November 19, 2015

ஆர் கே செல்வமணி


1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உட்பட நான்கைந்து படங்களும் உடன் வெளியாகின. இரண்டே வாரத்தில் தமிழகம் முழுவதும் புலன் விசாரனை பற்றிய பேச்சாகவே இருந்தது. முதற்காரணம் சமகால அரசியல் அதில் கையாளப்பட்டிருந்தது. மேலும் சமகால குற்றவாளியான ஆட்டோ சங்கர் பற்றியும் படத்தில் கையாளப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஒரு கார்பொரேட் குற்றமும் இருந்தது. மேலும் படத்தின் காட்சியமைப்புகளில் இருந்த ரிச்னெஸ்ஸும் ஒரு காரணமாய் இருந்தது.

   அதற்கு முன்னால் வந்த அரசியலைக் களமாக கொண்ட படங்களுக்கும் இந்த படத்திற்கும்  நிறைய வேறுபாடு உண்டு. அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர் போன்ற படங்கள், மக்களுக்குச் சென்று சேராத நலதிட்டங்கள், அதை அபகரிக்கும் அரசியல்வாதிகள் போன்றவற்றை களமாகக் கொண்டவை. ஆனால் இந்தப் படம் அரசியல்வாதிகள், அவர்களை ஆதரிக்கும் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் பெரும் பணக்காரர்கள், அவர்களுக்கு உதவும் காவல்துறையின் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு இடையே நிலவும் தொடர்பையும் அதனால் சாமானியர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் குற்றங்கள் ஆகியவற்றை அதற்கு முன்னால் இந்த அளவிற்கு தமிழ்சினிமா வீரியமாக பதிவு செய்திருந்ததில்லை. எம் ஆர் ராதா மட்டுமே தன் நாடகங்களிலும், சினிமாவில் தான் தோன்றும் காட்சிகளில் வாய்ப்பிருந்தால் பயன்படுத்தி இருந்தார்.
 செல்வமணியின் எல்லா படங்களிலுமே இந்த சூழல் இருக்கும். மற்ற இயக்குநர்களின் படங்களில் எல்லாம் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க சமூகத்தில் இருந்து ஒருவன் கிளம்பி வருவான். ஆனால் செல்வமணியின் படங்களில் அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒருவரே இதற்கு தீர்வு காண்பார்.

புலன் விசாரனை படத்தில் மனித உறுப்புகளை திருடும் ஒரு டாக்டர், அவருக்கு உதவும் ஒரு அரசியல்வாதி,உள்ளூர் தாதா அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பம். அந்த கேஸை துப்புதுலக்க வரும் ஒரு போலீஸ் அதிகாரியால் எல்லா முடிச்சுகளும் விடுபடுவதுதான் கதை. அப்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி இருந்த காலம். இந்த நேர்மையான போலிஸ் அதிகாரி அதற்கு முந்தைய ஆட்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கவர்னர் ஆட்சியில் இந்த கேஸை விசாரிக்க நியமிக்கப்படுவார்.

