February 28, 2009

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா?


தற்போது இந்தியாவில் மும்பை,ஹைதராபாத்,அஹமதாபாத், கல்கத்தா ஆகிய இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்கங்கள் உள்ளன. ஐமேக்ஸ் (இமேஜ் மாக்ஸிமம்) திரையரங்கில் உபயோகப் படுத்தப்படும் திரையானது குறைந்தபட்சம் 72 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இதைவிட அதிகமான அளவிலேயே தற்போது ஐமேக்ஸ் திரை செய்யப்படுகிறது. 2010க்குள் சென்னையிலும், பெங்களூருவிலும் தலா ஒரு ஐமேக்ஸ் திரையரங்குகளை உருவாக்க வேண்டும் என ஐமேக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் சத்யம் தியேட்டர் குழுமத்துடன் இதற்க்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவில் வரும் இரண்டு ஆண்டுக்குள் 10 ஐமேக்ஸ் திரையரங்குகளை (தற்போது இருப்பவற்றுடன் சேர்த்து) உருவாக்க ஐமேக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. இம்முயற்ச்சி சாத்தியமாகுமா?, தமிழ் திரைப்படங்களை இந்தத் திரையில் காணமுடியுமா? என பார்ப்போம்.

தமிழில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த மாவீரன் திரைப்படம் மட்டுமே 70 எம் எம் பிலிமில் படமாக்கப் பட்டுள்ளது. மொத்தமாகப் பார்த்தால் இந்தியாவில் 20க்குள் தான் 70 எம் எம் படங்கள் வந்துள்ளன. ஷோலே, ஏக் துஜே கேலியே, சாகர் , ரஸியா சுல்தான் உட்பட 10 க்கும் குறைவான படங்களே இந்தியில் வந்துள்ளன. மோகன்லால் நடித்த படயோட்டம் என்னும் மளையாளப் படம், மூன்று தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு கன்னட படம் ஆகியவையே 70 எம் எம் பிலிமில் படமாக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் 70 எம் எம் திரை உள்ள திரையரங்குகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கோவையில் ராகம்,கங்கா, சென்ட்ரல், மதுரையில் சினிப்பிரியா, திருச்சி மாரிஸ் என பெரிய ஊர்களிலேயே ஒன்றிரண்டு தான் இருக்கின்றன சென்னையின் முதல் 70 எம் எம் திரை தியேட்டரான ஆனந்த் மூடப்பட்டுவிட்டது. சத்யம்,காசி போன்றவை மட்டுமே நன்கு செயல்படுகின்றன. உதயம் தியேட்டர் கூட இப்பொது ஏலத்துக்கு வந்துள்ளது. ஏலத்தில் எடுப்பவர் தொடர்ந்து நடத்துவாரா? அல்லது வணிக வளாகமாக மாற்றுவாரா என்று தெரியவில்லை. 70 எம் எம் திரை எனில் குறைந்தது 1000 இருக்கைகளாவது போடவேண்டும். அவை வேலைநாட்களில் நிரம்புவது மிக கடினம். எனவே சிறிய திரை, 200 இருக்கை என்ற தத்துவம் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் தற்போது சென்னையில் கோலோச்சி வருகிறது.

ஐமேக்ஸ் திரையங்குகள், அதில் உபயோகப் படுத்தப்படும் பிலிம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பற்றி பார்க்கும் முன் 35 எம் எம். 70 எம் எம், 16 எம் எம், சினிமாஸ்கோப், சினிராமா, சூப்பர் 16. சூப்பர் 35 ஆகிய பிலிம்கள், அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பார்ப்போம்.


35 எம் எம்

இதுவரை தமிழில் படமாக்கப் பட்ட 99 சதவிகித தமிழ் படங்கள் இந்த பிலிமிலேயே படமாக்கப்பட்டுள்ளன. ஈஸ்ட்மென் உருவாக்கிய பிலிம் சுருளிலிருந்து எடிசன் மற்றும் டிக்சன்
ஆகியோரால் இந்த 35 எம் எம் பிலிம் தயாரிக்கப் பட்டது. 35 எம் எம் (மில்லி மீட்டர்) என்பது பிலிம் சுருளின் மொத்த அகலத்தைக் குறிக்கும். இதில் படம் பதிவு செய்யப்படும் பகுதியானது, 21.95 மி மி அகலமும், 18.6 மி மி உயரமும் கொண்ட பகுதியே. (படத்தில் START என்று எழுத்து காணப்படும் பகுதி). படத்தில் நீல நிறத்தில் காட்டப் பட்டுள்ள பகுதி சவுண்ட் டிராக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிலிமின் இருபுறமும் துளைகளை காணலாம். சாதரணமாக ஒரு பிரேமுக்கு நான்கு துளைகள் இருக்கும்.
ஒரு அடி பிலிம் சுருள் என்பது 16 பிரேம்களைக் கொண்டது. நம் திரைப்படம் ஓடும் வேகம் ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள். நம் தமிழ் படங்கள் சராசரியாக இரண்டரை மணி நேரம் ஓடும் படி எடுக்கப் படுகின்றன. இது 9000 வினாடிகள். ஒரு வினாடிக்கு ஒன்றரை அடி வீதம் 13,500 அடி படக்காட்சி நமக்குத் தேவை. சரிபாதி அளவு எடிட் செய்யப்பட்டாலும் 27,000 அடியில் ஒரு படத்தை முடித்து விடலாம். செல்வராகவன் (புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்) ,தரணி (தூள்) போன்றோர் 2 லட்சம் அடிக்கும் மேலாக படம் எடுப்பதாக குற்றச் சாட்டு உள்ளது. கே எஸ் ரவிகுமார், ஹரி, பி வாசு, எஸ் பி முத்துராமன் ஆகியோர் 20000 அடிக்கும் குறைவாகவே படத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள். தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இவ்வளவு அடிக்குள் ஒரு படத்தை முடிக்க வேண்டுமென இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மீறினால் விசாரனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.

சார்லி சாப்ளின் படங்களைப் பார்த்தோமானால் படத்தில் உள்ள கேரக்டர்கள் விரைவாக அசையும். அதற்க்குக் காரணம் அவற்றின் வேகம் வினாடிக்கு 18 பிரேம்கள். புன்னகை மன்னன் படத்தில் கமல் ஏற்று நடித்த சாப்ளின் செல்லப்பா வேடம் ஆடும் மாமாவுக்கு குடும்மா குடும்மா என்னும் பாடலை பார்த்திருப்பீர்கள். அதில் சாப்ளின் எபெக்ட் வேண்டு மென்பதற்க்காக கமலின் ஆலோசனைப்படி அந்த பாடல் வினாடிக்கு 18 பிரேமாக ஆக்கப்பட்டது.


உலகம் முழுவதும் 35 எம் எம் புரஜெக்டர்களே எல்லா திரையரங்குகளிலும் ஆக்ரமித்திருந்தன. 70 எம் எம் திரையில் விரியும் காட்சிக்கு தீனி போட அத்ற்கேற்ற கதை தேவை, காட்சி அமைப்பில் அதிக கற்பனைத்திறன் தேவை, செலவும் அதிகம். எனவே அனைத்து இயக்குனர்களும் 35 எம் எம் மிலேயே காலத்தை ஓட்டிக் ஒண்டிருந்தார்கள். அமெரிக்காவில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டு அது அங்கு பிரபலமான போது, தியேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பார்வையாளனையை திரையரங்குக்கு இழுக்க வேண்டிய கட்டாயம். ஆபத்பாந்தவனாக வந்தது சினிமாஸ்கோப் தொழில்நுட்பம். 1953 ஆம் ஆண்டில் உருவான இந்த தொழில்நுட்பம் 1973 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவிற்க்கு அறிமுகமாகி 1990 க்குப் பின் முழு வீச்சில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.

35 எம் எம் மில் என்ன குறை?

குறை என்று அதை சொல்ல முடியாது. 35 எம் எம் பிலிமின் மூலம் திரையிடப்படும் பிம்பத்திற்க்கு தேவையான ஆஸ்பெக்ட் ரேஷியொ 1.33 : 1. அதாவது திரை மூன்றடி உயரம் கொண்டதாக இருந்தால் அகலம் நான்கு அடியாக இருக்க வேண்டும். சினிமாஸ்கோப் முறையில் கிடைக்கும் பிம்பத்தின் ஆஸ்பெக்ட் ரேஷியொ 2.66 : 1. அதாவது திரை மூன்று அடி உயரமிருந்தால் அகலம் எட்டு அடி வரை போகலாம். 1990 க்கு முன் வந்த பெரும்பாலான திரைப்படங்களை நீங்கள் டிவியில் பார்த்தால் இதை உணரலாம். டிவி திரை முழுக்க படம் தெரியும் (அபூர்வ சகோதரர்கள், நாயகன், மௌன ராகம், மனிதன்). இவை 35 எம் எம் பார்மட்டில் தயாரிக்கப் பட்டவை. தற்போதைய படங்களான வில்லு, சிலம்பாட்டம் ஆகியவற்றை நீங்கள் பார்த்தால் அது பாதி திரையில் மட்டுமே தெரியம் ( வைட் ஸ்கிரீன் டிவிக்கள் விதிவிலக்கு). இந்தப் படங்கள் சினிமாஸ்கோப் முறைப்படி தயாரிக்கப் பட்டவை. இம்முறையில் தயாரிக்கப் படங்கள் பார்வையாளனுக்கு நல்ல காட்சிஅனுபவத்தை கொடுக்கக் கூடியவை.

சினிமாஸ்கோப்பும் 35 எம் எம் பிலிமிலே தான் படமாக்கப்படுகிறது. எப்படி அது சாத்தியமாகிறது?. இந்த முறையால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தாக்கம், 16 எம் எம், ஐ மேக்ஸ் ஆகியவை வரும் பகுதிகளில்.

February 26, 2009

சுருளிராஜன் – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்


முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்களை தமிழ்சினிமாவில் பிரதிபலித்தவர் சுருளிராஜன். கலைவானர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதைகளையுமே களமாகக் கொண்டிருந்தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்திருந்தன. மதுரை வீரன் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார் என் எஸ் கே. அதைத்தவிர சொல்லிக்கொள்ளும் படியான விளிம்புநிலை வேடங்களில் அவர் நடித்தது குறைவே.

அவருக்கு அடுத்து வந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சந்திரபாபு. அவரும் இம்மாதிரி கேரக்டர்களில் அதிகம் நடித்ததில்லை. சபாஷ் மீனா படத்தில் ஒரு நாடகத்தில் பார வண்டி இழுக்கும் கூலியாக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். நாகேஷும் பெரும்பாலும் மத்திய தர வர்க்க ஏழை கதாபாத்திரங்களிலேயே நடித்து அதிலேயே வித்தியாசம் காட்டி வந்தார். வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு பெரும்பாலும் பணக்கார கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்கள். மேலும் அவர்கள் சரீரம் அம்மாதிரி கதாபாத்திரங்களுக்கே மிகப் பொருத்தமாய் இருந்தது.


ஆனால் இவர்கள் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் 1975 வரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு மிகக் குறைவு. சுருளிராஜன் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தில் (ஜெய் சங்கரும் இந்தப் படத்தில் தான் அறிமுகம்) சிறு வேடத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 75 வரை அவரும் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நடித்துக் கொண்டிருந்தார். 70 களின் மத்தியில் துரை, மகேந்திரன், ருத்ரய்யா, பாரதிராஜா போன்றோர் சமகால சமூகத்தை சித்தரிக்கும் படங்களை இயக்கத் தொடங்கினர். 1977ல் பெட்டிக்கடை குருவம்மா, அவரது வேலையாள் என அடித்தட்டு மக்களை சித்தரித்த பதினாறு வயதினிலேவின் வெற்றி எல்லாரையும் சமூக படங்களை இயக்க ஊக்கமளித்தது. அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அந்தப் போக்கு தொடர்ந்தது.

இந்தப் போக்கு அதுவரை முதலிடத்துக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சுருளிராஜனுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது. 1980 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட 50 படங்களில் குணச்சித்திர/நகைச்சுவை நடிகராக நடித்தார். இதில் பெரும்பாலான வேடங்கள் அடித்தட்டு, விளிம்புநிலை கதாபாத்திரங்களே. அரவாணி, கழிவு அகற்றும் தொழிலாளி, பிண ஊர்தி ஓட்டுபவர் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். அவரின் மறைவுக்குப் பின்னால் உச்சத்துக்கு வந்த கவுண்டமணி, பின்னர் வடிவேலு ஆகியோரும் இம்மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினர்.

1965 ல் சுருளிராஜன் நடிக்க வந்த போது அவரது வயது 27. ஆனால் அவருக்கு கிடைத்த வேடங்கள் பெரும்பாலும் வயதான வேடங்களே. நான், மூன்றெழுத்து போன்ற படங்களில் அவர் தன் வயதுக்கு மீறிய வேடங்களிலேயே நடித்தார். இந்த காலத்தில் அவருக்கு ஆதரவாய் இருந்தவர் இயக்குனர் டி என் பாலு. அவர் வேலை செய்த எல்லாப் படங்களிலும் இவருக்கு வாய்ப்பளித்தார். சுருளிராஜன் பிரமாதப்படுத்திய சில படங்கள்.

மாந்தோப்பு கிளியே

இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கஞ்சப் பிரபு வேடத்தை அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம். ஜோடியாக காந்திமதி. பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை நிலையாக வைத்து உடலை விசிறிக்கொள்வதும், விளக்கு இல்லாத நேரத்தில் உடை அழுக்காகிவிடும் என அவிழ்த்து வைப்பதுமாய் அதகளப் படுத்தியிருப்பார். உச்சமாக ஐந்து கிலோ அரிசிக்காகவும், பணத்துக்காகவும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வார். எம் ஏ காஜா இயக்கிய இந்தப் படத்தில் தான் குடும்ப் கட்டுப்பாடு பற்றிய வசனங்கள் தமிழ்சினிமாவில் முதல் முறையாக பேசப்பட்டன.

ஒளி பிறந்தது


அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம். மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித்திருப்பார். சுருளிராஜனுக்கு குதிரை (ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதிரை வெள்ளைத்துணி போர்த்திய பினத்தைப் பார்த்தாலே நின்றுவிடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதிக்கப்படுவார். இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக்னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதிரையை மாற்றி தப்பிப்பார்.

மனிதரில் இத்தனை நிறங்களா?

கழிவறை சுத்தப் படுத்தும் தொழிலாளி வேடம் சுருளி ராஜனுக்கு. அந்த ஊர் உயர்ஜாதியினர் தாழ்த்தப் பட்ட மக்களை இழிவாக நடத்துவார்கள். அதனால் பொங்கியெழும் தாழ்த்தப் பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். துணி துவைப்பவரின் தங்கையை சுருளிராஜன் காதலிப்பார். ஆனால் பெண்ணின் அண்ணனோ இவர் நம்மை விட தாழ்ந்த ஜாதி. அதனால் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்பார். உடனே சுருளிராஜன் மத்த ஜாதிக்காரங்கள்ளாம் சேர்ந்து நம்மை தள்ளி வச்சாங்க. இப்போ நமக்குள்ளேயே என்னை தாழ்ந்தவன்கிறீங்க என்பார். 30 ஆண்டுகள் ஆகியும் இந்த பிரச்சினையும் தீராமல் இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அருந்ததியர்களும், விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் புதிரை வண்ணார்களும் இந்த பிரச்சினைக்கும் உள்ளாகிறார்கள்.

