December 25, 2011

கார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு

நண்பனொருவனின் காலம் கடந்த திருமணத்தின் போது நடந்த மது விருந்தில் பொது நண்பன் மூலம் அறிமுகமாகி, பழைய புத்தகக்கடை வைத்திருந்த காரணத்தினால் நெருக்கமானவர் கார்ல்மார்க்ஸ் (எ) சிவசுப்ரமணியன். அவர் தந்தை சித்த வைத்தியர். உடனே அவரை அகத்தியர், போகர் ரேஞ்சுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சித்த வைத்தியசாலையில் உதவியாளராய் இருந்து காய்ச்சல்,தலைவலி மற்றும் வயிற்றுவலி போன்ற எவர்கிரீன் நோய்களுக்கான சூரண பார்முலாவை கற்றுக் கொண்டு தனியே கடை போட்டவர். இலவச இணைப்பாக ஓம வாட்டர் செய்யும் பார்முலாவையும் லவட்டிக் கொண்டு இருந்தவர்.

அந்த பார்முலாதான் இப்போதும் கார்ல் மார்க்ஸின் மூலதனமாக இருந்து வருகிறது. சுற்று வட்டார குழந்தைகள், பாஸ்ட் புட் கஸ்டமர்கள், கோபமுற்ற மனைவிகளின் கணவர்கள் ஆகியோருக்கு வரும் அஜீரணக் கோளாறுகளை கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் தான் குணப்படுத்தி வருகிறது. ஓமத்தை இடித்து சில பல பொருட்களை சேர்த்து (ஆமா பெரிய கிரையோஜெனிக் பார்முலா என்று கிண்டலடிப்பார் ஏங்கெல்ஸ்) சுடுதண்ணியில் கலக்கி, டாஸ்மாக்கில் இருந்து பெறப்பட்ட பீர் பாட்டில்களில் அடைத்து கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் என்ற லேபிளை ஒட்டிவிட்டால் தோழர் ஒரு வாரம் இயக்கப் பணிக்கு வந்து விடுவார்.

இடை இடையே மாக்ஸிம் கார்க்கி பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து கணக்கு வழக்குப் பார்ப்பார். அந்த நேரத்தில் அவர் நண்பர்கள் லெனின், ஸ்டாலின், ரணதிவே மற்றும் ஜோதிபாசு ஆகியோரில் யாராவது அங்கிருப்பார்கள்.

இவர்கள் அனைவரின் பெயர் மாற்றத்திற்கும் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன் அத்தெருவிற்கு குடிவந்த காம்ரேட் ஒருவர்தான். அனைவரையும் மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர வைக்குமளவுக்கு அவரிடம் பேச்சுத்திறமை இல்லை. ஆனால் பெண்கள் இருவர் இருந்தார்கள். ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும் ஏரியா அது. அங்கே கும்மிருட்டில் கூட முகம் தெரியும் கலரில் இரண்டு வயசுப் பெண்கள் எண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும்? மார்பிள் போல இருக்கும் இட்லியில் உப்பு அதிகமான சாம்பாரை ஊற்றி சாப்பிடும் போது கூட அந்தப் பெண்களின் முகம் ஞாபகம் வந்துவிட்டால் ம்ம் டிவைனாக மாற்றிவிடும் அளவுக்கு லட்சணமான பெண்கள்.

இதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத அந்த ஏரியா வயசுப் பையன்கள் அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். ஞானஸ்னானம் செய்யும் போது பெயர்களை மாற்றுவது போல தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள். கவனமாக ராகுல சாங்கிருத்தயன் என்னும் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார்கள். ஏனென்றால் அது மச்சினன் பெயர். ஆனால் பரிதாபமாக ஒன்றிரண்டு வருடங்களில்அவர்கள் வீடு மாறிப் போய்விட அம்மை போனாலும் தழும்பு நிரந்தரம் என்னும் கதையாக பெயரும், கம்யூனிஸ ஆதரவும் மட்டும் இவர்களிடம் தங்கிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் கார்ல்மார்க்ஸ் என்னிடம் வந்து, ஒரு பசுமாடு வளர்க்கணும் தோழர், உங்களுக்குத்தான் கிராமத்துல நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களே, ஏதாச்சும் ஒண்ணை அமைச்சு விடுங்க என்று கேட்டுக் கொண்டார். காரணம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன் எம்ஜியார் பாட்டைக் கேட்டதாகவும், அதில் இருந்த

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு”

என்ற வரிகள் கவர்ந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அது லட்சுமி என்றெல்லாம் ஓவராக பீல் பண்ணினார்.

உழைப்புக்கு உருவகமான காளை மாடுதானே கம்யூனிசத்திற்கு அடையாளம். பசுமாடு பூர்ஷ்வா இன குறியீடாயிற்றே என்ற சிந்தனை எனக்கு வந்தாலும், இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன்.

பசுவுக்காக அலையும் போதுதான் இத்தனை ரகங்கள், சூட்சுமங்கள் இருக்கிறது என்பதே தெரியவந்ததே. சாதாரண மாடே 100 சிசி பைக்கை விட அதிக விலை விற்கிறது. அதில் கூட இனிசியல் போதும். இதில் சிங்கிள் பேமண்ட். ஈனப் போகும் மாட்டுக்கு தனி விலை. ஆர்வமாய்த்தான் இருந்தது. தோழர் கூட கேட்டார். நீங்க கூட ஒண்ணு வாங்கலாமே என்று.

மார்க்ஸுக்கு சொந்த வீடு. மாடு கட்ட சிறிது இடமும் இருந்தது. நான் இருப்பதோ வாடகை வீடு. முதல் மாடி. மகன் ஓடினாலே கீழே இருந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆசை இருக்கு மாடு வளர்க்க, அதிர்ஷ்டமிருக்கு ஸ்கிரீன் சேவராக்க.

ஒரு வழியாக நாப்பத்தஞ்சாயிரத்துக்கு படிந்தது. வண்டி வாடகை, தரகு கூலி என அரை லானா ஆகிவிட்டது. பிருந்தா காரட் என்ற பெயரை எங்கள் குழு அதற்கு பரிந்துரைத்தது.

இப்போதெல்லாம் தோழரை புத்தகக் கடையிலோ, பொதுக்கூட்டங்களிலோ காண முடிவதில்லை. மாட்டுடன் ஐக்கியமாகிவிட்டார. கன்றும் ஈந்தது அது. நீண்ட நாட்களுக்குப் பின் தோழர் சீம்பாலில் செய்த இனிப்புடன் எங்களை எதிர்கொண்டார்.

எதற்கு இந்த அவதாரம் என ஏங்கெல்ஸ் நேரடியாகவே கேட்டார். ”ஒரு கம்யூனிஸ்ட்டாக உழைப்பின் அருமையை, விவசாயிகளின் கஷ்டத்தை அறிய” என மேடைப் பேச்சுக்காக தயாரித்திருந்த உரையில் சில பகுதிகளை எங்களிடம் அவிழ்த்து விட்டார்.

”யாரையும் சந்தேகி” என எங்கள் பேராசான் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்றோம். தோழர் பிடி கொடுக்கவில்லை.

பின்னர்தான் தெரியவந்தது. தோழரின் எட்டாவது படிக்கும் பெண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்து கொண்டிருக்கும் சங்கதி. வீட்ல மாடு கண்ணுன்னு இருந்தா வீடு நச நசன்னு இருக்கும், வீட்டு பொம்பளைகளுக்கு அதை ஒதுங்க வைக்கவே நேரம் இருக்காது, வேளை அதிகமா இருக்கும் போது அலங்காரம் பண்ணத் தோணாது, என்ற யோசனையில் தான் தோழர் பசு வாங்கியிருக்கிறார்.

அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன?

December 24, 2011

திருமங்கலமும் முல்லை பெரியாறும்

மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்த ஊர் அதனால் திருமாங்கல்ய ஊர் என வழங்கப்பட்டு திருமங்கலம் எனத் திரிந்ததாக ஒரு கதை இந்தப் பக்கம் உண்டு. இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் பன்னிக்குண்டு. ஆதி காலத்தில் பன்னீர் மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் பன்னீர் குண்டு எனப் பெயர் பெற்று இப்போது பன்னிக்குண்டாக மாறிவிட்டது என்ற செய்தியால் திருமாங்கல்ய கதையையும் நம்பத் தொடங்கி இருந்தேன்.

அந்த பன்னிக்குண்டின் இளைய தலைமுறை தங்கள் ஊர் பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஆதி பெயரான பன்னீர்குண்டையே நிறுவிவிட வேண்டும் என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஊரில் உள்ள சைக்கிள், பைக், கார், ட்ராக்டர் முதல் கொண்டு மாட்டு வண்டி வரை உரிமையாளர் பெயரை சிறிதாக எழுதி பன்னீர் குண்டு என்பதை முரட்டாக எழுதி வருகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு.

திருமாங்கல்யத்துக்கு சாட்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணம் கிடைத்தது. அப்போது பெய்த பெரு மழையால் மக்கள் ஆக்ரமித்த பகுதிகளில் பெரு வாரியாக தண்ணீர் தேங்கி, அரசின் கவனத்துக்கு வந்தது. ஆக்ரமிப்பை அகற்ற சகல துறையினரும் சேர்ந்து வந்த போது மக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை கொண்டு அதை தடுக்க முயன்றனர். அதில் ஒருவர் கொண்டு வந்த செப்பு பட்டயத்தை பார்த்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள். அதில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானைகளை குளிப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்ட வாய்க்காலே இப்போது ஆக்ரமிக்கப்பட்ட ஓடை என்னும் செய்தி இருந்தது. எங்கள் முன்னோர்கள் தான் யானையை குளிப்பாட்டினார்கள், அதனால் இதை ஒட்டி தங்கிக் கொள்ள எங்களுக்கு திருமலை நாயக்கர் அனுமதி கொடுத்தார் என்று வாதிட்டார் அந்த பட்டய உரிமையாளர்.
ஆனால் இன்றைய திருமங்கலம் நடுத்தர வர்க்கத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு சிறு நகரம். சென்ற தலைமுறையினர் பெரும்பாலும் ஈடுபட்டது ஆசிரியர் பணி. இடம் வாங்கி வீடு கட்டி, மகனை சாப்ட் வேரில் தள்ளிவிட்டு சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் சராசரிகள் நிறைந்த ஊர். பொறியியலுக்கு இணையாக பி எட், டீச்சர் ட்ரைனிங் படிக்கும் ஊர் இது. தற்போது அம்மா டீச்சர் எலிஜிபிலிடி டெஸ்ட் என்று அறிவித்த உடனேயே பல ட்ரைனிங் செண்டர்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


30,000 ஓட்டுக்கள் உள்ள இந்த ஊரில் சராசரி மாத வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மட்டும் 5000க்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு டிசைனர் ஷோ ரூமோ, நல்ல திரையரங்குகளோ இல்லாத ஊர் என்பதில் இருந்தே எந்தளவுக்கு சிக்கனமானவர்கள் இங்கு இருப்பார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தேர்தல் ஒரு துன்பியல் சம்பவம்.

மக்கள் இங்கே அடிதடி அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. ஒரு உதாரணம். சென்ற திமுக ஆட்சியில், கருணாநிதி குடும்பத்தை கிழி கிழி யென்று அதிமுக பேச்சாளர் கிழித்தார். அதனால் அப்போதைய நகரச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய அழகிரி, ”ஏன் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அடிச்சு நிப்பாட்டலை?” என்று கேட்டார். பதில் அளித்த நகரம், அண்ணே இந்த ஊர்ல அடிதடி பண்ணுனா ஓட்டே போட மாட்டங்கண்ணே என்று பதில் அளித்தார். கோபப்பட்ட அழகிரி, அவரை மாற்றிவிடுமாறு தலைமைக்கு ஓலை அனுப்பினார்.

அடுத்து வந்தவரும் சரி. அதே போல் சம்பவங்கள் நடந்தபோது அமைதி காக்கவே முடிந்தது.

இரண்டு ஆண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளினால் இந்த ஊர் யார் குடியையும் கெடுக்காத சுயநல ஆசாமிகள் கொண்ட ஊர் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

ஆனால் முல்லை பெரியாறு என் மனதை மாற்றிவிட்டது. பல சங்கங்கள் தாங்களாகவே முன் வந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக ஒரு ராணுவ ஒழுங்குடன் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த சங்கம் போராடுகிறதோ அவர்கள் 100% ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள். பொது மக்களின் ஆதரவும் அமோகம்.

பெருமையாக இருக்கிறது இங்கே இருக்க.

December 23, 2011

தமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு

இரண்டாம் முறை பார்க்கும் படியாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கூட வராத ஆண்டு என்றால் அது 2001 தான். இது ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அறிமுக ஆண்டாகவும், சூர்யாவுக்கு (நந்தா) இரண்டாவது அறிமுக ஆண்டாகவும் அமைந்தது. மணிரத்னத்தின் உதவி இயக்குநர் அழகம் பெருமாள் டும் டும் டும் மூலமும், ஒளிப்பதிவாளர் ஜீவா 12பி மூலமும் இந்த ஆண்டு இயக்குநர் அவதாரமெடுத்தார்கள்.2000 ஆண்டு முழுவதும் பொறுமை காத்த விக்ரமுக்கு இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் அடியாக விழுந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் மூலம் தேவயானியின் கணவர் விக்ரமை மண்ணுக்கு கொண்டு வந்தார். ஆனால் காசி மற்றும் தில் மூலம் விக்ரம் நாயகன் அந்தஸ்தை இந்த ஆண்டு அடைந்தார். ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் என்று வீரப்பன் கதையை எடுத்து படம் வெளி வரும் முன் விசிடியில் 50 நாட்கள் ஓட்டி சாதனை படைத்த தரணி, தில் மூலம் விக்ரமுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை இந்த ஆண்டு கொடுத்தார்.

