December 31, 2013

மூன்றாம் இடம்

மஹாபாரதத்தில் தனக்கு, எந்த இடத்திலும் இரண்டாம் இடமே வாய்த்திருக்கிறது என பீமன் வருத்தப்பட்டு இருப்பானோ என்னவோ? ஆனால் அவன் தமிழ்சினிமாவில் இருந்திருந்தால் நிச்சயம் இரண்டாம் இடத்திற்கு அகமகிழ்ந்து இருப்பான். ஏனென்றால், தமிழ்சினிமாவில் மூன்றாம் இடம் தான் பாவப்பட்டது.

அந்த அந்தக் காலத்தில் மட்டும் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களைப் பற்றிய பேச்சுகள் இருக்கும். அடுத்த தலைமுறை வந்ததும் அந்தப் பெயர் தமிழக மக்களின் வக்காபுலரியில் இருந்து விடுபட்டுவிடும். சில ஆர்வலர்கள் மட்டுமே அந்தப் பெயர்களைப் பற்றி தொங்கிக்கொண்டு இருப்பார்கள்.

பத்திரிக்கைகள் , இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர்கள், சினிமா விவாதங்கள் எல்லாவற்றிலும் முதல் இரண்டு இடங்களில் இருந்த நாயகர்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
எப்போது பார்த்தாலும் எம்கேடி-பியுசி, எம்ஜியார்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய், தனுஷ்-சிம்பு.

எம் கே தியாகராஜபாகவதர்-பி யு சின்னப்பா காலத்தில் மூன்றாவதாக ஒரு நடிகர் இல்லவே இல்லையா? அவர் அந்தக்காலத்துக்கு மட்டுமே செல்லுபடியா? அதை மற்ற தலைமுறைகளுக்கு கடத்தும் பணியை செய்யவேண்டிய ஊடகங்கள் ஏன் இரண்டு இடங்களுடன் நிறுத்தி விடுகின்றன? டி ஆர் மகாலிங்கம் பற்றியோ செருகளத்தூர் சாமா பற்றியோ ஏன் அவர்கள் பேசுவதேயில்லை?

எம்ஜியார்-சிவாஜி காலத்திலும் ஜெமினி கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கும் மூன்றாம் இடம் வாய்த்திருந்தது. ஆனால் அவரது இடத்தை இப்போதைய தனுஷ்-சிம்பு கால மக்கள் ஊடகங்கள் வழி அறிய வாய்ப்பில்லை. ரவிசந்திரன் என்பவர் கூட வெள்ளி விழா நடிகர் என எம்ஜியார்-சிவாஜி காலத்தில் அறியப்பட்டார். அவர் கூட சில காலம் மூன்றாமிடத்தில் இருந்திருக்கலாம்.

ரஜினி-கமல் காலத்தில் மூன்றாமிடத்தில் இருந்த விஜயகாந்த் இப்போதைய தலைமுறையால் கிண்டல் தொனியிலேயே பார்க்கப்படுகிறார். அவரால் பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், இரண்டாம் நிலை தியேட்டர் உரிமையாளர்கள் பலர் வாழ்ந்தார்கள். கார்த்திக், ராமராஜன் ஏன் சரத்குமார் கூட சூரியன், சாமுண்டி, நாட்டாமை காலத்தில் மூன்றாமிடத்தில் சில காலம் சஞ்சரித்து இருக்கிறார்.
இவர்கள் அடுத்த தலைமுறையின் போது டி ஆர் மகாலிங்கம் போல மறக்கப்பட்டு விடக்கூடும்.

அஜீத்-விஜய் காலகட்டத்தில் விக்ரம், சூர்யா ஆகியோர் மூன்றாம் இடத்துக்கு முக்கியமான போட்டியாளர்களாக இருந்தவர்கள். இப்போதே விக்ரம் பெயர் சிறிது சிறிதாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் அப்பாஸ்,மாதவன் கூட ஏதோ ஒரு நாளிலாவது மூன்றாமிடத்தில் இருந்தவர்கள் தானே?

தனுஷ்-சிம்பு காலத்தில் விஷால், ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் மூன்றாமிடத்தில் அவ்வப்போது இருக்க வாய்ப்பிருக்கிறது.

முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் எவ்வளவு தோல்விகள் கொடுத்தாலும், அவர்களை அந்த இடத்தில் இருந்து இறக்க மிக யோசிக்கும் தமிழகம், மூன்றாமிடத்தில் இருப்பவர்களின் சிறு சறுக்கலையும் பெரிதாக்கி விடுகிறது.

தனுஷின் கடைசி 11 படங்களில் 10 படங்கள் தோல்வி. சிம்பு நடித்த படங்களைவிட, அவரை வைத்து பூஜை போட்ட படங்கள் அதிகமாயிருக்கும் போல. ஆனால் இன்னும் இவர்களுக்கு லட்டு லட்டான ஆபர்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டால் இவர்கள் 50 ஆண்டுகள் கடந்தாலும் ரெபர் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இந்த மூன்றாமிடத்தைப் பிடித்த நாயகர்களை பார்த்தோமென்றால், அப்போடைய வெகுஜன ரசனை நன்கு விளங்கும். டி ஆர் மகாலிங்கம் காலத்தில் இசையும்,கதையும் மக்களின் தேர்வாய் இருந்தது.