முரட்டுக்காளை

தன் தந்தையைக் கொன்றதற்க்காக பண்னையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளிராஜன் தான். ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார். ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திருட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டைக்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள். சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடையப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்யவேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வார்.

ஹிட்லர் உமாநாத்

தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார். அவரை குளிர்விக்க அவரை புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.

பாலாபிசேகம்

ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு.

ரஜினிகாந்துடன் பல படங்களில் தோழனாக, தொழிலாளியாக பல படங்களில் சுருளிராஜன் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்றவற்றில் நல்ல வேடங்கள். ”இப்படி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சொல்றான் கந்தசாமி” என நான் போட்ட சவால் படத்தில் அவர் ரஜினியிடம் பேசும் வசனம் பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட ஒன்று.

அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்டச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார். அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார். சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசன்ங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.

இதற்க்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே. பெரியகுளத்தில் 1938ல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தன. தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கும் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.

சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித் தொண்டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும். எம் ஆர் ராதாவுக்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும் கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு மெருகேற்றியது அவர் குரலே.

1980 ல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயெ மறையக் காரணமாய் இருந்தன. 10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.


இவர் ஜெய்சங்கருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமை பெரும்பாலும் விஜய் டி வி யிடமும், ராஜ் டி வி யிடமும் உள்ளது. இந்தத் தொலைக்கட்சிக்கான பார்வையாளர்கள் குறைவு என்பதால் புதிய தலைமுறையிடம் சுருளிராஜன் சரியாக சென்று சேரவில்லை. இவர் படங்கள் ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில் அகால நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. தற்போது நகைச்சுவைக்கெனவே ஆதித்யா, சிரிப்பொலி போன்ற சேனல்கள் துவக்கப் பட்டுள்ளதால் இவரது காட்சிகள் ஒளிபரப்பப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் சன் மற்றும் கலைஞர் குழுமம் இவருக்குரிய மரியாதையைக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

சுந்தர் சி நடிக்கும் முரட்டுகாளை ரீமேக்கில் சுருளிராஜன் வேடத்தில் விவேக் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

February 18, 2009

படப்பெட்டியும் டிஜிடல் சினிமாவும்

முன்பு தமிழ்படங்களுக்கு சராசரியாக 60 முதல் 80 பிரிண்டுகள் வரை போடுவார்கள். ஒரு ஏரியாவிற்க்கு சராசரியாக 10 பிரிண்டுகள் வரை கொடுக்கப்படும். பின் அந்த திரையரங்குகளுக்கு கூட்டம் குறையத் தொடங்கியதும் அடுத்த கட்ட ஊர்களுக்கோ, அல்லது அந்த ஊரில் தொலைவில் உள்ள திரையரங்கிலோ படம் திரையிடப்படும்.


உதாரணத்துக்கு மதுரை - ராமானாதபுரம் (ஓல்ட் எம் ஆர் என்று வினியோக வட்டாரத்தில் சொல்வார்கள்) ஏரியாவை எடுத்துக் கொள்வோம்.
இங்கே மதுரை யில் இரு தியேட்டர்களிலும், திண்டுக்கல்,தேனி,கம்பம், விருதுநகர்,சிவகாசி,ராஜபாளையம்,காரைக்குடி,பழனி, ராமனாதபுரம் ஆகிய ஊர்களில் ஒரு தியேட்டரிலும் படம் வெளியாகும்.


கூட்டம் குறைய ஆரம்பித்ததும் மதுரையில் உள்ள இரண்டாம் கட்ட தியேட்டர்களுக்கும், அருப்புக்கோட்டை,சாத்தூர், ஒட்டன்சத்திரம்,சிவகங்கை,பெரியகுளம்,உசிலம்பட்டி போன்ற தாலுகா/நகராட்சி அளவிலான ஊர்களுக்கும் படம் திரையிட கொடுக்கப்படும்.


பின்னர் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, சோழவந்தான் என அடுத்தநிலை ஊர்களுக்கு கொடுக்கப்படும். கடைசியாக கிராம திரையரங்குகளுக்கும், டூரிங் டாக்கீஸ்களுக்கும் கொடுக்கப்படும்.

மூன்றாம் நிலை ஊருக்கு ஒரு படம் வெளியாகி 100 நாட்கள் கழித்து வந்தால் அந்த படம் பெரிய வெற்றி என கருதப்படும். ஏனென்றால் மதுரை,திண்டுக்கல் இரண்டு ஊர் மட்டுமே 100 நாட்கள் படம் ஓடும் அளவுக்கு மக்கள் தொகை கொண்டவை. மற்றவை 50- 60 நாட்கள் அளவுக்கே கெப்பாஸிட்டி கொண்டவை. இவற்றில் 50 நாட்களும், இரண்டாம் நிலையில் 40- 50 நட்கள் ஓடி பின் மூன்றாம் நிலை ஊருக்கு வந்தால் படம் வெற்றி. 30 நாளிலேயே இங்கு வந்து விட்டால் படம் தோல்வி.

குறைவான அளவு பிரிண்ட் போட காரணம் என்ன?. பிரிண்ட் போட ஆகும் செலவுதான். சராசரியாக ரூபாய் 50,000 ஆகும் ஒரு பிரிண்டுக்கு. பட தயாரிப்பு செலவு 1 கோடி எனக் கொள்வோம் (80 மற்றும் 90 களில்). 80 பிரிண்டுக்கு 40 லட்சம் ஆகும். இது பட தயாரிப்பு செலவில் 40% ஆகும். எனவே குறைவான பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழக அரசு கூட லோ பட்ஜெட் படம் என்பதற்க்கு வைத்திருந்த அளவுகோல் 30 பிரிண்டுக்கும் குறைவாக போடப்பட்டிருக்க வேண்டும் என்பதே. அந்தப் படங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. ரஜினி,.கமல் படங்களுக்கு கூட அந்நாட்களில் 100க்கும் மேல் பிரிண்டுகள் போடப்பட்டதில்லை.

இந்த முறையானது 95க்குப் பின்னால் பெரும் நெருக்கடியை சந்தித்தது.

காரணங்கள்

1. சிற்றூர்களில் தொடங்கப்பட்ட உள்ளூர் கேபிள் டிவிக்கள் புதிய படங்களை (கேசட் மற்றும் விசிடி மூலம்) ஒளிபரப்பின. 100 நாட்கள் கழித்து அந்தப் படம் தியேட்டருக்கு வந்தால் அதற்கு என்ன வசூல் கிடைக்கும்?

2. நகரங்களில் திருட்டு வி சி டி படம் வெளியாகி இரண்டு மூன்று வாரத்தில் எளிதாக கிடைக்க ஆரம்பித்தது. இதனாலும் வசூல் குறைந்தது.

3. பின் தனியார் தொலைக்காட்சிகள், தியேட்டர் பராமரிப்பின்மை, தியேட்டர் ஊழியர்களின் அலட்சியப் போக்கு (வரிசையில் நின்று டிக்கட் வாங்குபவர்களை ஏசுவது, குச்சியால் அடிப்பது) போன்றவற்றால் மத்தியதர வர்க்கம் தியேட்டர்களை புறக்கணித்தது.

இந்த நிலையைப் போக்க மக்களை தியேட்டருக்கு வரவழைக்க பிரமாண்டப் படங்கள், அதிக பிரிண்டுகள் போடுதல்,திருட்டு விசிடி தடுத்தல், தியேட்டர் பராமரிப்பு (தரம் உயர்த்தல்) ஆகிய வழிகள் முன்வைக்கப்பட்டன.

பிரமாண்டப் படங்களின் தோல்வி என்பது பலரையும் பாதிக்கக் கூடியது. மேலும் பிரமாண்டம் வெற்றிக்கு உத்திரவாதமும் அல்ல. தியேட்டர் பராமரிப்பு தற்போது பல நிறுவனங்களால் நன்கு மேற்கொள்ளப் படுகிறது. கார்பொரேட் நிறுவனங்களும் இதில் குத்திதுள்ளன.

மற்ற இரண்டு வழிகளான அதிக பிரிண்ட் மற்றும் திருட்டி விசிடி தடுப்புக்கு ஆபத்பாந்தவனாக வந்திருப்பது டிஜிடல் சினிமா சிஸ்டம். இந்த முறையில் படமாக்கப்பட்டு,எடிட் செய்யப்பட்டு,டப்பிங், ரீ ரெக்கார்டிங் என எல்லாம் முடிந்த பிலிம் சுருளானது டிஜிடல் பார்மட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த சோர்ஸ் கன்டென்ட் ஓரிடத்தில் வைக்கப்படும். பின்னர் டிஜிடல் புரஜெக்டர்கள் வைத்துள்ள தியேட்டர்களுக்கு தேவையான போது சாட்டிலைட் சர்வர் மூலம் தரவிறக்கம் செய்யப்படும்.

இதன் சாதகங்கள்

1. பிரிண்ட் போடுவதை விட மிக குறைந்த செலவு. எங்கெங்கு டிஜிடல் புரொஜெக்டர்கள் உள்ளதோ அவை எல்லாமே பிரிண்டுகள் தான். எனவே ஒரே நேரத்தில் எல்லாவித ஊர்களிலும் (மவுண்ட் ரோடு முதல் மன்னாடி மங்கலம் வரை) வெளியிடலாம். இப்பொழுது பல திரைப்படங்கள் இந்த முறையைப் பயன்படுத்தி பேரூராட்சி அளவிலான ஊர்களில் கூட ரிலீஸ் செய்யப்படுகின்றன.

2.திருட்டு விசிடி தடுப்பு. சிலந்தி (மோனிகா நடித்தது) திரைப்படத்திற்க்கு கன்வென்சனல் முறைப்படி பிரிண்ட் போடவே இல்லை. (பெட்டியே இல்லை). டிஜிடல் சிஸ்டம் உள்ள திரையரங்கில் மட்டுமே படம் வெளியிடப்பட்டது. அதனால் பர்மா பாஜாரில் விசிடி கிடைக்கவே இல்லை. படம் ஓரளவு பிக்கப் ஆகியதும் மற்ற இடங்களுக்கும் படத்தைக் கேட்கவே பின்னர் பிரிண்ட் போட்டு கொடுத்தார்கள் (சாதாரண புரஜெக்டர் வைத்துள்ள திரையரங்குகள்).

தியேட்டரில் காமிரா பிரிண்ட் எடுத்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?

முன்பு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பட பிரிண்டுகளில் ரகசிய குறியீடுகள் செய்வார்கள்.தியேட்டரில் யாராவது கேமிரா மூலம் படமெடுத்தால் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதைக் கண்டுபிடித்து காவல்துறை மூலம் தண்டிப்போம் என்று விளம்பரம் செய்தார்கள். இந்த முறையை வேறு சில தயாரிப்பாளர்களும் பின்பற்றினார்கள். ஆனால் பைரேட்டுகள் அஞ்சவில்லை. அதையும் முறியடித்தார்கள்.

தற்போது டிஜிடலிலும் இவ்வாறு மார்க் செய்கிறார்கள். முதலில் வெளியில் தெரியும் படியான மார்க்கை செய்தார்கள். திருட்டி விசிடிகாரர்கள் அதையும் வெற்றிகரமாக சமாளித்தார்கள். பின் சுதாரித்துக் கொண்ட டிஜிடல் ஆட்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் மார்க் செய்தார்கள் (வாட்டர் மார்க்). இவ்வாறு மார்க் செய்யப்பட்ட படத்தை எந்த பார்மட்டுக்கு மாற்றினாலும் அவர்களிடமுள்ள கருவியின் மூலம் கண்டுபிடிக்கமுடியும். எனவே கறுப்பு ஆடை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

மேலும் எந்த நேரத்தில் படம் திரையிடப்படுகிறது என்பது முதலான விபரங்களும் பதிவு செய்யப்படுகிறது.

3. எளிதில் படம் அனுப்பும் வசதி. தற்போது வெளியாகி உள்ள படிக்காதவன் படம் உள்பட சுமார் 400க்கும் அதிகமான படங்கள் (இந்திய மொழிகளில்) இம்முறையில் வெளியிடப்பட்டுள்ளன. பழைய முறையில் இயங்கும் புரஜெக்டர் உள்ள திரையரங்குகளுக்கு பிரிண்ட்டும், டிஜிடல் புரஜெக்டர் உள்ள திரையரங்குகளுக்கு சாட்டிலைட் மூலமும் படம் அனுப்பப்பட்டது. எல்லாத் திரையரங்குகளும் இந்த வசதியை ஏற்றுக் கொண்டால் பெட்டி வரல்லை என்ற பதம் வழக்கொழிந்துவிடும்.

இந்தியாவில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது ரியல் மீடியா இமேஜ் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனம். கியூப் என்று திரையரங்குகளில் பார்த்திருப்பீர்கள். பிரசாத் லேப் படச்சுருளை டிஜிடல் ஆக்கும் சேவையை வழங்கி வருகிறது. டெக்சாஸ் நிறுவனம் இதற்குரிய புரஜெக்டர்களை தயாரித்து தருகிறது.

இந்த புரஜெக்டரின் முக்கிய பாகங்கள்

1. டிஜிடல் வீடியோ சிக்னலை தரும் பாகம்

2. தேவையான ஒளி, லென்ஸுகள்

3. மைக்ரோ மிரர் டிவைஸ். இந்த கருவியில் 10 லட்சத்துக்கும் அதிகமான மைக்ரோ அளவிலான கண்ணாடித் துண்டுகள் பொதிந்து வைக்கப் பட்டிருக்கும். இந்த கருவியே வரும் டிஜிடல் சிக்னலை வெள்ளித்திரையில் படமாக விரிய வைக்கிறது.

இந்த புரஜெக்டரில் இருந்து படத்தை திரையிட ரகசிய எண் கொடுக்கப் பட்டிருக்கும். அதை உள்ளீடு செய்தவுடன் டிஜிடல் சிக்னல் தரவிறக்கம் செய்யப்பட்டு படம் ஒளிபரப்பாகும்.

வரும் நாட்களில் இந்த முறையே திரைத் துறையில் பெரிதும் பின்பற்றப் படும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.

February 15, 2009

ஜிம்மி ஜிப், அகேலா, ஸ்டெடி காம், ரெட் மற்றும் ஆவிட் எடிட்டிங்
ஜிம்மி ஜிப்கடந்த 20 அண்டுகளில், உலக அளவில் திரைத் துறைக்கு உதவியாக பல உபகரணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமாக ஒளிப்பதிவிற்க்கும், எடிட்டிங்குக்கும் உதவியாக பல கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜிம்மி ஜிப், அகேலா கிரேன் போன்ற உபகரணங்களால் வேண்டிய கோணங்களில் விரைவாக படமாக்கும் வசதி அதிகரித்துள்ளது. ரெட் ஒன் போன்ற நவீன கேமராக்கள் உபயோகிக்கப் படுவதால் காட்சிகளின் தரம் அதிகரிக்கிறது. நான் லீனியர் எடிட்டிங் முறையான ஆவிட் எடிட்டிங் போன்றவற்றால் படத் தொகுப்பு எளிதாகவும், விரைவாகவும் முடிகிறது. இந்த தொழில்நுட்பங்கள் ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமான சில ஆண்டுகளுக்குள்ளேயேதமிழ்சினிமாவில் அறிமுகமாகிவிடுவது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி ஜிப் /அகேலா கிரேன்

முன்பெல்லாம் டாப் ஆங்கிள் ஷாட் வேண்டுமென்றால் (எ.கா. கதாநாயகி வயல் வெளியிலோ அல்லது மழையிலோ ஆடும் போது மேலிருந்து அதன் சுற்றுப்புரத்தோடு காட்டும் காட்சிகள்) கிரேனில் காமிராவை வைத்து அதில் டெக்னீஷியன் உட்கார்ந்து (ஒளிப்பதிவு இயக்குனர் கோணம் வைத்தவுடன்) படமாக்குவார்கள். இதில் குறிப்பிட்ட உயரம் மட்டும் செல்லும் வசதி இருக்கும். பல சிக்கலான கோணங்கள் கடினம்.