வானத்தைப் போல, வல்லரசுவின் வெற்றிக்குப் பின் பெரும் சக்தியாக மாறவிருந்த விஜயகாந்தை கவிழ்த்தவர்கள் வாஞ்சி நாதனும், நரசிம்மாவும். நரசிம்மாவின் இயக்குநரும், பத்திரிக்கையாளரும், வேலாயுதத்தின் ஒரிஜினலை இயக்கியருவருமான திருப்பதிசாமி படம் முடிவதற்குள் இறந்தது பெரும் சோகம். ஆண்டின் பிர்பகுதியில் வந்த தவசி விஜயகாந்த்துக்கு ஆசுவாசம் கொடுத்தது.

விஜய்க்கு வழக்கம் போல பிரண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக்கின் மூலம் சுமாரான வெற்றியும், பத்ரி என்ற தெலுங்கு ரீமேக்கின் மூலம் தோல்வியும் கிடைத்தது. பிரண்ட்ஸ் மூலம் தமிழுக்கு நல்ல வசனமும், காமெடி சேனல்களுக்கு வருமானமும் கிடைத்தது.

தீனாவின் மூலம் அஜீத்துக்கு தலை என்னும் பட்டப் பெயர் கிடைத்தது. சிட்டிசன் மூலம் சுமாரான தோல்வியும், பூவெல்லாம் உன் வாசம் மூலம் படு தோல்வியும் கிடைத்தது.

கமல்ஹாசன் ஆளவந்தான் என்ற படத்தைக் கொடுத்து பலரை கடனாளியாக்கினார். தவசி வெற்றிப் படம் என்று சொல்லுமளவுக்கு ஆளவந்தானின் தோல்வி அமைந்தது.சுந்தர் சி யும் தன் பங்குக்கு உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள் என்று மொக்கை போட்டார். மாயன் மூலம் நாசரும் நம்மை துன்புறுத்தினார். சிங்கீதம் சீனிவாசராவும் லிட்டில் ஜான் என்று பலரை அலற வைத்தார். சேரன், பாண்டவர் பூமி மூலம் குழப்பமான கருத்தை முன் வைத்தார். 60ல் வந்திருக்க வேண்டிய அண்னன் தங்கச்சி கதையை கே எஸ் ரவிகுமார் 2001ல் சமுத்திரம் என்ற பெயரில் எடுத்தார்.

மாதவன் நடித்த மின்னலே ஓரளவுக்கு பொழுது போக்கு படமாக அமைந்தது. அந்த ஆண்டுக்கான சிறந்தவைகளாக சுஜாதா கற்றதும் பெற்றதும் இல் பட்டியலிட்டதில் இந்தப் படம் இடம் பெற்றது.

கல்லூரி மாணவர்கள் கட் அடித்து காலைக்காட்சி போக வாய்ப்பாக வந்த படம் தான் சாக்லெட். மல மல என்று மும்தாஜ் ஆடியதில் அப்பட நாயகிக்கு கால் இஞ்சி ஜல்லி கூட கிடைக்கவில்லை.

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை வைத்து புது இயக்குநர் ஜானகி இயக்கிய குட்டி கவனிக்க வைத்த திரைப்படம்.
ரஜினி பாபாவுக்காக கடும் ஆராய்ச்சியை இந்த ஆண்டில் தான் மேற்கொண்டு இருந்தார்.

விவேக் (மின்னலே, மஜ்னு), வடிவேல் (பிரண்ட்ஸ், தவசி) மூலம் காமெடி சேனல்களுக்கு நல்ல வருமானம், மற்றும் ஹாரிஸின் நல்ல பாடல்கள் (மின்னலே, மஜ்னு, 12பி) தான் இந்த ஆண்டின் சிறப்பு என்றால் எவ்வளவு வறட்சியான ஆண்டு இது?

December 22, 2011

செகண்ட் ஷோ நிறுத்தப்படுகிறதா?

மற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால் எங்கள் ஏரியாவில் செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்கும் காட்சியாக இருந்தது. அதுவும் மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை பெண் வீட்டார் ஒரு படத்துக்காவது நிச்சயம் அழைத்துச் செல்வார்கள். இரவு உணவை ஒன்பது மணி அளவில் முடித்துவிட்டு சீவி சிங்காரித்து மாலையிலே கட்டி ஈரத்துணியில் சுற்றி வைத்திருக்கும் மல்லிகைப்பூவை தலையில் சூடி ஜிகு ஜிகு வென அந்த குடும்பத்தார் இரண்டாம் ஆட்டத்துக்கு கிளம்புவார்கள். திரையரங்கு முன்பாக ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அந்த மணலில் உட்கார்ந்து கொள்வார்கள். வறு கடலை வண்டி, சோன் பப்டி வண்டி போன்றவை ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். முதல் முறை வரும் போது மாப்பிள்ளைக்கு கவனிப்பு பலமாக இருக்கும். டிக்கெட் வாங்கி உள்ளே சென்றதும் ஃபேனுக்கு நேராக மாப்பிள்ளை, பெண் உட்காருமாரு பார்த்துக் கொள்வார்கள். நெருக்கமான காதல் காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ மனைவியின் கையைச் சுரண்டி அச்சாரம் போடும் புது மாப்பிள்ளையும், வீட்டார் அடுத்தடுத்து உட்கார்ந்திருப்பதால் சங்கோஜத்துடன் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்புடன் நெளிந்து கொண்டே படம் பார்க்கும் புதுப் பெண்ணும் பேரழகு. இடைவேளையில் சூடான பஜ்ஜியுடன் டீ, பெண்களுக்கு கோன் ஐஸ் என வீட்டின் கடைக்குட்டிகள் வாங்கி வருவார்கள்.

பக்கத்து கிராமங்களில் இருந்து மணமான தம்பதிகள் குழந்தைகளுடன் சைக்கிளில் வருவார்கள். அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வரும் அந்த கணவன் தன் மனைவியிடம் சொல்லுவான் “ கணேசன் அருமையா நடிச்சிருக்கிருராம்மா, நேத்து அழுகாத பொம்ப
ளைகளே இல்லையாம். ஸ்டாண்ட்ல சொன்னாக” என்று.

மனைவியும் அதைக் கேட்டுக் கொண்டே ”ஆமாமா, வெக்கிலு அக்கா கூட மத்தியானம் தண்ணியெடுக்கும் போது சொன்னாங்க” என்றபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு தங்கப்பதக்கத்தை பார்க்கப் போவார்கள்.

நாடக காலத்தின் தொடச்சியாக வழங்கி வந்த பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பதப் பிரயோகம் கான்கிரீட் தியேட்டர்கள் வந்த பின்னும் மாறவில்லை.

காலைக் காட்சி என்பது வேலையே இல்லாதவர்கள், பள்ளி, கல்லூரி கட் அடித்து வரும் மாணவர்கள் பார்ப்பது. மதியக் காட்சி என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் தெருப் பெண்களோடு பார்ப்பது. மாலைக் காட்சி என்பது வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் செட்டோடு வந்து பார்ப்பது. செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு பார்ப்பது.

ஒரு படத்தை எப்போது தூக்குவது என்பதை செகண்ட் ஷோ கூட்டத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்வார்கள். நேத்து 40 பேர் தான் வந்தாங்க, அதான் இன்னைக்கு படகோட்டிய போடச் சொல்லிட்டேன் போன்ற உரையாடல்கள் சகஜம்.

சில டீக்கடைகள், பெட்டிக்கடைகள் இந்த செகண்ட் ஷோ முடிந்து வரும் கூட்டத்துக்காகவே காத்திருக்கும்.

மதுரை, திண்டுக்கலில் இருந்து வாலிபர்கள் கோவைக்குச் செல்லும் போது இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு ஏறினால் காலையில் கோழி கூப்பிட சென்று விடலாம் என்று ஒரு கணக்கோடு படம் பார்க்க போவார்கள். லாட்ஜுகளில் தங்கியிருப்பவர்களுக்கு, அடுத்த நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரம் கடத்த உதவியதே இந்த செகண்ட் ஷோக்கள் தான்.

கால சுழற்சியின் விளைவாக இந்த செகண்ட் ஷோ பார்ப்பதற்கான காரணங்கள் அருகி வருவதால் இப்போதெல்லாம் கூட்டமே வருதில்லை. சமீபத்தில் மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இதைப் பற்றிய பேச்சு வந்துள்ளது. மதுரை புற நகர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் செகண்ட் ஷோ நட்டத்தில் நடந்து வருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனதாக இந்தக் காட்சியை நிறுத்தினால் ஆதரவு தருவதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

மனதுக்கு பிடித்த ஒவ்வொன்றாக வாழ்வில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் புது வரவுகளும் இருப்பதால், டேக் இட் ஈஸி

December 21, 2011

2000ஆவது ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

விஜயகாந்த், விவேக் மற்றும் ரஹ்மானுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய 2000, பிரபு, மீனா ஆகியோருக்கு தங்கள் நட்சத்திர அந்தஸ்தை இழந்த ஆண்டாக ஞாபகத்தில் இருக்கும். மணிரத்னத்தின் கடைசி வியாபார ரீதியிலான வெற்றிப்படம் அலை பாயுதே இந்த ஆண்டில் தான் வெளிவந்தது. ஹேராம், தெனாலி என வானவில்லின் இரண்டு எல்லைகளைப் போன்ற படங்களை கமல் கொடுத்தது இந்த ஆண்டில்தான்.

விஜயகாந்த்

சரிந்து கிடந்த கேப்டனின் மார்க்கெட் விக்ரமன் இயக்கிய வானத்தைப் போல படம் மூலம் எழுந்து நின்றது. மொக்கை காமெடி, அரதப் பழசான செண்டிமெண்ட் சீன்கள் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெற்றது. விகரமனுக்கும் இதுதான் கடைசி வணிக வெற்றிப் படம். என் கதையை சுட்டுவிட்டார் என்று பொருமிக் கொண்டே லிங்குசாமி எடுத்து அடுத்த ஆண்டு வந்த ஆனந்தம் படமும் வெற்றி பெற்றது. தற்போதும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் வெற்றி பெருவதைப் பார்க்கும் போது கூட்டுக் குடும்ப அமைப்புக்கு தமிழக ஆண்கள் ஏங்குகிறார்களோ என்னும் எண்ணம் எழுகிறது.

அடுத்து வந்த வல்லரசுவின் வெற்றியே விஜயகாந்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆக்‌ஷன் படத்தை வெற்றி பெற வைக்க ஹீரோவின் மாஸ் முக்கியம். இப்பட வெற்றியின் மூலம் கேப்டனுக்கு மாஸ் இன்னும் இருக்கிறது என்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்தார்கள். கமலா தியேட்டரில் இதற்காக அவருக்கு விழா நடத்தி வீர வாளும் கொடுத்தார்கள். இதன்பின் இப்பட இயக்குநர் மகராஜன் இயக்கிய எந்தப் படமும் வெற்றியடைய வில்லை.

விவேக்

கிக்கிரி பிக்கிரி காமெடிகளைப் பண்ணிக் கொண்டிருந்த விவேக்குக்கு இது திருப்புமுனை ஆண்டு. திருநெல்வேலி படத்தில் தன் காமெடி டிராக்கில் எம் ஆர் ராதா எலிமெண்ட்ஸை கொண்டு வந்தார். அது சின்ன கலைவாணர் பட்டம் வரை அவரை கொண்டு சென்றது. தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளையில், டபுள்ஸ், சுதந்திரம், குஷி ஆகிய படங்களில் திரையரங்கை அதிர வைத்தார். பாளையத்து அம்மனில் மூட நம்பிக்கைகளை சாடி செய்த காமெடி டிராக்கும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வின்னர் கைப்புள்ள 2004ல் வரும் வரையில் நம்பர் 1 அந்தஸ்தை இந்த ஆண்டுப் படங்களின் வாயிலாக பெற்றார்.

ரஹ்மான்

தால் பட வெற்றிக்குப் பின்னர் இந்தி மற்றும் ஹாலிவுட்டுக்கு ஷிஃப்ட் ஆகும் முன் ரஹ்மான் இசையமைப்பில் இந்த ஆண்டு அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ரிதம் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் வந்தன. இதில் தெனாலி தவிர அனைத்துப் பாடல்களும் ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்களாக அமைந்து விட்டன.

பிரபு

ஒருவர் எப்பொழுது ராம நாராயணன் படத்தில் நடிக்கிறாரோ அப்போதே அவர் மார்க்கெட் அவுட் என்பார்கள். ஆனால் பிரபு 99ல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசாவில் நடித்தும் அவருக்கு அடுத்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. பெரும்பாலும் தோல்விப் படங்கள் [மனம் விரும்புதே உன்னை, திருநெல்வேலி, வண்ணத் தமிழ் பாட்டு], . வெற்றி பெற்ற படங்களும் அவரால் வெற்றியடைய வில்லை [தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன்]. இதனால் அவர் நட்சத்திரத்தில் இருந்து நடிகராக மாறிப் போனார்.

கமல்ஹாசன்

96ல் அவ்வை சண்முகியின் வெற்றிக்குப் பின் கமல் இந்திக்கு அதை ரீமேக்க போனார். பின் திரும்பிவந்து மருதநாயக புதைகுழியில் விழுந்தார். பெப்ஸி பிரச்சினைக்காக காதலா காதலா என்று சறுக்கினார். எனவே ஹே ராமுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எல்லோரையும் திருப்திப் படுத்தாவிட்டாலும் சிலருக்கு நல்ல திருப்தி அளித்த படம். ஏகப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள். ஆனந்த விகடன், நாயகனுக்கு பின்னர் இந்தப் படத்துக்கு 60 மார்க் வழங்கியதாக ஞாபகம். இந்தப் படத்தின் மையக்கதை பட வெளியீட்டுக்கு முன்னர் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப் பட்டது. அதைப் படித்து விட்டு வந்தால் ஓரளவு புரிந்திருக்கும். முன் தயாரிப்புகளோடு படத்திற்கு வரச் சொல்வது எவ்வளவு அபத்தம்? படத்தில் கதாபாத்திரங்களின் வழியாக பேசப்பட்ட ஆறு மொழிகள் தான் படத் தோல்விக்கு காரணம் என்போரும் உண்டு. மற்ற நாடுகளில் ஒரு மொழிதான் இருக்கும். கூடுதலாக இன்னொரு மொழி பேசப்படும். எனவே அவர்கள் சப் டைட்டிலோ வாய்ஸ் ஓவரோ இல்லாமல் சமாளிக்கலாம். ஆனால் ஏகப்பட்ட மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரிப் படங்கள் எடுக்கும் போது சற்று யோசித்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, “ஓநாயா இருந்து பார்த்தாத்தான் அதோட நியாயம் புரியும்” போன்ற வசனங்களும், இசையில் தொடங்குதம்மா, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி போன்ற பாடல்களும் இபடத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன.

