Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

December 05, 2019

அடுப்பு லட்சுமி


மனநல வளர்ச்சி குன்றி இருப்பது, மனச்சிதைவுக்கு ஆளாகி இருப்பது என்பது அவர்களின் தவறல்ல சூழலின் தவறே என்பது புரியாத வயதில் நானும் அப்பாதிப்புக்கு உள்ளானோரை இகழ்ந்தே வந்திருக்கிறேன். நான் சிறுவனாக இருந்த 1980களில் எங்கள் ஊரில் அப்படிப்பட்டோர் சிலர் இருந்தனர். மத்திய வயதில் இருந்த டப்பா என்று அழைக்கப்பட்ட ஒருவர். அவர் பாட்டிற்கு சிவனே என்றிருப்பார். யாராவது டப்பா என்றால் கோபப்பட்டு அடிக்க ஓடி வருவார். அவரால் விரைவாக ஓடிவர முடியாது என்பதால் சிறுவர்கள் தூர நின்று டப்பா என்று கத்திவிட்டு ஓடிவிடுவார்கள். நானும் அப்படி பலமுறை அவரை ரண சித்திரவதை செய்திருக்கிறேன். 

அவரைத் தவிர இன்னும் இரண்டு பெண்மணிகள் அப்படி பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். ஒருவரை கிறுக்கு லட்சுமி என்றும் இன்னொருவரை அடுப்பு லட்சுமி என்றும் அழைப்பார்கள். இருவருமே தலைமுடியெல்லாம் சிக்குப் பிடித்து, கந்தலாடை உடுத்தி, உடல்முழுவதும் கரி பூசப்பட்டது போல் கறுத்து இருப்பார்கள். யாராவது கொடுப்பதை சாப்பிட்டு விட்டு இருப்பார்கள். கிறுக்கு லட்சுமியை சிறுவர்கள் ஏதாவது துன்புறுத்தினால் பெருங்குரலெடுத்து கத்துவார். சிறுவர்கள் அங்கிருந்து அகலும்வரை தன்னால் முடிந்தவரை கதறுவார். அப்போது பெரியவர்கள் யாராவது பார்த்து பையன்களை விரட்டி விடுவார்கள். 

அடுப்பு லட்சுமி என்பவர் மிக அமைதியானவர். ஊரில் உள்ள குட்டிச்சுவர்களில் கரிக்கட்டையால் அடுப்பு படங்களை வரைவார். சுவரில்லாத இடம் எனில் மண்ணில் சிறு குச்சியால் நேர்த்தியாக அடுப்பு படங்களை வரைவார். யாராவது அடுப்பு லட்சுமி என்றாலோ எதையாவது தூக்கி வீசினாலோ கண்ணீர் உகுத்து அழுவார், சிறு சிறு கேவல்கள் மட்டுமே வெளிப்படும். 

நான் ஏழாவது படிக்கும் போது நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சிறுவர் புத்தகங்களில் தொடங்கி பத்தாம் வகுப்பில் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். கு அழகிரிசாமி போன்றோரின் சிறுகதைத் தொகுப்பகளையும் அப்போது படித்தேன். அதிலிருந்துதான் மனச்சிதைவுக்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழுந்தது. தெருவில் என் அடுத்த செட் பையன்கள் மனச்சிதைவுக்கு உள்ளானோரை துன்புறுத்துவதை தடுக்கத் துவங்கினேன். 

இந்த சமயத்தில் அடுத்த மாவட்டத்தைச் சேர்ந்த நூலகர் ஒருவர் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வந்தார். நான் பள்ளி விட்டு வந்ததும் மாலை ஏழு மணி வரை நூலகத்தில் இருந்துவிட்டு, நூலகம் மூடும் போதுதான் கிளம்புவேன். ஏழே கால் மணி பேருந்தை நூலகர் பிடித்தால்தான் அவர் ஊருக்கு செல்ல வசதி. இல்லையேல் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் அடுத்த பேருந்துக்கு. நான் அவர் நூலகத்தை விரைவாகப் பூட்ட உதவுவேன். பூட்டிய உடன் பேருந்து நிறுத்தம் வரை உடன் செல்வேன். எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்குத்தான் அவர் முதலில் கொடுப்பார். இப்படியாக எங்கள் பழக்கம் அதிகரிக்கத்துவங்கியது.

ஒரு நாள் நானும் அவரும் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் போது அவர் அடுப்பு லட்சுமியைப் பார்த்தார். அவர் மன வேதனைப் பட்டதை முகம் சொல்லியது. அருகிலிருந்த கடையில் இரண்டு பன்களையும் ஒரு டீயும் வாங்கிக் கொடுத்தார். லட்சுமி பன்னை மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாகச் சென்று விட்டார். 

அடுத்த நாள் அவரிடம், யார் சார் இவங்க? என்னாச்சு எனக்கேட்டேன். லட்சுமியின் இயற்பெயர் செல்வ நாயகி. மிகப்பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டு அண்ணன்கள். இவர் கடைசி. செல்வ நாயகியின் தாயார் அவரின் சிறுவயதிலேயே மார்பக புற்றுநோயால் இறந்து விட்டார். பொதுவாகவே பெண் என்றால் தந்தைக்குப் பிடிக்கும், கடைசிப் பிள்ளை என்றால் இன்னும், தாயை இழந்த பிள்ளை என்றால் இன்னும். எனவே அத்தனை செல்லத்தையும் செல்வ நாயகியின் மேல் கொட்டி வளர்த்தார். கணவனை இழந்த தன் அக்காவையும் அவர் தன் வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். 

செல்வ நாயகி வகுப்பில் முதல் மாணவி. அவரின் தந்தைக்கு தன் மகளை எப்படியும் ஐ ஏ எஸ் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை. அதற்கேற்ப செல்வ நாயகியும் எப்பொழுதும் புத்தகமும் கையுமாகவும், பொது அறிவுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என பரிசுகளை குவிப்பதுமாகவும் இருந்திருக்கிறார். சமையல் கட்டுப்பக்கமே வந்தது கிடையாது. அவரின் அத்தை, தன் தம்பியிடம், சமையல் பழகிக்கச் சொல்லுடா என்று பலமுறை வற்புறுத்துவார். ஆனால் செல்வ நாயகி படித்தால் போதும் என மறுத்து விடுவார்.

ஆனால் செல்வநாயகி, படித்த நேரம் போக அத்தைக்கு ஒத்தாசையாய் சமையல் கட்டில் வேலை செய்வார். ஒரு முறை தன் தந்தைக்கு குளிக்க போட்ட வெந்நீர் பாத்திரத்தை அவசரத்தில் துணியில்லாமல் எடுக்க, கை பொத்துப்போய் சிரமப்பட்டார். இதனால் அடுப்புக்கிட்ட மட்டும் போகாத, மத்த வேலை பார் என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் செல்வநாயகியின் மூத்த அண்ணனுக்கு திருமணமானது. ஒரு நாள் செல்வநாயகியின் அத்தையும் அண்ணியும் சமைத்துக் கொண்டிருக்கும் போது, சமையலறை ஈரம் வழுக்கி அத்தை கீழே விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக தலையில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் செல்வ நாயகிக்கு சமையலறைக்குள் செல்வது என்றாலே பயம் எடுக்கத் துவங்கியது.

அக்காவின் மரணம், செல்வ நாயகியின் அப்பாவை மிகவும் பாதித்தது. நாம தெம்பா இருக்கும் போதே மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்று எண்ண வைத்தது. செல்வ நாயகியின் கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினார். அந்தஸ்துக்கு ஏற்ற இடமாகப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார். செல்வ நாயகி புகுந்த வீட்டில் அவரின் மாமியார், ஓரகத்தி இருவரும் நன்கு சமைப்பவர்கள். அதனால் இவர் மேல் வேலைகள் மட்டும் செய்து கொடுத்து சிறிது காலம் தள்ளினார்.

 ஓரகத்தி இரண்டாவது பிள்ளைக்காக கருவுற, சமையல் வேலைகளில் பாதி இப்போது செல்வநாயகிக்கு வந்தது. புதிதாகச் செய்வதால் அவர்களின் வேகத்திற்கு இவரால்   ஈடு கொடுக்க முடியவில்லை. என்னத்த பிள்ள வளர்த்தாங்க, தாயில்லா வீட்டுல பெண்ணெடுத்தது தப்பாப் போச்சு என ஆளாளுக்கு கரித்துக் கொட்ட சமையலறைக்குள் நுழைய இன்னும் பதட்டமானார். கணவர் கொஞ்சம் அனுசரனையாக இருந்தாலும் அந்நாட்களில் மாமியாரை மீறி என்ன செய்து விட முடியும்? செல்வ நாயகி யாரையும் எதிர்த்துப் பேசி பழகாதவர். அதற்கான வாய்ப்பே கிடைக்கப் பெறாதவர். மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி அடிக்கடி பிரமை பிடித்தாற்போல் இருக்கத் துவங்கினார். மாமியார், தன் தந்தையை ஏக வசனத்தில் பேசுவது அவருக்கு பெரும் மன உளைச்சலை அளித்தது. இதனால் அவருக்கு ஒரு முறை கருச்சிதைவும் ஏற்பட்டது. அதனால் உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

என்னால் தனியாகப் பார்க்க முடியவில்லை. இன்னொரு மருமகளும் கைக்குழந்தையோட இருக்கா என செல்வ நாயகியின் பிறந்த வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்துவிட்டார் மாமியார். இப்படி வீட்டுல வந்து உட்கார்ந்துக்கிட்டா எப்படி அடுத்த பையனுக்கு பொண்ணு பார்ப்பீங்க என்பது போல் ஜாடை மாடையாக செல்வநாயகியின் அண்ணி பேச மனமுடைந்து போனார் செல்வநாயகியின் தந்தை.

கூடப்பிறந்த அக்கா, கணவனை இழந்து வந்த போதும் அவருக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை, நம்பி வந்த மனைவியையும் நோயில் இருந்து காப்பாற்ற முடியவில்லை, மகளும் மன வேதனையில் அல்லல் படுகிறாள் என்ற கவலையில் இரவு உறங்கியவர் காலையில் கண்விழிக்க வில்லை. இன்னும் மனமுடைந்து போனார் செல்வ நாயகி. சமையல் அறைக்குள் நுழைந்தாலே அத்தை, அப்பா இருவரின் ஞாபகம், புகுந்த வீட்டாரின் தூற்றல்கள் மனதுக்குள் சுழல அப்படியே உட்கார்ந்து விடுவார்.
என் பையனுக்கு இன்னொரு ஆளா வந்து காலத்துக்கும் சமைச்சுப் போட முடியும்? போய் சரியாகிட்டு வா என மாமியார் துரத்த, அண்ணன்கள்,அண்ணி புகுந்த வீட்டிற்குத் துரத்த, செல்வ நாயகியின் மனச்சிதைவு அதிகமாகிக்கொண்டே போனது. கணவனின் பாராமுகம் அதை அதிகப்படுத்தியது. ஒரு மழை நாளில் செல்வ நாயகி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தாள். உடலெல்லாம் சேறுடன் ஒரு குட்டிச் சுவரின் அருகில் உட்கார்ந்து அடுப்பு படத்தை வரையத்துவங்கியவள் அடுப்பு லட்சுமியாக அழைக்கப்படலானாள்.

இதைக் கேட்டதிலிருந்து, செல்வநாயகியைப் பார்க்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்கத் துவங்கினேன். தினமும் ஒரு வேளை எப்படியும் சாப்பாடு கொடுத்து விட வேண்டும் எனத் தேடிச் சென்று கொடுக்கத்துவங்கினேன். ஒரு தீபாவளி அன்று வீட்டில் செய்த பலகாரங்களுடன் தேடிச் சென்று அக்கா சாப்பிடுங்க என்று சொல்லி கொடுத்தேன். ஒரு சில மாதங்களில் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு அவர் சென்று விட்டார். 

இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். அதன்பின் வேலை, திருமணம், சொந்தத்தொழில் எனப் போய் நொடித்து மிகுந்த சிக்கலில் இருந்தேன். மீண்டும் மாத சம்பளத்திற்கு வேலைக்குப் போக துவங்கியிருந்தேன். ஒரு நாள் கையிருப்பாக ஒரு ரூபாய் கூட இல்லை. தெரிந்தவர் எல்லோரிடமும் கடன் வாங்கியாகி விட்டது. அடுத்த வாரம் சம்பளம் வந்து விடும். வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. இன்றைய இரவு கடந்து விட்டால் கூட போதும், நாளை வீட்டில் இருந்த இரண்டு பானைகளை கடையில் விற்று தப்பித்து விடலாம் என்ற நிலையில் இருந்தேன். மகன் பசியாக இருந்தது தான் கஷ்டமாக இருந்தது.

திடீரென கதவைத்தட்டும் சத்தம். பயந்து கொண்டே கதவைத்திறக்க பால்யகால நண்பன். சிறு வயதிலேயே வேறு ஊருக்குச் சென்ற குடும்பம். அப்புறம் தொடர்பேயில்லை. பக்கத்து ஊர்ல தாண்டா மாமியார் வீடு, விசேசத்துக்கு வந்தேன். குமார தற்செயலாப் பார்த்தேன். அதாண்டா அவன் சைக்கிள நமக்கே வாடகைக்கு குடுப்பானே, அவன் தான்.உன்னையக் கேட்டேன். இங்க இருக்கேனு சொன்னான். விசேசத்துக்குத்தான் கூப்பிட முடியலை. சாப்பாடாவது கொண்டு வருவோம்னு கொண்டு வந்தேன் என இரண்டு வாளி நிறைய விசேஷ சாப்பாட்டை கொடுத்து விட்டுச் சென்றான்.
மகனுக்கு முதலில் சாப்பாடை வைத்து விட்டு, நானும் மனைவியும் சாப்பிடும் போது, மனைவி என்னிடம், நானும் கல்யாணம் ஆனதில இருந்து பார்க்கிறேன், எவ்வளோ பிரச்சினை இருந்தாலும் நீங்க ஒரு வேளை கூட பட்டினியா இருந்ததா ஞாபகமே இல்லை. அதெப்படி? என்றார்.
ஒரு புண்ணியவதிக்கு கொஞ்ச நாள் நான் சாப்பாடு கொடுத்திருக்கேன். அவங்க கொடுத்த வரம் அது என்றேன்.

May 25, 2017

அளவு ஜாக்கெட்

எங்கள் ஊர் ஸ்டைல்கிங் டெய்லரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அனேகமாக எல்லா ஊரிலும் இந்தக்கதை ஏதாவது ஒரு பெயரில் புழக்கத்தில் இருக்கும். வேறொன்றுமில்லை. ஸ்டைல்கிங் டெய்லரிடம் சட்டை தைக்க அளவுகொடுத்துவிட்டு வெளியே வந்த ஒருவர் நீண்ட நாள் சொத்து தகராறில் இருந்த பங்காளியை கடை வாசலில் சந்தித்தார். வாய்த்தகராறு முற்றி, கோபத்தில் கடைக்குள் புகுந்து அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து பங்காளியின் வயிற்றில் குத்திவிட்டார். பதினாலு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து வெளியேவந்தவர் சட்டை தைக்க கொடுத்தது ஞாபகம் வந்து அதை கேட்கப் போனார். உடனே கடைக்காரர் அஞ்சு நிமிசம் பொறுங்கண்ணே இந்தா காஜா வச்சா முடிஞ்சுச்சு என்றாராம்.

அப்போது இருந்த பெரும்பாலான டெய்லர்கள், கஸ்டமர் நான்கைந்து முறை வந்து கேட்டால் தான் துணியை டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற பாலிஸியை வைத்திருந்தார்கள். தீபாவளியும், பள்ளிச்சீருடை தைக்கும் காலமும் தான் சிற்றூர்களில் பீக் பீரியட்கள், இந்த காலங்களில் இவர்களைப் பிடிக்கவே முடியாது. ஸ்கூல் திறக்கப் போகுது, யூனிபார்ம் தைக்கக் குடுத்து நாலு வாரமாச்சு என்னான்னு கேட்டு வாடா என்று வீட்டில் சொன்ன உடன் அப்படியே கிளம்பி அங்கே போய் ஒரு அட்டெண்டன்ஸை போட்டுவிட்டு, அங்கு ஒரு பாட்டையும் கேட்டுவிட்டு வரும்வழியில் அஞ்சு பைசாவுக்கு ஒரு கல்கோணாவை வாங்கி வாயில் அதக்கிக் கொண்டே வருவதை பெரும்பாலான பையன்கள் செய்திருப்பார்கள்.

தீபாவளி நேரங்களில் தான் இன்னும் விசேஷம். முதல் நாள் இரவு வரை துணியைக் கொடுத்திருக்க மாட்டார்கள். காலை நாலு மணிக்கு நல்லெண்ணெய் தேய்த்த உடம்போடு அரை ட்ராயரை மட்டும் போட்டுக்கொண்டு, குளிச்ச உடனே புதுசு போடணுமாம், சீக்கிரம் குடுங்க என்று கடைக்கு நாலுபேர் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, சில டெய்லர்கள் கல்யாணத்திற்கு தைக்க கொடுத்த துணியைக்கூட தாமதப்படுத்தி விடுவார்கள். ஊரிலேயே மண்டபம் இருந்தால் கூட பரவாயில்லை. ஒரு நச்சுப்பிடித்த ஆளை கடைக்கு அனுப்பி இரவில் கூட வாங்கிவிடலாம். வெளியூர் கோவில், மண்டபம் எனில் முதல்நாள் மதியமே கிளம்ப வேண்டி வரும். அப்போது மாப்பிள்ளை தனக்கு நம்பிக்கையான ஒரு ஆளிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியிருக்கும். எப்படியாச்சும் முகூர்த்தத்துக்கு வாங்கிட்டு வந்து சேந்துற்ரா மாப்பிள்ள என்று கெஞ்சிவிட்டுப் போவார்கள்.

ரெடிமேட் சட்டை,பேண்ட்கள் அவ்வளவாக மார்க்கெட்டைப் பிடிக்காத 80களில் இந்த டெய்லர்கள் இப்படி ஒரு தனி ராஜாங்கமே நடத்தி வந்தார்கள். கடை வீதியில் டெய்லர் கடைகள் தான் முக்கிய லேண்ட்மார்க்காக இருக்கும். டீன் ஏஜ் மற்றும் கல்லூரி பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் இடங்களில் ஒன்றாகவும் டெய்லர் கடைகள் இருந்தது. கேசட் பதிவு செய்து தரும் மியூசிக்கல்ஸ், வாடகை சைக்கிள் கடை, சலூன், விளம்பர தட்டி போர்டுகள் எழுதும் கலைக்கூடங்கள், லெண்டிங் லைப்ரரி போன்ற இடங்களில் தங்கள் டேஸ்ட்க்கு ஏற்பவும், கடைக்காரருடனான கெமிஸ்டிரி மற்றும் நண்பர்கள் அமைப்பிற்கு ஏற்பவும் சேர்ந்து அரட்டை அடிப்பார்கள். கடைக்காரர்களும், புது கஸ்டமர்கள் கிடைக்க இவர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக இருப்பதால் வரவேற்கவே செய்வார்கள். கூட்டமாக இருக்கும் நேரங்களில், சாப்பிடப் போகும் நேரங்களில் கூடமாட ஒத்தாசை, பாதுகாப்பு என இந்த அரட்டை செட்டால் கடைக்காரர்களுக்கும் லாபமுண்டு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு அரட்டை குரூப்பில் சங்கமமாகி டாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் லெண்டிங் லைப்ரரி மனதுக்குப் பிடித்த இடமாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் அங்குதான் உட்கார்ந்திருப்பேன். என் முதல் சாய்ஸ் கேசட் கடை தான். அங்கு எனக்குப் பிடிக்காத குரூப்கள் ஆக்ரமித்து இருந்தன. டெய்லர் கடை எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத இடம். இந்த நேரத்தில் தான் மதுரையில் தொழில் கற்ற ஒருவர் “ஜெண்டில்மேன் டெய்லர்ஸ்” என்ற பெயரில் கடை துவங்கினார். அட்டகாசமாக தைத்த அவர் ஓரிரு மாதங்களிலேயே பிரபலமாகி நம்பர் ஒன்அந்தஸ்தை அடைந்தார். அக்ரஹாரத்தில் பெரும் தொப்பையுடன் மத்திய முப்பதுகளில் மூல நட்சத்திரத்தால் பேச்சிலராக இருந்த ஒரு பேங்க் மேனேஜருக்கு இவர் தைத்துக் கொடுத்த பெல்ட் போடாமலேயே நிற்கும் பிட்டான பேண்டும், தொப்பை அசிங்கமாகத் தெரியாத சட்டை பிட்டிங்கும் பிடித்துப் போய்விட்டது. டெய்லரின் ராசியோ என்னவோ உடனடியாக அவருக்கு திருமணமும் நிச்சயமானது. உடனே அவர் செய்ததுதான் டாக் ஆப் தி டவுன் சரி சரி ஊரின் பேச்சானது. அதுவரை எங்கள் ஊரில் கல்யாண மாப்பிள்ளைக்கு டி டி ஆர் கோட் என அழைக்கப்படும் கோட்டையே கல்யாணத்திற்கு அணிவார்கள், கறுப்பு சுபகாரியத்திற்கு ஆகாது என்று எல்லோருமே நீல நிற கோட்தான். இவர் திரி பீஸ் கோட்,சூட் வாங்க முடிவெடுத்தார். பெரும்பாலும் ரெடிமேட் கோட் தான் வாங்குவார்கள். இவர் துணி எடுத்து தைக்கச் சொல்லி ஜெண்டில்மேன் டெய்லரிடம் ஆர்டர் கொடுத்து விட்டார். எங்கள் ஊரில் முதன் முதலில் டெய்லர் கடையில் தைக்கப்படும் கோட் சூட் என அதற்கு ஒரு அந்தஸ்தும் கிடைத்தது.

சென்னை சென்று துணி எடுத்து வந்தார்கள். டெய்லரிங் சார்ஜ் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வேலைகளை எல்லாம் ஒரு வாரம் நிறுத்தி இதிலேயே கவனம் செலுத்தினார்கள், பல கேட்லாக்குகளை வேறு மதுரையில் இருந்து வாங்கி வந்தார்கள். அங்கு டாப் அடிக்கும் பையன்களும் அப்படி என்னதாண்டா ஆயிரம் ரூபாய் கூலி அளவுக்கு தைக்கப் போறாங்க என ஆவலுடன் அங்கேயே குழுமிவிட்டார்கள். சினிமா பாக்ஸ் டிக்கெட் மூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அல்லவா? பொதுவாக இம்மாதிரி கடைகளில் டீ வாங்கும் போது அங்கு இருப்போர்க்கும் சேர்த்துதான் வாங்குவார்கள். ஆயிரம் ரூபாய்ல பாதிகாசு டீக்கே போயிரும் போல இருக்கு என கிண்டலாக சொல்வார்கள். இம்மாதிரி கொண்டாட்டமான மனநிலை இருக்கும் இடங்களில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அங்கு நம்மை வித்தியாசம் காட்டாது ஏற்றுக்கொள்ளும் ஆட்களும் தேவை என்பதால் பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பேன். என் நண்பன் ஒருவன் அந்த ஜெண்டில்மேன் டெய்லர் டாப் குரூப்பில் இருந்தான். அவன் அப்பப்ப இங்கிட்டு வந்துட்டுப் போடா என்பான்.

