December 25, 2011

கார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு

நண்பனொருவனின் காலம் கடந்த திருமணத்தின் போது நடந்த மது விருந்தில் பொது நண்பன் மூலம் அறிமுகமாகி, பழைய புத்தகக்கடை வைத்திருந்த காரணத்தினால் நெருக்கமானவர் கார்ல்மார்க்ஸ் (எ) சிவசுப்ரமணியன். அவர் தந்தை சித்த வைத்தியர். உடனே அவரை அகத்தியர், போகர் ரேஞ்சுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சித்த வைத்தியசாலையில் உதவியாளராய் இருந்து காய்ச்சல்,தலைவலி மற்றும் வயிற்றுவலி போன்ற எவர்கிரீன் நோய்களுக்கான சூரண பார்முலாவை கற்றுக் கொண்டு தனியே கடை போட்டவர். இலவச இணைப்பாக ஓம வாட்டர் செய்யும் பார்முலாவையும் லவட்டிக் கொண்டு இருந்தவர்.

அந்த பார்முலாதான் இப்போதும் கார்ல் மார்க்ஸின் மூலதனமாக இருந்து வருகிறது. சுற்று வட்டார குழந்தைகள், பாஸ்ட் புட் கஸ்டமர்கள், கோபமுற்ற மனைவிகளின் கணவர்கள் ஆகியோருக்கு வரும் அஜீரணக் கோளாறுகளை கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் தான் குணப்படுத்தி வருகிறது. ஓமத்தை இடித்து சில பல பொருட்களை சேர்த்து (ஆமா பெரிய கிரையோஜெனிக் பார்முலா என்று கிண்டலடிப்பார் ஏங்கெல்ஸ்) சுடுதண்ணியில் கலக்கி, டாஸ்மாக்கில் இருந்து பெறப்பட்ட பீர் பாட்டில்களில் அடைத்து கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் என்ற லேபிளை ஒட்டிவிட்டால் தோழர் ஒரு வாரம் இயக்கப் பணிக்கு வந்து விடுவார்.

இடை இடையே மாக்ஸிம் கார்க்கி பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து கணக்கு வழக்குப் பார்ப்பார். அந்த நேரத்தில் அவர் நண்பர்கள் லெனின், ஸ்டாலின், ரணதிவே மற்றும் ஜோதிபாசு ஆகியோரில் யாராவது அங்கிருப்பார்கள்.

இவர்கள் அனைவரின் பெயர் மாற்றத்திற்கும் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன் அத்தெருவிற்கு குடிவந்த காம்ரேட் ஒருவர்தான். அனைவரையும் மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர வைக்குமளவுக்கு அவரிடம் பேச்சுத்திறமை இல்லை. ஆனால் பெண்கள் இருவர் இருந்தார்கள். ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும் ஏரியா அது. அங்கே கும்மிருட்டில் கூட முகம் தெரியும் கலரில் இரண்டு வயசுப் பெண்கள் எண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும்? மார்பிள் போல இருக்கும் இட்லியில் உப்பு அதிகமான சாம்பாரை ஊற்றி சாப்பிடும் போது கூட அந்தப் பெண்களின் முகம் ஞாபகம் வந்துவிட்டால் ம்ம் டிவைனாக மாற்றிவிடும் அளவுக்கு லட்சணமான பெண்கள்.

இதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத அந்த ஏரியா வயசுப் பையன்கள் அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். ஞானஸ்னானம் செய்யும் போது பெயர்களை மாற்றுவது போல தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள். கவனமாக ராகுல சாங்கிருத்தயன் என்னும் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார்கள். ஏனென்றால் அது மச்சினன் பெயர். ஆனால் பரிதாபமாக ஒன்றிரண்டு வருடங்களில்அவர்கள் வீடு மாறிப் போய்விட அம்மை போனாலும் தழும்பு நிரந்தரம் என்னும் கதையாக பெயரும், கம்யூனிஸ ஆதரவும் மட்டும் இவர்களிடம் தங்கிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் கார்ல்மார்க்ஸ் என்னிடம் வந்து, ஒரு பசுமாடு வளர்க்கணும் தோழர், உங்களுக்குத்தான் கிராமத்துல நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களே, ஏதாச்சும் ஒண்ணை அமைச்சு விடுங்க என்று கேட்டுக் கொண்டார். காரணம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன் எம்ஜியார் பாட்டைக் கேட்டதாகவும், அதில் இருந்த

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு”

என்ற வரிகள் கவர்ந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அது லட்சுமி என்றெல்லாம் ஓவராக பீல் பண்ணினார்.

உழைப்புக்கு உருவகமான காளை மாடுதானே கம்யூனிசத்திற்கு அடையாளம். பசுமாடு பூர்ஷ்வா இன குறியீடாயிற்றே என்ற சிந்தனை எனக்கு வந்தாலும், இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன்.

பசுவுக்காக அலையும் போதுதான் இத்தனை ரகங்கள், சூட்சுமங்கள் இருக்கிறது என்பதே தெரியவந்ததே. சாதாரண மாடே 100 சிசி பைக்கை விட அதிக விலை விற்கிறது. அதில் கூட இனிசியல் போதும். இதில் சிங்கிள் பேமண்ட். ஈனப் போகும் மாட்டுக்கு தனி விலை. ஆர்வமாய்த்தான் இருந்தது. தோழர் கூட கேட்டார். நீங்க கூட ஒண்ணு வாங்கலாமே என்று.

மார்க்ஸுக்கு சொந்த வீடு. மாடு கட்ட சிறிது இடமும் இருந்தது. நான் இருப்பதோ வாடகை வீடு. முதல் மாடி. மகன் ஓடினாலே கீழே இருந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆசை இருக்கு மாடு வளர்க்க, அதிர்ஷ்டமிருக்கு ஸ்கிரீன் சேவராக்க.

ஒரு வழியாக நாப்பத்தஞ்சாயிரத்துக்கு படிந்தது. வண்டி வாடகை, தரகு கூலி என அரை லானா ஆகிவிட்டது. பிருந்தா காரட் என்ற பெயரை எங்கள் குழு அதற்கு பரிந்துரைத்தது.

