June 12, 2012

நாமக்கல் பள்ளிகளின் மறுபக்கம்


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம்.

1150க்கு மேல், 1100க்கு மேல், மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல் கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும் ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே? என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.

ஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க் எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள்  என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

இந்த விளம்பரங்களிலேயே ஒரு ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம் வகுப்பில் 485/500 க்கு மேல் எடுத்தவர்களுக்கும், இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அல்லது  இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்திருந்தால் அவர்கள் நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே இருப்பார்கள். அவர்களை மதிப்பெண் வாங்க வைப்பது எளிது)

பின் 450க்கு மேல் எடுப்பவர்களுக்கும் சலுகை உண்டு. இப்படி சேரும் மாணவர்களை முதல் முன்று செக்‌ஷன்களில் வைத்துக் கொள்வார்கள். பின் இப்பள்ளிகளின் ரிசல்டால் கவரப்பட்டு சேரும் ஆயிரம் மாணவர்களை பின் உள்ள பத்து பதினைந்து செக்‌ஷன்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள்.

பல ஆண்டு அனுபவம் உள்ள ஆசிரியர்களின் நேரடி கவனிப்பு அந்த முதல் மூன்று செக்‌ஷன்களுக்கே. அந்த பையன்களே பின் செய்திதாள் விளம்பரத்தையும் அலங்கரிப்பார்கள்.

மற்ற பையன்கள் அனைவரும் 100ல் இருந்து 160 வரை மட்டுமே கட்டாஃப் மார்க் எடுப்பார்கள். பெற்றோர்கள் இந்த உண்மை அறியாமல் தங்கள் பையன்களை திட்டி சித்திரவதைப் படுத்துவார்கள்.

இந்த ஆண்டு எனக்குத் தெரிந்த பையன்களே பத்து பேர் வரையில் நாமக்கல் பள்ளிகளில் படித்து 800 மதிப்பெண்களுடன் திரும்பியிருக்கிறார்கள். இதை அவர்கள் இங்கிருந்தே எடுத்திருக்கலாம்.

சரி இந்தப் பள்ளிகள் எப்படி வளர்ச்சியடைந்தன?

இதற்கும் 84ல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தோற்றத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் தொழிற்கல்வி பயில இண்டர்வியு முறை ஒழிக்கப்பட்டு நுழைவுத்தேர்வு முறை கொண்டு வரப் பட்டது. அதன் பின்னரே மதிப்பெண் மோகம் எல்லாருக்கும் பரவியது.

80களின் மத்தியில் பல மாவட்டங்களில் தலைசிறந்த பள்ளிகள் என்றால் மூன்று நான்குதான் இருந்தன. அவை பெரும்பாலும் அரசு உதவி பெற்று வந்த பள்ளிகள். அவற்றில் குறைந்த அளவே மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பிருந்தது. எனவே அவை பத்தாம் வகுப்பில் 400க்கு மேல் எடுத்தால் தான் பிளஸ் 1 முதல் குரூப் என்று அறிவித்தன. அதே பள்ளியில் படித்து 399 எடுத்த பையன் வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிக்கோ அல்லது வேறு தனியார் பள்ளிக்கோ செல்ல வேண்டியிருந்தது. இவை மாணவர்களை மன ரீதியில் பாதிப்புக்குள்ளாக்கியது.


இதன்பின் பல தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிளஸ் 1 படிப்பிற்கு இடங்களை அதிகரித்தன. ஆனால் அவை அடிமாட்டு விலைக்கு ஆசிரியர்களை நியமித்ததால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், துணை விடுதி காப்பாளர் கூட மிக தகுதி வாய்ந்த ஆசிரியர் என்று களமிறங்கின. போதாக்குறைக்கு விடைத்தாள் திருத்தக்கூட தனி ஆசிரியர்கள். அவர்கள் பொதுத்தேர்வில் எம்முறையில் திருத்துவார்களோ அதே முறையில் திருத்தி மாணவர்களின் சாதக பாதகங்களையும் எழுதித்தருவார்கள். இதனால் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.

