December 28, 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

இதுவரை தமிழில் விளம்பர உலகம் தொடர்பாக வந்திருக்கும் புத்தகங்கள் எத்தனை என்று பார்த்தால் அது தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்க்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை விட குறைவாகவே இருக்கும். பெரும்பாலானோர் ஞாபகத்திற்க்கு உடனே வருவது எப்படி ஜெயித்தார்கள் என்ற ரமேஷ்பிரபாவின் புத்தகம். இது விகடன் குழும பத்திரிக்கையில் தொடராக வந்து பின் புத்தக வடிவம் பெற்ற ஒன்று. இது பெரும்பாலும் விளம்பரங்களின் வெற்றியை அலசிய ஒன்று என்று சொல்லலாம். விளம்பரத்துறையின் ஆணிவேரான ஏஜென்சிகளின் பங்கு, அவை செயல்படும் விதம், விளம்பர நுணுக்கங்கள், அடிப்படை விதிகள் ஆகியவற்றை அலசிய புத்தகம் என்று பார்த்தால் அது பிஜேபி தமிழ்நாட்டில் தனியாக நின்று ஜெயிக்கும் நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையிலேயே இருக்கும். அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் யுவகிருஷ்ணா எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்பது பாமக திருமங்கலத்தில் தனித்து நின்றால் ஜெயிக்காது என்பதைப் போன்ற நிதர்சனம்.

இந்த புத்தகத்தின் சிறப்பசம்மே விளம்பரத்துறையின் எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் கவர் செய்திருப்பதேயாகும். முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ விளம்பரம் துவங்கி எதிர்காலத்தில் எந்த மாதிரியான விளம்பர உத்திகள் நடைமுறைக்கு வரும் என்பதுவரை ஒரு முழுமையான கவரேஜ் இந்த புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களும் தக்க உதாரணத்துடனுடம், நூலாசிரியருக்கே உரித்தான நகைச்சுவையுடனும் கொடுக்கப்பட்டுள்ளது. பியர்ஸ் சோப் பற்றிய செய்தியில், மாமனாரின் கம்பெனிக்கான மருமகனின் விளம்பரம் அதுவென்றும், அந்த வெற்றிக்காக அவருக்கு தலைதீபாவளிக்காக எக்ஸ்ட்ரா மோதிரம் கிடைத்ததா என்பது தெரியவில்லை என்று சொல்லுவது அவருக்கே உரித்தான டிரேட்மார்க். இந்திய விளம்பரத்துறையின் தந்தை ஆர் கே ஸ்வாமி என்பதில் தொடங்கி முதன்முதலில் தொலைக்காட்சியில் வண்ணத்தில் ஒளிபரப்பான விளம்பரம் பாம்பே டையிங் என்பதுவரை தகவகல்கள் கொட்டிகிடக்கின்றன இப்புத்தகத்தில். பெருவெற்றியடைந்த விளம்பரங்கள் என்று தரப்பட்டுள்ள விளம்பரங்கள் எல்லாமே மிக சுவையானவை.

அரசியல் கட்சிகளின் விளம்பர யுக்திகள் பற்றியும் நூலாசிரியர் தகவல்களை கொடுத்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என்ற பிஜேபியின் விளம்பரம் உருவான விதம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் இறுதிசெய்து வைத்துள்ள விளம்பர ஏஜென்ஸி என சுவையான தகவல்கள்களும் உண்டு. என்னை இப்புத்தகத்தில் மிகவும் கவர்ந்தபகுதிகள் என்றால் எதிர்மறை விளம்பரம், விதிவிலக்குகள் ஆகிய அத்தியாயங்கள். மிக மிக கவர்ந்த பகுதி என்றால் அது நூலாசிரியரின் கற்பனை வெளிப்படும் எதிர்காலம் என்ற அத்தியாயமே. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் விளம்பரம் வரும் என்று அவர் விவரித்திருப்பது இப்படியெல்லாம் நடக்குமா என்று படிக்கும் போது நினைக்க வைத்தாலும், பின்னர் யோசிக்கும்போது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. பின்னினைப்பாக விளம்பரத்துறையின் பிதாமகன்கள் மற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுச்சேவை,அரசு விளம்பரங்கள், கண்காட்சி, ஈவெண்ட் மானேஜ்மெண்ட்,பிராண்டிங் என இப்புத்தகம் எதையும் விட்டு வைக்கவில்லை. இப்புத்தகத்தின் குறையாக நான் கருதுவது விளம்பரம் என்றவுடன் நம் கண்ணில் தோன்றுவது அழகு மாடல்களே. அவர்களைப்பற்றி சுப்ரமணியம் சுவாமி கட்சிக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அளவுக்கு கூட தகவல் இல்லை என்பது மன்னிக்க முடியாத குற்றம். சத்தியமூர்த்தி பவன் கூட்டங்களுக்கு செல்லும் காங்கிரஸ்காரர்களுக்கு இறுக்கமாக வேட்டி கட்ட தெரிவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் விளம்பர துறைக்கு வர துடிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டியதும்.