ஆண்களுக்கான டெய்லர்கள் இப்படி என்றால் பெண்களுக்கான டெய்லர்கள் ஒரு ரகம். அப்போது பெண்களுக்கான டெய்லர் என்றாலே இரண்டே வேலைகள் தான். ஜாக்கெட் தைப்பது, சேலைகளுக்கு ஓவர்லாக் அடிப்பது மட்டும். ஜாக்கெட்டும் இந்தக்காலம் போல் ஜன்னல், நிலை, வாசல்படி இத்யாதிகள், அலங்கார தோரணம் போல் கயிறுகள், ஊசி பாசி மணிகள் இல்லாமல் சாதாரணமாகத்தான் இருக்கும். அந்த டெய்லர்களும் கொஞ்சம் மந்தமான ஆட்களாகத்தான் இருப்பார்கள். அம்மாதிரி இருக்கும் ஆட்களிடம் தான் ஊர்ப் பெண்களும் ஜாக்கெட் தைக்க குடுப்பார்கள், தியேட்டரில் கூட பெண்கள் பக்கம் முறுக்கு, கடலை மிட்டாய் விற்க கொஞ்சம் விவரமில்லாத, மந்தமான பையன்களைத்தான் தியேட்டர்காரர்கள் அனுமதிப்பார்கள், ஒரு ரூபா, ரெண்டு ரூபா கணக்கில விட்டாலும் பரவாயில்லை. நம்ம சொந்தம், ஊர்கார பொண்ணுங்க வந்து போற இடம். அவங்க நிம்மதியா பார்த்துட்டுப் போகணும்யா என்பார்கள்.

இந்த லெண்டிங் லைப்ரரியில் பொழுதுபோகாத நேரத்தில் உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னேன் அல்லவா? அதனால் எங்கள் தெருப்பெண்களுக்கு மாலைமதி, ராணிமுத்து வாங்கித்தரும் ஏஜண்டாகவும் இருந்தேன். இரண்டு தெரு தள்ளி என் ஒன்று விட்ட அத்தையின் வீடு இருந்தது. அவரின் கணவர் தாசில்தார். மூன்று பெண்கள். இரண்டிரண்டு வயது இடைவெளியில். லலிதா, பத்மினி, ராகினி என பெயர் சூட்டியிருந்தார். அந்த திருவாங்கூர் சிஸ்டர்ஸ் போல இந்த தெற்குத்தெரு சிஸ்டர்ஸும் ஊரில் பிரபலம். அவர்களும் என்னிடம்தான் புத்தகம் வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். விசேஷ காலங்களில் ஈசன் டெய்லர்கிட்ட ஜாக்கெட் கொடுத்திருக்கோம் வாங்கி வா என்பார்கள். நாலைந்து முறை அலைய வேண்டி இருக்கும். ஜெண்டில்மேன் டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்தா அரட்டை அடிச்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாமே இங்க நிக்கிறோமே என துக்கமாக இருக்கும். பொதுவாக இம்மாதிரி கடைகளில் ஆட்களை அண்டவிடமாட்டார்கள். உட்கார சேர் கூட இருக்காது. நான் புலம்பியதைக் கேட்ட என் நண்பன் ஒரு யோசனை சொன்னான். டேய் நீ அடுத்த தரம் அவங்க வீட்டுக்குப் போகும் போது அளவு ஜாக்கெட் குடுத்து தைக்கிறீங்களே? மொதோ ஜாக்கெட் எப்படி தச்சீங்கன்னு கேளு. அடுத்து உன்னைய கிட்டவே சேர்க்க மாட்டாங்க, அப்புறம் இந்த லைப்ரரி,லேடீஸ் டெய்லர்லாம் விட்டுட்டு எங்க கூட டாப்புக்கு வந்திடலாம் என்றான். நானும் அதை நம்பி நடுப்பெண்ணான பத்மினியிடம் அவ்வாறு கேட்க ம்ம். எங்க அக்கா ஜாக்கெட் போட்டுப் பார்த்து அளவு சொல்லி விட்டோம் என்று இயல்பாக சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டார்கள்.

மாமா டெபுடி கலெக்டராகி வேறு ஊருக்கு மாற்றலாகி அவர்கள் சென்றுவிட்டார்கள். மூவருக்கும் திருமணம் முடிந்து சென்னை, பெங்களூர் என செட்டில் ஆகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் பத்மினியை சந்தித்தேன். மகள் கல்லூரியில் படிப்பதாகவும் உன் பையன் என்ன செய்கிறான் என்று கேட்டாள். எட்டாம் வகுப்பு என்று சொல்லிவிட்டு நீண்ட நாட்களாக மனதில் தங்கியிருந்த கேள்வியைக் கேட்டேன். ஆமா, அன்னைக்கு நான் வேணுமின்னேதான் அப்படி கேட்டேன். ஏன் கோபப்படலை என்று?. ஏண்டா ஒரு பொண்ணுக்குத் தெரியாதா ஆணோட பார்வை? அதுவுமில்லாம நீ வில்லங்கமாவா கேட்ட ஏதோ வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி அதைக் கேட்ட. எத்தன நாள் அதை வச்சி உன்னைய கிண்டல் அடிச்சி சிரிச்சிருக்கோம் தெரியுமா எனச் சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டி நகன்றாள்.

January 15, 2017

அங்கீகாரம்

திங்கட் கிழமை காலை வேளையில் முடி திருத்தம் செய்யப் போவது

தீபாவளி, பொங்கலுக்கு புதுப் படங்கள் வெளியாவதற்கு முதல் நாள் திரையிடப்பட்டிருக்கும் ஓடித் தேய்ந்த படத்தை மதியக் காட்சி பார்ப்பது

பரபரப்பான உணவகம், தேநீர் விடுதி தவிர்த்து, அதன் அருகேயிருக்கும் ஆளரவமில்லா கடையைத் தேர்ந்தெடுப்பது

உறவிலும் நட்பிலும் பெரிய முக்கியத்துவம் பெறாதவர் விசேஷங்களுக்கு முன்னரே செல்வது
கைராசியான மருத்துவரை தவிர்ப்பது

அமாவாசை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் வாங்கச் செல்வது

என நீளும் என் பழக்கங்கள்

யோசித்துப் பார்த்தால் ஊரில் சிறு வயதில் எல்லோரும் விரும்பிக் குளிக்கும் படித்துறையை விட்டு ஆழமில்லா, நீர் போக்கும் குறைவான ஆற்றுக்கரையிலேயே குளித்திருக்கிறேன்.

யாரும் விரும்பிச் சேராத டியூசனில் சேர்ந்திருக்கிறேன்

அந்த வரிசையில் இப்போது ஞாயிறு அன்று பணிக்குச் செல்வதும் சேர்ந்து விட்டது

ஞாயிறன்று பணிக்கு வருபவரின் மீது எந்த மேலாளரும் கடுஞ்சொற்களை பிரயோகிப்பதில்லை

வார நாட்களில் பயமுறுத்தும் எந்த கோப்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் மென்மையாகவே நடந்து கொள்கிறது

குறைவாகச் சமைப்பதால் நன்றாகச் சமைக்கும் அலுவலக உணவகத்தின் சமையல்காரர் வாஞ்சையுடன் பரிமாறுவார். யாரிடமும் பகிரமுடியாமல் இருப்பவற்றை இறக்கி வைப்பார்.

மற்ற நாட்களில் எடுக்கவே அச்சமூட்டும் அலுவலகத் தொலைபேசி கூட கனிவாகவே பேசுகிறது

நேரடிப் போட்டியில் இந்த இடங்களிலெல்லாம் உனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதால்தானே இந்த பழக்கமெல்லாம்? என புத்தி கேட்கிறது

அங்கீகாரம் வேண்டா மனது மனிதனின் மனதல்லவே என பதிலளிக்கிறது மனது

November 17, 2016

சதுரம்

மூன்று உலகங்களில் இரண்டாவது உலகமான பொருள் உலகத்தில் அன்று குறை தீர்ப்பு நாள். மூவுலகத்தின் தலைமை அதிகாரி அன்று குறை கேட்க வந்திருந்தார். அவ்வளவு சாதாரணமாக எல்லாம் அவரை உலகின் குடிமக்கள் சந்தித்து விட முடியாது. அவரவர் உலகின் தலைமை அதிகாரியின் ஒப்புதல் வேண்டும். இரண்டாவது உலகமான பொருள் உலகிலும் சரி, மூன்றாம் உலகமான ஆற்றல் உலகிலும் சரி தலைமை அதிகாரிகள் சில கட்ட ஆற்றுப்படுத்தலுக்கு பின்பு அனுமதி வழங்கி விடுவார்கள். முதல் உலகமான அறிவுலகில், நாமே பிறருக்கு குறை தீர்க்க வேண்டியவர்கள், நாம் குறை தீர்க்க இன்னொருவரிடம் போவதா என அந்த தலைமை அதிகாரி மறுத்து விடுவார்.

பொருள் உலகில் இருந்த வடிவங்கள் நாட்டைச் சேர்ந்த சதுரத்திற்குத்தான் பெரும் மனக்குறை. இரு பரிமாண வடிவங்களில் சிறந்த வடிவமாக வட்டத்தைச் சொல்லி, இந்த மூவுலகங்களின் பயனாளி உலகமான பூமியில் எல்லோரும் உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். நானும் செவ்வகமும் இரண்டாம் நிலையில் இருந்தோம். ஆனால் இப்போது பூமியில் செவ்வகத்தையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள், என்னை மதிப்பாரில்லை என.

முதலில் சக வடிவமான முக்கோணத்திடம் புலம்ப ஆரம்பித்தது. இங்கிருந்து அந்த பூமியைப் பார். நீக்கமற செவ்வகமே நிறைந்திருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிகபட்சம் காட்சியாகப் பார்ப்பது எல்லாமே செவ்வகமாகவே இருக்கிறது. கையில் இருக்கும் அலைபேசி, வேலை செய்ய உபயோகிக்கும் கணித்திரை, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சி, திரையரங்கத் திரை என எல்லாமே செவ்வகம் தான்.

வீட்டின் கதவு, சாளரம், உபயோகிக்கும் மேஜை, படுக்கும் கட்டில், வாகனங்கள் என நீக்கமற செவ்வகமே ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.

விளையாட்டு மைதானங்களைப் பார்த்தாலும் கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன், கூடைப்பந்து என எல்லாமே செவ்வகங்கள் தான். செஸ் விளையாட்டில் மட்டும்தான் என் உபயோகம். அதை இம்மாதிரி ஆரவாரத்துடன் யார் பார்க்கிறார்கள் என்றது.

ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து போடும் தொட்டில் முதல், இறுதியில் அவன் உறங்கும் கல்லறை வரை செவ்வகம் தான். விளம்பரப் பலகைகள், வீட்டின் அறைகள், பீரோ என எங்கெங்கெலாம் மனிதன் புழங்குகிறானோ அங்கெல்லாம் செவ்வகமே என அங்கலாய்த்துக் கொண்டது.

முக்கோணத்திற்கு இதில் பெரிய குறையொன்றும் இல்லை. என்னை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். கணித சமன்பாடுகள் இருக்கும் காலம் வரை என் பயன்பாடு இருந்து கொண்டுதான் இருக்கும். உனக்கு மட்டும் என்ன? எத்தனை இடங்களில் நீ பயன்பட்டுக் கொண்டு இருக்கிறாய்? என சதுரத்திடம் கேட்டது.

நீ மூன்று பக்கம் உடையவன், அதனால் உனக்கு நான்கு பக்கக் காரனான செவ்வகத்திடம் போட்டி இல்லை. ஆனால் நானும் அவனும் ஒரே இனம். என்னை விட அவன் அதிகளவு பயன்படுவதை என்னால் தாங்க முடியவில்லை என சதுரம் முக்கோணத்திடம் கூறியது.
இது போல தொடர்ந்த நச்சரிப்பால் பொருள் உலக தலைமை அதிகாரி, சதுரத்திற்கு குறை தீர்க்கும் நாளில் ஒரு வாய்ப்பு வழங்கினார். மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் நேர்காணலுக்குச் சென்றது சதுரம்.

