October 21, 2018

நாயகன்

நாயகன் வெளியான 1987 ஆம் ஆண்டு தீபாவளி தினத்திற்கான சிறப்பு ஒலியும் ஒளியுமில் முதலில் ஒளிபரப்பானது மனிதன் படத்தின் “வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், மனுசனை இன்னும் பார்க்கலியே” பாடல். அதற்கடுத்தாற்போல நான் சிரித்தால் தீபாவளி பாடல் ஒளிபரப்பானது. தெருவில் சில வீடுகளில் மட்டுமே டிவி இருந்த காலம். நிகழ்ச்சி முடிந்ததும், உடன் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டன், எங்க தலைவரைப் பார்த்தியா எவ்வளோ தெளிவாப் பாடுறாரு. உங்க பாட்டும் இருக்கே, காதுக்குள்ளயே போகலை என்று கிண்டலடித்தான். அது உண்மை தான் முதல் வரியைத்தாண்டி எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. 

தீபாவளி முடிந்த அடுத்த வாரம், எங்கள் தெருவில் இருந்து மதுரை கல்லூரிகளின் விடுதிகளில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தவர்கள் சனி, ஞாயிறு விடுமுறைக்கு வந்தார்கள். மனிதன் நல்லாயிருக்கு. நாயகன் புரியலை. அது ஒரு மாதிரிப் போகுது என்றார்கள். இன்று அதை நினைத்துப் பார்த்தால் அதில் புரியாமல் போக என்ன இருக்கு எனத் தெரியவில்லை. ஆனால் அப்போது ஒருவர் சொன்னது முக்கியமானதாகப் பட்டது. அது, வசனமெல்லாம் உத்து கவனிச்சு கேட்க வேண்டியிருக்கு என்றார்.

ஆனாலும் நாயகன் மக்களுக்கு எப்படியோ அப்போது பிடித்துப் போய், நன்றாக ஓடியது. படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் என்னத்த எடுத்து வச்சிருக்காங்க, என்ன ஆகுப்போகுதோ என்று புலம்பினார் என்பார்கள். முதல் இரண்டு நாட்கள் கிடைத்த எதிர்மறைப் பேச்சுகளையும் தாண்டி அந்தப் படம் ஓடியது. ஒருவழியாக 100 நாட்கள் கழித்து எங்கள் ஊருக்கு வந்தது. எங்கள் தெரு அண்ணன் சொன்னது போல, வசனங்களை உற்றுக் கவனிக்க வேண்டியிருந்தது. காரணம் அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் மட்டுமே இருக்கும். ஸைட் ஸ்பீக்கார்கள் சில திரை அரங்கங்களில் மட்டும். மற்றப் படங்களில் எல்லாம் எல்லோரும் ஒரே சத்தத்தில் பேசுவார்கள். அது சாகப்போகும் கிழவியாக இருந்தாலும் சரி, சரசப்பேச்சு பேசும் குமரியாக இருந்தாலும் சரி. வேண்டுமானால் வழக்கத்தை விட சத்தமாக ஹீரோவோ, வில்லனோ கத்துவார்கள். கமல்ஹாசன் படங்களில் கேரக்டருக்கு தகுந்தபடியான, சூழ்நிலைக்கு தகுந்தபடியான சத்தத்திலேயே கேரக்டர்கள் பேசும். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அதுபாட்டுக்கு காதுல வசனம் விழுகணும்யா என்பவர்களுக்கு அது சிறு இடையூறாகவே இருக்கும். பல வசனங்கள் காதில் விழாது. 

இதை 15 ஆண்டுகள் கழித்து அன்பே சிவத்திலும் அனுபவித்தேன். தற்போது கல்யாண மண்டபமாக மாறிவிட்ட உதயம் திரையரங்கில் படம் ரிலீஸ். மாலைக்காட்சி. ஒரிஸ்ஸா காட்சிகளில் விமான நிலைய அறிவிப்புகள் போன்றவை ஸ்பீக்கர் வழியே வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் பல வசனங்கள் காதில் விழவில்லை. சில வருடங்கள் கழித்து நண்பரின் லேப்டாப்பில் இந்தப் படத்தை பார்க்கும் போதுதான் தவறவிட்ட வசனங்கள் தெரிந்தன. 