  சரி அவ்வளவு தானே? முடிஞ்சா மார்க் எடுக்கட்டும். இல்லையின்னா நன்கொடை கொடுத்துக்குறோம். இதுக்கு ஏன் ஒரு பதிவு என்று கேட்கலாம். இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கும் முறை ஆபத்தானது. அதனால் தான் இந்த புலம்பலே.

நான் பனிரெண்டாம் வகுப்பு வரை சிற்றூரிலேயே வசித்து வந்தேன். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, என் தந்தையின் பணிஉயர்வு மற்றும் இட மாறுதல் காரணமாக மாவட்டத்தலைநகர் ஒன்றிற்கு இடம் பெயர்ந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கீழ் வீட்டிலும், மாடியில் நாங்களும். ஓனரின் மகன் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் டியூசனில் இருந்து வந்தவன் 138 மார்க் எடுத்துட்டேன், என வீட்டில் சலம்பிக் கொண்டிருந்தான்.

பின் அவனிடம் விசாரித்தபோது இயற்பியலுக்கு டியூசன் செல்வதாகவும், பிளஸ் டூ பாடத்தை இந்த ஆண்டே படிப்பதாகவும் கூறினான். காலையில் நடந்த இயற்பியல் பொதுத் தேர்வின் வினாத்தாளுக்கு மதியம் 2-5 தேர்வு எழுதியதாகவும் அதில் 138/150 என்றும் கூறினான். பின்னர் இந்த விடுமுறையில் கணித டியூசன் என்றும், பள்ளி தொடங்கிய பின் வேதியியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினான். இது எனக்கு 91ல் கடும் அதிர்ச்சி. ஆனால் இன்று சர்வ சாதாரணம். அப்போது கிராமத்தில் பிளஸ் 1 பாடத்தை மாங்கு மாங்கு என்று படிப்பவனின் கதி?

பின்னர்தான் தெரிந்தது 9ஆம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களையும், 11ல் 12ஐயும் முடிக்கும் வசதி.

இதனால் என்ன நஷ்டம்?

ஒன்பதாம் வகுப்பில் வேதியியல், இயற்பியல் பகுதிகளை நன்கு படித்தால் அது நல்ல அடித்தளத்தைக் கொடுக்கும். அதே போலவே 11லிலும். அதைவிட முக்கியம் 11ஆம் வகுப்பில் படிக்கும் கணிதம். இண்டக்ரேஷன், டிஃப்ரனிசியேஷன், பார்சியல்   டிஃப்ரனிசியேஷன், மேட்ரிக்ஸ் போன்றவற்றில் அடித்தளமே இருக்காது 11ஆம் வகுப்பை ஸ்கிப் செய்வதால்.

சரி அதாவது தொலையட்டும், பிளஸ் 2 பாடமாவது சரியாக படிக்கிறார்களா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் நோட்ஸ், மாதிரி வினாத்தாள், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எந்தப் பகுதியில் இருந்து கேட்கப்படும் என்பதைச் சொல்லும் புளு பிரிண்ட் இவற்றைக் கருத்தில் கொண்டே படிக்கிறார்கள்.  

திருக்குறள் படித்தால் நாலடியார் தேவையில்லை என்பது போன்ற பெர்முடேஷன் காம்பினேஷனிலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இயற்பியல், கணிதத்தில் இப்படி குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படிப்பதால் இவர்களின் பேஸ்மெண்ட் படு வீக்காக இருக்கிறது.

புளூபிரிண்ட் படி படித்து மார்க் எடுத்து வருபவர்களால் பொறியியலில் சிறப்பாக படிக்க முடியாது. அங்கும் வந்து மார்க் எடுக்கும் படி படித்து ஏதாவது மென்பொருள் நிறுவனத்தில் ஐக்கியமாகி விடுகிறார்கள். கோர் இண்ட்ஸ்ட்ரீஸ் என்று சொல்லப்படும் நிறுவனங்களில் இவர்களின் பங்கு மிகக் குறைவே. நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை இம்மாதிரி பள்ளிகள் தடுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

அதனால் தான் கேட், ஐ ஈ எஸ் போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து  கொண்டே வருகிறது. டி ஆர் டி ஓ, ஐ எஸ் ஆர் ஓ போன்றவற்றில் கேரள, ஆந்திர மாணவர்களின் பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.  