இப்போதெல்லாம் தோழரை புத்தகக் கடையிலோ, பொதுக்கூட்டங்களிலோ காண முடிவதில்லை. மாட்டுடன் ஐக்கியமாகிவிட்டார. கன்றும் ஈந்தது அது. நீண்ட நாட்களுக்குப் பின் தோழர் சீம்பாலில் செய்த இனிப்புடன் எங்களை எதிர்கொண்டார்.

எதற்கு இந்த அவதாரம் என ஏங்கெல்ஸ் நேரடியாகவே கேட்டார். ”ஒரு கம்யூனிஸ்ட்டாக உழைப்பின் அருமையை, விவசாயிகளின் கஷ்டத்தை அறிய” என மேடைப் பேச்சுக்காக தயாரித்திருந்த உரையில் சில பகுதிகளை எங்களிடம் அவிழ்த்து விட்டார்.

”யாரையும் சந்தேகி” என எங்கள் பேராசான் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்றோம். தோழர் பிடி கொடுக்கவில்லை.

பின்னர்தான் தெரியவந்தது. தோழரின் எட்டாவது படிக்கும் பெண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்து கொண்டிருக்கும் சங்கதி. வீட்ல மாடு கண்ணுன்னு இருந்தா வீடு நச நசன்னு இருக்கும், வீட்டு பொம்பளைகளுக்கு அதை ஒதுங்க வைக்கவே நேரம் இருக்காது, வேளை அதிகமா இருக்கும் போது அலங்காரம் பண்ணத் தோணாது, என்ற யோசனையில் தான் தோழர் பசு வாங்கியிருக்கிறார்.

அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன?

December 24, 2011

திருமங்கலமும் முல்லை பெரியாறும்

மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்த ஊர் அதனால் திருமாங்கல்ய ஊர் என வழங்கப்பட்டு திருமங்கலம் எனத் திரிந்ததாக ஒரு கதை இந்தப் பக்கம் உண்டு. இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் பன்னிக்குண்டு. ஆதி காலத்தில் பன்னீர் மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் பன்னீர் குண்டு எனப் பெயர் பெற்று இப்போது பன்னிக்குண்டாக மாறிவிட்டது என்ற செய்தியால் திருமாங்கல்ய கதையையும் நம்பத் தொடங்கி இருந்தேன்.

அந்த பன்னிக்குண்டின் இளைய தலைமுறை தங்கள் ஊர் பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஆதி பெயரான பன்னீர்குண்டையே நிறுவிவிட வேண்டும் என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஊரில் உள்ள சைக்கிள், பைக், கார், ட்ராக்டர் முதல் கொண்டு மாட்டு வண்டி வரை உரிமையாளர் பெயரை சிறிதாக எழுதி பன்னீர் குண்டு என்பதை முரட்டாக எழுதி வருகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு.

திருமாங்கல்யத்துக்கு சாட்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணம் கிடைத்தது. அப்போது பெய்த பெரு மழையால் மக்கள் ஆக்ரமித்த பகுதிகளில் பெரு வாரியாக தண்ணீர் தேங்கி, அரசின் கவனத்துக்கு வந்தது. ஆக்ரமிப்பை அகற்ற சகல துறையினரும் சேர்ந்து வந்த போது மக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை கொண்டு அதை தடுக்க முயன்றனர். அதில் ஒருவர் கொண்டு வந்த செப்பு பட்டயத்தை பார்த்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள். அதில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானைகளை குளிப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்ட வாய்க்காலே இப்போது ஆக்ரமிக்கப்பட்ட ஓடை என்னும் செய்தி இருந்தது. எங்கள் முன்னோர்கள் தான் யானையை குளிப்பாட்டினார்கள், அதனால் இதை ஒட்டி தங்கிக் கொள்ள எங்களுக்கு திருமலை நாயக்கர் அனுமதி கொடுத்தார் என்று வாதிட்டார் அந்த பட்டய உரிமையாளர்.
ஆனால் இன்றைய திருமங்கலம் நடுத்தர வர்க்கத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு சிறு நகரம். சென்ற தலைமுறையினர் பெரும்பாலும் ஈடுபட்டது ஆசிரியர் பணி. இடம் வாங்கி வீடு கட்டி, மகனை சாப்ட் வேரில் தள்ளிவிட்டு சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் சராசரிகள் நிறைந்த ஊர். பொறியியலுக்கு இணையாக பி எட், டீச்சர் ட்ரைனிங் படிக்கும் ஊர் இது. தற்போது அம்மா டீச்சர் எலிஜிபிலிடி டெஸ்ட் என்று அறிவித்த உடனேயே பல ட்ரைனிங் செண்டர்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


30,000 ஓட்டுக்கள் உள்ள இந்த ஊரில் சராசரி மாத வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மட்டும் 5000க்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு டிசைனர் ஷோ ரூமோ, நல்ல திரையரங்குகளோ இல்லாத ஊர் என்பதில் இருந்தே எந்தளவுக்கு சிக்கனமானவர்கள் இங்கு இருப்பார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தேர்தல் ஒரு துன்பியல் சம்பவம்.

மக்கள் இங்கே அடிதடி அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. ஒரு உதாரணம். சென்ற திமுக ஆட்சியில், கருணாநிதி குடும்பத்தை கிழி கிழி யென்று அதிமுக பேச்சாளர் கிழித்தார். அதனால் அப்போதைய நகரச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய அழகிரி, ”ஏன் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அடிச்சு நிப்பாட்டலை?” என்று கேட்டார். பதில் அளித்த நகரம், அண்ணே இந்த ஊர்ல அடிதடி பண்ணுனா ஓட்டே போட மாட்டங்கண்ணே என்று பதில் அளித்தார். கோபப்பட்ட அழகிரி, அவரை மாற்றிவிடுமாறு தலைமைக்கு ஓலை அனுப்பினார்.

அடுத்து வந்தவரும் சரி. அதே போல் சம்பவங்கள் நடந்தபோது அமைதி காக்கவே முடிந்தது.

இரண்டு ஆண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளினால் இந்த ஊர் யார் குடியையும் கெடுக்காத சுயநல ஆசாமிகள் கொண்ட ஊர் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

ஆனால் முல்லை பெரியாறு என் மனதை மாற்றிவிட்டது. பல சங்கங்கள் தாங்களாகவே முன் வந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக ஒரு ராணுவ ஒழுங்குடன் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த சங்கம் போராடுகிறதோ அவர்கள் 100% ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள். பொது மக்களின் ஆதரவும் அமோகம்.