ஜெமினி கணேசன் காலத்தில் குடும்ப வாழ்க்கை கதைகள், மிதமான காதல் கதைகள் மக்களின் தேர்வாய் இருந்திருக்கிறது. விஜயகாந்த் காலத்தில் ஆங்கிரி யங் மேன் கதைகளுக்கு  வரவேற்பு.
சூர்யா, விக்ரம் காலத்தில் முதல் இரண்டு இடத்தைத் தவிர மற்றவர்கள் நன்கு பெர்பார்மன்ஸ் கொடுக்கவேண்டுமேன்பது மக்களின் எதிர்பார்ப்பு.
தனுஷ்-சிம்பு காலத்தில், யதார்த்தப் படங்களில் நடிப்பவர்களுக்கு மூன்றாமிடம் தகைய வாய்ப்பிருக்கிறது.

இந்த மூன்றாமிடக்காரர்களுக்கு என்றே சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்தந்த காலகட்டத்தில் இருப்பார்கள். அதைப் போலவே ரசிகர்களும்.

இதில் அந்த ரசிகர்களின் நிலைதான் பாவம். மூன்றாமிடக்காரரின் ரசிகரை மட்டும் முதலிரண்டு இடக்காரர்களின் ரசிகர்கள் சேர்ந்து கும்மி விடுவார்கள்.

ஜெமினிகணேசன் ரசிகர்களை சாம்பார் ஆளுடா என கலாய்த்தார்கள் எம்ஜியார்-சிவாஜி ரசிகர்கள். எங்களுடன் விடுதியில் தங்கிப்படித்த,ஒரு விஜயகாந்த் ரசிகன் தன்னை கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான். ரகசியமாய் அவனது பெட்டியில் ஒரு விஜய்காந்த் புளோ அப்பை வைத்திருந்தான். ஹாஸ்டலில் நடந்த ஒரு திருட்டின் காரணமாக எல்லோரது பெட்டியையும் சோதனை செய்த போது, இதைக் கண்டுபிடித்தோம். பின்னர் அந்த திருடனை விட இவன் தான் அதிகம் பாதிக்கப்பட்டான்.

இப்போது கூட சூர்யாவை, சூர்யா ரசிகர்களை நன்கு கலாய்க்கிறார்கள்.
அந்தளவுக்கு பாவப்பட்ட இடமாக இருக்கிறது இந்த மூன்றாமிடம்.

நீ ஏன் இவ்வளவு பொங்குகிறாய் என்கிறீர்களா?
பள்ளிக்கூடத்தில் படித்த போது, கல்லூரியில் படித்த போது முதல் இரண்டு இடங்களுக்குள் வராதவன் நான். அந்தக் கால ஆசிரியர்கள் முதல், வகுப்புத் தோழர்கள், சீனியர், ஜூனியர்கள் எல்லாம் முதல் இரண்டு இடத்தில் இருந்த மாணவர்களையே ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அவன் செட்டா நீ எனத்தான் எல்லோரும் கேட்கிறார்கள்.


அய்யா, திரையுலகம் சார்ந்த எழுத்தாளர்களே, விமர்சகர்களே நீங்கள் இனி எழுதும் போது மூன்று இடங்கள் வரை எழுதி வாருங்களேன். மூன்றாம் இடம் வாங்கும் பலர் சந்தோஷப்படுவார்கள்.

December 24, 2013

ராகவ்வின் ஜன்னல்

ராகவ்வின் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் ஞாயிற்றுக்கிழமை கூட அவன் அப்படி தூங்கியதில்லை. ஆறரை மணிக்கு அலாரம் அடித்தது போல் எழுந்து கொள்வான். ஆறே முக்கால் ஆகியும் இன்னும் எழவில்லை. ஏழு இருபதுக்கு அவனது கல்லூரி பேருந்து தெரு முனைக்கு வந்துவிடும். படுக்கை அருகில் சென்று ராகவ் எழுந்திரு, மணியாச்சு என்று சொல்லிப் பார்த்தாள். அசைவில்லை. என்னாச்சு இவனுக்கு என்று வியந்தபடியே லேசாக உலுக்கினாள்.

முழித்துப் பார்த்தவன், “அம்மா இன்னைக்கு நான் காலேஜ் போகல்லை”  என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராகவ்வின் அப்பா சிவராமன், ”விடு மைதிலி, தூங்கட்டும். உடம்பு சரியில்லையோ என்னவோ” சாயந்திரம் வந்து பார்த்திக்கிடலாம். நீ ஆபிஸ்க்கு கிளம்பு” என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.

மாலை அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனிமேல் காலேஜ்க்கே போகமாட்டேன் என ராகவ் திட்ட வட்டமாக சொல்லிவிட்டான்.

அலுவலக மேனேஜ்மெண்ட் வகுப்புகளில் ஊட்டப்பட்ட பாடங்கள் சிவராமனுக்கு நினைவுக்கு வந்தன. ஒரு வாரம் ராகவ் லீவில் இருப்பதால் பெரிய சிக்கல் ஏது வரப்போவதில்லை. இப்போ இரண்டாம் ஆண்டுதான். அவன் வீட்டிலேயே இருக்கட்டும். ஒரு வாரத்தில் பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிந்து தீர்த்து வைத்துவிடலாம் என முடிவு செய்து, மைதிலியிடமும் தெரிவித்து விட்டார்.

அடுத்த நாள் ராகவ்வின் வகுப்புக்கு பொறுப்பான பேராசிரியரிடம் சென்று பேசினார். ராகவ்வுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல அட்டென்டென்ஸ், நல்ல சிஜிபிஏ, எல்லார்கிட்டயும் நல்லா பிகேவ் பண்ணுவானே என்று தெரிவித்தார் அவர்.

அடுத்ததாக ராகவ்வின் வகுப்பு நண்பர்கள், பஸ் மேட்கள், அபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் அனைவரிடமும் மாலை விசாரித்தார். ஏதும் லவ் கிவ்னு இருந்தாலும் சொல்லிடுங்கப்பா, பரவாயில்லை என்றார். இல்ல அங்கிள், ராகவ்வ நாங்க பழம்னு தான் சொல்லுவோம். கேர்ள்ஸ்ங்க்கிட்ட அவன் மூவ் பண்ணவே மாட்டான் என்றார்கள்.