எனக்குத் தெரிந்த பையன் ஒருவன், பத்தாம் வகுப்பில் 412 மதிப்பெண்கள் எடுத்தான். அவன் பெற்றோரும் மூன்று லட்சம் வரை செலவு செய்து நாமக்கல்லில் படிக்க வைத்தார்கள்.
தொடர்ந்து குறைவான மதிப்பெண்களியே அவன் பெற்று வந்தான். தேர்வு நேரத்தில் டென்ஷன், உடல்நிலை சரியில்லை என காரணங்கள் சொல்லி வந்தான். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வில் நான்கு பாடங்களில் பெயில். காரணம் கேட்டு பெற்றோர் அங்கு விரைந்த போது, அங்கே நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்களை அதே குறையுடன் அங்கே பார்த்தனர்.

அவன் 11 ஆம் வகுப்பு சேரும் போது தெருவே அவனை எதிர்பார்தது. பெற்றோர், உறவினர் எதிர்பார்ப்பு அவன் சுமையைக் கூட்டியது. அங்கே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் அவனால் பிரகாசிக்க முடியவில்லை. அது தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்தது. மனச் சிதைவுக்கு ஆளாக்கியது. பின் அந்த பெற்றோர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து, அங்கே வாடகைக்கு வீடு பிடித்து, அவனை அமைதிப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். 700 மதிப்பெண்களுடன் அவன் திரும்பியிருக்கிறான். இப்போது அவன் வயது நண்பர்களுடன் பழக மனத்தடை. சிறிது சிறிதாக  இயல்பாகி வருகிறான்.

இப்படி எத்தனை பேரோ?

50 comments:

Unknown said...

இதை போல ராசிபுரம் அருகிலும் ஓர் பள்ளி இதே நடைமுறையை கடைபிடிக்கிறது

பரிசல்காரன் said...

முன்னணிப் பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய கட்டுரை!!

முரளிகண்ணன் said...

நன்றி விஜயகுமார் ராம்தாஸ்

நன்றி பரிசல்

Vadivel M said...

உண்மை! நடந்ததும், நடப்பதும் அதேதான்!

முரளிகண்ணன் said...

நன்றி வடிவேல்

Karaikudiyaan said...

மிக நல்ல கட்டுரை...
தேர்வு முறை குறித்து மாற்றியமைக்கப்பட வேண்டிய நேரமிது...

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி

சிவக்குமார் said...

உண்மையை உணர்த்தும் அலசல்

வடகரை வேலன் said...

முரளி,

பாடப்புத்தகத்திற்கு வேளியே உள்ள உலகம் பற்றிய எந்த அறிவும் இன்றி ப்ராய்லர் கோழிகளைப் போலத்தான் இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

இப்பொழுது இத்தகைய பள்ளிகள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, கோபிசெட்டிபாளையம் மற்றும் தாராபுரத்தில் உள்ளன.

60% எடுக்கும் மாணவன் இங்கே சேர்ந்தால் கூடுதலாக 10%அதிகமாக எடுப்பான். ஆனால் இயல்பாக புரிந்து படித்து நல்ல மதிப்பெண் எடுக்கும் மானவனை இங்கே சேர்ந்தால் அவன் மனஅளவில் பாதிக்கப்படுவது உறுதி.

குசும்பன் said...

என்னோட சித்தப்பா பையனை அந்த ஸ்கூலில் சேர்த்தார்கள்...1000 மார்க் எடுத்து SRMல் பேமெண்ட் சீட்ல மெடிக்கல் செஞ்சிக்கிட்டு இருக்கான்.

