஜாதகம் போன்ற அவருடைய நெகடிவ்கள் எனக்கு பாஸிட்டிவ் ஆகி எங்கள் கல்யாணம் நடந்தது. எத்தனை ஹீரோக்கள், எத்தனை வசதியான வாழ்க்கையை அவர் கனவு கண்டிருந்தாரோ, அது அவருக்குத்தான் தெரியும். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்பது, அவர் முகத்தில் உறைந்து விட்ட சோகக்களையில், யார் எப்படி இருந்தா எனக்கென்ன என்ற விட்டேத்தியான மனோபாவத்தில், என்னிடம் குறைந்து விட்ட பேச்சுகளில், சமையலில், மையலில் எனக்கு தெளிவாகத் தெரிந்தது. சித்தி பையனுக்கு பெண் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை எனத் தோன்றியது.

எனக்கு 45 ஆண்டுகளும், பல அவமானங்களும், உதாசீனங்களும் தேவைப்பட்டது, நான் இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஆட்கள் இந்த உலக வாழ்க்கைக்கு லாயக்கு கம்மியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள. ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொள்வதற்குள் திருமணம் செய்து இன்னொரு வாரிசையும் உருவாக்கி விடுகிறோம். ஒவ்வொரு முறை மகனை அடிக்கும் போதும், வார்த்தையால் காயப்படுத்தும் போதும், இனி இப்படி செய்யக் கூடாது என நினைப்பேன். அதெல்லாம் நீர்க்குமிழி. எங்கள் ஆட்கள் இனிமேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும், முக்கியமாக என் மகன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூட நினைப்பேன். இன்னொரு கோணத்தில் யோசித்தால், லாயக்கானவர்கள் மட்டும் தான் இங்கு வாழ வேண்டுமா? மனிதனை, மனிதனாக மதிக்காதவர்கள், அயோக்கியர்கள் எல்லாம் இங்கு வாழவில்லை? என்ற கேள்வியும் உடனே வந்து விடுகிறது.
டப்பாவை கழுவி பையில் வைத்து விட்டு, நிமிர்ந்தபோது மானேஜர் அழைத்தார். ஸ்டேட்மெண்ட்ல நிறைய தப்பு இருக்குங்கிறாங்க, அடுத்த வாரம் டெட்லைன். என்ன செய்வீங்களோ தெரியாது, பக்காவா ரெடி பண்ணனும் என்று சொல்லிவிட்டு, மானிட்டரை நோக்கி திரும்பிக் கொண்டார்.

ஆயிற்று ஒரு வாரம். மேனேஜர் எதிர்பார்த்தபடி வேலை முடியும் தருவாயில்  , ஆச்சரியமாக மனைவியிடம் இருந்து போன். அவர் வழி உறவினர் ஒருவர் இறந்து விட்டதாகச் சொல்லி, வர முடியுமா என்று கேட்டார். நான் நிலைமையைச் சொல்லவும், சரி நான் மட்டும் போறேன். பக்கத்து வீட்டுல சொல்லிட்டுப் போறேன். பையன் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். இந்த விஷயத்திற்கு இன்னும் எவ்வளவு காலம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வாரோ என கலக்கத்துடன், வேலையைத் தொடர்ந்தேன். மேனேஜர் வேறு ஜாடை மாடையாக ஏழு கழுதை வயசாச்சு, வேலையும் கழுதை மாதிரிதான் இருக்கு என போனில் பேசுவது போல் ஒரு குத்து குத்தினார்.
இரவு வீட்டுக்கு வரும் போது பதினோரு மணி. பக்கத்து வீடுகளில் எல்லோரும் தூங்கியிருக்க, மகன் இன்னும் யூனிபார்மைக் கூட கழட்டாமல் பழைய பேப்பரை கிழித்துக் கொண்டு இருந்தான். ஹோம் ஒர்க் செய்துவிட்டாயா என்று கேட்டு, இல்லை எனத் தெரிந்ததும் செருப்பை எடுத்து ஆக்ரோசமாக அடித்து விட்டேன்.

காலையில் எழுந்தபோது காய்ச்சலை உணர முடிந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பையனை பள்ளிக்கு அனுப்பும் போது தாங்க முடியாத உடல் வலியும். மேனேஜர்க்கு போன் செய்து லீவ் சொல்லிவிட்டு, பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் சொல்லி ஒரு மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டேன்.  தூங்கி எழும்போது, அகோரப் பசி எடுத்தது. கடிகாரம் 9 மணியைக் காட்டியது. சிரமப்பட்டு எந்தரித்தேன். தட்டில் நாலு இட்லி வைத்து பையன் கொடுத்தான். குழப்பத்துடன் சாப்பிட்டது நினைவிருக்கிறது. உடல்வலி தாங்காமல் அனத்தியது நினைவுக்கு இருக்கிறது, அவன் என் கை,கால்களை பிடித்து விட்டது லேசாக நினைவில் இருக்கிறது.  

