August 10, 2015

சென்ட்ரல் தியேட்டர்கள்


உலகிலேயே அதிக தியேட்டர்கள் கொண்டுள்ள பெயர் என்ன என்று சர்வே எடுத்துப் பார்த்தால் “சென்ட்ரல்” என்று வந்தாலும் வரலாம். தமிழ்நாட்டில் மட்டுமே எத்தனை சென்ட்ரல் தியேட்டர்கள்?

மதுரை,கோவை,திருநெல்வேலி,விருதுநகர்,திண்டுக்கல் என தமிழகத்தின் பல நகரங்களில் சென்ட்ரல் தியேட்டர்கள் உள்ளன. என் குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயதை எட்டும் வரை சென்ட்ரல் தியேட்டர்களில் ஏராளமான நாட்களை கழித்துள்ளேன்.

நான் கைக்குழந்தையாக இருந்த போது திண்டுக்கல் சென்ட்ரலானது பிரிமியம் தியேட்டர். என் அம்மாவும் அவர் சகோதரியும் அங்கே ஒரு படத்திற்கு ரிக்‌ஷாவில் சென்றார்களாம். கொழுக் மொழுக் என இருந்த என்னை ரிக்‌ஷாக்காரர் தூக்கி வைத்துக் கொண்டு தர மாட்டேன் என அடம் பிடித்தாராம். இதை எல்லோரிடமும், ஏன் என் மனைவியும் கூட பெருமையாகச் சொல்லி வந்தார் என் அம்மா. என் மகன் ஒருமுறை ஏன் பாட்டி? நீங்க காசு கொடுக்கலைன்னு டாடிய தூக்கி வச்சுக்கிட்டாங்களா? எனக் கேட்டு என் மனைவி க்ளுக் என சிரித்த நாளில் தான் அந்த பெருமை பீத்தலை நிறுத்தினார் என் அம்மா. சென்ட்ரல், நாகா-லக்‌ஷ்மி, ஆர்த்தி என புதிய தியேட்டர்கள் வந்த பின்னர் பழைய படங்களை மட்டுமே திரையிடும் தியேட்டராக மாறியது.

திண்டுக்கல் சென்ட்ரல் மட்டுமல்ல ஏனைய சென்ட்ரல்களும் பழைய படங்களை திரையிடும் தியேட்டராகவே மாறிவிட்டன. கோவையில் இருக்கும் சென்ட்ரல்-கனகதாரா தியேட்டர் மட்டுமே இன்னும் முண்ணனி தியேட்டராக விளங்கி வருகிறது. அது கூட 90களின் ஆரம்பத்தில் சற்று டொங்கலாகத்தான் இருந்தது. ஆங்கில மற்றும் இந்தி திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்தது. பின்னர் நல்ல முறையில் ரெனெவேஷன் செய்யப்பட்டது. விருதுநகர் சென்ட்ரலும் 2000க்குப் பின் பொலிவிழந்து போனது. அங்கே கரகாட்டக்காரன் 100 நாட்கள் ஓடியது. மாரியம்மா மாரியம்மா பாடலுக்கு தியேட்டர் முழுவதும் சாம்பிராணி புகையைப் போட்டு நாலைந்து பெண்களை சாமியாட விட்ட பெருமைக்குரியது விருதுநகர் சென்ட்ரல். திருநெல்வேலி சென்ட்ரல் கூட அருமையான கட்டிடம்.

எத்தனை சென்ட்ரல் தியேட்டர்களில் படம் பார்த்திருந்தாலும் அது மதுரை சென்ட்ரல் தியேட்டருக்கு ஈடாகாது. சகலகலா வல்லவன், காக்கி சட்டை, படிக்காதவன் என அங்கே பலமுறை பார்த்த படங்கள் ஏராளம். ஏர் கண்டிஷன் வசதியுடன் புதிய தியேட்டர்கள் வரத் தொடங்கிய உடன் அங்கே பெரிய நடிகர்கள் நடித்த புதிய படங்கள் வெளியாவது குறைந்தது. அதன்பின்னர் சில வருடங்கள் தெலுங்கு டப்பிங் படங்களில் கவனம் செலுத்தினார்கள். காதல் தேவதை (ஜெகதேச வீருடு அதிரூப சுந்தரி, சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்தது), அபூர்வ சக்தி 369 (டைம் மெஷின் கான்செப்டில் பால்கிருஷ்ணா, மோகினி நடித்தது) ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடின. அதன்பின்னர் இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று படங்களைத் திரையிடும் தியேட்டராக மாறியது. இப்போது பழைய எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன் படங்களைத் திரையிடும் தியேட்டராக மாறிப்போனது.