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்

நூலின் பெயர் : விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை : ரூ 70.

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

ரகுவம்சம் – அ வெ சுப்பிரமணியன்ராமாயனம்,மஹாபாரதம் என்ற இரண்டு பெயர்ச்சொற்களை கேட்காமல் நம் நாட்டில் யாரும் பள்ளிப் படிப்பை கடக்க முடியாது. செவி வழியாகவும், நாடகங்கள் மூலமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இந்த காப்பியங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. 75 ஆண்டுகளாக திரைப்படங்கள் மூலமாகவும் இவை ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சினிமா எடுக்கப்பட்ட முதல் பத்தாண்டுகளில் ராமாயன,மஹாபாரத உப கதைகள் பெரும் இடத்தைப் பிடித்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இந்த இரண்டு காப்பியங்களின் சிறு சிறு உப கதைகளும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்சி வடிவிலும் சென்றடைந்தன. இரண்டு காப்பியங்களும் விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்பட்டவையாக உள்ளதால் மத ரீதியாகவும் இதை படிப்பவர்கள் தங்கள் சுற்றத்தால் உற்சாகப்படுத்தப் பட்டார்கள்.

இந்த இரண்டு காப்பியங்களில் எது சிறந்தது என்று கேட்டால் பலரிடம் உடனே வரும் பதில் மஹாபாரதம் தான். ராமாயனத்தை விட அதிகமான கிளைக்கதைகளும், கதாபாத்திரங்களும், சுவையான சம்பவங்களும் மஹாபாரதத்தில் தான் அதிகம். ஆனால் இலக்கியசுவை என்று பார்த்தால் கம்பர் எழுதிய ராமாயனத்தின் அருகில் கூட மஹாபாரதத்தால் வர முடியாது. எந்த இலக்கியத்தையுமே அது உருவாகிய மொழியில் படித்தால் தனிச் சிறப்பாக இருக்கும். கிரேக்க காப்பியங்களான இலியட்,ஒடிஸி போன்றவற்றை ஆங்கிலத்தில் படிப்பதைவிட கிரேக்க மொழியில் படித்தால் இன்னும் அதன் இலக்கிய செழுமை புலப்படும்.

மகாகவி காளிதாஸ் எழுதிய சாகுந்தலம்,மாளவீகம், விக்கிரமன்ஊர்வசி ஆகிய காவியங்களையும் ரகுவம்சம் ,குமார சம்பவம் போன்ற பாடல் வடிவில் எழுதப்பட்ட புராணங்களையும், மேகதூதம் போன்றவற்றையும் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் அதை ருசிக்க வேண்டுமென ஆவல் எழுவதுண்டு. இவற்றில் எதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன், ஆனால் வர்ணனைகளைப் படித்ததில்லை. நியு ஹொரைசன் மீடியாவின் ஒரு அங்கமான வரம் பிரிவு வெளியிட்டிருக்கும் ரகுவம்சம் மிக எளிய நடையில் அந்த வர்ணனைகளைத் தருகிறது.

ராமன், அவனுக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், அவன் பின் ஆண்டவர்கள் ஆகியோரது சிறப்புகளை சொல்வதே இந்த ரகுவம்ச காவியம். ரகு வம்சத்தின் முதல் மன்னர் வைவஸ்த மனு, கடைசி மன்னர் அக்கினிவர்ணன். முக்கியமாக திலீபன்,ரகு,அஜன், தசரதன் மற்றும் ராமன் ஆகிய மன்னர்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்த ரகுவம்ச புத்தகத்தின் சிறப்பே இதன் வர்ணனைகள்தான். பல இடங்களில் வர்ணனைகள் நம் கற்பனைகளுக்கு அப்பால் செல்கின்றன. திலீபன் குழந்தைவரம் வேண்டி தன் மனைவி சுதட்சிணையுடன் வசிஷ்டர் ஆசிரமத்தில் தங்கி நந்தினி பசுவுக்கு பணிவிடை செய்தல், திலீபன் மகன் ரகு திக்விஜயம் செய்தல், ரகுவின் மகன் அஜனின் அழகை காண இளம்பெண்கள் ஓடி வருதல், அஜனின் மகன் தசரதன் வேட்டையாட செல்லுதல், புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது கீழே காணும் காட்சியை ராமன், சீதாவுக்கு விளக்கிக் கொண்டு வரும் காட்சி ஆகியவை வர்ணனைகளின் உச்சம் என சொல்லலாம்.