3.5 லட்சம் வேஸ்ட்:(

தருமி said...

இது போன்ற செய்திகள் நன்கு பரவ வேண்டும்.

Ravichandran Somu said...

சிறந்த பதிவு...

ஒரு வாரம் முன்பு நாமக்கல் வழியாக பெங்களூருக்கு டிரைவ் செய்து வந்தேன். ஒரு பக்கம் கோழிப் பண்ணைகள். இன்னொரு பக்கம் மாணவர்களை அடைத்து வைத்திருக்கும் பண்ணைகள் (பள்ளிகள்). :(((

Prabu Krishna said...

உண்மையான அலசல். மதிப்பெண் பின்னால் மாணவனை ஓட விட்டு, வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்து வருகின்றனர் பெற்றோர்களும், பள்ளிகளும்.

இல்யாஸ்.மு said...

அருமையான, அவசியமான விழிப்புணர்வு பதிவு.நன்றிகள்...!!

பினாத்தல் சுரேஷ் said...

நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன்.

இந்த மதிப்பெண் மோகத்துக்கு நுழைவுத்தேர்வு ரத்தும் ஒரு முக்கியமான காரணம் என்பதைப் பலர் ஏற்க மறுக்கிறார்கள். மதிப்பெண்+நுழைவுத்தேர்வு என்று இருந்த கட் ஆஃப், இப்போது வெறும் மதிப்பெண் ஆனதால், மார்க்கே கடவுள்.

மார்க் ஒன்றுதான் பர்ஃபார்மன்ஸைக் கண்டுபிடிக்க ஒரே வழிமுறை என்று இருக்கும் (அதை உடனடியாகவோ சுலபமாகவோ மாற்றிவிட முடியாது) நிலைமையில், உண்மையான மார்க்குக்கும் வாந்தி எடுத்த மார்க்குக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

இந்த லட்சணத்தில் ஐஐடிக்கும் +2 மார்க்கை அடிப்படையாக எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம் - நிலைமை சீரடைய வாய்ப்பே தெரியவில்லை.

பிகு: ஆகஸ்ட் மாதம் இந்தப் பின்னூட்டத்தை நினைவுபடுத்தக்கூடிய ஒரு விஷயம் நடக்கலாம் (தனிப்பட்ட முறையில்) என்று நம்புகிறேன் :-)

Peppin said...

agree with Parisal!

அத்திரி said...

அண்ணே சரியான பதிவு

தி.தமிழ் இளங்கோ said...

வடகரை வேலன் சொன்னது போல

“பாடப்புத்தகத்திற்கு வெளியே உள்ள உலகம் பற்றிய எந்த அறிவும் இன்றி ப்ராய்லர் கோழிகளைப் போலத்தான் இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.”

இதனால் பிற்காலத்தில் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது சொந்தமாக அவர்களால் முடிவெடுக்க முடிவதில்லை. இந்த பள்ளிகள் மாணவர்களை மலரும் பருவத்தில் கருக்கி விடுகிறார்கள்.

ஜோ/Joe said...

என்னுடைய பல நாள் கேள்விகளுக்கு விடை சொல்லும் பதிவு

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

மிக முக்கியமான பதிவு.. மேலும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பிடுதலில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் இங்கே நீங்கள் எழுத வேண்டும்.. மொழிப்பாடங்களைத் திருத்தும் போது உண்மையிலேயே படித்துப் பார்த்துத் தான் திருத்துகிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.. கடந்த ௩ வருடங்களாகக் கவனித்து வருகிறேன்.. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, மாணவர்களின் மொழிப்புலமைக்கு மதிப்பளிப்பதேயில்லை.. எனக்குத் தெரிந்த ஒரு மாணவி.. மாநில அளவில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் வாங்குவாள் எனப் பள்ளியால் எதிர்பார்க்கப்பட்டவள்.. 87 மதிப்பெண்களை வாங்கியிருக்கிறாள்.. அவளுடைய வகுப்பில் இலக்கணம் கூட சரியாகத் தெரியாத, சுயமாக ஒரு கடிதம் ஆங்கிலத்தில் எழுதத் தெரியாத ஒரு மாணவிக்கு 99 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.. தமிழிலும் அப்படியே.. ஆசிரியர்களின் மெத்தனப் போக்கால் நிறைய மாணவர்களின் உளவியல் பாதிக்கப்பட்டுள்ளது.. பத்தாம் வகுப்பில் விடைத்தாளின் நகல் கிடைத்தால் கூட முறையிடலாம்.. அதுவும் இல்லாததால், மொழிப்பாடங்களை ஏனோதானோவென்று மதிப்பிடுவது தொடந்து கொண்டேயிருக்கிறது..