தெனாலி – ஜெயராமுக்கு சில வாய்ப்புகளையும், ரவிகுமாருக்கு சில கோடிகளையும் சம்பாதித்து கொடுத்த படம்.

இந்த ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே பட நாயகி பூஜா தான் கமலின் விஸ்வரூபம் பட கதாநாயகி என்கிறார்கள்.

பாரதி

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டது. அதன் நாயகன் சாயாஜி ஷிண்டே மூலம் தென்னாட்டுக்கு ஒரு வில்லன்/கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்தான். இளையராஜாவின் இசையில் நிற்பதுவே நடப்பதுவே போன்ற கிளாசிக் பாடல்களும் கிடைத்தன.

என்னம்மா கண்ணு

துவண்டு கிடந்த சத்யராஜை எழுப்பி உட்கார வைத்த படம். சக்தி சிதம்பரம் சத்யராஜுக்கே உரிய லொல்லை கேரக்டரில் புகுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். இன்றளவுக்கும் சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்க இந்தப் படம் ஒரு காரணம். இப்பட வெற்றிக்குப் பின் கூடிய பிரஸ்மீட்டில் சத்யராஜ் சொன்னது இது “ இந்தப் பட ரிலீஸுக்கு அப்புறம் தான் நாலஞ்சு புரட்யூசர் வந்திருக்காங்க, வீட்டுக்கு போனெல்லாம் வருது” என்றார். வடிவேலுவும் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.

விஜய்

பாசில் இயக்கத்தில் ஷாலினி ஜோடியுடன் இளையராஜா இசையில், சார்லி தாமு நட்பில், ஸ்ரீவித்யா அம்மாவாக இன்னொரு காதலுக்கு மரியாதையாக வரும் என்ற எதிர்பார்ப்பில் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் குஷியின் மூலம் கலக்கலாக திரும்பிவந்தார் விஜய். பிரியமானவளேவும் விஜய்யை காப்பாற்றியது

அஜீத்

அறிமுக இயக்குநர் துரை இயக்கிய முகவரி ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், இன்னொரு அறிமுக இயக்குநர் கவி காளிதாஸ் இயக்கிய உன்னை கொடு என்னை தருவேன் படு தோல்வி அடைந்தது.

வெற்றி கொடி கட்டு

வெளிநாடுகளுக்குப் போகாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுங்கள் என்று பார்த்திபன், முரளியை வைத்து சேரன் மெசேஜ் சொன்ன படம். பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனுக்கு இது உச்சக்கட்ட படம். ஏஜெண்டிடம் பனம் கொடுத்து ஏமாந்து கலங்குபவராக சார்லி அசத்தியிருப்பார்.

இந்த ஆண்டு தொடக்கத்துக்கு சற்று முன் டிசம்பரில் வெளியான சேது படம் பல இணை,உதவி இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது இந்த ஆண்டில் தெரியாவிட்டாலும் தற்போது வரை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

December 20, 2011

தம்பையா

ஞாயிறு காலையில் பேப்பரைப் புரட்டிக் கொண்டே குடிக்கும் இரண்டு டம்ளர் டீ தான் அடுத்த ஆறு நாட்களுக்கான பெட்ரோல் எனக்கு. இன்றும் காலை எழுந்து பார்த்தபோது மனைவியும் குழந்தைகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சென்னையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிய களைப்பு. எழுப்ப மனமில்லாமல் நானே தயாரிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு பிழைக்க வருபவன் பிரம்மச்சாரியாய் வந்து பல முன் தயாரிப்புகளுக்கு பின்னரே திருமணம் செய்தால்தான் இந்த ஊருக்கு ஈடு கொடுக்க முடியும். குறைந்தபட்சம் குழந்தைகளாவது சென்னையில் தான் பிறக்க வேண்டும். சிறு நகர/கிராம சூழலில் வாழப் பழகிய நாற்றுகளை பிடுங்கி வந்து சென்னையில் நட்டுப் பராமரிப்பது சிரமமே.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் எழ எத்தனிக்கவில்லை. ஆறு மாதமாய் துடைக்காமல் இருந்த பைக் ஞாபகம் வர, நைந்து போயிருந்த கைலியில் ஏ4 அளவுக்கு துணியைக் கிழித்துக் கொண்டு கீழிறங்கினேன். வீட்டின் உரிமையாளர் பகுதியில் இருந்து எப்போதும் கேட்கும் இசையருவி கேட்கவில்லை. பதிலாய் சன்னமான குரலில் புதிய தலைமுறையினர் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வை அகில உலகுக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் மகன் என்றும் இல்லா அதிசயமாய் வேட்டியும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு செல்லில் பேசியபடியே நடந்து கொண்டிருந்தான்.

இப்போதுதான் கவனிக்கிறேன். உரிமையாளர் உயிரை விட்டிருந்தார். துணியை பெட்ரோல் டேங்க் பையில் சொருகிவிட்டு, செல்லில் இருந்து காதை விடுவித்திருந்தவனிடம் போய் சன்னமான குரலில் எப்போ? என்றேன்.

”ராத்திரி 10 மணிக்கு டிவி பார்த்துக்கிட்டுருக்கும் போது நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்குன்னார். கால் டாக்ஸி கூப்புடுறதுக்குள்ள உயிர் போயிடுச்சு” என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் குடும்பத்து ஆட்களைத் தவிர யாரும் இல்லை. என் முகக் குறிப்பை கவனித்தவன், சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிட்டேன். மயானத்துக்கு தம்பி போயிருக்கிறான். 11 மணிக்கு எடுக்கப் போறோம். எல்லாரும் பத்து பத்தரைக்குள்ள வந்துடுவாங்க என்றான்.

அடப்பாவி பத்து மணிக்கு நடந்திருக்கு. வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு கூட சொல்லலை. சொந்தத்துக்கு கூட காலையில தான் சொல்லி இருப்பான் போல. சொல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை என அப்படியே மெதுவாக நகர்ந்து தெரு முனை டீக்கடையை நோக்கிச் சென்றேன்.

மாஸ்டர் டீ கிளாஸில் அரை கொள்ளளவுக்கும் குறைவாக ஊற்றிக் கொண்டிருந்தார். அடப்பாவி, இதைக் குடிச்சா நாக்கு கூட நனையாதேடா என்று நினைக்கும் போது மின்னலாக தம்பையாவின் நினைவு வந்தது.

வெண்கலச் செம்பு நிறைய சின்னம்மாவிடம் காப்பி வாங்கிக் குடித்துவிட்டு தம்பையா சொன்னதுதான் இது.

தம்பையா ஞாபகம் வந்ததைத் தொடர்ந்து ஊரும், ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சம்பிரதாயங்களும் என் மனதை ஆக்ரமித்தன.

முதலில் அந்த வீட்டுப் பெண்டிரிடம் இருந்து கேவலும், பின் விசும்பலும் கிளம்பும். அக்கம் பக்கத்துக்காரர்கள் சம்மனில்லாமல் ஆஜராவார்கள். கால் கட்டைவிரலை சேர்த்துக்கட்டு, மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து, சாணி, நெல்லு வச்சு விளக்குப் பொருத்து என தடாலடியாய் வேலை நடக்கும்.

பக்கத்து வீடுகளில் இருந்து மர பெஞ்ச், சேர் வகையறாக்கள் அணிவகுக்கும். வந்தவர்கள் அவற்றில் உட்காந்து கொண்டு வியூகங்களை வகுத்து கொண்டு இருப்பார்கள். வாடிப்பட்டு தப்பு செட்டுக்கு ஒரு ஆள், சங்குக்கு ஒரு ஆள், தேர் கட்ட மூங்கிலுக்கு ஒரு ஆள், தந்தி ஆபிசுக்கு ஒரு படிச்ச பையன் என திசைக்கொருவராக அம்புகளைச் செலுத்திக் கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே காப்பி ஒரு ரவுண்டு வந்திருக்கும். இந்த அம்புகளுக்கு முன்னால் ஒரு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்கும். அதுதான் தம்பையா. அவனுக்குத்தான் அந்த ஊரோடு தொடர்புடைய அனைவரின் உறவுக்காரர்களும் அவர்களின் தற்போதைய வசிப்பிடங்களும் அத்துப்படி. செல் வராத காலத்தில், என்னைக்குச் செத்தாலும் தம்பையா இல்லாத நாளிலே சாகக்கூடாது என்று கூட பேசிக் கொள்வார்கள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவான்.

தந்தை சிறு வயதில் இறந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் வலுவிலந்த அவன் குடும்பத்தை அவனது காக்கா வலிப்பு நோயும் தன் பங்குக்கு சோதித்தது. 10 வயதில் எழவு சொல்ல ஆரம்பித்தவன் அம்பானி செல் வந்த போது ஆயிரத்தை தொட்டிருந்தான். சிறு வயதில் அவன் தான் எங்களுக்கு கிசு கிசுக்கள் சப்ளை செய்தவன். கோடி வீட்டு குத்தாலம்மா இறந்த செய்தியை சொன்ன உடன் அவள் மருமகள் 100 ரூபாய் சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியின் பின்னர்தான் நான் மன்னர்கள் வாரிசு பிறந்த தகவலைச் சொன்ன தாதிக்கு முத்து மாலை பரிசளிப்பார்கள் என்பதையே நம்பத் தொடங்கினேன்.

சில பெண்கள் இறந்த போது மௌனமாய் அழுத சம்பந்தமில்லாத ஆண்கள், சில முதல் மரியாதைகள் என எங்கள் பதின்மத்தை தம்பையா சுவராசியப் படுத்தியிருந்தான்.

கடந்த ஆறேழு வருடங்களில் பலரும் பிழைப்புக்காக சென்னை, கோவை என புலம் பெயர்ந்திருந்தனர். ஊரில் யாராவது இறந்தால் தம்பையாதான் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான்.

சென்ற ஆண்டு ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, பெரியப்பா, பாட்டி காரியத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்த தன் மச்சினனிடம் சொன்னதும் உடன் ஞாபகம் வந்தது.

”நல்ல காரியத்துக்கு தான் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க, கெட்ட காரியம்னா கேட்ட உடனே கெளம்பி வந்துடணும், இல்லைன்னா உன் வீட்டுக் காரியத்தை நீயே செய்யுற மாதிரி ஆயிடும்”

ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். செல்லில் இருந்து மனைவியை அழைத்து விஷயத்தைத் சொல்லி உடனே கீழே வா என்றேன். கைலியை மடித்து கட்டிக் கொண்டு அவர்கள் பகுதிக்குள் நுழைந்து நான்கு பிளாஸ்டிக் சேரை வெளியில் எடுத்துப் போட்டு சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டேன்.

விஸ்வரூபத்தை எதிர்நோக்கி

மோசர்பியர் ஷோ ரூமில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்படங்களின் சி டி யும் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற நான் நீண்ட நேரமாக துழாவிக் கொண்டேயிருந்ததைப் பார்த்த விற்பனை உதவியாளர் அருகில் வந்து ”என்ன படம் சார் வேண்டும்?” எனக் கேட்டார். “மங்கம்மா சபதம்” என்ற பதிலைக் கேட்ட அடுத்த நொடியிலேயே அதை எடுத்துக் கொடுத்தார்.

சிரித்தபடியே, இந்த பழைய சபதம் இல்லைங்க, கமல்ஹாசன் நடித்த படம் வேண்டும் என்றேன்.

“இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பஜார்ல வேலை பார்த்தேன். 15 வருஷத்துல யாருமே இந்தப் படத்தை எங்கிட்ட கேட்டதில்லை” என்றார்.

இப்படி கமலின் மசாலா படங்களிலேயே மட்டமான மசாலாவைகூட நான்கைந்து முறை பார்த்த ரசிகன் நான். பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். அதைக்கூட கமலின் சிறப்புத் தோற்றத்துக்காக மூன்று முறை பார்த்தவன் நான்.

ஆனால் என்ன சொல்லுங்கள், இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் அடித்துக் கொள்ளவே முடியாது. நாட்டுக் கொரு நல்லவன் படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்த்தவர்கள், ரா ஒன்னில் ரஜினி இருக்கிறார் என்றதுமே முதல் காட்சிக்கே ஓடிப் போய் நரகாசுரனின் ஆதரவாளராக மாறியவர்கள் என அவர்களின் டிராக் ரெக்கார்ட் அமோகம்.

இப்போது கூட பாருங்கள், கோச்சடையான் என்ற பெயரை அதிகார பூர்வமாக ரஜினி ஓகே செய்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் மதுரை கோச்சடைப் பகுதியில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.

விருமாண்டி படம் வெளியான அன்று, வெளி மாநில தலைநகரம் ஒன்றில் இருந்தேன். படம் பார்க்க வழி இல்லாததால் அன்று இரவு இணையத்தில் ஏதாவது விமர்சனம் வந்திருக்கிறதா என தேடிய போது, தமிழில் விமர்சனம் வெளியாயிருந்ததைப் பார்த்தே இணைய தமிழ் உலகத்துக்கு வந்தேன்.