மறுநாள் காலை உடல்நிலை இயல்பாக இருந்தது. அம்மா நேத்து பேசினாங்கப்பா, இன்னைக்கு சாயங்காலம் வந்துடுறாங்களாம் என்றான். பக்கத்து கடையில் அவனுக்கு டிபன் வாங்கி, லஞ்ச் பாக்சிலும் அதையே அடைத்துக் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்து விட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினேன். சாயங்காலம் மனைவி, வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தகவல் சொன்னார். ட்ராவல் டய்ர்டா இருக்கும், பார்சல் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு, வேலையை சீக்கிரம் முடித்து கிளம்பினேன்.

வழக்கமாக பார்சல் வாங்கும் நடைபாதை வண்டிக்காரர், “நேத்து உங்க பையன், எங்கப்பாவுக்கு காய்ச்சலா இருக்கு, நாலு இட்லி பார்சல் கொடுங்கன்னு வந்து கேட்டான், அப்புறம் உங்க வீடு தூரமாச்சே எப்படிடா வந்தேன்னு? கேட்டேன். நடந்துதான் வந்தேன்னான். நாலு கிலோமீட்டருக்கு மேல இருக்குமே எப்படிடா போவேன்னு, தெரிஞ்ச கஸ்டமர் வந்தா பைக்ல ஏத்தி அனுப்பலாமுனு நெனச்சேன். சோதனைக்குன்னு யாரும் வரல்லை. வேணாங்க நான் நடந்தே போயிடுறேன்னு விசுக் விசுக்குன்னு வேகமா நடந்து போயிட்டான் என்றார்.


கடவுள் என்னிடம், இதுக்கு மேல என்னடா எதிர்பாக்குற உன் வாழ்க்கையில? என்றார்.

January 19, 2015

1970களில் தமிழ் சினிமா

தமிழ்சினிமாவைப் பற்றிப் பேசும் பெரும்பாலாவனர்கள் 1980களில் இருந்து தமிழ்சினிமாவைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள் இல்லையென்றால் . எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் கோலோச்சிய 1950 மற்றும் 60களைப் பற்றி பேசுவார்கள். ஏன் திரைப்படம் தொடங்கிய காலத்தில் இருந்து தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா ஆகியோர் சூப்பர்ஸ்டார்களாக வலம்வந்த 1940கள் வரை பேசுவார்கள். ஆனால் இந்த 1970களில் வந்த தமிழ்சினிமாக்களைப் பற்றி  குறைவாகவே பேசுவார்கள்.

சமீப காலங்களில் வந்த பீரியட் படங்களான சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு, முண்டாசுபட்டி போன்ற திரைப்படங்களும் 1980களையே சித்தரித்தன. தற்போதைய படங்களின் கதை மாந்தர்களின் இளம்பருவ நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தும் போதும் அவை பெரும்பாலும் 1980களை ஒட்டியே இருக்கிறது. 1970களின் பிற்பகுதியில் வந்த திரைப்படங்களைப் பற்றிய பகிர்வுகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஏனோ 1980களுடன் சேர்த்தே பார்ப்பது தமிழரின் வழக்கமாக இருந்துவருகிறது.
முதலில் 1970களில் தமிழ்சினிமாவில் நிலவிய சூழலைப் பற்றிக் காண்போம்.

கதாநாயகர்கள்
70கள் ஆரம்பிக்கும் பொழுது எம்ஜியார்க்கு 53 வயது, சிவாஜி கணேசனுக்கு 42 வயது. எம்ஜியாராவது 72ல் தனிக்கட்சி ஆரம்பித்து, அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இயங்கி வந்தார். எனவே 1950 மற்றும் 60களுடன் ஒப்பிடுகையில் அவர் 70களில் நடித்த படங்களின் விகிதம் குறைவு. மேலும் 77ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றபின் புதிய திரைப்படங்களில் நடிக்கவில்லை. இருந்தாலும் உலகம் சுற்றும் வாலிபன், ரிக்‌ஷாகாரன், மாட்டுக்கார வேலன், நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி, நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, நீரும் நெருப்பும், உரிமைக்குரல், மீனவ நண்பன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். 