selvishankar said...

சரியான நேரத்தில் வந்துள்ள சரியான பதிவு..இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரி பள்ளிகளில் மனப்பாடம் செய்து செய்து..படித்து , குழந்தைகள் மறக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்..வெகுசிலரே உயர்கல்வியில் வெற்றிபெறுகிறார்கள்.. கல்விக்கட்டணம் ...அதிகமில்லை ஆண்டுக்கு ஒரு லட்சம்தான்..

ஹுஸைனம்மா said...

இதேதான் நாகர்கோவில், திருநெல்வேலி பகுதி பள்ளிகளிலும் நடக்கிறது. நாகர்கோவிலில் 11, 12ம் வகுப்புக்கு பள்ளி நேரம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை - சனி, ஞாயிறு உள்பட!!

10ம் வகுப்பில் அதிக மார்க் வாங்கியவர்களை மட்டும் சேர்ப்பது, நல்லா படிப்பவர்கள், சுமாராகப் படிப்பவர்கள் என்று செக்‌ஷன் பிரிப்பது என்று எல்லா கொடுமைகளும் உண்டு. கேட்கத்தான் ஆளில்லை.

//நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை இம்மாதிரி பள்ளிகள் தடுக்கின்றன//
உண்மை.

ILA (a) இளா said...

பரிசலின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்

//முன்னணிப் பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய கட்டுரை!!//

Romeoboy said...

கரூரில் இதே நிலைமை தான்.. மாமனார் வீட்டுக்கு எதிர் வீட்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி இருக்கிறாள், முழு ஆண்டு பரிட்சை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் தான் ஆகி இருக்கும், அதை தொடர்ந்து வந்த முதல் ஞாயிற்றுகிழமை பள்ளி சென்றாள், அன்று அரைநாள் ஸ்பெஷல் கோச்சிங்காம் :(((

Balakumar Vijayaraman said...

தெளிவான கட்டுரை. வாழ்த்துகள் அண்ணே !
11ம் வகுப்பில் புதிய ஊர், புதிய பள்ளி, வேறு மாதிரியான சூழ்நிலை என்று துவங்கும் போதே மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவானே, நன்றாக படித்தவன் கூட மார்க் குறையத்தான் செய்வான். இது ஏன் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை :(

முதல் பத்தியின் துவக்கம் ”12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும்...” என்று இருக்க வேண்டுமோ?

KSGOA said...

அருமையான கட்டுரை!!!!

தக்குடு said...

சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பதிவு. மெட்ரிகுலேஷன் மோகத்தில் விழுந்து சாகும் அப்பாவி மக்கள்! :((

தருமி said...

இக்கட்டுரையை ஆ.வி.க்கு அனுப்பியுள்ளேன்.

balasma said...

i have send this article to all all of my friends. let us put all our effort to change our home country.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்பவே வருத்தமா இருக்கு. மாணவர்கள் நிலை?..:((. இதேபோல தான் எங்கள் மாவட்டங்களிலும் நடக்கிறது. துள்ளித்திரிய வேண்டிய வயதில் மாணவர்களின் வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டதே என நினைக்கும்போது வருத்தம்தான். இதற்கு என்னதான் வழி?.. இந்த பள்ளிக்கல்லூரி பாடத்திட்டங்களை மாற்ற முடியாதா..