பெருமையாக இருக்கிறது இங்கே இருக்க.

December 23, 2011

தமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு

இரண்டாம் முறை பார்க்கும் படியாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கூட வராத ஆண்டு என்றால் அது 2001 தான். இது ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அறிமுக ஆண்டாகவும், சூர்யாவுக்கு (நந்தா) இரண்டாவது அறிமுக ஆண்டாகவும் அமைந்தது. மணிரத்னத்தின் உதவி இயக்குநர் அழகம் பெருமாள் டும் டும் டும் மூலமும், ஒளிப்பதிவாளர் ஜீவா 12பி மூலமும் இந்த ஆண்டு இயக்குநர் அவதாரமெடுத்தார்கள்.2000 ஆண்டு முழுவதும் பொறுமை காத்த விக்ரமுக்கு இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் அடியாக விழுந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் மூலம் தேவயானியின் கணவர் விக்ரமை மண்ணுக்கு கொண்டு வந்தார். ஆனால் காசி மற்றும் தில் மூலம் விக்ரம் நாயகன் அந்தஸ்தை இந்த ஆண்டு அடைந்தார். ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் என்று வீரப்பன் கதையை எடுத்து படம் வெளி வரும் முன் விசிடியில் 50 நாட்கள் ஓட்டி சாதனை படைத்த தரணி, தில் மூலம் விக்ரமுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை இந்த ஆண்டு கொடுத்தார்.

வானத்தைப் போல, வல்லரசுவின் வெற்றிக்குப் பின் பெரும் சக்தியாக மாறவிருந்த விஜயகாந்தை கவிழ்த்தவர்கள் வாஞ்சி நாதனும், நரசிம்மாவும். நரசிம்மாவின் இயக்குநரும், பத்திரிக்கையாளரும், வேலாயுதத்தின் ஒரிஜினலை இயக்கியருவருமான திருப்பதிசாமி படம் முடிவதற்குள் இறந்தது பெரும் சோகம். ஆண்டின் பிர்பகுதியில் வந்த தவசி விஜயகாந்த்துக்கு ஆசுவாசம் கொடுத்தது.

விஜய்க்கு வழக்கம் போல பிரண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக்கின் மூலம் சுமாரான வெற்றியும், பத்ரி என்ற தெலுங்கு ரீமேக்கின் மூலம் தோல்வியும் கிடைத்தது. பிரண்ட்ஸ் மூலம் தமிழுக்கு நல்ல வசனமும், காமெடி சேனல்களுக்கு வருமானமும் கிடைத்தது.

தீனாவின் மூலம் அஜீத்துக்கு தலை என்னும் பட்டப் பெயர் கிடைத்தது. சிட்டிசன் மூலம் சுமாரான தோல்வியும், பூவெல்லாம் உன் வாசம் மூலம் படு தோல்வியும் கிடைத்தது.

கமல்ஹாசன் ஆளவந்தான் என்ற படத்தைக் கொடுத்து பலரை கடனாளியாக்கினார். தவசி வெற்றிப் படம் என்று சொல்லுமளவுக்கு ஆளவந்தானின் தோல்வி அமைந்தது.சுந்தர் சி யும் தன் பங்குக்கு உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள் என்று மொக்கை போட்டார். மாயன் மூலம் நாசரும் நம்மை துன்புறுத்தினார். சிங்கீதம் சீனிவாசராவும் லிட்டில் ஜான் என்று பலரை அலற வைத்தார். சேரன், பாண்டவர் பூமி மூலம் குழப்பமான கருத்தை முன் வைத்தார். 60ல் வந்திருக்க வேண்டிய அண்னன் தங்கச்சி கதையை கே எஸ் ரவிகுமார் 2001ல் சமுத்திரம் என்ற பெயரில் எடுத்தார்.

மாதவன் நடித்த மின்னலே ஓரளவுக்கு பொழுது போக்கு படமாக அமைந்தது. அந்த ஆண்டுக்கான சிறந்தவைகளாக சுஜாதா கற்றதும் பெற்றதும் இல் பட்டியலிட்டதில் இந்தப் படம் இடம் பெற்றது.

கல்லூரி மாணவர்கள் கட் அடித்து காலைக்காட்சி போக வாய்ப்பாக வந்த படம் தான் சாக்லெட். மல மல என்று மும்தாஜ் ஆடியதில் அப்பட நாயகிக்கு கால் இஞ்சி ஜல்லி கூட கிடைக்கவில்லை.

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை வைத்து புது இயக்குநர் ஜானகி இயக்கிய குட்டி கவனிக்க வைத்த திரைப்படம்.
ரஜினி பாபாவுக்காக கடும் ஆராய்ச்சியை இந்த ஆண்டில் தான் மேற்கொண்டு இருந்தார்.

விவேக் (மின்னலே, மஜ்னு), வடிவேல் (பிரண்ட்ஸ், தவசி) மூலம் காமெடி சேனல்களுக்கு நல்ல வருமானம், மற்றும் ஹாரிஸின் நல்ல பாடல்கள் (மின்னலே, மஜ்னு, 12பி) தான் இந்த ஆண்டின் சிறப்பு என்றால் எவ்வளவு வறட்சியான ஆண்டு இது?

December 22, 2011

செகண்ட் ஷோ நிறுத்தப்படுகிறதா?

