Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

July 24, 2014

மானா மூனா கூட்டம்

பழுத்த வேலை நாளான திங்கட் கிழமை காலை 10.30 மணி அளவில் மட்டுமே சலூனுக்குச் சென்று முடி வெட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தக் காலத்தில் பெற்ற தாய் தந்தை இறந்தாலே மொட்டையடிக்க யோசிக்கும் மகன்களுக்கு மத்தியில் அங்காளி பங்காளிகளோடு சேர்ந்து மொட்டையடிக்கும் பாசக்கார உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ட்ராபிக் கான்ஸ்டபிளின் வாடையே இல்லாத சாதாரண முட்டுச்சந்தில் டிவிஎஸ் 50யில் கூட ஹெல்மெட் போட்டு ஓட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இல்லையென்றால், இது உங்களுக்கானதுதான். மானா மூனா கூட்டம் என்று சொந்தபந்தங்களால் அழைக்கப்படுபடும்  கூட்டத்தைப் பற்றிய பதிவுதான் இது.

ம.முத்துச்சாமி என்பவர்தான் இந்த கூட்டத்தின் எள்ளுத்தாத்தா. அவருடன் பிறந்த அண்ணன் தம்பிகள் எல்லோருமே நல்ல முடிவளத்துடன் இருக்க இவருடைய ஜீனில் மட்டும் ஏதோ  மியூட்டேசன் நடந்து இளவயதிலேயே முடிகொட்டத்துவங்கியது. இளவயது என்றால் மிக இளவயதிலேயே. அந்த சாபம் அவருடன் நின்றுவிடாமல், அவர் பெற்ற பிள்ளைகளின்  மூலம் ஐந்து தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

15 வயது ஆகும்போது, உச்சி மண்டையில் உள்ள சுழியில் இருந்து அவர்களுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். கன்னியின் தொப்புளைப் போல சிறு வட்டமாக இருக்கும் அந்த சுழி, நாலா பக்கமும் மெல்ல விரிய ஆரம்பிக்கும். ஒரு தேர்ந்த சமையல்காரர் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் போட்டு, கையை எடுக்காமல், சென்ற வழியிலேயே செல்லாமல், கரண்டியால் அழகான தோசை ஆக்குவாரே அதுபோல முடி சீராக கொட்டிக்கொண்டே போகும்.

இது தரைப்படைத் தாக்குதல் என்றால், முன் நெற்றி வகிடு வழியாக முடி கொட்டிக்கொண்டே செல்லும் விமானப்படைத் தாக்குதலும் உண்டு. 17 வயதில் எல்லாம் இரண்டு வகிடின் வழியாகவும் முடி கொட்டிக்கொண்டே சென்று தோசைவட்டத்துடன் இணையத் துடிக்கும். இரண்டு புருவங்களுக்கு மத்தியின் நேராக நெற்றியில் இருக்கும் முடிக்கொத்து மட்டுமே 21 வயது வரை தாக்குப் பிடிக்கும். அதை மூன்றாகப் பிரித்து,  மூன்று புறமும் பரப்பி முடி இருப்பது போல் டகல்பாஜி வேலை செய்து கொள்வார்கள். அதுவும் 25 வயதுக்கப்புறம் பெப்பே காட்டிவிடும்.

மானா மூனா கூட்ட ஆண்வாரிசுகளுக்கு 25 வயது பூர்த்தி ஆகும் போது, காதின் மேல் ஒரு அங்குலம் மட்டுமே முடி இருக்கும். காதை தாண்டிய உடன், பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் ஆகியோர் இடையழகிகளாக இருந்த இளவயதில் லோஹிப் கட்டும் போது, ஜிலீரென ஒரு அழகு வளைவாக சேலை இறங்கி, தொப்புள் தரிசனம் கிட்டுமே அதே மாதிரி வளைவில் பின் மண்டையின் நடுப்புறத்தை நோக்கி முடி பகீரென இறங்கும். பின் நடுப்புறத்தில் இருந்து மறுபக்க காதை நோக்கி அதே வளைவில் மேலேறும்.

பொம்பளைப் புள்ளைய பெத்து வச்சிருக்கோம், காலா காலத்துல ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துடணும்னு வயத்துல நெருப்பக் கட்டிட்டி இருக்கோம்னு ஒரு காலத்தில் பெற்றோர்கள் சொல்வார்களே. அதுபோல மானாமூனா கூட்டத்தாரும் 22 வயசுக்குள்ள எப்படியாச்சும் மகன்களுக்கு  கல்யாணம் கட்டி வச்சுரணுமே எனத் துடிப்பார்கள்.
ஆனால் ஒரு வகையில் இந்த சாபம் இந்தக்கூட்ட ஆண்வாரிசுகளுக்கு ஒரு மோட்டிவேஷனாக மாறியது. பிளஸ் 2 வில் படிச்சதப் போலவே காலேஜிலும் படிச்சா நம்ம வாழ்க்கை எங்கேயோ போயிரும்ணு பெரியவங்க சொல்லுவாங்க. மானா மூனா கூட்டம் பிளஸ் 2 வரைக்கும் சரியாப் படிக்காட்டியும், காலேஜ்ல நுழைஞ்ச உடனே, வெறித்தனமா படிக்க ஆரம்பிப்பாங்க. 21 வயசுல எப்படியும் ஒரு வேலைக்குப் போயிடணும், தலை சஹாரா ஆகுறதுக்குள்ள, சிம்லாக்கு ஹனிமூன் போயிடணும்னு துடிப்பாய்ங்க.

ஒருத்தனுக்கு சரியாப் படிக்காம 25 வயசுலதான் வேலை கிடச்சது. அவன் பொண்ணு கிடைக்காம அலைஞ்சு, ஒரு பால்வாடி டீச்சருக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டான். அதுல இருந்து உஷாராயிட்டாங்க. இதெல்லாம் எப்படி டீடெயிலாத் தெரியும்னு கேக்குறீங்களா? நானும் அந்தக் கூட்டத்துல ஒருத்தந்தேன்.

ஒரு பெரியப்பா பையனுக்கு 23 வயசாச்சு. தரகர் கேக்குறாரு, தம்பி பொண்ணு சிவப்பா வேணுமான்னு? யானைச் சிகப்பா இருந்தாக்கூட சரிதான். ஏன் யானையா இருந்தா கூடச் சரிதான். ஆனா அவங்க வீட்டில அப்பா, அண்ணன் தம்பி எல்லாம் கரடியாட்டம் இருக்கணும்னான். ஏண்டான்னா?, தலை, உடம்பு பூராம் முடியா இருக்கிற ஜீன் உள்ள குடும்பப் பொண்ணா இருந்தா, என் பிள்ளையாச்சும் வழுக்கை இல்லாம பிறக்கட்டும்ணான். கரடி மாதிரி இருக்கிற குடும்பம் இல்ல, கரடியவே நீ கட்டுனாலும் பையன் சொட்டையாத்தான் போவான்னு தரகர் பார்வை சொல்லாம சொல்லுச்சு.

ஆனாலும் இந்தப் பொண்ணுங்களுக்கு நுண்ணறிவு அதிகம்தான். பொண்ணு பார்க்கப்போனா, கூட வர்ற ஆளுகள வச்சு, பையன் முக அமைப்ப வச்சு இவன் சீக்கிரம் சொட்டையாயிருவான்னு ரிஜக்ட் பண்ணிடுறாங்க. அவ்வளவு ஏன்? காலேஜ் படிக்கும் போது, பாவமேன்னு ஒரு லுக்கு கூட விடுறதுல்ல. அதுமட்டுமில்லாம “ஆகாயச் சூரியனை உச்சந்தலையில் சூடியவன்னு” நக்கல் பாட்டு வேற.

ஆனா இந்தப் பசங்களுக்கு அவ்வளவு பத்தாது. சில வருஷத்துக்கு முன்னாடி எங்க தெருவுக்கு ஒரு பேங்க் மேனேஜர் குடி வந்தாரு. அவங்க நிச்சயம் சிண்டெக்ஸ் கம்பெனியோட சொந்தமாவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கணும். மேனேஜர் சம்சாரமும், அவங்களோட ரெண்டு மூத்த பொண்ணுங்களும் அப்படி ஒரு சைஸூ. மூணாவது பொண்ணு மட்டும் ஒல்லியா இருக்கும். அந்த ஒல்லிக்கு நெறையா கில்லிங்க, ஜல்லிங்க புரபோஸ் பண்ணினாங்க. அவங்க குடிவந்த ஒரு மாசத்துல லோக்கல் கிரிக்கெட் டோர்ணமெண்ட் பைனல். ரெண்டு மணிக்கு மேட்ச். ரோலர்லாம் போட்டு பிட்ச்ச ஒரு மாதிரி செட் பண்ணி இருந்தாங்க. ஒரு மணி வாக்குல லேசான தூறல். விழாக்கமிட்டி பரபரபாயிட்டாங்க.

ஏதாச்சும் லாரி ஷெட்டுல போயி, தார்ப்பாய் கிடைச்சா தூக்கிட்டு வாங்கடா, பிட்ச கவர் பண்ணனும்னு ஆர்டர் போடுறாய்ங்க. அப்ப எங்க தெருக்காரன்,  பாங்க் மேனெஜர் வீட்டுல போயி  நாலு நைட்டி வாங்கிட்டு வாங்கடா, மொத்த கிரவுண்டையுமே கவர் பண்ணிடலாம்னான். ஆனாலும் அந்த ஒல்லி பொண்ணு மேல யாருக்கும் கிரேஸ் போகலை.
ஆனா எங்களுக்குத் தெரியும்டா வம்சக்கூறு. நாலு வருசத்துல அந்த ஒல்லிக்கு பாட்டியாலா பேண்டே லெக்கின்ஸ் ஆயிடும்னு மானா மூனா கூட்டம் மட்டும் சிரிச்சுக்கிட்டோம்.

