September 26, 2012
சென்னை மெரினாவில் பதிவர் சந்திப்பு – அனைவரும் வாரீர்
August 17, 2011
மூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு
விரும்பும் விஷயம்
1. திரைப்படங்கள்
2. புத்தகங்கள்
3. சாப்பாடு
விரும்பாத விஷயம்
1. அசுத்தம்
2. நய வஞ்சகம்
3. சோம்பல்
பயப்படும் விஷயம்
1. உறவுகளுக்குள்ளான பஞ்சாயத்து
2. வேலையின் நிரந்தரமில்லாத்தன்மை
3. பிள்ளைகளின் எதிர்காலம்
புரியாத விஷயம்
1. மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதி என்னும் மாமியார்த்தனம்
2. தன் வீட்டுக்கு ஒரு நீதி புகுந்த வீட்டுக்கு ஒரு நீதி என்னும் மருமகள்தனம்
3. மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் கூட செண்டிமெண்ட்டை பாலோ பண்ணுவது
மேஜையில் உள்ள பொருள்
1. கணிப்பொறி
2. தேனீர்க் கோப்பை
3. குறிப்பு நோட்டு
சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்
1. நகைச்சுவை நடிகர்கள் (எப்போதும் கவுண்டமணி, இப்போது சந்தானம்)
2. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவே எழுதும் ஓவர் பில்டப் பேட்டிகள்
3. சில பதிவர்கள்
தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்
1. மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற திட்ட அறிக்கை தயாரித்தல்
2. நண்பர் ஒருவரின் ஆய்வுப் பணி அறிக்கையை திருத்துதல்
3. சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்
1.குறைந்தது பத்து அறிவு சார் சொத்துரிமை (பேடண்ட்) வாங்க வேண்டும் (வியாபார ரீதியில் பயன்தரக்கூடிய)
2.ஆடி அல்லது பென்ஸ் கார் (ஹை எண்ட்) ஒன்று வாங்க வேண்டும்
3. ஒரு நல்ல நாவல் எழுத வேண்டும்
உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்
மேற்கூறிய மூன்றும்
கேட்க விரும்பாத விஷயம்
1.சாவு/உடல் நலம் குன்றிய செய்திகள்
2. வறுமைச் செய்திகள்
3. சிறுவர்/சிறுமியர் கொலை, கற்பழிப்பு
கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்
1. சரளமான ஆங்கிலம்
2. கணிதவியல்
3. இயற்பியல்
பிடிச்ச உணவு வகை?
1. புரோட்டா, மட்டன் சாப்ஸ், ஆம்லேட்
2. இட்லி, ஈரல் குழம்பு
3. தேனீர்
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது
1.விளையாடு மங்காத்தா
2. முத்தமிழே (ராமன் அப்துல்லா)
3. எவண்டி உன்னைப் பெத்தான் (வானம்)
பிடித்த படம்
இதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது
1. இன்செப்சன்
2. ஆடுகளம்
3. தென்மேற்கு பருவக்காற்று
இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்
1. காற்று
2. நீர்
3. உணவு
இதை எழுத அழைக்கப்போகும் நபர்
யார் எல்லாம் இந்த சங்கிலியில எழுதுனாங்கண்ணு தெரியலை.
இந்த ஆண்டு பதிவுலகில் இணைந்து, இன்னும் இந்த ஜோதியில் கலக்காத ஒருவர் இதை தொடரட்டும். (உடன்பிறப்பு, பலராமன், ராஜேஷ் மற்றும் ரியாஸ் அகமது ) இதுவரை எழுதலைன்னா, இதை அழைப்பாக ஏற்றுத் தொடரவும்
--
நட்புடன்,
முரளிகண்ணன்
July 27, 2011
ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்
அன்றைய கலந்துரையாடலின் போது ஐகாரஸ் பிரகாஷ் அவர்கள் தமிழ்மணம் தொடர்ந்து நடத்தப் படுவதற்கான பொருளாதார பின்புலங்கள், அதன் சாதக பாதகங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
(அச்சமயத்தில் தேன்கூடு திரட்டி வேறு அதன் நிறுவனர் கல்யாண் அவர்களின் திடீர் மறைவால் ஸ்தம்பித்திருந்தது.)
அதன்பின் ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் எதிரேயுள்ள மினி ஹாலில் மீண்டும் தமிழ்மண நிர்வாகம் ஒரு சந்திப்பை நடத்தியது. தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர். அப்போது தசாவதாரம் பட ரிலீஸ். தமிழ்மணமே அப்பட விமர்சனங்களால் தளும்பி வழிந்தது. மேலும் ஆபாச பதிவுகள்/எழுத்துகள் பற்றி மட்டுமே விவாதம் நடந்தது. பொருளாதார சாதக பாதகங்கள் பற்றி எந்த ஆலோசனையையும் நடைபெறவில்லை.
கடந்த இரு வருடங்களாக சென்னையில் /பதிவுலகில் இல்லாததால்
அதன்பின் தமிழ்மண சந்திப்புகள் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.
தற்போது தமிழ்மணத்தின் அறிவிப்பைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடல்.
ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனத்திற்கு ஒரு சலாம்.
August 21, 2009
என்னைக் கவர்ந்த புருனோ
அவர் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து சேர்ந்த உடனேயே எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. பேசிய போதுதான் தெரிந்தது அவர் சினிமா,விளையாட்டு,இசை,அரசியல், சமூகம் என எல்லாத்துறைகளிலும் ஆழ்ந்த புரிதல் உள்ளவர் என்பது.
அதற்கடுத்த மாதமே ஓப்பன் சோர்ஸ் பற்றி கருத்தரங்கில் விரிவுரையாற்றி தன் கணிணித்துறை அறிவை வெளிப்படுத்தினார். அறிவு ஜீவிகள் வேறு தலைமைப் பண்பு வேறு என்று பலரும் சொல்வார்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது கடினம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அது அப்படியில்லை என என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். புருனோவும் அப்படித்தான். அவர் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் நிர்வாகியாகவும் இருந்தவர்.
அப்பாடா, அவரைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என நினைத்திருந்த எனக்கு கிடைத்தது ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவர் ஜோதிடத்திலும் விற்பன்னர் என்பது. சித்தர் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை மனிதர்.
கிழக்கு பதிப்பகத்தில் அவர் ஆற்றிய பன்றிக்காய்ச்சல் பற்றிய உரை இன்னும் மனதில் இருக்கிறது. விரைவில் பன்றிக்காய்ச்சல் பற்றிய அவரது புத்தகமும் வர இருக்கிறது.
இந்த வார ஆனந்த விகடனில் அவர் வைரஸ்களைப் பற்றி எழுதிய சிறு கட்டுரை 143ஆம் பக்கம் வெளியாகி உள்ளது. (இலவச இணைப்பில்).
இவை எல்லாவற்றையும் விட அவரது இன்னொரு முகம் எனக்குப் பிடித்தமானது. அதுதான் தான் சரி என்று நம்பியதற்காக கடைசி வரை போராடுவது.
சட்டக் கல்லூரி சம்பவம் பற்றிய பதிவர் சந்திப்பிற்காக மெரினாவில் 50 பேர் கூடியிருந்தோம். அப்போது காவல் துறை உதவி ஆய்வாளரும், காவலர்கள் இருவரும் வந்து இப்படி கூட்டமாக நிற்கக் கூடாது, கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், “நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை. நண்பர்கள் கூடி பேசுகிறோம், அதனால் அனுமதியுங்கள்” என்று மழுப்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது புருனோ, அவர்களிடம் ”எந்த சட்டத்தில் இருக்கிறது?, ஆர்டர் இருக்கிறதா? வாய் மொழி உத்தரவா?” என வாதம் செய்ய ஆரம்பித்தார். அவரின் கூரான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்கள்.
