July 27, 2011

ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்

2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னை பதிவர் பட்டறை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து இரு வாரங்களுக்குள் தமிழ்மணம் நிர்வாகம் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் ஒரு பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. மா சிவகுமார், பாலபாரதி மற்றும் சென்னைப் பதிவர்கள் அதை ஒருங்கிணைத்திருந்தார்கள். அந்நிகழ்வில் தமிழ்மணம் நிர்வாகம் (சங்கரலிங்கம் அவர்கள் வந்திருந்தார் என நினைக்கிறேன்) பங்கேற்பாளர்களுக்கு ஒரு டி சர்ட் வழங்கியது.

அன்றைய கலந்துரையாடலின் போது ஐகாரஸ் பிரகாஷ் அவர்கள் தமிழ்மணம் தொடர்ந்து நடத்தப் படுவதற்கான பொருளாதார பின்புலங்கள், அதன் சாதக பாதகங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
(அச்சமயத்தில் தேன்கூடு திரட்டி வேறு அதன் நிறுவனர் கல்யாண் அவர்களின் திடீர் மறைவால் ஸ்தம்பித்திருந்தது.)

அதன்பின் ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் எதிரேயுள்ள மினி ஹாலில் மீண்டும் தமிழ்மண நிர்வாகம் ஒரு சந்திப்பை நடத்தியது. தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர். அப்போது தசாவதாரம் பட ரிலீஸ். தமிழ்மணமே அப்பட விமர்சனங்களால் தளும்பி வழிந்தது. மேலும் ஆபாச பதிவுகள்/எழுத்துகள் பற்றி மட்டுமே விவாதம் நடந்தது. பொருளாதார சாதக பாதகங்கள் பற்றி எந்த ஆலோசனையையும் நடைபெறவில்லை.

கடந்த இரு வருடங்களாக சென்னையில் /பதிவுலகில் இல்லாததால்
அதன்பின் தமிழ்மண சந்திப்புகள் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.

தற்போது தமிழ்மணத்தின் அறிவிப்பைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடல்.

ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனத்திற்கு ஒரு சலாம்.

July 19, 2011

நெற்றிக்கண் பத்திரிக்கைக்கு கண்டனங்கள்

நெற்றிக்கண் பத்திரிக்கையில் கடந்த சில வாரங்களாக ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. கிசு கிசு பாணியிலோ அல்லது பதலக்கூர் ஸ்ரீனிவாசலு பாணியிலோ இல்லாமல் நேரடியாக இடம் சுட்டிப் பொருள் விளக்கத்துடன் ரஜினி அவர்களது குடும்ப விஷயங்களை எழுதிக் கொண்டிருகிறார்கள்.

ரஜினி லதாவை திருமணம் செய்து கொள்ள என்ன காரணம்?, ரஜினியின் குடும்பத்துக்கு லதா இழைத்த அநீதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் ரஜினி ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு லதா ஒத்துக் கொள்ளாமல் அவர் வீரியத்தைக் குறைக்க தினமும் உணவில் வேப்பம்பூ ரசம் வைத்துக் கொடுத்தார் என்று அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை குறிவைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினியின் சினிமா, அவர் அரசியல் ஆகியவற்றை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஏனெனில் அவற்றை அவர் பொது வெளியில் வைக்கிறார். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பந்தி வைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

நெற்றிக்கண்ணுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்

July 18, 2011

கட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்

என்னடா காசை இப்படி இறைக்கிறாய்ங்க? இதுதான் பத்தாம் வகுப்பு முடிந்ததும் ஒரு அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து, கோவையில் உள்ள ஒரு பம்ப் உற்பத்தி கம்பெனியில் சப் காண்டிராக்டர்களை மேய்க்கும் பணியில் சேர்ந்த செந்திலுக்கு அடிக்கடி மனதில் எழுந்த கேள்வி.