முதலில் நான் அறிந்து கொண்டது, ரஜினியின் ஆதரவுப்படை இங்கே மிக அதிகம் என்பது. இரண்டாவது கமலைப் பற்றி தொடர்ந்து எழுப்பப்பட்ட காப்பியடித்தல், எதார்த்தமின்மை (திரையுலகிலும், பொது வெளியிலும்] சார்ந்த குற்றச்சாட்டுகள்.

ஹேராம், அன்பே சிவம் படங்களைப் பார்த்த பின்னர், முன்னை விட அதிகமாக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருந்த கமலின் பிம்பம் லேசாக கலையத் தொடங்குவதைப் போல எனக்குத் தோன்றியது.

தொடர்ந்து அது போலவே கசப்பான உணர்வுகள். தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் தமிழ்மணம் முழுப்பக்கத்திலும் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. அதில் பாதிக்கும் மேலே படத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்தே இருந்தன. உன்னைப் போல் ஒருவனுக்கு வந்த விமர்சனங்களும் அப்படியே.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாலா, அமீர், சசிகுமார், வெற்றி மாறன், செல்வராகவன், ஜனநாதன், சீனு ராமசாமி, சற்குணம் என பல புதிய இயக்குநர்களின் படங்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. என்னடா இது புதிதாக வந்தவர்கள் எல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க இவர் ஒன்று, இரண்டுக்கே தடவிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கூட வந்தது.


இந்த ஆறு ஏழு மாதங்களில் மீண்டும் ஒரு மன மாற்றம். பாலா, செல்வராகவன்,சசிகுமார் மற்றும் சற்குணம் ஆகியோரின் சமீபத்திய படங்கள் ஒரு செய்தியைச் சொன்னது. இரண்டு, மூன்று நல்ல படங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். அதற்கு மேல் எல்லாமே ரீமிக்ஸ் தான் செய்ய முடியும் என்பதுதான் அது.


இந்த அளவுகோலில் கமலை நிறுத்திப் பார்த்தால் கமலின் மீது வந்த கோபம் குறைந்தது.

கமல் 30 வருடங்களுக்கும் மேலாக துறையின் ரசனை மாற்றங்களை சமாளித்து தன் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். மாற்று முயற்சிகளை யாருமே யோசிக்காத சூழ்நிலையில் [ 80-99 ஆண்டுகளில், முக்கியமாக நடிகர்களில்] அதை முன்னெடுத்துச் சென்றது கமல் தானே.

அவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.


தமிழ்சினிமாவில் தரமான ஐந்து படங்களைக் கொடுத்தவர்கள் என்று எண்ணினால் எத்தனை பேர் அந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரியாது. ஆனால் கமலின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும்.

கமல் அவர்களே, உங்களிடம் இருந்து அன்பே சிவத்திற்க்கு பின்னால் எதுவும் தமிழுக்கு கிடைக்கவில்லை. விஸ்வரூபம் பற்றிய செய்திகள் நம்பிக்கை தரும்படி இருந்தன. ஆனால் இப்போதோ, கதக் எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வதாக வந்த செய்திகள் கத்தக் என்று நெஞ்சில் குத்தியதைப் போல் இருக்கிறது. மீண்டும் ஒரு ஆளவந்தானை சந்திக்கும் திறன் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது.


ஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.

December 19, 2011

இம்முறையாவது கிடைக்குமா?

91ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயனம் கிளம்பிய போது, நிச்சயம் வெல்வோம் என்று அசார் நம்பியிருப்பாரோ இல்லையோ நான் நம்பினேன். மஞ்ச்ரேக்கர், டெண்டுல்கர் ஆகியோரின் மீது அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால் ஆஸி அணியினர், சிட்னியைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை சட்னியாக்கினார்கள். பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என அசாருதீன் காலம் எழுதும் அளவுக்கு கும்மாங்குத்து குத்தினார்கள்.

பின்னர் சச்சின் தலைமையில் அணி செல்லும் போது அவர்களே ஐந்து நிச்சயம், நான்கு லட்சியம் என்று தான் கிளம்பினார்கள். பின்னர் கங்குலி தலைமையில் செல்லும் போது சச்சின்,ட்ராவிட், லட்சுமண் மற்றும் சேவாக்கின் பேட்டிங்கால் தொடர் வெற்றிக்கு அருகில் சென்றோம். ஆனால் ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டி, ஓய்வு என்று செண்டிமெண்ட் அலை அதை நமக்கு மறுதலித்தது.

கும்பிளேவின் தலைமையில் செல்லும் போது முந்தைய அனுபவங்களால் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற போது எனக்குக் கிடைத்த மகிழ்சிக்கு அளவேயில்லை. 20-20 கோப்பையை அணி வென்ற போது கூட அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்ததில்லை.

தற்போது மீண்டும் நாம் அங்கே. இப்போது அணியின் மீது காரண காரியத்தோடு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். அதில் முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர்கள்.


எந்த அணி உலக டெஸ்ட் அரங்கில் கோலோச்சும் போதும் அந்த அணியில் வலுவான துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும். துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளே நுழையும் போது பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். பந்தும் வித்தை காட்ட தயாராக இருக்கும். முதலில் பேட் செய்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவித்திருந்தால் இன்னும் கடினம். பீல்ட் செய்த களைப்போடு உள்ளே வரவேண்டும். எதிர் அணியோ குதூகல மனநிலையில் உள்ளே வருவார்கள். தம் அணியினருக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், எதிர் அணியினரையும் களைப்படைய வைக்க வேண்டும் என துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பு அதிகம்.


மேற்கிந்திய தீவு அணியினருக்கு கிரினீட்ஜும், ஹெய்ன்ஸும் இருந்த வரையில் சரிவு ஆரம்பிக்கவில்லை. கிரினீட்ஜுக்குப் பின் பில் சிம்மன்ஸ் உள்ளே வந்தபோதுதான் செங்கல் உருவப்பட்டது. ஏன் நம் அணியினரே சேவாக் காம்பிர் இணை அபாரமாக ஆடிய பின்னர்தானே நம்பர் 1 நிலையை அடைந்தார்கள்.

86ல் இருந்தே ஆஸி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விஷயத்தில் யோகம்தான். டேவிட் பூன் – ஜெஃப் மார்ஸ், மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லாடர், மேத்யூ ஹைடென் – ஜஸ்டின் லாங்கர் என எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடுபவர்கள் வாய்த்தார்கள். இவர்களால் தான் ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் மஞ்சள் குளித்து வந்தார்கள்.

தற்போதைய ஆஸி அணி சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஷேன் வாட்சன் அவ்வளவு சிறப்பான டெக்னிக் கொண்டவரல்ல மேலும் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார். பிலிப் ஹுயுஸ், நியூஸிக்கு எதிரே ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பின்னர் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது. வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். ஆள் கிடைக்காத காரணத்தால் சிமன் கடிச்சைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். நல்ல துவக்க ஜோடி அமையவில்லையென்றால் ஆஸி அணியின் பேட்டிங் ஆர்டரை நம்மாட்கள் கலகலக்க வைத்து விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. (ஜாகிர், இஷாந்த புல் பிட்னஸ்ஸில் இருந்தால்).

நமது துவக்க ஜோடி தற்போது சரியான பார்மில் உள்ளது. சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. மூன்றாவது முச்சதம் ஆஸி மண்ணில்தான் என்று முடிவாகிவிட்டது. (ரொம்பத்தான் ஆசைப்படுறமோ?) . கவுதமும் கைகொடுத்தால் இம்முறை ஜெயம் நமக்கே.

August 18, 2011

தற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்றாலே அது முக்குலத்தோர் அல்லது தலித்களை முன்னிறுத்தியே இருக்கும். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் சுவர்கள் மற்றும் பிளக்ஸ் மூலம் முக்குலத்தோரில் யார் லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சேதுராமன் (மீனாட்சி மிஷன்), சேதுராமத் தேவர், வாண்டையார், முருகன்ஜி, பி டி அரச குமார் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தலித்களில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், சாத்தை பாக்யராஜ், கிருஷ்ணசாமி, முருக வேல் ராஜன், திருமா வளவன் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் பொதுவாக மற்ற சமுதாயங்களில் இருந்து குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி ஆராதிப்பது குறைவாகவே இருக்கும். கரிக்கோல் ராஜ், சவுந்திர பாண்டியன், பாபு நாயுடு என பெயர்கள் அடிபடுமே தவிர தொடர் பிரச்சாரம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் இப்போது இருவர் அடிக்கடி போஸ்டர்களிலும், பேனர்களிலும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனியரசு (கொங்கு வேளாள இளைஞர் பேரவை, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்), மற்றொருவர் பெரிஸ் மகேந்திரவேல் (நாடார் மஹாஜன சங்கம்).

மதுரை மாவட்டத்தில் இதுவரை கொங்கு வேளாளர்கள் மிக ஆக்டிவ்வாக அரசியலில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. இப்போது தனியரசின் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். “எங்களின் தனி அரசே” போன்ற பஞ்ச் வசனங்களுடன் திருமணங்களுக்கும், கோயில் விழாக்களுக்கும் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. அவர் மாநிலம் தழுவிய அரசியல் சக்தியாக மாற நினைக்கிறாரோ என்னவோ?

மற்றொருவரான பெரிஸ் மகேந்திரவேல், தொழிலதிபர். உசிலம்பட்டியில் இருக்கும் பெரிஸ் பிஸ்கட் தொழிற்சாலை இவருடைய குடும்பத்தைச் சார்ந்த்துதான். முதன் முதலில் மடிட்சியாவின் (மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) உசிலை வட்டார இணைச் செயலாளராக இருந்தார். மெதுவாக வளர்ச்சி பெற்று அதில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகக்குழு பொறுப்பு, பின்னர் செயலாளர் என அதிலும் முக்கியப் பொறுப்பு. எனவே ஓரளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள பதவிகளில் இவர் இருக்கிறார்.
தற்போது இவரை வாழ்த்தியும் மதுரையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் ஆசை இவருக்கும் துளிர் விடுவதையே இது காட்டுகிறது.

எதிர்காலத்தில் இவர்கள் நல்ல முறையில் சமுதாயப் பணி ஆற்ற வாழ்த்துக்கள்

August 17, 2011

மூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு

மூன்று முடிச்சு" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'பாலகுமார்' அவர்களுக்கு நன்றி.


விரும்பும் விஷயம்

1. திரைப்படங்கள்
2. புத்தகங்கள்
3. சாப்பாடு

விரும்பாத விஷயம்

1. அசுத்தம்
2. நய வஞ்சகம்
3. சோம்பல்

பயப்படும் விஷயம்

1. உறவுகளுக்குள்ளான பஞ்சாயத்து
2. வேலையின் நிரந்தரமில்லாத்தன்மை
3. பிள்ளைகளின் எதிர்காலம்


புரியாத விஷயம்

1. மகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதி என்னும் மாமியார்த்தனம்
2. தன் வீட்டுக்கு ஒரு நீதி புகுந்த வீட்டுக்கு ஒரு நீதி என்னும் மருமகள்தனம்
3. மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் கூட செண்டிமெண்ட்டை பாலோ பண்ணுவது

மேஜையில் உள்ள பொருள்

1. கணிப்பொறி
2. தேனீர்க் கோப்பை
3. குறிப்பு நோட்டு

சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்

1. நகைச்சுவை நடிகர்கள் (எப்போதும் கவுண்டமணி, இப்போது சந்தானம்)
2. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவே எழுதும் ஓவர் பில்டப் பேட்டிகள்
3. சில பதிவர்கள்

தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்

1. மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற திட்ட அறிக்கை தயாரித்தல்
2. நண்பர் ஒருவரின் ஆய்வுப் பணி அறிக்கையை திருத்துதல்
3. சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1.குறைந்தது பத்து அறிவு சார் சொத்துரிமை (பேடண்ட்) வாங்க வேண்டும் (வியாபார ரீதியில் பயன்தரக்கூடிய)
2.ஆடி அல்லது பென்ஸ் கார் (ஹை எண்ட்) ஒன்று வாங்க வேண்டும்
3. ஒரு நல்ல நாவல் எழுத வேண்டும்


உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்

மேற்கூறிய மூன்றும்

கேட்க விரும்பாத விஷயம்

1.சாவு/உடல் நலம் குன்றிய செய்திகள்
2. வறுமைச் செய்திகள்
3. சிறுவர்/சிறுமியர் கொலை, கற்பழிப்பு


கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்

1. சரளமான ஆங்கிலம்
2. கணிதவியல்
3. இயற்பியல்


பிடிச்ச உணவு வகை?

1. புரோட்டா, மட்டன் சாப்ஸ், ஆம்லேட்
2. இட்லி, ஈரல் குழம்பு
3. தேனீர்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது

1.விளையாடு மங்காத்தா
2. முத்தமிழே (ராமன் அப்துல்லா)
3. எவண்டி உன்னைப் பெத்தான் (வானம்)


பிடித்த படம்

இதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது

1. இன்செப்சன்
2. ஆடுகளம்
3. தென்மேற்கு பருவக்காற்று

இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்

1. காற்று
2. நீர்
3. உணவு

இதை எழுத அழைக்கப்போகும் நபர்

யார் எல்லாம் இந்த சங்கிலியில எழுதுனாங்கண்ணு தெரியலை.