அன்று இரவு ராகவ் தூங்கிய பின் அவன் செல், லேப்டாப் எல்லாவற்றையும் துருவிப் பார்த்தார். கிளீன் சிலேட். இப்போதுதான் சிவராமனுக்கு பயம் வரத் தொடங்கியது. விசாரிச்ச பிரச்சினைகள் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணக் கூடிய மேட்டர். டிரக் மாதிரி பழக்கமும் இருக்கிறதாத் தெரியலை. வேற எதுவும் சைக்காலஜிக்கல் பிராப்ளமா இருக்குமோ? எனத் தோன்றியது.

மைதிலியிடம் விவாதித்தார். ஏதாச்சும் சைக்ரியாஸ்ட்கிட்ட போலாமா என்று யோசித்தார்கள். சென்சிட்டிவ் மேட்டர். அவனோட பிரண்ட்ஸுக்கு, அபார்ட்மெண்ட் அக்கம் பக்கத்துக்கு தெரிஞ்சா இவன் பீல் பண்ணுவான். நம்மகிட்ட ஷேர் பண்ணாட்டியும், அவனோட இன்னர் சர்க்கிள்ல யார்கிட்டயாச்சும் சொல்லத்தான செய்வான்? அந்த மாதிரி ஒரு மெச்சூர்டான ஆளுகிட்ட பேசச் சொல்லணும். இன்னும் ரெண்டு வருஷம் இவன் படிச்சாகணுமே? என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தொடர் யோசிப்பில், ராகவ்வின் பர்த்டே செலிபரேஷனுக்கு வந்திருந்த சந்தோஷின் ஞாபகம் சிவராமனுக்கு வந்தது. சென்ற ஆண்டு இஞ்சினியரிங் முடித்து, இப்போது ஒரு எம் என்சியில் இருப்பவன். ராகவ்வின் பஸ் மேட். ராகவ்வின் முதலாமாண்டு பயங்களை பெருமளவு போக்கியவன் அவன் தான் என ராகவ்வே அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.

ராகவ்வின் பேஸ்புக் அக்கவுண்ட் வழியே, சந்தோஷின் இன்பாக்ஸுக்கு தகவல் அனுப்பி, சந்தித்தார் சிவராமன். பிரச்சினையை விவரித்து, அவன்கிட்ட பேசுப்பா என்றார்.

அடுத்த நாள், தன்னுடைய  இன்கிரிமெண்ட்டுக்கு ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லி, ராகவ்வையும் இன்னும் சில நண்பர்களையும் எக்ஸ்பிரஸ் மாலுக்கு அழைத்துச் சென்றார் சந்தோஷ். பேச்சினூடே ராகவ்வின் பிரச்சினையும், அவனையறியாமல் வெளிவந்தது.

வேறொன்றுமில்லை. ராகவ்வுக்கு பஸ்தான் பிரச்சினை. பஸ் கூட இல்லை. பயணம்தான் பிரச்சினை. எல் கே ஜியில் ஆரம்பித்தது அது. பிரைவேட் வேன், ஸ்கூல் வேன், இப்போது காலேஜ் பஸ்.    காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்து, அவசர அவசரமாய் சாப்பிட்டு, வேனோ பஸ்ஸோ பிடித்து, பின் அதே போல மாலை திரும்பி, சாப்பிட்டு, படித்து. இந்த 16 ஆண்டுகளில் ஒரே ரோட்டில் பயணம் மட்டுமே செய்து கொண்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறான் ராகவ்.

இந்த செமெஸ்டர், கேம்பஸ் ஆரம்பித்த உடன் தான் அவனுக்கு இன்னொன்றும் தெரிந்தது. அவன் சீனியர்கள் எல்லோரும், சென்னையிலும் இயங்கும் எம் என் சிக்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களிலேயே பிளேஸ் ஆகிக்கொண்டிருந்தது. அந்த கம்பெனி பஸ்களையும் அவன் சென்னையில் பார்த்திருக்கிறான். அவையும் காலை ஏழு மணிக்கெல்லாம் அவன் ஏரியாவில் கிளம்பி, மாலை திரும்பி வருபவை.  இன்னும் இரண்டு ஆண்டுகள் கல்லூரி பேருந்து, பின் அலுவலக பேருந்து. வாழ்க்கை இப்படி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே செல்வதில் கழிந்து விடும் என்ற எண்ணம் வந்ததும் அவனுக்கு கல்லூரி செல்வதே வெறுப்பாகத் தோன்றிவிட்டது.


இந்த தகவல்களை சந்தோஷ், சிவராமனிடம் போனில் சொன்னான். கூடவே அவன், “சார், உள்ளூர்ல இருக்கமேன்னு ஹெஸிடேட் பண்ணாதீங்க. ராகவ்வை ஹாஸ்டலில் சேர்த்துடுங்க. பஸ் ட்ராவல் டைம் மிச்சமாகும், ஹெல்த்தும் இம்ப்ரூவ் ஆகும்,படிக்கவும் நிறைய டைம் கிடைக்கும். அப்புறம் அவனும் ரியலைஸ் பண்ணிக்குவான். பஸ்ல ட்ராவல் பண்ணாம நிறைய வேலை இருக்குன்னு புரிய வச்சிடலாம்” என்றான். சிவராமனுக்கும் அதுவே சரி என்று பட்டது.