ஆனால் சிவாஜியோ 70களில் ஏராளமான படங்களில் ஏறத்தாழ 75 படங்களில் நடித்தார். 1972 ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த 7 படங்களில் 6 படங்கள் 100 நாட்கள் ஓடின. அவற்றில் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவைக் கண்டன. 70களில் நடிகர் திலகம் தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு, கௌரவம், வசந்த மாளிகை, பாரதவிலாஸ்,உத்தமன், ராமன் எத்தனை ராமனடி, பாபு, அவன் தான் மனிதன், பைலட் பிரேம் நாத், ராஜபார்ட் ரங்கதுரை, பட்டிக்காடா பட்டணமா, டாக்டர் சிவா, ராஜா, சொர்க்கம்,சவாலே சமாளி, ஞான ஒளி, தியாகம், திரிசூலம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார் .மீதமுள்ள படங்களில் அவருடைய நடிப்பு பேசப்பட்டாலும் வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. சொல்லப்போனால் ஏராளமான அட்வாண்டேஜ்களோடு 70களில் கால்வைத்த சிவாஜி கணேசன் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை. ஜெமினி கணேசன் 70களில் நுழையும் போது அவருக்கு வயது 50. இவரும் கூட குறிப்பிடத்தக்க படம் என்று எதையும் 70களில் நடிக்கவில்லை..

ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ஏவிஎம் ராஜன், சிவகுமார், ஜெய்கணேஷ் போன்றவர்கள் ஏராளமான படங்களில் நடித்தார்கள். அதில் சில படங்களும் வெற்றிபெற்றன. ஆனால் இவர்கள் நடிப்பால் அவை எதுவும் வெற்றி அடையவில்லை. 76 ஆம் ஆண்டுவரை இவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ஏராளம். ஆனால் எல்லாவற்றிலும் இவர்கள் இவர்களாகவே வந்தார்களே தவிர, எந்த கதாபாத்திரமாகவும் மாறவில்லை. ஜெய்சங்கர், துப்பறியும் நிபுணராக, கௌபாய் பட நாயகராக பல படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும்படி எதிலும் சோபிக்கவில்லை. சிவகுமாருக்கு ஆட்டுக்கார அலமேலு நன்றாக ஓடினாலும் அவரைவிட ஆட்டுக்குத்தான் அதிகப்புகழ் கிடைத்தது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி மட்டுமே 70களில் அவருக்கு பெயர்சொல்லும் படி வந்த படம்.

ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்கணேஷ் ஆகியோரை ஒருவிதத்தில் பாராட்ட வேண்டும். இரண்டு மூன்று நாயகர்களின் படங்களில் கூட இணைந்து நடித்தார்கள். 70களின் ஆரம்பத்தில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கு, திரையில் தங்களை அடையாளப்படுத்தும் இளவயது கதாநாயகனோ,  காதல் வித்தகனோ அல்லது சாகசக்காரனோ இல்லாமல் போனது. அதனால்தான் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் 70களின் பிற்பகுதியில் அறிமுகமானபோது ஏராளமான ரசிகர்களைப் பெறமுடிந்தது.

கதாநாயகிகள்
60களில் அறிமுகமான கதாநாயகிகளே 70களிலும் தொடர்ந்தார்கள். மஞ்சுளா, லதா, ஸ்ரீபிரியா போன்றவர்கள் 70களில் புதிதாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர்கள். இந்த கதாநாயகிகள் அனைவருமே சற்று பூசினார்போலதான் இருந்தார்கள். இவர்களின் நடிப்பில் ஏதும் குறை இல்லாவிட்டாலும், இவர்களுக்கு ஏற்ற கதை அம்சமுடைய படங்கள் குறைவாகவே கிடைத்தன. வயது கூடிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டி இருந்ததால், ஒரு பெரிய மனுஷித்தோரணையே இவர்களின் பெரும்பாலான படங்களில் இருக்கும். இந்தக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட திருமண போட்டோக்களில் இருக்கும் மணப்பெண்ணின் அலங்காரத்தில் இவர்களுடைய சாயலே இருக்கும். ஸ்ரீதேவி, ரத்தி அக்னிஹோத்ரி ஆகியோர் 70கன் பிற்பகுதியில் அறிமுகமானபோது, தமிழகத்திலேயே ஒரு இளமை அலை அடித்ததைப் போல் இருந்தது.

இயக்குநர்கள்
60களில் வெற்றிநடை போட்ட பீம்சிங், பந்துலு ஆகியோர் தங்களின் பங்களிப்பை குறைத்திருந்த காலம். ஸ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் சிறந்த படைப்புகளும் கூட 60களின் பிற்பகுதியில்தான் அதிகம். பாலசந்தர் மட்டும் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அபூர்வ ராகங்கள் என தன்னுடைய ஆற்றலை 70களிலும் இழக்காமல் இருந்தார். 70களின் முற்பகுதியில் ப.நீலகண்டன், கே.சங்கர் ஆகியோர் எம்ஜியாரின் ஆஸ்தான இயக்குநர்களாக இருந்தார்கள். ஏ சி திருலோக சந்தர், சி வி ராஜேந்திரன், பி.மாதவன், யோகானந்த் ஆகியோர் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களை இயக்கினார்கள். கே எஸ் கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பாணியில் தொடர்ந்து குடும்ப உறவுகளைச் சித்தரிக்கும் படங்களை இயக்கிவந்தார்.