இந்த ஆண்டு பதிவுலகில் இணைந்து, இன்னும் இந்த ஜோதியில் கலக்காத ஒருவர் இதை தொடரட்டும். (உடன்பிறப்பு, பலராமன், ராஜேஷ் மற்றும் ரியாஸ் அகமது ) இதுவரை எழுதலைன்னா, இதை அழைப்பாக ஏற்றுத் தொடரவும்

--
நட்புடன்,
முரளிகண்ணன்

August 16, 2011

வளையல்

எனக்கு வரும் கனவுகள் பெரும்பாலும் நேர்கோட்டிலேயே அமைந்திருக்கும். அதில் பிளாஷ் பேக் உத்திகளோ, பின் நவீனத்துவமோ, மாஜிக்கல் ரியலிஸமோ இருந்ததில்லை. பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளே மனதில் பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கின்றன. சிறுவயதில் கிரிக்கெட் வெறியனாக இருந்த போது தொடர்ச்சியாக கனவில் கமெண்டரி சொல்லி வீட்டிலுள்ளோர் துக்கத்தைக் கெடுத்திருக்கிறேன். சென்னை டெஸ்டில் இம்ரான் சதம் அடித்த அன்று,

“அப்பா, இம்ரான் கான் நம்ம வீட்டுக்கு வர்ராறாம்பா தயிர் சாதம் ரெடி பண்ணி வைங்கப்பா” என்று உளறினேன். கனவை விட அதிலிருந்த பொருட்பிழைக்கே அதிக கேலிக்கு உள்ளானேன். ஏண்டா அவரே பதான். பிரியாணி ரெடி பண்ணச் சொன்னா பரவாயில்லை, போயும் போயும் தயிர்சாதமா ரெடி பண்ணச் சொல்றே என்று வெறுப்பேறும் அளவுக்கு கிண்டல் பண்ணி விட்டார்கள்.

ஆனால் நேற்று வந்த கனவு, ஏராளமான மாண்டேஜ் ஷாட்டுகளுடன் கூடிய பாடலைப் போல் வந்தது. முதல் ஷாட்டில் எம்ஜியார் “வளையல் நல்ல வளையல், முத்து முத்தான வளையலுங்க” என்று பாடிக் கொண்டே போனார். பின்னர் ஒரு பெண் உயரமாக வளையலை அடுக்கி “ நான் ஜெயிச்சுட்டேன், எனக்கே முதல் பரிசு” என்று கிறீச்சிட்டாள்.

எங்கள் ஊரின் முதல் மற்றும் பிரபல வளையல் வியாபாரியான நாராயணன் மாமா, “ம்ம் இந்த மாசம் ஒரு வளகாப்பும் இல்லையே” என்று சலித்துக் கொள்கிறார்.

மதுரைக்குச் சென்று ஒரு மார்வாரியிடம் கடைப் பையனாக இருந்து தொழில் கற்று வந்தவர் அவர். கடையில் எம்ஜியார் படத்தை மட்டுமே வைத்திருப்பார். ”படகோட்டி, ரிக்‌ஷாக்காரன்னு எல்லாம் நடிச்சார், ஆனா வளையல் காரரா ஒரு படத்துல கூட தலைவர் நடிக்கலையே என்று அங்கலாய்ப்பார்”

அதான் படகோட்டியில நடிச்சாரே மாமா என்று கேட்டால், மெயினாவே வளையல்காரரா நடிக்கணும்டா என்பார்.

அடுத்த ஷாட், என்ன புரபோஸ் பண்ணனும்னா, பிளாட்டின வளையல என் கைல மாட்டிச் சொல்லுங்க என்கிறாள் மங்கை ஒருத்தி. உன் இடுப்பே கையளவு தானே இருக்கு, ஒட்டியாணமாவே போட்டு விடுகிறேன் என்கிறான் அம்பானி.

வரலட்சுமி விரதத்துக்கு வந்தவங்களுக்கு வளையல் குடும்மா என்கிறாள் 100 கிலோ எடையுள்ள மாமியார் ஒருத்தி. ஆகட்டும் அத்தே என்கிறாள் 110 கிலோ எடையுள்ள மருமகள்.

கார்த்திக்கும் வளையல்காரனாக ஒரு பாட்டுப் பாடுகிறார். மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் ராவணன் என்று தினத்தந்தி செய்தி சொல்லுகிறது. கடைசி வரியில் ஹீரோ வளையல்காரன் என்று முடிக்கிறது.

பேப்பரை சுருட்டி எடுத்துக் கொண்டு சொர்க்கத்துக்கு ஓடுகிறேன். நாராயணன் மாமாவை கண்டுபிடித்து மாமா “மெயின் ஆக்டரே வளையல்காரரா நடிக்கிற படம் வருது” என்கிறேன்.

அவர் சிரித்துக் கொண்டே ஒரு வருஷத்துக்கு முன்னாடி எம்ஜியார ஹீரோவா வச்சு வளையல்காரன் அப்படின்னு படமே எடுத்திட்டேன் என்கிறார். அவரது பழைய மார்வாரி முதலாளிதான் பைனான்ஸ் பண்ணினார் என்கிறார். ஏன் இவ்வளோ நாள் ஆச்சு என்கிறேன். நம்பியார் இப்பத்தானே இங்க வந்தார் என்கிறார்.

தங்க வளையலும், கண்ணாடி வளையலும் தான் பெண்களுக்கு பிடிக்கும். மண் வளையல்ல நிறைய டிசைன் வரும். ரப்பர் வளையல் கைக்கு பாதுகாப்பு என்று அறுக்கிறாள் அவள் விகடன் ரிப்போர்ட்டர்.

பாவம்பா சின்ன நகைக்கடை வச்சான். உள்ள செம்பு, மெழுகு வச்சு தங்க முலாம் பூசி, ஏகப்பட்ட வளையலை கொடுத்து ஏமாத்திட்டாங்க. இப்போ ஊர விட்டே ஓடிட்டான்பா என்று ஒருவனை நினைத்து எல்லோரும் உச்சுக் மொட்டுகிறார்கள்.

நான் அவளுக்கு வளையல் போட்டுட்டேன், அதனால அவ எனக்கு தங்கச்சி முறை என்று கனகாவைப் பார்த்துச் சொல்கிறார் சர்க்கரைத்தேவன் விஜயகாந்த்.

எனக்கு கைல வளையல் போடணும்னு ஆசை. என் வாழ்க்கை பூராம் கை இருந்திச்சு ஆனா வளையல் இல்லை என்று கண்ணீர் விடுகிறாள் விக்ரமன் பட கதாநாயகி.

இன்னும் என்னென்னவோ வளையல் தொடர்பில் கனவாக வந்தது. உணவு இடைவேளையில் நண்பன் சதீஷீடம் இதைப் பகிர்ந்து கொண்டேன்.

”ஆயிலி ஐட்டம் எதுவும் ஹெவியா சாப்பிட்டியா?” என்று ஆரம்பித்தான்.

ம்கூம் வழக்கம் போல லைட்டத்தான் என்றேன்.

”யார் பேரோ சொன்னயே, ஆங் நாராயணன், அவர் இருக்காரா? என்றான்.

அவர் செத்து பத்து வருஷம் ஆச்சு என்றேன்.

”மேடம் ஏதும் வளையல் கேட்டு டிமாண்ட் பண்ணினாங்களா?” என்றான்.

சமீபத்துல எதுவும் கேட்கலை. இதுக்கு முன்னாடி கூட செயின், தோடுன்னு தான் கேட்டிருக்காங்க என்றேன்.

”ஒரு வேளை நீ படிக்கும் போது, பீஸ் கட்ட உங்கம்மா ஏதும் வளையல் அடகு வச்சு......” என்று இழுத்தான்.

சேச்சே அப்படியும் எதுவும் நடக்கலை என்றேன்.

”முறைப் பொண்ணு இல்லேன்னா சின்ன வயசு காதலி வளையல் கேட்டு உன்னால வாங்கிக் கொடுக்க முடியாமப் போயி...” என்றான் சதீஷ்.

அடிக்கடி கே டிவி பார்க்கிறது உன் மனசுக்கு நல்லதில்ல என்றேன் நான்.

சாப்பிட்டு முடிந்து கேபினுக்கு திரும்பும் போது மனதில் ஒரு எண்ணம் ஓடியது. “ காஞ்சனா படம் போன வாரம் பார்த்தோமே, அது மாதிரி எதுவும் எபக்டோ” என்று. உடனே சிரித்து அதைத் துடைத்தேன்.


பின் பணியில் மூழ்கி ஒரு கோப்பில் ஆகஸ்டு 16 என்று கையெழுத்திடும் போதுதான் அது ஞாபகத்துக்கு வந்தது. 18 வருடங்களுக்கு முன் ஒரு சுதந்திர தினத்தன்று ஜூனியர் மாணவியை என் நண்பர்கள் வக்கிர பாலியல் கேள்விகளுடன் ராக்கிங் செய்ததை மௌன சாட்சியாய் வேடிக்கைப் பார்த்ததும், அடுத்த நாள் அவள் என்னைத் தேடி வந்து ”பிரின்ஸிபால் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன், நீங்கதான் நடந்ததை அங்க சொல்லணும்” என்று இறைஞ்ச,

நண்பர்களுக்காக நான் அதை மறுக்க, அவள் தன் கையில் இருந்த ஒற்றை பிளாஸ்டிக் வளையலை சிம்பாலிக்காக தடவியது மங்கலாக ஞாபகம் வந்தது.

July 27, 2011

ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்

2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னை பதிவர் பட்டறை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து இரு வாரங்களுக்குள் தமிழ்மணம் நிர்வாகம் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் ஒரு பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. மா சிவகுமார், பாலபாரதி மற்றும் சென்னைப் பதிவர்கள் அதை ஒருங்கிணைத்திருந்தார்கள். அந்நிகழ்வில் தமிழ்மணம் நிர்வாகம் (சங்கரலிங்கம் அவர்கள் வந்திருந்தார் என நினைக்கிறேன்) பங்கேற்பாளர்களுக்கு ஒரு டி சர்ட் வழங்கியது.

அன்றைய கலந்துரையாடலின் போது ஐகாரஸ் பிரகாஷ் அவர்கள் தமிழ்மணம் தொடர்ந்து நடத்தப் படுவதற்கான பொருளாதார பின்புலங்கள், அதன் சாதக பாதகங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
(அச்சமயத்தில் தேன்கூடு திரட்டி வேறு அதன் நிறுவனர் கல்யாண் அவர்களின் திடீர் மறைவால் ஸ்தம்பித்திருந்தது.)

அதன்பின் ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் எதிரேயுள்ள மினி ஹாலில் மீண்டும் தமிழ்மண நிர்வாகம் ஒரு சந்திப்பை நடத்தியது. தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர். அப்போது தசாவதாரம் பட ரிலீஸ். தமிழ்மணமே அப்பட விமர்சனங்களால் தளும்பி வழிந்தது. மேலும் ஆபாச பதிவுகள்/எழுத்துகள் பற்றி மட்டுமே விவாதம் நடந்தது. பொருளாதார சாதக பாதகங்கள் பற்றி எந்த ஆலோசனையையும் நடைபெறவில்லை.

கடந்த இரு வருடங்களாக சென்னையில் /பதிவுலகில் இல்லாததால்
அதன்பின் தமிழ்மண சந்திப்புகள் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.

தற்போது தமிழ்மணத்தின் அறிவிப்பைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடல்.

ஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனத்திற்கு ஒரு சலாம்.

July 19, 2011

நெற்றிக்கண் பத்திரிக்கைக்கு கண்டனங்கள்

நெற்றிக்கண் பத்திரிக்கையில் கடந்த சில வாரங்களாக ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. கிசு கிசு பாணியிலோ அல்லது பதலக்கூர் ஸ்ரீனிவாசலு பாணியிலோ இல்லாமல் நேரடியாக இடம் சுட்டிப் பொருள் விளக்கத்துடன் ரஜினி அவர்களது குடும்ப விஷயங்களை எழுதிக் கொண்டிருகிறார்கள்.

ரஜினி லதாவை திருமணம் செய்து கொள்ள என்ன காரணம்?, ரஜினியின் குடும்பத்துக்கு லதா இழைத்த அநீதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் ரஜினி ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு லதா ஒத்துக் கொள்ளாமல் அவர் வீரியத்தைக் குறைக்க தினமும் உணவில் வேப்பம்பூ ரசம் வைத்துக் கொடுத்தார் என்று அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை குறிவைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினியின் சினிமா, அவர் அரசியல் ஆகியவற்றை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஏனெனில் அவற்றை அவர் பொது வெளியில் வைக்கிறார். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பந்தி வைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

நெற்றிக்கண்ணுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்

July 18, 2011

கட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்

என்னடா காசை இப்படி இறைக்கிறாய்ங்க? இதுதான் பத்தாம் வகுப்பு முடிந்ததும் ஒரு அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து, கோவையில் உள்ள ஒரு பம்ப் உற்பத்தி கம்பெனியில் சப் காண்டிராக்டர்களை மேய்க்கும் பணியில் சேர்ந்த செந்திலுக்கு அடிக்கடி மனதில் எழுந்த கேள்வி.

ஒரு சதுர கிலோமீட்டரில் அதிகப்படியான பேச்சிலர்கள் வாழும் இடம் திருவல்லிக்கேணி என்றால் அதிகப்படியான கஞ்சர்கள் வாழும் இடம் செந்தில் பிறந்த ஊர். அங்கே பிறந்து, வளர்ந்து விட்டு அப்படி கேள்வி எழாவிட்டால் தான் ஆச்சரியம்.

இங்கே ஹோட்டலே இல்லையே! ஆரம்பிச்சா அள்ளிடலாம் என கனவுகளோடு கடை வைத்த பல ராஜகோபால்களை வெறும் கோப்பால் ஆக்கிய ஊர்க்காரனுக்கு ஆரியாஸிலும் அன்னபூர்ணாவிலும் அம்மும் கூட்டம் அதிர்ச்சியளிக்காமல் என்ன செய்யும்?

வேறு வழியில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஒரே தியேட்டரிலும் டைட்டில் போடும் போதுதான் கீழ்வகுப்பு டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பார்கள். கட்டுக்கோப்பாய் காத்திருந்து அந்த டிக்கெட்டை மட்டுமே வாங்குபவனுக்கு மேல் வகுப்பு டிக்கெட் முதலில் நிறையும் ஊர் ஆச்சரியமளிக்காதா? என்ன?

திருவிழாக்காலங்களில் பிரசாதமாக கிடைக்கும் வாழைப்பழத்தை மட்டுமே பழமாகப் பார்த்த ஒருவனுக்கு, பழமுதிர்ச்சோலையில் குடிக்கப்படும் மாப்பிள்ளை ஜூசைப் பார்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும்?