இந்தப் படத்தில் மக்களைக் கவர்ந்த இன்னொரு அம்சம் ரிச்னெஸ். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வருகைக்குப் பின்னரே அப்போதைய தமிழ்ப்படங்களின் ரிச்னெஸ்ஸும் பட்ஜெட்டும் கூடியதென்றால் செல்வமணியின் வருகை அதை இன்னமும் கூட்டியது. அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் ஆட்சி கவிழ்ந்தது என்பதை ஒரு பத்திரிக்கை தலைப்புச் செய்தியை குளோசப்பில் காட்டி முடித்து விடுவார்கள். ஆனால் இதில் ஏராளமான சைரன் வைத்த அம்பாசிடர் கார்கள் குறுக்கும் நெடுக்குமாய் சென்று வரும். இந்தப் படத்தின் வசனங்களும் வெகுவாக பாராட்டப்பட்டன. நேரடியாக எம் எல் ஏக்கள், அமைச்சர்களை நோக்கி கேள்விகள் வீசப்படும். அவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள். இந்தப் படத்தின் மூலம், தயாரிப்பாளராக இருந்த சரத்குமார் ஒரு நடிகராக வெளிப்பட்டார்.
புலன் விசாரனை படத்தின் வெற்றி செல்வமணிக்கு விஜய்காந்தின் 100வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. 91 ஏப்ரலில் விஜய்காந்தின் 100வது படமாகிய “கேப்டன் பிரபாகரன்” வெளியானது. சந்தன மர கடத்தலில் ஈடுபட்டிருந்த வீரப்பனைப் பற்றிய கதை. பல திரையரங்குகளில் 100 நாட்களும் சில திரையரங்குகளில் வெள்ளி விழாவையும் கண்ட படம் இது. வீரப்பன் செய்யும் தவறுகளுக்கு வீரப்பன் மட்டுமே காரணமல்ல, அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் தான் என்ற கோணத்தில் படம் எடுக்கப்பட்டு இருந்தது. மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் விஜய்காந்துக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது.
இப்படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.  புலன் விசாரனை நடந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு அனுபம்கெர்ரை ராஜீவ்காந்தி பாத்திரத்தில் நடிக்க வைத்து குற்றப்பத்திரிக்கை என்னும் படத்தை தொடங்கினார் செல்வமணி. இந்த காலகட்டத்திலேயே இரண்டு ஆக்‌ஷன் படங்களுக்கு அடுத்து செல்வமணி காதலை மையமாக வைத்து பிரசாந்த்-ரோஜா நடிப்பில் “செம்பருத்தி” படத்தை இயக்கினார். முந்தைய படங்களுக்கு மாற்றாக காதல்கதை என்றாலும் செல்வமணியின் வழக்கமான பார்முலா காட்சிகளும் இருந்தன.

செம்பருத்தி வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் குற்றப்பத்திரிக்கை அப்போதைய சென்சாரால் அனுமதிக்கப்படவில்லை. அது தொடர்பாக அலைந்து திரிந்ததில் செல்வமணியின் டச் விட்டுப்போய்விட்டது என்றே சொல்லலாம். அந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லாத நிலையில் அதிரடிப்படை என்னும் படத்தை இயக்கினார். வெற்றி பெறவில்லை. பிரசாந்தை நாயகனாக வைத்து கண்மணி மற்றும் அருண் பாண்டியன், நெப்போலியன், ரோஜா நடிப்பில் ராஜமுத்திரை என்னும் படத்தை இயக்கினார். அதுவும் வெற்றி பெறவில்லை.
இடையில் குற்றப்பத்திரிக்கை வெளியீட்டுக்காகவும் பாடுபட்டுக்கொண்டே இருந்தார் செல்வமணி. 95ஆம் ஆண்டில் மம்முட்டி,ரோஜா நடிப்பில் “மக்களாட்சி” படத்தை இயக்கிநார். இதுவே செல்வமணியின் கடைசி வெற்றிப்படம் எனலாம்.