அவர்கள் போகும்போது டிசி கிட்ட பேசி வண்டி அனுப்பச் சொல்லணும் என்பது போல பேசிக் கொண்டே சென்றார்கள். அதற்குள் பாலபாரதி டிசி யிடம் அலைபேசியில் பேசி நிலைமையை விளக்கியதும், அவர் கூட்டம் நடத்த தடை இல்லை, நீங்கள் அந்த உதவி ஆய்வாளரிடம் போய் என்னிடம் வயர்லெஸ்ஸில் பேசச் சொல்லுங்கள் என்று கூறினார்.
நாங்கள் இருவரும் கிளம்பிப் போய் இதை சொன்னவுடன், அவர் டிசியிடம் பேசிவிட்டு அனுமதியளித்தார்.
அப்போது என்னிடம் அவர் கேட்டது, “உங்க கூட நின்னு பேசிக்கிட்டிருந்தாரே, யாருங்க அவரு? லாயரா?”
பின்குறிப்பு
இதே கூட்டத்துக்கு அகநாழிகை வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார். அவர் உடை, ஹேர்ஸ்டைல், மீசை, அளந்து வார்த்தைகளைப் பேசிய விதம், விவரங்களைக் கேட்ட பாங்கு ஆகியவற்றை வைத்து, அவர் உளவுத்துறை என பதிவர்களிடம் ஒரு வதந்தி பரவியது. உடன் வந்த அவர் நண்பரும் அதே கெட்டப்பில் இருந்தார். சில பதிவர்கள் அவரிடம் பேசவே பயந்தார்கள் (ஹி ஹி நானும்தான்).
June 23, 2009
28ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்பில் ஒரு புதுப்பதிவர்
”கொக்கரகோ கும்மாங்கோ” என்னும் வலைப்பதிவைத் தொடங்குகிறார். பத்து பதிவு எழுதியும் பல
திரட்டிகளில் இணைத்தும் பின்னூட்டம் வராததால் சோர்வடைந்த அவர் 28 ஆம் தேதி சென்னை
தி நகர் நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பு நடைபெறுவதாக அறிந்து, சக பதிவர்களின் ஆலோசனையைப்
பெற அங்கு விரைகிறார்.
சந்திப்பு 5 மணிக்கு என்றாலும் ஆர்வக்கோளாறில் நான்கு மணிக்கே சென்று விடுகிறார். அங்கே பாலபாரதி
சந்திப்பு நடக்கும் இடத்தில் யாரும் அமர்ந்து விடாதவாறு காவல்காத்துக் கொண்டிருக்கிறார்.
புதுப்பதிவர் அவரை நெருங்கி பதிவர் சந்திப்பு என ஆரம்பித்தவுடன் வாய்யா வாய்யா என கட்டியணைத்து
காவல் பணியில் ஈடுபடுத்துகிறார்.
தொடர்ந்து பதிவர்கள் வர ஆரம்பிக்கிறார்கள். பதிவர் நர்சிம்மிடம் உரையாட ஆரம்பித்து தன்
பிரச்சினையை சொல்லுகிறார்.
நர்சிம் : குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம் இதெல்லாம்
படிங்க. அப்புறம் அதை தற்கால சிச்சுவேஷனோட கம்பேர் பண்ணி பதிவுபோடுங்க. 40
பின்னூட்டம் கேரண்டி.
புது : கொன்றைவேந்தன் நாலுவரி செய்யுளே மனப்பாடம் பண்ண முடியாம தமிழய்யாகிட்ட அடி
வாங்குனவன் நான். சாரி பாஸ்.
கேபிள் : கோபிகிருஷ்ணா, தேவி கருமாரி, கிருஷ்ணவேணி
புது : இவங்கள்ளாம் பதிவர்களா?
கேபிள் : ம்ஹும். இதெல்லாம் சிட்டி தியேட்டர்ஸ். திருட்டு விசிடி காரங்க கூட மதிக்காத படமெல்லாம்
இங்க வரும். அதப் பார்த்துட்டு விமர்சனம் எழுதினா 2000 ஹிட்டு கேரண்டி.
புது : டிரை பண்ணுறேன். அங்க ஒருத்தரு நாம பேசுறத எல்லாம் நோட் பண்ணுறாரோ? அவர் யாரு
உளவுத்துறையா?
கேபிள் : உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லப்பா. அவர்தான் டோண்டு.
புது : வணக்கம் டோண்டு சார்.
டோண்டு : உங்க பிளாக் அட்ரஸ்ஸ சொல்லுங்க
புது : 8/3, நாலாவது குறுக்கு தெரு
டோண்டு : நான் கேட்டது உன் வலைப்பூ அட்ரஸ்.
புது : கொக்கரக்கோ கும்மாங்கோ. சார் எனக்கு யாரும் பின்னூட்டமே போடுறதில்ல.
டோண்டு : ஒன்னும் பிரச்சினையில்லை. நீங்க 40 வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்த அனுபவம்,
அப்பைக்கும் இப்போவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை பத்தி எழுதினா நெறையா கிடைக்கும்.
புது : எது?. எனக்கு வயசே 22 தான். இப்போதான் வேலைக்கே போறேன்.
டோண்டு : அப்பன்னா நீங்க 40 வருஷம் கழிச்சே வலைப்பூ ஆரம்பிங்க.
புது : வேற வழியே இல்லையா?
டோண்டு : ஜெயா டிவி ராத்திரி பாத்தீங்கண்னா
புது : எனக்கு பின்னூட்டமே வேண்டாம் சார்.
அப்போது அங்கே பதிவர் முரளிகண்ணன் வருகிறார். புது தன் பிரச்சினையை சொல்லுகிறார்.
முரளி : இப்போ உங்களை நாய் துரத்தினா என்ன செய்வீங்க?
புது : அலறியடுச்சு ஓடுவேன்.
முரளி : அதான். நீங்க ஓடக்கூடாது. அங்கேயே நின்னு யோசிக்கணும். எந்தெந்தப் படத்தில நாய்
துரத்துற சீன் வருதுன்னு. நாலஞ்சு தேறிச்சுன்னா பதிவா போட்டணும். 20 பின்னூட்டம் கேரண்டி.
புது : பின் னூட்டம் மட்டுமில்ல. ஊசி ஏத்தமும் கேரண்டி. அவர் யார் பாஸ்?
கையெல்லாம் வீங்கிப்போயி உட்கார்ந்திருக்காரு?
முரளி : அவர்தான் பதிவர் உண்மைத் தமிழன். இருங்க உங்களை அறிமுகப்படுத்துறேன்.
புது : என்ன சார் ஆச்சு?
உ த : முருகா
புது : சார். என் பேர் அதில்லை.
உ த : உன்னைச் சொல்லலை. எம்பெருமான் முருகன கூப்பிட்டேன். இந்த பிளாஸ்டிக் கீ போர்டு
எல்லாம் என் வேகத்த தாங்க மாட்டேங்குதுன்னு இரும்பு கீ போர்டு வங்குனேன். ராத்திரி
1000 பக்கம்தான் டைப் பண்ணுனேன். வீங்கிடுச்சு.
புது : ஆ!!! அவ்ளோ எதுக்கு சார் அடிச்சீங்க?
உ த : பதிவர் பைத்தியக்காரன் சிறுகதை போட்டி வச்சிருக்காருல்ல. அதுக்குத்தான்.
புது : அதுக்கு 1000 வார்த்தைதானே?
உ த : தம்பி, சிறுகதைன்னா என்னா தெரியுமா? கல்கியோட பொன்னியின் செல்வன், வெங்கடேசனோட
காவல் கோட்டம் இதெல்லாம் படிச்சிருக்கியா? ஜெயமோகன் முன்னாடி எழுதின விஷ்ணுபுரம், இப்போ
எழுதிக்கிட்டு இருக்குற அசோகவனம் எல்லாமே சிறுகதைகள் தான். குறைந்தது 1000 பக்கம்
இருந்தாத்தான் அது சிறுகதை. பாராவோட மாயவலை கூட சிறுகதை இல்ல. ஒருபக்கக் கதை.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பைத்தியக்காரன், அவசரம் அவசரமாக மறுக்கிறார்.