காப்பிக்கலர்ல எடுடா அழுக்குத்தெரியாம இருக்கும், பெரிசா தைங்க, வளர்ற பிள்ளை போன்ற உரையாடல்களை மட்டுமே கேட்ட காதுகளுக்கு அலன் சாலியும், லூயி பிலிப்பும் செவ்வாய் கிரக மொழியாய்த்தானே தெரியும்?

உடன் பணிபுரிவோர், சப் காண்டிராக்டர்கள், தங்கும் இடத்தில் உள்ளோர் என பார்க்கும் நபர்கள் எல்லாம் தாராளவாதிகளாய்த்தான் தெரிந்தார்கள் செந்திலுக்கு எல்லோரும் பெருமைக்கு எருமை மேய்ப்பதாய் தோன்றியது அவனுக்கு.

அவனின் ஒரே ஆறுதல் புரடக்‌ஷன் யூனிட்டில் இருந்த மணிண்ணா. சுப்பிரமணி என்ற அவர் இயற்பெயர் மணிண்ணா என்றே திரிந்து விட்டிருந்தது. இரண்டு ஏக்கர் நிலம் கோவை புற நகரில். அதில் விவசாயம். இங்கே சி என் சி ஆப்பரேட்டர், வருவது போவது எல்லாம் சைக்கிளில்தான். 15 வருட அனுபவம். வாய்ப்புகள் பல கிடைத்தும் வெளியில் செல்லாமல் கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருப்பவர்.

அவரிடம் தான் தன் ஆதங்கத்தை அவன் கொட்டிக்கொள்வான். அவரும் தன் பங்கிற்க்கு ஆறுதல் படுத்துவார்.
“நீ இப்போ அடிக்கடி போவயேப்பா, கட்ட பொம்மன் தெரு, சப் காண்டிராக்டரா இருப்பாங்களே, அங்க ரெண்டு ஆர்டர் அதிகமா வந்தாப் போதும் ஒரு வெள்ளை மாருதி வாங்குவாங்க.ஆறே மாசம் தான் கடன் கட்ட முடியாம சாணிப் பவுடரை குடிச்சிட்டு கறுப்பு மாருதியில போவாங்க”
இங்க எல்லாம் ஆடம்பரம் தாம்ப்பா என்று முடிப்பார்.

இவனும் தன் பங்கிற்க்கு ஆசுவாசப் பட்டுக்கொண்டு, ஆமா தொண்ணூறு நாள் கிரடிட்ல ஆர்டர் கொடுக்கிறாங்க. ஆனா ஜவ்வா இழுத்து பேமெண்ட் செட்டில் செய்யுறாங்க. இதை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி தொழில் வேணா செய்யலாம், வண்டி வாங்கலாமா? என்று நினைத்துக் கொள்வான்.

ஒரு ஆயுத பூஜை அன்று பொரி சாப்பிட்டுக் கொண்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தார்கள் ட்ரைனிகள் எல்லோரும். அப்போது அங்கே வந்தார் பர்சேஸ் டிபார்ட்மெண்ட் திவாகர். அங்கே அவர் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ. ஆட்டைத் தூக்கி மாட்டில் போடும் தடலாடி பேர்வழி. அவர் செந்திலிடம், என்னப்பா இப்படியே இருக்கப் போறியா? என்று கேட்டார்.

செந்தில் விழித்தான். தொடர்ந்த அவர், லோன் போட்டு ஒரு டூ வீலர் வாங்கு. பார்ட் டைம் பிஇ எக்ஸாம் எழுத கோச்சிங் கிளாஸ் போ. இப்படியே இருக்காதப்பா என்றார்.

சைக்கிள் செயினுக்கு கவர் போட்டாலே கதறி விடும் வீட்டைச் சேர்ந்தவன், லோன் போட்டு டூ வீலரா என்று அதிசயித்தான். அவன் முகக்குறிப்பை வைத்து எண்ணத்தை கணித்த திவாகர் தொடர்ந்தார்.

இந்த மாருதி இருக்கு பாரு, ஆள் போகுறதுக்காக தயாரானது. இப்போ ஸ்கூல் பிள்ளைங்களை கூப்பிட, லாட்டரி விக்க, விளம்பரம் பண்ண, ஆம்புலன்ஸ் ஏன் மார்ச்சுவரி வண்டியாக்கூட உருவம் எடுத்து களத்துலயே இருக்கு. மாறிக்கிட்டே இருக்கணும். மேல எப்படிப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கணும். இப்படியே இருக்காதய்யா என்று அறிவுறுத்தினார்.

செந்திலால் அப்படியே இருக்கவும் முடியவில்லை, துணிந்து இறங்கவும் முடியவில்லை. கோவையுடனும் அவனால் ஒட்ட முடியவில்லை. 98 குண்டு வெடிப்புக்கான மந்த நிலைக்குப் பின் சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டான்.

இப்போது ஏ டி எம் களில் ஐந்து ட்ரான்சாக்‌ஷன்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதி வந்திருக்கிறதே. அதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?. செந்திலின் ஊர்க்காரர்கள் தான். அட்டையை நுழைப்பார்கள். பேலன்ஸ் பார்ப்பார்கள். நோட்டில் குறித்து வைத்திருக்கும் அமவுண்ட் உடன் சரி பார்ப்பார்கள். பின்னர் ஒரு நூறு ரூபாய் எடுப்பார்கள். அதன்பின்னர் ஒரு முறை பேலன்ஸ் சரி பார்ப்பார்கள். இதனால் ரேஷன் கடை மண்ணெண்ணெய் க்யூ போல எப்போதும் ஏ டி எம் நிரம்பி வழியும். ட்ரான்சாக்‌ஷனை மட்டும் கணக்கில் எடுத்து அடிசனல் ஏ டி எம்மை நிறுவி பேங்க்காரர்கள் மூக்கறு பட்டுக்கொண்டார்கள். இது அவர்கள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டே மேற்கூரிய விதி அமலுக்கு வந்தது.

இப்போது சென்னையில் செந்தில் ஓரளவுக்கு காலூன்றி விட்டான். அலுவலக விஷயமாக நீண்ட இடைவேளைக்குப் பின் கோவை வந்தான். ஓய்வு நேரம் கிடைக்க, தன் முந்தைய பம்ப் கம்பெனிக்கு ஒரு விசிட் அடித்தான். பெரும்பாலும் புதிய முகங்கள். திவாகர் இப்போது தனியாக ஒரு இண்ட்ஸ்ட்ரி வைத்து பெரிய ஆளாகி விட்டதாக கேள்விப்பட்டான்.

ஆனால் அவன் தேடி வந்த்து மணிண்ணாவைப் பற்றி கேட்கத்தான். அக்கவுண்ட்ஸில் இருந்த பழைய ஆள் ஒருவரை பிடித்து விசாரித்தான்.
“அவருக்கென்னப்பா! சாதாரணமாத்தான் இருந்தாரு. திடீர்னு ரியல் எஸ்டேட்டெல்லாம் எகிறுச்சுல்ல, அப்ப அவர் பூமியும் தங்கமாயிடுச்சு. ரெண்டு ஏக்கரும் கிட்டத்தட்ட நாப்பது, அம்பது கோடிகிட்ட போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. இப்போ ரொம்ப நல்லா இருக்கார்”
என்று பதில் வந்தது.

நீங்கள் ஆம்னி பஸ்ஸிலோ, ரயிலில் இரண்டாம் வகுப்பிலோ பயணம் செய்யும் போது “ஒண்ணு அப்படியே இருங்க, இல்லையின்னா கண்ண மூடிக்கிட்டு எதிலயாச்சும் முழுசா இறங்குங்க, இடையில நிக்காதீங்க” என்பது போன்ற தத்துவ முத்துக்களை கேட்க நேர்ந்தால் சொல்பவர் பெயர் செந்திலாகவும் இருக்கக்கூடும்.

July 11, 2011

காசி விநாயகாவும் நாற்பது வயது பேச்சிலரும்

ஆடி, மார்கழி போன்ற சாமிக்கு உகந்த, விசேஷங்களுக்கு தகாத மாதங்கள் சென்ற பின் ஒரு வல்லிய முகூர்த்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும். அந்த நாளில் நடக்கும் ஏராளமான விசேஷங்களில் ஒன்றுக்குகூட பத்திரிக்கை கூட வராவிட்டால் அவன் வாழ்ந்தது வேஸ்ட் என்றான் சங்கர். அவன் எப்போதுமே இப்படித்தான். வாயைத் திறந்தாலே சுவீப்பிங் ஸ்டேட்மெண்ட் தான்.

அது கூடப் பரவாயில்லை, பொங்கலுக்கு நாலு நாள் லீவு வரும். அதற்குக் கூட குடும்பத்தோடு இருக்க முடியாமல் மேன்ஷனிலேயே தங்கி சாப்பிட மெஸ் மெஸ்ஸாய் அலைபவன்தான் மிகப் பாவம் என்று ஆதரவாயும் இல்லாமல் எதிர்ப்பாயும் இல்லாமல் ஒரு கருத்தை உதிர்த்தான் கணேஷ்.

தொடர்ந்து அரட்டையைத் தொடராமல் அந்தக் கருத்துக்களில் இருந்த உண்மை சதிவிகிதத்தை எடை போட மனம் முயன்றது. உடனே ஞாபகம் வந்த உருவம் காசி விநாயகா மெஸ்ஸில் அடிக்கடி பார்க்கும் நாற்பதுகளில் இருக்கும் பக்கத்து மேன்ஷன்வாசி.

கடையில் துணியெடுத்து உள் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, டார்க்கான கலரில் பாட்டத்தில் ஜிப் வைத்து தைக்கப்பட்ட பேண்ட், பிரவுன் கலர் லெதர் ஸ்ட்ராப் வைத்த டைட்டன் வாட்ச், பாட்டா செருப்பு, பேஸிக் மாடல் நோகியா இதனுடன் கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வார ஜூவியோ, ரிப்போர்ட்டரோ.

தான் இளைஞன்தான் என்று கடைசியாய் நம்பும் காலத்தில் நடைமுறையில் இருக்கும் பேஷனையே, தங்களின் மிச்ச காலத்துக்கும் ஆண்கள் தொடருவார்கள் என்ற சங்கரின் இன்னொரு சுவீப்பிங் ஸ்டேட்மெண்டுக்கு வலுச் சேர்க்கும் அவர் எந்த பொங்கலுக்கும் ஊருக்குச் சென்றதில்லை என்பது செவி வழிச் செய்தி.

வரிசையில் நிற்கும் போது யாருடனும் பேசாமல், சர்வரிடம் கூட எதுவும் கேட்காமல் கர்மவீரராய் நடந்து கொள்ளும் அவர் இப்போது மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

மனதில் பயம் வர ஆரம்பித்தது. இந்த ஆண்டுக்குள்ளாவது திருமணம் முடிய வேண்டும் என்று மனம் இறைஞ்சத் தொடங்கியது. இரண்டரை வருடம் ஆகிவிட்டது பேச்சுத் தொடங்கி.

பிரச்சனையே உங்க ஜாதிதான் சார் என்றார் ஒரு தரகர். உங்களோட உட்பிரிவுல பத்தாயிரம் பேர்கூட இருக்க மாட்டாங்க போலிருக்கே என்றார். சரி, வேற உட்பிரிவு? என்று இழுத்ததற்க்கு

நீங்க வேற முன்னவிட இப்பத்தாங்க அதிகம் ஜாதி, உட்பிரிவுன்னு பாக்குறாங்க, வாய்ப்பேயில்லை என்றார்.

என் உட்பிரிவில், பங்காளி முறை போக வயது, வேலை, வசதி, ஜாதகம் என பல பில்டர்களுக்குப் பின் பத்துப் பெண் தேறுவது கூட கடினம் எனப்பட்டது.

அந்தப் பத்தில் ஒன்றை செலக்ட் செய்வது பிரச்சினையில்லை. ஒன்றுக்காவது நம்மைப் பிடித்திருக்க வேண்டும் அதுதான் பிரச்சினை.


மார்க்கட்டிங் வேலை என்பதால் சில தட்டிப்போயின. சாயங்காலம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும், காலையில ஸ்கூலுக்கு அனுப்பணும். ஊர் ஊரா சுத்துறவங்க சரிப்படமாட்டாங்க என்ற பேச்சையையும் கேட்க நேரிட்டது.

எனக்கு அம்மா இல்லாததால் ஒரு வீட்டில் யோசித்தனர். பிரசவம், பிள்ளை குட்டின்னு நின்னு செய்ய மாமியா இல்லையே என்று ஒருவீட்டில் சொன்னார்களாம். மாமியார் இருந்தாலும் தொல்லைங்கிறாங்க இல்லேன்னாலும் இப்படியா என்று புலம்பி அதை கடக்க வேண்டியிருந்தது.

இதைக் கேட்ட சங்கர்தான் சொன்னான், மூல நட்சத்திர பெண்ணா பார்க்க வேண்டியதுதானே என்று? மருமக மூலம் மாமனார்க்குத்தான் என்று தரகர் அதற்கும் பதில் வைத்திருந்தார்.

மாப்பிள்ளையோட அப்பா கூடவே இருப்பாராமா? என்று சில விசாரணைகள்.

இதை விடக் கொடுமை, மாப்பிள்ளையோட அப்பாவுக்கு தலையில முடியே இல்லையே, இவரும் அப்படி ஆயிடுவாரேன்னு ஒரு பெண் சொன்னதுதான்.

உங்க அம்மாகூட தான் சிண்டெக்ஸ் டேங்க் மாதிரி இருக்கா, நீயும் அப்படித்தான் ஆயிருவ, ஆனாலும் நான் மனசைத் தேத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கலையா என்று நாக்கு வரை வந்த வார்த்தையை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு வந்தேன்.

