June 29, 2010

1998 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டம் இல்லாமலேயே அழகழகான தமிழ்ப் பெயர்களில் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டிய ஆண்டு இந்த ஆண்டுதான்.

கண்ணேதிரே தோன்றினாள், மறுமலர்ச்சி, தினந்தோறும், சொல்லாமலே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், இனியெல்லாம் சுகமே, துள்ளித் திரிந்த காலம், இனியவளே, கண்களின் வார்த்தைகள், ப்ரியமுடன், நிலாவே வா, என்னுயிர் நீதானே மற்றும் உயிரோடு உயிராக என நல்ல தலைப்புகளுடன் மென்மையான படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.

அதே போல முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களும் இந்த ஆண்டில் அதிக அளாவு வெளிவந்தன.

உதவிக்கு வரலாமா, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, அரிச்சந்திரா, கோல்மால், கவலைப்படாதே சகோதரா, கும்பகோணம் கோவாலு மற்றும் கல்யாண கலாட்டா என நகைச்சுவையை மையமாகக் கொண்ட பல படங்கள் இந்த ஆண்டு வெளியாகின.

இந்த ஆண்டு ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றிய ஆண்டாகும்.

அஜீத்தும் விஜய்யும் ஆக்‌ஷன் ஹீரோக்களாக பரிமளிக்காத நேரம். விக்ரம் அப்போதுதான் மொட்டையடித்துக் கொண்டு சேதுவாகிக் கொண்டிருந்தார் வரப்போகும் வசந்தத்தை எதிர்பார்த்து. சூர்யா சினிமா என்றால் என்ன என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். சத்யராஜ் பீல்ட் அவுட். கார்த்திக் ரொமாண்டிக்கான காதல் கலந்த லைட்டான கதைகளை மட்டும் பண்ணிக் கொண்டிருந்தார். பிரசாந்த் அன்றைக்கும் இன்றைக்கும் என்ற பேச்சே இல்லாமல் எப்போதும் இப்படித்தான் என்று இருந்தார்.

கமல்ஹாசன் அவ்வை சண்முகி, மற்றும் சாக்‌ஷி 420 யின் வெற்றிக்குப் பின் மருதநாயகத்தை தொடங்கி, முடியாமல் பெப்ஸி பிரச்சினையில் நுழைந்து, வேறு வழியில்லாமல் காதலா காதலா படத்தைத் தொடங்கி வெளியிட்டார்.


அப்போதைய நிலைமைக்கு ஆக்‌ஷன் ஹீரொக்கள் என்றால் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் அர்ஜூன் தான். இதில் ரஜினிகாந்த் படையப்பாவை படைக்கும் ஆயத்தங்களில் இருந்தார். விஜயகாந்தோ தர்மா, உளவுத்துறை, வீரம் விளைஞ்ச மண்ணு என தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் வழக்கத்தையே ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.

அர்ஜூன் கே எஸ் ரவிகுமாருடன் இணைந்து கொண்டாட்டம் என்ற ஆக்‌ஷனும் இல்லாத காமெடியும் இல்லாத இடைநிலைப் படத்தைக் கொடுத்தார். தாயின் மணிகொடி என்ற வழக்கமான தேச பக்தி படமும் அர்ஜூன் நடிப்பில் வெளியானது. ஆனால் அப்படம், படத்தின் கதாநாயகியான நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவான நிவேதாவுக்காக மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. (படத்தைத் தொடர்ந்து பெங்களூரில் அவர் தற்கொலை செய்து கொண்டார் (பெரிய இடத்து விவகாரம்)).

ராஜ்கிரண் வீரத்தாலாட்டு, பொன்னு விளையற பூமி என படம் பார்க்க வந்தவர்களை புண்ணாக்கிக் கொண்டிருந்தார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நட்புக்காக மட்டுமே இந்த ஆண்டில் வெற்றியைப் பெற்ற ஒரே ஆக்‌ஷன் படம். இதிலும் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல்தான். வின்செண்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடித்த ப்ரியமுடன் ஓரளவு ஆக்‌ஷன் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த ஆண்டில் வெளியான சில திரைப்படங்களைப் பற்றிய ஒரு பார்வை.