மற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால் எங்கள் ஏரியாவில் செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்கும் காட்சியாக இருந்தது. அதுவும் மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை பெண் வீட்டார் ஒரு படத்துக்காவது நிச்சயம் அழைத்துச் செல்வார்கள். இரவு உணவை ஒன்பது மணி அளவில் முடித்துவிட்டு சீவி சிங்காரித்து மாலையிலே கட்டி ஈரத்துணியில் சுற்றி வைத்திருக்கும் மல்லிகைப்பூவை தலையில் சூடி ஜிகு ஜிகு வென அந்த குடும்பத்தார் இரண்டாம் ஆட்டத்துக்கு கிளம்புவார்கள். திரையரங்கு முன்பாக ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அந்த மணலில் உட்கார்ந்து கொள்வார்கள். வறு கடலை வண்டி, சோன் பப்டி வண்டி போன்றவை ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். முதல் முறை வரும் போது மாப்பிள்ளைக்கு கவனிப்பு பலமாக இருக்கும். டிக்கெட் வாங்கி உள்ளே சென்றதும் ஃபேனுக்கு நேராக மாப்பிள்ளை, பெண் உட்காருமாரு பார்த்துக் கொள்வார்கள். நெருக்கமான காதல் காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ மனைவியின் கையைச் சுரண்டி அச்சாரம் போடும் புது மாப்பிள்ளையும், வீட்டார் அடுத்தடுத்து உட்கார்ந்திருப்பதால் சங்கோஜத்துடன் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்புடன் நெளிந்து கொண்டே படம் பார்க்கும் புதுப் பெண்ணும் பேரழகு. இடைவேளையில் சூடான பஜ்ஜியுடன் டீ, பெண்களுக்கு கோன் ஐஸ் என வீட்டின் கடைக்குட்டிகள் வாங்கி வருவார்கள்.

பக்கத்து கிராமங்களில் இருந்து மணமான தம்பதிகள் குழந்தைகளுடன் சைக்கிளில் வருவார்கள். அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வரும் அந்த கணவன் தன் மனைவியிடம் சொல்லுவான் “ கணேசன் அருமையா நடிச்சிருக்கிருராம்மா, நேத்து அழுகாத பொம்ப
ளைகளே இல்லையாம். ஸ்டாண்ட்ல சொன்னாக” என்று.

மனைவியும் அதைக் கேட்டுக் கொண்டே ”ஆமாமா, வெக்கிலு அக்கா கூட மத்தியானம் தண்ணியெடுக்கும் போது சொன்னாங்க” என்றபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு தங்கப்பதக்கத்தை பார்க்கப் போவார்கள்.

நாடக காலத்தின் தொடச்சியாக வழங்கி வந்த பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பதப் பிரயோகம் கான்கிரீட் தியேட்டர்கள் வந்த பின்னும் மாறவில்லை.

காலைக் காட்சி என்பது வேலையே இல்லாதவர்கள், பள்ளி, கல்லூரி கட் அடித்து வரும் மாணவர்கள் பார்ப்பது. மதியக் காட்சி என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் தெருப் பெண்களோடு பார்ப்பது. மாலைக் காட்சி என்பது வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் செட்டோடு வந்து பார்ப்பது. செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு பார்ப்பது.

ஒரு படத்தை எப்போது தூக்குவது என்பதை செகண்ட் ஷோ கூட்டத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்வார்கள். நேத்து 40 பேர் தான் வந்தாங்க, அதான் இன்னைக்கு படகோட்டிய போடச் சொல்லிட்டேன் போன்ற உரையாடல்கள் சகஜம்.

சில டீக்கடைகள், பெட்டிக்கடைகள் இந்த செகண்ட் ஷோ முடிந்து வரும் கூட்டத்துக்காகவே காத்திருக்கும்.

மதுரை, திண்டுக்கலில் இருந்து வாலிபர்கள் கோவைக்குச் செல்லும் போது இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு ஏறினால் காலையில் கோழி கூப்பிட சென்று விடலாம் என்று ஒரு கணக்கோடு படம் பார்க்க போவார்கள். லாட்ஜுகளில் தங்கியிருப்பவர்களுக்கு, அடுத்த நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரம் கடத்த உதவியதே இந்த செகண்ட் ஷோக்கள் தான்.

கால சுழற்சியின் விளைவாக இந்த செகண்ட் ஷோ பார்ப்பதற்கான காரணங்கள் அருகி வருவதால் இப்போதெல்லாம் கூட்டமே வருதில்லை. சமீபத்தில் மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இதைப் பற்றிய பேச்சு வந்துள்ளது. மதுரை புற நகர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் செகண்ட் ஷோ நட்டத்தில் நடந்து வருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனதாக இந்தக் காட்சியை நிறுத்தினால் ஆதரவு தருவதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

மனதுக்கு பிடித்த ஒவ்வொன்றாக வாழ்வில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் புது வரவுகளும் இருப்பதால், டேக் இட் ஈஸி

December 21, 2011

2000ஆவது ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

விஜயகாந்த், விவேக் மற்றும் ரஹ்மானுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய 2000, பிரபு, மீனா ஆகியோருக்கு தங்கள் நட்சத்திர அந்தஸ்தை இழந்த ஆண்டாக ஞாபகத்தில் இருக்கும். மணிரத்னத்தின் கடைசி வியாபார ரீதியிலான வெற்றிப்படம் அலை பாயுதே இந்த ஆண்டில் தான் வெளிவந்தது. ஹேராம், தெனாலி என வானவில்லின் இரண்டு எல்லைகளைப் போன்ற படங்களை கமல் கொடுத்தது இந்த ஆண்டில்தான்.

விஜயகாந்த்

சரிந்து கிடந்த கேப்டனின் மார்க்கெட் விக்ரமன் இயக்கிய வானத்தைப் போல படம் மூலம் எழுந்து நின்றது. மொக்கை காமெடி, அரதப் பழசான செண்டிமெண்ட் சீன்கள் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெற்றது. விகரமனுக்கும் இதுதான் கடைசி வணிக வெற்றிப் படம். என் கதையை சுட்டுவிட்டார் என்று பொருமிக் கொண்டே லிங்குசாமி எடுத்து அடுத்த ஆண்டு வந்த ஆனந்தம் படமும் வெற்றி பெற்றது. தற்போதும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் வெற்றி பெருவதைப் பார்க்கும் போது கூட்டுக் குடும்ப அமைப்புக்கு தமிழக ஆண்கள் ஏங்குகிறார்களோ என்னும் எண்ணம் எழுகிறது.

அடுத்து வந்த வல்லரசுவின் வெற்றியே விஜயகாந்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆக்‌ஷன் படத்தை வெற்றி பெற வைக்க ஹீரோவின் மாஸ் முக்கியம். இப்பட வெற்றியின் மூலம் கேப்டனுக்கு மாஸ் இன்னும் இருக்கிறது என்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்தார்கள். கமலா தியேட்டரில் இதற்காக அவருக்கு விழா நடத்தி வீர வாளும் கொடுத்தார்கள். இதன்பின் இப்பட இயக்குநர் மகராஜன் இயக்கிய எந்தப் படமும் வெற்றியடைய வில்லை.