பைத்தியக்காரன் : உ த, 1000 வார்த்தைதான் நாங்க கேட்டிருக்கோம்.
உ த : அப்போ எஸ் எம் எஸ் போட்டின்னுல்ல நீங்க அறிவிச்சிருக்கணும்.
இதைகேட்டு புதுப் பதிவர் மயங்கி விழுகிறார். தராசு, ஸ்டார்ஜான் ஆகிய சக பதிவர்கள் அவரை
கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சோடா வாங்கிக் கொடுத்து தெளியவைக்கிறார்கள்.
இம்மாதியெல்லாம் நடக்காது. தைரியமா பதிவர் சந்திப்புக்கு வாங்க. உரையாடல் போட்டிக்கு கதை
அனுப்ப மறந்துடாதீங்க.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
இடம் : தி நகர் நடேசன் பூங்கா
நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை
நாள் : 28- 06 -2009. ஞாயிற்றுக்கிழமை
இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளர்களே.
சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள
பாலபாரதி – 9940203132
லக்கிலுக் – 9841354308
அதிஷா – 9884881824
கேபிள் சங்கர் - 9840332666
முரளிகண்ணன் - 9444884964
June 02, 2009
உரையாடல் சிறுகதைப் போட்டி தொடர்பாக தி.நகரில் ஒரு எதிர்பாராத பதிவர் சந்திப்பு
அப்துல்லா. சாந்த சக்கு பாய் பட டிவிடி தி நகர் பிளாட்பார்மில் கிடைப்பதை அறிந்து அதை
வாங்க வருகிறார் முரளிகண்ணன். கிருஷ்ணவேணி திரையரங்கில் பகல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறார் கேபிள் சங்கர். தி நகரில் ஒரு கடையில் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப் படவில்லை எனக் கேள்விப்பபட்டு அதை தட்டிக் கேட்க வருகிறார் டாக்டர் புருனோ. எதிர்பாராமல் அனைவரும் ஒரு டீக்கடையில் சந்திக்கிறார்கள்.
பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் பேச்சு, பதிவர் பைத்தியக்காரன் அறிவித்திருக்கும் உரையாடல் சிறுகதைப் போட்டியை நோக்கி திரும்புகிறது.
புருனோ : என்ன முரளி எழுதியாச்சா?
முரளி : டாக்டர் விளையாடுறீங்களா?. ஒரு பரிசு இல்ல ரெண்டுன்னா நிறைய
ஜாம்பவான்கள் கலந்துக் கிட்டாங்க, போட்டி கடுமை அதான் கிடைக்கலைன்னு
சமாளிக்கலாம். இல்லைன்னா பாலிடிக்ஸ்னு கதை உடலாம். இங்க 20 பரிசு.
இருபதுக்குள்ள கூடவா நீ இல்லன்னு எல்லாரும்
கலாய்ச்சிட்டாங்கண்ணா?
அப்துல் : ஏன்னே போட்டி அவ்வளவு கடுமையாவா போட்டியிருக்கு?
முரளி : நீங்க வேற. அந்தக் கால பதிவர் பினாத்தலார்ல இருந்து நாளைக்குத்தான்
பிளாக்கையே ஆரம்பிக்கப் போறவர் வரைக்கும் களத்துல இருக்காங்க. இப்பவே
இருபது, முப்பது கதை வந்துருச்சாம். இன்னும் இந்த மாச கடைசி வரைக்கும்
டைம் இருக்கு.
புருனோ : டி என் பி எஸ் சி எக்சாம் ரெண்டு லட்சம் பேரு எழுதுறாங்க. அதுக்கு கைடு
வருது. ஆனா இந்த போட்டிக்கு ஆதிமூலகிருஷ்ணன் கைடு போட்டுருக்காருன்னா
எவ்வளவு பேரு கலந்துக்கிருவாங்கண்ணு கணக்குப் பண்ணிக்குங்க.
அப்துல் : கேபிள், புருனோ அந்த பிகர கணக்குப் பண்ண சொல்லல.
கேபிள் : ஹி ஹி. ஹீரோயினுக்கு சூட் ஆகுமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.
முரளி : யாரெல்லாம் நடுவரா இருப்பாங்கண்ணு தெரிஞ்சா நல்லாயிருக்கும்.
அப்துல் : ஏன்னே போட்டி முடியிறவரைக்கும் டெய்லி 10 பின்னூட்டம் அவங்க பதிவில
போட்டு கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?
புருனோ : சே சே பைத்தியக்காரன் வேற லெவல்ல்தான் யோசிப்பாரு. பிரபல எழுத்தாளார்
யாராச்சும் இருக்கும்.
கேபிள் : அப்ப அவங்களுக்கு ஏத்த மாதிரி எழுதி அனுப்பிச்சுடுவோம். யாராயிருக்கும்
டாக்டர்?
புருனோ : நாஞ்சில் நாடன்
கேபிள் : அப்போ நாகர்கோயில் ஏரியாவில ஒரு சமூகப் பிரச்சினையை டச் பண்ணுவோம்.
புருனோ : சாரு நிவேதிதா
கேபிள் : ஜெயமோகனைத் திட்டி நாலு வரி எழுதிடுவோம்.
புருனோ : ஜெயமோகன்
கேபிள் : அப்போ கதையில சாருவையும் ரெண்டு வரி திட்டி வச்சுடுவொம்.
புருனோ : எஸ் ராமகிருஷ்ணன்
கேபிள் : ஒரு பயணக்குறிப்ப புகுத்திடுவோம்.
புருனோ : ச தமிழ்செல்வன்
கேபிள் : கொஞ்சம் கரிசல கரைச்சு ஊத்திடுவோம்.
புருனோ : பா ராகவன்
கேபிள் : நாலஞ்சு கோயிஞ்சாமிய தூவிடுவோம்.
புருனோ : நாகார்ஜூனன்
முரளி : ம்ம் அமலாவையும் அனுஷ்காவையும் பாராட்டிடுவோம். கேபிள்ஜி இதென்ன
கொத்து புரோட்டாவா? கரைச்சிடுவோம், தூவிடுவோம்னு.
அப்துல் : இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணே. என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான்
இருக்குண்ணே.
முரளி : என்ன, நடுவர்கிட்டபோயி இனிமே நான் பாட மாட்டேன்னு சொல்லப்போறீங்களா?
அப்துல் : அதில்லண்ணே. நாம அகநாழிகை,வடகரை வேலன் மாதிரி ஆளுங்களப் பிடிச்சு
இதே மாதிரி போட்டி நடத்துறோம். முடிவு இந்தப் போட்டிக்கு அப்புறம் அறிவிக்கப்
படும்னு சொல்லுறோம். 200 பேருக்கு பரிசு. ஆளுக்கு ரூபாய் 15,000. ஒரே கண்டிசன்
உரையாடலுக்கு கதை அனுப்பிச்சவங்க இதுக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்லிடுவோம்.
புருனோ : அப்படியும் சில பேர் மசியமாட்டாங்களே.
கேபிள் : நாம் வேணா பெங்குவின் பதிப்பகத்துல, ஹார்ட் பவுண்டுல ஸ்பெசல் எடிசனா
உங்க கதையெல்லாம் வரும். அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்போடனு ஆபர்
கொடுப்போம். அங்க கதை போட்ட எல்லாரும் வாபஸ்
வாங்கிட்டு இங்க கதைய கொடுத்துடுவாங்க.
முரளி : சரி, இதுக்கெல்லாம் ஆகிற செலவு?
அப்துல் : இன்னும் பச்சப்புள்ளையா இருக்கீங்களேண்ணே. நம்ம பதிவுலகத்தப் பத்தி
தெரியாதா?
நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம்.
குசும்பன், கார்க்கி மாதிரி ஆளுங்க உடனே எதிர்ப்பதிவு
போடுவாங்க. வலையுலகமே பத்தியெறியும். நாம எஸ்கேப்.
முரளி,கேபிள், புருனோ : சூப்பர். கலக்கிடுவோம் என்று மகிழ்ந்தபடியே கலைகிறார்கள்.