ஆனா எங்க கூட்டத்தப் பார்த்து ஊர் சிரிக்கிறது எங்களுக்கு மரத்துப்போச்சு. பின்னாடி அசிங்கமா கசகசன்னு தொங்குற முடிய வெட்டணும்னா கூட யாருமே இல்லாத நேரத்துல சலூனுக்குப் போக வேண்டியிருக்கு.

இப்படித்தான் எங நெருங்கிய சொந்தக்காரர் கல்யாணத்துல, மண்டப மானேஜர், இந்த தலை பால்டா இருக்குமே அவர்கிட்டதாங்க ஸ்டோர்  ரூம் சாவிய குடுத்தேன் என்று சொல்ல, எங்கள் மாமா “நாமக்கல் முட்டையில கூட ஒரு முட்டையை தனியா கண்டுபிடிச்சிடலாம், இந்த சொட்டைங்க கூட்டத்துல கண்டுபிடிக்கிறது கஷ்டம்னு” பஞ்ச் அடிச்சாரு.
மொதல்ல இவிங்க தலைல எருவா மேட்டின தேச்சு பார்க்கணும்டா, முடி வளர்ந்திருச்சுன்னா கந்து வட்டிக்கு கடன் வாங்கி கூட அதை வாங்கலாம்டா என வியாக்கியானம் செய்யும் நண்பர்கள் வேறு.

பொதுவா மத்த வீடுகள்ல இருக்குற சண்டையோட சேர்த்து எங்க வீடுகள்ல இன்னொரு சண்டையும் நடக்கும். வழுக்கைய மறைச்சு ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு மருமகள்கள்ளாம் குமுறுவாங்க.  என் மனைவி கூட இது போர்ஜரி கேஸில் வருமா என அவர்கள் வீட்டாருடன் சேர்ந்து சில ஆண்டுகள் ஆலோசனை நடத்திவந்தார்.  கையில் காலில் விழுந்து, கெஞ்சிக் கதறி என்னை விட சிறப்பான அடிமை உனக்கு கிடைக்கமாட்டான் என்பதை புரிய வைத்து காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் கூட வெளியிடங்களுக்குச் கூட்டிச்செல்ல வேண்டுமென்றால், விக் வைச்சுக்கிட்டு வாங்க என்கிறார்.

என்னோட இன்னொரு சித்தப்பா பெரிய உஷார் பார்ட்டி. தன் மகனுக்கு இது மாதிரி நேர்ந்திடக்கூடாதுன்னு ஒரு ட்ரிக் பண்ணுனார். அவன் பிறந்ததுல இருந்து, கோயில் கோயிலா போயி மொட்டை அடிக்க ஆரம்பிச்சார். ஒண்ணு விட்ட பாட்டிக்கு ஒத்த தலைவலின்னாக் கூட, தன் மகனுக்கு மொட்டை அடிப்பதாய் நேர்ந்து கொள்வார். தினமும் அவனுக்கு நெல்லிக்காய் ஜூஸ். நல்ல சுத்தமான கொழும்பு தேங்காய் எண்ணெய் வாங்கி, அதில் முடி வளர உதவும் பல மூலிகைகளை காய்ச்சி ஊற்றி, அந்த எண்ணையை தினமும் அவன் தலையில் தேய்த்து வந்தார். அந்த எண்ணெயின் வீரியத்தால் அந்த பாட்டிலுக்கு கூட முடி முளைத்ததாக கேள்வி.

அவனுக்கு 15 வயது ஆனபோது சித்தப்பா வீடு கட்டத்தொடங்கி இருந்தார். பால் காய்ச்சும்வரை மொட்டை அடிக்கக்கூடாது என்று ஒரு சாஸ்திரத்தைக் கேள்விப்பட்டு அவனுக்கு தற்காலிகமாக மொட்டை அடிப்பதை நிறுத்தியிருந்தார். இரண்டு மாதத்தில் அவனுக்கு முடி கருகருவென வளர்ந்து வெயிலுக்கு அரிக்கத் தொடங்கியது. அதனால் முதன் முறையாக  அவன் சலூனுக்கு போகவேண்டிய நிலை ஏற்பட்டது.  
ஒரு வழியாக பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்தார். பையனும் பத்தாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக தேறியிருந்தான். ரெட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்தவர், மானா மூனா கூட்டத்தின் முக்கிய சம்பிரதாயத்தை மறந்து விட்டார். எல்லோருமே பத்தாம் வகுப்பு  முடிக்கும் போது, எங்களுக்கும் ஒரு காலத்தில் முடி இருந்தது என்பதற்கு ஆதாரமாக ஸ்டியோவுக்குச் சென்று போட்டோ எடுத்து வைத்துக் கொள்வோம். அதைச் செய்யாமல் விட்டு விட்டார்.

சில நாட்கள் கழித்து, மாடியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருக்கும் போது, அவர் பையன் சைக்கிளில் வந்து வாசலில் இறங்குவதைப் பார்த்தேன். அவன் உச்சந்தலையில் மானா மூனா கூட்டத்தின் உறுப்பினர் படிவம் பிரசுரமாகத் தொடங்கி இருந்தது.



November 30, 2012

சில அருமையான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்ஸ்

சில அருமையான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்ஸ்

அனுஷ்காய நம

இந்த அப்ளிகேஷன் தீவிர அனுஷ்கா வெறியரால் உருவாக்கப்பட்ட ஒன்று. நம்முடைய போட்டோ ஒன்றை இதில் அப்லோடு செய்துவிட்டால் போதும். நம் மொபைலில் அனுஷ்காவின் எந்தப் பாடலைப் பார்த்தாலும், ஹீரோவின் முகத்திற்குப் பதிலாக நம் முகத்தை அதில் சூப்பர் இம்போஸ் செய்து நம்மை கிளுகிளுக்க வைக்கும்

தங்கமணி டங் கட்

நம் மனைவியின் நம்பரை இந்த அப்ளிகேஷனில் கொடுத்து விட்டால் போது. அவர் எப்போது நமக்கு  போன் பண்ணினாலும் அம்சமான பெண் குரலில்

“நீங்க நல்லவரு,  வல்லவரு”
“உங்களை கல்யாணம் பண்ணினதால தான் நான் நல்லாயிருக்கேன்”
”உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்”

என பேசி நமக்கு வரப்போகும் பிபியை குறைக்கும்

பேலன்ஸ் பிளாஸ்ட்

இந்த அப்ளிகேஷனில் நம்முடைய பேங்கில் இருந்து வரும் பணம் எடுத்த அலெர்டுகளின் நம்பரை கொடுத்துவிடவேண்டும்.

நாம் அதிகம் எடுத்தால், கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால்

உடனே

“ஓட்டை டவுசரைப் போட்டுக்கிட்டு, இய்யப் பாத்திரத்துல கஞ்சி குடிச்ச உனக்கு இதெல்லாம் கேட்குதா?”

என வாய்ஸ் மெசெஜ் வந்து நம்மை குட்டும்

பிளஸ்ஸோமேனியா

இந்த அப்ளிகேசனில் நம் நண்பர்களின் கூகுள் பிளஸ், பேஸ்புக், ட்விட்டர், பிளாக் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் போதும்,

அவர்கள் பிளஸ் விட்டால் ஆட்டோமேட்டிக்காக +1 போட்டுவிடும்

பேஸ்புக்கில் லைக் செய்துவிடும்

ட்விட்டரில் ரீடிவிட் செய்துவிடும்

டெம்பிளேட் கமெண்டோ

இதில் ஃபிரண்ட்ஸ் பகுதியில் நம் நண்பர்களின் ஐடிக்களையும், எனிமீஸ் பகுதியில் பகைவர்களில் ஐடியையும், காமன் பகுதியில் மற்றவர்களின் ஐடியையும் கொடுத்துவிட்டால்

சூப்பர், அட்டகாசம்

மொக்கை, குப்பை

:-))

போன்ற கமெண்டுகளை முறையே போட்டு நம்மை லைவ்வாக வைத்திருக்கும்

தீனி தின்னி

இந்த அப்ளிகேஷன் +போன்றோரின் அருமுயற்சியால் உருவானது. இதில் உலகில் உள்ள எல்லா சாப்பாட்டு கடைகளின் விபரமும் துல்லியமாக இருக்கும். நம்முடைய மொபைலின் ஜிபிஎஸ்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள், மற்றும் நம் பேங்க் பேலன்ஸ், நேரம் இவற்றைப் பொருத்து அருகில் உள்ள ஆப்டான ஹோட்டல், அங்கு ஆர்டர் செய்யவேண்டிய அயிட்டம் இவற்றைக் கொடுக்கும்.

July 12, 2009

மோகன்லால் பிரியதர்ஷன் ஐபிஎல் டீம் ஆலோசனை

ஐபிஎல், டீம்களின் எண்ணிக்கையை உயர்த்தப் போவதாக வந்த செய்திகளை அடுத்து, மோகன்லாலும் பிரியதர்ஷனும் இணைந்து கேரளா டீமை ஏலத்தில் எடுக்கப் போவதாக செய்திகள்.