மறுமலர்ச்சி


மதுரை, நெல்லை,கோவை மற்றும் சென்னை வட்டாரப் படங்களே வந்து கொண்டிருந்த காலத்தில் தென் ஆற்காடு வட ஆற்காடு மாவட்ட கிராமத்தை களமாகக் கொண்டு வந்த படம் இது (முதல் படமென்றும் சொல்லலாம்). முதலில் ராசு படையாச்சி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மறுமலர்ச்சி என மாற்றப்பட்டது. அதேபோல் முதலில் விஜயகாந்த் நாயகன் வேடத்துக்குப் பேசப்பட்டு பின்னர் மம்மூட்டி நாயகனாக நடித்தார். பாரதி இயக்கம், எஸ் ஏ ராஜ்குமார் இசை. இப்பட ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், அப்போது ராசு படையாச்சி என்னும் பெயருக்காகவே எந்த தமிழ் கதாநாயகனும் நடிக்க மறுக்கிறார்கள் என ஆவேசப்பட்டார். பின்னர் அவர் ஆற்காடு மாவட்ட பின்புலத்தில் பல படங்களை இயக்க இப்படம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.


கோல்மால்


அருமையான முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். நாயகன் செல்வா, நாயகி மோனிகா நெருக்கருக்குப் பதில் வேறு நல்ல மார்க்கெட் வேல்யு உள்ளவர்கள் நடித்திருந்தால் உள்ளத்தை அள்ளித் தா அளவுக்கு பேசப்பட்டிருக்கும். ஏராளாமான திருப்பங்களைக் கொண்ட நகைச்சுவைப் படம். ஸ்க்ரிப்ட் பலமாக இருந்தாலும் காஸ்டிங் சரியில்லாவிட்டால் படம் ரீச் ஆகாது என நிரூபித்த படம்.


நட்புக்காக


இப்படத்தின் பிரிவியு பார்த்து விட்டு ரஜினி, கே எஸ் ரவிகுமாரிடம் கேட்டது “ இந்த மாதிரி கதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறங்க?”. படம் தெலுங்கில் சிரஞ்சிவி நடிக்க ”சினேகம் கோசம்” என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.தினந்தோறும்/துள்ளித்திரிந்த காலம்


இரண்டு படங்களுமே ஒத்த சாயல் கொண்ட படங்கள். வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், இளைஞர்களின் பொறுப்பின்மையையும் களமாகக் கொண்டு வெளிவந்த படங்கள். தினந்தோறும் படம் இயக்குநர் நாகராஜனின் காட்சி அமைப்புகளாலும், வசனத்தாலும் பேசப்பட்டது. பின்னர் இயக்குநர் நாகராஜன் குடிக்கு அடிமையாகி, தற்போது மீண்டு வருவதாகத் தகவல்.


சொல்லாமலே

தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம். ஆனால் கிளைமாக்ஸில் நாக்கை அறுப்பதால் அதுவே பல ஊடகங்களால் முன்னிலைப் படுத்தப்பட்டது. இயக்குநர் சசிக்கு து முதல் படம். பின்னர் அவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ என வெரைட்டியான படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழில் அவருக்கு நிலையான இடம் இல்லாமல் இருப்பது வேதனையான ஒன்று.


காதல் மன்னன்


இயக்குநர் சரணின் முதல் படம். இன்னொருவருக்கு நிச்சயித்த பெண்ணை காதலித்து மணக்கும் ரொமாண்டிக் ஹீரோ வேடத்தில் அஜீத். இம்மாதிரி தமிழில் வந்த முதல் படம் என்றும் சொல்லலாம். (தமிழ் – தில்வாலே லே துனியா.......). படத்தின் இணை இயக்குநர் விவேக் (பாலசந்தரின் சிஷ்யர்கள்). பின்னர் இவருக்கும் சரணுக்கும் முட்டிக் கொண்டது. மெஸ் ஓனராக எம் எஸ் விஸ்வனாதனை முதன் முதலில் நடிக்க வைத்திருந்தார்கள். நாயகி மானு கலாசேத்திரா மாணவி. செக்யூரிட்டி சர்வீஸ், மேன்ஷன் மெஸ், டூ வீலர் சர்வீஸ் ஸ்டேஷன் என நகரத்தின் அடையாளங்களை திரைக்கு தெளிவாக கொண்டு வந்த படம் இது.