May 31, 2009
மீண்டும் ஒரு தொடர் பதிவு
விதிகள் எப்பவும் போலத்தான். கீழே இருக்கிற 32 கேள்விகளுக்கும் (ஏதும் நியுமராலஜியா?) பதில் சொல்லணும். மூணு பேரைக் கூப்பிடணும்.
ரெடி ஸ்டார்ட்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றோர் வைத்த பெயர்தான். எல்லா இடங்களிலும் முரளி கிருஷ்ணாவா எனக் கேட்கும்
போது மட்டும் அப்படிக்கூட இருந்திருக்கலாமா எனத் தோன்றும்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ஹூம்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
விண்டவர் கண்டிலர் ரேஞ்சுல உடனே.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி. அதிலயும் குற்றாலத்தில புலியருவினு ஒன்னு இருக்கும். நம்ம தலைக்கு ரெண்டடி
உய்ரத்தில இருந்து விழும். அதுமாதிரி உயரம் கம்மியான அருவியா இருக்கணும். ஹோன்னு தலையில அடிக்கிற மாதிரி விழுகிற அருவிக்கு நோ.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் பேச்சு.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: அடாப்டபிலிட்டி
பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : அன்பு
பிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
நண்பர்கள்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீலம்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எதுவும் இல்லை.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிங்க் (அப்போதான் பெண்கள் எடுத்துக்கிடுவாங்க)
14.பிடித்த மணம்?
காலைத் தேநீரின் மணம்.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
SUREஷ் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்.
டி வி ராதாகிருஷ்ணன் :பதிவர்களிடம் மிகப் பிரியமாக பழகுவார்
கார்த்திகைப் பாண்டியன் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்
காரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஹாலிவுட் பாலா : அவருடைய எல்லா திரை விமர்சனங்களும்.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ரொமாண்டிக் காமெடி
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்
21.பிடித்த பருவ காலம் எது?
விண்டர்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
இந்தவார ஜூனியர் விகடனும், ரிப்போர்டரும்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
கடந்த மூன்று வருடமாக ஒன்றே (என் பையனின் படம்)
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : சிரிப்பு
பிடிக்காத சப்தம் : அழுகை
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கணும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்ன தப்பு செஞ்சேன்னே சொல்லாம நண்பர்கள் என்னை ஒதுக்கும்போது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அப்படி எதுவும் ஸ்பெசிபிக்கா இல்லை.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இதுக்கு நான் நீட்சேவைத் தான் துணைக்கழைக்கணும்
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பதிவு போடுறது
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வேற வழியில்ல. வாழ்ந்துதான் கழிக்கணும்
May 27, 2009
குட் புட் பேட் புட் கலந்துரையாடல்
என்று சொல்லிவிட்டு ஆயாவிடம் சுண்டல் கடலை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாட்டின் இறந்தகாலச் சொத்து.அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை என்று கொள்ளுப்பாட்டிகளின் வலைப்பூவில் சுப்புணி பாட்டி என்னும் பதிவர் ஒரு இடுகையை வெளியிட பற்றியெறிகிறது பதிவுலகம்.
அதைப்படித்து அண்டார்டிகாவில் வசிக்கும் பதிவர் ஆர்கே, சென்னை வலைப்பதிவர்களுக்கு மெயில் அனுப்பி, ஒரு கருத்தரங்கு நடத்துங்களேன் என்று கேட்டுக்
கொண்டதையடுத்து, வலைப்பதிவர்கள் கான்பரன்ஸ் காலில் ஆலோசிக்கத் தொடங்குகிறார்கள்.
நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.
லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.
கார்க்கி : சகா, என்னைக்கு வேணும்னாலும் நடத்துங்க. ஆனா ஞாயிறு வேண்டாம். ஆறு மணி டிரெயின்ல ஹைதை ரிட்டர்ன் போகும் போது வறுத்துக்கிட்டே போக, கஷ்டப்பட்டு யாரையாச்சும் கரெக்ட் பண்ணி வைக்கிறேன். ஆனா நீங்க நிகழ்ச்சியெல்லாம் ஞாயித்துக் கிழமை நடத்துறீங்க. முடிய மணி எட்டாயிடுது. வேற வழியில்லாம
காசினி ட்ராவல்ஸ்ல போக வேண்டியிருக்கு.
கேபிள் சங்கர் : ஏன் கார்க்கி, அதிலயும் டக்கர் பிகர்லாம் வருமே.
அப்துல்லா : அதெல்லாம் அவன்கிட்ட பேசாதில்லண்ணே.
நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.
முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.
அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.
முரளிகண்ணன் : அப்புறம் எஜமான்ல,பிஸ்தாவுல
ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?
கேபிள் சங்கர் : என்க்குத் தெரிஞ்சு சரவண பவன்ல சாப்பாடு சுத்தமா, ஆரோக்கியமா இருக்கும்.
அதிஷா : ஆமாமா உடனே அண்ணாச்சிய கூப்பிடுங்க. மனசுக்குள் : அப்பாடா எப்படியாச்சும் அவர்கிட்ட பேசி நாலஞ்சு குட்டிக்கதைக்கு மேட்டர் தேத்திரணும்.
லக்கிலுக் : நீ என்ன நினைக்கிறய்னு எனக்குத் தெரியும் அதிஷா. அவரே இப்ப களி திண்ணுக்கிட்டு இருக்காரு.
புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.
நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது?
முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்ஷன் இருக்கும்.
அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?
லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.
முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.
அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.
அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?
கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?
நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.
லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.
அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.
நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?
ஆதி : பைத்தியக்காரன், ஜியோவ்ராம் மாதிரி ஆளுங்களுக்கு கால் போடுங்கப்பா. அவங்க ஏதாச்சும் உருப்படியா சொல்லுவாங்க.
லைனில் வருகிறார் பைத்தியக்காரன். விவரம் சொல்லப்படுகிறது.
பைத்தியக்காரன் : இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்றது அதிகாரத்தின் உரையாடல். அதுவும் சாகப் போற வயசில இருக்குறவங்கள அதை சாப்பிடு,
இதை சாப்பிடாதேன்னு சொல்றது உச்சபட்ச வன்முறை. இதற்க்கு எதிராத்தான் என்குரல் ஒலிக்கும். என்னால் முடியாவிடடாலும் ஜ்யோவ்ராம் துணையுடன்
இந்த கட்டமைப்பை தகர்ப்பேன்.
இப்போ நான் சொல்லும் விஷ்யம் கூட உங்கள் மீதான என் அதிகாரத்தின் உரையாடல்தான். அதை எதிர்க்க உங்களுக்கும் உரிமை உண்டு.
பதிவர்கள் : நல்லா புரிஞ்சிடுச்சு சார். ஆட்டையைக் கலைச்சிடுறோம்.
May 25, 2009
நட்சத்திரங்களுக்கு வணக்கம்
சினிமாவில் சிறுநகரங்கள் என்னும் என் பதிவை படித்து பைத்தியக்காரன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து ஊக்குவித்தார். அது ஒரு திருப்புமுனையாக எனக்கு அமைந்தது.
புருனோ,ராப்,வெட்டிப்பயல் ஆகியோரும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
இடையில் சில நாட்கள் பதிவு எழுதாத போது, நர்சிம் அவர்கள் அழைத்து ஏன் எழுதவில்லை? என்று கேட்டார். ஆஹா நம்மையும் நம்பி படிக்கிறாங்களே என்று மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
அதிஷா, SUREஷ், பரிசல், கேபிள் சங்கர்,கார்க்கி, அப்துல்லா மற்றும் பலரும் (விடுபட்டவர்கள் மன்னிக்க) தொடர்ந்து ஆதரவளித்து இன்று நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு என்னை ஆளாக்கியிருக்கிறார்கள்.