அவங்கம்மா சைஸ் மட்டுமில்ல கலரும் கூட சிண்டெக்ஸ் டேங்க் மாதிரித்தாண்டா, யானைச் சிவப்பா இருக்குறவல்லாம் கூட ரிஜெக்ட் பண்றாளுகடா என்று டாஸ்மாக்கில் நண்பர்களோடு புலம்பியதுதான் மிச்சம்.நாங்க கிளம்புறோம்டா என்ற சங்கரின் வார்த்தையொலியில், ஓடிய எண்ணங்களை கலைத்து விட்டு நிகழுக்கு வந்தேன். அவர்கள் வந்திருந்தது கணேஷின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக. பேச்சு எங்கெங்கோ ஓடி அந்தப் புள்ளியில் நின்றிருந்தது. கடைசியாக இப்படி நண்பர்களோடு அரட்டை அடித்து பல மாதங்கள் ஆகியிருந்ததும் அது கூட சங்கரின் கல்யாண பார்ட்டிதான் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.

மேன்ஷனின் கீழே வந்து அவர்களை வழியனுப்பி வைத்த போது, கையில் ஜூவியை சுருட்டியபடியே அவர் எதிர்பட்டார்.

ஒரு நட்புப் புன்னகையை அவரை நோக்கி படரவிட்டேன்

July 08, 2011

அலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு

ஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் விந்துவாக இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை என்னும் நிலை இன்று. ஆனால் 95-96 ஆம் ஆண்டுகளில் ஈ மெயில் என்ற ஒன்றைப் பார்ப்பது என்பது அரிவாள் நடிக்காத ஹரி படம் போல அரிதானது. ஆனால் அதை பலருக்கு சாத்தியப்படுத்தியது அலாக்ரிட்டி. அது அடிப்படையில் ஒரு கட்டுமான நிறுவனம். தி நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் இயங்கிவந்த அலாக்ரிட்டி தன் நிறுவன புரமோஷனுக்காக இந்த உத்தியை கையாண்டது.

90களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட மென்பொருள் வேலை வாய்ப்பு புரட்சியின் காரணமாக ஏராளமான பணம் சென்னையின் தெருக்களில் பாய்ந்தோடியது. அதை அள்ளிக்கொள்ள அனுபவ் போன்ற ஆடு,மாடு மற்றும் தேக்கு வளர்ப்பவர்கள், சீட்டுக் கம்பெனிகள், ஓரளவு நியாயமான பெனிஃபிட் பண்டுகள் ஆகியோர் போட்டி போட்டனர். ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் தோன்றியதும் அந்தக்காலத்தில்தான்.
அதில் ஸ்டேண்ட் அவுட் பெர்பார்மராக இருந்த்து அலாக்ரிட்டி நிறுவனம்தான். தி ஹிந்து செய்தித்தாளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஆளெடுப்புக்கு அரைப் பக்க விளம்பரம் தரும். அவைகளுக்கு சமமாக அலாக்ரிட்டியின் விளம்பரமும் வெளிவரும். என் ஆர் ஐ களை கவருவதற்காக அவர்கள் கையாண்ட உத்திதான் ப்ரிண்ட் அவுட் ஈ மெயில் முறை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போனில் பேசுவதும், போஸ்ட் அனுப்புவதும் சிரமமாக/செலவாக இருந்த காலம். எனவே அவர்கள் அப்போது இணையம் மூலம் அலாக்ரிட்டியின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப வேண்டியது. அதில் உறவினர்களின் விலாசமும் இருக்க வேண்டும். மெயில் கிடைத்த உடன் அவர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து விலாசத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் கிடையாது. இதன்மூலம் ஜெனரேட் ஆகும் குட்வில்லுக்காக இதை செய்தார்கள் அவர்கள்.

அவர்களின் பலமே நியாயமான அணுகுமுறைதான். பணத்தை வெள்ளையிலேயே வாங்கினார்கள். நில உரிமையாளர்களுக்கும் வெள்ளையில் தான் செட்டில்மெண்ட். ஆர்க்கிடெக்ட் முதல் அடித்தட்டு தொழிலாளர் வரை நல்ல நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். சம்பளமும் நியாயமாக வழங்கினார்கள். மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு தேவையான அளவு இடம்விட்டு அடுக்குமாடிகள் கட்டினார்கள். நல்ல மூலப் பொருட்களை உபயோகித்தார்கள்.
இதனால் அந்த நேரத்தில் மற்ற போட்டியாளர்களை விட சதுர அடிக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். மூலப் பொருட்கள் எதிர்பாராமல் விலையேறினாலும் சொன்ன தரம் சொன்ன விலை என்பதில் உறுதியாய் இருந்தனர்.

எந்த அரசுத்துறைக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை என்ற முடிவிலும் உறுதியாய் இருந்தார்கள். இதனால் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. மின் இணைப்பு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அப்பிரச்சினை சரியாகும் வரையில் ஒரு வீட்டிற்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள் சில மாதம் வரை.

வீடு விற்று விடுவதோடு நின்று விடாமல் வாரண்டி பீரியட் போல பராமரிப்பையும் அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் தவறாக உபயோகப் படுத்தியதால் கதவின் தாழ்ப்பாள் பழுதானது. அதை சரி செய்ய வந்தவர், வேலையை முடித்து விட்டு ரூபாய் பதினான்கிற்கு பில் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றது போன்ற பல ட்ராக் ரெக்கார்டுகளையும் கொண்டது அலாக்ரிட்டி.
பத்து ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு மீண்டும் வந்தபோது அலாக்ரிட்டி என்ற பெயரே எங்கும் காணப்படவில்லை. என்ன ஆனது என்றும் தெரியவில்லை. பணிச்சூழலில் அதைப் பற்றிய நினைவும் இல்லை. சென்னையில் இருந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு முறை கூட அப்பெயர் காதில் விழவில்லை.

சென்ற வாரம் சென்னைக்கு மீண்டும் வந்திருந்தேன். தி நகர் இந்திப் பிரச்சார சபா தெருவில் சிம்பு வீட்டிற்க்கு எதிரே ஒரு அப்பார்ட்மெண்ட். அதில்தான் நான் வந்த உத்தியோக விஷயமான அதிகாரி இருந்தார். அந்த கேட்டிற்கு சென்ற உடனேயே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். விசால கார் பார்க்கிங், உறுதியான சுவர்கள், நல்ல லிஃப்ட் என. வீட்டின் உள்ளேயும் அப்படியே. வேலை முடிந்ததும் அவரிடம் கேட்டேன். எந்த பில்டர் சார் என்று? அலாக்ரிட்டி என்று பதில் வந்தது.
சந்தோஷத்துடன், இப்போ என்ன பெயரில் சார் இருக்காங்க என்றேன்?. இல்லை இது கட்டி 15 வருஷம் ஆச்சு. அவங்க இப்போ பீல்டில இல்லை. நேர்மையானவங்க சென்னையில தொழில் பண்ண முடியுமா என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

July 05, 2011

தமிழ்சினிமாவில் கம்யூனிஸ்டுகள்

94ஆம் ஆண்டுவாக்கில் ஏதாவது திரைப்படத்திற்க்கு சென்றுவிட்டு வரும் வழியில் அம்மாவின் அறுபதடி கட் அவுட் சரிந்து விழுந்து கோமா நிலைக்கு போன திரைப்பட ஆர்வலன் ஒருவனுக்கு, திடீரென இப்பொழுது நினைவு வந்தான் அவன் எதைப் பார்த்து அதிர்ச்சியடைவான்?

அருகருகே அமர்ந்திருந்தாலும் செல்போனிலேயே பேசிக்கொள்ளும் அளவுக்கு பெருகிவிட்ட செல்போன்களைப் பார்த்தா?, கோ ஆப் டெக்ஸில் வாங்கிய பழைய பச்சை போர்வையை வைத்தே அரசு விழாவை முடிக்கும் எளிமையையா? தாலி பெருக்கி போடும் நிகழ்ச்சி முதல் தாலி அறுக்கும் நிகழ்ச்சி வரை வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளைப் பார்த்தா?

இதையெல்லாம் விட அவனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பது தமிழ்சினிமாவின் தற்போதைய கதாநாயகர்களின் கேரக்டரைசேஷன்கள்தான்.
முன்னெல்லாம் கதாநாயகன் காதலனாக இருப்பான் இல்லை கம்யூனிஸ்டாக இருப்பான். கதாநாயகன் என்றாலே அவன் அமைப்பை,ஆட்சியை, பண்ணையாரை, பணக்காரரை எதிர்க்க வேண்டும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பதை சாம்பாரில்லிட்ட பருப்பாக வைத்திருந்தார்கள்.
இப்போது வரும் படங்களில் நாயகன் நல்ல குணங்களுடன் இருப்பதே அரிதாகி விட்டது. களவாணி, எத்தன் என கல்யாண குணங்களுடனே நாயகர்கள் வலம் வருகிறார்கள்.
எங்கள் தெருவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவருக்கு எம்ஜியாரை மிகவும் பிடிக்கும். கம்யூனிஸ தத்துவங்களை திரையில் கொண்டுவந்தவர் அவர்தான் என்பார். மலைக்கள்ளன், நாடோடி மன்னன் என உதாரணங்களை அடுக்குவார் அவர். பிற்காலத்தில் சிவப்பு மல்லி படம் கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை மையமாக வைத்து வந்தது.
வசந்த பாலன் இயக்கி ஆர்யன் நடித்த ஆல்பம், சுந்தர் சி இயக்கி கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், ஜனநாதன் இயக்கிய ஈ (பசுபதி) போன்ற படங்களில் நாயகர்கள் கம்யூனிஸ்டுகளாக வலம் வந்தார்கள். ஜனநாதனின் பேராண்மையில் கம்யூனிஸத்தை விளக்கும் சில காட்சிகள் இருந்தன.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கருணாநிதி வசனம் எழுதிய இளைஞன் படத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கைவல்யம் போன்ற பெயர்களை எல்லாம் உபயாகப்படுத்தி இருந்தார்கள்.
பல படங்களில் ஹீரோக்கள் மில் அதிபரை எதிர்ப்பார்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களுக்காக. அவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. தனிக்காட்டு ராஜா படத்தில் கூட ரஜினி ஜெயப்பிரகாஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு கம்யூனிசம் போன்ற ஒன்றைப் பேசுவார். அதுகூட காதல் தோல்வியினால் அந்தப் பாதைக்கு அவர் திரும்பியிருப்பார்.

கேரளாவில் “நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” போன்று கம்யூனிஸக் கொள்கைகளின் நிறை குறைகளை அலசிய படங்கள் பல வந்துள்ளன. முரளி போன்ற நடிகர்கள் கம்யூனிஸ்டாக வாழ்ந்தும் உள்ளனர். ஆந்திராவில் கம்யூனிஸ, மாவோயிஸ கருத்துக்களின் அடிப்படையில் பல படங்கள் வந்துள்ளன. அப்படங்களின் ஹீரோயின்கள் கவர்ச்சியாய் இல்லாததால் இங்கே டப் ஆகாமல் அவற்றை நாம் பார்க்க முடியவில்லை.

அய்யா தமிழ் சினிமா உலகினரே, கம்யூனிஸ கொள்கைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் கூட வேண்டாம். நாயகன் கம்யூனிஸ சிந்தனை சற்றேனும் உள்ளவனாக சித்தரித்தும் சில படங்கள் எடுங்கள்.

தாதாக்கள், அடியாட்கள், ஏமாற்றுபவர்கள் பற்றிய படங்களை கூட இவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லி வளரும் தலைமுறையினர் அந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சுயநலம் மிக்கவனாகவே பல ஹீரோக்களின் படங்கள் வருகின்றன. இவர்கள் தவறானவர்கள் என அவர்களிடம் நம்மால் நிறுவ முடியாது. பொது உடமை மனநிலை மிகக் குறைந்து வரும் சமுதாயத்தில் ஹீரோக்களும் அவ்வாறே ஆகிவருவது வருத்தத்துக்குரியது.

June 10, 2011

வேற்று மொழி நடிகர்கள்

திடீரென ஒர் படத்திற்க்கு அறிவிப்பு வரும். இந்தப் படத்தில் வேற்று மொழி படங்களில் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்று. இது ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த கதாபாத்திரம் சிலசமயம் ஹீரோவிற்க்கு இணையாகவும் அல்லது கதை திருப்பத்திற்க்கு முக்கியமானதாகவும் கூட இருக்கும்.

சத்யம் – உபேந்திரா
மலைக்கோட்டை – தேவராஜ்
சர்வம், கச்சேரி ஆரம்பம் - சக்கரவர்த்தி
வேட்டைக்காரன் – ஸ்ரீஹரி
ராஜ்ஜியம் – திலீப்
12 பி – சுனில் ஷெட்டி
தீனா - சுரேஷ்கோபி
என பல படங்களைச் சொல்லலாம்.

ஏன் இந்த கேரக்டர்களுக்கு இவர்கள் இவ்வளவு முக்கியமா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் அது பெரிய அப்பாடக்கர் கேரக்டராய் இருக்காது. வேட்டைக்காரனில் ஸ்ரீஹரி நடித்த போலிஸ் கேரக்டரோ அல்லது மலைக்கோட்டையில் தேவராஜ் நடித்த கேரக்டரோ நாசர், பிரகாஷ்ராஜ் வகையறாக்கள் போகிற போக்கில் ஊதி விட்டு போய்விடுகிற கேரக்டர்கள் தான். அப்புறம் ஏன் இவர்களைப் பிடித்து தொங்க வேண்டும்?

என் நண்பர் ஒருவர் சொல்லுவார், ஒரே பழிவாங்குற கதைதான். ஆனா அதையே ரஜினிய வச்சு, விஜய்காந்த வச்சு, விக்ரம வச்சு, விஜய்ய வச்சு, சூர்யாவ வச்சுன்னு ஆளை மட்டும் மாத்தினாலே போதும். மக்கள் ஏத்துப்பாங்க என்பார். இது காதல் கதை படங்களுக்கும் பொருந்தும்.
அப்படி மக்களுக்கு பழகின கதையா இருந்தாலும் புது முகமா இருந்தா ஆர்வமா பார்ப்பாங்க என்பது அவர் தியரி. யோசித்துப் பார்த்தால் அது சரிதான் என்று படும்.