இந்த வம்சத்திற்க்கு ரகுவம்சம் என பெயர் வர, சிறப்பாக ஆட்சி செய்த ரகு காரணம் என இங்கு சொல்லப்படுகிறது. ஆனால் சூரியவம்சத்தை சார்ந்த அரசவம்சம் என்பதால் இப்பெயர் என கர்ணபரம்பரையாக ஒரு செய்தி நம்மிடையே புழங்கி வருகிறது. எது சரி என்பது தெரியவில்லை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத குசன்,அதிதி,நிஷிதன் ஆகியோரைப் பற்றியும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் மிக குறைந்த அளவே.
இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இதில் சொல்லப்பட்டுள்ள உவமைகளே. இந்துமதியின் சுயம்வரத்திற்க்கு அஜன் செல்லுகிறான். நகர மக்கள் அனைவரும் அங்கு வந்திருக்கும் மற்ற அரசர்களை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள். அஜன் உள்ளே நுழைந்ததும் அனைவரின் கண்களும் அவனையே நோக்குகின்றன. எப்படி இருந்தது என்றால் ”காட்டிலிருந்து மதநீரை பெருகவிட்டுக் கொண்டுவரும் யானையைக் கண்டதும், வண்டுகள் பூக்களை எல்லாம் விட்டு விட்டு யானையிடம் செல்வது போல”

ரகுவின் திக்விஜயத்தில் ஒரு காட்சி “ கலிங்க நாட்டை வெற்றிகொண்டபின் ரகுவின் படை காவிரியாற்றின் கரையை அடைந்தது. அஙு சில நாட்கள் டரகு தன் படையுடன் தங்கியிருந்தான். மதநீர் பெருகும் யானைகள் அந்த நதியில் குளித்ததால், அவற்றின் மதநீர் பெருமளவில் ஆற்றின் நீருடன் கலந்துவிட்டது. இதன் விளைவு என்ன தெரியுமா? கடலரசனுக்கு ஆறுகள் எல்லாம் மனைவிகள் ஆகும். காவிரி ஆறு யானைகளின் மதநீருடன் கலந்த கலப்பினால், கடலரசனுக்கு மனைவியின் கற்பு ஒழுக்கத்தின்மீதே சந்தேகம் எழுந்துவிட்டதாம்”

தசரதன் வேட்டையில் ஒரு காட்சி, “ அவன் கையில் ஏந்தியிருந்த வில் அம்பைப் பார்த்து மிரண்டன மான்கள். அவைகளின் அழகிய கண்கள் சஞ்சலமாக அங்குமிங்கும் உருட்டி விழித்த காட்சி, தசரதனுக்கு தன் அந்தப்புற பென்களை ஞாபகம் ஊட்டியதால் அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டான்”

ரகுவம்சத்தை தமிழில் இங்கு மொழிபெயர்த்திருப்பவர் அ வெ சுப்பிரமணியன். மிக மிக சரளமான நடை. சமஸ்கிருதமும், தமிழும் இவருக்கு இரு கண்கள் என்கிறார்கள். இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வராது. ரகுவம்சத்தின் இலக்கிய செழுமையை ருசிக்க வைத்த அவருக்கு நன்றிகள்.

நூலின் பெயர் : ரகுவம்சம்

ஆசிரியர் : அ வெ சுப்பிரமணியன்

பக்கங்கள் : 136

விலை : ரூ 60.

ரகுவம்சம் ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701


நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

December 26, 2008

27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்

பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்

நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்

மாலை 5 மணி

கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர அறிமுகம்

மாலை 5.15மணி

மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன், கேபிள் சங்கர், அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

மாலை 5.45மணி

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
இரவு 7.00 மணி

ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசுவார்.

இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.

இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் கும்மி. கொலைவெறியுடன் எல்லா விஷயங்களும் கும்மப்படும்.


இரவு 8.30 மணி


அவுங்கவுங்க வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு


சந்திப்பில் கலந்துகொள்ள சென்னை வாழ் முன்னாள்,இன்னாள், வருங்கால பதிவர்கள், வாசகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறோம்.

சந்திப்புக்கு அமைப்பாளர்/ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் கிடையாது. வருபவர்கள் அனைவரும் அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர்களே.

மேலதிக விபரங்களுக்கு சந்திப்பு பற்றிய அதிஷாவின் பதிவு

December 06, 2008

பரிசல், நர்சிம் மன்னிக்கவும்- ஒரு சிறுகதை முயற்சி

அம்மா, வெள்ளக்கோட்டை பசங்களோட மேட்ச் இருக்கு, மதியம் ரெண்டு ஆயிடும்மா என்று சொன்னவாறே பேட்டை எடுத்து சைக்கிள் கேரியரில் வைத்தேன். தெருவில் சைக்கிளை உருட்டத் தொடங்கினேன். நான்கு வீடு தள்ளி ரகுவின் வீடு. க்வின் ஆப் தி ஸ்டிரீட் ரம்யா எங்காவது தென் படுகிறாளா என்று நோட்டம் விட்டேன். காணோம். நாம என்ன காதலிக்கவா தேடுறோம், ஒரு ரெப்ரெஸ்சுக்கு கூட கண்ல சிக்க மாட்டேங்கிறாளே என்று சலித்துக்கொண்டென். சின்ன வயதில் இருந்தே பார்த்ததால் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. சுடிதார், நைட்டி எல்லாம் பெண்களுக்கு மிக பாதுகாப்பான உடை என்பது பங்குனி திருவிழாவில் அவளை தாவணியில் பார்த்தபோது தான் தெரிந்தது. பேசுவதற்க்கு தயக்கம். அந்த தெரு வழக்கப்படி அண்ணா என்று சொல்லிவிட்டால் ராத்திரி என் கனவு அரண்மனை அந்தப்புற அழகிகளில் ஒன்று குறைந்துவிடுமே.