இந்த காலகட்டத்தில் வந்த பெரும்பாலான படங்கள், மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் வெற்றிகரமான நாடகங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே அந்தந்த மூல படங்களில் உபயோகித்த காட்சி கோணங்கள் மற்றும் நடிகர்களுக்கு வசதியான கோணங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டன. தனித்து அடையாளம் காணும்படி படைப்பாக்கம் இருக்கும்படியாக பல இயக்குநர்கள் இயங்கவில்லை.

இசை அமைப்பாளர்கள்
கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், கே ராமமூர்த்தி, வி குமார், டி ஆர் பாப்பா, வேதா, சங்கர் கணேஷ் ஆகியோர் 70களின் முற்பகுதியில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர்கள். இவர்களில் கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோர் பெரிய நட்சத்திரங்கள். இயக்குநர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்கள். வி குமார் பாலசந்தரின் பெரும்பாலான படங்கள் மற்றும் புதிய இயக்குநர்களின் படங்களுக்கு இசை அமைத்தார், டி ஆர் பாப்பா, வேதா ஆகியோர் மார்டன் தியேட்டர்ஸ் மற்றும் ஜெய்சங்கரின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தார்கள். தேவர் பிலிம்ஸ் படங்கள் மற்றும் சிறு பட்ஜெட் படங்களுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார். 50கள் 60கள் போல காலத்தை வெல்லும் ஏராளமான பாடல்களை இந்த காலகட்டத்தில் இவர்கள் தரவில்லையென்றாலும், சில படங்களின் பாடல்கள் இன்னும் நம்மை ரசிக்கவைக்கும் படியே இருக்கின்றன. இயக்குநர்கள் தானே இசை அமைப்பாளர்களுக்கு எஜமானாக இருந்து, பாடல்களை வாங்க வேண்டும். எம்ஜியார், ஸ்ரீதர் ஆகியோர் மட்டுமே இந்த காலகட்டத்தில் அப்படி நல்ல பாடல்களை வாங்கினார்கள்.

நகைச்சுவை நடிகர்கள்
70களின் முற்பகுதியில் நாகேஷ், வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் ஆகியோரே பிரதான காமெடியன்கள். தமிழ்சினிமாவிற்கு எந்த பஞ்சம் வந்தாலும் காமெடி நடிகர்கள் பஞ்சம் மட்டும் வந்ததில்லை. இவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட வாய்ப்பில் பிரமாதப் படுத்தினார்கள். ஆனால் அப்படி அதிகமான வாய்ப்புகளை இயக்குநர்கள் 60கள் போல் வழங்கவில்லை. காமெடி நடிகைகள் பஞ்சம் தமிழ்சினிமாவில் எப்போதுமே உண்டு. இந்த காலகட்டத்தில் மனோரமா, சச்சு ஆகியோர் மட்டுமே நகைச்சுவை நடிகைகளாக இருந்தனர். அதன்பின்னர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆகியும் கோவை சரளா, ஆர்த்தி போன்ற மிக மிக குறைவான காமெடி நடிகைகளே தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் கலை இயக்கம்
கர்ணன் தான் ஒளிப்பதிவு செய்த படங்களில் புதிய கோணங்களை வைத்தார். காட்சியின் தன்மைக்கேற்ப ஒளிப்பதிவும் செய்தார். கே எஸ் கோபாலகிருஷ்ணனின் படங்களுக்கும் கௌபாய் படங்களுக்கும் அப்படங்களின் போக்கு மாறாமல் ஒளிப்பதிவு செய்தார். மற்றபடி குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்கள் 70களின் முற்பகுதியில் உருவாகவில்லை. எடிட்டிங் துறையில் விற்பன்னர்கள் இருந்தாலும் அப்போது உருவான படங்களின் கதை அம்சம் அவர்கள் தங்கள் வழக்கமான பணியினைச் செய்யும்படியே இருந்தது. கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு ஆகியவையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பெரும்பாலும் ஸ்டுடியோவுக்குள் எடுத்த படங்கள், வ்ழக்கமான செட் பிராப்பர்டிகள் என புதுமையின்றியே இருந்தது.

எந்த வகையில் பார்த்தாலும் 70களின் முற்பகுதி என்பது தமிழ்சினிமாவிற்கு ஒரு சராசரி காலமாகத்தான் இருந்திருக்கிறது. எம்ஜியாரின் படங்கள், மற்றும் சிவாஜியின் சில படங்கள் தவிர மக்களை திரையரங்குக்கு இழுத்துவரும்படி படங்கள் வரவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் இளைஞர்களாக இருந்த காலகட்டம், முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தினால் கல்வியறிவு பெற்ற மாணாக்கர்களின் விகிதம் அதிகம் இருந்த காலகட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் அது சார்ந்த தேடல்களால், கூர்மையடைந்திருந்தவர்கள் இருந்த காலகட்டம், எனினும் சுமாரான படங்களை கொடுத்தாலும், நடித்தாலும் நிலைத்து நிற்க முடியும் என்று இருக்க என்ன காரணம்?