நல்ல பகிர்வு முரளி.. ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானது. நன்றி முரளி.

Inquiring Mind said...

நான் நாமக்கலில் இருந்து நீங்கள் சொன்ன முறையில் படித்தவன் என்ற முறையில் நீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன்..

இந்த மதிப்பெண் பைத்தியம், நன்றாக மார்க் வாங்கியிருந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிகக்கிறது .. படிப்பு என்பதே நல்ல சம்பளம் வாங்கும் ஒரு வழிமுறை என்ற மனப்பான்மை வந்துவிட்டது.. கற்றுக் கொள்ளும் மனோபாவம் சுத்தமாக போய்விடுகிறது.. இவர்கள் பொதுவாக, தேர்வு எழுதும் டெக்னிக்கில் கைதேரர்ந்தவர்களாகக இருப்பதால், இந்த கமெர்ஷியல் மனபான்மை மேலும் அதிகரிக்கிறது..

இந்த பந்தயத்தில் ஓட முடியாதவர்களள் பற்றி கேட்கவே வேண்டாம்..

இதில் இனனொரு சமூகப் பிரச்சினையும் இருக்கிறது.. மாணவ பருவத்தில் சொந்த பந்தங்கள் என்று யாரோடும் பழகும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.. பின்னால், நல்ல காலேஜ், வெளியூர் என்று அவர்கள் தங்கள் ஊரிலிருந்தும், சுற்றத்திலிருந்தும் நிரந்தரமாக பிரிக்கப்படுகிறாரர்கள்... அவர்களுக்கு வாழ்க்கையின் பின் பகுதியில், ஒரு கலாச்சார அனாதைகளாகவே இருப்பார்கள்..

naveen said...

There was some schools like this in namakkal. In the same time , there were some other schools were running..
I could list out those schools , go and drop a gold coin in the school ground, no matter how costly it is, you ll get it back !!!

sreeramcorporation said...

i have send this article to all of my friends. let us put all our effort to change our home country.

sreeramcorporation said...

i have send this article to all of my friends. let us put all our effort to change our home country.

கோவை நேரம் said...

நல்ல பதிவு..நாமக்கலில் படித்தவன் என்கிற முறையில் எனக்கும் ஒரு சில ஆதங்கமே..மாணவர்களை சிந்திக்க விடாமல் மார்க் எடுக்கும் மெசின் போல நடத்தும் பாங்கு இந்த பள்ளிகளுக்கு உண்டு.

Francis Rajesh said...

அண்ணெ ! இந்த பள்ளியில் பண்ணும் இன்னொரு விஷயம் மாணவர்களை மனப்பாடத்திற்கு உட்படத்துவது....... இதில் உள்ள ஒரு long term drawback என்னவென்றால் மாணவர்கள் மன தைரியத்தை இழக்கிறார்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலைகழகத்தில் தற்கோலை செய்து கொண்ட பெண் நாம்க்கல் மாவட்டத்தை சேர்ந்தவள் என்றும் அதுவும் இல்லாமல் அவள் தன் 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவள் ஒரு சிறந்த பள்ளியில் சேர்க்கப்பட்டதகவும் படித்தேன் ....... 12ஆம் வகுப்பில் 90% பெற்ற பெண்ணால் ஒரு arrear ஐ தாங்கி கொள்ள முடியவில்லையென்றால் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.........
மொத்தத்தில் பார்த்தால் இவர்கள் உற்பத்தி செய்வது கழுதைகளை RUN RUN RUN….LIFE IS A RACE…… என்பதை மட்டும் தான் நினைவு படுத்துகிறது.......

veterinary extension said...

This schools are creating Doctors, engineers but not human beings. Parents also consider their wards as future money making machines

JS said...

There are many schools who skips 11th and 9th portions in TN. They put the students in sections based on the marks. All concentration goes to on the top mark holders. Other students are not treated well which leads them in depression. Being a software professional I am seeing freshers coming from TN are not good Engineers. They are not able to understand what they are doing or what they will have to do. I am really worried...