விவேக்

கிக்கிரி பிக்கிரி காமெடிகளைப் பண்ணிக் கொண்டிருந்த விவேக்குக்கு இது திருப்புமுனை ஆண்டு. திருநெல்வேலி படத்தில் தன் காமெடி டிராக்கில் எம் ஆர் ராதா எலிமெண்ட்ஸை கொண்டு வந்தார். அது சின்ன கலைவாணர் பட்டம் வரை அவரை கொண்டு சென்றது. தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளையில், டபுள்ஸ், சுதந்திரம், குஷி ஆகிய படங்களில் திரையரங்கை அதிர வைத்தார். பாளையத்து அம்மனில் மூட நம்பிக்கைகளை சாடி செய்த காமெடி டிராக்கும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வின்னர் கைப்புள்ள 2004ல் வரும் வரையில் நம்பர் 1 அந்தஸ்தை இந்த ஆண்டுப் படங்களின் வாயிலாக பெற்றார்.

ரஹ்மான்

தால் பட வெற்றிக்குப் பின்னர் இந்தி மற்றும் ஹாலிவுட்டுக்கு ஷிஃப்ட் ஆகும் முன் ரஹ்மான் இசையமைப்பில் இந்த ஆண்டு அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ரிதம் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் வந்தன. இதில் தெனாலி தவிர அனைத்துப் பாடல்களும் ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்களாக அமைந்து விட்டன.

பிரபு

ஒருவர் எப்பொழுது ராம நாராயணன் படத்தில் நடிக்கிறாரோ அப்போதே அவர் மார்க்கெட் அவுட் என்பார்கள். ஆனால் பிரபு 99ல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசாவில் நடித்தும் அவருக்கு அடுத்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. பெரும்பாலும் தோல்விப் படங்கள் [மனம் விரும்புதே உன்னை, திருநெல்வேலி, வண்ணத் தமிழ் பாட்டு], . வெற்றி பெற்ற படங்களும் அவரால் வெற்றியடைய வில்லை [தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன்]. இதனால் அவர் நட்சத்திரத்தில் இருந்து நடிகராக மாறிப் போனார்.

கமல்ஹாசன்

96ல் அவ்வை சண்முகியின் வெற்றிக்குப் பின் கமல் இந்திக்கு அதை ரீமேக்க போனார். பின் திரும்பிவந்து மருதநாயக புதைகுழியில் விழுந்தார். பெப்ஸி பிரச்சினைக்காக காதலா காதலா என்று சறுக்கினார். எனவே ஹே ராமுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எல்லோரையும் திருப்திப் படுத்தாவிட்டாலும் சிலருக்கு நல்ல திருப்தி அளித்த படம். ஏகப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள். ஆனந்த விகடன், நாயகனுக்கு பின்னர் இந்தப் படத்துக்கு 60 மார்க் வழங்கியதாக ஞாபகம். இந்தப் படத்தின் மையக்கதை பட வெளியீட்டுக்கு முன்னர் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப் பட்டது. அதைப் படித்து விட்டு வந்தால் ஓரளவு புரிந்திருக்கும். முன் தயாரிப்புகளோடு படத்திற்கு வரச் சொல்வது எவ்வளவு அபத்தம்? படத்தில் கதாபாத்திரங்களின் வழியாக பேசப்பட்ட ஆறு மொழிகள் தான் படத் தோல்விக்கு காரணம் என்போரும் உண்டு. மற்ற நாடுகளில் ஒரு மொழிதான் இருக்கும். கூடுதலாக இன்னொரு மொழி பேசப்படும். எனவே அவர்கள் சப் டைட்டிலோ வாய்ஸ் ஓவரோ இல்லாமல் சமாளிக்கலாம். ஆனால் ஏகப்பட்ட மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரிப் படங்கள் எடுக்கும் போது சற்று யோசித்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, “ஓநாயா இருந்து பார்த்தாத்தான் அதோட நியாயம் புரியும்” போன்ற வசனங்களும், இசையில் தொடங்குதம்மா, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி போன்ற பாடல்களும் இபடத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன.

தெனாலி – ஜெயராமுக்கு சில வாய்ப்புகளையும், ரவிகுமாருக்கு சில கோடிகளையும் சம்பாதித்து கொடுத்த படம்.

இந்த ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே பட நாயகி பூஜா தான் கமலின் விஸ்வரூபம் பட கதாநாயகி என்கிறார்கள்.

பாரதி

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டது. அதன் நாயகன் சாயாஜி ஷிண்டே மூலம் தென்னாட்டுக்கு ஒரு வில்லன்/கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்தான். இளையராஜாவின் இசையில் நிற்பதுவே நடப்பதுவே போன்ற கிளாசிக் பாடல்களும் கிடைத்தன.

என்னம்மா கண்ணு

துவண்டு கிடந்த சத்யராஜை எழுப்பி உட்கார வைத்த படம். சக்தி சிதம்பரம் சத்யராஜுக்கே உரிய லொல்லை கேரக்டரில் புகுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். இன்றளவுக்கும் சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்க இந்தப் படம் ஒரு காரணம். இப்பட வெற்றிக்குப் பின் கூடிய பிரஸ்மீட்டில் சத்யராஜ் சொன்னது இது “ இந்தப் பட ரிலீஸுக்கு அப்புறம் தான் நாலஞ்சு புரட்யூசர் வந்திருக்காங்க, வீட்டுக்கு போனெல்லாம் வருது” என்றார். வடிவேலுவும் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.

விஜய்

பாசில் இயக்கத்தில் ஷாலினி ஜோடியுடன் இளையராஜா இசையில், சார்லி தாமு நட்பில், ஸ்ரீவித்யா அம்மாவாக இன்னொரு காதலுக்கு மரியாதையாக வரும் என்ற எதிர்பார்ப்பில் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் குஷியின் மூலம் கலக்கலாக திரும்பிவந்தார் விஜய். பிரியமானவளேவும் விஜய்யை காப்பாற்றியது

அஜீத்

அறிமுக இயக்குநர் துரை இயக்கிய முகவரி ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், இன்னொரு அறிமுக இயக்குநர் கவி காளிதாஸ் இயக்கிய உன்னை கொடு என்னை தருவேன் படு தோல்வி அடைந்தது.