ரகுவின் அக்கா, பிரசவத்திற்க்கு வந்தவள் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். வாயை கிண்டி மேட்டரை பிடுங்குவதில் கெட்டி. ரகூ என குரல் கொடுத்தேன். என்னடா இட்லி ஈரல் குழம்பு ஆச்சா மதியத்துக்கு கோலாவா என்றாள்? ஒரு அசட்டு சிரிப்பை சிந்தியவாறே நின்றேன். விடாமல் அவள் ராத்திருக்கு என்ன? என, ஆறு மணிக்கெல்லாம் காலேஜிக்கு கிளம்புறோம், அஸைன்மெண்ட் எழுதனும் என்றேன். அவள் என்னை விடுவதாய் இல்லை. ஏன் இங்க வச்சே எழுதலாமே? எழுதுன ஆளுகிட்ட இருந்து காப்பி அடிக்கப் போறிங்களா என்றாள்?. அதற்குள் ரகு வர தப்பிச்சண்டா சாமி என பெருமூச்சு விட்டேன்.

தெருமுனை தாண்டியதும், என்னடா புதுசா ஆறு மணிக்கு போலாங்கிற என்றான் ரகு. டேய் ஊருக்கு வரும்போது போஸ்டர் பாத்தமேடா, மதுல புது படம் போட்டிருக்காண்டா. பாத்துட்டு ஆஸ்டல் போவோம் என்றேன். ஏண்டா இப்பவேற போறோம், சாயங்காலம் ஒண்ணா என்று புலம்பினான் ரகு. காலைல சாப்பிட்ட, மதியம் பசிக்காதா? சும்மா வாடா என்றேன். அதுக்கில்லை அதை உப்புமாதிரி வச்சுக்கிடலாம், சோறு மாதிரின்னா எப்படி? என அங்கலாய்த்தான். ஒருவழியாய் அவனை சமாதானப்படுத்தி, பேட்டை தெரிந்த டீ கடையில் வைத்துவிட்டு லட்சுமி தியேட்டரை நோக்கி சைக்கிளை மிதிக்கலானேன்.

படம் ஆரம்பித்து சிறுது நேரம் கழித்து, பொறுத்து டிக்கெட் வாங்கி உள்ளே போனோம். தலையை குனிந்தவாறே நடந்து சென்று ஒரு மூலையில் அமர்ந்தோம். இடைவேளையில் தலையை குனிந்து உட்கார்ந்திருந்த ரகுவிடம், இந்தப் படத்துக்கெல்லாம் ஏண்டா இடைவேளை? கேண்டின் காரனுக்காக நம்மளை வெறுப்பேத்துரானுங்க என்றேன். அவன் சிரித்தவாறே, இவ்வளோ பேரு தைரியம்மா எப்படி வெளிய நிக்குராய்ங்க என்றான். விடு நாம மது தியெட்டரில நிக்குரோம்ல அதுமாதிரிதான் என்றேன்.

படம் முடிந்து எல்லோரும் வெளியேறியதும், குனிந்தவாறே வந்த போதுஒரு சீட்டில் பார்த்தேன், ஜானகிராமனின் நளபாகம் புத்தகம். எடுத்துப்பார்த்தால் அது லைப்ரேரி புக். இதப்படிக்கிற ஆளு இங்க ஏண்டா வர்றான் என்றேன் ரகுவிடம். ஏன் நாம வல்லையா என்றான் பதிலுக்கு. விட்டுட்டுப் போன ஆளு கேக்க சங்கடப்படுவான் அதனால் இங்க கொடுத்தா சுட்டுருவாய்ங்க, போயி லைப்ரேரில கொடுப்போம் என்றேன். உனக்கேண்டா இவ்வளோ அக்கறை என்றவனிடம், நம்ம ஜாதிடா, நமளே ஹெல்ப் பண்ணைலைன்னா எப்படி? சிகரெட் குடிக்கிறவன் எவ்வளோ பெரிய லார்டா இருந்தாலும் பிச்சக்காரன் நெருப்பு கேட்டா கண்டிப்பா குடுப்பான். அது மாதிரிதான் இதுவும் என்றேன்

--------------------------------------------------------------------------------------------

சே இன்னைக்கு நாளே நல்லால்ல. பார்த்த படம் வேஸ்ட், அங்க போயி லைப்ரரி புக் வேற மிஸ் பண்ணிட்டோம். சாப்பிடும் போது தேவையே இல்லாம இவகிட்ட ஒரு சண்டை. பையனை வேற அடிச்சிட்டோம். மணி அஞ்சாக போகுது, இவளை எழுப்பி டீ போட சொல்லலாமா, வேணாம் அசந்து தூங்குறா பாவம், இன்னைக்கு நாமளே டீ போட்டு சமாதானப் படுத்துவோம். அட கொடுமையே பால் இல்லையா. டேய் குட்டி, எந்திருடா, அப்பா கடைக்கு போயிட்டு வர்றேன். வீட்டப் பார்த்துக்கோ. ஐயையோ என்ன இது இந்த பசங்க எதுக்கு இங்க? விசாரிக்கிறாய்ங்க? போச்சுடா.