அவர்கள் தங்கள் மானேஜர்களுடனும் கிரிக்கெட் வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்த படகு வீட்டில் கூடுகிறார்கள்.

லால் : டீம் பேரு நம்ம பாரம்பரியத்தைக் காட்டுறமாதிரி இருக்கணும்

தர்ஷன் : சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் மகராஜாக்களை நினைவு படுத்துற மாதிரி கேரளா மகராஜ்ஸ்ன்னு பேர் வைக்கலாமா?

வல்லுநர் : சார், ஏற்கனவே ராயல்ஸ்,கிங்ஸ்ன்னு நாலு டீம் இருக்கு

லால் : அப்போ கேரளா சிப்ஸ் லெவன், கேரளா நேந்திரம்ஸ், கேரளா புட்டூஸ்னு ...

வல்லுநர் : சார், நாம என்ன ஹோட்டலா ஆரம்பிக்கப் போறோம்?


மானே 1 : சேட்டா, நம்ம டீமுக்கு கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு பேர் வைப்போம். நாம தோத்தாலும் பத்திரிக்கை, டிவி எல்லாம் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு சொல்லுவாங்க.

லால் : எந்தா, ஈ ஆளுக்கு ரெண்டு இன்கிரிமெண்ட் சேர்த்துப்போடு

மானே 2 : சென்னை டீமுக்கு சிவமணின்னு ஒருத்தர் எங்க போனாலும் டிரம்ஸ் வாசிச்சு சப்போர்ட் பண்ணுறாரு.

தர்ஷன் : நாம பதினெட்டு பேரை பட்டு வேட்டி, துண்டு, கொண்டையோட செண்டை மேளம் வாசிக்க வச்சுருவோம். ஸ்டேடியமே அதிர்ந்துடும்.

மானே 1 : சியர்ஸ் லீடர்னு எல்லா டீமிலயும் டான்ஸர்ஸ் வச்சுருக்காங்க

லால் : ஆழப்புழா போட் ரேசில, ஓட்டுட்டி வர்றவங்கள துண்டைச் சுத்தி சியர்ஸ் பண்ணுவாங்களே, அந்த ஆளுங்கள நாம இறக்கிடுவோம்.

மானே 2 : அப்படியே கடலினக்கப் போறேரே கரையினக்கப் போறோரே பாட்டை ரீமிக்ஸ் பண்ணி

பேட் பிடிக்கப் போறோரே

பந்து வீசப் போறோரே

போய் வரும் போது என்ன கொண்டு வரும்?

போர் சிக்ஸ் அடிச்சு வரும்

விக்கட் எல்லாம் கொண்டு வரும்னு

தீம் சாங்கும் ரெடி பண்ணீருவோம்.

மானே 1 : பெங்களூருக்கு கத்ரினா மாதிரி நமக்கு ஒரு பிராண்ட் அம்பாசட்டர் வேணுமே

லால் : மத்த ஸ்டேட்டெல்லாம் அம்பாசடர் கடன் வாங்கணும். நம்ம ஸ்டேட்ல தடுக்கி விழுந்தா தேவதைகள். மீரா ஜாஸ்மின்ல ஆரம்பிச்சு நயன்,அசின், பாவனான்னு. யாரை செலக்ட் பண்ணுறதுகிறதுதான் கஷ்டம்.
வல்லுநர் : சார், நாம என்ன படமா எடுக்கப் போறோம்? டைட்டில், மியூசிக், ஹீரோயின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க. எந்த எந்த பிளேயர எடுக்கிறது? அவங்களுக்கு என்ன பட்ஜெட்? அப்படிங்கிறத சொல்லுங்க சார்.

லால் : இங்க எப்பவுமே லோ பட்ஜெட்தான்.

வல்லுநர் : பாரின் பிளேயர்ஸ்ஸ எடுக்கணும்னா கோடிக் கணக்குல செலவாகுமே?

தர்ஷன் : நாங்க, மத்த இடங்கள்ள கோடிக் கணக்குல வாங்குறவங்களுக்கு லட்சத்துலதான் சம்பளம் கொடுக்குறது வழக்கம்.

லால் : ஏன் பாரின் பிளேயர்ஸ்க்கு போறீங்க. இந்தியன் பிளேயர்ஸ்?

வல்லுநர் : ஏழுபேர் டீமில வேணும் அது இதுன்னு பல ரூல்ஸ் இருக்கிறதால இந்தியன் பிளேயர்ஸ்க்கு தான் ரேட் இன்னும் அதிகம். வாசிம் ஜாஃபர்னு ஒருத்தர், அவரு ஒன் டேக்கே லாயக்கிலேன்னாங்க. அவரவே எவ்வளவு காசு கொடுத்து எடுத்திருக்காங்கன்னு தெரியுமா?

லால் : கேரளா பிளேயர் யாரு இருக்குறாங்க?


வல்லுநர் : ஸ்ரீசாந்த்துன்னு ஒருத்தர் இருக்காரு. அவரயும் பஞ்சாப் டீமில பிரீத்தி எடுத்திருக்காங்க.

தர்ஷன் : பிரீத்தி கிட்ட நான் பேசுறேன். எவ்வளவுக்கு அவர எடுத்தாங்களோ அத கொடுத்து அவர வாங்கிடுவோம். மானேஜர் ஒரு பேக்ஸ் அனுப்பிடுங்க.

வல்லுநர் : அப்போ மீத ஆட்களெல்லாம்?

லால் : இந்த ஸ்டேட்ல கிரிக்கெட் தெரிங்சவங்களே இல்லையா?

மானே 1 : சேட்டா, ஸ்டார் கிரிக்கெட் நடக்கும்போது கூட தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் தான் நடக்கும். அந்த அளவுக்கு நம்ம ஸ்டேட் கிரிக்கெட்ல வீக்.

தர்ஷன் : கவலைய விடுங்க. கலாபவன்னு ஆரம்பிச்சு நடிக்க கத்துக் கொடுக்குறமாதிரி கிரிக்கெட் பவன்னு ஒன்னு ஆரம்பிச்சுக்கிடலாம்.

வல்லுநர் : அப்படி புது ஆளுகளா சேர்த்துக்கிட்டா நல்ல கோச் இருந்தாத்தான் வின் பண்ண முடியும்.

லால் : அது எப்படி?

வல்லுநர் : உங்க பாணிலயே சொல்லுறேன். ஸ்டார் இல்லாம, செலவு பண்ணாம ஸ்க்ரிப்ட வச்சு ஜெயிக்கிறீங்கள்ளயா? அதுமாதிரி யாரு எப்போ இறங்கணும், யாருக்கு யாரு பவுல் பண்ணனும், எங்கே பீல்டிங் நிக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதுறவங்க தான் கோச். அதுமாதிரி நல்ல பாரின் கோச் வேணும்.

தர்ஷன் : ஓகே. கொஞ்சம் விலை மலிவான கோச்சா பாருங்க.

வல்லுநர் : ஏற்கனவே நல்ல கோச்சை எல்லாம் மத்தவங்க வளைச்சுப் போட்டுட்டாங்க. ஜான் புக்கானன், கிரேக் சேப்பல்னு ரெண்டு பேர் இருக்காங்க. ஆனா அவங்க எல்லாம் பயங்கரமா பாலிடிக்ஸ் பண்ணுறவங்க.

லால் : சார், ஒண்ணு தெரியுமா, எல்லா நாட்டுக்கான தூதர்களும் எங்க ஆளுங்க தான். ஏன் ஐநா சபை பிரதிநிதி வரைக்கும் எங்க ஆளுங்கதான்.

மானே 2 : துபாய்ல ஆரம்பிச்சு தமிழ்நாடு வரைக்கும் எங்க ஆளுக பண்ற அரசியல்ல அங்க இருக்குறவங்களே ஆடிப்போயிருக்காங்க.
லால் : அதனால தான் சொல்லுறோம். ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது.

வல்லுநர் : சரி, அவரவே போட்டுடுவோம்.

மானே 2 : சார், பிரீத்திகிட்ட இருந்து பதில் பேக்ஸ் வந்திருக்கு.
நம்ம கண்டிஷனுக்கு அவங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.


தர்ஷன் : ஏன் இன்னும் அதிகம் பணம் எதிர்பார்க்குறாங்களா?

மானே 2 : அதில்லை சார். எவ்வளவுக்கு வாங்கினாங்களோ, அதவிட பத்து மடங்கு அதிகம் பணம் அவங்க தர்றாங்களாம். உடனே அவர எடுத்துக்கங்கண்ணு சொல்றாங்க சார்.


அனைவரும் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

July 08, 2009

அஜீத்,விஜய்,விஷால்,சிம்பு திடீர் சந்திப்பு

2009ன் முதல் ஆறு மாதங்களில் கமர்சியல் படங்களில் அயன் மட்டுமே ஹிட். மற்றபடி கதை,நடிப்பு உள்ள படங்களே வெற்றி என்ற ரிப்போர்ட்டைக் கண்டு குமுறும் பார்முலா நாயகர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.

அஜீத் : அயன்ல சூர்யா தப்பிச்சுட்டாரு. எங்கப்பா இந்த தனுஷ், ஜெயம் ரவி எல்லாம்?

சிம்பு : அவங்களுக்கு அவங்க அண்ணங்க இருக்காங்க. எப்படியாச்சும் தேத்தி விட்டுடுவாங்க.