அரிச்சந்திரா


கல்யாண வயதில் ஒரே இடத்தில் வேளை பார்க்கும் நண்பர்கள். குடியும் கூத்துமாய் இருப்பவர்கள். அவர்களின் லீடருக்கு குடியை, மாமிசத்தை, சிகரெட்டை வெறுக்கும் பெண்ணின் மேல் காதல். ஏமாற்றி காதலிக்கிறான். பின்னர் மாட்டிக் கொள்கிறான். எப்படி அவள் அன்பை மீண்டும் பெறுகிறான் என்பதே கதை. இந்தக் கேரக்டருக்கு கார்த்திக்கை விட பொருத்தமாய் யார் கிடைப்பார்?. நல்ல எண்டெர்டைனர்.


நாம் இருவர் நமக்கு ஒருவர்


பிரபு தேவா தாடி எடுத்த படம், மீனா நீச்சலுடையில் நடித்த படம். சுந்தர் சி யின் வழக்கமான ஆள் மாறாட்டக் காமெடிப் படம். காதலா காதலா வுக்கும் இதற்கும் சில காட்சிகளில் ஒற்றுமை இருந்தது. கார்த்திக் ராஜா அருமையான மெலடிகளைக் கொடுத்திருந்தார். என்ன வென்று தெரியாமல் ஏதோ குறைந்திருந்ததால் தோல்வியடைந்த படம்.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்


கார்த்திக் கடனுக்கு (வாங்கிய) நடித்துக் கொடுத்த படம். ரமேஷ் கண்ணாவுக்கு நகைச்சுவை நடிகன் அந்தஸ்து கொடுத்த படம். தீபாவளிக்கு முன் வெளியாகி தீபாவளிப் படங்கள் பப்படமானதால் பொங்கல் வரைக்கும் ஓடிய படம்.

கண்ணெதிரே தோன்றினாள்

சுஜாதாவின் வசனத்தில் அறிமுக இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கி தேவாவின் கானாப் பாடல்களோடு வெற்றியடைந்த படம். பிரசாந்துக்கு சொல்லிக்கொள்ளும் படி அமைந்த மிகச்சில படங்களில் ஒன்று.

இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது.

June 28, 2010

தமிழ் சினிமாவில் வீடுகள்

தமிழ்சினிமாவில் கதாநாயகன், நாயகி, எதிர்நாயகன், ஆகியோரது குணாதிசயங்கள் பில்ட் அப் காட்சிகளின் மூலமாகவோ அல்லது பிறரை விட்டு பேசச் சொல்லியோ தான் பார்வையாளனுக்கு உணர்த்தப் படுகிறது. அவர்கள் குடியிருக்கும் வீடானது அந்தக் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்டப்படுகிறதா என்று பார்த்தோமானால் பெரும்பாலான திரைப்படங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.

படத்தின் நாயகர்/நாயகியின் செல்வ நிலையை காட்டும் விதத்தில்

ஏழை – குடிசை (கிராமம் மற்றும் சேரிப்பகுதி)

கீழ் நடுத்தரம் - சம்சாரம் அது மின்சாரம் செட் (தனி வீடு)

ஒண்டுக் குடித்தனங்கள் (ஸ்டோர்ஸ்)

மத்திய நடுத்தரம் – ஹவுசிங் போர்ட் டைப் வீடுகள்

உயர் நடுத்தரம்- அபார்ட்மெண்ட் டைப்,

பணக்காரர்கள் – கீழ்பாக் குஷால்தாஸ் கார்டன் (தற்போது இடிக்கப்பட்டு விட்டது), ஈ சி ஆர் ரோட் பங்களாக்கள், கல்பனா ஹவுஸ், இரண்டு பக்கம் படிக்கட்டு வைத்து ஹை சீலிங் உள்ள வீடுகள்.