என் வாழ்க்கைக்கு வானமாய் இருக்கும் வலையுலகுக்கும், அதில் சந்திரனாய் குளிர்விக்கும் தமிழ்மணத்திற்க்கும், வாழ்க்கையை வசந்தமாக்கும் பதிவர்கள் என்னும் நட்சத்திரங்களுக்கும் என் நட்சத்திர வார வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
May 14, 2009
கேபிளும்,பரிசலும்
மெரினாவில் நடந்த ஒரு பதிவர் சந்திப்புக்கு வந்து அவர் கலந்து கொண்டார். பின்னர்தான் தெரிந்தது அவர் பல திரைப்படங்களுக்கு இயக்கத்திலும், ஸ்க்ரிப்டிலும் பிண்ணனியாக இருப்பது. அதைத் தவிர பலபடங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க வேறு செய்து இருக்கிறார்.
ஆச்சரியம் அடங்கும்முன் அவர் பெயர்க்காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.
“என் பெயரில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரை யாரும் திட்டிவிடக்கூடாதே என்று என் தொழில் பெயரையும் இணைத்துக் கொண்டேன்” என்று.
ஆம். அவர் சென்னை நகரத்தில், முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கேபிள் நிறுவனங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். இன்றும் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.
அதுபோல், இந்த வார ஆனந்த விகடன் 39ஆம் பக்கத்தில் பதிவர் கேபிள் சங்கரின் விளையாட்டு வியூகம் என்ற கதை வெளியாகி உள்ளது. இது அவர் இயற்பெயரான சங்கர் நாராயணன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அச்சில் அவரது படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் சாக்லேட் கிடைத்து விட்டது. இனி அவரின் முழு முதற் நோக்கமான இயக்குநர் பதவியும் விரைவில் கூடிவர அனைத்துப் பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.
பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.
பரிசலின் படைப்புகள் இதுவரை பல இதழ்களில் வெளிவந்துள்ளன. இந்த வார ஆனந்த விகடனில் அவரது நட்சத்திரம் கதை 50 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இம்முறை பரிசல் கிருஷ்ணா என்ற புனைப் பெயரில் வந்துள்ளது விசேஷம். தொடர்ந்து அவரது படைப்புகள் வெளியாகி பதிவர்களையும், தமிழ் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் மகிழ்சிப்படுத்த வாழ்த்துகிறேன்.
May 06, 2009
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் தமிழ்சினிமாவும்
திருமதி பழனிச்சாமி, காதல் கொண்டேன் போன்ற வணிக ரீதியிலான படங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் படும் சித்திரவதை, சமூகம் அவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஆகியவை காட்டப்பட்டன. பாதிக்கப் பட்டவர்கள் போராடினால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற ரீதியிலேயே இப்படங்கள் அமைந்திருந்தன.
குழந்தைகள் மீதான அடுத்த தாக்குதல் அவர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றுவது. இந்த அவலத்தை சாடி காதலர் தினம், வில்லன், நான் கடவுள் ஆகிய படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் இதே விஷயத்தை நகைச்சுவைக்காக உபயோகப் படுத்துவது. சமூக அக்கறையுள்ள கலைஞர் என்று அறியப்படும் கமல்ஹாசன் நடித்த படமான காதலா காதலாவிலும் இதை நகைச்சுவையாக பயன்படுத்தியிருந்தார்கள். சமூக அக்கறை எனக்குள்ளது என பிரகடனப் படுத்திக்கொள்ளூம் விவேக்கும் இந்த விஷயத்தை காமெடியாகவே பல படங்களில் அணுகுகிறார்.
குழந்தைத் தொழிலாளார் விஷயத்திலும் கூட டீக்கடைகளில் வேலை செய்வது, மெக்கானிக் செட்டுகளில் வேலை செய்வது ஆகியவை குற்றம் இல்லை என்ற தொனியிலேயே காட்சிகள் அமைந்து வந்திருக்கின்றன. இதில் நமக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல், குழந்தைகளின் மீதான பாலியல் வக்கிரங்களை நியாயப் படுத்தாமல் அது மிகப்பெறும் தவறு என்னும் நோக்கில் காட்சிகளை தமிழ்சினமா இயக்குநர்கள் அமைத்து வருவதுதான்.
அந்த நோக்கில் பார்த்தால் அரண்மனை காவலன், காதல் கொண்டேன் ஆகிய இருபடங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
அரண்மனை காவலன்
இந்தப் படத்தில், ஊர் பெரிய மனிதர் ஒருவர் தன் பள்ளியில் படிக்கும் சிறு பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறார். கொதித்தெழுந்த இன்னொரு குடும்பம் அவரை எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறது. இதனால் அவர் மற்றவர்களை பழிவாங்க என படம் செல்கிறது. இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம், அது மிகப்பெரிய தவறு என காட்சிப்படுத்தியிருப்பதுதான்.
காதல் கொண்டேன்
மிக உக்கிரமாக இந்த பிரச்சினையை காட்டிய படம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இது பிரச்சினை தான் என முதன் முதலாக தமிழில் சொன்ன படம். மார்பிள் கல் தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் சிறுவர்,சிறுமியரை முதலாளி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள் பொங்கியெழுந்து முதலாளிகளை கொன்று தப்பிக்கிறார்கள்.
இதுதவிர குருதிப்புனல், துள்ளுவதோ இளமை ஆகிய படங்களிலும் இது குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்கள்.
ஆனால் இதைவைத்து குழந்தைகளுக்கு இது குறித்து நம்மால் ஏதும் புரிய வைக்க முடியுமா?
நிச்சயம் முடியாது. இதுதவிர
வேறென்னென்ன வகைகளில் அவர்கள் தாக்கப்படுவார்கள்?
அவர்களுக்கு அதற்க்குரிய பாதுகாப்பை நம்மால் வழங்க முடியுமா?
நாம் என்ன செய்து நமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்?
இதுபற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் மே 10 ஆம் தேதி கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. மன நல மருத்துவர்கள் டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வுக்கு விதையாய் அமைந்த தீபா அவர்களுக்கும், இதை மரமாக்கினால் நாலு பேர் பயனடைவார்களே என்று சிந்தித்த அமிர்தவர்ஷினி அம்மாவுக்கும், விதைக்க இடம் கொடுத்த கிழக்கு பதிப்பகத்துக்கும், விதையை நாற்றாக்கி, மண் கிளறி, உரமிட்டு,நீர் பாய்ச்சிய நர்சிம் அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்க்கும் லக்கிலுக்,எஸ்கே,அதிஷா முதலானோருக்கும், வளர உதவும் சூரிய வெளிச்சமாய் விளங்கும் டாக்டர்கள் ருத்ரன்,ஷாலினி ஆகியோருக்கும், வளர்வதற்க்கு அவசியமானது காற்று, ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது. அந்த காற்றைப் போல் இந்த நிகழ்வுக்கு உழைக்கும் ஏனையோருக்கும் மிகுந்த நன்றி.
மரமானால் மட்டும் போதுமா? அந்த கனிகள் மக்களை சென்றடைந்தால்தானே மரத்துக்கு மதிப்பு?
கனி வேண்டுவோர், இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
weshoulddosomething@googlemail.com
March 31, 2009
புதிய பதிவர்களை வரவேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு
தமிழ் வலைப்பதிவுலகம் என்றும் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்தோட முக்கிய காரணம் சிற்றோடைகளாய் வந்து சங்கமிக்கும் புதிய பதிவர்களே. அவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் பல புதிய பதிவர்கள் பதிவுலகிற்க்கு வந்துள்ளார்கள். அவர்களை வரவேற்கும் விதமாகவும், சென்னையில் இருந்தாலும் இன்னும் சந்திப்புகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் பதிவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்வதற்க்காகவும் வருகிற ஞாயிறு (ஏப்ரல் 5) மாலை ஐந்து மணி அளவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலபாரதி, லக்கிலுக், நர்சிம், டாக்டர் புருனோ, அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறியுளார்கள். மேலும் வழக்கமாக சந்திப்புக்கு வரும் சிவஞானம்ஜி, இராமகி ஐயா, பைத்தியக்காரன், ஜியோவ்ராம் சுந்தர், வளர்மதி, ஆழியூரான், சுகுணா திவாகர், இளவஞ்சி, டோண்டு ராகவன், உண்மைத்தமிழன், அதியமான், நந்தா, எம் எம் அப்துல்லா, கடலையூர் செல்வம், வெண்பூ, கார்க்கி, ஜாக்கி சேகர்,தாமிரா, ஸ்ரீ ஆகியோரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (வழக்கமாக வருபவர்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்
நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை
நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை
இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளார்களே.
சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள
பாலபாரதி – 9940203132
லக்கிலுக் – 9841354308
அதிஷா – 9884881824
கேபிள் சங்கர் - 9840332666
முரளிகண்ணன் - 9444884964
January 14, 2009
சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே
இந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர்.
இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதி வந்தது. தற்போது குமுதத்திலும் இது பற்றி செய்தி வருவது மிக மகிழ்ச்சிகரமானது. விகடன் சென்று சேராத சில இடங்களில் குமுதம் செல்லும். எனவே வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ கூடுதல் வாய்ப்பு.
குமுதம் சர்வேயின் படி
1.இட்லிவடை
2.நாகார்ஜூனன்
3.பிகேபி
4. எண்ணங்கள் - பத்ரி
5. யுவகிருஷ்ணா
6.பரிசல்காரன்
7.அதிஷா
8.ஜ்யோவ்ராம் சுந்தர்
9.சத்தியகடதாசி
10.லிவிங்ஸ்மைல்
ஆகிய வலைபதிவுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
December 26, 2008
27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்
நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை
இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்
மாலை 5 மணி
கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர அறிமுகம்
மாலை 5.15மணி
மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன், கேபிள் சங்கர், அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
மாலை 5.45மணி
வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசுவார்.
இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.
இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் கும்மி. கொலைவெறியுடன் எல்லா விஷயங்களும் கும்மப்படும்.
இரவு 8.30 மணி
அவுங்கவுங்க வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு
சந்திப்பில் கலந்துகொள்ள சென்னை வாழ் முன்னாள்,இன்னாள், வருங்கால பதிவர்கள், வாசகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறோம்.
சந்திப்புக்கு அமைப்பாளர்/ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் கிடையாது. வருபவர்கள் அனைவரும் அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர்களே.
மேலதிக விபரங்களுக்கு சந்திப்பு பற்றிய அதிஷாவின் பதிவு
November 09, 2008
நான் படித்த புத்தகங்கள்
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அத்திரிக்கு நன்றிகள்
எங்கள் தெருவில் சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்னும் கம்யூனிஸ இயக்கத்தின் நகர அலுவலகம் இருந்தது. அவர்கள் தட்டி எழுதுவதை வேடிக்கை பார்ப்பது என் சிறுவயது பொழுதுபோக்கு. அப்போது அவர்கள் எனக்கு சோவியத் யூனியன் தயாரித்து, மொழி மாற்றம் செய்யப்பட்ட சிறுவர் கதை புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள். எங்கள் வீட்டில் விகடன்,சாவி,குமுதம்,இதயம் போன்ற பத்திரிக்கைகளை வாங்குவதால் இயல்பாகவே எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது.
என் வயதையொத்த நண்பர்கள் எனக்கு அமையாததால் நூலகத்துக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு ஸ்டெல்லா புருஸ்,சுஜாதா, பாலகுமாரன் போன்றோரை விரும்பி படித்தேன். இந்த கால கட்டத்தில் ஜூனியர் விகடன் வேகமாக வளர ஆரம்பித்தது. அதனுடன் தராசு, நக்கீரன், நாரதர், கழுகு போன்ற அரசியல் புலனாய்வு பத்திரிக்கைகள் வெளியாயின. எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.
1989 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பூத் ஸ்லிப் எழுதுவது, டோர் கேன்வாஸிங் என (10 ஆம் வகுப்பில்) களப்பணியில் ஈடுபட்டேன். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு முன் அமைக்கப்படும் (பூத் ஸ்லிப் வினியோகிக்க உதவும்) கீற்று பந்தலில் அமர்ந்து ஸ்டெல்லா புருஸ்ஸின் (அது ஒரு நிலா காலம் என நினைக்கிறேன்) நாவலையும், நக்கீரனின் கருத்து கணிப்பையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்த ஒரு தோழர், இதையெல்லாம் ஏன் படிக்கிறாய்? என கடிந்து கொண்டு தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.
அவர் எனக்கு வாழ்வின் அலைகள் (மாக்சிம் கார்க்கி), வால்கா முதல் கங்கை வரை (ராகுல சாங்கிருத்தியன்), அன்டோன் செகாவ் சிறுகதைகள் மற்றும் லெனினின் புத்தகங்கள் ஆகியவற்றை தந்தார். படித்தேன். எதுவும் புரியவில்லை.
பின் 1991 கல்லூரி விடுதியில், உடனிருந்த மற்றவர்கள் ஸ்டார் டஸ்ட், பிலிம் பேர், வீக், இந்தியா டுடே என படித்ததால் நானும் அவற்றை படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தி படவுலகம் குறித்தும், தேசிய அரசியல் குறித்தும் முதன்முறையாக அறிந்து கொண்டேன்.
பின் படிப்பு முடிந்து, வாழ்க்கையில் அடிபட்டு சென்னையில் அலைந்து கொண்டு இருந்தபோது எனக்கு ஆதரவளித்தது சென்னை கன்னிமாரா நூலகம். காலையில் நுழைந்தால் பசி உணரும் வரை படிக்க வேண்டியது. வெளியில் சென்று ஒரு பிரட் ஆம்லேட் பின்னர் விட்ட இடத்தில் தொடர வேண்டியது. இக்காலத்தில் தான் எனக்கு சிறுவயதில் புரியாததெல்லாம் புரிய ஆரம்பித்தது. கு அழகிரிசாமி, அசோகமித்திரன், லாசரா, புதுமைப்பித்தன், சி சு செல்லப்பா (வாடிவாசல்) ஆகியோரது படைப்புகள்அனைத்தும் படித்தேன். தி ஜா வின் மோகமுள், மரப்பசு, கல்கி,தேவனின் பெரும்பாலான படைப்புகள், ஆதவனின் என் பெயர் ராமசேஷன், சு ராவின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகனின் குறு நாவல்கள் (ரப்பர்), என கலந்து கட்டி படித்தேன்.
அதன்பின் மேல்படிப்பு,திருமணம், குழந்தை என சமூக அந்துஸ்துக்காக ஓடிக்கொண்டிருருப்பதால் படிப்பது குறைந்து விட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாரு,ஜெமோ,கீற்று,சென்னை லைப்ரரி, வலைப்பதிவுகள் என வலையில் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1.தமிழ்பறவை
3. அக்னி பார்வை
October 10, 2008
சினிமா கேள்வி பதில் தொடர்விளையாட்டு
என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த பாஸ்டன் பாலா,லக்கிலுக் ஆகியோருக்கு நன்றிகள்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எங்கள் ஊரில் பெண்கள் மதிய காட்சி, ஆண்கள் மாலை மற்றும் இரவு. பெண்கள் அனைவரும் சேர்ந்தே செல்வதால் கைக்குழந்தையையும் தூக்கி செல்வார்கள்.விவரம் தெரிந்து பார்த்த படம் சகலகலாவல்லவன். படம் முடிந்தபின் சகதி சண்டை,கம்பு சண்டை,சேஸிங் என சிலாகித்துக் கொண்டே வந்தேன். நிலாகாயுது பாட்டு அறுவை என்ற கமெண்ட் வேறு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம் - வேளச்சேரி ராஜலட்சுமியில் (5 வது முறை)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் நேற்று கில்லி. இதன் மூலமான ஒக்கடுவில் இருக்கும் ஆந்திராவுக்கான எக்ஸ்ட்ரீம் காட்சிகளை தரணி கவனமாக தவிர்த்திருப்பது அவரின் தமிழ் சினிமா ரசிகர்கள் மீதான புரிதலை காட்டியது. தெலுங்கை விட தமிழ் கில்லி படு வேகம். இவரா குருவி?