ராம நாராயனன் அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு அம்மன் கதைதான். ஆனால் அவர் ஒவ்வொரு முறை எடுக்கும் போது அம்மனாக நடிக்கும் நடிகையை மாற்றிவிடுவார். (பாளையத்தம்மன் – மீனா, ராஜகாளியம்மன் – ரம்யா கிருஷ்ணன்). இது கவர்ச்சி நடிகைகள் விஷயத்தில் கட்டாயமான ஒன்று. படம் என்று ஒன்று எடுத்தால், டைட்டில் என்று ஒன்று இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒரு ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்ற ரூல் இருந்த காலத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அவரை மிஞ்சிய பேரழகி உண்டா? ஆனால் அவர் உச்சத்தில் இருக்கும்போதே அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என பல கவர்ச்சி நாயகிகளை களத்தில் இறக்கியவர்கள் நம் ஆட்கள். அவர்களுக்கு எதுவும் புதிதாக இருக்க வேண்டும்.

இயக்குநர் பி வாசு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். மசாலா படங்களிலேயே அதிகபட்சம் 10 கதைகள் தான் இருக்கும். 0 வில் இருந்து 9 வரை. அடுத்து 11ஆவது கதையென்று போனால் அதில் 0வும் 1 ம் கலந்திருக்கும் என்று. வேட்டைக்காரன் படத்தையே எடுத்துக் கொள்வோம். சென்னையில் இருக்கும் ஒரு தாதாவை தமிழ்நாட்டின் மற்றொரு பகுதியில் இருந்து வந்து வெல்லும் வீரனின் கதை. இது மாதிரி விஷாலே நான்கு படம் நடித்து விட்டார். ஆனால் வெரைட்டி காண்பிக்க வேண்டுமே? ஹிரோயின், ஹீரோவோட அப்பா அம்மா, ஃப்ரண்ட்ஸ், வில்லன் மட்டும் மாத்தினா போதுமா? கதைக்கு திருப்பம் கொடுக்க ஒரு இணை பாத்திரம் வேணுமே என்கிற போதுதான் இம்மாதிரி பிரெஷ்ஷான பேஸ் பிடிப்போம் என்று வேற்று மொழிகளில் இருந்து ஆட்களை பிடித்து வருகிறார்கள். இதில் வணிக லாபமும் ஒளிந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் போர்ஸாக இருக்க வேண்டும், அந்த பாத்திரம் வரும்போதே ஒரு கெத்தான பீல் கிடைக்க வேண்டும் எனும் போது இம்மாதிரி வேற்று மொழி பிரபலங்களை உபயோகப் படுத்துகிறார்கள். நினைத்துப் பாருங்கள் சத்யத்தில் உபேந்திரா கேரக்டருக்குப் பதில் நாசரோ, பிரகாஷ் ராஜோ நடித்திருந்தால் அந்தப் படத்தின் ஒரே ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும். 12 பி யில் முறைமாமன் கேரக்டர் தான் ஆனால் அதற்கு ஜீவா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சுனில் ஷெட்டியை கூட்டி வந்திருப்பார். ஏன் எத்தனை அமெரிக்க ரிட்டர்ன் கேரக்டர் நடிகர்கள் இருக்கிறார்களே? அவர்களை உபயோகப் படுத்தியிருக்கலாமே?

இன்னொரு முக்கிய காரணம், அந்த சப்போர்டிங் கேரக்டர்களுக்கு என்று தனிப்பட்ட குணாதிசயங்கள் அல்லது அது தனித்து தெரிவதற்கான சீன்களை உருவாக்கும் திறமை குறைவு அல்லது சோம்பேறித்தனம். கதாநாயகிகளுக்கே கேரக்டரைசேஷன் சரியாக செய்வதில்லை. இதில் இவர்களுக்கு வேறு கேரக்டரை சேஷனா என்று பெரும்பாலோனோர் விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் வித்தியாசமாக படைத்தால் இருக்கிற நடிகர்களே போதுமே?

நேர்மையான போலிஸ், கெட்ட அரசியல்வாதி, நல்ல அண்ணன் என்று ஒரே ஒரு பரிமாணம் கொண்ட கேரக்டர்களை உருவாக்குவதால் தான் வெரைட்டி காண்பிக்க புது ஆட்களை தேட வேண்டியிருக்கிறது. பேட் மென் வில்லன் போல வித்தியாச பரிமாணங்களில் இந்த இணை கேரக்டர்களை உருவாக்கும் போது தமிழ்சினிமா இன்னும் சுவராசியப்படும்

June 09, 2011

ஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்

இயான் ஹீலே - பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆஸி அணியில் இருந்தும் ஒரு உலகக்கோப்பை வெற்றி அணியிலும் இடம்பெறாதவர். அதே போல் எந்த ஆஷஸ் தோல்வி அணியிலும் இடம் பிடிக்காதவர். நூறு டெஸ்டுகளை கடந்தும் நல்ல பார்மிலேயே இருந்தவர். எந்த ஒரு வீரரையும் புள்ளி விபரத்தால் அளவிடக்கூடாது என்பார்கள். 96ல் உலக்கோப்பையை கலக்கிய ஜெயசூர்யா எடுத்தது 300க்கும் குறைவான ரன்களே. ஆனால் 96 உலக்கோப்பையைப் பற்றி பேசினாலே அவரைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.

அதுபோலவே 88 முதல் 99 வரை ஹீலே ஆடிய டெஸ்டுகளில் பல ஆட்டங்களில் அணியை தோல்வி அடையாமல் காப்பாற்றியுள்ளார்/ வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

கடைநிலை ஆட்டக்காரர்களுடன் பலமுறை இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அடித்த 4 சதம், 22 அரை சதத்தில் பெரும்பாலானவை அணிக்குத் தேவையான போது அடிக்கப்பட்டவையே.

இதைவிட அவர் கீப்பிங் திறமைதான் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. வார்னேவின் பந்துவீச்சுக்கு அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்லுவார். உண்மையிலேயே ஏதாவது சொல்வாரா அல்லது சும்மா வந்து காதைக் கடிப்பாரா என்று தெரியாது. ஆனால் பேட்ஸ்மென்னுக்கு கிலி ஏற்பட்டு விடும். சும்மாவே வார்னே பாலை விளையாட முடியாது, இதில் நம்ம வீக்னெஸ்ஸை வேற கண்டுபிடுச்சு சொல்லிட்டானோ என்று இரண்டு மனநிலையில் ஆடி அவுட்டாகிவிடுவார்கள். (நல்ல உதாரணம் பாகிஸ்தானின் பசத் அலி).
இந்த சமயத்தில்தான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அடி வெளுத்துக் கொண்டும், நன்கு கீப்பிங் செய்துகொண்டும் இருந்த கில்கிறிஸ்ட் தேர்வாளர்களின் கண்ணில் பட்டார். அவ்வப்போது ஒருநாள் போட்டிக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் தென்னாப்பிரிக்க தொடரில் (1997) அவர் ஒரு ஆட்டத்தில் அடித்த 77 ரன்கள், பின் தொடர்ந்த ஆட்டங்களில் அவரது வேகமான ஆட்டம் ஆகியவை ஹீலேயின் ஒருநாள் அணி இடத்தை ஆட்டம் காணச் செய்தது. அந்த காலக் கட்டத்தில் ஆஸி பல ஒரு நாள் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருந்தது, அதிரடி ஆட்டக்காரர்கள் குறைவினால். எனவே ஹீலேயின் ஒருநாள் போட்டி இடத்தை கில்லி பிடித்துக்கொண்டார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் ஹீலேயே முதல் சாய்ஸாக இருந்தார். நன்றாகவும் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் கலக்க, தேர்வாளர்கள் ஹீலேயே கழட்டிவிடத் தீர்மானித்தார்கள்.

ஹீலே ஆஸியில் ஆடிய கடைசி டெஸ்டில், ஒளிபரப்பில் ஆட்டத்தை விட அதிகம் ஒளிபரப்பப் பட்டவை ஹீலி ஆதரவாளர்களின் ஆதரவு அட்டை வாசகங்கள்தான். தேர்வாளர்களின் பிறப்பை சந்தேகப்படும் வாசகங்கள் உட்பட ஆஸ்திரேலிய போர்டை கேவலப்படுத்தும் பல வாசகங்கள் அதில் இடம்பிடித்திருந்தன. ஆனாலும் அசராமல் அவரைக் கழட்டி விட்டது ஆஸி போர்டு.

பின்னர் கில்லியின் அசகாய ஆட்டத்தால் அவை எல்லாம் அடங்கிப் போயின.

ஒரு அணியில் ஓர் இடத்திற்கு தற்போதுள்ளவரை விட திறமையானவர் தென்பட்டால் பழைய வரலாறைப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேபோல் பலமுறை ஆஸி முடிவெடுத்துள்ளது.

இப்போது இந்திய அணியிலும் இதேபோல் ஆப் ஸ்பின்னருக்கான ஓரிடத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜனின் விக்கெட் எடுக்கும் திறமை கேள்விக்குறியாய் உள்ளது (முக்கியமாய் டெஸ்ட் போட்டிகளில்).

அஷ்வின், கெய்லின் விக்கெட்டை ஐபிஎல் 4 குவாலிபையரிலும், இறுதிப் போட்டியிலும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமானார். ஐபிஎல் 3 பைனலிலும் சச்சின் விக்கெட்டை இக்கட்டான நேரத்தில் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். சாம்பியன் கோப்பையிலும் தரமான பந்துவீச்சு.
சென்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஆனால் தேர்வாளர்கள் குழு மற்றும் போர்டு ஹர்பஜனையே முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அஷ்வின்னுக்கு வாய்ப்பை சரியாக தர இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது ஆஸியைப் போல் நாமும் முடிவெடுப்பது?

May 18, 2011

மன்மதன் அம்பு

ஆண்கள் முப்பத்தி ஐந்தை தாண்டியபின் அனுபவிக்க நேரும் சங்கடங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தலையாயது தனியாக சினிமாவுக்குப் போக முடியாதது. அலுவலகம், வீட்டு வேலைகள் போக மிகக் குறைவான நேரமே கிடைக்கிறது. குடும்பத்தோடு போகலாம் என்று பார்த்தால் யாரும் அதற்கு ஒத்துக் கொள்வதில்லை.

ஆளவந்தான் படம் வெளியான அன்று எனக்கு தலை தீபாவளி. அப்படத்திற்க்கு ஏற்பட்டிருந்த ஹைப் காரணமாக காலை ஒன்பது மணிக்கே யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டேன். படப் பெட்டி வர தாமதமானதால் படம் மதியம் இரண்டுக்கு திரையிடப்பட்டு மாலை ஐந்தரைக்கு தண்டனை முடிந்தது. வீட்டிற்க்கு வந்தால் விழுந்த திட்டுக்கள் கூட உறைக்கவேயில்லை. அப்படி ஒரு சோகம், படம் நன்றாக இல்லாமல் போனதால்.

அப்படி வெறித்தனம் கொண்டிருந்த நான், மன்மதன் அம்பு வெளியாகி நான்கைந்து மாதமாகியும் பார்க்காத சோகம் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. டிவிடியில் பார்ப்பதில்லை என்ற தேவையில்லாத கொள்கை வேறு.

சமீபத்தில் உறவினர் திருமணம் ஒன்று அருகில் இருந்த சிற்றூரில் ஞாயிறன்று நடந்தது. வேண்டா வெறுப்பாக காலையில் கிளம்பி பேருந்தில் சென்று இறங்கிய போது ஒரு ஆனந்த அதிர்ச்சி. அவ்வூரில் உள்ள திரையரங்கில் மன்மதன் அம்பு.

திருமண சடங்கு ஆரம்பித்த உடனேயே நைஸாக கிளம்பி திரையரங்கிற்க்கு போய்விட்டேன்.

கமல், நீங்கள் ஹீரோயிஸ படங்களில் நடிக்க வேண்டாம். கதையின் நாயகனாக நடிங்கள். அந்த வேடம் உங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு சராசரி திறமையும், அனுபவமும் கொண்ட நடிகரே அதை சிறப்பாக செய்து விட முடியும் என்ற நிலையில் நீங்கள் எதற்கு?

நீலவானம் போன்ற ஜிம்மிக்ஸ் எல்லாம் எதற்கு?

ஒருவேளை படம் லாபகரமாக அமைந்து விட்டால் நிதி குடும்பத்தார் அனைவரும் மீண்டும் படம் செய்ய கேட்பார்கள் என்று, தெனாலிராமன் பூனைக்கு வைத்த சுடுபாலாக இந்த அம்பை விட்டீர்களா?

இடைவேளையில் என்னை விட பாவமாக இருந்தவர் கேண்டின்காரர். வட்டிக்கு வாங்கி கடை வச்சிருக்கேன்யா, பாத்து செய்யுங்கயா என்று பட போஸ்டரைப் பார்த்து அவர் கதறுவது போல் ஒரு பிரமை.

வடை, டீ என எதுவும் இல்லை. கேட்டதற்க்கு, என்னிடம் இருப்பதிலேயே சின்ன கேன் இதுதான். இதில் பத்து டீயாச்சும் வாங்கி வச்சாத்தான் சூடு ஆறாம இருக்கும். அதுகூட ரெண்டு நாளா ஓடலை என்று புலம்பினார்.

வேறுவழியில்லாமல் நமத்துப்போன உள்ளூர் தயாரிப்பு பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு மீதி படத்தைப் பார்த்தேன். பிஸ்கட் பரவாயில்லை என்னும்படி இருந்தது படம்.

ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்த பின் தான் தெரிந்தது, மொய் எழுதாமல் வந்தது. இம்முறையும் மனைவியின் திட்டுக்கள் உறைக்கவில்லை