டேய் குட்டி, இந்தா பாரு இப்போ யாராச்சும் வந்து பெல் அடிச்சா என்னானு கேளு சரியா? போடா போ. அப்பா ஏதோ புக்க வச்சுட்டு வந்துட்டீங்களாம். அதோட லைப்ரேரி கார்டாம். போடா போய் ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லி கதவை பூட்டிட்டு வா. சரிப்பா என்று கேள்வியாய் பார்த்தவனிடம் சொல்ல முடியுமா " அவன் என் மானேஜர் பையன், இவன் சரியில்லை கிரிக்கெட்,சினிமான்னு சுத்தி அரியரா வச்சுருக்கான், நீங்க தான் நிறைய படிக்கிறவராச்சே, ஒரு நாள் அனுப்புறேன் அட்வைஸ் பண்ணுங்கன்னு மானேஜர் சொன்னதை".

கரு கொடுத்த பரிசல்

புது கோணம் கொடுத்த நர்சிம்

திட்டுறவங்க இவங்களை திட்டுங்க.

December 05, 2008

1958ன் அபூர்வ படங்கள்

50 ஆண்டுகள் கழித்தும் எல்லோர் மனதிலும் ஆணியடித்தது போல் உட்கார்ந்து கொண்டிருக்கும் படங்களை வேறு எப்படி சொல்லமுடியும்?

நாடோடி மன்னன்

எம்ஜியாரின் வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்த படம். அதுவரை வெற்றிகரமான கதாநாயகனாக மட்டுமே மக்களால் பார்க்கப்பட்ட நிலை மாறி ஆட்சிக்கும் இவர் பொருத்தமானவரே என்னும் நிலைக்கு உயர்ந்த படம். எம்ஜியார் தயாரித்து, இயக்கிய முதல் படம். இப்படத்தை பற்றி எம்ஜியார் சொன்னது “இந்த படம் வெற்றிபெற்றால் நான் மன்னன், தோற்றால் நான் நாடோடி”. கிட்டத்தட்ட 5 படங்களுக்கு தேவையான அளவு காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு எடிட்டிங்கில் ஒரு படமாக்கப்பட்டது. முதல் பாதி கறுப்பு வெள்ளையிலும் இரண்டாம் பாதி வண்னத்திலும் [கேவா கலர்] படமாக்கப்பட்டது. இந்தபடத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் கம்யூனிஸ சிந்தனையை பிரதிபலிக்கும். வில்லன் உங்கள் ஆட்சியில் அப்ப்டியானால் பணக்காரர்களே இருக்கமாட்டார்களா என கேள்வி எழுப்பும் போது எம்ஜியார் சொல்வார் “ பணக்காரர்கள் இருப்பார்கள். ஏழைகள் இருக்கமாட்டார்கள்” என்று. தூங்காதே தம்பி தூங்காதே, சம்மதமா, தடுக்காதே என்னை தடுக்காதே போன்ற பாடல்கள் நிறைந்த படம். சென்ற ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய ஒன்றே போதும் இப்படத்தின் சிரப்பை சொல்ல.

உத்தம புத்திரன்

கமல்ஹாசன் ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்ட படம். ஆனாலும் என்னால் வில்லன் [விக்ரமன்] சிவாஜி கேரக்டரை செய்ய முடியாது என்று சொன்ன படம். இந்த படத்தில் விக்ரமன் சிவாஜியின் மேனரிஷங்களைதான் ரஜினி தன் ஆரம்ப கால படங்களில் பயன்படுத்தினார். இந்த படமே ஒரு ரிமேக்தான். ஒரே மாதிரி உருவ ஒற்றுமை இருந்தாலும் பாடி லாங்வேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் இருவருமே வேறு வேறு நபர்கள் என பார்ப்பவர்களை நம்பவைத்திருப்பார். அதுவம் யாரடி நீ மோகினி பாடலில் பாஸ்ட் பீட்டுக்கு ஏற்ப நடனமும், முகபாவங்களும், புதுவித மேனரிஷமும் என அசத்தியிருப்பார். பார்த்திபன் கேரக்டர் சிவாஜிக்கு இணை பத்மினி. காத்திருப்பான் கமலக்கண்னன் பாடலில் தன் நடன திறமையை காட்டியிருப்பார். இதுதவிர முல்லை மலர் மேலே, உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே போன்ற இனிமையான பாடல்களும் உண்டு. இந்த படம் அப்போதைய காலகட்டத்தில் வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்தும் உண்டு.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