தன் மன வருத்தங்களையெல்லாம் அவரிடம் கொட்டியது சதுரம். நான் இருவருக்கும் சமமாக கூட முக்கியத்துவம் கேட்கவில்லை. செவ்வகப் பயன்பாட்டில் பாதியாவது எனக்கு கிடைக்குமாறு செய்யலாமே என வேண்டியது. அறிவுலகத்தில் சொல்லி, என் வடிவத்தில் மிகப் பிரபலமாகும் இரண்டு விளையாட்டுக்கள், என் வடிவத்தில் சிறப்பாக இயங்கும் சாதனங்கள் என ஏதாவது உருவாக்கி என் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாமே என கேட்டது சதுரம்.
பொறுமையாக சதுரத்தின் தரப்பை கேட்டுக் கொண்ட மூவுலகத்தின் தலைமை அதிகாரி, சிறிது யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார். வட்டம் ஆதியில் இருந்து மனிதர்களால் நீக்கமற உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. அதில் கூர்மையான முனை ஏதும் இல்லை. யார் அதை அணுகினாலும் காயப்படுத்தாது. எங்கும் யாருடனும் உரசல் இல்லாமல் நழுவிவிடும். அதனாலேயே அதை எங்கும் உபயோகப்படுத்தி வந்தார்கள்.

செவ்வகம் இருவேறு அளவுகளைக் கொண்டது. மனிதர்கள் இப்போது ஒவ்வோர் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற காலகட்டம். ஒருவரிடத்தில் ஒரு விதமாகவும், இன்னொரு இடத்தில் இன்னொரு விதமாகவும் தங்கள் முகங்களைக் காட்ட வேண்டி இருக்கிறது. எனவே அவர்களின் மனதிற்கு நெருக்கமான செவ்வகத்தை இப்போது அதிக அளவில் உபயோகிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ எல்லாப் பக்கமும் ஒரே அளவு கொண்டவன். இப்போதைய மனித மனம் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி நடக்க தயாரில்லை. உன் கட்டுக் கோப்பு அவர்களை பயமுறுத்துகிறது. எனவே அவர்கள் உன்னை தவிர்க்கிறார்கள். மேலும் இன்னும் சிக்கலான மனநிலைக்கு அவர்கள் மாறும் போது சமமில்லா பக்கம் கொண்ட முக்கோணம், ஐங்கோணம், அறுகோணம் என்றெல்லாம் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை அமைத்துக் கொள்வார்கள் என்று முடித்தார்.

சதுரம் ஆதங்கத்துடன் மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் கேட்டது, “அப்படியென்றால் எதிர்காலத்தில் என் உபயோகம்?”.

நீ மட்டுமல்ல, எல்லோரிடம் ஒரே மாதிரி நடக்கும் எந்த அறிவுக்கும், பொருளுக்கும், ஆற்றலுக்கும் பூமியில் தேவை குறைந்து கொண்டேதான் போகும். எல்லோரிடமும் ஒரே மாதிரி நடக்க கூடியவர்களால் மட்டுமே நீ பயன்படுத்தப்படுவாய். அது தான் இன்றைய நியதி என பதிலளித்தார்.

January 28, 2016

ராதிகா

மதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள்.

சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்கவே பாவமா இருந்துச்சு என்றாள். பாவம் என்ன செய்யுறது என்று சொல்லியபடியே வெளியே கிளம்பினேன்.

பிறந்த ஊர் என்றாலும் நாங்கள் இப்போது இருக்கும் பகுதி அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. எதிர்ப்படுபவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கால் போனபடி நடந்து கொண்டிருக்கும் போது ராதிகாவின் நினைவு வந்தது.

ராதிகா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த பெண். சுற்று வட்டாரத்தில் பிரபலமான ரைஸ்மில் ஒன்றை ராதிகாவின் அப்பா நடத்தி வந்தார். நானும் ராதிகாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆறாம் வகுப்பின் போது அவள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறினோம். அவளது அண்ணன் அவளைவிட ஏழு வயது மூத்தவன், அவன் அப்போது வெளியூர் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் தந்தையும் அவரது பங்காளி வகையறாக்களும் பெரிய ஆசாடபூதிகள். வீட்டு விலக்கான பெண்கள் கையால் தண்ணீர் வாங்கிக்கூட குடிக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டிலேயே கொல்லைப்புறம் அருகே ஒரு பெரிய அறையையே அந்த நாட்களில் தங்குவதற்காக கட்டி வைத்திருப்பார்கள். தட்டு டம்ளர் முதல் போர்வை தலையணை வரை கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் அறையைப் போலவே அது இருக்கும். அந்த அறையில் உபயோகப்படுத்தவென்றே ஒரு ட்ரான்ஸிஸ்டர் கூட பிரத்யேகமாக அங்கே இருக்கும்.

எனவே ராதிகாவின் அம்மா வீட்டு விலக்கான நாட்களில் ராதிகாவின் அண்ணன் தான் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக்கொண்டு வருவான். அவன் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னால் அந்த வேலை என் தலையில் விழுந்தது. கொண்டு செல்லும் பாத்திரங்களை வைத்தே ரைஸ்மில் காரருக்கா என ஹோட்டலில் கேட்டு பார்சல் தருவார்கள். ராதிகா சகஜமாக, எங்க அம்மா, லாங் என்று சொல்வாள். இது சில வருடம் நீடித்தது, எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில் ராதிகா பெரிய பெண் ஆனாள். அதன்பின் எனக்கு அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள், டியூசனில் இருந்து வீடு திரும்பியவுடன், அம்மா என்னிடம் “ரைஸ்மில் காரம்மா வந்திருந்தாங்க, ஏதோ நோட்ஸ் எல்லாம் ராதிகாவுக்கு வேணுமாம்” என்றார். அவள் தந்தை அவளை டியூசனுக்கு அனுமதிப்பதில்லை மேலும் மாத விலக்கான நாட்களில் அவள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் என்னுடைய டியூசன் நோட்ஸை கேட்டிருந்தாள். என் தங்கையின் மூலம் நோட்ஸ் அவள் வீட்டிற்குச் சென்றது.

இந்நாட்களில் ராதிகாவின் அண்ணன் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வேறுவழியில்லாமல் கடைகண்ணிக்குச் செல்ல என்னையே மீண்டும் அவர்கள் நம்பவேண்டியிருந்தது. தொடர்ந்து ராதிகாவிற்கும் பிளஸ்2 நோட்ஸ், ரெக்கார்டு நோட் என என் தயவு பெரிதும் தேவைப்பட்ட்து. தெருப்பையன்கள் எல்லாம் அவளுக்கு உன்மேல லவ்வு என்றெல்லாம் ஏத்தி விடுவார்கள். சொந்த ஜாதியில் இருக்கும் ரைஸ்மில் வேலைக்காரர்களை கூட வீட்டில் அனுமதிக்காத ராதிகாவின் அப்பா என்னை அங்கே புழங்க விட என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என்பதால் நான் அதை சிரித்துக் கொண்டே கடக்க பழகியிருந்தேன்.

பிளஸ் 2 முடித்ததும் கல்லூரிக்கும் அனுப்ப ராதிகாவின் தந்தைக்கு இஷ்டமில்லை. ஆனால் அவரின் உறவினர்கள், நம்ம ஆட்கள்ல இப்ப படிச்ச பிள்ளைகளைத்தான் கட்டுறாங்க எனச் சொல்லி கல்லூரிக்கு அனுப்ப வைத்தனர். எங்கள் ஊரில் கல்லூரி இல்லாததால் வெளியூர் கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்,அங்கே விடுதியில் தங்கிப் படித்தாள். இன்னொரு கல்லூரியில் நானும்.

ராதிகா இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவள் அண்ணனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து சம்பந்தம் வந்தது. அவள் அப்பா கூட, முதல்ல பொண்ணு கல்யாணம் அப்புறம் தான் பையனுக்கு என்று பிடிவாதம் பிடித்துப் பார்த்தார். ஆனால் அவரின் உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தின் போது பச்சைப் பட்டுப்பாவாடையும், மாம்பழக் கலர் தாவணியும், ஒற்றை ஜடையுடன், நீண்ட மெல்லிய டாலர் செயினுடன் வளைய வந்த அவளைக் கண்ட உறவினர்கள் எங்க பையனுக்குத்தான் உங்க பொண்ணைக் கொடுக்கணும் என்று சண்டையே போட்டார்கள். பந்தி பரிமாறுதலில் ஈடுபட்டிருந்த என்னை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தாள் என நண்பர்கள் சொல்ல அதை வழக்கம் போல நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ராதிகாவின் அண்ணன் சென்னையில் செட்டில் ஆகியிருந்தான். நானும் படிப்பு முடிந்து சென்னையில் ஓராண்டு போராடி ஒரு வேலையில் அமர்ந்தேன். என்ன இன்னும் ராதிகாவின் திருமண செய்தி வரவில்லையென யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஊருக்கு வந்தபோது, ஸ்வீட் வாங்கிக் கொண்டுபோய் வேலை கிடைத்த விபரத்தை ராதிகா வீட்டாரிடம் சொன்னேன். வீடே களையிழந்து கிடந்த்து. அம்மாவிடம் கேட்ட போது அதெல்லாம் உனக்கெதுக்கு என்று கடிந்து கொண்டார்,

பின்னர் விஷயம் தெரியவந்தது. ராதிகாவிற்கு மாதவிலக்கானது மூன்று, நான்கு நாட்களில் முடியாமல் ஒரு வாரம் பத்து நாள் வரை நீண்டதாம். அதனால் உடல்நிலை தளர்ந்து போனாளாம். தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

இன்னும் ஒரு வருடம் போனது. ராதிகாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் இளைத்துப் போயிருந்தாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது லாங்,லாங்கர், லாங்கஸ்ட் ஆயிடுச்சுடான்னு விரக்தியாகச் சிரித்தாள்.

இந்த விசயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்ததால் அவர்களுக்கு ஈடானவர்கள் யாரும் சம்பந்தம் பேசவரவில்லை. வசதி குறைவானவர்களோ மாசம் பாதிநாள் அவ படுத்துக்கிட்டானா யாரு வேலையெல்லாம் பார்க்கிறது, தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க முடியுமா என ஒதுங்கிக் கொண்டார்கள். ராதிகாவுக்கு 25 வயது ஆன நிலையில் அவர் அம்மா தெருவில் ஒருநாள் எந்த ஜாதின்னாலும் பரவாயில்லை, கேட்டா முடிச்சிடலமுன்னு இருக்கோம் என்று ஜாடை மாடையாக்கூட சொல்லிக் கொண்டிருந்தாராம்.

அந்நேரம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தோம். லோன் மூலம் வீடுகட்டி முடித்திருந்த நிலையில் நாங்கள் இப்போதிருக்கும் வீட்டிற்கு மாறியிருந்தோம். அதன்பின் தங்கை கல்யாணம், என் கல்யாணம், பிள்ளைகள், சென்னை வாழ்க்கை என அந்த தெருவில் இருந்தே ஒதுங்கி விட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் ராதிகாவின் நினைவுகளால் மனம் அலைந்தது. அவள், ஹாலில் மாட்டியிருந்த தன் அண்ணனின் திருமணத்தில் எடுத்த போட்டோவை வெறித்தபடியே என்னிடம் பேசியது ஞாபகம் வந்தது. மாடி காலியிடத்தில் நிலை கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்த போது தங்கை வந்தாள். சில நிமிடம் மௌனமாய் இருந்த அவள், நீ அவள கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஏன் நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை? என்றாள். உங்கண்ணன் மகனான்னு கேட்டு பாசமா தலையத் தடவிக் கொடுத்தா, உன் பேரைச் சொல்லும் போது அவ கண்ணுல இன்னும் காதலப் பார்த்தேன் என்றாள்.