December 23, 2013

வத்தலகுண்டு இங்கிலீஸ்

எண்பதுகளில் எங்கள் ஊருக்கு முதன்முறையாக வருபவர்கள் அசந்து போய்விடுவார்கள். ஏதோ, ஒரு ஐரோப்பிய கிராமத்திற்குள் நுழைந்த பீல் அவர்களுக்கு கிடைக்கும். கொடைக்கானலின் அடிவாரத்தில் இருந்ததால் நிலவிய இதமான வானிலை. மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கும் பிளம்ஸ், திராட்சை, கேரட், பீட்ரூட், காலிபிளவர், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள். டென்னிஸ் பேட்டுடன் நடமாடும் ஆடவர்கள், பக்காவான கிரிக்கெட் செட்டுடன் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஹாக்கி ஸ்டிக், பேஸ்கட் பால் மற்றும் பேஸ் பால் மட்டைகளுடன் பள்ளி செல்லும் மாணாக்கர்கள். இவற்றையெல்லாம் விட ஊர் முழுவதும் தாராளமாகப் புழங்கும் ஆங்கில வார்த்தைகள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கொடைக்கானலில் தங்கியிருந்த பிரிட்டிஷார் குளிர்காலங்களில் அவர்கள் டென்னிஸ் விளையாடுவதற்காக அடிவாரத்தில் இருந்த வத்தலக்குண்டில் அருமையான கிளே கோர்ட்டுடன் டென்னிஸ் கிளப்பை ஆரம்பித்திருந்தனர். நூறாண்டு தாண்டி செயல்பட்டுக் கொண்டிருக்கு அந்த கிளப் வாயிலாக டை-பிரேக்கர், மேட்ச் பாயிண்ட், செட், டபுள் பால்ட் என பல வார்த்தைகள் வத்தலகுண்டு வக்காபுலரியில் இடம் பிடித்திருந்தன.

வத்தலக்குண்டு அக்ரகாரம் மூன்று தெருக்களைக் கொண்டது. அங்கிருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் என்ற ஒன்று ஐம்பது ஆண்டுகளாக லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அந்த அக்ரகாரம் வழி போனாலே சில்லி மிடாஃப், லாங் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர் போன்ற வார்த்தைகள்தான் காதில் விழும். வீடுகளுக்குள் நுழைந்து பார்த்தால் சர்வ சாதாரணமாக பிரிட்ஜ் ஆடிக்கொண்டிருப்பார்கள்.

இன்னொரு பக்கம் பலமுறை ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாங்கிய பேஸ்கட் பால் டீம். பக்காவான இரண்டு சிமிண்ட் கோர்ட்டுகள். பேஸ்கட் பால் நெட் சாதாரணமாக ஒரு மாதம் உழைக்கும் என்றால், இங்கே ஒரு வாரம் கூட தாங்காது. கண்ணே தெரியாத கும்மிருட்டாகும் வரை விளையாடிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் பல இடங்களுக்கு விளையாடச் சென்று ரொட்டேட், மேன் ஆன் யூ, பிளாக், அபென்ஸ் போன்ற வார்த்தைகளை ஊர் முழுதும் புழக்கத்தில் விட்டிருந்தார்கள். பொங்கல் பண்டிகையின் போது, அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்டப் போடிகள் நான்கு நாட்கள் நடக்கும். பல மாநில ஆட்டக்காரர்கள் தங்கள் பங்கிற்கு பல ஆங்கில வார்த்தைகளை அங்கே விதைந்திருந்தார்கள்.

வத்தலக்குண்டின் அரசு மேல்நிலை பள்ளியும் நூறாண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க பர்மா தேக்கால் பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்ட அருமையான கட்டிடம். சுற்றிலும் மைதானங்கள் மைதான எல்லை முழுவதும் மரங்கள். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருக்கும் மாணவர்கள், எப்போதடா ஐந்தாம் வகுப்பு முடியும், ஆறாம் வகுப்பிற்கு அங்கே செல்லலாம் என காத்திருப்பார்கள். ஏராளமான ஹாக்கி மட்டைகள், பேஸ்பால் மட்டைகள் மற்றும் எல்லா விளையாட்டு உபகரணங்களும் குவிந்திருந்த பள்ளி அது. எனவே விளையாட்டுத் தொடர்புகளால் ஆங்கிலம் வத்தலகுண்டில் சரளமாக புழங்கியது.

ஆனால் எல்லாம் பேச்சில் மட்டும்தான். எழுத்து என்று வரும் போது குப்புற அடித்து விழுந்து விடுவார்கள். ஒரு எஸ்ஸேயை மனப்பாடம் செய்வதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிடும். என்னடா இது பிரசண்ட் கண்டினியஸ் பெர்பெக்ட் டென்ஸ்ங்கிறான், வுட் ஹேவ் பீன் சிங்கிங்கிறான் என டரியலாகிவிடுவார்கள். பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வை முதல் அட்டெம்டில் பாஸ் பண்ணியவர்களை அங்கே விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த பள்ளியைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் மட்டும் இதைக் கேள்விப்பட்டு இருந்தால் அவரின் ஆத்மா சாந்தி அடைந்திருக்காது. ஊரில் இருந்தததே இரண்டே இரண்டு மேல்நிலைப்பள்ளிகள்தான். ஆனால் பன்னிரெண்டு டுட்டோரியல் கல்லூரிகள் இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பள்ளிகளை விட அமர்க்களமாக ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு அங்கே கூட்டம் நிரம்பி வழியும்.