விஷால் : எனக்கும் ஒரு அண்ணன் இருக்கானே?.

அஜீத் : சிம்புக்கும் விஜய்க்கும் அவங்க அப்பா காமெடி பீஸு, உனக்கு அண்ணன்.

விஷால் : என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க.

சிம்பு : தலை சொல்லுறது சரிதான். இவ்வளோ செலவழிச்சு உன்னைய வச்சு படமெடுக்குறதும் இல்லாம நீ டைரக்டர ஆட்டி வைக்கிறத பொறுத்துப் போறான்ல.

விஜய் : அட அத விடுங்கப்பா. படம்தான் ஓடமாட்டெங்குதுன்னா நமக்கு பப்ளிசிட்டியும் கிடைக்க மாட்டேங்குதே. ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கிறாரு விக்ரம், அவர் பாடுறாரு, கெட்டப் போடுறாருன்னு ஒரு கவர் ஸ்டோரி. பிரபுதேவா கூட நயன வச்சு பிலிம் காட்டுறாரு.

இங்க ஒருத்தன் கட்சி ஆரம்பிக்கிறேன்னு கத்திக்கிட்டு இருக்கேன்.
எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்.

சிம்பு : எந்திரன் பட லொக்கேஷனுக்கு அஸிஸ்டென்ட் டைரெக்டர் போறதுக்குள்ள மீடியா ஆளுங்க போயி உட்கார்ந்த்துக்கிறாங்க. சன் டிவி, எந்திரன் ரிலீஸாகும் போது விளம்பரம் போட ஒரு தனி சானலே ஓப்பன் பண்ணப் போறதா பேசிக்கிறாங்க.

விஷால் : கமல் கூட ஏதோ திரைக்கதை பட்டறை அது இதுன்னு லைம்லைட்லயே இருக்காரு.

அஜீத் : அது என்னப்பா திரைக்கதை?

விஜய் : உனக்கு கதைன்னா என்னன்னே தெரியாது. திரைக்கதை பத்தியெல்லாம் நீ ஏம்பா கவலைப் படுறே?

சிம்பு : இந்த பாருங்க, எங்க தலைக்கு கதை கேட்கத் தெரியாதுதான். ஆனா நடிப்புல நடந்து, திரும்பி எப்படியாவது சமாளிச்சுருவாரு. ஆனா உங்களுக்கு நடிப்பே சுத்தமா வரல்லியே.

விஜய் : நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்.

விஷால் : ஏற்கனவே நெலமை சரியில்ல. நல்ல கதை, நடிப்பு இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதப்பத்தி பேசுங்க.

விஜய் : ஆமா ஆமா. டிரெண்ட் இப்படியே இருந்துச்சுன்னா நாம பேக் அப் ஆயிடுவோம்.

சிம்பு : போட்டிக்கு சசிகுமார் வேற வந்துட்டாரு. ஹேட்ரிக் அடிச்சிட்டாரு. அவரை எப்படியாவது மட்டயாக்கணுமே.

விஷால் : அது விஜயோட அப்பாவாலதான் முடியும்.

சிம்பு : எப்படி?

விஷால் : நரேன், நிதின் சத்யா ஹிட் ஆனவுடனே அவங்களை புக் பண்ணி மொக்கையாக்குனாரே? அதுமாதிரி சசியையும் வச்சு ஒரு படம் எஸ் ஏ சி எடுத்தா, அந்தாளு காலி.

அஜீத் : சசி மதுரைக்காரரு. சும்ரமணியபுரம் ஆட்டோ சீன் ஞாபகம் இருக்கில்ல?

விஜய் : நமக்குள்ள ஏன்? மக்கள் நல்ல படம் பார்க்குறத நிறுத்தணும், அதுக்கு என்ன வழின்னு பாருங்க

சிம்பு : நல்ல படமா வரும்போது ஏவிஎம் ஒரு மசாலா படத்தக் குடுத்து கெடுக்குமே, அது மாதிரி நாமளும் செய்ய வேண்டியதுதான்.

விஷால் : நாம எடுத்த வில்லு,ஏகன்,தோரணை எல்லாம் மசாலா தானே?

சிம்பு : அதெல்லாம் சாதா மசாலா. ஸ்பெசல் மசாலாவுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.

விஜய் : என்ன?

சிம்பு : இந்தியாவிலேயே பெரிய மசாலா ஹிட்டுன்னா அது ஷோலே தான். அதை நாம ரீமேக் பண்ணுவோம்.

விஷால் : சூப்பர். நான் தான் இந்த குரூப்லயே ஹைட்டு. அமிதாப் கேரக்டர் எனக்கு.

சிம்பு : எனக்கு தர்மேந்திரா கேரக்டர். ஹேமமாலினியா நயன்தாரா.

அஜீத் : எனக்கு?

சிம்பு : உங்களுக்கு டான் கேரக்டர்தான் கிளிக்காகுது. அதனால கப்பர் சிங் நீங்கதான்.

விஜய் : அப்போ நான்?

சிம்பு : சஞ்சய் கபூர் கேரக்டர் நீங்க எடுத்துக்குங்க.

விஜய் : அய்யோ, அந்த கேரக்டருக்கு நடிப்பு தேவைப்படுமே. அதுபோக கையில்லாம நடிச்சா என் இமேஜ் என்னாகும்?

சிம்பு : கையில்லாட்டி என்ன? கால் இருக்குல்ல? வழக்கம் போல ரெண்டு குத்துப்பாட்டுக்கு ஆடி தப்பிச்சுக்குங்க.

விஜய் : ஏன் இவ்வளோ பேசுறயே நீ நடிக்க வேண்டியதுதான அந்த கேரக்டர்ல?

சிம்பு : எனக்கு தெரிஞ்சதே விரல் வித்தைதான். கையில்லாத கேரக்டர்ல நான் எப்படி நடிக்கிறது?

அஜீத் : வழக்கம் போல தப்பா கதை கேட்டு நான் மோசம் போக மாட்டேன். ஏன் நான் தர்மேந்திரா கேரக்டர் பண்ணுறனே. விஜய் வேணா கப்பர் சிங் கேரக்டர் பண்ணட்டும்

விஷால் : கப்பக் கிழங்கு சிப்ஸ் மாதிரி ஒல்லியா இருக்காரு. இவர எப்படி?

சிம்பு : சரிங்க சமாதானமாப் போவோம். கப்பர் சிங்கா பிரகாஷ் ராஜ், சஞ்சய் கபூர் கேரக்டருக்கு கிஷோர், ஹேமமாலினியா நயன்தாரா, ஜெயாபாதுரி கேரக்டர்க்கு அசின்.

விஷால் : அப்பக்கூட நயன விடமாட்டேங்கிறானே. பிரபுதேவாவுக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட
வேண்டியதுதான்.

விஜய் : அதெல்லாம் சரி. மெயின் கேரக்டர்ஸ்?

சிம்பு : அங்க தான் நிக்குறான் சிம்பு. ஒரே நேரத்துல ரெண்டு ஷோலே எடுக்குறோம். ஒன்னுல நானும் விஷாலும் மெயின் கேரக்டர்ஸ். இன்னொன்னுல நீங்களூம் அஜீத்தும்.

அஜீத் : ஓகே நான் தர்மேந்திரா, விஜய் அமிதாப். சரி எங்க ஷோலேக்கு எங்களுக்கு ஏத்த ஆளுகள செலெக்ட் பண்ணிக்கிறோம்.

விஜய் : அருமையான ஐடியா. ரெண்டு படம் வருதுன்னா தமிழ்நாடே பரபரப்பாகும். இது மட்டும் ஹிட் ஆச்சு. ரியாலிட்டி படம் எடுக்குறேன்னு எவனும் இனி வர மாட்டான்.

விஷால் : நம்மனால தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ கொடுமைகள அனுபவிச்சுட்டாங்க. அதுல இதுவும் சேரட்டும். ஷூட்டிங்க ஆரம்பிச்சுடுவோம்.

June 25, 2009

ராகுல் காந்தியுடன் விஜய், சிம்பு சந்திப்பு

தனித்து நின்றால் மற்ற மாநிலங்களில் கூட ஒன்றிரணடு எம்பி சீட் கிடைக்கும். தமிழ்நாட்டில் தனியாக
நின்றால் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியாது என்ற வந்த உளவுத்துறை தகவலை அடுத்து
குலாம் நபி ஆஸாத்தை அழைக்கிறார் ராகுல்.

ராகுல் : கியா ஆஸாத்ஜி? தமிழ்நாட்டில கட்சி இவ்வளோ மோசமா இருக்கே? அங்க இருக்குற
தலைவர்களை உடனே வரச் சொல்லுங்க. நாளைக்கு இங்க மீட்டிங்.

ஆசாத் : ஜி, இந்த ரூம்ல எப்படி 10000 பேரை உட்கார வைக்குறது?

ராகுல் : ஓ மறந்துட்டேன். வழக்கம் போல சீட்டு குலுக்கிப் போட்டு நாலு பேரைக் கூப்பிடுங்க.


தங்கபாலு, வசந்த்குமார், சுதர்சனம், அன்பரசு ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள். ராகுல், சச்சின் பைலட்,
ஜோதிராதித்யா சிந்தியா, ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா சகிதம் ஆலோசனையை துவங்குகிறார்.

ராகுல் : என்ன நாலு பேருமே வயசான ஆளுகளா இருக்காங்க?