இல்ல, அப்ப உன் கல்யாணம்தான் எனக்கு பெரிசாப் பட்டுச்சு. பணத்துக்காக வேற ஜாதியில கல்யாணம் பண்ணிட்டான்னு இல்ல ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு உன் புகுந்த வீட்டுல நீ பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு நெனச்சேன் என்றேன். கண்கள் பனிக்க என்னைப் பார்த்தபடி இறங்கிப் போனாள் என் தங்கை. இரவில், மனைவி, என்னிடம் திவ்யா சொல்றதுல்லாம் உண்மையா? எனக் கேட்டாள்.

சேச்சே, சும்மா அவள திருப்திப்படுத்த சொன்னேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே என் மனைவி இந்த உயரம் இருக்கணும், முகம் இப்படி இருக்கணும், இந்தக் கலர் இருக்கனும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். அப்படியே நீ இருந்த, அதனால தான் உன்னைய கட்டிக்கிட்டேன் என்றேன். காதலாய் பார்த்தாள்.

காலையில் வாக்கிங் போகும் போது அப்பாவும் உடன் வந்தார், என்னடா திவ்யா சொன்னது உண்மையாடா? உனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தா சொல்லி இருக்கலாமேடா? என்றார். நான் உடனே அப்பா நீங்க எங்களுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க, நோயாளி பொண்ணக் கட்டி உங்களுக்கு இன்னும் சிரம்ம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதப் பத்தியே யோசிக்கலை என்றேன். என்னை பெருமையாகப் பார்த்தன அவர் கண்கள்.

வீடு திரும்பி, குளிக்கும் போது, பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த என் முகம், ஆளுக்கு தகுந்த படி பொய் சொன்னாயே, காமுகா, மாதம் பாதி நாளு தூரமாகிரவளால எவ்ளோ சுகம் கிடைச்சிடும்னு கணக்குப் பண்ணித்தான அவாய்ட் பண்ணுன? எனக் கேட்க குற்ற உணர்ச்சி தாங்காமல் ஷவருடன் சேர்ந்து அழத்தொடங்கினேன்.

December 21, 2015

தேனூர் தேவதைகள்

அலுவலகப் பேருந்தில் மாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அலைபேசி ஒலித்தது. “இறங்கி, மெடிக்கர் வாங்கிட்டு வாங்க. தீபா ஸ்கவுட் கேம்ப்புனு போயி ஊர்ப்பட்ட பேனை தலையில ஏத்திக்கிட்டு வந்துருக்கா” என வீட்டில் இருந்து கட்டளை வந்தது. கலீக், என்ன ஜி “வரும் போது அரை கிலோ புளி வாங்க வரவுமா”? என கேட்டார். இல்ல ஜி, பேன் மருந்து என்று சொல்லும்போதே என் மனம் தேனூர் நினைவுகளில் மூழ்கத் தொடங்கியது.

தேனூரில் நாங்கள் இருந்த தெருவில் முதல் முதலாக நுழைந்த போது, வாயடைத்துப் போனேன். முக எழிலும் உடல் வனப்புமாய் நிறைய பெண்கள் அந்த தெருவில் இருந்தார்கள். மாநிறத்திற்கும் வெள்ளை நிறத்திற்கும் இடையில் நட்ட நடுவாக ஒரு நிறம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிறத்தில், இடுப்பளவு தொங்கும் அடர்த்தியான முடியோடு இருந்த அவர்களைப் பார்த்ததும் என் தந்தைக்கு மாறுதல் உத்தரவு வழங்கிய அதிகாரிக்கு பூசலார் போல் மனதிலேயே கோவில் கட்டத் தொடங்கினேன்.

அப்போது கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்ததால் வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை பின் மதியம், தெருவில் கண்ட காட்சி சற்று வினோதமாக இருந்தது. எல்லாப் பெண்களும் வாசல்படியில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஐந்தாறு வாசல்படி இருக்கும் வீடுகளில் கீழ்படியில் ஒரு பெண் உட்கார்ந்திருக்க, அடுத்தடுத்த மேல் படிகளில் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து ரிலே ரேஸ் போல பேன் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்கடுத்த வாரத்தில் ஒரு வியாபாரி சைக்கிளில் பேன் சீப்பு, ஈர்வளி என விற்றுக்கொண்டு வந்தார். தெருவில கோலமாவு விப்பாங்க, தயிர் விப்பாங்க இது என்னடா ஈர்வளி வித்துக்கிட்டு வர்றாங்க என ஒரே ஆச்சரியம்.

பின்னர் தான் தெரிந்தது, அந்த தெரு தேவதைகளெல்லாம் என்ன வைத்தியம் செய்தாலும் முப்போகமும் பேன் விளையும் தலையைக் கொண்டவர்கள் என்று. வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது, சோற்று கத்தாழை ஜெல்லை தலையில் பூசிக் கொள்வது, வெங்காயமும், பூண்டும் சேர்த்து அரைத்த சாறை தலையில் தடவிக்கொள்வது, மருதாணிப் பூவை சூடிக் கொள்வது என அவர்கள் செய்யாத கை வைத்தியமே கிடையாது.

என்ன செய்தாலும் பேனை மட்டுப்படுத்தத்தான் முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை. அவர்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை இதற்கே ஒதுக்கியதால், மற்ற வேலைகளை எல்லாம் பயங்கர சுறுசுறுப்பாக முடிக்க பழகி இருந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருந்த என் அக்கா இதையெல்லாம் கேட்டு தேனூராம், பேனூர்னு வச்சிருக்கலாம் என கமெண்ட் அடித்தார்.

அந்த வாரம் முடி வெட்டுவதற்காக சலூனுக்குப் போன எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு முன் முடி வெட்டிக்கொண்டிருந்த ஒருவருக்கு நல்ல வெள்ளைத்துணியைப் போர்த்தி இருந்தார்கள். அதில் முடியோடு சேர்ந்து பேனும் கொத்துக் கொத்தாக விழுந்து கொண்டிருந்தது தெரிந்தது. எங்கே நமக்கும் இது தொற்றி விடுமோ எனப் பயந்து “டீ சாப்பிட்டு வர்றேன்” என நழுவி விட்டேன். 20 கிலோ மீட்டர் தள்ளிப் போய் இன்னொரு ஊரில் முடிவெட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

எங்கள் வீட்டு வேலைக்கு உதவியாக இருந்த அக்கா ஒருநாள் கூடையில் நான்கைந்து மாப்பிள்ளை விநாயகர் சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்த என் அக்கா, என்ன அது? எனக் கேட்டார்.
அந்தச் செம்பருத்தி வீட்டு ரெண்டாவுது பொண்ணு தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்கப் போகுது அதான் என்றார். என்னடியம்மா இது, அதுக்கெதுக்கு சோடா என என் அக்கா கேட்க,
அந்தப் பொண்ணுக்கு அவ்வளவு அடர்த்தியான முடி, வாரம் பூரா கத்தாழை, வெங்காயம்னு தடவுதா அது பூராம் சிக்குப் பிடிச்சு போயிடும். நல்லா சீயக்காய வச்சு அவங்க அம்மாவும் அக்காவும் அரக்கி தேச்சு விடுங்க. அதுல கிறங்கி சில சமயம் எல்லோருக்குமே மயக்கம் வந்துரும். அதான் முன்கூட்டியே சோடா வாங்கி வச்சிக்கிருவாங்க, அந்த சீயக்காயிலயும் என்னென்னவோ போட்டு கலந்து அரச்சு வச்சிருப்பாங்க, அப்படி ஒரு காட்டமா இருக்கும் என்றார்.

பக்கத்து வீட்டு பாட்டி ஒரு முறை அம்மாவிடம், ”லங்கையில சீதாவப் பிடிச்சு வச்சிருந்தாங்கள்ள, அப்ப அனுமார் தீ வச்சு நிறைய ராட்சசிசங்க இறந்துடுச்சாம், சண்டையிலயும் நிறைய செத்துருச்சுகளாம். ராமர் ஜெயிச்சு சீதாவ கூட்டிக்கிட்டுப் போறப்ப, அதுகள்ளாம் வழி மறச்சு, இந்த சீதானாலதான் எங்களுக்கு இந்த நிலம, இவளப் பழிவாங்குனாத்தான்  எங்க ஆத்மா சாந்தியடையும்னு சொல்ல, ராமரு, என் பொண்டாட்டிய  எதுவும் செய்ய உடமாட்டேன்னு சொல்ல, அப்புறம் அந்த ராட்சசிங்கள்ளாம் கூடிப் பேசி, சீதா அம்சத்தோடு பூமியில பிறக்குற பொம்பளைங்க தலையில நாங்க இறங்குற வரத்தக் குடுன்னு கேட்டு வாங்குச்சுகளாம். அதான் எங்க தலையில எல்லாம் இம்புட்டு பேனு என்றாராம்.

இதை அம்மா, அக்காவிடம் சொல்ல, “இந்தப் பேன் தலைக்காரிகளுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா”? லாஜிக்காப் பார்த்தாலும் சூர்ப்பனகைனால தான ராட்சசிங்களுக்கெல்லாம் கஷ்டம் வந்துச்சு, அப்பன்னா இந்த குரூப் சூர்ப்பனக அம்சம் என சொல்லிச் சிரிக்க, எனக்கு கோபம் வந்தது.
உனக்கு எலிவால் மாதிரி முடி. அதான் பொறாமையில இப்படி சொல்லுற என கோபப்பட்டேன்.

என் கோபத்துக்குக் காரணம் கவிதா. எப்படி லட்சக்கணக்கான அழகிய சேலைகள் துணிக்கடையில் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு, அதில் ஒரு சேலை மட்டுமே பிடித்தமானதாக இருக்குமோ, அப்படி அந்த தெரு தேவதைகளில் எனக்குப் பிடித்தவள் கவிதா. பேன் அரித்தால் கூட ஒயிலாக தலையைச் சாய்த்து, நளினமாக இடதுகை ஆட்காட்டி விரலால் பேனை அழுத்தி, கட்டைவிரலை சப்போர்ட்டுக்கு கொண்டு சென்று அதை எடுத்து, பரதநாட்டிய அபிநயம் பிடிப்பது போல இரு கட்டை விரல் நகங்களுக்கு இடையில் வைத்து அந்தப் பேனை சொர்க்கத்துக்கு வழி அனுப்பி வைப்பாள்.

கவிதாவின் பின்னால் சில நாட்கள் சுற்றிப் பார்த்தேன், அவள் கண்டுகொள்ளவேயில்லை. அரவிந்த்சாமி பாம்பே பட உயிரே பாட்டுக்கு அணிந்திருந்த புளூ ஜீன்ஸ், பனியனை பல கடைகள் அலைந்து திரிந்து வாங்கி அணிந்து தெருவை அளந்தேன். பின்னர்தான் தெரிந்தது, அரவிந்த்சாமி மாதிரியே நான்கைந்து பேர் அவள் பின்னால் சுற்றுவது. இது வேலைக்காகாது என மனதை தேற்றிக் கொண்டு மீண்டும் நல்லவன் முகமூடியை அணிந்து கொண்டேன்.


ஸ்டாப்  வந்திருச்சு ஜி, என்ன யோசனை என கலீக் எழுப்ப, இறங்கி மெடிக்கர் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். “இப்படியா பொண்ண கவனிக்காம விடுவாங்க, ஒரு நாள்தான் கேம்புல பக்கத்துக படுத்திருக்கா, வண்டி வண்டியா பேன இவ தலையில ஏத்திட்டா  என அவர்கள் குடும்பத்தையே என் மனைவி திட்ட ஆரம்பிக்க, “விடு, ட்ரை பன்ணாமயா இருந்திருப்பாங்க, பாவம்” என்றபடி சட்டையைக் கழட்ட ஆரம்பித்தேன்.