அதற்காக மக்கள் அங்கே மக்கு என்று அர்த்தமில்லை. மற்றவற்றில் எல்லாம் புகுந்து விளையாடுவார்கள். வாடிவாசல் எழுதிய சி சு செல்லப்பா, பி எஸ் ராஜம் அய்யர் போன்ற இலக்கியவாதிகள் பிறந்த ஊர் வத்தலக்குண்டு தான். அந்நாளிலேயே பல சிறு பத்திரிக்கை குழுக்களும் இருந்தன. பின்னர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆக்டிவ்வாக இருந்தது. லியோனி, தன் முதல் பட்டிமன்றத்தை அரங்கேற்றியது கூட வத்தலக்குண்டில்தான்.

வத்தலக்குண்டில், யாருக்கு பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு நடக்கும் நாள் முதலில் தெரியும் என்றால், அது மஞ்சளாற்றங்கரையில், குட்லக் விநாயகர் கோவில் வாசலில் பூஜை சாமான் கடை வைத்திருந்த செல்வத்திற்குதான்.

80களில் தினத்தந்தியில் பத்தாம் வகுப்பு கால அட்டவணையை தலைப்புச் செய்தியாக வெளியிடுவார்கள். செல்வம் அதில் ஆங்கிலத் தேர்வு நாளை மட்டும் தனியாகக் குறித்து விடுவார். ஆமாம். அவர் ஆயிரத்துக்கும் மேல் தேங்காய் ஆர்டர் செய்ய வேண்டுமே.

தேர்வுக்கு முதல் நாளில் இருந்தே குட்லக் விநாயகர் கோவிலில் கூட்டம் நிரம்பி வழியும். சிதறுகாய் பொறுக்க அக்கம் பக்க ஊர்களில் இருந்து கூட ஆட்கள் வருவார்கள். டுட்டோரியல் கல்லூரிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கும். தங்கள் டுட்டோரியல் மாணவர்கள் அனைவரும் பாஸாக வேண்டும். மற்ற மாணவர்கள் எல்லாம் பெயிலாகி, நம்மிடம் வரவேண்டும் என்று கேரளா சென்று செய்வினை வைத்தவர்கள் கூட உண்டு. மாரியம்மன் கோவிலில் தன் மகன் இங்கிலீஸில் பாஸாக வேண்டும் என அம்மாமார்கள் போட்ட மாவிளக்கை அனுப்பி வைத்தால் சோமாலியா பஞ்சமே தீர்ந்து விடும்.

பள்ளியில் வேறு மாதிரியான பிரச்சினை நடக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே டெஸ்க் அரேஞ்ச்மெண்ட் செய்து நம்பர் போட ஆரம்பிப்பார்கள். எல்லா வகுப்பறையையும் நன்கு பூட்டி, அந்த வளாகத்தையே கிட்டத்தட்ட சீல் செய்து விடுவார்கள். இல்லாவிட்டால் டெஸ்கில் பிட் பதுக்குவது போன்றவைகள் நடந்துவிடும். காலை பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிக டீக்கடைகள் வேறு முளைக்கும். காவல் நிலையத்தில் இருந்து சில கான்ஸ்டபிள்களும் வருவார்கள். கத்தி, கபடா போன்ற ஆயுதங்களுடன் உள்ளே வந்து இன்விஜிலேட்டரை மிரட்டும் ஆட்களும் உண்டே.


வட்டார கல்வி அலுவலகத்தில் இன்னைக்கு மட்டும் பிளையிங் ஸ்குவாட் வத்தலகுண்டுக்கு கண்டிப்பாக போகவேண்டும் என்று கட்டளை இட்டுவிடுவார்கள். வத்தலகுண்டுக்கு இங்கிலீஸ் இன்விஜிலேசனுக்கு ஆட்கள் போடும் போது மிலிட்டரி செலக்சன் மாதிரி தான் செய்ய வேண்டியிருக்கும் என டீஇஒ அலுத்துக் கொள்வார்.

டுட்டோரியல் கல்லூரிகள், சிலரை தற்கொலைப்படை போல தயார் செய்து அனுப்புவார்கள். அவர்கள் அரை மணி நேரம் முடிந்த பின் வெளியே செல்லலாம் என்ற விதியைப் பயன்படுத்தி வெளியே வந்து கொஸ்டினை அவுட் செய்வார்கள். சில கேள்விகளுக்கான விடையை தயார் செய்து, கேட்டிற்கு வெளியே மரத்தில் இருந்து கத்துவது, மைக்செட்டில் விடை அறிவிப்பது கூட நடக்கும்.

இத்தனை இருந்தும், அந்த 35 வாங்குவதற்கு, 35 வயது வரை போராடியவர்களும் உண்டு.

நான் மூன்றாம் வகுப்புக்குச் சென்ற உடன் தான் ஆங்கில வகுப்பு ஆரம்பித்தது. ஏ பி சி டி என எட்டு வயதில் எழுத ஆரம்பித்து, வார்த்தைகளை வாசிக்க எட்டாம் வகுப்பு ஆகிவிட்டது. 

அப்போது இந்த அளவுக்கு மினி ஜெராக்ஸ் வசதி இல்லாததால், எங்கள் தெருக்காரர்கள் இங்கிலிஸ் எஸ்ஸேயை சின்ன பாண்டில் பிட்டாக எழுதிக் கொள்வார்கள். அந்த திருப்பணியில் நானும் ஈடுபட்டு, இரண்டாண்டுகள் ஏராளமான எஸ்ஸேக்களை பலருக்கும் எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு வந்ததும், ஆங்கிலத்துக்கு டியூசன் சேர்ந்தேன். இரவில் கூட ஹேஸ் பீன், ஹேவ் பீன் என உளறிக் கொண்டே இருந்ததாக வீட்டார் தெரிவிப்பார்கள். ஒருவழியாக நானும் பிரசித்தி பெற்ற பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் பரிட்சையை எழுதி முடித்தேன்.