உதாரணம்
தசாவதாரம் பட 12ஆம் நூற்றாண்டு காட்சியில் கேமரா கோபுரத்தின் மீது ஏறி, பின் கலசம் வழியாக படிப்படியாக இறங்கி தரைக்கு வந்து பின் யானை மீது வீற்றிருக்கும் குலோத்துங்க சோழனின் முகத்தில் போய் நிற்கும்.

முகுந்தா முகுந்தா பாடல் காட்சியில் கேமரா ராமானுஜ மடத்தின் மீது ஏறி பின் முற்றம் வழியாக இறங்கி வீட்டிற்க்குள் நுழைந்து அங்கே ஆடிக்கொண்டிருக்கும் சிறுமிகளிடம் போய் நிற்க்கும்.

இந்த மாதிரியான காட்சிகளை எளிதாக எடுப்பதற்க்கு ஜிம்மி ஜிப், அகேலா கிரேன் மாதிரியான உபகரணங்கள் உதவுகின்றன. நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் இவை அமைக்கப்பட்டிருக்கும். சீ சா என சொல்லுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். சீ சாவின் ஒருமுனையில் கேமராவும், இன்னொரு முனையில் அதற்க்குரிய கன்ட்ரோலும் கவுண்டர் வெயிட்டும் இருக்கும். இந்த கன்ட்ரோலின் மூலம் கேமராவை விரும்புமாறு உபயோகிக்கலாம். காட்சிகளின் கோணம், போக்கஸ் ஆகியவை
சரியாக இருக்கிறதா என்பதை மானிட்டரில் பார்த்து சரி செய்து கொள்ளலாம்.
தற்போது ஜிராபி என்னும் கிரேனும் தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஸ்டெடி காம்

ஒருவர் ஓடும் காட்சி அல்லது, தூரத்தில் இருப்பவரை/பொருளை நோக்கி செல்லும் காட்சி போன்றவற்றை முன்னாட்களில் ட்ராலியை உபயோகப் படுத்தி எடுத்து வந்தார்கள். இம்மாதிரியான காட்சிகளில் டெக்னீஷியனின் திறமை முக்கிய பங்கு வகிக்கும். எவ்வளவு திறமையான டெக்னீஷியன் ஆனாலும் பிரேமில் ஷேக் வர வாய்ப்பு இருக்கும். ஆனால் ஸ்டெடி காமில் அதற்க்கான வாய்ப்பே இல்லை. அதனுள் உள்ள அமைப்பானது, ஒரு குறிப்பிட்ட தளத்தை ரெபெரென்ஸாக வைத்துக் கொள்ளும். கேமராவை தூக்கிக் கொண்டு வில்லன் பின்னாலோ,ஹீரோ பின்னாலோ ஓடினாலும் அதில் ஏற்படும் எந்த அதிர்வையும் தனக்குள் உள்ள மெக்கானிசம் மூலம் சமப்படுத்திக் கொள்ளும். எனவே எந்த வித குறைபாடும் இல்லாமல்
காட்சிகள் பதிவாகும். சேஸிங் காட்சிகளுக்கு இதன் தேவை மிக அதிகம்.

ரெட் ஒன்

இதைப் பற்றி கேபிள் ஷங்கர் ஏற்கனவே ஒரு அருமையான பதிவை இட்டுள்ளார். மார்கழி ராகம் திரைப்படத்தில் எட்டு ரெட் ஒன் கேமிராக்களை உபயோகித்து பி ஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த செய்தி ரெட் ஒன் யூசர் போரத்தில் இடம்பெற்று மேலை நாட்டவருக்கும் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசன்னா, சினேக நடிக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலும் இந்த கேமரா பயன்படுத்தப் படுகிறது. இத்திரைப்பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் முன்பு தமிழ் வலைப்பதிவில் மிக ஆர்வமுடன்
இயங்கி கலக்கியவர். கமல்ஹாசனின் மர்மயோகிக்கும் இந்த கேமராவை உபயோகிக்க இருந்தார்கள்.

ஆவிட் எடிட்டிங்

89 களில் உலகில் அறிமுகமான இந்த நான் லீனியர் எடிட்டிங் தொழில் நுட்பம் 93ல் மகாநதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தது. இது ஆரம்ப காலத்தில் செலவு பிடிக்கும் விஷயமாக இருந்ததால் பலரும் தயங்கினர். குறைந்தது ஒரு எடிட் ஷூட் அமைப்பதற்க்கு 50 லட்சத்துக்கு மேல் செலவானது. படமாக்கப்பட்ட காட்சிகளை ஒரு ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்து பின் நமக்குத் தேவையான காட்சிகளை விரும்பும் வரிசையில் எளிதாக தொகுத்துக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்தையும் செலவு குறைவாக எளிதாக தமிழ் சினிமாவில் மாற்றியவர்கள் பாலாஜி, உருப்படாது நாராயணன் (பிரபல வலைப்பதிவர்), சேது பட எடிட்டர்களான ரகு-பாபு ஆகியோர். ஐந்து லட்சத்திற்க்கும் குறைவான செலவிலேயே இதை சாத்தியமாக்கினார்கள்.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அதை திரைப்படத்தின் சிறப்புக்கு உபயோகப் படுத்த தேர்ந்த இயக்குனர்களாலேயே முடியும்.
தசாவதாரம் 12 ஆம் நூற்றாண்டு தொடக்க காட்சிக்கு கமல் சொன்ன விளக்கம் " சைவம், வைனவம் எனப் பிரிந்து அடித்துக் கொள்ளும் சிறுபுத்திக் காரர்கள் என காட்சிப்படுத்தவே டாப் ஆங்கிளில் மனிதர்களை எறும்பு போல காண்பித்தோம்".

February 13, 2009

கவுண்டமணி பகுதி (4) கதாநாயகர்களுடன் கலக்கல்

1990 ஆம் ஆண்டு வெளியான வேலை கிடைச்சுடுச்சுவில் சத்யராஜும், கவுண்டமணியும் ஆளுக்கொரு பெண்ணைக் காதலிப்பார்கள். அதை இருவரும் பகிர்ந்து கொள்ளும்போது கவுண்டமணி சொல்வார் "இந்த மேட்டர இப்படி பேசக்கூடாது" என்று சொல்லிவிட்டு நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்வார். உடனே பாடல் ஒலிக்கும் " நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை". படித்தால் மட்டும் போதுமாவில் சிவாஜியும், பாலாஜியும் இதே சிச்சுவேஷனுக்கு நடித்த பாடல். தியேட்டரே அலறியது அந்தக் காட்சிக்கு. அதே ஆண்டு வெளிவந்த நடிகன் படத்தில் நோயாளி தாயை காப்பாற்ற வயதானவராக நடிக்க்கும் வேடம் சத்யராஜுக்கு. அதைத் தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்யும் திருடன் வேடம் கவுண்டமணிக்கு.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியின் வசனம். "நான் மொள்ளமாறி, முடிச்சவுக்கி,கேப்மாறி இவனுங்களையெல்லாம் தனித் தனியாத்தான் பாத்திருக்கேன். மூணு பேரையும் ஒண்ணா ஓன் ரூபத்துல இப்பத்தாண்டா பார்க்கிறேன்". இந்த பட காமெடி பெரிதும் பேசப்பட்டது. இதே ஆண்டு வெளியான வாழ்க்கைச் சக்கரம், இதற்கடுத்த ஆண்டில் வெளியான புதுமனிதன்,பிரம்மா ஆகிய படங்களிலும் இந்த இணை பெரிதும் பேசப்பட்டது. புது மனிதன் படத்தில் சமாதியின் மேல் உட்கார்ந்து கொண்டு சத்யராஜ் தன் காதலைப் பற்றி சொல்வார். அப்போது சமாதியின் மேல் விரலால் கோலம் போடுவார். உடனே கவுண்டமணி சொல்வார் " பார்த்துடா உள்ள படுத்துருக்கவன் எந்தரிச்சு வந்து அப்பீரப் போறான்".

சத்யராஜ் - கவுண்டமணி இணை பெரிதும் பேசப்பட காரணம் இதுவே. அடுத்தவர்கள் செய்யும் அபத்த செயல்களை கிண்டல் செய்வதுதான் கவுண்டரின் பலமே. சத்யராஜ் அதற்க்கு உரிய இடத்தைக் கொடுத்தார். நான் கதாநாயகன் என்னைக் கிண்டல் செய்து காட்சி இருக்கக்கூடாது என்று அவர் சொன்னதே இல்லை.

மேற்குறிப்பிட்ட படங்களைத்தவிர தெற்குத்தெரு மச்சான், திருமதி பழனிச்சாமி, பங்காளி,மகுடம்,தாய்மாமன், மாமன் மகள்,வில்லாதி வில்லன், சேனாதிபதி, வள்ளல், அழகர்சாமி, குங்குமப் பொட்டு கவுண்டர்,தங்கம் ஆகிய படங்களிலும் இவர்கள் இணை கொடி கட்டி பறந்தது.

ரஜினிகாந்த்

கவுண்டமணி, ரஜினியுடன் பதினாறு வயதினிலே காலத்தில் நடித்திருந்தாலும் பின் அவருடன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ரஜினி ஜனகராஜ் மற்றும் செந்திலுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது விவேக்,வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தருகிறார். மிஸ்டர் பாரத், மன்னன்,எஜமான்,பாபா ஆகிய படங்களில் ரஜினியுடன் வரும் பாத்திரம் கவுண்டமணிக்கு. இதில் மன்னனில் மட்டுமே ரஜினியைக் கலாய்ப்பது போல் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். ரஜினியை அவரது தாயோ அல்லது காதலியோ கூட திட்டி பேசினால் கத்தித் தீர்த்துவிடும் ரசிகர்கள் கவுண்டமணியை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் இயக்குனர்களுக்கு இருந்திருக்கலாமோ?

கமல்ஹாசன்

காமெடி டிராக்கை கமல் எப்பொழுதுமே ஆதரித்ததில்லை. படத்திற்க்கு காமெடி வேண்டுமென்றால் காமெடி படமாகவே எடுத்துவிட சொல்வார். கமலுடன் கவுண்டமணி இணைந்து நடித்த சிங்கார வேலன், இந்தியன் ஆகிய படங்களின் காமெடி பேசப்பட்ட ஒன்று.

விஜயகாந்த்

விஜயகாந்தின் படங்களான வைதேகி காத்திருந்தாள், சின்னகவுண்டர், கோயில் காளை ஆகிய படங்களில் கவுண்டரின் காமெடி டிராக்குகள் புகழ் பெற்றவை.நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்துடன் சில காம்பினேஷன் காட்சிகள் இருக்கும். புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரனுக்கு பின் விஜயகாந்த் நடித்த படங்களில் குறைவான படங்களிலேயே காமெடி இடம் பெற்றிருந்தது. கண்ணுபடப் போகுதய்யா (சார்லி), வானத்தை போல (ரமேஷ் கண்ணா), தவசி,நரசிம்மா (வடிவேலு), தென்னவன் (விவேக்) என அவர் படங்களில் நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவை நடிகர்களுடன் அவர் தோன்றியது குறைவே

கார்த்திக்

உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, மருமகன், பூவரசன், உனக்காக எல்லாம் உனக்காக,கண்ணன் வருவான் ஆகிய படங்களில் இருவரும் நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. இதுதவிர சின்னஜமீன்,சீமான்,கட்டப்பஞ்சாயத்துக்காரன் ஆகிய படங்களின் காம்பினேஷன் காட்சிகளும் சிறப்பானவை. சத்யராஜுக்கு அடுத்தப் படியாக கார்த்திக்குடன் இணைந்து நடித்த காட்சிகள் கவுண்டமணிக்கு சிறப்பாக அமைந்தவை எனலாம். இதற்க்கு கார்த்திக்கின் டைமிங் சென்சும், நடிப்புத் திறமையும் காரணமாய் அமைந்தன.

பிரபு

கார்த்திக்குக்கு அடுத்தது பிரபு. மைடியர் மார்த்தாண்டன், வியட்னாம் காலனி,பரம்பரை, தேடினேன் வந்தது, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற பல படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்கு ஒர்கவுட் ஆனது. வியட்னாம் காலனி படம் இவர்கள் இணையின் உச்சம் எனச் சொல்லலாம்

மோகன் & ராமராஜன்

இவர்களது படங்களில் காமெடி டிராக் பேசப்பட்ட அளவுக்கு நாயகர்களுடன் இணைந்து நடித்த காட்சிகள் பேசப்படவில்லை. கரகாட்டக் காரன், ஊருவிட்டு ஊரு வந்து படங்களில் கூட காமெடிக்கு மூன்றாம் ஆளின் தேவை இருந்தது.

அர்ஜூன்

அர்ஜூன் ஆரம்பகாலத்தில் நடித்த வேஷம் படத்திலேயே இருவருக்கமான டிராக் இருந்தது. பின்னர் ஜெண்டில்மேன், ஆய்தபூஜை, ஜெய்ஹிந்த், கர்ணா என பல படங்களில் இந்த இணை பிரகாசித்தது.

சரத்குமார்

இவர் சூரியன் திரைப்படத்திற்க்குப் பின் முழு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய புதிதில் சொன்னது. " என்னைப் போன்ற புதிய நடிகர்களுக்கு முழுப் படத்தையும் தோளில் தாங்க முடியாது.அதைச் செய்யவும் எல்லாத் தரப்பினரையும் தியேட்டருக்கு வரவழைக்கவும் கவுண்டமணி போன்றோர் என் படத்திற்க்குத் தேவை.". சேரன் பாண்டியன்.சூரியன்,நாட்டாமை ஆகிய படங்களில் பெரிதாக காம்பினேஷன் ஷாட் இல்லாவிட்டலும் பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,நாடோடி மன்னன், மகாபிரபு ஆகிய படங்களில் காம்பினேஷன் சிறப்பாக அமைந்தது

ரகுமான்

பட்டிக்காட்டான் படத்தில் கிராமத்தான் ரகுமானுக்கு பட்டனத்து முறைப்பெண் ரூபினியை திருமணம் செய்து வைக்கும் டாக்டர் வேடம். ஐயாம் டென் சொங்கப்பா, நேபாள்ல எம் பி பி எஸ் படிச்சவன் என்று கவுண்டர் கலக்கி எடுத்திருப்பார்.

ஜெயராம்

இயல்பிலேயே மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி கொண்ட ஜெயராமுடன் கவுண்டர் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?. சுந்தர் சியின் முதல் படமான முறை மாமன், குரு தனபாலின் பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகிய படங்களில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.


பார்த்திபன்

டாட்டா பிர்லாவில் இணை நாயகர்கள் என்று சொல்லும் அளவுக்கு கொட்டம் அடித்திருப்பார்கள்.

ராம்கி

ஆஹா என்ன பொருத்தம் படத்திலும் இணை நாயகன் என்னும் அளவுக்கு முக்கிய வேடம்.

விஜய்

ரசிகன் படத்தில் குறைவான காம்பினேஷன். பின் வந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் உடன் வரும் தோழன் வேடம்.

அஜீத்

நேசம், ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களில் புல் காம்பினேஷன் வேடம். அவள் வருவாளா படத்திலும் காம்பிஒனேஷன் உண்டு.