ஒரு சதுர கிலோமீட்டரில் அதிகப்படியான பேச்சிலர்கள் வாழும் இடம் திருவல்லிக்கேணி என்றால் அதிகப்படியான கஞ்சர்கள் வாழும் இடம் செந்தில் பிறந்த ஊர். அங்கே பிறந்து, வளர்ந்து விட்டு அப்படி கேள்வி எழாவிட்டால் தான் ஆச்சரியம்.

இங்கே ஹோட்டலே இல்லையே! ஆரம்பிச்சா அள்ளிடலாம் என கனவுகளோடு கடை வைத்த பல ராஜகோபால்களை வெறும் கோப்பால் ஆக்கிய ஊர்க்காரனுக்கு ஆரியாஸிலும் அன்னபூர்ணாவிலும் அம்மும் கூட்டம் அதிர்ச்சியளிக்காமல் என்ன செய்யும்?

வேறு வழியில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஒரே தியேட்டரிலும் டைட்டில் போடும் போதுதான் கீழ்வகுப்பு டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பார்கள். கட்டுக்கோப்பாய் காத்திருந்து அந்த டிக்கெட்டை மட்டுமே வாங்குபவனுக்கு மேல் வகுப்பு டிக்கெட் முதலில் நிறையும் ஊர் ஆச்சரியமளிக்காதா? என்ன?

திருவிழாக்காலங்களில் பிரசாதமாக கிடைக்கும் வாழைப்பழத்தை மட்டுமே பழமாகப் பார்த்த ஒருவனுக்கு, பழமுதிர்ச்சோலையில் குடிக்கப்படும் மாப்பிள்ளை ஜூசைப் பார்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும்?

காப்பிக்கலர்ல எடுடா அழுக்குத்தெரியாம இருக்கும், பெரிசா தைங்க, வளர்ற பிள்ளை போன்ற உரையாடல்களை மட்டுமே கேட்ட காதுகளுக்கு அலன் சாலியும், லூயி பிலிப்பும் செவ்வாய் கிரக மொழியாய்த்தானே தெரியும்?

உடன் பணிபுரிவோர், சப் காண்டிராக்டர்கள், தங்கும் இடத்தில் உள்ளோர் என பார்க்கும் நபர்கள் எல்லாம் தாராளவாதிகளாய்த்தான் தெரிந்தார்கள் செந்திலுக்கு எல்லோரும் பெருமைக்கு எருமை மேய்ப்பதாய் தோன்றியது அவனுக்கு.

அவனின் ஒரே ஆறுதல் புரடக்‌ஷன் யூனிட்டில் இருந்த மணிண்ணா. சுப்பிரமணி என்ற அவர் இயற்பெயர் மணிண்ணா என்றே திரிந்து விட்டிருந்தது. இரண்டு ஏக்கர் நிலம் கோவை புற நகரில். அதில் விவசாயம். இங்கே சி என் சி ஆப்பரேட்டர், வருவது போவது எல்லாம் சைக்கிளில்தான். 15 வருட அனுபவம். வாய்ப்புகள் பல கிடைத்தும் வெளியில் செல்லாமல் கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருப்பவர்.

அவரிடம் தான் தன் ஆதங்கத்தை அவன் கொட்டிக்கொள்வான். அவரும் தன் பங்கிற்க்கு ஆறுதல் படுத்துவார்.
“நீ இப்போ அடிக்கடி போவயேப்பா, கட்ட பொம்மன் தெரு, சப் காண்டிராக்டரா இருப்பாங்களே, அங்க ரெண்டு ஆர்டர் அதிகமா வந்தாப் போதும் ஒரு வெள்ளை மாருதி வாங்குவாங்க.ஆறே மாசம் தான் கடன் கட்ட முடியாம சாணிப் பவுடரை குடிச்சிட்டு கறுப்பு மாருதியில போவாங்க”
இங்க எல்லாம் ஆடம்பரம் தாம்ப்பா என்று முடிப்பார்.