ஆசாத் : 4000 பேர கூப்பிட்டிருந்தாலும் வயசான ஆளுகதான் வருவாங்க.

ராகுல் : கட்சிய வளர்க்க ஏதாச்சும் ஐடியா கொடுங்க சுதர்சனம்ஜி.

சுதர் : நம்ம கட்சிக்கு ஒரு டிவி சேனல் வேணும்.

பாலு : ஏன் மெகா டிவி இருக்கே?

வசந்த் : ஏன் வசந்த டிவி இருக்கே?

அன்பு : உங்க நெஞ்சில கைவச்சு சொல்லுங்க. உங்க வீட்டில யாராச்சும் இதைப் பாக்குறாங்களா?

பைலட் : தமிழ்நாட்டில் டிவி செய்திகள் மீதான நம்பகத்தன்மை குறைஞ்சுக்கிட்டு வர்றதா சர்மா கமிட்டி
அறிக்கை சொல்லுது.

சுதர் : சரி விடுங்க. ஒரு பேப்பராவது ஆரம்பிங்க.

பாலு : முதல் பக்கத்தில எங்க கோஷ்டி நியூஸ்தான் வரணும்.

அன்பு : எந்த பக்கத்தில வேணும்னாலும் வரட்டும். ஆனா 2 பக்கம் எங்களுக்கு ஒதுக்கணும்.

சிந்தியா : பேப்பார் படிக்கிறவங்க யாரும் தமிழ்நாட்டில ஓட்டுப்போடுறதில்லன்னே வர்மா கமிட்டி
அறிக்கை சொல்லுது.

பிரசாதா : தமிழ்நாட்டுல சினிமா ஸ்டார் சொன்னாத்தான் ஓட்டுப்போடுவாங்கண்ணு

அன்பு : ஏதாச்சும் குர்மா கமிட்டி அறிக்கை சொல்லுதா?

ராகுல் : கூல் கூல். சினிமா ஆளுங்கள நம்ம கட்சியில சேர்க்கப் பாருங்க.

வசந்த் : எம் பையன் கூட ரெண்டு படத்துல நடிச்சிருக்கான்.

பாலு : அப்போ அவன நீங்க இன்னும் கட்சியில சேர்க்கலை. இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்.

ஆஸாத் : உங்க சண்டையை விடுங்கய்யா. பாப்புலர் ஹீரோ யாராச்சும் இருந்தா சொல்லுங்கய்யா.

அன்பு : விஜய்னு ஒருத்தர் அரசியலுக்கு வரப்போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.

பாலு : ஏன் சிம்புன்னு கூட ஒரு ஆளு இருக்காரே?


ராகுல் : கூப்பிட்டு வாங்க. பேசுவோம்.


விஜய் : பய்யாண்னா நமஸ்தேபய்யண்ணா

ராகுல் : ??????

அன்பு : அவர் எப்பவுமே அண்ணா வனக்கங்ணா ந்னு தான் ஆரம்பிப்பார். நீங்க இந்தில அதான்.

ராகுல் : உங்களுக்கு அரசியல் தெரியுமா?

விஜய் : பய்யாண்னா, நடிப்பே தெரியாம நான் நடிகன் ஆகலியா ?

ராகுல் : தமிழ்நாட்டில எத்தனை தொகுதி இருக்குன்னு தெரியுமா?

விஜய் : அந்தத் தொகுதி, இந்தத்தொகுதியில்ல ஆல் தொகுதியிலயும் அய்யா கில்லி

ராகுல் : பிரச்சாரம் எப்படி பண்ணுவீங்க?

விஜய் : ஆந்திராவில சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ஜுனியர் என் டி ஆர் போன தேர்தல்ல பண்ண
பிரச்சாரத்தையெல்லாம் எங்கப்பா வீடியோ எடுத்து வச்சுருக்குறார். அதை ரீமேக் பண்ணி
பேசிடுவேன்.

ராகுல் : சரி ஆட்சியைப் பத்தி உங்க கொள்கை என்ன?

விஜய் : தயாரிப்பாளர், வினியோகஸ்தர்லாம் நஷ்டம் ஆகக் கூடாது. படம் பார்க்குறவன்
மட்டும் தான் கஷ்டப்படணும்னு சினிமால நான் ஒரு கொள்கை வச்சிருக்கேன். அதுபோல
தொழிலதிபர், அமைச்சர் எல்லாம் நல்லாயிருக்கணும், ஓட்டுப் போடுற மக்கள் மட்டும் கஷ்டப்
படணும்கிறது என்னோட அரசியல் கொள்கை.

அன்பு : நம்ம கட்சிக் கொள்கையை ஒட்டி இருக்கே. சேர்த்துக்கிடுவோம் ராகுல்ஜி.

அப்போது கறுப்புப் பூனை படைகளை ஏமாற்றிவிட்டு எஸ் ஏ சி உள்ளே புகுகிறார்.

எஸ் ஏ சி : என் பையன் தான் தமிழ்நாட்டில சூப்பர் ஸ்டார். யூத் எல்லாம் அவன் பாக்கெட்ல. அவன்
தான் வருங்கால பி.எம். நான் தான் ஜனாதிபதி. நீங்கதான் புள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறை
அமைச்சர்.

ராகுல் : மிஸ்டர் விஜய், உங்களை சேர்த்துக்கிடலாம்னு இருந்தேன். ஆனா உங்க அப்பா பேசுற
பேச்சுக்கு இனிமே விஜய்ங்குற பேர்ல கூட யாரையும் கட்சியில சேர்க்க மாட்டோம். கெட் லாஸ்ட்.
அடுத்து யாருப்பா?

ராகுல் : சிம்பு, உங்களுக்கு அரசியல் அனுபவம்?

சிம்பு : பழனி, பர்கூர்ல ஆரம்பிச்சு கள்ளக்குறிச்சி வரை பிரச்சாரம் பண்ணியிருக்கேன்.

ராகுல் : அதுல எததன எலக்‌ஷன்ல ஜெயிச்சுருக்கீங்க?

சிம்பு : யாரு மொதோ வந்தாங்கங்கிறது முக்கியமில்ல. யாரு கடைசியில இருந்து மொதோ வந்திருக்காங்க
அப்படீங்கிறதுதான் முக்கியம்.

சுதர் : எங்க கட்சி ஏற்கனவே அப்படித்தான் இருக்கு. இதுல நீ வேறயா?

ராகுல் : சரி, பிரச்சாரம்லாம் எப்படி பண்ணுவீங்க?

சிம்பு : மந்திரா பேடி, ராக்கி சாவந்த எல்லோரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டு வருவேன்

மிலிந்த் : ஆனா எலெக்‌ஷன் தமிழ்நாட்டிலதானே?

சிம்பு : தமிழ்நாட்டுக்கு தான் படம் எடுக்குறோம். இவங்க இருந்தனாலதான நான் நடிச்சும் மன்மதன்
படம் ஓடுச்சு.

அன்பு : பய விவரமாத்தான் இருக்கான்.

ராகுல் : சரி ஆட்சிக் கொள்கை?

சிம்பு : பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அநியாயம்.

ஆசாத் : என்ன இவன் முலாயம், சரத் யாதவ் மாதிரி பேசுறான்? அங்க போயிடுவானோ?

சிம்பு : 66% கொடுக்கணும். அதிலயும் 20 வயசுப் பொண்ணுங்களுக்கு 90% உள் ஒதுக்கீடு
கொடுக்கணும்.

சிந்தியா : எம்பி எம் எல் ஏ வுக்கு நிக்க 25 வயசு ஆகியிருக்கணுமே?

சிம்பு : அப்போ 90% 25 வயசு பொண்ணுங்களுக்கு.

பாலு : மீதி 10%?

சிம்பு : அது 27 வயசுக்கு உள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு.

சுதர் : இதுவரைக்கும் நம்ம கட்சிய வயசானவங்க கட்சி, உதவாக்கரை கட்சின்னு தான் சொல்லிக்கிட்டு
இருந்தாங்க. இவன சேர்த்தோம்னா கட்சிக்கு வேற பேரு வந்துரும்.

ராகுல் : ஜிதின், சச்சின், மிலிந்த், சிந்தியா இந்த 40 சீட் இல்லாம நாம் தனி மெஜாரிட்டி வர
வேற வழி இருக்கான்னு பாருங்க.

June 02, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி தொடர்பாக தி.நகரில் ஒரு எதிர்பாராத பதிவர் சந்திப்பு

டயரிக்குறிப்புகள் எழுதி எழுதி டைரி தீர்ந்து விட்டதால் புது டைரி வாங்க டி நகர் வருகிறார்
அப்துல்லா. சாந்த சக்கு பாய் பட டிவிடி தி நகர் பிளாட்பார்மில் கிடைப்பதை அறிந்து அதை
வாங்க வருகிறார் முரளிகண்ணன். கிருஷ்ணவேணி திரையரங்கில் பகல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறார் கேபிள் சங்கர். தி நகரில் ஒரு கடையில் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப் படவில்லை எனக் கேள்விப்பபட்டு அதை தட்டிக் கேட்க வருகிறார் டாக்டர் புருனோ. எதிர்பாராமல் அனைவரும் ஒரு டீக்கடையில் சந்திக்கிறார்கள்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் பேச்சு, பதிவர் பைத்தியக்காரன் அறிவித்திருக்கும் உரையாடல் சிறுகதைப் போட்டியை நோக்கி திரும்புகிறது.