Sabarinathan Arthanari said...

விழிப்புணர்வூட்டும் பதிவு நன்றி

Antony said...

They are coaching coaching... and not teaching.

Shaik,SIT said...

Sir,
Good news to all Tamilnadu peoples.

Sethu said...

Very well said!!

மதன் சிந்தாமணி said...

excellent murali...keep it up

மதன் சிந்தாமணி said...

excellent.. keep it up

Unknown said...

Educational institution must produce good human to the society.There are no moral values with kids nowadays.We are responsible and could not blame the kids for it.We want our kids to take high marks and don't bother anything other than that, no matter how serious it may be.
Students now are really depressed even at that tender ge.Anger,violence and depression not sure where we are taking our kids to.
This is an critical social issue and it needs an immediate attention from both ends.

Om Sakthi said...

ஓம் சக்தி ,

இன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக உள்ளது .எனது உறவினர் பையன்ய் -மன்னார்குடி கல்லூரிஒன்றில் சேர்த்தார்கள் .அங்கு இருக்கும் சிறுநீர் கழி பிடம் ,மிக மோசமாக உள்ளது .என்று கூறி,கல்லூரி செல்ல மறுத்து ,வேறிடம் சேர்த்து உள்ளார்கள் .

அந்த கல்லூரி யில் 300 க்கும்மேற்பட்ட மாணவர் கள் படிகிறார்கள் ,அவர்கள் எல்லாருக்கும் நான்கு சிறுநீர்கழிப்பிடம் மட்டும் உள்ளது .உண்மை .

இது மாதிரி எந்தனைகல்லூரிகள் உள்ளது ?யர்ர் இதை பார்த்து சொல்லபோகிறாக்கள் .எப்பிடி இந்த கல்லூரிகளை திருத்த போகிறோம் .

Om Sakthi said...

ஓம் சக்தி ,

இன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக உள்ளது .எனது உறவினர் பையன்ய் -மன்னார்குடி கல்லூரிஒன்றில் சேர்த்தார்கள் .அங்கு இருக்கும் சிறுநீர் கழி பிடம் ,மிக மோசமாக உள்ளது .என்று கூறி,கல்லூரி செல்ல மறுத்து ,வேறிடம் சேர்த்து உள்ளார்கள் .

அந்த கல்லூரி யில் 300 க்கும்மேற்பட்ட மாணவர் கள் படிகிறார்கள் ,அவர்கள் எல்லாருக்கும் நான்கு சிறுநீர்கழிப்பிடம் மட்டும் உள்ளது .உண்மை .

இது மாதிரி எந்தனைகல்லூரிகள் உள்ளது ?யர்ர் இதை பார்த்து சொல்லபோகிறாக்கள் .எப்பிடி இந்த கல்லூரிகளை திருத்த போகிறோம் .

Murugadhas Kanyakumari said...

இங்க திறமைக்கு எங்கே மதிப்பு இருக்கிறது மதிப்பெனுக்கு தானே மதிப்பு . இந்த கல்வி முறை இப்பிடி இருக்கும்வரை , மதிப்பெண்ணை மையமாக வைத்து பள்ளிகள் செயல் படும் இதில் தவறில்லை

Unknown said...

Really appreciate this article.

Even in my family my younger sister going through this same trauma. Her 10th syllabus started in 9th itself. Weekly 7 days school from morning 7.30 to evening 8.00, along with home work. For which she spent at least 2 hours. By the time it will be around 10- 10.30. Straight She will have some food and to sleep. Then from next day the same routine. Am not from Namakkal nor Major metro. Our village is 80 KMs far from Salem.

I've taken this Mark syndrome issues to the media's, Magazines and all the govt sectors. Starts from Educational office, Dt Collector's office, Education Minister's office and on top of this CM's cell. But no use yet.

Till they are harassing, due to middle of the year we are not able to change the school also.

When the education became commercial the schools became a money making industry.

Also our government schools quality are poor, we are forcing to take go with this un avoidable mafia.

God bless the next generation from this Goons.