இவனும் தன் பங்கிற்க்கு ஆசுவாசப் பட்டுக்கொண்டு, ஆமா தொண்ணூறு நாள் கிரடிட்ல ஆர்டர் கொடுக்கிறாங்க. ஆனா ஜவ்வா இழுத்து பேமெண்ட் செட்டில் செய்யுறாங்க. இதை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி தொழில் வேணா செய்யலாம், வண்டி வாங்கலாமா? என்று நினைத்துக் கொள்வான்.

ஒரு ஆயுத பூஜை அன்று பொரி சாப்பிட்டுக் கொண்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தார்கள் ட்ரைனிகள் எல்லோரும். அப்போது அங்கே வந்தார் பர்சேஸ் டிபார்ட்மெண்ட் திவாகர். அங்கே அவர் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ. ஆட்டைத் தூக்கி மாட்டில் போடும் தடலாடி பேர்வழி. அவர் செந்திலிடம், என்னப்பா இப்படியே இருக்கப் போறியா? என்று கேட்டார்.

செந்தில் விழித்தான். தொடர்ந்த அவர், லோன் போட்டு ஒரு டூ வீலர் வாங்கு. பார்ட் டைம் பிஇ எக்ஸாம் எழுத கோச்சிங் கிளாஸ் போ. இப்படியே இருக்காதப்பா என்றார்.

சைக்கிள் செயினுக்கு கவர் போட்டாலே கதறி விடும் வீட்டைச் சேர்ந்தவன், லோன் போட்டு டூ வீலரா என்று அதிசயித்தான். அவன் முகக்குறிப்பை வைத்து எண்ணத்தை கணித்த திவாகர் தொடர்ந்தார்.

இந்த மாருதி இருக்கு பாரு, ஆள் போகுறதுக்காக தயாரானது. இப்போ ஸ்கூல் பிள்ளைங்களை கூப்பிட, லாட்டரி விக்க, விளம்பரம் பண்ண, ஆம்புலன்ஸ் ஏன் மார்ச்சுவரி வண்டியாக்கூட உருவம் எடுத்து களத்துலயே இருக்கு. மாறிக்கிட்டே இருக்கணும். மேல எப்படிப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கணும். இப்படியே இருக்காதய்யா என்று அறிவுறுத்தினார்.

செந்திலால் அப்படியே இருக்கவும் முடியவில்லை, துணிந்து இறங்கவும் முடியவில்லை. கோவையுடனும் அவனால் ஒட்ட முடியவில்லை. 98 குண்டு வெடிப்புக்கான மந்த நிலைக்குப் பின் சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டான்.

இப்போது ஏ டி எம் களில் ஐந்து ட்ரான்சாக்‌ஷன்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதி வந்திருக்கிறதே. அதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?. செந்திலின் ஊர்க்காரர்கள் தான். அட்டையை நுழைப்பார்கள். பேலன்ஸ் பார்ப்பார்கள். நோட்டில் குறித்து வைத்திருக்கும் அமவுண்ட் உடன் சரி பார்ப்பார்கள். பின்னர் ஒரு நூறு ரூபாய் எடுப்பார்கள். அதன்பின்னர் ஒரு முறை பேலன்ஸ் சரி பார்ப்பார்கள். இதனால் ரேஷன் கடை மண்ணெண்ணெய் க்யூ போல எப்போதும் ஏ டி எம் நிரம்பி வழியும். ட்ரான்சாக்‌ஷனை மட்டும் கணக்கில் எடுத்து அடிசனல் ஏ டி எம்மை நிறுவி பேங்க்காரர்கள் மூக்கறு பட்டுக்கொண்டார்கள். இது அவர்கள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டே மேற்கூரிய விதி அமலுக்கு வந்தது.

இப்போது சென்னையில் செந்தில் ஓரளவுக்கு காலூன்றி விட்டான். அலுவலக விஷயமாக நீண்ட இடைவேளைக்குப் பின் கோவை வந்தான். ஓய்வு நேரம் கிடைக்க, தன் முந்தைய பம்ப் கம்பெனிக்கு ஒரு விசிட் அடித்தான். பெரும்பாலும் புதிய முகங்கள். திவாகர் இப்போது தனியாக ஒரு இண்ட்ஸ்ட்ரி வைத்து பெரிய ஆளாகி விட்டதாக கேள்விப்பட்டான்.

