May 18, 2011

மன்மதன் அம்பு

ஆண்கள் முப்பத்தி ஐந்தை தாண்டியபின் அனுபவிக்க நேரும் சங்கடங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தலையாயது தனியாக சினிமாவுக்குப் போக முடியாதது. அலுவலகம், வீட்டு வேலைகள் போக மிகக் குறைவான நேரமே கிடைக்கிறது. குடும்பத்தோடு போகலாம் என்று பார்த்தால் யாரும் அதற்கு ஒத்துக் கொள்வதில்லை.

ஆளவந்தான் படம் வெளியான அன்று எனக்கு தலை தீபாவளி. அப்படத்திற்க்கு ஏற்பட்டிருந்த ஹைப் காரணமாக காலை ஒன்பது மணிக்கே யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டேன். படப் பெட்டி வர தாமதமானதால் படம் மதியம் இரண்டுக்கு திரையிடப்பட்டு மாலை ஐந்தரைக்கு தண்டனை முடிந்தது. வீட்டிற்க்கு வந்தால் விழுந்த திட்டுக்கள் கூட உறைக்கவேயில்லை. அப்படி ஒரு சோகம், படம் நன்றாக இல்லாமல் போனதால்.

அப்படி வெறித்தனம் கொண்டிருந்த நான், மன்மதன் அம்பு வெளியாகி நான்கைந்து மாதமாகியும் பார்க்காத சோகம் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. டிவிடியில் பார்ப்பதில்லை என்ற தேவையில்லாத கொள்கை வேறு.

சமீபத்தில் உறவினர் திருமணம் ஒன்று அருகில் இருந்த சிற்றூரில் ஞாயிறன்று நடந்தது. வேண்டா வெறுப்பாக காலையில் கிளம்பி பேருந்தில் சென்று இறங்கிய போது ஒரு ஆனந்த அதிர்ச்சி. அவ்வூரில் உள்ள திரையரங்கில் மன்மதன் அம்பு.

திருமண சடங்கு ஆரம்பித்த உடனேயே நைஸாக கிளம்பி திரையரங்கிற்க்கு போய்விட்டேன்.

கமல், நீங்கள் ஹீரோயிஸ படங்களில் நடிக்க வேண்டாம். கதையின் நாயகனாக நடிங்கள். அந்த வேடம் உங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு சராசரி திறமையும், அனுபவமும் கொண்ட நடிகரே அதை சிறப்பாக செய்து விட முடியும் என்ற நிலையில் நீங்கள் எதற்கு?

நீலவானம் போன்ற ஜிம்மிக்ஸ் எல்லாம் எதற்கு?

ஒருவேளை படம் லாபகரமாக அமைந்து விட்டால் நிதி குடும்பத்தார் அனைவரும் மீண்டும் படம் செய்ய கேட்பார்கள் என்று, தெனாலிராமன் பூனைக்கு வைத்த சுடுபாலாக இந்த அம்பை விட்டீர்களா?

இடைவேளையில் என்னை விட பாவமாக இருந்தவர் கேண்டின்காரர். வட்டிக்கு வாங்கி கடை வச்சிருக்கேன்யா, பாத்து செய்யுங்கயா என்று பட போஸ்டரைப் பார்த்து அவர் கதறுவது போல் ஒரு பிரமை.

வடை, டீ என எதுவும் இல்லை. கேட்டதற்க்கு, என்னிடம் இருப்பதிலேயே சின்ன கேன் இதுதான். இதில் பத்து டீயாச்சும் வாங்கி வச்சாத்தான் சூடு ஆறாம இருக்கும். அதுகூட ரெண்டு நாளா ஓடலை என்று புலம்பினார்.

வேறுவழியில்லாமல் நமத்துப்போன உள்ளூர் தயாரிப்பு பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு மீதி படத்தைப் பார்த்தேன். பிஸ்கட் பரவாயில்லை என்னும்படி இருந்தது படம்.

ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்த பின் தான் தெரிந்தது, மொய் எழுதாமல் வந்தது. இம்முறையும் மனைவியின் திட்டுக்கள் உறைக்கவில்லை