அப்போதிருந்த குறைவான பொழுது போக்கு வடிகால்களால் மக்கள் அனைவரும் வேறுவழியின்றி தங்களுக்கு அருகாமையில் வரும் படங்களை பார்க்க வேண்டிய நிலை இருந்தது.  சென்னையில் 1970ல் தேவி திரையரங்கமும், 74ல் சத்யம் திரையரங்கமும் துவங்கப்பட்டது. அதன்பின்னர் பெரும்பாலான திரை அரங்குகள் 80களிலேயே துவங்கப்பட்டன. சென்னை போலவே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், முக்கியமாக சிறு நகரங்களிலும். கிராமங்களிலும் 50களில் உருவான திரையரங்குகளே முக்கிய திரையரங்குகளாக இருந்துவந்தன. 80களுக்குப் பின்னரே இங்கெல்லாம் நல்ல வசதியுடைய திரையரங்குகள் உருவாகின.

இந்த காலகட்டத்தை டூரிங் டாக்கீஸ்களின் காலம் என்று கூட சொல்லலாம். புரஜெக்டர் வைக்க மண்ணாலான ஒரு அறையும், இரண்டு ட்ராக்டர்களில் ஏற்றிச் செல்லும்படியான கூரை வேயும் பொருட்களும், மர பெஞ்சுகளும் கொண்டு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் இருப்பிடத்தை மாற்றினாலும், மாறிச்சென்ற பின்னரும் பேருந்து நிறுத்தமாக அறியப்பட்ட பெருமை வாய்ந்தவை இவை. வார நாட்களில் இரண்டு காட்சியும், சனி, ஞாயிறுகளில் மூன்று காட்சியும் படங்கள் திரையிடப்பட்டாலும், பெரும்பாலும் இரவுக்காட்சிகளுக்கே அரங்கம் நிரம்பி வழியும். கட்டணம் குறைவு என்பதால் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படம் பார்த்தார்கள். எனவே பட முதலீடு செய்தவர்களுக்கு பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் இதுவே தரம் குறைந்த படங்கள் அதிகம் வரவும் காரணமாய் இருந்தது.

ஆனால் இதே காலகட்டத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. சோபன்பாபு, கிருஷ்ணா போன்றோர் நடித்த கரம் மசாலா படங்கள், விட்டலாச்சார்யாவின் மந்திர தந்திர படங்கள் ஆந்திராவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டின. குறிப்பாக சிறுநகரங்கள், கிராமங்களின் டூரிங் தியேட்டர்களில் இவை நன்கு ஓடின. சிவாஜி கணேசன் கூட இரண்டு மூன்று படங்கள் இந்தப் பாணியில் நடித்தார். ஆனால் அவை பெரிய அளவில் எடுபடவில்லை. இம்மாதிரியான மசாலா படங்களில் நடிக்க துடிப்பான கதாநாயகன் தேவை. 70களின் முற்பகுதியில் அப்படி ஒரு கதாநாயகன் நம்மிடம் இல்லை. அப்படி கிடைத்திருந்தாலும் தமிழ்சினிமா அந்தப் பாதையை தேர்ந்தெடுத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆந்திரா காரம் நமக்கு ஒத்துக்கொள்ளாது. சிறிது நீர்த்த ஆந்திர காரமே நமக்கு ஒத்துக்கொள்ளும்.

இவற்றிற்கு மாறாக 70களின் பிற்பகுதியில் தமிழ்சினிமா தேர்ந்தெடுத்த பாதை, யதார்த்த,மண் சார்ந்த கதைகள். திரைப்படத்துறையின் உள்ளே வருபவர்களுடைய வெற்றி விகிதம் என்பது மற்ற துறைகளோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவு.  ஐயாயிரம் பேர் முயற்சி செய்தால் ஐந்து பேர்தான் வெற்றி பெறுவார்கள். இன்னும் பத்தாயிரம் பேர் மனதளவில் மட்டும் முயன்றிருப்பார்கள். 70களின் பிற்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் தமிழ்சினிமாவில் வெற்றி பெற்றார்கள், எனவே அப்போது ஏராளமானோர் முயன்றிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.
இதற்கு காரணம் அப்போதைய தமிழின் முண்ணனி எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் பரவலாக்கப்பட்ட கல்வியறிவு. இதனால் படைப்பூக்கம் கொண்டு பலர் படையெடுத்தார்கள். சிலர் வெற்றி பெற்றார்கள். தேவராஜ்  மோகன், ருத்ரய்யா, மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, துரை போன்ற இயக்குநர்கள் புதுவெள்ளமென தமிழ்சினிமாவில் புகுந்தார்கள்.