July 10, 2015

எழுதியதால் ஆன பயன்

இப்போது போல செமெஸ்டர் பேட்டர்ன் இல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் இயர் பேட்டர்ன் இருந்த காலம். அப்போது முதலாமாண்டு மாணவர்கள் வகிடெடுத்து சீவி, சுருட்டி விடாமல் முழுக்கை சட்டை அணிந்து, கழுத்து வரை பட்டன் போட்டு, இன் செய்யாமல், மேல் பாக்கெட்டில் எதுவும் வைத்துக் கொள்ளாமல்,ஹவாய் செப்பல் அணிந்து, மஞ்சப்பையில் நோட்புக் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும், மாணவிகள் சேலை அணிந்து, ஒற்றை ஜடை போட்டு வரவேண்டும் என்றும் ராக்கிங் சட்டம் அமலில் இருந்தது. மேலும் சீனியர்களை “சார்” என்றுதான் அழைக்க வேண்டும். இந்த ராக்கிங்கானது சரியாக கல்லூரி ஆண்டுவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் ”வெல்கம் பார்ட்டியுடன்” முடிவுக்கு வரும். 

இந்த ராக்கிங்கில் முதலாமாண்டு மாணவிகளின் பயோ டேட்டாவை சீனியர்களுக்கு வாங்கிக் கொடுப்பது என்று ஒரு வைபவம் உண்டு. என்னை “லட்சுமி பிரியா” என்னும் மாணவியிடம் வாங்கித் தரச்சொன்னார்கள். நானும் தயங்கியபடியே சென்று “சீனியர் சார் உங்க பயோ டேட்டா கேட்டாரு” என்று கேட்டேன். யோசிக்காமல் ஒரு ஏ4 ஷீட்டை எடுத்து சரசரவென்று எழுதி நீட்டினாள். அதை வாங்கி வரும்போது தான் எனக்கு உறைத்தது. அக்கா, தங்கை என்ற உறவில்லாமல் நான் பேசிய முதல் இளம் பெண் லட்சுமி பிரியாதான்.

அந்த ஆண்டு விழாவின் இளவரசி லட்சுமி பிரியாதான். கிளாசிக்கல் டான்ஸ், வோக்கல் சோலோ, ஸ்கிட் என எல்லாவற்றிலும் ஸ்டார் பெர்பார்மன்ஸ் அவளுடையது தான். அதன்பின் கல்லூரியே அவள் பின்னால் சுற்றியது. இரண்டாம் ஆண்டில் அவளுக்கு கடிதங்கள் எழுத பல காடுகள் அழிக்கப்பட்டன. இந்த நேரத்தில் நான் ”டிபைன் தயிர்” என்ற கேட்டகிரியில் இருந்தேன். முட்டாளாக இருப்பவர்களை தேங்காய்க்கு டிபனிசனே இவன்தாண்டா என கலாய்க்கும் நோக்கில் ”டிபைன் தேங்கா” என அழைப்பார்கள். நான் தயிர்சாத வகையறா. வகுப்பில் முதல் பெஞ்சிலும் இல்லாமல், கடைசியிலும் இல்லாமல் நடு பெஞ்ச். படிப்பும் அப்படித்தான். ஆனால் தினமும் கல்லூரிக்கு வந்துவிடுவேன். டாப்பர், கோ-கரிகுலர், எக்ஸ்ட்ரா கரிகுலர் என்று எதிலும் அடிபடமாட்டேன். அதேபோல் ராக்கிங், மாஸ் கட், லேட் சப்மிஷன் என்ற கேட்டகிரியிலும் இல்லை. கிளாஸில் சந்தேகம் வந்தால் கூட கேட்க மாட்டேன். அதனால் என் பெயர் வகுப்பு எடுக்கு ஆசிரியர்களுக்கு கூட பரிச்சயமில்லாமல் இருந்தது. 

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ஆண்டு விழாவில் இன்னொரு நட்சத்திரம் உருவாகியது. ஆனந்த செல்வி. லட்சுமி பிரியாவுக்கு இணையாக அவளுக்கும் பெரிய பெயர் கிடைத்தது. நான்காம் ஆண்டு ஆரம்பிக்கும் போது, லட்சுமி பிரியாவுக்கு இணையாக ஆனந்த செல்விக்கும் பாலோயர்கள் அதிகமானார்கள். அது லட்சுமி பிரியாவுக்கு பெரிய மன வலியைக் கொடுத்தது. வெளி கல்லூரிகளில் நடைபெறும் கல்சுரல் ஈவெண்டுகளில் ஆனந்த செல்வியுடன் சேர்ந்து பங்கேற்க மாட்டேன் என மறுத்தாள். கேட் பிரிப்பரேசன் என சாக்குச் சொன்னாள். கல்சுரல் செக்கரெட்டரி கூட இவளுக ரெண்டு பேரும் இறங்குனா எல்லா ஷீல்டும் நமக்குத்தான். வாசிம் அக்ரமும் கர்ட்லி அம்புரோசும் மாதிரி டெட்லி காம்பினேஷன். இந்த ஈகோனால நம்ம காலேஜுக்குத்தான் லாஸ் என்று புலம்பினான்.

எங்கள் கல்லூரிக்கு வரும் நகரப் பேருந்துகளில் ஒரு வழக்கம் இருந்தது. சீனியர் மாணவர்கள் நின்று கொண்டிருந்தால் ஜூனியர்கள் எழுந்து இடம் கொடுத்து விடுவார்கள். நான் ரெகுலராக கல்லூரிப் பேருந்தில் மட்டுமே செல்பவன். ஒரு நாள் கல்லூரிப் பேருந்தை தவற விட்டு விட்டு நகர பேருந்தில் ஏறி வந்தேன். நல்ல கூட்டமாகையால் நின்று கொண்டு வந்தேன். முன்னால் அமர்ந்திருந்த என் கிளாஸ்மேட், திரும்பிப் பார்த்து, உட்கார்ந்திருந்த ஜூனியரிடம், டேய் பைனல் இயர் மெக்குடா, நிக்க வைச்சிருக்கீங்க என சத்தம் போட்டான். அலறியடித்து எழுந்த இரண்டு ஜூனியர்கள் சாரி கேட்டு என்னை உட்காரச் சொன்னார்கள். அதில் ஒருவன் மூன்றாம் ஆண்டு எங்கள் துறை மாணவன்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மொத்தமே 700 பேர் படிக்கிற காலேஜ். நாலு வருசமா இங்க இருக்கோம். நம்ம டிபார்ட்மெண்ட் இம்மீடியட் ஜூனியர்க்கே நம்மை தெரியலை. என்னத்த கிழிச்சோம் என்று உறுத்திக் கொண்டே இருந்தது. காலேஜ விட்டுப் போகுறதுக்குள்ள நம்ம கிளாஸ் தவிர பத்திருபது பேருக்காச்சும் நம்மை தெரிய வைத்து விடவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

இந்நிலையில் கல்லூரி ஆண்டுவிழாவுக்கான ஆடிசன் தொடங்கியது. பெண் விடுதலை சம்பந்தமாக எனக்குள் ஒரு நாட் இருந்தது. அதை சிறிது டெவலப் செய்து என்னைப் போன்ற சில நண்பர்களிடம் கெஞ்சி ஒரு டீம் அமைத்துப் போனோம். உள்ளே போன உடனேயே எந்த இயர்? என்று செலக்ஷன் கமிட்டி கேட்ட எங்கள் சுருதி கொஞ்சம் இறங்கியது. சமாளித்து நடித்தோம். ரிஜக்டட் என்று சொல்லிவிட்டார்கள். 

அடுத்த நாள் கேண்டீனுக்கு சென்று கொண்டிருக்கும் போது, லட்சுமி பிரியா எதிரில் வந்து புன்னகைத்தாள். நான் அனிச்சையாக, யாரைப் பார்த்து சிரிக்கிறாள் என பின்னால் திரும்பி பார்த்தேன். ஹலோ, உங்களைப் பார்த்துத்தான் சிரித்தேன் என்றவாறு அருகில் வந்தாள். உங்க தீம் நல்லா இருந்தது. ஆனா சில பொண்ணுங்களும் நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே என்றாள். எனக்கு யாரும் அவ்வளவு பழக்கமில்லை என்றேன். எனக்கு உங்க ஸ்கிட்டைக் கொடுக்க முடியுமா? எங்க பிரண்ட்ஸோட சேர்ந்து பண்ணிக்கிறேன் என்றாள். தேவதை கேட்கும் வரம். மறுக்க முடியுமா? 

அவளுக்கு ஆனந்த செல்வியை விட ஒரு படி தான் மேல் என்று காட்டிவிட்டுப் போகவேண்டும் என்ற வெறி இருந்தது. அப்போது அவள் கணையாழியில் சில கவிதைகள் கூட எழுதி இருந்தாள். ஆனால் மாண்வர்களிடம் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆடல் பாடலில் வேண்டுமானால் என்னுடன் நீ போட்டி போடலாம் ஆனால் அறிவுத் தளத்தில் நான் ஒரு படி மேல் என்று பொதுவெளியில் நிரூபிக்க வேண்டும் என்ற ஈகோ அவளிடம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்கு உதவும் வகையில் என் ஸ்கிரிப்ட் இருந்தது. “இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் நன்றாய் இருக்கும்” என கேட்டுக் கொண்டாள். 

மூன்று நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து திரும்ப எழுதினேன். அவள் செட்டுடன் சேர்ந்து செலக்ஷன் கமிட்டி முன்னால் அதை அரங்கேற்றம் செய்தாள். அந்த ஆண்டு வரும் சீஃப் கெஸ்ட், சம்பிரதாய ஆரம்ப உரைகளுக்குப் பின்னால் ஒரு புரோகிராம் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தாராம். அதற்குரிய புரோகிராமாக இதை செலக்ட் செய்தார்கள்.

ஒரு வாரம். சொர்க்கத்தில் இருந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன். காலை முதல் மாலை வரை ரிகர்சல், திருத்தம், ரிகர்சல் என. கேண்டீனில் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தினோம், டீ குடித்தோம், பேருந்தில் திரும்பும் போது அருகருகே நின்று கொண்டு பேசினோம். கேசட்டுகள்,புத்தகங்கள் பரிமாறிக் கொண்டோம். அந்த வாரம் முழுக்க யாருடா இவன் என்ற கேள்வியோடு காம்பஸ் முழுக்கப் பார்க்கப் பட்டேன். என் செட் மக்களிடம் பொறாமையும், ஜூனியர்களிடம் மரியாதையும் கிடைத்தது. ஆண்டு விழாவிற்கு வந்திருந்த சீஃப் கெஸ்ட் தன் ஏற்புரையில் நாடகத்தையும் முக்கியமாக லட்சுமி பிரியாவின் நடிப்பையும் சிலாகித்தார். லட்சுமி பிரியாவிடம் இருந்து நழுவிக் கொண்டிருந்த இளவரசி கிரீடம் அவள் தலையிலேயே சம்மணம் போட்டு அமர்ந்தது.

ஆண்டு விழா கொண்டாட்ட லீவ் முடிந்து, கல்லூரி தொடங்கியது. என்னைத் தேடிவந்து ஒரு காட்பரிஸ் டெய்ரி மில்க் கொடுத்து தேங்க்ஸ் சொல்லிச் சென்றாள்.

இப்போதும் கூட இரவுகளில் பேஸ்புக், ட்விட்டரில் நான் ஏதாவது டைப்பிக் கொண்டிருக்கும் போது, என் மகன் வந்து எப்பவுமே இதுதானா? இதுனால ஒரு யூஸும் இல்லை என்று சலித்துக் கொள்வான்.

அவனுக்குத் தெரியுமா? தயிர்சாதமாக இருந்த என்னை கல்லூரியில் ஒருவாரம் ராஜகுமாரனாக உணர வைத்தது இந்த எழுத்தார்வம் தான் என்று.