பி சி ஏரியாக்களில் பல திரையரங்குகளின் நிலை இதுதான். ஒளியாவது முன்னே பின்னே இருந்தாலும் எப்படியாவது பார்த்து விடலாம். ஏனென்றால் நம் கவனம் முழுவதும் திரையிலேயே இருக்கும். இந்த வசனம், பிண்ணனி இசை சரியாகக் கேட்காவிட்டால் என்ன செய்ய முடியும்? ஹேராம் போன்ற ஒரு படத்தை சி செண்டரில் பார்த்தால் இதன் முக்கியத்துவம் தெரியும். ஒன்றிரண்டு வசனங்கள் தான் காதில் விழும், அதுவும் வேற்று மொழியில் இருக்கும். விருமாண்டி படத்தை கிராமத்தில் பார்க்கும் போதும் இந்த கஷ்டம் புரிந்தது. 

காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் இந்த மூன்றையும் தியேட்டரை விட தொலைக்காட்சியில் தான் நன்கு ரசிக்க முடிந்தது. காரணம் எல்லா வசனங்களும் தெளிவாக காதில் விழுந்தன. நானும் ரவுடி தான் படத்தை எங்கள் ஊரில் பார்த்து விட்டு சுமாராத்தான இருக்கு, இதுக்கு எதுக்கு இவ்வளோ பாராட்டுன்னு நினைச்சேன். அப்புறம் ஒரு நல்ல தியேட்டர்ல பார்த்த பின்னாடிதான் பரவாயில்லைன்னு தோணுச்சு. மெட்ராஸ் படமும் அப்படித்தான். என் கணக்குப்படி தமிழ்நாட்டுல எப்படியும் 40% தியேட்டர்கள் இந்தப் பிரச்சினையோடதான் இருக்கு. அதனால தான் தெளிவான தயாரிப்பாளர்கள், ஹரி, கே எஸ் ரவிகுமார் எல்லாம் எல்லோரையும் ஒரே டெசிபல்ல பேச வச்சிடுறாங்க போல. ஷங்கர் கூட கவனிச்சுப் பார்த்தா எளிமையான வசனம், நார்மல் டெசிபல்லயே பேச வைக்கிறார். சென்னையில் ஒரு படம் பார்க்கிறதுக்கும் செம்பட்டியில் ஒரு படம் பார்க்கிறதுக்கும் இருக்கிற வித்தியாசங்கள்ள இதுவும் ஒண்ணு. 

October 08, 2018

ஒரு தலை ராகம்


ஒருதலைராகம் படம் 1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க ஒரு முப்பது தியேட்டர்களுக்கு உள்ளாகவே வெளியானது. படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசை அமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே  ஏறக்குறைய புதுமுகங்கள். சரி போய்த்தான் பார்ப்போமே என்று அன்று தியேட்டருக்குள் நுழைந்தவர்களுக்கு தெரியாது தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டப்போகிறது என்று. படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம் எனப் புரிந்து கொண்டார்கள். அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 16 வயதினிலே கொடுத்த அதே புதுமை. 16 வயதினிலே அதுவரை காட்டியிராத கிராமத்தைக் காட்டி இருந்தது என்றால் இதில் சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ்சினிமாவில் காட்டி இருந்தார்கள்.