ஹீரோ,ஹீரோயின்,கதை,இயக்கம் இவையெல்லாவற்றையும் வில்லன் பேசும் ஒரு வரி வசனம் மறக்க வைக்குமா? அந்த வசனமே 50 ஆண்டுகளாய் அந்த படத்திற்க்கு அடையாளமாய் இருக்கமுடியுமா? முடியும். திரையையும் தாண்டி, பத்மினி,வைஜெயந்திமாலா இருவரில் யார் சிறந்த நடனமணி என்ற விவாதம் மக்களிடம் அப்போது இருந்தது. பத்மினி முதலில் அரசைவையில் ஆட,அனைவரும் அசர, ஈகோ காரணமாக வைஜெயந்திமாலா நடன உடைக்கு மாறி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி என்க. அப்பொழுது பி எஸ் வீரப்பா சபாஷ் என சொல்லி ஒரு சிறு இடைவெளிவிட்டு சரியான போட்டி என்று சொல்லும்போது நினைத்திருப்பாரா 50 ஆண்டுகளை கடந்தும் இந்த வசனம் நினைக்கப்படும் என. ஆனந்தவிகடன் பாஸ் ஜெமினி எஸ் எஸ் வாசன் தயாரிப்பு. அக்கம்பெனியில் முதலில் பணியாற்றிய நடிகர் ஜெமினி கணேசன் நாயகன். கண்ணும் கண்ணும், ராஜாமகள் ரோஜாமகள் போன்ற இனிமையான பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருந்தார்.

சபாஷ் மீனா

சிவாஜி கணேசன், சந்திரபாபு, சரோஜா தேவி நடிப்பில் பி ஆர் பந்துலு இயக்கிய அற்புத நகைச்சுவைப் படம். இந்த படத்தை சுட்டு பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் பெரு வெற்றி பெற்றவை அமீர்கான்,சல்மான்கான் நடித்த அண்டாஸ் அப்னா அப்னா, கார்த்திக்,ரம்பா,கவுண்டமணி நடித்த உள்ளத்தை அள்ளி தா. தந்தையின் கண்டிப்பு காரணமாக நண்பர் வீட்டுக்கு அனுப்பப்படும் சிவாஜி, தன் நண்பர் சந்திரபாபுவை அங்கு மாற்ரி அனுப்பிவைப்பதில் தொடங்கும் நகைச்சுவை படம் முடியும் வரை தொடரும். நாடக பிரியையான சரோஜாதேவி, சந்திரபாபுவின் நடிப்பிற்க்காக அவரை காதலிப்பதும், அவரை மணக்க வேண்டிய சிவாஜி மற்றொரு பெண்னை காதலிப்பதுமாக செல்லும். இந்த படத்தில் ஏழை ரிக்‌ஷா தொழிலாளியாக சந்திரபாபு நாடகத்தில் பாடி நடிக்கும் பாடல் அருமையான கலா அனுபவம். சிவாஜி தன் காதலியை நினைத்து பாடும் சித்திரம் பேசுதடி பாடலும் மிக அருமையாக இருக்கும்.

சம்பூர்ண ராமாயணம்

ராமன் பிரதர்ஸ் பிறப்பில் தொடங்கி லவ குசா பிறப்புவரை பூரணமாக ராமனின் கதையை கூறும் படம். ராமனாக தேவுடு என் டி ஆர், பரதனாக சிவாஜி கணேசன், குணசித்திர வேடத்துக்காகவே பிறந்த சித்தூர் நாகையா, டி கே பகவதி நடித்த படம். பத்மினி, வரலட்சுமி, எம் என் ராஜம் ஆகியோரும் உண்டு. அப்போதைய கிராம திரையரங்குகளில் இருந்த [70 களில் நான் பார்த்த போது] ப்ரொஜெக்டர் கார்பன் ராடுகள் ஐந்து ரீல்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் தன்மை உடையவை. எனவே ஐந்து ரீல்கள் முடிந்ததும் படத்தை நிறுத்திவிட்டு பின் ஐந்து நிமிடம் கழித்து திரையிடுவார்கள். இதற்க்கு பாகம் பிரித்தல் என்று பெயர். இரண்டு ப்ரொஜெக்டர் உள்ள திரையரங்குகளில் இந்த பிரச்சினை இல்லை. எனவே கிராமங்களில் சாதரணமாக ஒரு படத்திற்க்கு மூன்று இடைவேளை இருக்கும். சம்பூர்ண ராமாயணம் 22-23 ரீல்கள் கொண்ட பெரிய படம். இதற்க்கு நாலு இடைவேளை விடுவார்கள். மொதப்பாகத்தில கூனி மேல அம்பு விடுவான், இரண்டாம் பாகத்தில வில்லை உடைப்பான் என்று படம் பார்த்து விட்டு வருபவர்கள் பேசிக்கொள்வார்கள். வால்மீகி,கம்பர் காண்டம் பிரித்ததை போல இங்கே ஆப்ப்ரேட்டர்கள் பாகத்தை பிரிப்பார்கள். வைகுண்ட ஏகாதேசிக்கு பார்க்க ஏற்ற படம். இரண்டாம் ஆட்டம் 11 மணிக்கு ஆரம்பிக்கும் படம் மூணரை அளவில் முடியும். பேசிக்கொண்டே வீடு திரும்ப நாலு மணிக்கு மேலாகிவிடும். அப்படியே குளித்துவிட்டு சொர்க்க வாசலை பார்க்க போய் விடலாம்.