அருண்குமார்

கண்ணால் பேச வா படத்தில் தாய்மாமன் வேடம். புல் காம்பினேஷன்.

சிம்பு

மன்மதன் படத்தில் தாய்மாமன் வேடம். பல காட்சிகள் வெட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.

(தொடரும்)

February 12, 2009

கவுண்டமணி - பகுதி (3)

கவுண்டமணி ஏற்று நடித்த வேடங்களை திரைக்கதையில் அதன் பங்கு என்ற வகையில் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.


1. 1976 முதல் 1981 வரை ஏற்று நடித்த கதையை நகர்த்த உதவும் வேடங்கள்.


2. 1982ல் வெளியான பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் படங்களின் மூலம் கிடைத்த பிரபலம், 84ல் வெளியான வைதேகி காத்திருந்தாளில் உச்சத்துக்கு போனது. அதனால் அவருக்கு கிடைத்த தனி காமெடி டிராக்குகள். இதற்க்கும் படத்தின் மையக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.


3. 1985 முதல் 87 வரையில் இவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் (பணம் பத்தும் செய்யும், பிறந்தேன் வளர்ந்தேன்)4. 1990ல் வெளியான பி வாசு இயக்கிய வேலை கிடைச்சுடுச்சு திரைப்படத்தில் கதாநாயகன் சத்யராஜுடன் இணைந்து படம் முழுவதும் வரும் வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியாலும், இந்த இணைக்கு கிடைத்த வரவேற்பாலும் தொடர்ந்து கதாநாயகர்களுடன் பவனி வர ஆரம்பித்தார். சத்யராஜுடன் 20 படங்கள் வரையிலும் இவ்வாறு நடித்தார். இந்த காலகட்டத்தில் பீல்டில் இருந்த எல்லா நாயகர்களுடனும் அட்டகாச பவனி வந்தார். சில படங்களில் நாயகிகளை விட நாயகனுடன் இவரது காட்சிகள் அதிகம் இருக்கும்.


5. வி சேகர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஏற்று நடித்த நகைச்சுவையுடன் கூடிய குணசித்திர வேடம். (பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் போன்ற படங்கள்)6. மிக அரிதாக நடித்த வில்லன் வேடங்கள் (ரகசிய போலிஸ் 115(சரத்,நக்மா), ஞானப்பழம், முத்துக் குளிக்க வாரியளா?,சக்கரவர்த்தி)இது தவிர சில படங்களில் கதாநாயகனுடனான நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கும், தனி டிராக்கும் இருக்கும்.இதில் எந்த காட்சிகள் அதிகம் வருகிறதோ அந்த வகையில் சேர்த்துவிடலாம்.


இந்தப் பதிவில் கவுண்டமணியின் காமெடி டிராக்குகளைப் பார்ப்போம்.படத்துடன் ஒட்டாத காமெடி டிராக் என்பது கலைவானர் என் எஸ் கிருஷ்ணன் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அப்போதைய தயாரிப்பளார்கள் படத்தில் பெப் குறைவதாக கருதினால் நேரே கலைவானரிடம் வருவார்கள். அவரும் எடுத்த படத்தைப் போட்டுப் பார்த்துவிட்டு அந்த கதைக்கு எந்த மாதிரியான களத்தில் நகைச்சுவை டிராக் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அதன்படி நடித்து தருவார். இந்த டிராக்குகளுக்காவே பல படங்கள் அப்போது ஓடின.


இதேபோல் பல நகைச்சுவை நடிகர்களும் தனி டிராக்கில் காமெடி புரிந்துள்ளார்கள். இப்பொழுது வடிவேல்,விவேக் வரை இது தொடர்ந்து வருகிறது. தங்கவேல் (கல்யாணப் பரிசு), சுருளிராஜன் (மாந்தோப்புக் கிளியே), வடிவேலு (கண்ணாத்தாள், நேசம் புதுசு) என சொல்லிக் கொண்டே போகலாம்.


கவுண்டமணிக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தவை இம்மாதிரியான டிராக்குகளே.

வைதேகி காத்திருந்தாள் - ஆல் இன் ஆல் அழகுராஜா
உதயகீதம் - சிறு திருட்டு செய்பவரில் இருந்து போலி சாமியார்
பகல்நிலவு - சிறு உணவகம் நடத்தும் ஜார்ஜ் குட்டி
உன்னை நான் சந்தித்தேன் - ஹோட்டல் சப்ளையர்
கீதாஞ்சலி - வாடகை குதிரை நடத்துனர்
இதயகோயில் - சிகை அலங்கார நிபுணரில் இருந்து கர்நாடக சங்கீத பாடகர்
நானே ராஜா நானே மந்திரி - ஒத்தமீசை குப்புசாமி

மண்ணுக்கேத்த பொண்ணு - நாட்டு வைத்தியர்

கரகாட்டக்காரன் - தவில் வித்வான்
தங்கமான ராசா - ஊமையாய் நடிக்கும் பாடகராகும் ஆசை உள்ள திருடன்
நல்லதை நாடு கேட்கும் - சாட்டையால் அடித்து பிட்சை கேட்பவர்
ஊருவிட்டு ஊரு வந்து - பேயோட்டி
புதுப்பாட்டு - பழங்கால நாணயத்துக்கு பணம் கிடைக்கும் என்பதால் அதை வைத்திருப்பவரை தாங்குபவர்

இம்மாதிரி பல படங்களில் அவர் தனி காமெடி டிராக்கில் நடித்தார். இந்தப் படங்களில் ஓரளவு கதை இருக்கும். இளையராஜாவின் அருமையான பாடல்கள் இருக்கும். பெரும்பாலும் மிகை ஹீரோயிசம் இருக்காது. இம்மாதிரிப் படங்களுக்கு அனைத்து தரப்பினரையும் தியேட்டருக்கு அழைத்துவர கவுண்டமனியின் காமெடி உதவியது. இந்தப்படங்களின் வசனக் காட்சிகளை (டாக்கி போர்ஷன்) இரண்டு மூன்று முறைக்கு மேல் இப்போது பார்க்க முடியாது. ஏன் பாடல்காட்சிகளை கூட பார்க்க முடியாது. பாடல்களை சலிக்காமல் கேட்கலாம், நகைச்சுவைக் காட்சிகளை சலிக்காமல் பார்க்க முடியும்.

1990ல் வேலை கிடைச்சுடுச்சுவின் வெற்றிக்குப் பின் அவர் கதாநாயகனுடன் இணைந்து பல படங்களில் தோன்றினாலும், சில படங்களில் தனி டிராக்குகளிலும் வெற்றிநடை போட்டார்.

சின்னதம்பி - மாலைக்கண் நோய் உள்ள சமையல்காரர் பாத்திரம்
சின்னக் கவுண்டர் - சலவைத் தொழிலாளி
சூரியன் - பன்னிக்குட்டி ராமசாமி என்ற உள்ளூர் அரசியல்வாதி
ஆவாரம் பூ - தச்சர்
சின்ன வாத்தியார் - இரண்டு பொண்டாட்டி ஜோசியர்
கோட்டைவாசல் - கோவில் அர்ச்சகர்

தங்கமனசுக்காரன் - கிடாரிஸ்ட்

கிழக்குகரை - நாகரீக ஆசை பிடித்தவர்
ஊர் மரியாதை - கிராமத்து மைனர்
பெரிய கவுண்டர் பொண்ணு - கொல்லர்

ராசாத்தி கோவில் - நாவிதர்
ஜல்லிக்கட்டுகாளை - எண்ணெய் மில் ஊழியர்
பெரியமருது - ஈயம் பூசுபவர்

ரசிகன் - போலிஸ் ஏட்டு

கூலி - மில் கேண்டின்

மாமனிதன் - சுடுகாட்டு பணியாளர்
அவதார புருஷன் - பிக் பாக்கெட் பெரியசாமி
டேவிட் அங்கிள் - லாரி உரிமையாளர்
சூரிய பார்வை - அமெரிக்க ரிட்டர்ன்
எதிரும் புதிரும் - ஜோசியரால் ஏமாறுபவர்


இவையெல்லாம் சில படங்கள் தான். முழுத் தொகுப்பு அல்ல.

இந்த டிராக்குகளை கவுண்டமணிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் ஏ வீரப்பன் மற்றும் ராஜகோபால். இந்த எழுத்தாளர்கள் கொடுப்பது வெறும் ஸ்கெலிடன் மட்டுமே. அதற்க்கு உயிர் கொடுத்து திரையில் உலாவ விடுவது கவுண்டமணியின் தனித்திறமை. ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். வெளியாகி 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நம்மை சிரிக்க வைப்பது சூரியனில் வரும் கூப் சீன். கதையில் பார்த்தால், கதாநாயகனை அந்த கூப்பில் வேலைக்கு சேர்ப்பதற்க்காக அழைத்து வரும் காட்சி. இந்த காட்சிக்கு ஸ்க்ரிப்டில் இவ்வளவு துல்லியமாகவா வசனம் இருந்திருக்கும்?. அதற்க்கு உயிர் கொடுத்து அந்த காட்சியில் பேசப்பட்ட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா, ஒரெ குஷ்டமப்பா, எம்மெல்லே நாலயே முடியலயாம் போன்ற வசனங்களை பட்டி தொட்டியெல்லாம் பேசவைக்க கவுண்டமணியால்தான் முடியும்.

அடுத்து இந்த டிராக்குகளின் குறையாக சொல்லப்படுவது செந்திலை எட்டி உதைப்பது. எந்த செட்டிலுமே செந்திலின் கதாபாத்திரத்தைப் போல ஒரு அப்பாவியும், ஊமை குசும்பனும் இருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி நல்லது கூட நடக்கும். இவனுக்கெல்லாம் இது நடக்குது பாரேன் என்று பலர் அங்கலாய்ப்பார்கள். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை கலாய்ப்பது இந்த டிராக்குகளில் ஒரு அங்கம். டாம் அண்ட் ஜெர்ரியில் டாம், ஜெர்ரியை மரண அடி அடிக்கும். அதை நாம் என்னப்பா சும்மா அடிக்கிறது காமெடியா? எனக் கேட்கிறோமா? ஜெர்ரி நாயிடம் மாட்டிவிட்டோ அல்லது மற்ற வகையிலோ பழி வாங்குவதைப் போல செந்திலும் தானே பழிவாங்குகிறார்.

தற்போதைய மிமிக்ரி நிகழ்ச்ச்சிகளில் கவுண்டமணியை காட்சிப்படுத்த கைகாலை உதைத்து காண்பிக்கிறார்கள். இந்த மேனரிசத்தை அவர் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக நடிக்கும் போது செய்தது கிடையாது. தச்சராகவோ,அரசியல்வாதியாகவோ, வெட்டியானாகவோ நடிக்கும் போது செய்தது கிடையாது. அந்தந்த பாத்திரங்களுக்கு என்ன பாடி லாங்குவேஜோ அதைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இயக்குனர்கள் கவுண்டமணியை கவுண்டமணியாகவே நடிக்க வைக்க நினைக்கும்போதுதான் அந்த மாதிரி சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு வேடம் என்றால் அதற்க்கென்று ஒரு குணநலன், தொழில், வயது என்று போன்ற விஷயங்களுடன் அமைக்கப் படவேண்டும். பின்னாளைய இயக்குனர்கள் அவருக்கு கதாநாயனின் மாமன் அல்லது நண்பன் வேடம் கொடுத்தார்கள். அதற்க்கு எந்த வித டெஸ்க்ரிப்ஷனும் கிடையாது. அதில் என்ன பாடி லாங்குவேஜ், மாடுலேஷன் காட்ட முடியும்? கையைக் காலை உதைத்து கத்த வேண்டியதுதான். ஆனாலும் அவர் சிரிக்க வைத்தார்.

ஒருவகையில் இளையராஜாவும்,கவுண்டமணியும் ஒன்று. இருவரிடமும் புதிய இயக்குனர்கள் பயந்து சரியாக வேலை வாங்காமல் விட்டு விட்டார்கள்.

(தொடரும்)

February 10, 2009

கவுண்டமணியின் குரல் - பகுதி (2)

கவுண்டமணியின் ஆரம்பகால படங்களைப் பார்த்தோமானால் (1976 - 81) அவரது குரலில் ஒரு நெகிழ்வு இருக்கும். வசனம் பேசும் போது குழைந்தே பேசுவார். உடலிலும் ஒரு விறைப்புத்தன்மை இல்லாமல் தளர்வாகவே இருக்கும்.


16 வயதினிலே - ரஜினியின் (பரட்டை) அல்லக்கை


போகும் ரயில் - மனைவியின் தங்கையை ரசிக்கும் தொழிலாளி


சிகப்புரோஜக்கள் - கமல் நிறுவன மானேஜர்


சுவரில்லாதசித்திரங்கள் - டெய்லர்


இந்த படங்களில் எல்லாம் கேரக்டரை மீறி கவுண்டமணி தெரியமாட்டார். சரோஜா, ம்ம் பார்த்து, போம்மா போன்ற வசனங்களை அவர் இப்படங்களில் மிக குழைவான குரலிலேயே உச்சரிப்பார். மேற்கண்ட படங்களை இயக்கியவர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ். இந்த இயக்குனர்களின் ஆளுமை காரணமாக அவர் இப்படி நடித்தாரா?


கலைவானர் - சமூக கருத்துக்கள் + வார்த்தை விளையாட்டு


சந்திர பாபு, நாகேஷ் - வாழ்கைத்துணைக்காகவோ, செல்வத்துக்காகவோ ஏங்கும் வேடங்கள் பெரும்பாலும். டைமிங், ஸ்லாப்ஸ்டிக், வசன உச்சரிப்பு மூலம் அதை மெருகேற்றுவார்கள்.


நாகேஷ் மறைவையொட்டி பல பதிவர்கள் சிறப்பான பதிவுகளை எழுதினார்கள். அதில் பலரும் குறிப்பிட்ட அம்சம், நாகேஷின் குரலை யாரும் அதிகமாக மிமிக்ரி செய்யவில்லை. காரணம் அவர் பாத்திரங்களுக்கேற்ப்ப மாடுலேஷனை மாற்றுவதே என்று. உண்மை. அவர்கள் கேரக்டருக்கேற்ற தொனியிலேயே பேசினார்கள்.


எம் ஆர் ராதாவை காமெடி நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியாது. ஆனால் அவர் செய்த காமெடிகளில் சமுதாய குத்தல்கள் பெரும் பங்கு வகிக்கும். ஆனால் அவரது குரல் அதட்டும் தொனியில் இருக்காது. சாமானியர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அதிகமாக இருக்காது. பாலையாவும் அதட்டும் குரலில் காமெடி செய்ததில்லை.


கே ஏ தங்கவேலுவின் பாணியானது இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட ஆட்களிடையே நடக்கும் சம்பவங்கள், அதை தொடர்ந்த உரையாடல் என வசனங்களின் மூலம் நகைச்சுவை வெளிப்படும். இவர் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். வி கே ராமசாமியின் நகைச்சுவையும் இந்த வகையில் வரும். ஆனால் அவர் இரட்டை அர்த்த வசனங்களை சிறிது கலப்பார்.