June 15, 2015

வாடகை வீடு

மகனின் ஸ்கூல் அப்ளிகேஷனை சரசரவென நிரப்பிக் கொண்டே வந்தேன். பெர்மனெண்ட் அட்ரஸ் என்பதை கண் கண்டுகொண்டதும் கையின் வேகம் குறைந்தது. திருமணமாகி ஆண்டுகள் கழிந்தவர்கள், ஏதாவது அப்ளிகேஷனை பில் செய்ய நேர்கையில் சில்ரன்ஸ் என்ற கேள்வியைப் பார்த்ததும் வருத்தப்படுவார்களே அதற்கு ஈடானதுதான் இதுவும்.

என் 40 ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை சொந்த வீட்டில் இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே வாடகை வீடுதான். என் தந்தை, தாத்தாவும் சொந்த வீட்டில் இருந்ததே இல்லையாம். நான் கூட கிண்டலாகச் சொல்வதுண்டு, நம் முன்னோர்கள் குகை மனிதர்களாக இருந்தபோது கூட குகைக்கூலி கொடுத்துத்தான் தங்கியிருப்பார்கள் என.

என் தாத்தா ஒரு கடையில் சிப்பந்தியாய் இருந்து நான்கைந்து வீடுகள் மட்டும் மாறி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். என் தந்தை அரசு அலுவலராய் இருந்தும் 20 வீடுகளுக்கு மேல் பார்த்தவர். அவர் இருந்தது நல்ல மேல் வரும்படி உடைய டிபார்ட்மெண்ட்தான். அவரும் சபலப்படக்கூடியவர்தான். ஆனால் சபலத்தை அவரின் பயம் வென்றுவிட்டது. சஸ்பெண்ட் ஆனாலோ, வேலை போய்விட்டாலோ என்ன செய்வது என்ற அச்சத்திலேயே அவர் நல்லவராக நடந்து கொண்டார். அவரின் இருப்பு மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. அந்த இடத்திற்கு போட்டி போடுபவர்களால் அதிகபட்சம் இரண்டாண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் அவரால் இருக்க முடியவில்லை.
எங்கள் வீட்டில் எந்தப் பொருள் வாங்கினாலும், இதை எளிதாக, உடையாமல் எடுத்துச் செல்ல முடியுமா என்றுதான் பார்த்து வாங்குவோம். கட்டிலை பிரித்து எடுத்துச் சென்று விடலாம், ஆனால் பீரோவை அப்படி சுலபமாக தூக்கமுடியாது என்பதற்காகவே அதை வாங்குவதைத் தவிர்த்தோம். இல்லையென்றாலும் அதில் வைக்கும் அளவுக்கு எங்களிடம் மதிப்பான பொருள் எதுவும் இல்லை. என்னையும், என் அண்ணனையும் படிக்க வைப்பதற்கே என் தந்தை கரணம் அடிக்க வேண்டி வந்தது.

அண்டை அசலில் யாராவது நீங்கள் டூர் போயிருக்கீங்களா என்று கேட்டால், என் அம்மா விரக்தியுடன் சொல்லுவார். நாங்க ரெண்டு வருசத்துக்கு மொத்தமா புதுப் புது இடத்துக்கு டூர் போவோம் என.
என் அண்ணனுக்கு சொந்தத்தில் ஒரு பெண் அமைந்து தப்பித்தான். எனக்கு அப்படி எதுவும் இல்லாததால் வீடில்லாத கொடுமை முகத்தில் அறைந்தது. வேலை சுமார்தான் அது பரவாயில்லை. ஆனா சொந்தமா கையலக நிலம் கூட இல்லை. எங்க பொண்ணுலாம் சொந்த வீட்டுல வசதியா இருந்தவ. எப்படிக் கொடுக்கிறது? என தரகரிடம் கேட்டார்கள். சரி, பிறந்ததில் இருந்தே காம்பவுண்டு, ஒண்டிக்குடித்தனங்களில் காலம் தள்ளிய பெண்ணைப் பிடிக்கலாம் என்றால், இவ்ளோ காலம் கஷ்டப்பட்டுட்டா, எலி வளையா இருந்தாலும் தனி வளையா கிடச்சா பரவாயில்லை என்றார்கள்.

என் தந்தையின் தரகரிடம், முதல் தாரத்துப் பொண்ணு, இப்போ ரெண்டாம் தாரத்துக்கிட்ட கஷ்டப்படுற மாதிரி இருந்தா, தள்ளி விட்டாப் போதும்னு கொடுத்துடுவாங்க, அது மாதிரிப் பாருங்க என்றார். இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனது. திருமணத்தின் போது என் அண்ணனின் மாமனார், “உங்க அப்பன் இப்ப காமிச்ச விவரத்த அந்தக் காலத்துல காமிச்சு ஒரு வீட்டக் கட்டியிருந்திருக்கலாம்” என்று கமெண்ட் அடித்தார்.

இது போன்ற குத்தல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால், திருமணத்திற்கு முன்னர் இடம் வாங்கி விட வேண்டும் என நினைத்திருந்தேன். திருமண செலவுகள், வைத்திய செலவு என அது கைகூடாமல் போனது. குழந்தை பிறப்பதற்குள், அவன் ஸ்கூலில் சேர்வதற்குள் என அந்த நினைப்பு நினைப்பாகவே தள்ளி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

தனியாரில் வேலை செய்தாலும் வேலை இழப்பு, வேலை மாற்றம், பொருளாதார நெருக்கடி என நானும் இப்போதே நாலைந்து வீடுகள் மாறிவிட்டேன். கடைசியாய் ஒரு ஹால் மற்றும் கிச்சன் உடைய வீட்டில் இருக்கிறேன். நான் சிறு வயதாய் இருந்த போது, தெரு அண்ணன்களுடன் செகண்ட் ஷோ போக ஏன் தாராளமாய் அனுமதித்தார், ஞாயிறு மதியம் விளையாடப் போக ஏன் ஊக்கப்படுத்தினார் தந்தை என இப்போது புரிந்தது.

மனதில் ஓடிய எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, என்னடா, பிரண்ட்ஸ விட்டுட்டு வர்றது கஷ்டமா இருக்கா? என பையனிடம் கேட்டேன். அதுனால என்னப்பா? புதுப்புது பிரண்ட்ஸ் கிடைச்சிட்டே இருக்காங்களே? என்றான் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியுடன்.
யோசித்துப் பார்த்தால் அவனை குழந்தையாகவே இருக்க விட வில்லை நானிருந்த வாடகை வீடுகள். இரவில் ஒரு பூச்சி கடித்து, அவன் அழுதால் கூட அருகாமை வீடுகளில் இருந்து கேட்கும் உச் உச் ஒலிகளுக்கு பயந்து அவன் வாயை மூடி வெளியில் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறேன். சுவரில் கிறுக்கக் கூடாது என்பதற்காக கையை துண்டால் கட்டிப் போட்டிருக்கிறேன். ஒருமுறை காலில் சூடான பால் கொட்டி, இரவில் அவன் அழுவானே என்பதற்காக இருமல் மருந்து நாலு மூடி ஊற்றி தூங்க வைத்திருக்கிறேன். ஒரு முறை மாடியில் இருந்த போது எந்நேரமும் டங் டங் என சத்தம் கேட்கிறது என சலித்துக் கொண்ட வீட்டு உரிமையாளருக்காக அவனை பிளாஸ்டிக் சேரை விட்டு இறங்க விடாமல் செய்திருக்கிறேன்.

இதெல்லாம் போய்த் தொலையட்டும். விவரமில்லா வயதில் அவன் அனுபவித்த வேதனைகள். திருமணத்திற்குப் பிறகாவது, அவன் மன சாந்தியுடன் வாழவேண்டும். எங்கே மகன் விழித்து விடுவானோ என பயந்து கொண்டே தாம்பத்யம் அனுபவிக்கும் கொடுமை  வேண்டாம், அவன் குழந்தையை பிறந்த உடனேயே பெரியவனாக வளர்க்க வேண்டாம்.


மனதில் சொல்லிக் கொண்டேன். மகனே இன்னும் கடுமையாக உழைப்பேன், 15 வருடம் ஊண்,உறக்கம் இல்லாமல் உழைப்பேன் என்று. 

January 20, 2015

பரம்பரை

10 நாட்கள் இருக்கும். முதுகை சற்று வளைத்து, குரலில் பவ்யம் கூட்டி, சார், மதியம் அரைநாள் லீவு வேணும் என்று கேட்ட போது, கண்ணைச் சுருக்கி, முகத்தில் ஒரு கடுமையைக் கொண்டுவந்து, எதுக்கு? என்று கேட்டுவிட்டு, நாளைக்கு ஆடிட் ஸ்டேட்மெண்ட் ஹெட் ஆபிஸ்ல சப்மிட் பண்ணனுமே என்றார் மேனேஜர்.

பையனோட ஸ்கூல்ல இன்னைக்கு கட்டாயம் வரணும்னு சொல்லி இருக்காங்க சார். போயிட்டு வந்து ராத்திரி முடிச்சுக் குடுத்துடறேன் சார் என்றேன். அரை மனதுடன் சம்மதித்தார்.

வேளச்சேரி சிக்னலில் நிற்கும் போது பையனின் டைரியில் அவர்கள் அடிக்கடி எழுதும் புவர், கான்செண்ட்ரேட் ஆன் மாத்ஸ், லோ பெர்சனல் ஹைஜீன் போன்ற வார்த்தைகள் மனதுக்குள் வட்டமிட்டன.
பேரண்ட்ஸ் மீட்டிங் நடக்கும் ஹாலில் என் பையன் படிக்கும் கிளாஸின் டீச்சரை நோக்கி சினேக பாவத்துடன் சென்றேன். அவரிடம் அதற்கு மதிப்பில்லை. எடுத்த எடுப்பிலேயே சார், “சொல்றோம்னு தப்பா நெனச்சுக்காதீங்க, உங்க பையன் இந்த ஸ்கூலுக்கு செட் ஆக மாட்டான் சார், அடுத்த வருஷம் வேற ஸ்கூல் பாத்துக்குங்க” என்றார்.
தொடர்ந்து “சரியாவே ஹோம் ஒர்க் பினிஷ் பண்ணுறதில்ல, கிளாஸ்ல கவனிக்கிறதே இல்ல, எந்த ஆக்டிவிட்டியும் டைமுக்கு சப்மிட் பண்ணுறது இல்ல, சுத்தமாவும் இருக்குறதில்ல, ஏதாச்சும் கேள்வி கேட்டா தலையைக் குனிஞ்சுக்கிட்டே நிக்கிறான், பதிலே சொல்ல மாட்டேன்கிறான், சோசியல் தவிர இந்த டெஸ்ட்ல எல்லாப் பாடத்துலயும் பெயில் ” என்று அடுக்கினார்.

வகுப்பறையில் இருந்து வந்தவனைப் பார்த்தேன். தலையைக் குனிந்தவாறே வந்தான். ஷூ அழுக்கடைந்து போயிருந்தது, லேஸ் சரியாக கட்டப்படாமல் இருந்தது,  தலை கலைந்து, உடை கசங்கி தளர்ந்து நடந்து வந்தான்.

மேடம், இனி நல்லா கான்செண்டிரேட் பண்ணி பார்த்துக்கிறேங்க. என்றேன். இப்படித்தான் அடிக்கடி சொல்லுறீங்க என்று சலித்துக் கொண்டார். பள்ளி நேரம் முடிந்து விட்டதால், என் பைக்கிலேயே அழைத்துக் கொண்டு வீடு நோக்கி கிளம்பினேன். தலையை வலிக்க ஆரம்பித்ததால், வழியில் இருந்த டீக்கடையில் நிறுத்தினேன். எனக்கு வடை வேண்டும் என்றான். சுள்ளென்று கோபம் வந்தது. திங்க மட்டும் தெரியுது, ஆனா ஒழுங்கா படிக்க மாட்ட என்று கேட்க, தலையைக் குனிந்து கொண்டான். குடியிருக்கும் ஒண்டுக்குடித்தன காம்பௌண்ட் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அலுவலகத்துக்கு கிளம்ப எத்தனித்த போது, லேட்டாகுமா? சாப்பாடு வேணாமில்ல? என்று மனைவி கேட்டார். ஆமா லேட்டாகும், சாப்பிட்டு விட்டு வந்துடறேன் என்று பதிலளித்துவிட்டு கிளம்பினேன்.