ஆனால் அவன் தேடி வந்த்து மணிண்ணாவைப் பற்றி கேட்கத்தான். அக்கவுண்ட்ஸில் இருந்த பழைய ஆள் ஒருவரை பிடித்து விசாரித்தான்.
“அவருக்கென்னப்பா! சாதாரணமாத்தான் இருந்தாரு. திடீர்னு ரியல் எஸ்டேட்டெல்லாம் எகிறுச்சுல்ல, அப்ப அவர் பூமியும் தங்கமாயிடுச்சு. ரெண்டு ஏக்கரும் கிட்டத்தட்ட நாப்பது, அம்பது கோடிகிட்ட போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. இப்போ ரொம்ப நல்லா இருக்கார்”
என்று பதில் வந்தது.

நீங்கள் ஆம்னி பஸ்ஸிலோ, ரயிலில் இரண்டாம் வகுப்பிலோ பயணம் செய்யும் போது “ஒண்ணு அப்படியே இருங்க, இல்லையின்னா கண்ண மூடிக்கிட்டு எதிலயாச்சும் முழுசா இறங்குங்க, இடையில நிக்காதீங்க” என்பது போன்ற தத்துவ முத்துக்களை கேட்க நேர்ந்தால் சொல்பவர் பெயர் செந்திலாகவும் இருக்கக்கூடும்.

July 11, 2011

காசி விநாயகாவும் நாற்பது வயது பேச்சிலரும்

ஆடி, மார்கழி போன்ற சாமிக்கு உகந்த, விசேஷங்களுக்கு தகாத மாதங்கள் சென்ற பின் ஒரு வல்லிய முகூர்த்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும். அந்த நாளில் நடக்கும் ஏராளமான விசேஷங்களில் ஒன்றுக்குகூட பத்திரிக்கை கூட வராவிட்டால் அவன் வாழ்ந்தது வேஸ்ட் என்றான் சங்கர். அவன் எப்போதுமே இப்படித்தான். வாயைத் திறந்தாலே சுவீப்பிங் ஸ்டேட்மெண்ட் தான்.

அது கூடப் பரவாயில்லை, பொங்கலுக்கு நாலு நாள் லீவு வரும். அதற்குக் கூட குடும்பத்தோடு இருக்க முடியாமல் மேன்ஷனிலேயே தங்கி சாப்பிட மெஸ் மெஸ்ஸாய் அலைபவன்தான் மிகப் பாவம் என்று ஆதரவாயும் இல்லாமல் எதிர்ப்பாயும் இல்லாமல் ஒரு கருத்தை உதிர்த்தான் கணேஷ்.

தொடர்ந்து அரட்டையைத் தொடராமல் அந்தக் கருத்துக்களில் இருந்த உண்மை சதிவிகிதத்தை எடை போட மனம் முயன்றது. உடனே ஞாபகம் வந்த உருவம் காசி விநாயகா மெஸ்ஸில் அடிக்கடி பார்க்கும் நாற்பதுகளில் இருக்கும் பக்கத்து மேன்ஷன்வாசி.

கடையில் துணியெடுத்து உள் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, டார்க்கான கலரில் பாட்டத்தில் ஜிப் வைத்து தைக்கப்பட்ட பேண்ட், பிரவுன் கலர் லெதர் ஸ்ட்ராப் வைத்த டைட்டன் வாட்ச், பாட்டா செருப்பு, பேஸிக் மாடல் நோகியா இதனுடன் கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வார ஜூவியோ, ரிப்போர்ட்டரோ.

தான் இளைஞன்தான் என்று கடைசியாய் நம்பும் காலத்தில் நடைமுறையில் இருக்கும் பேஷனையே, தங்களின் மிச்ச காலத்துக்கும் ஆண்கள் தொடருவார்கள் என்ற சங்கரின் இன்னொரு சுவீப்பிங் ஸ்டேட்மெண்டுக்கு வலுச் சேர்க்கும் அவர் எந்த பொங்கலுக்கும் ஊருக்குச் சென்றதில்லை என்பது செவி வழிச் செய்தி.