மாலையிட்ட மங்கை

கண்ணதாசன் தயாரித்த படம். மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாட்டுகளை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக அவர் தயாரித்த படம் என்று சொல்வார்கள். டீ ஆர் மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரசிக்கப்படும். பாடலுக்கு முன்னால் வரும் சில்லென்று பூத்த சிறு நெருஞிக் காட்டினிலே என்னும் விருத்தம் எப்படி உருவானதென்று இந்த வார வாரமலரில் கூட ஒரு கட்டுரை வந்திருக்கிறது. படம் தோல்வி என்றாலும் பாடல்களுக்காக னம் நினைவில் இருக்கும் படம்.

December 01, 2008

சில தொலைபேசி உரையாடல்களும் ஒரு பாடலும்

மாப்ளே, உங்க ஏரியாவுல ஏதாச்சும் ரூம் பாரேண்டா

அந்த ரூமுக்கு என்னடா?, நல்ல தண்ணி, மானேஜரும் உனக்கு குளோஸ்ஸு, மெஸ்ஸுலயும் உன்னையை சிறப்பா கவனிப்பாங்களே?

கூட தங்கியிருந்த எல்லோருக்கும் கல்யாணம் ஆயிருச்சு. இப்ப எல்லாம் புது பசங்களா இருக்காங்க, லோன்லியா பீல் பண்றண்டா

அதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கிறது.

வீட்டிலயும் தொல்லை பண்றாங்க. இப்பக்கூட ஒரு பொண்ணு போட்டோ அனுப்பியிருக்காங்க, நல்லா செட்டில் ஆனப்புறம் பண்னலாம்னு பார்க்கிறேன்.

பாத்துடா, பஸ்ல போறப்ப பக்கத்து சீட்டில பிளஸ் டூ சங்கோஜமில்லாம வந்து உக்காற வரைக்கும் தள்ளிப்போட்டுறாத.

நல்லா செட்டில் ஆகாட்டி நம்ம தோழர் வழிதான், சரிடா நான் வச்சுர்றேன்.

............................

தோழரே, வர்ற ஞாயிறு எங்க களப்பணி? சாரதா முதியோர் இல்லத்துக்கு போகணும்னு சொன்னீங்களே


இந்த வாரம் வேணாம் சிவா, காய்ச்சலா இருக்கு.

நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகட்டுமா?

வேணாம்பா, நான் பார்த்துக்கிறேன். ஆமாம் போன வாரம் ஒரு பொண்ணு போட்டோ வந்துருக்குன்னு சொன்னியே, ஏதும் பிராகிரஸ் இருக்கா?

கல்யாணம் வேணாம்னு பார்க்குறேங்க

இப்படி நினைச்சுதான்யா நான் கல்யாணம் பண்ணாம விட்டுட்டேன். இப்ப பாரு எனக்கு கல்யாணம் ஆயிருந்தா மொணங்கிக்கிட்டேயாவது பொண்டாட்டி கஞ்சி வச்சு தருவா, பையன் இருந்தா, திட்டிக்கிட்டேயாவது மெடிக்கல் ஷாப் போயி குரோசின் வாங்கிட்டு வருவான். பிரண்ட்ஸ் எவ்வளோ பேர் இருந்தாலும் கல்யாணம் பண்னாட்டி அனாதைதான்யா.

அந்த பொண்ணு எவ்வளோ கற்பனையோட இருக்கோ? அதுக்கு ஏத்த மாதிரி நாம சம்பாதிக்கணும், பிள்ளை குட்டிய நல்ல படியா வளர்க்கணும். நான் வாங்குற சம்பளத்துல?


இங்க பாருய்யா, வரப்போறவ ஒன்னையா பர்ஸ்ட் சாய்ஸ்லயா சம்மதிச்சுருப்பா?, வேற வழி இல்லாமத்தான், அதனால தைரியமா இருய்யா. பிள்ளைய நல்லவனா வளரு. நல்லவங்க ரேசியோ அதிகமாகுறது வர்ற தலைமுறைக்கு நல்லதுதான.

சரிங்க தோழர், உடம்ப பார்த்துக்கங்க.

.....................................