இவர்களது பாதிப்பினாலோ அல்லது நாடக அனுபவங்களாலோ கவுண்டமணி தன் ட்ரேட் மார்க் குரலை ஆரம்பத்தில் பயன்படுத்தவில்லை. சாதாரண இடதுகை பந்து வீச்சாளராக, கீழ் வரிசை மட்டையாளராக இருந்த ஜெயசூரியாவை அர்ஜுன ரனதுங்கா ஓப்பனிங் இறக்கியபின் தானே அவருக்குள் இருந்த சிங்கம் வெளியே வந்தது. அதுபோல் கவுண்டமணிக்கு கிடைத்தவர் ஆர் சுந்தர்ராஜன். அவரது முதல் படமான பயணங்கள் முடிவதில்லையில் குரலை உயர்த்திப் பேசும் கவுண்டமணியை மக்களுக்கு அறிமுகம் செய்தார். அது பின் ஒரு பாணியாக மாறி இன்றுவரை வெற்றி நடை போடுகிறது.


இந்த சென்னை மாநகரத்திலே என்று கவுண்டமணி ஆரம்பிக்கும் போதே தியேட்டர் சிரிக்க ஆரம்பித்தது. அதற்க்கு முக்கிய காரணம் ரிப்பீட் ஆடியன்ஸ். டேப் ரெக்கார்டர் அதிகமான சென்று அடையாத வேளையில் பாடல்களைக் கேட்பதற்க்காவே அந்த படத்தை திரும்பத் திரும்ப பார்த்தவர்கள் அதிகம். இரண்டு மூன்று முறை அந்த வசனங்களைக் கேட்டவுடன் அந்த பாணியில் பொதுமக்களும் தங்களுக்கிடையே பேசத் தொடங்கினர். இந்த வகையில் வடிவேலு மிகவும் அதிர்ஷ்டகாரர். அவரது காமெடி சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப் படுவதால் மிகப் பெரிய ரீச் அவருக்கு கிடைக்கிறது.


தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஆர் சுந்தர்ராஜனின் படங்களான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் ஆகியவற்றில் இந்த வகை காமெடி பெரிதும் பேசப்பட எல்லா இயக்குனர்களும் (மணிரத்னம் உட்பட) இந்த பாணிக்கு மறுப்பு சொல்லவில்லை. மணிவண்ணன் இயக்குனரான பின்னும், சத்யராஜ் நாயகனான பின்னும் கவுண்டமணிக்கு விளையாட பெரிய களம் கிடைத்தது எனலாம். ராமராஜன், சரத்குமார் ஆகியோரின் ஆரம்ப காலப் படங்களுக்கும், கார்த்திக்,பிரபு ஆகியோரின் இரண்டாம் கட்டப்படங்களுக்கும் கவுண்டமணியின் தேவை அதிகமாக இருந்தது.


கவுண்டமணியின் குரல் பலரும் சொல்வது போல அதிகாரத்திற்க்கு எதிராகவும், புனிதத்திற்க்கு எதிராகவும், மக்களின் அன்றாட அர்த்தமில்லா செயல்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியது. அவர் குரல் எழுப்பாத ஏரியாவே இல்லை எனலாம். அந்த மாதிரி கேள்விகளை ரசிக்கும்படிக் கேட்க அவரது குரல்வளம் உறுதுணையாக இருந்தது.


அரசியல்வாதிக்கெதிராக (சட்ட மன்றம்)- அக்கா அந்தக் கருமத்துக்கு படிப்பே தேவையில்லை. ஊர்ல நொண்டு நொசுக்கான், பெட்டிக் கடையில கருப்பட்டி திருடிட்டு ஓடினது, துண்டு பீடி குடிச்சது எல்லாம் அங்க தான் இருக்கு. (தாய்மாமன்)


நடிகர்களுக்கெதிராக - இந்த விளம்பரம் நமக்குத் தேவையா?. நடிகருங்க தான் தனக்குத் தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்குறாங்க.பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அதுவும் 33 வயசுக்கு மேல போக மாட்டேங்கிறாங்க (கரகாட்டக்காரன்)


வைதீகர்கள் - காலையில ஒன்னறை குண்டா புளியோதரையை சாப்பிட்டிட்டு வந்து ரிக்சால வந்து உட்கார்ந்து கோவிந்தான்னுச்சு டயர் வெடிச்சுருச்சு (ரிக்சாமாமா)


பிறந்த வீட்டு ஆட்கள் மேல் அதிக பாசம் காட்டும் பெண்கள் - உங்க அக்காவுக்கு ஆட்டுக்கால் சூப்பு வைக்கத்தெரியும்னு எனக்கு இன்னைக்குத் தாண்டா தெரியும் (கன்னிராசி)


கோவிலில் அதிகமாக வேண்டும் பக்தர்கள் - நீ உண்டியல்ல போடுற ஐஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க (கோட்டை வாசல்)


மூட நம்பிக்கை - ஐயோ ஒத்தப் பிராமணன் எதிர்ல வந்துட்டான்னு வீட்டுக்குள்ளே போறியே நீ என்ன கப்பல் வாங்கவா கிளம்பிப் போற. தெரு முக்கு கடையில ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கப் போற.(கோட்டை வாசல்)


விசேஷத்துக்கு அலங்கரிக்கும் பெண்கள் - யார் வீட்டு கல்யாணத்துக்கோ இவளுக தீபாவளி கொண்டாடுறாள்கயா (தாய்மாமன்)


நடுத்தர வர்க்கம் - ஒரு பிச்சக்காரனுக்கு கூட பொண்ண குடுப்பேன்றிய எங்க எனக்கு கட்டி வை (உடன்பிறப்பு)


கண்ணில் கட்டுடன் வரும் போது சிரிப்பவர்களிடம் - உங்க பொண்டாடியெல்லாம் ஐஸ்வர்யா ராயா - கண்ணு இருக்கேனு நீங்க சந்தோசப்பட்டுக்க. இதுக்கு கண்ணு இல்லாமலேயே இருக்கலாம்டா (வில்லாதி வில்லன்)

தொழிலதிபர் - குண்டூசி விக்கரவனெல்லாம் தொழிலதிபர்ன்னுக்கிறாய்ங்க (மன்னன்)


நடிகை - சரிம்மா அப்படியே ஒரு தொழிலதிபர கட்டீட்டு பாரின் போயிடு

பஞ்சாயத்து - ஒரு ஆலமரம் கிடைச்சுட்டா போதுமே, நாலு தலைமுறையா தொவைக்காத ஜமுக்காளம், நசுங்கிப் போன சொம்போட ஆரம்பிச்சுடுவீங்களே.

பரிவட்டம் - நாலு முழ துணி, இதை தோளல போட்டா துண்டு, இடுப்புக்கு கீழ கட்டுனா கோமனம், இதை தலையில கட்ட இவ்வளோ போட்டி. பரிவட்டம் சொரிவட்டம்னுக்கிட்டு (இரண்டும் ஆஹா என்ன பொருத்தம்)

அதிகாரி - கோழி கிறுக்கின மாதிரி ஒரு கையெழுத்து. இதப் போட இங்க தள்ளனுமாம், அங்க தள்ளணுமாம் (இந்தியன்)

இதுபோல அன்றாட வாழ்வில் நாம் தட்டிக் கேட்க நினைக்கும் பல சங்கதிகளை அவர் தனக்கே உரிய பாணியில் தட்டிக் கேட்டார். அதற்க்கு அவரது குரலும், உபயோகப்படுத்திய வார்த்தைகளும் மிகவும் உதவின.
1999க்குப் பிறகு அவரது உடலிலும், குரலிலும் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. கண்ணன் வருவான், உனக்காக எல்லாம் உனக்காக படங்களில் அது தெளிவாக தெரிந்தது. அவருடைய பாணிக்கு அவரது குரல் முக்கியம். அந்த வளம் குறைந்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

தொடரும்

February 09, 2009

கவுண்டமணி

கலைவானர் என் எஸ் கே தொடங்கி சந்திரபாபு, நாகேஷ் முதல் தற்போதைய வடிவேல், விவேக் வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் தமிழ்சினிமா ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றிநடை போட்டவர்கள். யாருடனும் யாரையும் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஒவ்வொரு தலைமுறையிலும் நகைச்சுவைக்கென இருக்கும் அளவு கோள்கள் மாறி வந்திருக்கின்றன. எனவே என் எஸ் கே யுடனோ, நாகேஷுடனோ, வடிவேலுடனோ கவுண்டமணியை ஒப்பிடக் கூடாது.

நாடக நடிகராக இருந்த கவுண்டமணி பெரும் போராட்டங்களுக்குப் பின் 70 களின் மத்தியில் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்களை தமிழ் சினிமாவில் பெற்றார். அன்றிலிருந்து 2000 ஆவது ஆண்டு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தார். இந்த 25 ஆண்டுகளில் அவருடைய கேரியர் மூன்று முறை சரிவை சந்தித்தது. ஒவ்வொருமுறை கவுண்டமணி சரிவில் இருந்து மீளும் போதும் முன் இருந்த அந்தஸ்தை விட கூடுதல் அந்தஸ்துடனேயே வலம் வந்தார்.

கவுண்டமணியின் பெரும் பலம் என்பது அவர் ஏற்று நடித்த வித்தியாச வேடங்களே. அன்றாட வாழ்வில் நாம் காணும் சாமானியர்கள் அமைப்பை எதிர்த்தோ, புனிதத்தை எதிர்த்தோ பேசுவது போல அமைக்கப்பட்ட வேடங்களே அவரை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலோனோரின் மனதில் படிந்திருப்பது அவர் செந்திலை திட்டி செய்த காமெடிகள்தான். சிலர் செந்தில் இருந்ததுதான் கவுண்டரின் பலம் என்று சொல்வார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. செந்தில் இல்லையென்றால் ஒரு முருகன் அவருக்கு கிடைத்திருப்பார். செந்தில் இல்லாமலேயெ கவுண்டர் பல படங்களில் அதகளம் பண்ணியிருப்பார். கவுண்டமணி இல்லாத செந்தில் சோபித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கவுண்டமணியின் திரை வாழ்வை பின்வரும் பகுதிகளாக பிரிக்கலாம்.

1. 76ல் தொடங்கி 81 வரை ஏற்று நடித்த வேடங்கள். இதில் கிராமத்து, சிறுநகர எளிய மனிதர்களின் வேடத்திலேயே பெரும்பாலும் நடித்திருப்பார். அவர்கள் தொழில் சார்ந்து பழகும் மக்களிடையே நிகழ்த்தப்படும் (கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள்) நகைச்சுவையே பிரதானமாக இருக்கும் இந்தப் படங்களில்.

2.1982 முதல் 86 வரையிலான காலம்.
82ல் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான பயணங்கள் முடிவதில்லை பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. பின் 84ல் வெளியான வைதேகி காத்திருந்தாளில் செந்திலுடன் இணைந்து நடித்த காட்சிகளின் வெற்றி. 86வரை இந்த வெற்றிப்பயனம் தொடர்ந்தது.

3. 86 முதல் 88 வரை
பணம் பத்தும் செய்யும், பிறந்தேன் வளர்ந்தேன், கிளி ஜோசியம் உட்பட 10 படங்களில் நாயகனாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. சில வெளிவரவில்லை. இது ஒரு தேக்க நிலைக் காலம்.

4. 89 முதல் 95 வரை
89ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் உச்சத்துக்குப் போனது கவுண்டமணியின் மார்க்கெட். பின் 95 வரை சீராக சென்றது. 90 களில் செந்திலை பல படங்களில் கழட்டிவிட்டு புது துணையைப் பிடித்தார் கவுண்டமணி. வேறு யாரும் இல்லை, அந்தந்த பட கதாநாயகர்கள் தான். வேலை கிடைச்சிடுச்சு, நடிகன் போன்ற படங்களில் கதாநாயகனுடனேயே வலம் வரும் வேடம் கிடைத்தது, அவை மிகவும் ரசிக்கப்படவும் அது தொடர்கதையானது. கனவுப் பாட்டில் கூட கதாநாயகனுட ஆடினார் கவுண்டமணி (ஜெண்டில்மேன்). இதே நேரத்தில்தான் வடிவேலும், விவேக்கும் சொல்லிக்கொள்ளும் படியாக வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

5. 96 முதல் 99 வரை
96ல் உள்ளத்தை அள்ளித்தா கொடுத்த மிகப் பெரிய வெற்றிக்குப் பின் கதாநாயகர்களுக்கு சமமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். அஜீத்,விஜய் போன்ற அப்போது வளர்ந்து கொன்டிருந்த நடிகர்களுக்கும் கவுண்டமணியின் தயவு தேவைப்பட்டது.

கவுண்டமணியின் வித்தியாச வேடங்கள், அமைப்புக்கு எதிரான கருத்துக்கள், போன்றவை வரும் பதிவுகளில்.

கவுண்டமணி குறித்தான உளவியல் பார்வைக்கு சுகுணா திவாகரின் இந்த பதிவுக்கு செல்லவும்.

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 5 ( எதிர் நாயகிகள்)

நாம் அரசியலில் 33% இடஒதுக்கீடை பெண்களுக்காக கேட்டு போராடிக் கொண்டிருக்க தொலைக்காட்சித் தொடர்கள் வில்லன் கதாபாத்திரத்துக்கான 100% ஒதுக்கீட்டை பெண்களுக்கு கொடுத்துவிட்டன. ஆனால் தமிழ் திரையுலகம் 10% ஒதுக்கீட்டைக் கூட அனுமதிக்கவில்லை. பெரும்பாலும் கதாநாயகனை மயக்கும் அற்ப வேடங்களையே அது அவர்களுக்கு கொடுத்து வருகிறது. மிக குறைவாகவே நல்ல வில்லி வேடங்களை அது உருவாக்கி வந்திருக்கிறது. அம்மாதிரி அரிதாக கிடைக்கும் வாய்ப்பை ஏற்று அதில் ஜொலித்தவர்களைப் பற்றிய ஒரு பார்வை.டி ஆர் ராஜகுமாரி


மைசூர் ரசத்தை சமையல்காரர்கள் கண்டுபிடித்தபோது அதை சுவைத்த மகராஜா, யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வைகையகம் என ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்துக்கு முன்னால், அவர் மந்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. " நம்மைப் போல ருசிக்கு அடிமையானவர் யாரும் இருப்பார்களா என பரிசோதிக்கலாமே" என்று. பந்தி ஆரம்பமானது. முதல் முறை மைசூர் ரசம் பறிமாறப்பட்டது. அனைவரும் ருசித்து சாப்பிட்டார்கள். உடனே மகராஜா அறிவித்தார். " ஒரு முறை மட்டும்தான். இனி யாருக்கும் பரிமாறப் படாது. யாராவது விரும்பி கேட்டால் கொடுக்கப்படம். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தலை கொய்யப்படும்" எல்லாரும் அமைதியாய் இருந்தனர். ஒருவன் மட்டும் எழுந்து கேட்டான். " சாப்பிட்டப்பறம் தானே, தாராளமாய் வெட்டிக்குங்க. இப்ப ஊத்துங்க". மகராஜா அவனை கட்டி அணைத்துக் கொண்டார்.டி ஆர் ராஜகுமாரி நடித்த ஹரிதாஸில் பாகவதரை மயக்கும் காட்சி, கச்ச தேவயானியில் யானை மீது அமர்ந்து வரும் காட்சி, சந்திரலேகாவில் ரஞ்சனிடம் அவர் பேசுவது போன்ற காட்சிகளை நல்ல திரையரங்கில் ஒருமுறை காட்டிவிட்டு, இதோடு சரி. இன்னொரு முறை பார்க்க வேண்டுமானால் காட்டுவோம், ஆனால் கண்ணைக் குருடாக்குவோம் என்றால், என்னையறியாமலே நான் சொல்லுவேன் "ஒன்ஸ்மோர்". வார்த்தைகளுக்குள் அடங்காத வசீகரம் ராஜகுமாரியினுடையது. பார்வையாளனை பரவசப்படுத்த அவருக்கு இரண்டு கண்கள் மட்டும் போதும். அப்படிப்பட்ட நாயகி எதிர்நாயகியாக நடித்தால் எப்படி இருக்கும்?