இந்தப் படம் முதலில் வசீகரித்தது கல்லூரி மாணவர்களை. நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா என கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள், பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அதுவரை தமிழ்சினிமாவில் கல்லூரி என்றாலே மாணவர்கள் கூட கோட்சூட் அணிந்து செல்வார்கள் என்னும் அளவுக்கு நிஜத்தில் இருந்து விலகியே இருக்கும். பெரும்பாலும் 40வயதைக் கடந்த கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாகத் தோன்றுவார்கள், ஆனால் நாம் கண்முன்னால் பார்க்கும் கல்லூரியை. மாணவர்களை, அவர்களின் இயல்பான நடை,உடை,பாவனைகளுடன் உலவவிட்டது ஒருதலை ராகம்.
குறிப்பிட்ட வார்த்தைகளுடனேயே புழங்கும் ஒரு சமூகத்திற்குள் பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி,திரைப்படம் மூலமாகத்தான் புதிய வார்த்தைகள்  சென்று சேரும். அல்லது அந்தப்பகுதிக்கு வரும் மற்றவர்களாலும் புதிய வார்த்தைகள் அறிந்து கொள்ளப்படும். தொலைக்காட்சி இல்லாத, அதிகம் பேர் பத்திரிக்கை படிக்காத அந்த நாட்களில் திரைப்படங்கள் மூலமே பல வார்த்தைகள் கிராமம் மற்றும் சிற்றூர் பகுதிகளில் உள்ளே வந்தன. அப்படிப்பார்த்தால் கல்லூரி மாணவர்களிடையே சகஜமாகப் புழங்கும் மச்சி, மாமூ போன்ற வார்த்தைகள் இந்தப்படத்தின் மூலமாகவே கிராமப்புறங்களில் கூட நுழைந்தன.

காதலியைத் தொடாமல்,பேசாமல் காதலன் காதலித்த முதல் படம் இதுதான். ஒரு வகையில் இதயம் திரைப்படத்துக்கு முன்னோடி.   காதலி குடும்பச்சூழல் மற்றும் அவள் சந்தித்த ஆண்களின் மீதான வெறுப்பு காரணமாக காதலிக்க மறுக்கிறாள். உற்சாக உருவாய் வளையவந்த காதலன் மனதுடைந்து நோய் வாய்ப்படுகிறான். காதலி மனம்மாறும் தறுவாயில் இறந்து விடுகிறான். இந்தப் படத்தில் இருந்துதான் நாயகனுக்கு அவன் சமவயதிலேயே ஒரு நண்பர் கூட்டம், அதில் ஒரு காமெடியன், இறுக்கமான மனதுடையவன் ஒருவன் மற்றும் ஜாலியான இருவர் என்ற பார்முலாவும் தமிழ்சினிமாவுக்கு கிடைத்தது.

டி ராஜேந்தர் இயக்கியது, ஆனால் இப்ராஹிம் என்பவர் பெயரில் வெளியானது என்று சொல்வார்கள். இசை பாடல்கள் டி ராஜேந்தர் தான். சங்கர், ரவீந்தர்,தியாகு, சந்திரசேகர் ஜோதி, உஷா (பின்னாளில் டி ஆரின் மனைவியானார்), ஆகியோர் நடித்தது.

ஒருதலை ராகத்தின் கதை, கதை நடக்கும் களம் போலவே இன்னொரு ஆச்சரியம் கொடுத்தது அந்தப் படத்தின் பாடல்கள். அப்போது ஓரளவு வசதியான ஆட்கள் மட்டுமே டேப் ரிக்கார்டர் வைத்திருப்பார்கள். எனவே ஒரு பாடல் நன்றாக இருக்கிறதென்றால் இப்போது போல எல்லோரும் நினைத்த உடன் கேட்டுவிட முடியாது. வானொலியில் எப்போதாவது ஒலிபரப்பினால்தான் உண்டு. தியேட்டருக்குச் சென்றுதான் கேட்க முடியும். எனவே ஒரு தலை ராகத்தின் பாடல்களைக்கேட்க மக்கள் திரும்ப திரும்பச் சென்று பார்த்தார்கள். கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மன்மதன் ரட்சிக்கனும் இந்த மன்மதக்காளைகளை
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
கொக்கரக்கோழி கூவுற வேளை
இது குழந்தை பாடும் தாலாட்டு
கடவுள் வாழும் கோவிலிலே
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் கதை முடியும் நேரமிது.
இதில் இது குழந்தை பாடும் தாலாட்டு பாடலில் வரும் எல்லா வரிகளும் எதிர்உவமையாக அமைந்திருக்கும்

நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

நான் ஒரு ராசியில்லா ராஜா பாடலை டி எம் எஸ் பாடினார். அதன்பின் தனக்கு வாய்ப்பே இல்லை. அப்பாடல் சென்டிமெண்டலாக என்னை பாதித்து விட்டது என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

மேலும் அப்போது டிடிகே மற்றும் சோனி கம்பெனிகளின் கேசட் மட்டும்தான் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம். தியேட்டர் பால்கனி டிக்கட் மூன்று ரூபாய்க்குள் இருந்த காலத்தில் அந்த கேசட்டுகளின் விலை 45 ரூபாய் என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். குல்சன்குமார் டி சீரிஸ் கேசட்டுகளை சகாய விலைக்கு தயாரித்து விற்க ஆரம்பித்த உடன் தான் அதிக அளவில் மக்கள் கேசட்டுகளை வாங்கத்துவங்கினார்கள். அதற்கு அடுத்தபடியாக 90களின் ஆரம்பத்தில் 10 ரூபாய்க்கு கேசட் கிடைக்க ஆரம்பித்த உடன் மக்கள் இன்னும் அதிகமாக வாங்கத் துவங்கினார்கள். அந்த சமயத்தில் எந்த ஹாஸ்டல் ரூமுக்குள் நுழைந்தாலும் ஒரு பாடல் கேசட் நிச்சயம் இருக்கும். அது ஒருதலைராகம் படத்தின் கேசட். அதனுடன் காம்போவாக இரயில் பயணங்களிலும் சேர்ந்து பதியப்பட்டிருக்கும். 10 ஆண்டுகள் முன் வந்த ஒரு படத்தின் பாடலுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று நினைத்த்துண்டு. ஆனால் இன்று வரை  அந்தப் படத்தின் பாடல்களுக்கு மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
எப்படி கிளாசிக்கல் டான்ஸுக்கு சலங்கை ஒலியின் ஓம் நமச்சிவாய இன்றுவரை கல்லூரி விழாக்களில் உபயோகப்படுகிறதோ அதுபோல ரெட்ரோ பாடல்கள் பாடுபவர்கள் இன்னும் ஒருதலை ராகத்தின் மன்மதன் ரட்சிக்கணும், வாசமில்லா மலரிது பாடல்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநர் டி ராஜேந்தர்தான் என்பதை தன் அடுத்தடுத்த படங்களில் அவர் நிரூபித்துவிட்டார்.

தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் கல்லூரி சார் படங்கள் தமிழில் வெளிவர ஒருதலை ராகம் ஒரு  காரணமாக அமைந்தது.  இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் ராஜசேகரன்.  இவர்கள் அடுத்த ஆண்டிலேயே குறைந்த முதலீட்டில் பாலைவனச் சோலை படத்தை எடுத்து அதை மிகப்பெரும் வெற்றிப்படமாக்கினார்கள்.
1980களில் சிறு நகர கல்லூரி எப்படி இருக்கும்? மாணவர்கள் என்ன மாதிரி ஆடை அணிவார்கள்? அவர்கள் கையில் என்னென்ன உபகரணங்கள் இருக்கும் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு தலை ராகம் படத்தைப் பாருங்கள். கூடுதலாக காதலிக்க அத்தனை தகுதிகள் இருந்தும், காதலைச் சொல்ல முடியாமல், அதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் ஒரு பெண்ணை காதலித்தவனின் வலியையும் தெரிந்து கொள்ளலாம்.