ஏம்பா போட்டோ அனுப்பிச்சு ஒரு வாரம் ஆச்சு. பதிலயே காணோம். உங்க வீட்டிலயும் அவங்க வீட்டிலயும் ஜாதகம் பார்த்துட்டாங்க. உங்க அப்பா நீ சொன்னா முடிச்சிரலாம்கிறாரு. அவுங்க வீட்டிலயும் ஓக்கே மாதிரிதான் தெரியுது. பொண்ணு சம்மதம்தான் அங்கயும் வெயிட்டிங். ரெண்டு பேரும் பார்த்து பேசிறீங்களா? பொண்ணு பார்க்கிறதுன்னா எல்லாரையும் கட்டி இழுக்கணுமே?

ஆமாங்க, குடும்பத்தோட போய் பார்த்து சரி வரல்லைன்னா மனக் கஷ்டம். நான் தனியாவே பார்த்துற்றேன்.

எழுதிக்க, இது அந்த பொண்ணு செல்லு நம்பரு........, இது ஆபிஸ் நம்பரு....... நேர்ல போய் பார்த்து பேசு.

ரொம்ப சந்தோஷம், பார்த்துட்டு நான் கூப்பிடுறேங்க

..............................


ஹலோ, வசந்தி

ஆமா, நீங்க

நான் சிவா, தரகர் சொல்லியிருப்பாரே

ஆமா ஆமா, நல்லாயிருக்கீங்களா?

பைன். நீங்க?

நல்லாயிருக்கேன்.

உங்களை பார்த்து பேசலாம்னு

ஸாரிங்க, இந்த வாரம் ஆடிட் நடக்குது. தினமும் எட்டு ஆயிடும்,
வீக் எண்ட் பார்க்கலாமா?

ஒகே.


.......................


ஹலோ ..................... ஆபிசா?

ஆமங்க

வசந்தின்னு இருப்பாங்களே?

அவங்க மீட்டிங்ல இருக்காங்க, நீங்க யாருங்க?

அவங்க சொந்தக்காரர். என்னா லஞ்ச் டைம்ல கூட மீட்டிங்?

ஆடிட் தம்பி. எல்லோரும் போயிருக்காங்க. நான் சுவீப்பரு.
உங்க பேரச் சொல்லுங்க, வந்ததும் சொல்லிர்ரேன்.

நான் அவங்க தூரத்துச் சொந்தம். பரவாயில்லமா நானே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப பேசறேன். கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் போது எதுக்கு தொல்லை பண்ணிக்கிட்டு?

ஆமா தம்பி, தங்கமான பொண்ணு, நல்லா வேலை பார்க்கும். என்னா கல்யாணம்தான் தள்ளிப் போயிட்டே இருக்கு.

நம்ம கைல என்னமா இருக்கு?

ஆமா தம்பி, அது கூட சொல்லும். நான் என்ன இளவரசியா? குதிரைல வந்து ராஜா தூக்கிட்டுப் போக, எனக்கு வர்றவன் பஸ்ஸுலயோ, பைக்கிலயோ வந்துக்கிட்டிருப்பான். சிக்னல்ல மாட்டிக்கிட்டிருப்பான். ஆனா எப்படியும் வந்துருவான்னு.

சரிம்மா, நான் வச்சுர்றேன்.

........................


ஹலோ, ஆடிட் முடிஞ்சிருச்சா?

நாலு மணிக்கு முடிஞ்சதுங்க. இப்பதான் வீட்டுக்கு போக பஸ் ஸ்டாப் வந்துருக்கேன்.

எங்க ஆபிஸ்ல திடீர்னு ஹைதராபாத் போகச் சொல்லிட்டாங்க. இன்னைக்கு கிளம்புறேன். அடுத்த வாரம்தான் வரமுடியும்.

சரிங்க, அப்போ பார்த்துக்கலாம்.

நான் நேர்ல பார்த்தா என்ன பேசுவனோ, அதை இப்பவே சொல்லிர்றேனே. பரவாயில்லையா?

அதனால என்னங்க? சொல்லுங்க

என் சம்பளம்........ இவ்வளோதான். சொத்தும் ஏதும் இல்ல. சிகரெட்,தண்ணி பழக்கம் கிடையாது. புக் நிறைய படிப்பேன். கொஞ்சம் சோம்பேறி, பெரிய ஆளா வரணும்னு இதுவரைக்கும் நினைப்பு வந்ததில்ல. இதுக்கு மேல உங்க விருப்பம். யோசிச்சு பதில் சொல்லுங்க

...................

சரிங்க நான் வச்சுர்றேன்.

.......................

ஹலோ, கிளம்பீட்டிங்களா

ஆமா, இப்போ ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன்.

உங்க செல்லுல எஃப் எம் இருக்குங்களா?

ம்

பிக் எஃப் எம் இப்போ கேளுங்களேன்

!!!!!!!!!!!!!!! சரி

ஹேப்பி ஜர்னீ

...................................


பிக் எஃப் எம்மா? என்ன புரோகிராமா இருக்கும்!

இந்தா இருக்கு, ஏதோ பாட்டு பாடுது, என்ன பாட்டு


என் கல்யான வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில்
பூமாலை நான் சூடுவேன்.