புருனோ : என்ன முரளி எழுதியாச்சா?

முரளி : டாக்டர் விளையாடுறீங்களா?. ஒரு பரிசு இல்ல ரெண்டுன்னா நிறைய
ஜாம்பவான்கள் கலந்துக் கிட்டாங்க, போட்டி கடுமை அதான் கிடைக்கலைன்னு
சமாளிக்கலாம். இல்லைன்னா பாலிடிக்ஸ்னு கதை உடலாம். இங்க 20 பரிசு.
இருபதுக்குள்ள கூடவா நீ இல்லன்னு எல்லாரும்
கலாய்ச்சிட்டாங்கண்ணா?

அப்துல் : ஏன்னே போட்டி அவ்வளவு கடுமையாவா போட்டியிருக்கு?

முரளி : நீங்க வேற. அந்தக் கால பதிவர் பினாத்தலார்ல இருந்து நாளைக்குத்தான்
பிளாக்கையே ஆரம்பிக்கப் போறவர் வரைக்கும் களத்துல இருக்காங்க. இப்பவே
இருபது, முப்பது கதை வந்துருச்சாம். இன்னும் இந்த மாச கடைசி வரைக்கும்
டைம் இருக்கு.

புருனோ : டி என் பி எஸ் சி எக்சாம் ரெண்டு லட்சம் பேரு எழுதுறாங்க. அதுக்கு கைடு
வருது. ஆனா இந்த போட்டிக்கு ஆதிமூலகிருஷ்ணன் கைடு போட்டுருக்காருன்னா
எவ்வளவு பேரு கலந்துக்கிருவாங்கண்ணு கணக்குப் பண்ணிக்குங்க.

அப்துல் : கேபிள், புருனோ அந்த பிகர கணக்குப் பண்ண சொல்லல.

கேபிள் : ஹி ஹி. ஹீரோயினுக்கு சூட் ஆகுமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

முரளி : யாரெல்லாம் நடுவரா இருப்பாங்கண்ணு தெரிஞ்சா நல்லாயிருக்கும்.

அப்துல் : ஏன்னே போட்டி முடியிறவரைக்கும் டெய்லி 10 பின்னூட்டம் அவங்க பதிவில
போட்டு கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?

புருனோ : சே சே பைத்தியக்காரன் வேற லெவல்ல்தான் யோசிப்பாரு. பிரபல எழுத்தாளார்
யாராச்சும் இருக்கும்.

கேபிள் : அப்ப அவங்களுக்கு ஏத்த மாதிரி எழுதி அனுப்பிச்சுடுவோம். யாராயிருக்கும்
டாக்டர்?

புருனோ : நாஞ்சில் நாடன்

கேபிள் : அப்போ நாகர்கோயில் ஏரியாவில ஒரு சமூகப் பிரச்சினையை டச் பண்ணுவோம்.

புருனோ : சாரு நிவேதிதா

கேபிள் : ஜெயமோகனைத் திட்டி நாலு வரி எழுதிடுவோம்.

புருனோ : ஜெயமோகன்

கேபிள் : அப்போ கதையில சாருவையும் ரெண்டு வரி திட்டி வச்சுடுவொம்.

புருனோ : எஸ் ராமகிருஷ்ணன்

கேபிள் : ஒரு பயணக்குறிப்ப புகுத்திடுவோம்.

புருனோ : ச தமிழ்செல்வன்

கேபிள் : கொஞ்சம் கரிசல கரைச்சு ஊத்திடுவோம்.

புருனோ : பா ராகவன்

கேபிள் : நாலஞ்சு கோயிஞ்சாமிய தூவிடுவோம்.

புருனோ : நாகார்ஜூனன்

முரளி : ம்ம் அமலாவையும் அனுஷ்காவையும் பாராட்டிடுவோம். கேபிள்ஜி இதென்ன
கொத்து புரோட்டாவா? கரைச்சிடுவோம், தூவிடுவோம்னு.

அப்துல் : இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணே. என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான்
இருக்குண்ணே.

முரளி : என்ன, நடுவர்கிட்டபோயி இனிமே நான் பாட மாட்டேன்னு சொல்லப்போறீங்களா?

அப்துல் : அதில்லண்ணே. நாம அகநாழிகை,வடகரை வேலன் மாதிரி ஆளுங்களப் பிடிச்சு
இதே மாதிரி போட்டி நடத்துறோம். முடிவு இந்தப் போட்டிக்கு அப்புறம் அறிவிக்கப்
படும்னு சொல்லுறோம். 200 பேருக்கு பரிசு. ஆளுக்கு ரூபாய் 15,000. ஒரே கண்டிசன்
உரையாடலுக்கு கதை அனுப்பிச்சவங்க இதுக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்லிடுவோம்.

புருனோ : அப்படியும் சில பேர் மசியமாட்டாங்களே.

கேபிள் : நாம் வேணா பெங்குவின் பதிப்பகத்துல, ஹார்ட் பவுண்டுல ஸ்பெசல் எடிசனா
உங்க கதையெல்லாம் வரும். அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்போடனு ஆபர்
கொடுப்போம். அங்க கதை போட்ட எல்லாரும் வாபஸ்
வாங்கிட்டு இங்க கதைய கொடுத்துடுவாங்க.

முரளி : சரி, இதுக்கெல்லாம் ஆகிற செலவு?

அப்துல் : இன்னும் பச்சப்புள்ளையா இருக்கீங்களேண்ணே. நம்ம பதிவுலகத்தப் பத்தி
தெரியாதா?

நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம்.
குசும்பன், கார்க்கி மாதிரி ஆளுங்க உடனே எதிர்ப்பதிவு
போடுவாங்க. வலையுலகமே பத்தியெறியும். நாம எஸ்கேப்.

முரளி,கேபிள், புருனோ : சூப்பர். கலக்கிடுவோம் என்று மகிழ்ந்தபடியே கலைகிறார்கள்.

May 30, 2009

தேவர் மகன் ஸ்டைலில் ஒரு பதிவர் சந்திப்பு

தேவர் மகன் படத்தின் புகழ்பெற்ற சிவாஜி கணேசன் - கமல்ஹாசன் காட்சியின் உல்டா இது.


மூத்த பதிவர் ஒருவர், சிற்றிலக்கிய உலகில் தூள் கிளப்பி வரும் எழுத்தாளரை பதிவுலகுக்கு
அழைத்து வருகிறார். எழுத்தாளர் எழுதிய பின்னவீனத்துவ கட்டுரையைப் படித்த மொக்கை பதிவர் ஒருவர் தன் தலையால் மானிட்டரை முட்டி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப் படுகிறார். பதிவுலகம் அல்லோல கல்லோலப் படுகிறது.

அதைத் தொடர்ந்து பின்னவீன எழுத்தாளார் மூத்த் பதிவரை சந்திக்க வருகிறார்.

மூ ப : எடுத்த உடனேயே பின்னவீனத்துவம் எழுதாதேன்னு சொன்னேனே கேட்டியா?
ஜோல்னாப் பையை மாட்டிக்கிட்டு, தாடி வளர்த்துக்கிட்டு நீட்ஷேவைப் பேசுற ஆளு
நான் சொல்றதக் கேட்பியா?

பி ந : சார், நான் என் தப்பை உணர்ந்துட்டேன்.சிற்றிலக்கிய உலகத்துக்கே போறேன்.
இனிமே என்னால இங்க எழுத முடியாது.

மூ ப : தாராளமா போ. ஆனா நீயெல்லாம் இப்போ எழுத்தாளர்னு சொல்லிக்கிறதுக்காக
ஆயிரம் ஆயிரமா சந்தாக் கட்டி அதை படிக்க முடியுமா பழைய பேப்பர் கடைக்குப்
போட்டானே, அவனுக்கு ஏதாச்சும் செஞ்சுட்டுப் போ.

இப்போ நான் எழுதுறேன். அதைப் படிச்சு பின்னாடி நல்ல கருத்து உருவாகி, நாடு
நல்லாயிருக்கும். ஆனா அதப் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனா கருத்து நான்
சொன்னது. இது பெருமையா? இல்லேய்யா கடமை. அதப்போல நீயும் நல்ல கருத்த
எழுதேன்யா.

பி ந : இல்ல சார். கும்மியும் எதிர்ப்பதிவுமா இருக்க இந்த மொக்கக் கூட்டத்தில எத
எழுதுனாலும் அது உருப்படியா வராது சார்.

மூ ப : உனக்கு மொதோ பின்னூட்டம் போட்ட நானும் அந்த மொக்கக் கூட்டத்துல ஒருத்தன்
தான்கிறதா நல்லா ஞாபகம் வச்சுக்கப்பூ

பி ந : இலக்கியமே படிக்காம பிந்தங்கியிருக்கிற இந்த மொக்கைக் கூட்டத்துல என்னோட
படைப்புகள வேஸ்ட் பண்ண விரும்பலை சார்.

மூ ப : மொக்கக் கூட்டம்தான். ஆனா பிளாக்குன்னு ஒண்ணு ஆரம்பிச்சப்ப இடுகையப்
போடு, பின்னூட்டத்தப் போடுன்னு ஓடிப்போய் பிளாக் ஆரம்பிச்சவங்கள்ள பாதிப் பய
நம்ம பயதான்,நம்ம பயதான். அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். நீ தான்
அவன படிக்க வைக்கணும்.

பி ந : அதுக்குள்ள எனக்கு ரைட்டர்ஸ் பிளாக் வந்துடும் போல இருக்கே சார்?