மனோகராவில் கண்ணாம்பா உணர்ச்சி பொங்க பேச, அதைக்கேட்டு சிவாஜி தூணையே உடைத்து சங்கிலிப் பிணையில் இருந்து விடுபட்டு எதிரிகளை துவம்சமாக்குவார். அப்பேர்ப்பட்ட உரைக்கு காரணமாக எப்பேர்ப்பட்ட வில்லத்தனம் இருக்கவேண்டும்?. கொடுமைக்கார வில்லன் கூட்டமா தேவை? .வசந்தசேனையாக வரும் டீ ஆர் ராஜகுமாரியின் கண் அசைப்பு போதாது?

குலேபகாவலியில் பகடை உருட்டி ராஜகுமாரர்களை அடிமையாக்கும் ராணி வேடம். அதில் பகடை உருட்டும் போது போட்டியாளரை ஏமாற்ற விளக்கை அணைப்பார்கள். அந்தப் படம் பார்த்த போது தோன்றியது " எதற்க்கு விளக்கை அணைக்கவேண்டும்?. ராஜகுமாரி ஒரு மோகனப் பார்வை பார்த்தால் போதாது?.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக அது வெளிவந்த போதே எடுத்திருந்தால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அதில் நந்தினி கேரக்டர் ராஜகுமாரிக்குத்தான். அந்த கேரக்டரை டெலிகேட்டாக செய்ய அவரால்தான் முடியும்.

வடிவுக்கரசி

முதல் மரியாதையில் இவருக்கு அற்புதமான வில்லி வேடம் கிடைத்தது. பின்னர் இவருக்கு வழக்கமான டெலிசீரியல் டைப் வில்லி வேடங்களே வாய்த்தன. கண்ணாத்தாள் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். அருணாச்சலத்தில் கொடுமைக்கார கூன் விழுந்த பாட்டி வேடத்தைக் கொடுத்தார்கள். ஆச்சார்யா என்னும் படத்தில் மார்க்கட் தண்டல் வாங்கும் மாயாக்காள் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவரது ஆகிருதிக்கும் முக அமைப்புக்கும் தக்க வில்லி வேடத்தை தமிழ் சினிமா இன்னும் தராமலேயே இருக்கிறது.

சில்க் ஸ்மிதா

அந்தக் காலத்துக்கு ராஜகுமாரி என்றால் அதற்க்கடுத்த தலைமுறைக்கு சில்க். உடற்கட்டிலும்,முக அழகிலும், பார்வையிலும் இவர் டீ ஆர் ராஜகுமாரிக்கு சளைத்தவர் இல்லை. ராஜகுமாரி பிராட்மென் என்றால் சில்க் சச்சின். ஆனால் இவருக்கு தமிழ்சினிமா பெரும்பாலும் ஹீரோவை மயக்கும் வில்லன் கூட்டத்து ஆள் வேடத்தையே கொடுத்தது. விதிவிலக்காக குணசித்திர நடிகர்களை மயக்கும் (கனம் கோர்ட்டார் அவர்களே, பாண்டித்துரை) வேடத்திலும் சில படங்களில் வலம் வந்தார். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் வித்தியாச வில்லி வேடம் இவருக்கு கிடைத்தது. தன்னிடம் உறவு கொண்டு பின் மனைவியுடன் சேர்ந்துவிடும் சரத் பாபுவை பழி வாங்கும் வேடம். உளவியல் ரீதியில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை அசோக்குமார் அதில் சித்தரித்திருப்பார். அந்த பாத்திரத்துக்கு ஈடு கொடுத்து சில்க் அசத்தியிருப்பார்.

ரம்யாகிருஷ்ணன்

ரஜினிகாந்தை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படையப்பா படத்திற்க்கு நீலாம்பரி என்றுதான் பெயர் வைத்திருப்பார்கள். இந்தக் கேரக்டரை படத்திலிருந்து கழித்தால் என்ன மிஞ்சும்?. அறிமுக காட்சி முதல் ருத்ர தாண்டவம் ஆடும் காட்சி, ரஜினியுடனான ஊஞ்சல் காட்சி, தன்னைத் தானே சுட்டுக்கொள்ளும் இறுதிக்காட்சி வரை அசத்தலான பெர்பார்மன்ஸ். இப்போது சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் ஆறுமுகம் படத்திலும் இது போன்ற கேரக்டரே என்று சொல்லுகிறார்கள்.

சிம்ரன்

தமிழ் சினிமாவில் நுழைந்த போது சின்ன சில்க் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவர் கதாநாயகியாக நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன. சரண் இயக்கிய பார்த்தேன் ரசித்தேனில் வில்லி வேடம். தான் காதலிக்கும் பிரசாந்த் காதலுக்கு உதவுவது போல் நடித்து பின் அந்த காதலுக்கு வேட்டு வைக்கும் வேடம். இதில் அவருக்கு அண்ணனாக நடித்த ரகுவரனுக்கே சவால் விடும் படியாக நடித்திருப்பார். கோவில் பட்டி வீர லட்சுமி படத்தில் அநீதிக்கு எதிராக பொங்கி எழும் பெண் வேடம். வில்லி என்று சொல்ல முடியாது. ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார்.

தெலுங்கானா சகுந்தலா

தூளில் சொர்ணாக்கா என்னும் வேடம். இப்போது கூட யாராவது பெண் அராஜகம் பண்ணினால் சொர்ணாக்கா டைப்புடா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வில்லித்தனம் காட்டியிருப்பார்.

சங்கீதா

உயிர் படத்தில் கொழுந்தனை அடைய நினைக்கும் அண்ணி வேடம். அதற்க்காக கணவனை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பேச்சில் காயப்படுத்தும் பாத்திரம். கணவன் இறந்தபின் தடையாக இருக்கும் கொழுந்தனின் காதலி,தன் குழந்தைகளை கூட சித்திரவதை செய்யம் பாத்திரம்.

ஸ்ரேயா ரெட்டி

திமிரு படத்தில் தெனாவெட்டான ரோல் இவருக்கு. கந்துவட்டி அராஜகம் பண்ணும் குடும்பத்து பெண் வேடம். ஏய் இசுக்கு என்று மதுரைத் தமிழில் பாவாடை தாவணியுடன் வில்லித்தனத்தைக் காட்டியிருப்பார். தன் தாவணியை உருவி சரிக்கு சமமாக மோதிய நாயகனனிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என்று மல்லுக்கட்டுவதாகட்டும், ஆறுதல் சொல்ல வரும் அண்ணனிடம் "அவனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், விடக்கோழி அடித்து விருந்து தயாரி என அலம்புவதாகட்டும், கடைசியில் நாயகன் திருமணத்துக்கு மறுத்ததும் ஏய் என கத்தியுடன் பாய்வதாகட்டும் மிரட்டியிருப்பார்.

ஜோதிகா

அறிமுகமான பூவெல்லாம் கேட்டுப்பார் முதல் பல படங்களில் அப்பாவிப் பெண் வேடங்களில் நடித்தவர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பணத்திற்க்காக ஆண்களை மயக்கும் வேடத்தில் பிளந்து கட்டியிருப்பார். கண்களில் சோகம் ததும்பும் காமத்துடன் அவர் பார்க்கும் போது யார்தான் மயங்கமாட்டார்கள்?. கடைசிவரை விட்டுக்கொடுக்காத வில்லத்தனம் காட்டியிருப்பார். மொழி பார்த்து விட்டு இதைப் பார்த்தவர்கள் விழி பிதுங்கிவிட்டது. சந்திரமுகி படத்திலும் ஸ்பிளிட் பெர்சனாலிடி காட்சிகளில் சந்திரமுகியாக மிரட்டியிருப்பார்

அக்சயா

கலாபக் காதலன் படத்தில் தன் ஒன்றுவிட்ட அக்கா கணவனை அடையத்துடிக்கும் பாத்திரம்.

ரீமா சென்

வல்லவன்படத்தில் தன் துணை தனக்கு கிட்டத்தட்ட அடிமையாக இருக்க வேண்டும் என்கிற சைக்கோ பாத்திரம். சைக்கோ என்பதை விட ஓவர் பொசெஷனுடன் ஹைபர் ஆக்டிவ்வும் கலந்த பெண் வேடம் என்றும் சொல்லலாம். படத்தில் காட்டப்படும் வயதுக்கு உடல் ஒத்துழைக்கவிட்டாலும் நடிப்பு ஒத்துழைத்தது

ஐஸ்வர்யா

பேரரசுவின் பழனி படத்தில் வசதிக்காக பணம் உள்ளவர்களுடன் இணையும் பாத்திரம். இவரது குரல் வில்லி வேடத்திற்க்கு மிகப் பொருத்தம்.

சி ஐ டி சகுந்தலா போன்றோர் பழைய கௌபாய் டைப் படங்களில் வில்லியாக நடித்தனர். கர்ணன் படங்களில் ராஜ் கோகிலா, ராஜ் மல்லிகா போன்றோர் வில்லி வேடத்தில் நடித்தனர்.எங்க சின்ன ராஜா படத்தில் சி ஆர் சரஸ்வதி நடித்தார். பூவா தலையா படத்தில் எஸ் வரலட்சுமி, மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யாவும் வில்லி மாமியாரார் வேடங்களில் கலக்கினார்கள். இது போல பல படங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி வேடம் கிடைத்தாலும், பெரும்பாலும் நாயகனுடன் மோதி பின் அவனுக்கு ஏங்கும் (சமீபத்தில் : கேடி -தமன்னா) வேடங்களையே வில்லிகளுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து அளித்துவருகிறது.

February 07, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள்- 4 (நாசர்)

தமிழ்சினிமாவில் சமகால எதிர்நாயகர்களுக்கும்,கதாநாயகிகளின் ஆயுள்காலத்திற்க்கும் ஒருவித தொடர்பு இருக்கும். பானுமதி,சாவித்திரி போன்ற நாயகிகள் நீண்ட நாள் முன்னிலையில் இருந்தது போல வீரப்பா,நம்பியார் முன்னிலையில் இருந்தனர். பத்மினி,சரோஜாதேவி போல் அசோகன்,ஆர் எஸ் மனோகர் போன்றோரும் நீடித்து நின்றனர். பின்னாட்களில் கதாநாயகிகளின் ஆயுள் ஐந்து ஆண்டுகளாக குறுகியபோது வில்லன்களின் ஆயுளும் குறுகத் தொடங்கியது.

வில்லனாக ஒருவர் நடிக்கத் தொடங்கி, பட்டி தொட்டியெல்லாம் முகம் பரிச்சியமாகிவிட்டால் கதாநாயக வேடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்தினால் (சத்யராஜ், சரத்குமார்) ஒரு 10,15 ஆண்டுகள் ஹீரோவாக காலத்தை ஓட்டி விடலாம். சொதப்பினால் (ஆனந்த்ராஜ்,நெப்போலியன்) சப்பை கேரக்டர்களுக்குத்தான் கூப்பிடுவார்கள். வில்லனாக ஒருவர் அறிமுகமாகும்போது மிரட்டலாக இருக்கும். சில படங்களுக்குப் பின் அவரின் வில்லத்தனம் (சலீம் கௌஸ், ஆசிஷ் வித்யார்த்தி) பழகிவிடும். இதில் நம் டைரக்டர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரே மாதிரி உறும வைத்து புலியையும் பூனையாக்கி விடுவார்கள்.

இம்மாதிரி உச்சத்தை அடைந்து, ஹீரோவாக மாறி ஆனால் அதில் சொதப்பினாலும் இன்னும் சவாலான கேரக்டர்களுக்கு இயக்குனர்களால் தேடப்படுபவர் நாசர். அடுத்த ஆண்டுடன் இவர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. முதல் படமான கல்யாண அகதிகளில் என்ன மாதிரியான வியப்பை பார்வையாளர்களுக்கு கொடுத்தாரோ அது இப்போது வெளியான பஞ்சாமிர்தம் வரை தொடர்கிறது.

அவர் முதன் முதலில் இயக்கிய அவதாரம் படத்தில் இடம் பெற்ற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை என்னும் பாடலில் ஒரு வரி இடம் பெற்றிருக்கும். "காசு பணத்துக்காக நான் அரிதாரம் பூச ஏங்கவில்லை, கைதட்டுக்காகத்தான்". அது அவரை மனதில் வைத்துத் தான் பாடலாசிரியர் எழுதியது என்பதை இன்றுவரை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். கிட்டத் தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மேஜிக் லான்டெர்ன் குழுவினர் பொன்னியின் செல்வன் புதினத்தை மூன்று மணி நேர நாடகமாக நடத்தினார்கள். அப்போது தன் இடைவிடாத திரைப் பணிக்கு இடையிலும் ஆதித்ய கரிகாலன் வேடத்தை ஏற்று அவர் நடித்தார் எனபதில் இருந்தே அவருக்கு கலையின் மேல் இருக்கும் ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம்.

நாசரின் இன்னொரு சிறப்பு, திரைத்துறையில் இருக்கும் எல்லாவித குழுக்களுடனும் இணைந்து அவர் படம் செய்திருப்பது.

கலை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னத்தின் படத்திலும் அவர் இருப்பார். அந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் படம் எடுக்கும் ராம நாராயனன் படத்திலும் அவர் இருப்பார்.

பெரிய பட்ஜெட் படங்களாக எடுக்கும் ஷங்கர் இயக்கத்திலும் அவர் நடிப்பார், அதே நேரத்தில் ஷங்கர் பட ஒரு பாடல் காட்சி எடுக்கப்படும் செலவில் முழு படத்தையே எடுத்து முடித்துவிடும் வீ சேகர் இயக்கத்திலும் அவர் நடிப்பார்.

கமல்,ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும்போதே அறிமுக நாயகர்கள் நடிக்கும் படங்களிலும் அதே அளவு தீவிரத்துடன் நடிப்பார்.

ஓம் பூரி, நசுருதீன் ஷா வுக்கு இணையான நடிப்பாளுமை உடையவராக இருந்தாலும், பி வாசு போன்றோர் கொடுக்கும் வழக்கமான வில்லன் வேடங்களையும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார்.

பிரியதர்ஷன் போன்ற வெளிமாநில இயக்குனர்கள் வந்தாலும் சரி, திருமுருகன் போல தொலைக்காட்சியில் இருந்து வந்தாலும் சரி அவர்கள் தேடுவது நாசரைத்தான்.

டெண்டுல்கர், லட்சுமணன் போன்றோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது அவர்களின் ஆட்டம் வழக்கத்தை விட அபாரமாக இருக்க்கும். அதுபோல நாசர், கமல் உடன் இணைந்து நடிக்கும் படங்களில் இன்னும் பிரகாசிப்பார். அவர் நடிப்பில் அசத்திய படங்களை பட்டியலிட்டால் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் போல அதனை படிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் நான்கு படங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தேவர் மகன்

வாசிம் அக்ரமும், அம்புரோசும் தங்கள் உச்சத்தில் இருக்கும் போது ஆளுக்கொரு முனையில் இருந்து பந்து வீசினால் பாட்ஸ்மென் என்ன செய்ய முடியும்?. ஆனால் அதே பாட்ஸ்மென் அவர்களுக்கு சமமாக ஆடினால் பார்வையாளர்களுக்கு எப்படி ஒரு அனுபவம் கிடைக்கும்?. அதுபோன்ற அனுபவம்தான் நமக்கு தேவர்மகனில். முதலில் சிவாஜியோடும், பின்னர் கமலோடும் அவர் யுத்தம் நடத்தும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது.