இவர்கள் தங்கள் முந்தைய தலைமுறை இயக்குநர்களைப் போல் இல்லாமல் தங்கள் வாழ்வில் இருந்தும், நல்ல எழுத்தாளர்களின் கதைகளில் இருந்தும் தங்கள் படைப்புகளை உருவாக்கினார்கள். இவர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல முந்தைய காலகட்டத்தில் இருந்த எந்த நடிகர், நடிகை, இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவார்கள் ஏன் காமெடி நடிகர்களை கூட தங்கள் படத்தில் பயன்படுத்தவில்லை. விதிவிலக்காக சிலரை மட்டுமே பயன்படுத்தினார்கள்.
நடிகர்கள் என்றால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிகைகள் என்றால் ஷோபா, ஸ்ரீதேவி, ரத்தி, ராதிகா, இசைக்கு இளையராஜா, காமெடியன்கள் என்றால் சுருளிராஜன், கவுண்டமணி, ஒளிப்பதிவிற்கு நிவாஸ், பாலுமகேந்திரா, அசோக்குமார், என புதியவர்களின் கூடாரமாய் விளங்கியது 70களின் பிற்பகுதி. தமிழ்சினிமாவின் டாப் 10 படங்கள் என யார் பட்டியல் இட்டாலும் அதில் 70களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட இரண்டு, மூன்று படங்களாவது இடம் பெறும் என்பதே இந்த காலகட்டத்தின் சிறப்பு. இந்தப் படங்களைத்தவிர கோவி மணிசேகரன் இயக்கத்தில் வந்த தென்னங்கீற்று, சண்முகம் இயக்கத்தில் வந்த பாப்பாத்தி போன்ற படங்கள் யாரும் தொடாத பிரச்சினைகளைப் பற்றி பேசியது.

80களில் கட்டப்பட்ட புதிய திரை அரங்குகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், அதிகப் படுத்தப்பட்ட காட்சிகள் ஏராளமான பார்வையாளர்களை திரையரங்குக்கு கொண்டு வந்ததால் அவர்களுக்கு தீனி போடும் விதமாக ஏராளமான கமர்சியல் படங்கள் தயாரிக்கப்பட்டன. இருந்தாலும் அவ்வப்போது காலம் கடந்து நிற்கும் திரைப்படங்களும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

1970களில் தமிழகத்தில் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைபெற்றன. தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பொது உடைமை ஆக்கப்பட்டது, பி யூ சி படிப்பு ஒழிக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளிகள் உருவாகி பிளஸ் டூ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது போன்றவை இன்றளவும் நீடிப்பதைப் போல, தமிழ்சினிமாவில் 70களின் பிற்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்றளவும் தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கு காரணியாய் இருந்து வருகிறது. அந்தக் கால கட்ட படங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த இயக்குநர்களின் கலை வாரிசுகளாய் வந்தவர்கள் தமிழ்சினிமாவை தாங்கிப் பிடித்து வருகிறார்கள்.

ஆனால் 70களின் பிற்பகுதி சினிமாக்களைப் பற்றி ஒரு வருத்தம் உண்டு. ஜூன் 75 முதல் மார்ச் 77 வரை இந்தியாவில் அவசர கால சட்டம் அமலில் இருந்தது. அதைப்பற்றிய பதிவுகள் திரைப்படத்தில் வரவேயில்லை. கோடிட்டு காட்டும் படியான காட்சிகள் கூட வைக்கப்படவில்லை. எமெர்ஜென்சி காலத்துக்கு பின்னால் வந்த ஜனதா அரசில் தணிக்கை செய்தவர்கள் நிச்சயம் அதை எதிர்த்திருந்திருக்க வாய்ப்பில்லை.


போகட்டும். இப்போதைய இயக்குநர்களாவது இனி எடுக்கப்போகும் தங்கள் பீரியட் படங்களில் 70களை களமாகக் கொண்டால் நன்றாக இருக்கும். அவசர கால சட்டம் அமலில் இருந்த நேரத்தில் நடப்பது போல் காட்சிகளை அமைத்தால் இன்னும் நலம்.

2015 ஜனவரி மாத காட்சிப்பிழை இதழில் வெளியான கட்டுரை - நன்றி காட்சிப்பிழை ஆசிரியர் குழு.

January 03, 2015

நாற்பது வயது

நாற்பது வயதில் நாய்க்குணம் என்பது சென்ற தலைமுறைக்கு வேண்டுமானால் பொருந்தி இருக்கலாம், ஆனால் இந்த தலைமுறையில் பெரும்பாலோனோர்க்கு அது பொருந்துவது இல்லை. நாற்பது வயதில் தான் இப்போதெல்லாம் ஒரு மனிதன் பக்குவப்படுகிறான் அல்லது சூழலால் பக்குவப்படுத்தப் படுகிறான்.

இருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்பவன், ஆரம்ப காலகட்டத்தில் பிரச்சினைகளின் போது ரிமோட்டை உடைப்பான்,செல்போனை சிதறவிடுவான், சொந்த வீடாகவோ, வீட்டு உரிமையாளர் அருகில் இல்லாத வீடாகவோ இருந்தால் கதவை டமாரென சாத்துவான். ஆனால் நாற்பது வயது ஆனவன், இதை எல்லாம் செய்வது இல்லை.இந்தப் பெண் தன் கணவனைத் திட்டுகிறாள், தன்னை அல்ல என்ற ஆழ்ந்த புரிதலோடு இருப்பான். மேலும் நாற்பது வயதான உடன் மனைவி பேசும் போது காதுகளில் இருந்து மூளைக்கு செய்தியைக் கடத்தும் நியூரான்கள் வலுவிழந்து விடுவதாகவும், எனவே வார்த்தைகளானது பைபாஸில் பயணம் செய்து இன்னொரு காது வழியாக வெளியே சென்று விடுவதாகவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

திருமணமான புதிதில் ஒருவன் தன் மனைவி வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போதெல்லாம் இரத்தக் கொதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உங்க கம்பெனி இப்போ டவுனாமே? என்ன இன்னும் வண்டி வாங்கலையா? எங்க அண்ணன் மகன் அங்க இருக்கான், அக்கா பொண்ணு இங்க வீடு வாங்கி இருக்கு என்று அவரவர் லெவலுக்கு ஏற்ப தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். இவர்களுக்காகவே இயல்பு நிலையில் இருந்து மீறி அலட்ட வேண்டியிருக்கும். நாற்பதில் இந்த சிக்கல் இருக்காது. மீறி யாராவது அலட்டினாலும், எங்க கம்பெனியில் இப்போ ரிசஷன், லோன் கட்ட முடியாம இருக்கேன் என்று பேச ஆரம்பித்து, எங்கே இவன் நம்மிடம் எதுவும் கேட்டு விடுவானே என்று அலட்டல் பார்ட்டிகள் அஞ்சும் அளவிற்கு பரிதாபமாக பேசும் கலை கைவந்து விடும்.

அலுவலகத்திலோ, யார் என்ன சொன்னாலும், வேலைன்னு வந்துட்டா திட்டத்தான் செய்வாங்க. அதுவும் இப்போ நவம்பர், வேலை போச்சுன்னா, அடுத்த வேலை எங்க கிடைக்குமோ, போற இடத்துல பிள்ளைகளுக்கு ஸ்கூல் அமையுமோன்னு பல வகையிலும் சிந்தித்து ஒரு அசட்டுத்தனமான முகபாவனையை காட்டுவிட்டு நகர்ந்து விடும் இயல்பு வந்துவிடும். இதே ஆள் இருபது சில்லறையில் இருக்கும் போது அந்த வார்த்தையை கேட்டிருந்தால், கூரை மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா, என் படிப்புக்கும் திறமைக்கும் நான் எங்க இருக்க வேண்டியவன், எனக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும், இங்க இருக்க என்ன தலையெழுத்தா? என்று புரட்சி முழக்கமிட்டிருப்பான். காலமும் ஒரு கல்யாணமும் ஒருவனை எப்படி பதப்படுத்தி விடுகிறது?

சரியான சில்லறை கேட்டதற்காக கண்டக்டரிடம் சண்டைக்கு போனவன், நண்பனை ஊர்ச் சண்டையில் அடித்து விட்டார்கள் என்பதற்காக அரிவாளை எடுத்தவன், பந்தியில் பீஸ் இல்லாமல் பிரியாணி போட்டதற்காக மூன்றாம் உலகப் போருக்கு அடிகோலியவன் எல்லாம் அமைதி அடைந்து இதெல்லாம் ஒரு மேட்டராப்பா? சமூகம்னா இப்படித்தாம்பா இருக்கும்னு மற்றவர்களை ஆறுதல் படுத்த தொடங்குவதும் இந்த நாற்பது வயதில்தான். ஒரு ஆங்கிரி யங் மேன் குணசித்திர நடிகராக மாறும் ரசவாதம் நிகழ்வது இந்த நாற்பதில்தான்.  சொல்லப் போனால் நாற்பது வயதில் நாய்க்குணம் என்பதை நாற்பது வயதில் எருமைக்குணம் என்று சொல்லும் அளவுக்கு இப்போதெல்லாம் ஆண்களின் இயல்பு மாறிவருகிறது.