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
இந்தியன். நல்ல கம்பெனியில் ரிட்டர்ன் கிளியர், இன்டெர்வியு ஓவர். ரிசல்டுக்காக காத்திருக்கும் போது உறவினர் ஒருவரின் மூலம் முயன்றால் வெற்றி என தெரியவந்தது. அடுத்த நாள் அவரை சந்திக்கலாம் என்ற்ரு இருந்த நிலையில் இந்தப்படம். தாத்தா கமல் சொல்வார் "லஞ்சம் கொடுத்தா உனக்கு முன்னாடி இருக்கிரவனை ஏய்க்கிறதில்லையா" என்று. மனசு சரியில்லை. அவரை சந்திக்கவில்லை. கோவிந்தா. இரண்டு வருடம் நாய்ப்பாடு பட்டபின் இருந்த கொஞச நஞ்ச நல்ல குணமும் போய், இப்பல்லாம் ரொம்பவே சுயநலம்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பூ - கற்பு மேட்டர். பகவத் கீதையின் சாரம்சம் கடமையை செய் பலனை எதிர்பாராதே. அதையும் நைக்காரர்கள் சுருக்கி டூ இட் ஆக்கினார்கள். அதுபோல் பெரியாரின் பெண்ணுரிமைக்கருத்துகளின் சாரம்சமே குஷ்பூ பேசியது. அதை பெரியாரை ஞானத்தந்தையாக ஏற்றவர்களே எதிர்த்தது ஆச்சரியம். பெரியார் என்றால் கடவுள் மட்டும் ஜாதி மறுப்பு தானா? மற்றவற்றை படிக்க வில்லையா? மனம் இல்லையா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
தசாவதாரத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் சராசரிக்கும் கீழே. ஆனால் பல்ராம் நாயுடு,பாட்டி இருவரும் காரில் முன்னால் போக பின்னால் கோவிந்த் துரத்தி வரும் காட்சி ஒரே ப்ரேமில் இருக்கும். சரியான அளவுகளுடன். முற்பாதியில் நாயுடு நடந்து கொண்டே விசாரனை செய்யும்போது அவருக்குப் பின் இருக்கும் கண்ணாடியில் கோவிந்தின் உருவம் தோன்றும் சரியான பாவங்களுடன். அசந்து விட்டேன். இயக்குனர்,கமல்,கேமிராமேன் கலக்கிய காட்சி அது.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சுவாசிப்பதுண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். முன்பு குமுதம் சினிமா நிருபர்களின் செய்திகளை தொகுத்து ரா கி ரங்கராஜன் எழுதிய லைட்ஸ் ஆன் வினோத் தான் நான் முதலில் படிப்பது. அவர் கொடுக்கும் ஆங்கில பன்ச் அசர வைக்கும். தேவியில் நெல்லை வழக்கில் எழுதும் பகுதியும், ஜெ பிஸ்மி வண்னத்திரையில் எழுதுவதும் பிடிக்கும். உயிர்மை காலச்சுவடு கீற்று போன்றவற்றில் வரும் சினிமா தொடர்பான கட்டுரைகளையும் விடுவதில்லை. முன்பு ஞாயிறுகளில் மாலைமலர் இணைப்பாக கொடுக்கும் சினிமா மலருக்காகவே அதை வாங்கியதுண்டு.
7.தமிழ்ச்சினிமா இசை?
திரைப்பட பாடல் மட்டுமே எனக்கு தெரிந்த சங்கீதம். சிறுவயதில் அதிரடி இசை. விடலையில் காதல் பாடல்கள். இப்போது கானாதான் என் பேவரைட். உசுருபோற நேரத்தில ஊத்த மாட்டான் பால, கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளோ பெரிய மாலை? என அசால்டாக ஒரே வரியில் வாழ்க்கையை புரியவைக்கிறார்கள்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
வாய்ப்பு கிடைத்தால் எதையும் விடுவதில்லை. சிறுவனாக இருக்கும் போது தெலுங்கு டப்பிங். மீசை முளைத்த போது மூன்றாம்தர மலையாளம். காலேஜில் கெத்துக்காக தில்,பேட்டா. நேம் ட்ராப்பிங்குக்காக பெங்காளி. உறவினர்களுக்காக ஆங்கிலம். அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை, மாதுரிக்காக)
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
மேன்ஷனில் பலர் பழக்கம். ஒருமுறை அவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்க்காக பொன்னியின் செல்வனை உல்டா செய்து ஒரு கதை சொன்னேன்.
சுந்தரசோழன் - வயதான மாபியா டான்
ஆதித்த கரிகாலன் - ஐரோப்பாவில் போதை நெட்வொர்க் கவனிக்கும் மூத்த மகன்
வந்திய தேவன் - மூத்த மகனின் நம்பிக்கைக்குரிய அடியாள்
அருண்மொழிவர்மன் - ஹாங்ஹாங் போதை நெட்வொர்க் கவனிக்கும் இளைய மகன்
குந்தவை - மாபியா டானின் மகள் மற்றும் தற்போதைய செக்கரட்டரி
பழுவேட்டரையர்கள் - டானின் கூட்டாளிகள், இந்திய நெட்வொர்க்
கொடும்பாளூர் மலையமான் - இளைய மகனுக்கு பெண் கொடுக்க நினைக்கும் மற்றோரு கூட்டாளி
நந்தினி - பழைய பங்கு பிரித்தலில் கொல்லப்பட்ட இன்னோரு கூட்டாளியின் மகள். பழி வாங்க துடிக்கிறாள்.
சேந்தன் அமுதன்,பூங்குழலி,மதுராந்தகன்,பினாகபானி போன்ற மொக்கை கேரக்டர்களை தவிர்த்துவிட்டு 80 சீன் எழுதினேன். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தான் நான் உண்மையை கூறினேன். பட்ஜெட் பெரிசு என்று எகிறிவிட்டார்கள். இப்போதுதான் பொன்னியின் செல்வன் பொது உடமை தானே? யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் நான் ரெடி. டிவி தொடராக கூட எடுக்கலாம்.
தமிழ்சினிமாவை கீழே வேண்டுமானால் அது இறக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
டிவி விழுங்கிவிடும் என்று சொன்னார்கள். படத்தை வைத்திருப்பதுதான் டிவிக்கு இப்போது சொத்து. காதலில் விழுந்தேன் படத்தை பென்ஹர் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள். எனவே 10 வருஷமாவது இந்நிலை நீடிக்கும்.தற்போது, 3சி என்று அழைக்கப்படும் சென்னை, செங்கல்பட்டு ,கோவை ஆகிய சென்டர்களின் வசூல் மற்ற அனைத்து சென்டர்களின் கூட்டு வசூலுக்கு நிகராக இருக்கிறது.இதுபோக சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை என மார்க்கட் விரிந்து உள்ளது. எனவே சரோஜா, பொய் சொல்ல போறோம் போன்ற அர்பன் தீம் படங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
என் வேலையில் நல்ல பெயரெடுப்பேன். புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உருவாக வாய்ப்பு அதிகம். தமிழக வரலாறு 4000 வருடம் என கொண்டாலும் இந்த 77 ஆண்டுகள் இரண்டு சதவீதம் தானே?
கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் புருனோ
ராப்
வெட்டிப்பயல்
குட்டிபிசாசு
பரிசல்காரன்
நந்தா
September 29, 2008
அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு
அன்புடையீர்
வரும் அக்டோபர் திங்கள் நான்காம் நாள் மாலை ஆறு மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் பதிவர் சந்திப்பு நடத்த உத்தேசித்துள்ளோம். வழக்கமாக பதிவர் சந்திப்புக்கு வருபவர்களையும், இதுவரை கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பழைய/புதிய பதிவர்களையும் வந்து சிறப்பிக்குமாறு இருகரம் கூப்பி அழைக்கிறோம்.
சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பொட்டிக்கடையார் கலந்து கொள்கிறார்.
இவர் 2005 ஆம் ஆண்டு பதிவுலகில் நுழைந்து, 2006- 2007 ஆம் ஆண்டுகளில் மிக துடிப்புடன் விளங்கினார். அரசியல், சமுதாய பிரச்சினைகளை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரபல கும்மி பதிவராகவும் திகழ்ந்தவர். எதிர் கவிதைகள் இவரது சிறப்பு. சில்வியா குண்டலகேசிக்கு எதிர்வினையாக கேத்தரின் பழனியம்மாளை ஆதரித்தவர். இவர் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரரும் ஆவார். ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் ஆடும் உள்ளூர் அணியில் இடம்பெற்றவர்.
சந்திப்புக்கு பாலபாரதி,லக்கிலுக்,நர்சிம்,அதிஷா ஆகியோர் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.
மீண்டும் ஒருமுறை அனைவரையும் சந்திப்புக்கு சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறேன்
August 28, 2008
பாலபாரதி - மலர்வனம் லட்சுமி திருமண வாழ்த்து
எங்கள் அன்புக்குரிய தலை பாலபாரதியின் திருமணம் இனிதே நடந்தேறியது. மணப்பெண் பிரபல பெண்பதிவர் 'மலர்வனம்' லட்சுமி. இந்த லட்சிய தம்பதியர்க்கு பதிவுலகின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பாலபாரதி அவர்களின் பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் அவரின் திருமண செய்ததி பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்
சகோதரி லட்சுமிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
August 06, 2008
சந்திப்புக்கு வரவில்லை – பாலபாரதி,லக்கிலுக்,ஜியோவ்ராம்,வளர்மதி,புருனோ,பைத்தியக்காரன் அறிவிப்பு
நான் : தலை, சந்திப்பு
பாலபாரதி : நான் வரல்லையா
நான் : ஏன் தலை?
பாலபாரதி : கம்பெனியில டவுசரை கிழிக்கிறாங்க, வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை தான் 12 டவுசரையும் தைக்க வேண்டிஇருக்கு
நான் : 6 நாள் 6 டவுசர் தானே?
பாலபாரதி : அங்க ஒருநாளைக்கு ரெண்ட கிழிக்கிறாங்க
நான் : !!!!!!!!
நான் : லக்கி, சந்திப்பு
லக்கி : வரல்ல
நான் : ஏங்க?
லக்கி : வாரநாள்ள எல்லாம் சுட்டபழம்,பத்துபத்து மாதிரி படம் பார்க்கவும் அதிக்கு விமர்சனம் எழுதவுமே நேரம் சரியாப்போயிடுது. இதுல பின்னூட்டம், பதில் பின்னூட்டம் அப்புறம் யூத் விகடன் வேலைகள்
நான் : அதனால?
லக்கி : ஞாயிறு தான் எங்க கம்பெனி வேலையை பார்க்க வேண்டி இருக்கு
நான் : !!!!!!!!
நான் : சார், சந்திப்பு
ஜியோவ்ராம் : ம்ஹூம்
நான் : ஏன் சார்?
ஜியோவ்ராம் : தெரியாம 45 கதைன்னு சொல்லிட்டேன். பார்க்கிற ஆள் எல்லாம் மீதி கதையைக்கேட்டு ஒரே தொல்லை
நான் : !!!!!!!!!!!!
நான் : சார், சந்திப்பு
வளர்மதி : திரைப்படம் காட்சி ஊடகம், பதிவு மொழி ஊடகம்,சந்திப்பு ஒலிஒளி ஊடகமா பன்முகத்தன்மையின் நீட்சியா இருப்பதால
நான் : அப்படின்னா நீங்க வரல்லையா சார்?
வளர்மதி : நான் வரல்லைன்னு எப்பங்க சொன்னேன், வந்தா நல்லாயிருக்குமேன்னுதானே சொன்னேன்
நான் : !!!!!!!!!!!!
நான் : சார், சந்திப்பு
புருனோ : அய்யய்யோ
நான் : என்னாச்சு?
புருனோ : அட நீங்க வேற, 6 நாளும் ஆஸ்பத்திரியில வைத்தியம் பார்த்துட்டு ரிலாக்ஸ்க்காக வந்தா, அங்கயும் ஒரே கன்சல்டிங். இதுக்கு மக்களுக்காவது சேவையை தொடரலாம்
நான் : !!!!!!!!!!!!
நான் : சார், சந்திப்பு
பைத்தியக்காரன் : கண்டிப்பா வந்துர்றேன். ஆமா வளர்,சுந்தர், பாலா, லக்கி எல்லாம் வர்றாங்கல்ல?
நான் : இல்லை
பைத்தியக்காரன் : அவங்க இல்லாம எதுக்கு சந்திப்பு நடத்துறீங்க? பேசாம நீட்ஷேவையும் பூக்கோவையும் போய் படிங்க
நான் : !!!!!!!!!!!!
நொந்து போய் அதிஷாவை அழைக்க,
நான் : அதிஷா, யாரும் வரமாட்டாங்க போல இருக்கே?
அதிஷா: அமீரகம் மாதிரி பிரியாணி போட்டு, இலவச புக் டிவிடி கொடுப்பமா?
நான் : யாரு, நீயா? நீ அடைச்ச கடையில உடைச்ச சோடாவும், குருதிப்பனல் பாட்டு கேசட், பேசும்படம் வசன புத்தகம் தருவ. யாரு வருவா?
அதிஷா : அப்ப சிங்கை மாதிரி இலவச பின்னூட்டம்....
நான் : அங்க எல்லாம் சாப்ட்வேர் ஆட்கள். பிடுங்க ஆணி இல்லேன்னா பின்னூட்ட விளையாட்டு விளையாடுறவங்க. இந்த குரூப்பு போடுற பின்னூட்டத்தயே ரிலீஸ் பண்ணாது. இதில பரிசாம்
அதிஷா : அப்ப கோவை மாதிரி ஷாமியானா போட்டு....
நான் : நீ சொந்தமாவே யோசிக்க மாட்டியா?
அதிஷா : அப்படின்னா ஒரே வழிதான் இருக்கு. அதப்பண்ணுன்னா சென்னை என்ன, கும்மிடிப்பூண்டியில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் உள்ள பதிவர்கள் வந்துருவாங்க
நான் : சீக்கிரம் சொல்லுப்பா
அதிஷா : பத்து பத்து சோனா வை சிறப்பு அழைப்பாளரா கூப்பிட்டுறலாம். கூட்டம் அம்மிரும்
நான் : !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!!
சோனா வந்தாரா?
பதிவர் கூடினரா?
10-08-08 மாலை 5-30 மெரினா வில் காண்க
நமது மலேசிய மாவீரன் டிபிசிடி இன்று மாலை மெரினாவில் பதிவர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் வருக
நேரம் : 6.30-8.30
June 06, 2008
இரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்

முட்டை இல்லாமல் கூட ஆஃபாயில் போட்டு விடலாம் ஆனால் பாலபாரதி மற்றும் லக்கிலுக் இல்லாமல் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவது முடியாத காரியம். வரும் ஜூன் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் சென்னையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலை தனிக்கட்டை பிரச்சினை இல்லை. லக்கி தான் வீட்டை ஏமாற்றிவிட்டு கலந்து கொள்ளவேண்டும். கடந்த பதிவர் சந்திப்புகளிலேயே அவர் தன்னிடமிருந்த பொய்களை காலி செய்து விட்டதால் இந்த சந்திப்புகளுக்கு அவசரமாக இரண்டு பொய்கள் தேவைப்படுகின்றன. கைவசம் வைத்திருப்போர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சிறந்த காரணத்துக்கு கீழ்க்கண்ட பரிசுகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்
(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்
(2) வீராசாமி பட டி வி டி
(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்
(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி
பதிவர் சந்திப்பு பற்றிய விபரங்களுக்கு