வரிசையில் நிற்கும் போது யாருடனும் பேசாமல், சர்வரிடம் கூட எதுவும் கேட்காமல் கர்மவீரராய் நடந்து கொள்ளும் அவர் இப்போது மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

மனதில் பயம் வர ஆரம்பித்தது. இந்த ஆண்டுக்குள்ளாவது திருமணம் முடிய வேண்டும் என்று மனம் இறைஞ்சத் தொடங்கியது. இரண்டரை வருடம் ஆகிவிட்டது பேச்சுத் தொடங்கி.

பிரச்சனையே உங்க ஜாதிதான் சார் என்றார் ஒரு தரகர். உங்களோட உட்பிரிவுல பத்தாயிரம் பேர்கூட இருக்க மாட்டாங்க போலிருக்கே என்றார். சரி, வேற உட்பிரிவு? என்று இழுத்ததற்க்கு

நீங்க வேற முன்னவிட இப்பத்தாங்க அதிகம் ஜாதி, உட்பிரிவுன்னு பாக்குறாங்க, வாய்ப்பேயில்லை என்றார்.

என் உட்பிரிவில், பங்காளி முறை போக வயது, வேலை, வசதி, ஜாதகம் என பல பில்டர்களுக்குப் பின் பத்துப் பெண் தேறுவது கூட கடினம் எனப்பட்டது.

அந்தப் பத்தில் ஒன்றை செலக்ட் செய்வது பிரச்சினையில்லை. ஒன்றுக்காவது நம்மைப் பிடித்திருக்க வேண்டும் அதுதான் பிரச்சினை.


மார்க்கட்டிங் வேலை என்பதால் சில தட்டிப்போயின. சாயங்காலம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும், காலையில ஸ்கூலுக்கு அனுப்பணும். ஊர் ஊரா சுத்துறவங்க சரிப்படமாட்டாங்க என்ற பேச்சையையும் கேட்க நேரிட்டது.

எனக்கு அம்மா இல்லாததால் ஒரு வீட்டில் யோசித்தனர். பிரசவம், பிள்ளை குட்டின்னு நின்னு செய்ய மாமியா இல்லையே என்று ஒருவீட்டில் சொன்னார்களாம். மாமியார் இருந்தாலும் தொல்லைங்கிறாங்க இல்லேன்னாலும் இப்படியா என்று புலம்பி அதை கடக்க வேண்டியிருந்தது.

இதைக் கேட்ட சங்கர்தான் சொன்னான், மூல நட்சத்திர பெண்ணா பார்க்க வேண்டியதுதானே என்று? மருமக மூலம் மாமனார்க்குத்தான் என்று தரகர் அதற்கும் பதில் வைத்திருந்தார்.

மாப்பிள்ளையோட அப்பா கூடவே இருப்பாராமா? என்று சில விசாரணைகள்.

இதை விடக் கொடுமை, மாப்பிள்ளையோட அப்பாவுக்கு தலையில முடியே இல்லையே, இவரும் அப்படி ஆயிடுவாரேன்னு ஒரு பெண் சொன்னதுதான்.

உங்க அம்மாகூட தான் சிண்டெக்ஸ் டேங்க் மாதிரி இருக்கா, நீயும் அப்படித்தான் ஆயிருவ, ஆனாலும் நான் மனசைத் தேத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கலையா என்று நாக்கு வரை வந்த வார்த்தையை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு வந்தேன்.