மூ ப : வரட்டும். எனக்கு வராதா? இல்ல இப்ப எழுதுக்கிட்டு இருக்கிற யாருக்கும்
வராமயேவா போயிடும்?

பி ந : சார், நீங்க பிளாக்க உட்டுட்டு எங்கூட வந்துறங்க. நான் ஆரம்பிக்கிறப் போற சிறு
பத்திரிக்கைக்கு உங்களை எடிட்டராக்குறேன்.

மூ ப : இந்தக் கட்டை இதே வலையுலகத்துல பின்னூட்டம் போட்டே சாகுமே தவிர, சிறு
பத்திரிக்கைக்கு வராதுய்யா.

பி ந : சார், நான் ஏதாச்சும் நல்லது எழுதுவேன் சார்.

மூ ப : உன்னையத்தான்யா நான் நம்ப முடியும். வேற யாரை நம்ப முடியும்.


பி ந : சரி சார் நான் போறேன்.

மூ ப : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க. உடனே கிளம்புறங்கிளா, உங்கள கூட்டிட்டு
வந்து பதிவு போட வச்சு, அதுக்குப் பின்னூட்டம் போட்ட எனக்கு, நாலு
பின்னூட்டம் போட்டுட்டு போகலாம்ல.

பி ந : சரி சார். கூடவே தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலயும் ஓட்டுப் போட்டுறேன்

சிறு நகர காதலின் சிரமங்கள்

1. நம் தெருப் பிகர் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது. ஏனென்றால் நாம் சின்ன வயதில் கிழிந்த டவுசர் போட்டு, சளி ஒழுகிக் கொண்டு சுற்றியது முதல், பரிட்சையில் பெயிலாகி, திருட்டு தம் கட்டி அடிவாங்கியது வரை அவர்களின் மனதில் பதிந்திருக்கும். என்னதான் பின்னாளில் நாம் ஓரளவு பெர்சனாலிட்டி மெயிண்டைன் பண்ணினாலும் கதைக்காகாது. அடுத்த தெரு பையன்களுக்கு சான்ஸ் அதிகம்.அல்லது வாலிப வயதில் அந்த தெருவுக்கு புதிதாக குடிவரும் பையனுக்கும் வாய்ப்பு உண்டு.

2. சிறு நகரங்களில் வசிக்கும் மாத சம்பளக்காரர்கள் தவணை முறையில் வீடு கட்டுவார்கள். அதில் தங்களுக்கு 650 சதுர அடியும், வாடகைக்கு விடுவதற்க்கு 550 சதுர அடியிலும் கட்டுவார்கள். (அப்போத்தானே லோனை அடைக்க வசதியா இருக்கும்). அங்கே பிள்ளைகளுக்கு தனி அறை என்பது வைரஸ் இல்லாத சிஸ்டம் போல. தனிமையில இருந்தாத்தானே பீல் பண்ண முடியும்?


3. அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போற ஆளா இருந்தாலும் கஷ்டம். வீட்டிலே எந்நேரமும் லௌகீக பேச்சுத்தான். அவன் அங்க அரை கிரவுண்டு வாங்கிட்டான். இவன் இங்க சீட்டு போட்டிருக்கான். நீ நல்லா படி. அப்பதான் இங்க வேலை கிடைக்கும், இங்க வேலை கிடைக்கும்னுதான் உரையாடலே இருக்கும். இந்த சூழ்நிலையிலே ஒருத்தனுக்கு எப்படி காதல் துளிர்க்கும்?

4.கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு,உறியடி என ஹீரோவாக மாறும் வாய்ப்பு அதிகம். இங்கே அதிகபட்சம் ஒரு விக்கிபால் டோர்ணமெண்ட் நடக்கும். அதில் மேன் ஆப் தி சீரிஸ் விருது வாங்கினால் கூட 32 ரூபாய்க்கு ஒரு வெங்கலக்கிண்ணி தருவார்கள். அதை தூக்கிக் கொண்டு தெருவில் வந்தால் அஞ்சு, பத்து காசு தர்மம் தான் கிடைக்கும்.

5. கிராமங்களில் திருவிழாவில் பெண்களை இம்பிரஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும். இங்கே திருவிழாக்கள் சுருங்கிவிட்டன. அதிகபட்சம் ஒரு மெல்லிசைக் கச்சேரி. இப்போது ஆடல் பாடல். இங்கே என்ன வாய்ப்பு கிடைக்கும்?

6. இதையும் மீறி கம்ப்யூட்டர் செண்டர்லயோ, காலேஜிலயோ, கஷ்டப்பட்டோ கால்ல விழுந்தோ யாரையாச்சும் கரெக்ட் பண்ணீட்டாலும் ஈஸியா அத வளர்த்துற முடியுமா?

7. முன்னால சொன்ன மாதிரி சின்ன வீடுங்கிறதால பிரைவசி கிடைக்காது.
எப்படி கவிதை எழுதுறது? எதிர் பார்ட்டிக்கிட்ட இருந்து போன் வந்தா பிரீயா பேசுறது?

8. அனேகமாக ஒன்னொரு தெருவிலும் குறைந்தது ஒரு வீடாவது இருக்கும் பின்வரும் வகையில். அந்த வீட்டின் வாரிசுகள் திருமணமாகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளியூரில் இருப்ப்பார்கள். கணவர் ரிட்டயராகும் வயதில் இருப்பார். மனைவியிடம் லீனியண்ட்டாகவும் இருப்பார். அம்மாதிரி வீடுகளில் பிற்பகல் முதல் முன்மாலை வரை (உச்சிக்காலம் முதல் சந்தியாகாலம் வரை) தெருப் பெண்கள் கூடி கும்மியடிப்பார்கள். அதில் கோல நோட் எக்சேஞ், சமையல் குறிப்பு ஆகியவை 1 சதவிகிதமும், புறணி 99 சதவிகிதமும் இருக்கும். யார் யாரை பார்க்கிறர்கள் முதல் பலவும் அலசப்படும். இந்த ரா அதிகாரிகளிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலிப்பது கடினம்.

9. கிராமங்களில் வயல், காடு என பல மறைவிடங்கள். பெருநகரங்களில் பீச்,பிளாசாக்கள்.
சிறு நகரத்தில் மூன்று நான்கு தியேட்டர்கள் தான் இருக்கும். அங்கே காதலியை கூட்டிப் போனால் அடுத்த நாள் ஐ நா சபை வரைக்கும் தெரிந்துவிடும். லைப்ரரி என்று ஒன்று இருக்கும். அங்கு கூட்டிப் போனால் காதல் வராது. ஆஸ்துமா தான் வரும்.

10. பேரூராட்சி, நகராட்சி என்ற பெயரில் ஒரு பூங்கா ஒன்றை அமைத்து இருப்பார்கள். அது நம் தமிழ்மணப் பூங்கா போல ஆரம்பத்தில் அட்டகாசமாக துவங்கி பின் வழக்கொழிந்து போயிருக்கும். அங்கேயும் சென்று காதல் செய்ய முடியாது.

இவ்வளவு பிரச்சினையையும் மீறி சிறு நகரங்களில் காதலிப்பவர்களுக்கு வந்தனங்கள்.

May 29, 2009

திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் - ஒரு ஒப்பீடு

திமுக

திமுக என்பது அரசாங்க வேலையைப் போன்றது.

1.அரசாங்கத்தில் படிப்படியாக பதவிவுயர்வு கிடைக்கும். அதுபோல இங்கேயும் கிளைச் செயலாளர், நகரம், ஒன்றியம் என படிப்படியாகக் கடந்தே மாவட்டச் செயலாளர் பதவியை அடையமுடியும்.

2. ராணுவ வாரிசுகளுக்கு முதலிடம் என்பதுபோல கட்சியில் சீனியர் தலைகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை உண்டு.

3.வேலையில் இருக்கும்போது இறந்தால் அரசாங்கத்தில் வாரிசுகளுக்கு வேலை உண்டு. அதுபோல் இங்கேயும் (தங்கப்பாண்டியன் - தங்கம் தென்னரசு, புதுக்கோட்டை - பெரி.அரசு)

4. விளையாட்டுத்துறை கோட்டா அரசாங்கத்தில் உண்டு. அதுபோல் இங்கே கலையுலக கோட்டா உண்டு (நெப்போலியன், சந்திரசேகர், ரித்தீஷ்)

5.அரசாங்கத்தில் சில சமயம் பதவிஉயர்வுக்கு, மாறுதலுக்கு கடுமையான முயற்சி செய்து ஆள் பிடிக்க வேண்டும். அதுபோல் இங்கேயும் சரியான ஆளைப்பிடித்து முயற்சி செய்யாவிட்டால் அதே இடத்திலேயே ஆயுள் முழுக்க இருக்க வேண்டியதுதான்.

6. அரசாங்கத்தில் நல்ல பசையுள்ள பதவி கிடைத்துவிட்டால் வசூலில் பெரும் சதவிகிதம் நமக்கே. மேலேயும், கீழேயும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கொடுத்தால் போதுமானது. இங்கேயும் அப்படித்தான்.



அதிமுக என்பது சாஃப்ட்வேர் கம்பெனியைப் போன்றது

1.படிச்சவுடனே ஓரளவுக்கு வேலை கிடைப்பது மாதிரி, கட்சியில சேர்ந்தவுடனே பெரும்பாலும் பதவி கிடைக்கும்.