தலைவாசல்

தேவர்மகனில் பார்த்தால் தென்மாவட்ட ஆளை கண்ணில் நிறுத்துவார். இந்தப் படத்தில் பீடா சேட்டாக ஒரு வட மாநில ஆளாக உருமாறியிருப்பார். பீடா மாபியாவை நடத்தி மாணவர்களை கெடுத்து சம்பாதிக்கும் வேடம். முகத்தை அகலமாக்கி, பல்லில் கறையேற்றி, உச்சரிப்பில் வட மாநில மாடுலேஷனைக் கொண்டுவந்து மிரட்டியிருப்பார்.

மகளிர் மட்டும்

எதிர்நாயகன் என்ற வார்த்தை சரியாகப் பொருந்தும் வேடம். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் மேலதிகாரி வேடம். உடன் நடித்த ஊர்வசி,ரேவதி,ரோகிணி எல்லோரும் கடுமையான போட்டியை கொடுக்கக் கூடியவர்கள். கண்ணசைவுகள், வழியும் முகபாவம், கெஞ்சல், மிரட்டல் என பல பாவங்களையும் அனாயாசமாக காட்டியிருப்பார்.

குருதிப்புனல்

அரசாங்கத்துக்கு எதிரான தலைமறைவு போராட்டக்குழு தலைவன் வேடம். ஆயிரம் பேர் கொடூர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டாலும் திரையில் வராத உக்கிரத்தை ஒரு டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து நடத்தும் விசாரனையில் கொண்டுவந்து விடுவார்கள் கமலும்,இவரும். கூர்மையான பார்வையுடன் எதற்க்கும் ஒரு பிரேக் பாயிண்ட் இருக்கு என்று இவர் சொல்லும் போது நாயகன் இவரா, கமலா என்றே சந்தேகம் வந்துவிடும்.

சென்ற ஆண்டின் சிறந்த காமெடி நடிகராக விகடன் இவரை தேர்ந்தெடுத்தது. பொய் சொல்ல போறோம்,பஞ்சாமிர்தம் படங்களின் மூலம் புதிய தலைமுறை ஹீரோ ஹிரோயின்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கட்டும்.

February 06, 2009

விஜய் நம்பர்- 1 ஆக முடியுமா?

தொடர்ந்து மூன்று படங்கள் மக்கள்,ரசிகர்கள் மற்றும் திரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் அவரின் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பிலோ,வணிகத்திலோ எந்த குறையும் இல்லை. இது எல்லாத்தரப்பையும் சென்றடைந்த ஒரு கதாநாயனுக்கே சாத்தியமாகக் கூடியது. எம்ஜியார்,ரஜினிக்கு கிடைத்த அந்த நம்பர்- 1 நாற்காலி அவர்களின் பார்முலாவை உபயோகிக்கும் விஜய்க்கு கிடைக்குமா?

ரஜினி நடிக்க வந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அப்பொதைய நம்பர்- - 1 ஆக இருந்த எம்ஜியார், முதல்வராகி விட்டார். காலியான அந்த நாற்காலிக்கு அவருடைய போட்டியாளரான சிவாஜி கணேசன் வர முயற்சிக்கவில்லை. முயன்றாலும் முடிந்திருக்காது. அப்போது ரஜினி, 77ல் 15, 78ல் 20, 70ல் 13 என அசுர வேகத்தில் நடித்து, பல வித்தியாசங்களைக் காட்டி எல்லாத் தரப்பையும் சென்றடைந்து தன் சமகால போட்டியாளர் கமலை ஓவர்டேக் செய்து அந்த நாற்காலியை கைப்பற்றினார்.

ஒரு வாதத்துக்கு,ரஜினி இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 70 வயதை நெருங்கும் வேளையில் திரைத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காலியாகும் அந்த இடத்துக்கு கமல் போட்டி போட போவதில்லை. அப்படியானால் இப்போதிருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் பொடென்ஷியல் கேண்டிடேட் ஆக இருப்பதில் விஜய்யும் ஒருவர்.

அவரால் அதை அடைய முடியுமா?

1. எம்ஜியார், ரஜினி இருவருக்கும் சமகால போட்டியாளர்களாக இருந்த சிவாஜி,கமல் இருவருமே பெரும்பாலும் இவர்களைப் போல ஹீரோயிஸ படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. சாதாரணப் பாத்திரங்களிலும் நடித்து வந்தனர். இதனால் நம்பர்- 1 ஐ நிர்ணயிக்கும் பெரும்பாண்மை ரசிகளிடமிருந்து அன்னியமானார்கள். ஆனால் விஜய்யின் போட்டியாளராக கருதப்படும் அஜீத்தும் ஹீரோயிஸ படங்களிலேயே நடித்து வருகிறார். தொடர்ந்து அந்தப் பாதையில் செல்லும்படியாகவே அவரின் தற்போதைய படத் தேர்வுகளும் உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் மாதிரி இயக்குனர்கள் இரண்டு அதிரடி படங்களை அஜீத்துக்கு தந்தால் இந்த ரேஸில் அஜீத் முந்த வாய்ப்புகள் அதிகம்.

2. எம்ஜியார்,ரஜினி காலத்தில் நேரடி போட்டியாளர்களைத் தவிர வீரியமான நடிப்பில் மிளிர்ந்த கதாநாயகர்கள் குறைவு. ஆனால் இப்போது விக்ரம்,சூர்யா என விஜய்யை விட நன்றாக நடிக்கக்கூடிய நடிகர்கள் இருக்கிறார்கள். விஷால்,தனுஷ்,சிம்பு என விஜய் செய்வது போலவே செய்து ரசிகர்களை பங்கு போடவும் இன்னோரு தலைமுறை வந்துவிட்டது.

3. விஜய்க்கு பெரும்பலமாக சொல்லப்படுவது பாடல் காட்சிகளில் ஆடும் நடனம். இன்னும் 10 ஆண்டு கழித்து 45 வயதில் அப்போதைய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப ஆட முடியுமா?. முன்னெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். இப்போது 10 ஆண்டுகளிலெயே ரசனையில் பெரும் மாற்றம் வந்து விடுகிறது.

4. நல்ல பாடல்கள், காமெடி, முண்ணனி நாயகிகளின் துணை என்ற பார்முலாவுடன் தற்போதைய விஜய் படங்கள் வெளியாகின்றன. அவரது பங்கு என்பது சண்டைக் காட்சிகள், பஞ்ச் டயலாக்குடன் முடிந்து விடுகிறது. இவரது நடிப்பால் படம் வெற்றி பெற்றது என்று அவரது ரசிகர்கள் கூட சொல்வதில்லை. 45 வயது வரை இதைப் போன்ற கதை அமைப்புள்ள படங்களிலேயே நடித்து நிலைபெறுவது சாத்தியமா?

5. அமீர்கான் 2000ஆவது ஆண்டு வரை ஷாருக்கை விட வணிக மதிப்பில் பின் தங்கியிருந்தார். ஆனால் அவர் அதன் பின் நடித்த தில் சத்தா ஹை, லகான், மங்கள் பாண்டே, ரங் தே பசந்தி, தாரே ஜமின் பர் போன்ற படங்கள் எல்லாமே ஆப் பீட் தீம்தான். ஆனால் அப்படங்கள் அவருக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையை கொடுத்துள்ளது. ஷாருக்குக்கு இணையான வணிக மதிப்பை அவரும் பெற்றார். கஜினி படத்திற்க்கு நடந்த வியாபாரமே இதற்க்கு சாட்சி. இதே போல் இங்கும் மக்கள் மனநிலை மாறிவரும் நிலையில் மெத்தட் ஆக்டிங்கில் கலக்குபவர்களுக்கும் அந்த நாற்க்காலிக்கான வாய்ப்பு பிரகாசமாகிறது.

6. ரசிகர்களை தக்க வைக்க இன்னோரு வழி. அரசியல் பூச்சி காட்டுவது. எம்ஜியார்,ரஜினிக்கு இருந்த வெளிமாநில முத்திரை விஜய்க்கு இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஜாதியையும் சாராதவர்கள் என்ற மிகப் பெரிய அட்வாண்டேஜ் இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் சிறுபான்மை ஜாதியை சேர்ந்தவர்களே நம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் முன்னிலைப் படுத்தப்படுவதை அதற்க்கு இணையான மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் விரும்புவதில்லை. அரசியல் என இறங்கினால் இந்த பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். எனவே அவர் கொடியை காட்டாமல் இருப்பது நல்லது.

முன்பு ரஜினி படத்தை, நன்கு தெரிந்த ஹோட்டலில் கிடைக்கும் உடல்நலத்திற்க்கு கேடு தராத சுவையான சாப்பாடு என்று வர்ணிப்பார்கள். அதுபோல விஜய்யும் எல்லாத் தரப்பும் விரும்பும் வகையிலான டீஸண்டான, மிகை ஹிரோயிஸம் தவிர்த்த ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினால் இப்போதைய ரசிகர்களோடு, பின் கவரும் ரசிகர்களையும் சேர்த்து நம்பர் - 1 இடத்தை அடையலாம்.

February 04, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள்- 3 (சத்யராஜ்)

இரண்டாம் பகுதியை படிக்க இங்கே செல்லவும்

84 ஆம் ஆண்டு. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர். மதிய காட்சி இடைவேளை முடிந்ததும் கேண்டின் காரர் நான்கைந்து சோடா பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சீனுக்கு சைட் ஸ்பீக்கர் சவுண்டை குறைடான்னா ஆப்பரேட்டர் கேட்க மாட்டேங்கிறான், ஷோவுக்கு ஒன்னு ரெண்டு பொம்பளையாளுங்க மயக்கம் போட்டு விழுந்துறாங்க என்று சலித்தபடியே கடையை மூடுகிறார். எந்த படம் என்று ஞாபகம் வருகிறதா? ரங்கராஜ் என்பவர் சத்யராஜ் என்று தமிழர் வாழுமிடமெல்லாம் பின்னாளில் அறியப் பட காரனமாய் இருந்த நூறாவது நாள் என்னும் திரில்லர் படம் தான் அது.

சினிமா ஆசையால் கோவை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சிறு சிறு வேடங்களிலும், சர்வைவலுக்காக அலுவலக நிர்வாகியாகவும் பணியாற்றிய சத்யராஜ் தன் கல்லூரி நண்பர் மணிவண்ணனிடம் நல்ல பிரேக் கிடைக்க மாட்டேங்குதே என்று புலம்பிய போது, அவர் கொடுத்த வாய்ப்புதான் அந்த மொட்டைத்தலை வில்லன் வேடம். ஒரு பேட்டியில் சத்யராஜ் இப்படி சொல்லியிருந்தார் " மொட்டையை அடிச்சு, மீசையை எடுத்திட்டு அந்த வட்ட கண்ணாடியை போட்டுட்டு கண்ணாடில பார்க்கிறேன், எனக்கே பிடிக்கல. ஆனா மணிதான் கட்டாயப்படுத்தி அத செய்ய வச்சான்". அந்த கேரக்டர் என்ட்ரி, சாவது போல் நடித்து எழுவது, அதற்க்கேற்ப பிண்ணனி இசை, நளினியின் பெரிய கன்களில் தெரியும் பயம் என அந்த பட காட்சிகள் பெண்களை பயப்படுத்தின. சத்யராஜ் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று முழு திரையுலகத்திற்க்கும் தெரியவந்தது.

அதே ஆண்டு, அதன்பின் மணிவண்னனின் இயக்கத்தில் வெளியான 24 மணி நேரம் படத்தில் மெயின் வில்லன் கேரக்டர் கிடைத்தது. அதில் சத்யராஜ் பேசும் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்கிறங்களே" என்ற வசனமும், டயலாக் டெலிவரி மற்றும் மாடுலேஷனும் அவரை முன்வரிசை வில்லன்களில் ஒருவராக மாற்றியது. அதனால் முன்வரிசை கதாநாயகர்கள் அனைவரின் படங்களிலும் வில்லன் வேடம் தேடிவந்தது. அந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் சுலக்ஷனாவுக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளையாக சிறு வேடத்திலும், ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் விஜயகாந்த்,நளினி நடித்த நாளை உனது நாள் என்ற திரில்லர் படத்தில் சிறு வேடத்திலும் தலையைக் காட்டிய சத்யராஜுக்கு மணிவண்ணனின் இரண்டு படங்களும் மிகப் பெரிய ஏற்றத்தை தந்தன.

1985

இந்த ஆண்டில் சத்யராஜ் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரர் படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். கமல் ரசிகர்கள் மறந்து விட நினைக்கும் மங்கம்மா சபதம் என்னும் படத்தில் கமலின் வில்ல தாத்தாவாக நடித்தார். ஜப்பானில் கல்யானராமன் படத்தில் மெயின் வில்லன் வேடம். ஆனால் இதே ஆண்டு வெளியான காக்கி சட்டை படம் சத்யராஜை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

"பொழைக்கத் தெரியாத நாட்டில பொழைக்க தெரிஞ்சவங்க .... ஸ்மக்கேர்ல்ஸ்" இந்த சாதாரண வசனத்தை தன் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், வார்த்தைகளுக்கு இடையே விடப்படும் இடைவெளி மூலமாகவும் அசாதாரணமாக்கியிருப்பார்.

வெள்ளக்காரன் நம்ம நாட்டில இருந்து எடுத்திட்டுப் போன தங்கத்தை திருப்பி எடுத்திட்டு வர்றோம். எங்களப் போயி கடத்தல்காரன்னு சொன்னா எப்படி? , தகடு தகடு, பட்ஷி பட்ஷி போன்ற வசனங்களிலும் கமலை இன்னும் குட்டையாக்கி இருப்பார்.

ஈட்டி,கீதாஞ்சலி படங்களில் வழக்கமான வில்லன். சாவி படத்தில் எதிர் நாயகன், மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான பகல் நிலவில் பெரியவர் என்ற நாசூக்கான வில்லன் வேடம், முதல் மரியாதையில் ஒரு கிராமத்து மன்மத சண்டியரின் வயதான பிம்பம் என பலவித வேடங்களில் கலக்கினார் சத்யராஜ்.

1986

முதல் வசந்தம்

குங்குமப் பொட்டு கவுண்டராக வந்து அதகளம் பண்ணியிருப்பார். வெள்ளையுடை அணிந்த பணிப்பெண்னை இரவில் கரெக்ட் பண்ணிவிட்டு பேயை கரெக்ட் பண்ணிவிட்டோமோ என்று காலையில் புலம்புவதாகட்டும், எதிரி என்றாலும் நம்ம ஆள் என்ரு சொல்லி வேலைக்காரன் திட்டக் கூடாது என்று கண்டிப்பதாகட்டும், பின் கடைசியில் நல்லதை எடுத்து சொல்வதாகட்டும் தனி ஸ்டைலில் பண்ணியிருப்பார்.

பாலைவன ரோஜாக்கள்

கருணாநிதி வசனத்தில் முதல் படம். பத்திரிக்கை ஆசிரியராக கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். லட்சுமியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும், பின் கொள்கைக்காக உயிரை விடும்போதும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.

மிஸ்டர் பாரத்

சத்யராஜின் இன்னொரு புகழ் பெற்ற வசனமான என்னம்மா கண்ணு பேசப்பட்ட படம். ரஜினிக்கு இணையாக பாடல் காட்சி அமைத்திருப்பார்கள். ஒரு பணக்காரரின் பாடி லாங்குவேஜை எளிதாக கொண்டு வந்திருப்பார்.