அவங்கம்மா சைஸ் மட்டுமில்ல கலரும் கூட சிண்டெக்ஸ் டேங்க் மாதிரித்தாண்டா, யானைச் சிவப்பா இருக்குறவல்லாம் கூட ரிஜெக்ட் பண்றாளுகடா என்று டாஸ்மாக்கில் நண்பர்களோடு புலம்பியதுதான் மிச்சம்.நாங்க கிளம்புறோம்டா என்ற சங்கரின் வார்த்தையொலியில், ஓடிய எண்ணங்களை கலைத்து விட்டு நிகழுக்கு வந்தேன். அவர்கள் வந்திருந்தது கணேஷின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக. பேச்சு எங்கெங்கோ ஓடி அந்தப் புள்ளியில் நின்றிருந்தது. கடைசியாக இப்படி நண்பர்களோடு அரட்டை அடித்து பல மாதங்கள் ஆகியிருந்ததும் அது கூட சங்கரின் கல்யாண பார்ட்டிதான் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.

மேன்ஷனின் கீழே வந்து அவர்களை வழியனுப்பி வைத்த போது, கையில் ஜூவியை சுருட்டியபடியே அவர் எதிர்பட்டார்.

ஒரு நட்புப் புன்னகையை அவரை நோக்கி படரவிட்டேன்

July 08, 2011

அலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு

ஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் விந்துவாக இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை என்னும் நிலை இன்று. ஆனால் 95-96 ஆம் ஆண்டுகளில் ஈ மெயில் என்ற ஒன்றைப் பார்ப்பது என்பது அரிவாள் நடிக்காத ஹரி படம் போல அரிதானது. ஆனால் அதை பலருக்கு சாத்தியப்படுத்தியது அலாக்ரிட்டி. அது அடிப்படையில் ஒரு கட்டுமான நிறுவனம். தி நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் இயங்கிவந்த அலாக்ரிட்டி தன் நிறுவன புரமோஷனுக்காக இந்த உத்தியை கையாண்டது.

90களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட மென்பொருள் வேலை வாய்ப்பு புரட்சியின் காரணமாக ஏராளமான பணம் சென்னையின் தெருக்களில் பாய்ந்தோடியது. அதை அள்ளிக்கொள்ள அனுபவ் போன்ற ஆடு,மாடு மற்றும் தேக்கு வளர்ப்பவர்கள், சீட்டுக் கம்பெனிகள், ஓரளவு நியாயமான பெனிஃபிட் பண்டுகள் ஆகியோர் போட்டி போட்டனர். ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் தோன்றியதும் அந்தக்காலத்தில்தான்.
அதில் ஸ்டேண்ட் அவுட் பெர்பார்மராக இருந்த்து அலாக்ரிட்டி நிறுவனம்தான். தி ஹிந்து செய்தித்தாளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஆளெடுப்புக்கு அரைப் பக்க விளம்பரம் தரும். அவைகளுக்கு சமமாக அலாக்ரிட்டியின் விளம்பரமும் வெளிவரும். என் ஆர் ஐ களை கவருவதற்காக அவர்கள் கையாண்ட உத்திதான் ப்ரிண்ட் அவுட் ஈ மெயில் முறை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போனில் பேசுவதும், போஸ்ட் அனுப்புவதும் சிரமமாக/செலவாக இருந்த காலம். எனவே அவர்கள் அப்போது இணையம் மூலம் அலாக்ரிட்டியின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப வேண்டியது. அதில் உறவினர்களின் விலாசமும் இருக்க வேண்டும். மெயில் கிடைத்த உடன் அவர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து விலாசத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் கிடையாது. இதன்மூலம் ஜெனரேட் ஆகும் குட்வில்லுக்காக இதை செய்தார்கள் அவர்கள்.

அவர்களின் பலமே நியாயமான அணுகுமுறைதான். பணத்தை வெள்ளையிலேயே வாங்கினார்கள். நில உரிமையாளர்களுக்கும் வெள்ளையில் தான் செட்டில்மெண்ட். ஆர்க்கிடெக்ட் முதல் அடித்தட்டு தொழிலாளர் வரை நல்ல நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். சம்பளமும் நியாயமாக வழங்கினார்கள். மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு தேவையான அளவு இடம்விட்டு அடுக்குமாடிகள் கட்டினார்கள். நல்ல மூலப் பொருட்களை உபயோகித்தார்கள்.
இதனால் அந்த நேரத்தில் மற்ற போட்டியாளர்களை விட சதுர அடிக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். மூலப் பொருட்கள் எதிர்பாராமல் விலையேறினாலும் சொன்ன தரம் சொன்ன விலை என்பதில் உறுதியாய் இருந்தனர்.