ரிசல்ட் வெளியாகும் நாள் நெருங்கியது. காலையிலேயே மாலை முரசுக்கு டோக்கன் வாங்கியாயிற்று. மாலை மூன்று மணி அளவில் ஜேஸி பஸ்ஸில் தான் பேப்பர் வரும். எங்கள் ஊர் நம்பர்கள் மட்டும் தனியாகத் தெரியும். ஏனென்றால் அவற்றுக்கு இடையே மட்டும், இடையில் உள்ளவர்கள் அனைவரும் பாஸ் என்ற கோடு இருக்காது. எல்லாமே ஒத்தை நம்பராகத்தான் வரும். 100 பேருக்கு 20 என்ற விகிதத்தில்தான் மக்கள் பாஸாவார்கள். மதியம் சாப்பிடக்கூட போகாமல் பஸ்ஸ்டாண்டிலேயே பழியாய் கிடந்து, அடிதடி கூட்டத்தில் பேப்பரை வாங்கி, பிரித்து பார்த்தால் என் நம்பர் இருந்தது. எத்தனையோ பேருக்கு, பிட்டுக்கு எஸ்ஸே எழுதிக் கொடுத்த புண்ணியம் தான் என்னை பாஸ் செய்ய வைத்ததாக இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

பத்தாம் வகுப்புக்குப் பின் தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக பல ஊர்களில் வசித்து, பின் எனக்கு கிடைத்த நடுத்தர வகுப்பு வாழ்க்கையை தக்க வைப்பதற்காக பல ஊர்களில் கஜகர்ணம் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

நீண்ட இடைவேளைக்குப் பின் ஊருக்குச் சென்றிருந்தேன். என் நண்பன் ஒருவன் ஊருக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, இப்ப எப்படிடா இங்கிலீஸ் இங்க இருக்கு? என்றேன்.

ம்.அதெல்லாம் நல்ல மார்க் எடுத்துடுறாங்க. ஆனா கேம்பஸ் இண்டர்வியூவில கம்யூனிகேசன் சரியில்லைன்னு ரிஜக்ட் ஆயிடுறாங்க என்றான்.

December 15, 2013

தளபதி பற்றி நானும்

தளபதி படம் பார்க்கப் போனது பற்றி, அந்தப் படம் அளித்த அனுபவம் பற்றி, அதன் சிறப்புகள் பற்றி கடந்த 20 ஆண்டுகளில் பலரும் எழுதிவிட்டார்கள். அதுவும் இணையத்தில் தமிழ் வந்த பின்னால், கடந்த ஆறேழு ஆண்டுகளில் இந்த மேட்டரை சக்கையாகப் பிழிந்து விட்டார்கள். நானும் சில மாதங்களாகவே தளபதி படத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலே, அப்படத்தைப் பற்றி மலையளவு குவிந்திருக்கும் கட்டுரைகள் அந்த எண்ணத்தை அழித்துவிடும்.

திடீரென்று நேற்று, மேல்நிலை வகுப்பில் படித்த ஆங்கிலப் பாடம் ஞாபகம் வந்தது. தாஜ்மஹாலின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லும் அந்தப் பாடத்தில், “எத்தனையோ புகைப்படக்காரர்கள் தாஜ்மஹாலைப் படமெடுத்து விட்டார்கள், என்ன என்ன சாத்தியப்பட்ட கோணங்களோ அனைத்திலும் எடுத்துவிட்டார்கள், எத்தனையோ கவிஞர்கள் தாஜ்மஹாலைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் பாடிவிட்டார்கள். ஆனாலும் இன்னும் யாரேனும்  அதைப் படமெடுத்துக் கொண்டோ, பாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள்” என்று ஒரு வரி வரும்.
அடடா, அப்போ நாமும் தளபதி பற்றி எழுதினால் தப்பில்லை என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்து, டெல்லிக்கு நான் சுற்றுலா போனால், தாஜ்மஹால் முன் நின்று போட்டோ எடுக்காமல் திரும்பி வருவேனா? என்ன?

முதன் முதலில், தளபதியின் பாடல்கள் வெளியாகும் போதே எங்கள் ஊரான வத்தலக்குண்டில் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. ”ராஜ பந்தா ரஜினிகாந்த்” மன்றத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் ஊருக்கு மாலைதான் கேசட் வந்து சேரும் என்பதால், மதுரைக்கு கிளம்பினார்கள். காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பும் “பார்வதி ட்ரான்ஸ்போர்ட்” வண்டியில் முதல் நாளே சொல்லி வைத்து விட்டார்கள். “கேசட் வாங்கிட்டு நம்ம வண்டியில நாங்க 20 பேர் வருவோம். எங்க கேசட் மட்டும் தான் வண்டியில பாடணும்” என்று. 10.30க்கு ஏராளமான கேசட்டுகளையும், சாக்லேட்டுகளையும் வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள்.  

பஸ்ஸே அதகளப் பட்டது. பிரயாணிகள் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து கொண்டாடினார்கள். வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்ததும், வெடி வெடித்து கேசட்டை வரவேற்றார்கள். எல்லா மியூசிக்கல் கடைகளுக்கும் ரசிகர் மன்றம் சார்பிலேயே கேசட் வழங்கப்பட்டது.
அப்போது தளபதியுடன் ரிலீசாகவிருந்த குணா, பிரம்மா, தாலாட்டு கேட்குதம்மா பட கேசட்களும் முன் பின்னாக வெளிவந்தன. கேசட் கடைகளில் எல்லாம் தளபதி-குணா, தளபதி-பிரம்மா, தளபதி-தாலாட்டு கேட்குதம்மா என்றே 60 நிமிட காம்பினேசன் கேசட்டுகள் பதியப் பெற்றன. அதுவும் தளபதியின் எல்லாப் பாடல்களும், மற்றும் மீதமிருக்கும் இடத்திலேயே மற்ற படங்களின் பாடல்கள். இன்னும் சிலர் தளபதி-தளபதி யே பதிந்தார்கள். எல்லாப் பாடல்களும் போக மீதமிருக்கும் இடத்தில் ராக்கம்மாவும், காட்டுக்குயிலும்.