அதே ஆண்டில் வேலு பிரபாகரன் இயக்கத்தில் அசுரன் படத்தையும் அதற்கடுத்த ஆண்டில் ராஜாளி படத்தையும் தயாரித்தார். 1997 ஆம் ஆண்டில் அடிமைச்சங்கிலி மற்றும் அரசியல் என்னும் படத்தையும், 99ல் கடைசியாக சரத்குமார்-விஜயசாந்தி நடிப்பில் ராஜஸ்தான் என்னும் படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்வி. அதன்பின் பல போராட்டங்களுக்குப் பின் குற்றப்பத்திரிக்கை வெளியானது. அதை யாரும் ரசிக்கவில்லை.
92 ஆம் ஆண்டில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் எதிரே  செம்பருத்தி படத்தின் கட் அவுட்டில்  செல்வமணி கேமராவை இயக்குவது போல வைத்திருந்தார்கள். வழக்கமாக ஹீரோக்களுக்குத்தான் அப்படி வைப்பார்கள். ஆனால் இரண்டு படங்களே டைரக்ட் செய்த ஒரு டைரக்டருக்கு அப்படி கட்-அவுட் வைத்தது ஆச்சரியம். ஆனால் அவர் அடுத்து சில வருடங்களிலேயே பீல்ட் அவுட் ஆனது சோகம்.
குற்றப்பத்திரிக்கையும், செம்பருத்தியும் அவரின் இயக்குநர் சிந்தனையை குறைய வைத்த படங்கள் எனலாம். அந்தப் படத்தின் வெளியீட்டிற்காகவே அதிக முயற்சிகள் எடுத்துக் கொண்டு, தனது அடுத்த படத்தின் கதையமைப்பில் சிரத்தை செலுத்தாமல் இருந்தார். மேலும் அவர் செம்பருத்தி தொடங்கிய காலத்தில் இருந்தே ரோஜாவின் அறிவிக்கப்படாத மேனேஜராகவும் இருந்தார். அவருக்காக கதைகள் கேட்பது, அவருடன் படப்பிடிப்பு தளங்களுக்குச் செல்வது என அவரின் நேரத்தை தனது முக்கிய வேலைக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் செலவழித்தார்.
செல்வமணியை அப்போது வார பத்திரிக்கைகளில் செலவுமணி என்றுதான் குறிப்பிடுவார்கள். அதிக நாட்கள் படமெடுப்பார், ஏராளமான பிலிம்ரோல்களும் வீணாக்குவார் என்று சொல்வார்கள். செல்வமணியின் படங்கள் என்றாலே அதிக பட்ஜெட்டில்தான் இருக்கும். எனவே நன்றாக ஓடினால்தான் தப்பிக்க முடியும் என்ற நிலை. இன்னிலையில் 94ல் வெளியான அதிரடிப்படை, கண்மணி இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் பிரபல தயாரிப்பாளர்கள்  அவருக்கு வாய்ப்பு கொடுக்க யோசித்தார்கள்.

புலன் விசாரனை திரைப்படத்தின் கதையை ஓவியங்களாகவே வரைந்து ஆல்பமாக்கி அதைக்காட்டி வாய்ப்பு பெற்றவர் செல்வமணி. ஆனால் தன் அடுத்தடுத்து படங்களுக்கு அப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வை அவர் காட்டவில்லை. அடிமைச் சங்கிலி, அரசியல், ராஜஸ்தான் போன்ற படங்களுக்கெல்லாம் அவர் குறைந்த அளவே சிரத்தை எடுத்துக்கொண்டார் என்பது படங்களின் காட்சியமைப்பிலும், வசனத்திலும் தெரியும். காட்சிகளை முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அதை மெருகேற்றினால் மட்டுமே படத்தின் தரம் உயரும். ஆனால் செல்வமணிக்கு இருந்த பிற அலுவல்களினால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துதான் காட்சிகளை யோசித்திருப்பாரோ என்ற எண்ணமே இப்படங்களைப் பார்த்தால் ஏற்படும்.