எந்த அரசுத்துறைக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை என்ற முடிவிலும் உறுதியாய் இருந்தார்கள். இதனால் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. மின் இணைப்பு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அப்பிரச்சினை சரியாகும் வரையில் ஒரு வீட்டிற்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள் சில மாதம் வரை.

வீடு விற்று விடுவதோடு நின்று விடாமல் வாரண்டி பீரியட் போல பராமரிப்பையும் அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் தவறாக உபயோகப் படுத்தியதால் கதவின் தாழ்ப்பாள் பழுதானது. அதை சரி செய்ய வந்தவர், வேலையை முடித்து விட்டு ரூபாய் பதினான்கிற்கு பில் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றது போன்ற பல ட்ராக் ரெக்கார்டுகளையும் கொண்டது அலாக்ரிட்டி.
பத்து ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு மீண்டும் வந்தபோது அலாக்ரிட்டி என்ற பெயரே எங்கும் காணப்படவில்லை. என்ன ஆனது என்றும் தெரியவில்லை. பணிச்சூழலில் அதைப் பற்றிய நினைவும் இல்லை. சென்னையில் இருந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு முறை கூட அப்பெயர் காதில் விழவில்லை.

சென்ற வாரம் சென்னைக்கு மீண்டும் வந்திருந்தேன். தி நகர் இந்திப் பிரச்சார சபா தெருவில் சிம்பு வீட்டிற்க்கு எதிரே ஒரு அப்பார்ட்மெண்ட். அதில்தான் நான் வந்த உத்தியோக விஷயமான அதிகாரி இருந்தார். அந்த கேட்டிற்கு சென்ற உடனேயே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். விசால கார் பார்க்கிங், உறுதியான சுவர்கள், நல்ல லிஃப்ட் என. வீட்டின் உள்ளேயும் அப்படியே. வேலை முடிந்ததும் அவரிடம் கேட்டேன். எந்த பில்டர் சார் என்று? அலாக்ரிட்டி என்று பதில் வந்தது.
சந்தோஷத்துடன், இப்போ என்ன பெயரில் சார் இருக்காங்க என்றேன்?. இல்லை இது கட்டி 15 வருஷம் ஆச்சு. அவங்க இப்போ பீல்டில இல்லை. நேர்மையானவங்க சென்னையில தொழில் பண்ண முடியுமா என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

July 05, 2011

தமிழ்சினிமாவில் கம்யூனிஸ்டுகள்

94ஆம் ஆண்டுவாக்கில் ஏதாவது திரைப்படத்திற்க்கு சென்றுவிட்டு வரும் வழியில் அம்மாவின் அறுபதடி கட் அவுட் சரிந்து விழுந்து கோமா நிலைக்கு போன திரைப்பட ஆர்வலன் ஒருவனுக்கு, திடீரென இப்பொழுது நினைவு வந்தான் அவன் எதைப் பார்த்து அதிர்ச்சியடைவான்?

அருகருகே அமர்ந்திருந்தாலும் செல்போனிலேயே பேசிக்கொள்ளும் அளவுக்கு பெருகிவிட்ட செல்போன்களைப் பார்த்தா?, கோ ஆப் டெக்ஸில் வாங்கிய பழைய பச்சை போர்வையை வைத்தே அரசு விழாவை முடிக்கும் எளிமையையா? தாலி பெருக்கி போடும் நிகழ்ச்சி முதல் தாலி அறுக்கும் நிகழ்ச்சி வரை வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளைப் பார்த்தா?