2. கஷ்டப்பட்டு திறமையைக் காட்டுனா, பிரமோஷன் கிடைக்கிறது மாதிரி இங்கயும் வேகமா
பிரமோஷன் கிடைக்கும்.

3. என்னதான் வேலை தெரிஞ்சாலும் மேலெ இருக்குறவங்கள அனுசரிக்காட்டி எப்படி அப்ரைசல்ல போட்டுப் பார்ப்பங்களோ அதுமாதிரி இங்கயும் சில உப தெய்வங்கள மதிக்காட்டி ஆப்பு வச்சுருவாங்க.

4. ரிசெசன் வந்தா தூக்கியெறியிறது மாதிரி, கட்சி தோத்தாலோ இல்ல பிடிக்காட்டாலோ உடனே தூக்கியெறிஞ்சுவாங்க.அங்க ஹெச் ஆர் மெயில வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கணும். இங்க நமது எம்ஜியார வாட்ச் பண்ணிக்கிட்டெ இருக்கணூம். எப்போ கட்டம் கட்டுவாங்கண்ணு.

5. நமக்கு சம்பளம் வந்தாலும், பெனிபிட்ஸ் வந்தாலும் லாபத்துல பெரும்பங்கு மேலிடத்துக்குத்தான்.

6. வேலை போச்சுன்னா கம்பெனிக்குள்ள நுழைய முடியாதுங்கிறமாதிரி, இங்க லாயிட்ஸ் ரோடுக்குள்ளேயே நுழைய முடியாது. வேலையில இருந்து வந்துட்டம்னா கம்பெனி எப்படி நம்ம மதிக்காதோ,அதே நிலைமைதான் இங்கயும். கட்சியில இருந்து வெளிய வந்துட்டா, செத்தாக்கூட யாரும் வந்து பாக்க மாட்டாங்க.

7. வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போடுறானான்னு அப்பப்போ ஹெச் ஆர் செக் பண்ற மாதிரி, இங்கயும் பல செக்கிங்குகள் உண்டு. உலகத்திலேயே அதிக பேக்ஸ் ரிசீவ் பண்ண பேக்ஸ் மெசின் தலைமைக் கழகத்துல தான் இருக்கு. விரைவில் கின்னசுக்கு அப்ளை பண்ண போறதா கேள்வி.

8. கம்பெனியில வாரிசு எல்லாம் ஷேர் வச்சுருக்குவங்களுக்குத்தான். எம்ப்ளாயிக்கு இல்லை. அதுபோல இங்கயும் இரண்டாம் மட்ட மூன்றாம் மட்ட தலைகளுக்கு அந்த பவர் இல்லை.

9. சாப்ட்வேர்ல பிள்ளைக்கு வேலை கிடச்சவுடனே குடும்பம் சந்தோஷப் படும். அப்புறம் போச்சேன்னு வருத்தப்படும். அது இங்கேயும் உண்டு. (இந்தப் பாயிண்டு ரிப்பீட்டா இருக்குண்ணு பார்க்குறீங்களா வேற ஒண்ணும் இல்ல. அம்மாவோட ராசி நம்பர் ஒன்பதாச்சே)

காங்கிரஸ் கட்சி விவசாயம் மாதிரி

1. அதிக நிலம் வச்சிருந்தா தான் விவசாயிக்கு மதிப்பு. அதுபோல அதிக எண்ணிக்கையில கோஷ்டி ஆளுங்க இருந்தாத்தான் இங்க கட்சியில மதிப்பு.

2. பரம்பரை பெருமை விவசாயத்துக்கு அதிகம். அதுபோல இங்கயும்.

3. விவசாய நிலத்தை ரொம்ப நாள் வச்சிருந்தா ஒரு காலத்துல ரியல் எஸ்டேட் ஆகி செம வருமானம் கிடைக்கும். அதுமாதிரி இங்க சும்மாவே வேலை செய்யாம படுத்துக் கிடந்தாலும் பின்னாடி பதவி கிடைக்கும்.

4. எப்பயும் தண்ணியை நம்பித்தான் பொழப்பு. இங்க டெல்லித்தலைமையை நம்பி

5.இப்ப இருக்கிற நிலைமையில புதுசா ஒரு ஆளு எந்தப் பிண்ணனியும் இல்லாம நிலம் வாங்கி விவசாயம் பண்ணி சாதிக்க முடியாது. அதுபோல காங்கிரஸ்ஸுலயும் புதுசா ஒரு ஆளு நுழைஞ்சு சாதிக்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சாலை மாதிரி

1. யார் வேணூம்னாலும் லேபரா சேரலாம். வேலை பார்க்கலாம். சுமாரான வருமானம்.
வாழ்க்கையை ஓட்டலாம். வசதி வரவே வராது.

2. விடாம வேலை செஞ்சா போர்மேன் வரைக்கும் போகலாம். அப்படியும் வருமானம் கம்மிதான்.

3. போனஸ்சுக்கு போராடுற மாதிரி அடிக்கடி போராட வேண்டியது இருக்கும். பலன்?

May 27, 2009

குட் புட் பேட் புட் கலந்துரையாடல்

இப்போதுள்ள தாத்தாக்கள் எல்லாம் பேரன்களிடம் இருந்து பிஸ்ஸா,பர்கர் என்று வாங்கி மொக்கிக் கொள்கிறார்கள். பீச்சில் வாக்கிங் போய் அருகம்புல் ஜூஸ் குடிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு ஆயாவிடம் சுண்டல் கடலை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாட்டின் இறந்தகாலச் சொத்து.அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை என்று கொள்ளுப்பாட்டிகளின் வலைப்பூவில் சுப்புணி பாட்டி என்னும் பதிவர் ஒரு இடுகையை வெளியிட பற்றியெறிகிறது பதிவுலகம்.

அதைப்படித்து அண்டார்டிகாவில் வசிக்கும் பதிவர் ஆர்கே, சென்னை வலைப்பதிவர்களுக்கு மெயில் அனுப்பி, ஒரு கருத்தரங்கு நடத்துங்களேன் என்று கேட்டுக்
கொண்டதையடுத்து, வலைப்பதிவர்கள் கான்பரன்ஸ் காலில் ஆலோசிக்கத் தொடங்குகிறார்கள்.


நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.


லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.


கார்க்கி : சகா, என்னைக்கு வேணும்னாலும் நடத்துங்க. ஆனா ஞாயிறு வேண்டாம். ஆறு மணி டிரெயின்ல ஹைதை ரிட்டர்ன் போகும் போது வறுத்துக்கிட்டே போக, கஷ்டப்பட்டு யாரையாச்சும் கரெக்ட் பண்ணி வைக்கிறேன். ஆனா நீங்க நிகழ்ச்சியெல்லாம் ஞாயித்துக் கிழமை நடத்துறீங்க. முடிய மணி எட்டாயிடுது. வேற வழியில்லாம
காசினி ட்ராவல்ஸ்ல போக வேண்டியிருக்கு.

கேபிள் சங்கர் : ஏன் கார்க்கி, அதிலயும் டக்கர் பிகர்லாம் வருமே.


அப்துல்லா : அதெல்லாம் அவன்கிட்ட பேசாதில்லண்ணே.


நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.


முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.


அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.


முரளிகண்ணன் : அப்புறம் எஜமான்ல,பிஸ்தாவுல


ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?


கேபிள் சங்கர் : என்க்குத் தெரிஞ்சு சரவண பவன்ல சாப்பாடு சுத்தமா, ஆரோக்கியமா இருக்கும்.

அதிஷா : ஆமாமா உடனே அண்ணாச்சிய கூப்பிடுங்க. மனசுக்குள் : அப்பாடா எப்படியாச்சும் அவர்கிட்ட பேசி நாலஞ்சு குட்டிக்கதைக்கு மேட்டர் தேத்திரணும்.


லக்கிலுக் : நீ என்ன நினைக்கிறய்னு எனக்குத் தெரியும் அதிஷா. அவரே இப்ப களி திண்ணுக்கிட்டு இருக்காரு.


புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.

நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது?


முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்‌ஷன் இருக்கும்.


அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?


லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.


முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.

அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.


அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?

கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?

நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.


லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.

அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.


நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?


ஆதி : பைத்தியக்காரன், ஜியோவ்ராம் மாதிரி ஆளுங்களுக்கு கால் போடுங்கப்பா. அவங்க ஏதாச்சும் உருப்படியா சொல்லுவாங்க.


லைனில் வருகிறார் பைத்தியக்காரன். விவரம் சொல்லப்படுகிறது.


பைத்தியக்காரன் : இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்றது அதிகாரத்தின் உரையாடல். அதுவும் சாகப் போற வயசில இருக்குறவங்கள அதை சாப்பிடு,
இதை சாப்பிடாதேன்னு சொல்றது உச்சபட்ச வன்முறை. இதற்க்கு எதிராத்தான் என்குரல் ஒலிக்கும். என்னால் முடியாவிடடாலும் ஜ்யோவ்ராம் துணையுடன்
இந்த கட்டமைப்பை தகர்ப்பேன்.

இப்போ நான் சொல்லும் விஷ்யம் கூட உங்கள் மீதான என் அதிகாரத்தின் உரையாடல்தான். அதை எதிர்க்க உங்களுக்கும் உரிமை உண்டு.


பதிவர்கள் : நல்லா புரிஞ்சிடுச்சு சார். ஆட்டையைக் கலைச்சிடுறோம்.