செல்வமணிக்கு வெற்றி கொடுத்தது அரசியல் மற்றும் உண்மைச் சம்பவ பின்புலமுள்ள படங்களே. செம்பருத்தி மட்டுமே விதிவிலக்கு. குற்றப்பத்திரிக்கையின் தடங்கலுக்குப் பின் அவர் உண்மைச் சம்பவங்களை கையாளுவதில் சிறு தயக்கம் காட்டினார். பிரமாண்டமும் ஜெண்டில்மேன் படத்திற்குப் பின் வேறு தளத்திற்குப் போனது.
செல்வமணியின் நாயகர்கள் எல்லோருமே பதவியில் இருந்து அநியாயத்தை வெல்லுபவர்கள். அவரும் அதற்கேற்ப விஜய்காந்த்,அருண் பாண்டியன், மம்முட்டி, அர்ஜூன், சரத்குமார் போன்றோரையே பயன்படுத்தினார். இவர்களில் விஜய்காந்த் மட்டுமே பெரிய அளவிற்கு ரசிகர்களையும், பொதுமக்கள் அபிமானத்தையும் பெற்றிருந்தார். படம் எப்படி இருந்தாலும் கூட்டத்தை ஈர்க்கும் சக்தி பெற்றிருந்தார். ஆனால் மற்றவர்கள் படத்தின்  கேரக்டர்களுக்கு நியாயம் செய்வார்களே தவிர, படத்தின் மற்ற அம்சங்கள் சரியாக இல்லாவிட்டாலும் படத்தை நிலைநிறுத்தும் அளவிற்கு  பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாதவர்கள்.
செல்வமணி திரைப்படக்கல்லூரியில் படிக்கும் போதே மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். மிகுந்த நெருக்கமான உதவியாளராக இருந்ததால் அவரிடம் அரசியல் சிந்தனைகளையும் கற்றிருக்கலாம். ஆனால் மணிவண்ணனிடம் இருந்த, எல்லாவித கதைக்களங்களையும் முயற்சிக்கும் எண்ணம் செல்வமணிக்கு வரவில்லை. மணிவண்ணன், பலரிடம் தனக்கான கதைகளை கேட்டு வாங்கி, இயக்கினார். ஆனால் செல்வமணி செய்தித்தாள்களில் இருந்தே தனக்கான கதைகளை உருவாக்கினார். அதனால் அவரின் படங்கள் ஒரேவிதமாக இருப்பதைப் போல நான்கு படங்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. மேலும் செல்வமணியின் படத்திற்கு வரும் ரசிகர்கள் என்றால் அது பெரும்பபாலும் ஆண்களே. பெண்கள் வந்து ஆர்வத்துடன் பார்க்கும்படியான காட்சிகள் அவர் படங்களில் குறைவு. அவர் படங்களில் நடித்தவர்களில் பிரசாந்த் மட்டுமே இளமையானவர். மற்ற எல்லோருமே மத்திய வயதைத் தாண்டியவர்கள்தான்.

மேலும் செல்வமணியின் படங்களில் கதாநாயகர்கள் மட்டுமே மாறினார்கள். மற்ற நடிகர்கள் குறிப்பாக ராதாரவி, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் ஆகியோர் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார்கள். முக்கியமாக ரோஜாவும் தொடர்ந்து அவர் படங்களில் இருந்தார்.  
இதற்குப்பின் சில ஆண்டுகளில் செல்வமணி இயக்குநர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். கலையில் கவனம் செலுத்துபவர்கள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் ஏதாவது ஒன்றில் கவனச் சிதறல் ஏற்படும். செல்வமணி கலையில் கோட்டை விட்டார்.