பெரும் செல்வந்தர்/ நாட்டாமை டைப் – எம் ஏ எம் ராமசாமி வீடு, செட்டுநாட்டு ஆயிரம் ஜன்னல் வீடு.

என அவர்களின் இருப்பிடம் சித்தரிக்கப்படுகிறது.

ஆச்சாரமானவர்கள் என்பதைக் காட்ட ஒரு பூஜை அறை, துளசி மாடம் ஆகியவற்றைக் காட்டினால் போதும் என்ற கருத்தும் தமிழ்சினிமாவில் தொன்று தொட்டு வழங்கிவருகிறது.

வில்லனுக்கும் அவர் வசதிக்கும், தொழிலுக்கும் மற்றும் பதவிக்கும் ஏற்ற வீடு காட்டப்படும்.

ஆனால் நகைச்சுவை நடிகன் தான் பாவம், அவனுக்கு என்று சொந்தமாக ஒரு இருப்பிடம் மிக அரிதாகவே (சூரிய வம்சம், பெரிய தம்பி) காட்டப்படும். அதுகூட கதைக்கு அவசியமாவதால் வேறு வழியில்லாமல் காட்டப்படும்.

பேய்ப்படங்கள் மற்றும் குற்றம் சார்ந்த திகில் படங்களில் வீடுகள் அமானுஷ்ய தன்மை கொண்டதாக சித்தரிக்கப்படும் (13 ஆம் நம்பர் வீடு, ஆனந்தப்புரத்து வீடு).

வீடு ஒரு கதாபாத்திரமாக அமைந்த படங்கள் என்றால்

பாலுமகேந்திராவின் வீடு படம் தான் சட்டென்று எல்லோர் நினைவுக்கும் வரும். ஒரு நடுத்தர குடும்பம் வீடு கட்ட படு கஷ்டத்தை காவியமாக சொன்ன படம் அது.

டி பி கஜேந்திரன் இயக்கத்தில் உருவான பட்ஜெட் பத்மநாபன், தன் வீட்டை மீட்க போராடுபவனின் கதையை நகைச்சுவை முலாம் பூசி சொன்னது.

சேரனின் பாண்டவர் பூமி, குடும்பத்திற்க்காக சிறைக்குப் போன தம்பி வெளிவந்து நன்கு வாழ வேண்டுமென அவனது அண்ணன்கள் ஒரு மணப்பெண்ணை வளர்த்து, வீட்டையும் கட்டி வைப்பதை இணை கதையாகச் சொன்னது.

என சில படங்களைச் சொல்லலாம்.

எனவே எப்படிப் பார்த்தாலும் குணாதிசயங்களைச் சொல்லும் வீடு காட்டப் பட்டிருக்கிறதா என்று பூதக் கண்ணாடி வைத்துத் தான் தேட வேண்டியிருக்கிறது.


ஸ்டியோக்களில் சினிமா சிறைப்பட்டிருந்த காலத்தில் கார்பெண்டரும், பெயிண்டருமே வீட்டை முடிவு செய்தார்கள், பதினாறு வயதினிலேக்குப் பின் இயல்பு வீடுகள் என்ற போர்வையில் மதுரை, கோபி செட்டிப் பாளையம் மற்றும் காரைக்குடி சுற்று வட்டார வீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சிவாஜி படத்துக்காக ரஜினியின் வீட்டை பிரமாண்டமாய் காட்ட வேண்டுமென்று டெல்லியில் அலைந்து அந்த வீட்டைப் பிடித்தார்கள்.

நாயகன்/நாயகியின் தனித் தன்மைகளை வீட்டு அலங்காரம், அங்கு உள்ள பொருட்கள், போஸ்டர்கள், பொருள் அடுக்கியிருக்கும் விதம் என காட்ட கலை இயக்குநர்களுக்கு சுதந்திரத்தையும், ஸ்க்ரிப்டையும் கொடுங்கள் இயக்குநர்களே.