அடுத்த கட்ட நடவடிக்கை, பட ரிலீஸாகும் தியேட்டர்கள் மற்றும் ஊரின் முக்கிய இடங்களில் தட்டி போர்டு வைப்பது. இப்போது போல பிளக்ஸ் காலம் இல்லை அது. நடிகர்களின் பெரிய சைஸ் படங்களும், சின்ன சைஸ் படங்களும் ரசிகர் மன்ற இதழ்களின் மூலமாகவே கிடைக்கும். அந்தப் படங்களை அழகாக வெட்டி தட்டியில் ஆங்காங்கே ஒட்ட வேண்டும். இதற்காகவே எங்கள் ஊரில் ரஜினி ரசிகன், மய்யம், புரட்சிகலைஞர் விஜய்காந்த் போன்ற இதழ்களை வாங்குவார்கள். மய்யம் தவிர மற்ற புத்தகங்களில் நிச்சயம் புளோ-அஃப் இருக்கும்.

இப்போது கூட அக்‌ஷயா பதிப்பகம் அஜீத் ரசிகன், விஜய் ரசிகன் ஆகிய புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும் இன்றும் தொடர்ந்து வெளிவரும் ரசிகர்களுக்கான இதழில் எம்ஜியாரின் இதயக்கனி க்கு தனி இடம் உண்டு.

நக்கீரன் ஆசிரியர் கோபால் தான் ரஜினி ரசிகனையும் நடத்தி வந்தார். அவரின் மற்ற எல்லா இதழ்கள் கொடுக்கும் மொத்த லாபத்தை விட ரஜினி ரசிகனே அவருக்கு அதிக லாபம் கொடுத்தது. அப்போதே அந்த இதழ் 10 ரூபாய்க்கும், சிறப்பிதழ் 20 ரூபாய்க்கும் விற்றது.
தளபதி ரிலீஸின் போது சிறப்பு புளோ அஃப்களுடன் பல புத்தகங்கள் வந்தன. ஹைலைட்டாக தினமலர் தீபாவளி மலருடன் சாமுராய் ஸ்டைல் ரஜினியின் புளோ அஃப் வந்தது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே ஏராளமான தட்டிகள் அந்த புளோ அஃப்களை ஒட்டி தயாராகின.

திண்டுக்கல் நாகா லட்சுமி திரையரங்குகளில் தளபதி ரிலீஸ். ரசிகர் மன்ற ஷோவுக்கான 50 டிக்கட்களை எங்கள் ஏரியா மன்றத்தினர் வாங்கி வந்திருந்தனர். அப்போதே ஒரு டிக்கட் ரூ 100. அதுபோக திண்டுக்கலுக்கு சென்று வர ஏற்பாடு செய்யும் வேன், மதிய சாப்பாடு செலவு எல்லாம்  தனியாக கொடுத்து விட வேண்டும். நானும் ஒரு டிக்கட்டை அடித்துப் பிடித்து வாங்கி விட்டேன். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னர், மன்றத்தாரிடம், ”என்னப்பா, கேசட் ரிலீஸுக்கே சாக்லேட் கொடுத்தீங்க, பட ரிலீஸுக்கு என்னய்யா?” என்று கேட்க. தியேட்டர்ல ஓப்பனிங் ஷோ வர்ற எல்லாருக்கும் லட்டு என அறிவித்தார் மன்ற தலைவர் முருகேசன்.
ஊரில் இனிப்பு வகைகள் செய்வதில் வித்தகரான, கைலாசம் அவர்களிடம் 2000 லட்டு செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டது. 

தீபாவளிக்கு முதல் நாள் மன்றத்தார் பணம் வசூல் செய்து, லட்டு செய்யும் முஸ்தீபுகளில் இருக்க, ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து, வயிறு எரிந்த என்னுடன் சேர்ந்த கமல் ரசிகர்கள் சிலருடன் மதுரைக்கு ஷாப்பிங் கிளம்பினேன். மதுரை நேதாஜி ரோட்டில் ஆரம்பித்து விளக்குதூண், கீழவாசல் வரை நீளும் தீபாவளி ஸ்பெசல் நடைபாதைக் கடைகளை பார்வையிட்டுக் கொண்டே நடந்தோம். ஆங்காங்கே கடைகளில் ஸ்பீக்கர்களில் ராக்கம்மா பாடல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. பாடலுக்கு இடையில் கடை சம்பந்தமான விளம்பரம். எந்தப் பக்கம் திரும்பினாலும் தளபதி டி சர்ட், முண்டா பனியன் போட்டவர்கள் தெரிகிறார்கள்.

என்னடா ஒரு பக்கி கூட நம்மாளு பாட்ட போட மாட்டேன்கிறான் என கடுப்பாகி, எதுவும் வாங்காமலே திரும்பினோம். பஸ்ஸிலும் திரும்ப திரும்ப ரஜினி பாடல்கள்.

தீபாவளியன்று காலை 6 மணிக்கு, மூன்று மெட்டடார் வேன்களில் ரசிகர் படை கிளம்பியது. வேனின் டாப்பில் ஏராளமான தட்டி போர்டுகள். ஒரு வேனின் பாதி கொள்ளளவில் லட்டு கூடைகள்.