செல்வமணி தேர்ந்தெடுத்த நடிகர்களின் பொது அம்சம் என்னவென்றால் அவர்களில் பெரும்பாலோர் அரசியலுக்கு சென்று விட்டார்கள். அதிகபட்சமாக நெப்போலியன் மத்திய இணை அமைச்சர் ஆனார். விஜய்காந்த் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். ராதாரவி,சரத்குமார், அருண்பாண்டியன், ரோஜா எல்லாம் எம் எல் ஏ ஆகிவிட்டார்கள். மன்சூர் அலிகானும் பாமக சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டார்.
80களிலும் 90களின் ஆரம்பத்திலும் ஒரு செய்தி பொது மக்களை வந்து சேர ஏராளமான தடைகள் இருந்தன. அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்த காலம். செய்தித்தாள்களில் நிகழ்வு ஒரு செய்தியாக மட்டுமே ஒற்றைப் பரிமாணத்தில் பதிவு செய்யப்படும். அப்பொழுது இருந்த புலனாய்வுப் பத்திரிக்கைகள் மட்டுமே இன்னோர் கோணத்தை அதற்குச் சேர்த்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருந்தன. அவற்றைப் படிப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவே. அந்த காலகட்டத்தில் செல்வமணியின் படங்களுக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது. ஏதோ புதிதாகச் சொல்லுகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் செயற்கை கோள் தொலைக்காட்சிகள், மற்றும் புதிய தொலைத் தொடர்பு சாதனங்களால் செய்திகள் எல்லோரையும் விரைவில் சேரத் தொடங்கியபோது செல்வமணியின் படங்களின் தனித்துவ அம்சமான செய்தியில் இருந்து சினிமா தன் ஈர்ப்பை இழந்தது.
இப்பொழுதோ இன்னும் மோசம். செய்தி நடந்த சில வினாடிகளில் அது எல்லோரையும் போய்ச் சேர்கிறது. அதைவிட அது உலகில் இருக்கக்கூடிய எல்லாக் கோணங்களிலும் அலசித் தீர்க்கப்படுகிறது. எனவே நாளிதழ்களே இப்பொழுது வாரப்பத்திரிக்கையைப் போலவும், வாரப் பத்திரிக்கைகள் ஆண்டுமலர் போலவும் தோற்றம் தருகின்றன. எனவே செய்தியை அடிப்படையாகக் கொண்டுவரும் படங்கள் பீரியட் பிலிம் போலவே மனதிற்கு தெரிகிறது.

செல்வமணியின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் பிரசாந்த் நடித்த புலன் விசாரனை 2. இந்தப் படமும் பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தே வெளியானது. வெளியானது கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு இருந்தது. முன்னுக்குப் பின் முரணான காட்சிகள் வசனங்கள் என பார்ப்பவர்களை களைப்படைய வைத்தது. என் படத்தில் ஒரு இளம் கதாநாயகனை காட்டி விட்டேனே என வருத்தத்துடன் அவருக்கும் மத்திய வயதில் ஒரு படத்தை சங்கல்பம் செய்து எடுத்தது போலவே இருந்தது இந்தப் படம்.

இந்த காலகட்டத்தில் தன்னை அதற்கேற்ப புதுப்பித்துக்கொண்டு, செய்திகள் சென்று சேரும் வேகத்தை மனதில் கொண்டு,தன் ஆரம்ப கால படங்களை இயக்கியது போன்ற அர்ப்பணிப்புடன் வந்தால் மட்டுமே இனி செல்வமணியால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் 20 ஆண்டுகளுக்கு முன்வந்த மக்கள் ஆட்சியுடன் அவரின் திரையுலக பயணம் முடிந்து விட்டதாகவே மக்கள் நினைத்துக் கொள்வார்கள்.   

முரளிகண்ணன்.
4 comments:

PRIYADHARSUN said...

செல்வமணி என்னும் அருமையான இயக்குனர் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனார் என்பதை நேர்மையாக விமர்சித்திருந்தீர்கள். கண்டிப்பாக உங்கள் விமர்சனத்தை செல்வமணி படிக்க வேண்டும். அதற்கு ஆவன செய்யுங்கள். எவ்வாறு காணமல் போயிருந்த பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் மீதும் தன்னை நிரூபித்தாரோ அது போல் செல்வமணி, விக்ரமன், ஆர்.சுந்தர்ராஜன், ஆபாவாணன், ராஜேந்தர் போன்றவர்கள் மீண்டு(ம்) வர வேண்டும்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அலசல்! நன்றி!

க கந்தசாமி said...

அருமையான அலசல் நண்பரே ..

க கந்தசாமி said...

மலரும் நினைவுகளுக்கு நன்றி. இதே போல பாக்கியராஜ் , பாரதிராஜா , தயாரிப்பாளர் குஞ்சமோன் இப்படி நிறைய எழுதணும் நண்பா.