நாற்பது வயதில் இன்னொரு குணமும் ஆண்களிடத்தில் அவர்கள் அறியாமலேயே உட்புகுந்து விடுகிறது. அதுதான் நரிக்குணம். என் நண்பர் ஒருவர், தன் மனைவி வீட்டாரால் பலமுறை அவமானப் பட்டவர். மனைவியின் தம்பிக்கு நல்ல சம்பந்தம் வந்தது. பெண் நல்ல அழகி, ஏராளமான சொத்து, நல்ல மரியாதையான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு வகையில் நண்பனுக்கு தூரத்து உறவு. சரி சம்பந்தம் பேசுவதற்கு முன் இவரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அவர்கள் போன் செய்தார்கள். இந்த மாதிரி உன் மச்சினனுக்கு குடுக்கலாம்னு இருக்கோம்பா என்று அவர்கள் ஆரம்பிக்க இவர் “ஓ” என்று சொன்னார். எந்த மாடுலேசனில் ஓ என்று சொன்னார் என்று தெரியவில்லை. அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். அந்தப் பையன் இன்னும் மேட்ரிமோனி வெப்சைட்களுக்கு பிரிமீயம் மெம்பராகி பணம் கட்டிக் கொண்டிருக்கிறான்.

என்னுடைய இன்னொரு நண்பர் அவர் சொல்லும் பஞ்ச் இது. “என்னை வதைப்பவர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன், ஆனால் நான் உதவி செய்தால் அவர்கள் தப்பிப்பார்கள்” என்னும் நிலை ஒரு காலத்தில் அவர்களுக்கு வரும் போது நான் பாராமுகமாய் இருப்பேன் என்பார். இது இருபது வயது இளைஞர்களிடம் நிச்சயம் இருக்காது.

மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் நாற்பது வயதுக்கு மேல் நரியாகவே மாறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஏனென்றால் அந்த வயதில் அவர்களுக்கு குறைந்தது 15 வருட அனுபவம் ஏற்பட்டு விடும். அந்த அனுபவ அளவுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு வெளியே வேலை கிடைப்பது கடினம் ஆகிவிடும். மேனேஜர் லெவலில் குறைந்த அளவு பதவிகளே எல்லா இடங்களிலும் இருக்கும். எனவே போட்டி அதிகமாக இருக்கும். எனவே தான் இருக்கும் இடத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல உபாயங்களை கையாளத் தொடங்குவார்கள். வேறு யாரையும் வளர விடமாட்டார்கள். முக்கியமாக தனக்குச் சமமாக விளங்குபவர்கள், ஒரு ஒயிட் ஷீட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்றாலும் ஒரு கோடி கையாடல் செய்துவிட்டது போல் மறைமுகமாக பெரிது படுத்துவார்கள். பெரும்பாலான அலுவலக அரசியலின் விதை நாற்பது வயதுக்காரர்களால்தான் விதைக்கப்பட்டு இருக்கும்.

ஒரு மத்திய தர ஆணுக்கு வாழ்க்கை மூன்று வாய்ப்புகளை வழங்குகிறது. பிறந்த உடன், இருபது வயதில், நாற்பது வயதில். பிறந்ததில் இருந்தே சமத்தாக இருந்து, ஒழுங்காகப் படிப்பவர்கள் இருபதின் ஆரம்பத்திலேயே நல்ல வேளை கிடைத்து உயர்ந்து விடுவார்கள். கல்லூரி முடிக்கும் வரை ஆவரேஜாக இருந்து பின்னர் இருபதுக்கு மேல் உழைப்பவர்களும் ஓரளவு நல்ல நிலையை அடைந்து விடுவார்கள். இந்த இரண்டு கட்டத்திலும் ஆவரேஜாக இருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பாக கிடைப்பதுதான் நாற்பது வயது.


இந்த நாற்பது வயதில், துணைவியருக்கும் இவரால் இதுதான் முடியும் என்ற தெளிவு வந்து எதிர்பார்ப்பு குறைந்துவிடும். அல்லது வேற என்ன செய்ய என சலித்து பழக்கப்பட்டுக் கொள்வார்கள். பெற்றவர்களும் கூட தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு, அவனே கஷ்டப்படுறான், நமக்கென்ன போய்ச் சேர்ற காலத்துல என சமாதானம் அடைந்து கொள்வார்கள்.  சுற்றமும் கூட செத்த பாம்பை அடித்து என்ன பலன் என்று புதிதாக வந்த சீறும் பாம்பை சீண்டத் தொடங்கும். 

அலுவலகத்திலும் இவர் கெப்பாசிட்டி இவ்வளவுதான் என உணர்ந்து அதிகம் துன்புறுத்த மாட்டார்கள். எனவே இந்த வயதில் சுதாரித்து ஒருவன் தன் உழைப்பை/திறமையை  மேம்படுத்தினால் எல்லாரிடமும் நல்ல பெயர் கிடைக்கும். பிற்கால வாழ்க்கையை பெரிய கஷ்டமில்லாமல் கடந்துவிடலாம்.