இதையெல்லாம் விட அவனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பது தமிழ்சினிமாவின் தற்போதைய கதாநாயகர்களின் கேரக்டரைசேஷன்கள்தான்.
முன்னெல்லாம் கதாநாயகன் காதலனாக இருப்பான் இல்லை கம்யூனிஸ்டாக இருப்பான். கதாநாயகன் என்றாலே அவன் அமைப்பை,ஆட்சியை, பண்ணையாரை, பணக்காரரை எதிர்க்க வேண்டும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பதை சாம்பாரில்லிட்ட பருப்பாக வைத்திருந்தார்கள்.
இப்போது வரும் படங்களில் நாயகன் நல்ல குணங்களுடன் இருப்பதே அரிதாகி விட்டது. களவாணி, எத்தன் என கல்யாண குணங்களுடனே நாயகர்கள் வலம் வருகிறார்கள்.
எங்கள் தெருவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவருக்கு எம்ஜியாரை மிகவும் பிடிக்கும். கம்யூனிஸ தத்துவங்களை திரையில் கொண்டுவந்தவர் அவர்தான் என்பார். மலைக்கள்ளன், நாடோடி மன்னன் என உதாரணங்களை அடுக்குவார் அவர். பிற்காலத்தில் சிவப்பு மல்லி படம் கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை மையமாக வைத்து வந்தது.
வசந்த பாலன் இயக்கி ஆர்யன் நடித்த ஆல்பம், சுந்தர் சி இயக்கி கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், ஜனநாதன் இயக்கிய ஈ (பசுபதி) போன்ற படங்களில் நாயகர்கள் கம்யூனிஸ்டுகளாக வலம் வந்தார்கள். ஜனநாதனின் பேராண்மையில் கம்யூனிஸத்தை விளக்கும் சில காட்சிகள் இருந்தன.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கருணாநிதி வசனம் எழுதிய இளைஞன் படத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கைவல்யம் போன்ற பெயர்களை எல்லாம் உபயாகப்படுத்தி இருந்தார்கள்.
பல படங்களில் ஹீரோக்கள் மில் அதிபரை எதிர்ப்பார்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களுக்காக. அவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. தனிக்காட்டு ராஜா படத்தில் கூட ரஜினி ஜெயப்பிரகாஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு கம்யூனிசம் போன்ற ஒன்றைப் பேசுவார். அதுகூட காதல் தோல்வியினால் அந்தப் பாதைக்கு அவர் திரும்பியிருப்பார்.

கேரளாவில் “நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” போன்று கம்யூனிஸக் கொள்கைகளின் நிறை குறைகளை அலசிய படங்கள் பல வந்துள்ளன. முரளி போன்ற நடிகர்கள் கம்யூனிஸ்டாக வாழ்ந்தும் உள்ளனர். ஆந்திராவில் கம்யூனிஸ, மாவோயிஸ கருத்துக்களின் அடிப்படையில் பல படங்கள் வந்துள்ளன. அப்படங்களின் ஹீரோயின்கள் கவர்ச்சியாய் இல்லாததால் இங்கே டப் ஆகாமல் அவற்றை நாம் பார்க்க முடியவில்லை.

அய்யா தமிழ் சினிமா உலகினரே, கம்யூனிஸ கொள்கைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் கூட வேண்டாம். நாயகன் கம்யூனிஸ சிந்தனை சற்றேனும் உள்ளவனாக சித்தரித்தும் சில படங்கள் எடுங்கள்.

தாதாக்கள், அடியாட்கள், ஏமாற்றுபவர்கள் பற்றிய படங்களை கூட இவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லி வளரும் தலைமுறையினர் அந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சுயநலம் மிக்கவனாகவே பல ஹீரோக்களின் படங்கள் வருகின்றன. இவர்கள் தவறானவர்கள் என அவர்களிடம் நம்மால் நிறுவ முடியாது. பொது உடமை மனநிலை மிகக் குறைந்து வரும் சமுதாயத்தில் ஹீரோக்களும் அவ்வாறே ஆகிவருவது வருத்தத்துக்குரியது.