வெற்றி கொடி கட்டு

வெளிநாடுகளுக்குப் போகாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுங்கள் என்று பார்த்திபன், முரளியை வைத்து சேரன் மெசேஜ் சொன்ன படம். பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனுக்கு இது உச்சக்கட்ட படம். ஏஜெண்டிடம் பனம் கொடுத்து ஏமாந்து கலங்குபவராக சார்லி அசத்தியிருப்பார்.

இந்த ஆண்டு தொடக்கத்துக்கு சற்று முன் டிசம்பரில் வெளியான சேது படம் பல இணை,உதவி இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது இந்த ஆண்டில் தெரியாவிட்டாலும் தற்போது வரை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

December 20, 2011

தம்பையா

ஞாயிறு காலையில் பேப்பரைப் புரட்டிக் கொண்டே குடிக்கும் இரண்டு டம்ளர் டீ தான் அடுத்த ஆறு நாட்களுக்கான பெட்ரோல் எனக்கு. இன்றும் காலை எழுந்து பார்த்தபோது மனைவியும் குழந்தைகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சென்னையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிய களைப்பு. எழுப்ப மனமில்லாமல் நானே தயாரிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு பிழைக்க வருபவன் பிரம்மச்சாரியாய் வந்து பல முன் தயாரிப்புகளுக்கு பின்னரே திருமணம் செய்தால்தான் இந்த ஊருக்கு ஈடு கொடுக்க முடியும். குறைந்தபட்சம் குழந்தைகளாவது சென்னையில் தான் பிறக்க வேண்டும். சிறு நகர/கிராம சூழலில் வாழப் பழகிய நாற்றுகளை பிடுங்கி வந்து சென்னையில் நட்டுப் பராமரிப்பது சிரமமே.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் எழ எத்தனிக்கவில்லை. ஆறு மாதமாய் துடைக்காமல் இருந்த பைக் ஞாபகம் வர, நைந்து போயிருந்த கைலியில் ஏ4 அளவுக்கு துணியைக் கிழித்துக் கொண்டு கீழிறங்கினேன். வீட்டின் உரிமையாளர் பகுதியில் இருந்து எப்போதும் கேட்கும் இசையருவி கேட்கவில்லை. பதிலாய் சன்னமான குரலில் புதிய தலைமுறையினர் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வை அகில உலகுக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் மகன் என்றும் இல்லா அதிசயமாய் வேட்டியும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு செல்லில் பேசியபடியே நடந்து கொண்டிருந்தான்.

இப்போதுதான் கவனிக்கிறேன். உரிமையாளர் உயிரை விட்டிருந்தார். துணியை பெட்ரோல் டேங்க் பையில் சொருகிவிட்டு, செல்லில் இருந்து காதை விடுவித்திருந்தவனிடம் போய் சன்னமான குரலில் எப்போ? என்றேன்.

”ராத்திரி 10 மணிக்கு டிவி பார்த்துக்கிட்டுருக்கும் போது நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்குன்னார். கால் டாக்ஸி கூப்புடுறதுக்குள்ள உயிர் போயிடுச்சு” என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் குடும்பத்து ஆட்களைத் தவிர யாரும் இல்லை. என் முகக் குறிப்பை கவனித்தவன், சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிட்டேன். மயானத்துக்கு தம்பி போயிருக்கிறான். 11 மணிக்கு எடுக்கப் போறோம். எல்லாரும் பத்து பத்தரைக்குள்ள வந்துடுவாங்க என்றான்.

அடப்பாவி பத்து மணிக்கு நடந்திருக்கு. வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு கூட சொல்லலை. சொந்தத்துக்கு கூட காலையில தான் சொல்லி இருப்பான் போல. சொல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை என அப்படியே மெதுவாக நகர்ந்து தெரு முனை டீக்கடையை நோக்கிச் சென்றேன்.

மாஸ்டர் டீ கிளாஸில் அரை கொள்ளளவுக்கும் குறைவாக ஊற்றிக் கொண்டிருந்தார். அடப்பாவி, இதைக் குடிச்சா நாக்கு கூட நனையாதேடா என்று நினைக்கும் போது மின்னலாக தம்பையாவின் நினைவு வந்தது.

வெண்கலச் செம்பு நிறைய சின்னம்மாவிடம் காப்பி வாங்கிக் குடித்துவிட்டு தம்பையா சொன்னதுதான் இது.

தம்பையா ஞாபகம் வந்ததைத் தொடர்ந்து ஊரும், ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சம்பிரதாயங்களும் என் மனதை ஆக்ரமித்தன.

முதலில் அந்த வீட்டுப் பெண்டிரிடம் இருந்து கேவலும், பின் விசும்பலும் கிளம்பும். அக்கம் பக்கத்துக்காரர்கள் சம்மனில்லாமல் ஆஜராவார்கள். கால் கட்டைவிரலை சேர்த்துக்கட்டு, மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து, சாணி, நெல்லு வச்சு விளக்குப் பொருத்து என தடாலடியாய் வேலை நடக்கும்.

பக்கத்து வீடுகளில் இருந்து மர பெஞ்ச், சேர் வகையறாக்கள் அணிவகுக்கும். வந்தவர்கள் அவற்றில் உட்காந்து கொண்டு வியூகங்களை வகுத்து கொண்டு இருப்பார்கள். வாடிப்பட்டு தப்பு செட்டுக்கு ஒரு ஆள், சங்குக்கு ஒரு ஆள், தேர் கட்ட மூங்கிலுக்கு ஒரு ஆள், தந்தி ஆபிசுக்கு ஒரு படிச்ச பையன் என திசைக்கொருவராக அம்புகளைச் செலுத்திக் கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே காப்பி ஒரு ரவுண்டு வந்திருக்கும். இந்த அம்புகளுக்கு முன்னால் ஒரு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்கும். அதுதான் தம்பையா. அவனுக்குத்தான் அந்த ஊரோடு தொடர்புடைய அனைவரின் உறவுக்காரர்களும் அவர்களின் தற்போதைய வசிப்பிடங்களும் அத்துப்படி. செல் வராத காலத்தில், என்னைக்குச் செத்தாலும் தம்பையா இல்லாத நாளிலே சாகக்கூடாது என்று கூட பேசிக் கொள்வார்கள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவான்.