வேலை முடிய தாமதமாக, மானேஜர் வார்த்தைகளில் விஷம் தடவினார். சகித்துக் கொண்டு, முடித்துவிட்டு வெளியே வந்த போது மணி 10. பழக்கமான நடைபாதை வண்டிக் கடைக்குச் சென்று நாலு இட்லி என்று சொல்லிவிட்டு, மனைவி ஏதும் அழைத்திருக்கிராறா என்று சைலண்ட் மோடில் போட்டிருந்த செல்லில் பார்த்தேன். ஏமாற்றம். கடைக்காரரின் 10 வயதுப் பையன் சுறுசுறுப்பாக தட்டுக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். எட்டு மணிவரை அங்கேயே உட்கார்ந்து அவன் ஹோம் ஒர்க் செய்வதையும் பார்த்திருக்கிறேன். முதல் இட்லியை முடித்த போது, என் அலுவலக சக பணியாளர்கள் இருவர் வந்தனர். எனக்கும் அவர்களுக்கும் 20 வயது வித்தியாசம். நக்கலாக என்னை ஒரு பார்வை பார்த்தபடி, கடைக்காரரிடம் ஆர்டர் கொடுத்தார்கள்.

வீட்டுக்கு திரும்பிய உடன், பையனின் டைரியைப் பார்த்தேன். எங்க செஞ்ச ஹோம் ஒர்க்க காட்டு என்றதற்கு, மீண்டும் தலையைக் குனிந்து நின்றான். இருந்த ஆத்திரத்தையெல்லாம் திரட்டி கண் மண் தெரியாமல் அடித்து விட்டேன். ஊமை அழுகை அழுதவாறே அப்பொழுதும் தலையைக் குனிந்தே நின்றான். விரக்தியுடன் படுத்தால், தூக்கம் வரவில்லை.

படிக்காவிட்டால் கூட பரவாயில்லை. 12 வயதாகிறது. இன்னும் சரியாக பல் விளக்க வரவில்லை, டாய்லெட் போனால் கையை வளைத்து பின்புறம் சென்று கழுவ வரவில்லை, பனியன் போடத் தெரியவில்லை, ஷூ – லேஸ் கட்ட இன்னும் 5 ஆண்டுகளாவது ஆகும் போலிருக்கிறது.
விரக்தி அதிகமாக அதிகமாக புத்திக்கு சட்டென்று ஒன்று உறைத்தது. நீ மட்டும் சரியா? என்று. 45 வயதில், 25 வயது ஆட்களோடு, அவர்கள் செய்யும் அதே வேலையை, அதே சம்பளத்துக்குத் தானே செய்கிறாய்? நீ 12 வயதில் எப்படி இருந்தாய்? கோபால் பல்பொடியை ஒன்றுக்கு இரண்டாக பல்லில் தேய்த்துவிட்டு, சில சமயம் தின்று விட்டு திரிந்தவன் தானே?, ஆற்றங்கரையோரம் காலைக் கடன் கழித்ததால் எளிதில் சுத்தம் செய்து கொண்டாய். கல்லூரி வரும் வரை பனியன் போட்டதில்லை, இன்றுவரை ஷூவே அணியவில்லை. உனக்கென்ன நியாயம் இருக்கிறது அவனை அடிக்க? என்று மனது உலுக்க ஆரம்பித்தது.

மகனைப் பார்த்தேன். கோணல் மானலாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அடிக்கடி இரவில் படுக்கையை நனைக்கும் பழக்கமும் அவனுக்கு உண்டு. எழுப்பி சிறுநீர் கழிக்க வைத்தேன். தொடரும் நாட்களை நினைத்து பயம் வந்தது.

மறுநாள் காலை செல் கூவ, விழித்தேன். ஊரில் இருந்து சித்தி. “என்னப்பா ஏதும் விசாரிச்சியா” என்றார். பார்த்துக்கிட்டு இருக்கேன் சித்தி என்று பதில் சொல்லிவிட்டு, பையனை பள்ளிக்கு கிளப்ப ஆரம்பித்தேன்.
அலுவலக உணவு இடைவேளையில், சாப்பிடப் பிடிக்காமல், சோற்றை அளைந்து கொண்டே இருந்தபோது, சித்தியின் ஞாபகம் வந்தது. என் சித்தப்பா, திருமணமான சில வருடங்களில் இறந்து விட, தன் ஒரே பையனை கஷ்டப்பட்டு வளர்த்தவர் சித்தி. இப்போது அவனுக்கு  34 வயது. ஊரில் ஒரு தனியார் மில்லில் ஆபிஸ் அசிஸ்டெண்ட். இன்னும் திருமணம் ஆகவில்லை. அது விஷயமாகத்தான் சித்தி அடிக்கடி போனில் பேசுவார்.

15 வருடங்களுக்கு இருந்ததை விட பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல மடங்கு அதிகரித்து உள்ளது. அப்போதே எனக்கு பெண் கிடைக்க வில்லை. நான்கு வருட காத்திருப்பின் பின்னர், பெண் கிடைத்தது. வறுமை, சரியில்லாத ஜாதகம் போன்ற அவருடைய நெகடிவ்கள் எனக்கு பாஸிட்டிவ் ஆகி எங்கள் கல்யாணம் நடந்தது. எத்தனை ஹீரோக்கள், எத்தனை வசதியான வாழ்க்கையை அவர் கனவு கண்டிருந்தாரோ, அது அவருக்குத்தான் தெரியும். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்பது, அவர் முகத்தில் உறைந்து விட்ட சோகக்களையில், யார் எப்படி இருந்தா எனக்கென்ன என்ற விட்டேத்தியான மனோபாவத்தில், என்னிடம் குறைந்து விட்ட பேச்சுகளில், சமையலில், மையலில் எனக்கு தெளிவாகத் தெரிந்தது. சித்தி பையனுக்கு பெண் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை எனத் தோன்றியது.

எனக்கு 45 ஆண்டுகளும், பல அவமானங்களும், உதாசீனங்களும் தேவைப்பட்டது, நான் இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஆட்கள் இந்த உலக வாழ்க்கைக்கு லாயக்கு கம்மியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள. ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொள்வதற்குள் திருமணம் செய்து இன்னொரு வாரிசையும் உருவாக்கி விடுகிறோம். ஒவ்வொரு முறை மகனை அடிக்கும் போதும், வார்த்தையால் காயப்படுத்தும் போதும், இனி இப்படி செய்யக் கூடாது என நினைப்பேன். அதெல்லாம் நீர்க்குமிழி. எங்கள் ஆட்கள் இனிமேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும், முக்கியமாக என் மகன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூட நினைப்பேன். இன்னொரு கோணத்தில் யோசித்தால், லாயக்கானவர்கள் மட்டும் தான் இங்கு வாழ வேண்டுமா? மனிதனை, மனிதனாக மதிக்காதவர்கள், அயோக்கியர்கள் எல்லாம் இங்கு வாழவில்லை? என்ற கேள்வியும் உடனே வந்து விடுகிறது.
டப்பாவை கழுவி பையில் வைத்து விட்டு, நிமிர்ந்தபோது மானேஜர் அழைத்தார். ஸ்டேட்மெண்ட்ல நிறைய தப்பு இருக்குங்கிறாங்க, அடுத்த வாரம் டெட்லைன். என்ன செய்வீங்களோ தெரியாது, பக்காவா ரெடி பண்ணனும் என்று சொல்லிவிட்டு, மானிட்டரை நோக்கி திரும்பிக் கொண்டார்.

ஆயிற்று ஒரு வாரம். மேனேஜர் எதிர்பார்த்தபடி வேலை முடியும் தருவாயில்  , ஆச்சரியமாக மனைவியிடம் இருந்து போன். அவர் வழி உறவினர் ஒருவர் இறந்து விட்டதாகச் சொல்லி, வர முடியுமா என்று கேட்டார். நான் நிலைமையைச் சொல்லவும், சரி நான் மட்டும் போறேன். பக்கத்து வீட்டுல சொல்லிட்டுப் போறேன். பையன் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். இந்த விஷயத்திற்கு இன்னும் எவ்வளவு காலம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வாரோ என கலக்கத்துடன், வேலையைத் தொடர்ந்தேன். மேனேஜர் வேறு ஜாடை மாடையாக ஏழு கழுதை வயசாச்சு, வேலையும் கழுதை மாதிரிதான் இருக்கு என போனில் பேசுவது போல் ஒரு குத்து குத்தினார்.
இரவு வீட்டுக்கு வரும் போது பதினோரு மணி. பக்கத்து வீடுகளில் எல்லோரும் தூங்கியிருக்க, மகன் இன்னும் யூனிபார்மைக் கூட கழட்டாமல் பழைய பேப்பரை கிழித்துக் கொண்டு இருந்தான். ஹோம் ஒர்க் செய்துவிட்டாயா என்று கேட்டு, இல்லை எனத் தெரிந்ததும் செருப்பை எடுத்து ஆக்ரோசமாக அடித்து விட்டேன்.

காலையில் எழுந்தபோது காய்ச்சலை உணர முடிந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பையனை பள்ளிக்கு அனுப்பும் போது தாங்க முடியாத உடல் வலியும். மேனேஜர்க்கு போன் செய்து லீவ் சொல்லிவிட்டு, பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் சொல்லி ஒரு மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டேன்.  தூங்கி எழும்போது, அகோரப் பசி எடுத்தது. கடிகாரம் 9 மணியைக் காட்டியது. சிரமப்பட்டு எந்தரித்தேன். தட்டில் நாலு இட்லி வைத்து பையன் கொடுத்தான். குழப்பத்துடன் சாப்பிட்டது நினைவிருக்கிறது. உடல்வலி தாங்காமல் அனத்தியது நினைவுக்கு இருக்கிறது, அவன் என் கை,கால்களை பிடித்து விட்டது லேசாக நினைவில் இருக்கிறது.  

மறுநாள் காலை உடல்நிலை இயல்பாக இருந்தது. அம்மா நேத்து பேசினாங்கப்பா, இன்னைக்கு சாயங்காலம் வந்துடுறாங்களாம் என்றான். பக்கத்து கடையில் அவனுக்கு டிபன் வாங்கி, லஞ்ச் பாக்சிலும் அதையே அடைத்துக் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்து விட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினேன். சாயங்காலம் மனைவி, வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தகவல் சொன்னார். ட்ராவல் டய்ர்டா இருக்கும், பார்சல் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு, வேலையை சீக்கிரம் முடித்து கிளம்பினேன்.

வழக்கமாக பார்சல் வாங்கும் நடைபாதை வண்டிக்காரர், “நேத்து உங்க பையன், எங்கப்பாவுக்கு காய்ச்சலா இருக்கு, நாலு இட்லி பார்சல் கொடுங்கன்னு வந்து கேட்டான், அப்புறம் உங்க வீடு தூரமாச்சே எப்படிடா வந்தேன்னு? கேட்டேன். நடந்துதான் வந்தேன்னான். நாலு கிலோமீட்டருக்கு மேல இருக்குமே எப்படிடா போவேன்னு, தெரிஞ்ச கஸ்டமர் வந்தா பைக்ல ஏத்தி அனுப்பலாமுனு நெனச்சேன். சோதனைக்குன்னு யாரும் வரல்லை. வேணாங்க நான் நடந்தே போயிடுறேன்னு விசுக் விசுக்குன்னு வேகமா நடந்து போயிட்டான் என்றார்.


கடவுள் என்னிடம், இதுக்கு மேல என்னடா எதிர்பாக்குற உன் வாழ்க்கையில? என்றார்.