முரட்டு கரங்கள்

ஷோலே பட பாதிப்பில் வந்த படம். கப்பர் சிங் மாதிரியான கொள்ளை கூட்ட தலைவனாக சத்யராஜ். கூன் விழுந்த முதுகோடு, கண்களில் கொடூரத்துடன் கொள்ளை அடிப்பதுமாய், ஈவு இரக்கமில்லாமல் மக்களை கொல்வதுமாய் மிரட்டியிருப்பார்.

விடிஞ்சா கல்யாணம்

ஆப்பாயில் ஆறுமுகம் என்ற சிறையில் இருந்து தப்பிய கைதி, மகளை கற்பழிக்க வந்தவனை கொலை செய்த தாய், மகள், மகளை திருமணம் செய்யப் போகும் இன்ஸ்பெக்டர் இந்த பாத்திரங்களை வைத்து மணிவண்ணன் இயக்கிய திரில்லர். சத்யராஜ் ஆப்பாயில் ஆறுமுகமாய் வந்து தாயையும்,மகளையும் மிரட்டுவார், மாப்பிள்ளையிடம் சவால் விடுவார். சுருக்கமாக சொன்னால் லொள்ளு பண்ணியிருப்பார்.

விக்ரம்

கமலின் சொந்தப் படம். ஏவுகணையை கடத்தும் சர்வதேச வில்லனாக சத்யராஜ். இந்தப் பட இயக்குனர் ராஜசேகர் பாதியில் ரஜினியின் படத்தை இயக்க போய்விட்டதால் சந்தான பாரதியை வைத்து சமாளித்தார் கமல். அதனாலேயே அவருக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு பட இயக்க வாய்ப்பை அளித்தார். சத்யராஜின் திறமையைக் கண்டதால் அவருக்கு நாயகன் வாய்ப்பை வழங்கினார் கமல்.

மேலும் இந்த ஆண்டில் கரிமேடு கருவாயன் படத்தில் விஜயகாந்தை கைது செய்ய வரும் போலிஸ் ஆக ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகன் ஒரு ரசிகை, மந்திரப் புன்னகை, கடலோர கவிதைகள் படங்களின் மூலம் முழு கதாநாயகனாக மாறினார்.

1994- அமைதிப்படை

மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்கள். அதில் வில்ல அரசியல்வாதி அமாவாசை என்ற ராஜ ராஜ சோழன் எம் ஏ வை யாரால் மறக்க முடியும்?

மணியா வரலாறு தெரிஞ்சுக்கோனும் " சாமி இல்லன்னு சொன்னவன் கூட கோயிலை இடிச்சதில்லையப்பா, இருக்குன்னு சொன்னவன் தான் இடிச்சுருக்கான்"

நாலு ரவுண்டு அடிச்சும் ஏறாட்டி அந்த கருமத்தை எதுக்கு குடிக்கணும்?

ஒரு அரசியல்வாதி மகனா பெறந்துட்டு இது கூட பேசாட்டி எப்படி?
போன்ற காலத்தால் அழியாத வசனங்கள் மூலம் இன்னும் நினைவில் நிற்கிறார்.

வில்லனாக அறிமுகமாகி வெற்றிகரமான கதாநாயகனாக மாறிய முதல் நடிகர் ரஜினிகாந்த். இரண்டாவது சத்யராஜ். ரஜினி தன் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தோடு துணை,இணை கதாநாயக வேடங்களையும் சேர்த்தே செய்து வந்தார். வில்லன் வேடம் எனினும் ஆடு புலி ஆட்டம் தவிர எதிலும் கொடூர வில்லனாக வந்ததில்லை. சிறந்த இயக்குனர்கள் அவருக்கு நாவல்டியான வேடங்களை கொடுத்தார்கள். அதை அவர் தன் திறமை மூலம் மெருகேற்றி நடித்தார். அதனால் அவரை கதாநாயகனாக மாறுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை.

சத்யராஜின் முதல் படம் கோடுகள் இல்லாத கோலங்கள், பின் சட்டம் என் கையில், குருவிக்கூடு போன்ற படங்களில் சில்லரை வேடங்களில் நடித்து வந்தார். நூறாவது நாள் பிரேக்குக்குப் பின் அவருக்கு கிடைத்தவை ஹார்ட் கோர் வில்லன் வேடங்கள். அனாலும் பிரேக் கிடைத்து இரண்டே ஆண்டுகளில் கதாநாயக அந்தஸ்த்துக்கு உயர்ந்தார்.

இதற்க்கு சத்யராஜே ஒரு காரணத்தை சொல்வார் "அப்போது அதிக தயாரிப்பாளர்கள், குறைந்த நடிகர்கள், அதனால் எனக்கு எளிதான வாய்ப்பு கிடைத்தது என்று". அது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே?. திரையரங்குகளில் அவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்தான் வினியோகஸ்தர்கள் மூலம் எதிரொலித்து கதாநாயக வாய்ப்பை வழங்கியது. கொடூர வேடத்தில் நடித்தாலும் மக்களை கவரும் வசீகரம் சத்யராஜிடம் இருந்தது.

கால சக்கரம் சுழன்று இப்போது வில்லன் வேடத்துக்கு அழைப்புகள் வரும் நிலையில் இருக்கிறார் சத்யராஜ். சிவாஜி,தசாவதார வில்லன் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஆனால் இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

மணிவண்ணனுக்கு சத்யராஜின் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. இவர்கள் இருவரும் கல்லூரி விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்றபோது நடந்த சம்பவம்

அதென்னப்பா பி ஏ அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்?

அது ஒன்னுமில்ல இப்ப ஒரு வீட்ட வாங்குறோம்னு வச்சுக்க, பெரிய தொகை கொடுக்கணும். ஆனா அதுக்கு அட்வான்ஸ் கம்மியா இருக்கும்ல. அதுமாதிரி இங்கிலீஷ் பெரிசு அதில கொஞ்சமா படிக்கிறது அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்.

அப்ப அதயே நான் எடுக்கிறேன்.

எடுத்து டரியலானவர் யாரென்று சொல்ல வேண்டுமா?

என்னா ஒரு வில்லத்தனம்?
iit

February 03, 2009

புறக்கணிப்பு

எப்போது இது தொடங்கியது என்று தெரியவில்லை. மூன்றாவதோ நாலாவதோ படிக்கும் போது பக்கத்தில் உள்ள அணைக்கட்டுக்கு பள்ளியில் இருந்து சுற்றுலா அழைத்து சென்றிருந்தார்கள். இரண்டு இரண்டு பேராக கையைப் பிடித்துக் கொண்டு வரிசையில் செல்ல வேண்டும் என்று உத்தரவு. அந்த இரண்டாவது ஆள் கிடைக்காமல் தனியே நான் சென்ற ஞாபகம் இருக்கிறது.


தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது எப்போதும் காமன் தான். போத் சைட் பேட்டிங், பீல்டிங் என்று தள்ளி விட்டு விடுவார்கள். பேட் செய்ய மூன்று நாலு பந்தும், பந்தே வராத இடத்தில் பீல்டிங் வாய்ப்பும் வழங்கப்படும்.வேறொரு தெருவோடு ஆடும் பால் பெட் மேட்சில் கூட பிளேயிங் லெவனில் இடம் கிடைத்த ஞாபகம் இல்லை. திருப்பதி லட்டாக வரும் கேட்சை பழனி பஞ்சாமிர்தமாக கையில் வழிய விடுபவனைக் கூட டீமில் சேர்த்துக் கொண்டார்கள். ஸ்கோரர் பொறுப்பு கூட எனக்கு வழங்கப்பட்டதில்லை. சாமர்த்தியமாக ரன்னை ஏற்றத் தெரிந்தவனுக்கு தானே அந்தப் பதவி.

கல்லூரியிலும் இது தொடர்ந்தது. இரண்டாம் ஆண்டு கேரளா டூரில் தனித்தனி குழுவாக சாப்பிட போனார்கள், ரூமில் தங்கினார்கள், போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எந்த ஆல்பத்திலும் என் போட்டோ இல்லை. பைனல் இயர் ப்ராஜக்ட்லும் நான் எதிர்பார்த்திருந்த குழுக்களிடமிருந்து கழட்டி விடப்பட, உப்புக்கு சப்பாணியாக ஒரு குரூப்பிடம் ஹெச் ஓ டியால் அடைக்கலம் புகவைக்கப் பட்டேன்.

வேலை தேடி மேன்ஷனில் இருந்த போது, தண்ணியடிக்க, படத்துக்கு என எதற்கும் அழைப்பில்லாமல் இருந்தது. ஒரு நாள் விரக்தியில் ஒருவனிடம் புலம்பிய போது அவன் சொன்னான் "தண்ணியடிக்கப் போன மொதோ மூணு வாந்தில ஒண்ணு உன்னோடதா இருக்கணும், தேட்டர்ல பிரச்சினைனா மொதோ சத்தம் உன்கிட்ட இருந்து வரணும், உன்கிட்ட ஏதாச்சும் இருந்தாத் தாண்டா செட்டு அமையும்"

இப்போது கூட வேலை பார்க்கும் இடத்தில், வீக்கெண்டில திடீரென ஒரு குரூப் மகாபலிபுரம் போகுது, இன்னோரு குரூப் மாயாஜால் போயிட்டு எங்கயாவது மொக்கீட்டு வருது. நான் அந்த நேரத்தில ஐபிஎல் ரிப்பீட்ட பார்த்துக் கிட்டு இருக்கேன்.

எனக்கு சிரிக்க சிரிக்க பேசத் தெரியாது, பிரச்சினைன்னா முன்னாடி நிக்கத் தெரியாது, எக்ஸ்ட்ராவா எந்த குவாலிட்டியும் இல்ல. என்னை மாதிரி செட்டு அமையாம ஒத்தப் பனையா நிக்கிறவங்களா நீங்க இருந்தா இந்த நம்பருக்கு ............... போன் பண்ணுங்க. இந்த வாரம் நாம மகாபலிபுரம் போறோம்.

February 01, 2009

தமிழ்சினிமா எதிர் நாயகர்கள் - 2 (அசோகன்)

முதல் பகுதியை படிக்க இங்கே செல்லவும்
70களின் பிற்பகுதி வரை வந்த பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு கொடுமை செய்யும் வேலையை மட்டுமே இயக்குனர்கள் கொடுத்தார்கள். மக்கள் வில்லனைப் பார்த்து பயப்படும் போல் காட்சி அமைப்பு இருக்குமே தவிர, ரசிக்கும் படியான வில்லனிசம் குறைவாகவே இருந்தது. ரஜினிகாந்த் 16 வயதினிலே,மூன்றுமுடிச்சு படங்களில் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை கொண்டுவந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கிடைத்த இணை நாயகன், கதாநாயகன் வேடங்களால் அவர் வில்லத்தனத்திற்க்கு வேலையில்லாமல் போய்விட்டது. பின் வந்த சத்யராஜ் எல்லோராலும் ரசிக்கப்படும் வில்லத்தனத்தை கொண்டுவந்தார். 24 மணி நேரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறங்களே, காக்கி சட்டையில் தகடு தகடு என வில்லத்தனத்தில் ஒரு நாவல்டியை கொண்டு வந்தார். தற்போது கனா கண்டேன் பிரித்விராஜ் வரை இது தொடர்கிறது.

ஆனால் இம்மாதிரி இல்லாத 60,70 களில் கிடைத்த வேடங்களில் மாறுபட்ட பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மூலம் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை காட்டியவர் எஸ் ஏ அசோகன். 50 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 80கள் வரை பல வேடங்களில் நடித்தார். இவர் ஏற்ற சில முக்கிய வேடங்களைப் பார்க்கலாம்.

அன்பே வா

எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத அத்தானான விமானி அசோகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் உண்மை தெரிந்ததும் இவர் விட்டுக்கொடுத்து விட்டு, கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று சொல்வாயே என்று ஆரம்பித்து அமர்த்தலாக வசனம் பேசி விட்டு செல்வார். இந்த காட்சியில் இவரது ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.

மூன்றெழுத்து

புதையல் ரகசியத்தை வைத்திருக்கும் மூன்றெழுத்தில் ஒரு எழுத்து இவரிடம் இருக்கும். மிகப்பெரிய குடுமியுடன், வேட்டிமீது பெல்ட் அணிந்து இழுத்து இழுத்து பேசும் மாடுலேஷனில் பின்னியிருப்பார். இந்த வாய்ஸ்தான் எல்லா மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் தற்போது பயன்படுகிறது.

ரகசிய போலிஸ் 115

இதில் செல்வந்தரின் மகனாக இருந்து கொண்டு, சமூக விரோதியாக இருக்கும் வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு. இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு எளிதில் பொருந்திப் போகும். அதற்கு ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக் கொண்டுவந்து விடுவார்.

உலகம் சுற்றும் வாலிபன்

விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார் இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில் அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு, ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன் உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் " முருகன் காதலியோட உலகத்த சுத்தப் போறான், நான் காரணத்தோட அவன சுத்தப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அப்போதுதான் படம் களை கட்டும்.

துணிவே துணை

இந்தப் பட ஹீரோ ஜெய்ஷங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் " இரந்தவனும் சொமந்தவனும்" என்ற பாடலை பாடியிருப்பார் எஸ் ஏ அசோகன். எம்ஜியார் படங்களுக்குப் பின் அதிகமாக ஜெய்ஷங்கர் படங்களிலேயே அசோகன் வில்லனாக நடித்தார். எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்திலும் வழக்கமான வில்லன் வேடமே. ஆனால் இந்தப் படத்தின் கதை,பாடல்கள் மற்றும் காட்சியமைப்பு காரணமாக எல்லா வேடங்களும் மனதில் நிற்கின்றன.

அலாவுதீனும் அற்புத விளக்கும்

இந்தப் படத்தில் ஜாடியில் அடைக்கப் பட்டிருக்கும் பூதமாக கலக்கியிருப்பார். இவர் உருவத்துக்கு அந்த வேடம் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்பாவித்தனமான முகத்துடன், அசட்டு சிரிப்புடன், கொஞ்சும் குரலில் பூதமாக வித்தியாசத்தை காட்டியிருப்பார்.

கங்கா, ஜம்பு டைப் கௌபாய் உடை படங்கள்

காமிரா மேன், இயக்குனர் கர்ணன் ஜெய்ஷங்கரை வைத்து இயக்கிய பல கௌபாய் படங்களில் இவர் தான் பெரும்பாலும் வில்லனாக நடித்தார். இவரது ஆகிருதி அதற்க்கு உதவியாக இருந்தது. இப்படங்களில் பல வித்தியாச மானெரிசங்களை இவர் பயன்படுத்தி இருந்தாலும் அவை அவ்வளவாக மக்களை கவரவில்லை என்றே சொல்ல்லாம்

இவர் நடித்த சில படங்கள்
1958 - மாயமனிதன்
1961- மனப்பந்தல், தாய் சொல்லை தட்டாதே
1962 - கண்னாடி மாளிகை, பாத காணிக்கை
1963 - இது சத்தியம், காஞ்சித் தலைவன்
1964 - என் கடமை, வாழ்க்கை வாழ்வதற்க்கே
1965 - காட்டு ராணி, தாழம்பூ
1966 - அன்பே வா
1968 - ரகசிய போலிஸ் 115, மூன்றெழுத்து
1973 - உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி
1976 - துணிவே துணை
1980 - பில்லா

இவரைப் போலவே வில்லனாக தன் வாழ்வை தொடங்கிய இவரது மகன் வின்சென்ட் அசோகன் (ஏய், நீ வேனுன்டா செல்லம்) தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் (சில நேரங்களில்) நடித்து வருகிறார்.
(தொடரும்)