தந்தை சிறு வயதில் இறந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் வலுவிலந்த அவன் குடும்பத்தை அவனது காக்கா வலிப்பு நோயும் தன் பங்குக்கு சோதித்தது. 10 வயதில் எழவு சொல்ல ஆரம்பித்தவன் அம்பானி செல் வந்த போது ஆயிரத்தை தொட்டிருந்தான். சிறு வயதில் அவன் தான் எங்களுக்கு கிசு கிசுக்கள் சப்ளை செய்தவன். கோடி வீட்டு குத்தாலம்மா இறந்த செய்தியை சொன்ன உடன் அவள் மருமகள் 100 ரூபாய் சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியின் பின்னர்தான் நான் மன்னர்கள் வாரிசு பிறந்த தகவலைச் சொன்ன தாதிக்கு முத்து மாலை பரிசளிப்பார்கள் என்பதையே நம்பத் தொடங்கினேன்.

சில பெண்கள் இறந்த போது மௌனமாய் அழுத சம்பந்தமில்லாத ஆண்கள், சில முதல் மரியாதைகள் என எங்கள் பதின்மத்தை தம்பையா சுவராசியப் படுத்தியிருந்தான்.

கடந்த ஆறேழு வருடங்களில் பலரும் பிழைப்புக்காக சென்னை, கோவை என புலம் பெயர்ந்திருந்தனர். ஊரில் யாராவது இறந்தால் தம்பையாதான் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான்.

சென்ற ஆண்டு ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, பெரியப்பா, பாட்டி காரியத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்த தன் மச்சினனிடம் சொன்னதும் உடன் ஞாபகம் வந்தது.

”நல்ல காரியத்துக்கு தான் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க, கெட்ட காரியம்னா கேட்ட உடனே கெளம்பி வந்துடணும், இல்லைன்னா உன் வீட்டுக் காரியத்தை நீயே செய்யுற மாதிரி ஆயிடும்”

ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். செல்லில் இருந்து மனைவியை அழைத்து விஷயத்தைத் சொல்லி உடனே கீழே வா என்றேன். கைலியை மடித்து கட்டிக் கொண்டு அவர்கள் பகுதிக்குள் நுழைந்து நான்கு பிளாஸ்டிக் சேரை வெளியில் எடுத்துப் போட்டு சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டேன்.

விஸ்வரூபத்தை எதிர்நோக்கி

மோசர்பியர் ஷோ ரூமில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்படங்களின் சி டி யும் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற நான் நீண்ட நேரமாக துழாவிக் கொண்டேயிருந்ததைப் பார்த்த விற்பனை உதவியாளர் அருகில் வந்து ”என்ன படம் சார் வேண்டும்?” எனக் கேட்டார். “மங்கம்மா சபதம்” என்ற பதிலைக் கேட்ட அடுத்த நொடியிலேயே அதை எடுத்துக் கொடுத்தார்.

சிரித்தபடியே, இந்த பழைய சபதம் இல்லைங்க, கமல்ஹாசன் நடித்த படம் வேண்டும் என்றேன்.

“இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பஜார்ல வேலை பார்த்தேன். 15 வருஷத்துல யாருமே இந்தப் படத்தை எங்கிட்ட கேட்டதில்லை” என்றார்.

இப்படி கமலின் மசாலா படங்களிலேயே மட்டமான மசாலாவைகூட நான்கைந்து முறை பார்த்த ரசிகன் நான். பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். அதைக்கூட கமலின் சிறப்புத் தோற்றத்துக்காக மூன்று முறை பார்த்தவன் நான்.

ஆனால் என்ன சொல்லுங்கள், இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் அடித்துக் கொள்ளவே முடியாது. நாட்டுக் கொரு நல்லவன் படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்த்தவர்கள், ரா ஒன்னில் ரஜினி இருக்கிறார் என்றதுமே முதல் காட்சிக்கே ஓடிப் போய் நரகாசுரனின் ஆதரவாளராக மாறியவர்கள் என அவர்களின் டிராக் ரெக்கார்ட் அமோகம்.

இப்போது கூட பாருங்கள், கோச்சடையான் என்ற பெயரை அதிகார பூர்வமாக ரஜினி ஓகே செய்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் மதுரை கோச்சடைப் பகுதியில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.

விருமாண்டி படம் வெளியான அன்று, வெளி மாநில தலைநகரம் ஒன்றில் இருந்தேன். படம் பார்க்க வழி இல்லாததால் அன்று இரவு இணையத்தில் ஏதாவது விமர்சனம் வந்திருக்கிறதா என தேடிய போது, தமிழில் விமர்சனம் வெளியாயிருந்ததைப் பார்த்தே இணைய தமிழ் உலகத்துக்கு வந்தேன்.

முதலில் நான் அறிந்து கொண்டது, ரஜினியின் ஆதரவுப்படை இங்கே மிக அதிகம் என்பது. இரண்டாவது கமலைப் பற்றி தொடர்ந்து எழுப்பப்பட்ட காப்பியடித்தல், எதார்த்தமின்மை (திரையுலகிலும், பொது வெளியிலும்] சார்ந்த குற்றச்சாட்டுகள்.

ஹேராம், அன்பே சிவம் படங்களைப் பார்த்த பின்னர், முன்னை விட அதிகமாக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருந்த கமலின் பிம்பம் லேசாக கலையத் தொடங்குவதைப் போல எனக்குத் தோன்றியது.

தொடர்ந்து அது போலவே கசப்பான உணர்வுகள். தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் தமிழ்மணம் முழுப்பக்கத்திலும் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. அதில் பாதிக்கும் மேலே படத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்தே இருந்தன. உன்னைப் போல் ஒருவனுக்கு வந்த விமர்சனங்களும் அப்படியே.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாலா, அமீர், சசிகுமார், வெற்றி மாறன், செல்வராகவன், ஜனநாதன், சீனு ராமசாமி, சற்குணம் என பல புதிய இயக்குநர்களின் படங்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. என்னடா இது புதிதாக வந்தவர்கள் எல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க இவர் ஒன்று, இரண்டுக்கே தடவிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கூட வந்தது.