இந்த சென்ட்ரல் தியேட்டர்கள் பெரும்பாலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை. நகரின் முக்கிய குடும்பங்கள் தங்கள் வசதியின் அடையாளமாக, பெருமைக்காக கட்டியவையாகவே இவை இருக்கின்றன. கூட்டுக் குடும்பமாக இருந்தோ அல்லது தொழில் செய்யும் பாகஸ்தர்கள் ஒன்று சேர்ந்தோ கட்டியவை. கட்டப் பட்டபோது  புவியியல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாததாக (பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்) இருந்திருந்தால் கூட இன்று அவை  நகரின் மையப் புள்ளியாக இருக்கின்றன. மதுரை சென்ட்ரல்  மீனாட்சி அம்மன் கோவிலின் அருகிலும், திண்டுக்கல், விருதுநகர், கோவை, நெல்லை என மற்ற சென்ட்ரல் களும் சென்ட்ரலாகவே அமைந்துள்ளன.

இந்த ஒற்றுமையைத் தாண்டி இன்னொரு ருசியான ஒற்றுமையும் இருக்கும். மதுரை சென்ட்ரலில் பவண்டோ போன்ற மிகச் சுவையான கலர் ஒன்றை கண்ணாடி டம்ளர்களில் தருவார்கள். சித்திரை அக்னி நட்சத்திர மேட்னி ஷோ  இடைவேளையில் அதைக் குடிப்பது போல ஒரு போதை எங்கும் இருக்காது. திண்டுக்கல் சென்ட்ரல் பருப்பு போளிக்கு பெயர் போனது. சில சௌராஸ்ட்ர குடும்பங்கள் அதைத் தயாரித்து அங்கு விற்று வந்தார்கள். கோவை சென்ட்ரல் தியேட்டர் கேண்டீனில் கிடைக்கும் பருப்பு வடை, சின்ன போண்டா ஆகியவை பிரபலம்.

இந்த சென்ட்ரல்கள் எல்லாம் கட்டப்படும் போது ”ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்” ஆக கட்டப்பட்டவையே. அந்த நாளின் சிறப்பான புரஜெக்‌ஷன், சவுண்ட் சிஸ்டம், இருக்கை வசதி என பார்த்து பார்த்து செய்யப்பட்டவையாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் விருதுநகர் சென்ட்ரல் தான் ஆவரேஜாக கட்டப்பட்ட தியேட்டர். நெல்லை சென்ட்ரல் எழிலானது என்றால் கோவை சென்ட்ரல் பிரம்மாண்டமானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் புதிய வசதிகள் வரும்போது அவற்றை அப்டேட் செய்யத் தவறிவிட்டார்கள் எனச் சொல்லலாம். கோவை சென்ட்ரல் மட்டும் விதிவிலக்கு.

அப்டேட் செய்ய மற்ற தடைகளும் இருந்தன. திண்டுக்கல் சென்ட்ரலில் பார்வையாளர்கள் மாடத்தில் பிரம்மண்டமான தூண்கள் இருந்தன. கார்களில் வருபவர்கள் பார்க் செய்யவோ, எக்ஸ்டென்சன் செய்து கட்ட முடியாதபடியோ சில திரையரங்குகள் நகரின் மத்தியில் அமைந்து இருந்தன. சில தியேட்டர்கள் இரண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு இடையே பாகவிஸ்தி செய்வதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக மூத்த தாரப் பிள்ளையாக கவனிப்பின்றி விடப்பட்டன. சில தியேட்டர்களை குளிர்சாதன வசதி செய்து புதுப்பிக்கும் செலவில் புதிய தியேட்டரே கட்டிவிடலாம் என்னும் அளவில் இருந்தன.

நாம் மகிழ்ச்சியாக, வெற்றிக் களிப்புடன் இருக்கும் நாட்களில் கிராமத்தில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றால் அங்கு இருக்கும் வசதிக் குறைவுகள் உறுத்தும். பெட் இல்ல, உட்கார ஷோபா இல்ல,ஃபேன் ஒன்னுதான் இருக்கு என. ஆனால் மனக் கிலேசம் இருக்கும் நாட்களில் அங்கு சென்றால் அவர்கள் காட்டும் பரிவுதான் நமக்குத் தெரிந்து நம்மை ஆறுதல் படுத்துமே தவிர வசதிக் குறைவை உணரவே மாட்டோம்.


இரு மாதங்களுக்கு முன்பு, மதுரைக்கு சென்றிருந்தேன், ஒரு பெரும் மனக்கவலையுடன். சரி சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகலாம் என நடந்து சென்றேன். வெற்றி விழா படம் போட்டிருந்தார்கள். ஒரு 100 பேர் இருந்திருப்போம். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய ஹோல் சேல் வளையல் கடைகள், அழகு சாதன கடைகளில் பொருள் வாங்க வந்தவர்கள், லோடு மேன்கள், சிறு கடைகளில் வேலை பார்ப்போர், 40 வயதுக்கு மேற்பட்ட கமல் ரசிகர்கள் என ஒரு கலவையான கூட்டம். இடைவேளையில் வழக்கம் போல ஒரு கலர் குடித்தேன். படம் முடிந்து வெளியே வந்தபோது மனம் லேசான உணர்வு. சிறுது தூரம் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்த போது, என் தாத்தா வீட்டு ஞாபகம் வந்தது.