7 மணி அளவில் திண்டுக்கல் சென்றடைந்தோம். தியேட்டரில் 5 மணி சிறப்பு காட்சி ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரைச் சுற்றி மீத மிருக்கும் இடங்களில் எல்லாம் எங்கள் ஊர் மன்ற தட்டிகள் வைக்கப்பட்டன. தியேட்டர் மேனெஜரிடம் சொல்லி, ரசிகர்கள் உள்ளே நுழையும் போது, லட்டு கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

படம் தொடங்கியது. சின்னத்தாயவள் பாட்டு ஒலிக்கத் தொடங்கியதும், என்னையறியாமல் படத்துக்குள் சென்றுவிட்டேன். ராக்கம்மாவுக்கும், காட்டுக்குயிலுக்கும் எல்லோரும் எழுந்து ஆடியபோது, ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். வயிற்றெரிச்சலை மீறி, மனதிற்குள் ஒரு மெல்லிய சோகம்.  

படம் முடிந்ததும், திண்டுக்கலில் எல்லோரும் வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம். அந்த சீன் சூப்பர், இப்படி திரும்புவாரு பாரு என்று நண்பர்கள் சுற்றிலும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உற்சாகத்தில் முழுமனதோடு பங்கேற்க முடியவில்லையே என மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

சிவாஜி, எந்திரன் படங்களின் ரிலீஸின் போது சென்னையில் இருந்திருக்கிறேன். ஆனால் தளபதி படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு, ரசிகர்களின் தயாரிப்புகளுக்கு முன்னால் மேற்கண்ட படங்களின் ரிலீஸ் கோலாகலம் ஒரு மாற்றுக் குறைவே.  


கமல் ரசிகராக இருக்கும் இந்த 30 ஆண்டுகளில், நாம ரஜினி ரசிகரா இருந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்? என்று மூன்று முறை நினைத்திருக்கிறேன். அதில் தளபதி ரிலீஸ் நேரமும் ஒன்று.

December 01, 2013

விகடன் 3டி அவசியமா?

மூன்று வாரங்களுக்கு முன் விகடன் 3டி எஃபெக்டில் படங்களைப் பிரசுரித்து, அதைக் காண கண்ணாடியும் கொடுத்த போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. இரண்டாவது இதழ் வந்தபோது, இதற்கு என்ன அவசியம்? எனத் தோன்றியது. மூன்றாவது இதழ் எரிச்சலே ஊட்டியது எனலாம்.

முதல் காரணம், கண்ணாடி அணிந்து பார்த்தால் எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. எழுத்துக்களை மட்டும் படிக்கலாம் என்று பார்த்தால் அருகில் 3டி எஃபெக்டுக்காக பிரிண்ட் செய்யப்பட்ட  படம் உறுத்துகிறது. ஒரு வேளை இதழ் முழுக்க முழுக்க 3டி எஃபெக்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்னவோ?

இரண்டாவது, படங்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் கண்டெண்ட் குறைவாக உள்ளது. இரண்டு வரி ஜோக்கிற்காக ஒரு பக்கம், ஏன் இரண்டு பக்கம் கூட ஒதுக்கியுள்ளார்கள். சினிமா பிரபலங்களின் பேட்டியிலும் படங்களே பெரிதும் ஆக்ரமித்துள்ளன. நான்கு ரூபாய் கொடுத்து வாங்கும் தி இந்து தினசரியை படித்து முடிக்கும் நேரத்தை விட, 20 ரூபாய் விகடனை விரைவில் வாசித்து முடித்து விட முடிகிறது.

மூன்றாவது கண்டெண்ட் குவாலிட்டி :
இதுதான் மிக கவலையூட்டும் அம்சமாக இருக்கிறது. பொக்கிஷம் என கொஞ்சம் பக்கம் போய்விடுகிறது. வலைபாயுதே, இன்பாக்ஸ் என இணையத்தில் இருந்து சில பக்கம், ஐம்பது கிலோ அஸ்கா, குழைந்து விட்ட குஸ்கா என நாயகிகளை வர்ணித்து டெம்பிளேட் சினிமா செய்திகள் என பாதி பக்கத்துக்கு மேல் ஃபில் அப் செய்கிறார்கள். முன்பெல்லாம் விகடனைப் படித்தால் நமக்கு ஏதாவது, தகவல் கிடைக்க வரும். ஆனால் இப்போதோ தகவல் பிழைகள் தான் கண்ணுக்குத் தெரிகின்றன.

நான் வழக்கமாக விகடன் வாங்கும் கடைக்காரரிடம் விசாரித்த போது, இதனால் ஒரு புத்தகம் கூட அதிகம் விற்கவில்லை என்று சொன்னார். புது வாசகர்கள் வேண்டாம். இருக்கிற வாசகர்களையாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள் விகடனாரே.

இப்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், 1950ல் இருந்து 1990 வரை பிறந்தவர்கள் தான் விகடனை வாங்கிப் படிக்கிறார்கள். 90க்குப் பின் பிறந்த யாரும் புத்தகம் அதுவும் விகடன் வாங்கிப் படிப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னும் ரயிலில், பஸ்ஸில் படிக்கும் நடுத்தர வர்க்கமே விகடனை தாங்கிப் பிடிக்கிறது. இளைஞர்கள் கைபேசியைத்தான் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வைக்க என்ன வழி? விகடனை கையில் வைத்திருந்தால் பெருமை என அவர்களை உங்களால் எண்ண வைக்க முடியுமா?


ஒரு நல்ல கதையோ, கட்டுரையோ கொடுக்கும் வாசிப்பின்பத்தை இந்த 3டி ஜில்லாக்கி வேலை கொடுத்து விடுமா? என்ன?.