இந்த ஆறு ஏழு மாதங்களில் மீண்டும் ஒரு மன மாற்றம். பாலா, செல்வராகவன்,சசிகுமார் மற்றும் சற்குணம் ஆகியோரின் சமீபத்திய படங்கள் ஒரு செய்தியைச் சொன்னது. இரண்டு, மூன்று நல்ல படங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். அதற்கு மேல் எல்லாமே ரீமிக்ஸ் தான் செய்ய முடியும் என்பதுதான் அது.


இந்த அளவுகோலில் கமலை நிறுத்திப் பார்த்தால் கமலின் மீது வந்த கோபம் குறைந்தது.

கமல் 30 வருடங்களுக்கும் மேலாக துறையின் ரசனை மாற்றங்களை சமாளித்து தன் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். மாற்று முயற்சிகளை யாருமே யோசிக்காத சூழ்நிலையில் [ 80-99 ஆண்டுகளில், முக்கியமாக நடிகர்களில்] அதை முன்னெடுத்துச் சென்றது கமல் தானே.

அவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.


தமிழ்சினிமாவில் தரமான ஐந்து படங்களைக் கொடுத்தவர்கள் என்று எண்ணினால் எத்தனை பேர் அந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரியாது. ஆனால் கமலின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும்.

கமல் அவர்களே, உங்களிடம் இருந்து அன்பே சிவத்திற்க்கு பின்னால் எதுவும் தமிழுக்கு கிடைக்கவில்லை. விஸ்வரூபம் பற்றிய செய்திகள் நம்பிக்கை தரும்படி இருந்தன. ஆனால் இப்போதோ, கதக் எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வதாக வந்த செய்திகள் கத்தக் என்று நெஞ்சில் குத்தியதைப் போல் இருக்கிறது. மீண்டும் ஒரு ஆளவந்தானை சந்திக்கும் திறன் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது.


ஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.

December 19, 2011

இம்முறையாவது கிடைக்குமா?

91ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயனம் கிளம்பிய போது, நிச்சயம் வெல்வோம் என்று அசார் நம்பியிருப்பாரோ இல்லையோ நான் நம்பினேன். மஞ்ச்ரேக்கர், டெண்டுல்கர் ஆகியோரின் மீது அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால் ஆஸி அணியினர், சிட்னியைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை சட்னியாக்கினார்கள். பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என அசாருதீன் காலம் எழுதும் அளவுக்கு கும்மாங்குத்து குத்தினார்கள்.

பின்னர் சச்சின் தலைமையில் அணி செல்லும் போது அவர்களே ஐந்து நிச்சயம், நான்கு லட்சியம் என்று தான் கிளம்பினார்கள். பின்னர் கங்குலி தலைமையில் செல்லும் போது சச்சின்,ட்ராவிட், லட்சுமண் மற்றும் சேவாக்கின் பேட்டிங்கால் தொடர் வெற்றிக்கு அருகில் சென்றோம். ஆனால் ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டி, ஓய்வு என்று செண்டிமெண்ட் அலை அதை நமக்கு மறுதலித்தது.

கும்பிளேவின் தலைமையில் செல்லும் போது முந்தைய அனுபவங்களால் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற போது எனக்குக் கிடைத்த மகிழ்சிக்கு அளவேயில்லை. 20-20 கோப்பையை அணி வென்ற போது கூட அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்ததில்லை.

தற்போது மீண்டும் நாம் அங்கே. இப்போது அணியின் மீது காரண காரியத்தோடு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். அதில் முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர்கள்.


எந்த அணி உலக டெஸ்ட் அரங்கில் கோலோச்சும் போதும் அந்த அணியில் வலுவான துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும். துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளே நுழையும் போது பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். பந்தும் வித்தை காட்ட தயாராக இருக்கும். முதலில் பேட் செய்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவித்திருந்தால் இன்னும் கடினம். பீல்ட் செய்த களைப்போடு உள்ளே வரவேண்டும். எதிர் அணியோ குதூகல மனநிலையில் உள்ளே வருவார்கள். தம் அணியினருக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், எதிர் அணியினரையும் களைப்படைய வைக்க வேண்டும் என துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பு அதிகம்.


மேற்கிந்திய தீவு அணியினருக்கு கிரினீட்ஜும், ஹெய்ன்ஸும் இருந்த வரையில் சரிவு ஆரம்பிக்கவில்லை. கிரினீட்ஜுக்குப் பின் பில் சிம்மன்ஸ் உள்ளே வந்தபோதுதான் செங்கல் உருவப்பட்டது. ஏன் நம் அணியினரே சேவாக் காம்பிர் இணை அபாரமாக ஆடிய பின்னர்தானே நம்பர் 1 நிலையை அடைந்தார்கள்.

86ல் இருந்தே ஆஸி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விஷயத்தில் யோகம்தான். டேவிட் பூன் – ஜெஃப் மார்ஸ், மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லாடர், மேத்யூ ஹைடென் – ஜஸ்டின் லாங்கர் என எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடுபவர்கள் வாய்த்தார்கள். இவர்களால் தான் ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் மஞ்சள் குளித்து வந்தார்கள்.

தற்போதைய ஆஸி அணி சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஷேன் வாட்சன் அவ்வளவு சிறப்பான டெக்னிக் கொண்டவரல்ல மேலும் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார். பிலிப் ஹுயுஸ், நியூஸிக்கு எதிரே ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பின்னர் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது. வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். ஆள் கிடைக்காத காரணத்தால் சிமன் கடிச்சைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். நல்ல துவக்க ஜோடி அமையவில்லையென்றால் ஆஸி அணியின் பேட்டிங் ஆர்டரை நம்மாட்கள் கலகலக்க வைத்து விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. (ஜாகிர், இஷாந்த புல் பிட்னஸ்ஸில் இருந்தால்).

நமது துவக்க ஜோடி தற்போது சரியான பார்மில் உள்ளது. சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. மூன்றாவது முச்சதம் ஆஸி மண்ணில்தான் என்று முடிவாகிவிட்டது. (ரொம்பத்தான் ஆசைப்படுறமோ?) . கவுதமும் கைகொடுத்தால் இம்முறை ஜெயம் நமக்கே.