March 30, 2016

ரேவதி

இப்போது திரைப்பட சுவரொட்டிகளின் டிசைன், பிரிண்டிங், டிரான்ஸ்போர்டேசன் எல்லாமே எளிதாகி விட்டது. ஆனால் போஸ்டர் ஒட்ட இடங்கள் கிடைப்பது கஷ்டமாகி விட்டது. 80களில் போஸ்டர் ஒட்ட ஏராளமான சுவர்கள், குட்டிச் சுவர்கள் இருந்தன. ஆனால் போஸ்டர் டிசைன், பிரிண்டிங் எல்லாம் நேரம் பிடிக்கும். செலவும் படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது தற்காலத்தை விட அதிகமாகவே இருந்தது. பெரிய நகரங்களில் 50 நாட்களும், நகரப் பகுதிகளில் 25 நாட்களும், சிற்றூர், கிராமப்புறங்களில் ஒரு வாரம், 10 நாட்கள் வரை படங்கள் பொதுவாக ஓடும். மக்களுக்கு இந்த திரையரங்கில் இந்தப் படம் ஓடுகிறது என தெரிவிக்கும் ஊடகங்களாக செய்தித்தாளும் சுவரொட்டிகளுமே இருந்தன. அதிலும் சிற்றூர் தியேட்டர்களில் படம் வரும்போது செய்தித்தாள்களில் அந்தப் படங்களின் விளம்பரம் கூட நின்று போயிருக்க வாய்ப்புண்டு. எனவே சுவரொட்டிகள் என்பது அப்போது சினிமாவிற்கு மிகப்பெரிய விளம்பர ஆயுதம்.

எனவே சுவரொட்டிகளை கவனமாக வடிவமைப்பார்கள். ஹீரோவின் படம் பெரியதாகவும், அந்தப் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடும் நடிகையின் படம் ஒரு ஓரத்திலும் அச்சிடுவார்கள். நாயகி கவர்ச்சியாக அந்தப்படத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே சுவரொட்டியில் அவருக்கு பிரதான இடம் ஒதுக்கப்படும். இல்லாவிட்டால் பாஸ்போர்ட் சைஸில் ஒரு இடத்தை ஒதுக்கி விடுவார்கள். பொதுவாக இந்தப் போஸ்டர்கள் 50 நாட்களுக்கு மேல் மாற்றப்படாமல் இருக்கும். பெரும்பாலான படங்களுக்கு முதலில் அடிக்கும் 8 பிட், 4 பிட் போஸ்டர்கள் தவிர நூறாவது நாளுக்குத்தான் அடுத்த போஸ்டர் அடிப்பார்கள். 2000க்குப் பிறகுதான் வெற்றிகரமான 2 வது வாரம், பார் போற்றும் 10வது நாள் போஸ்டர்கள் அதிகமாக வரத்துவங்கின.

எனவே அந்நாட்களில் பலநாட்களுக்கு நின்று மக்களை தியேட்டருக்கு வரவைக்கும் ஊடகமான போஸ்டரில் கதாநாயகி பிரதானமாக இடம்பெற வேண்டுமானால் கவர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது ஒரு நாயகி அதுமாதிரியான தோற்றம் எல்லாம் இல்லாமல் சாதாரண உடைகளுடன் போஸ்டரில் இடம்பிடித்தார். அவர் தான் ரேவதி.

காதல் ஓவியம், வாலிபமே வா வா படங்களின் தோல்விக்குப் பிறகு தன் களம் எது என உணர்ந்து மண்வாசனை படத்தை எடுத்தார் பாரதிராஜா. அந்தப் படத்தில் முத்துப் பேச்சி என்னும் பாத்திரத்தில் அறிமுகமானார் ரேவதி. அவரின் ஆர் வரிசை பெயர் ராசியின் படி ராதிகா, ரத்தி அக்னி ஹோத்திரி,ராதா வரிசையில் வந்தார் ரேவதி.. அந்தப் படத்தை பார்த்த ரசிகர்களில் பத்திரிக்கைகள் படிக்காத பெரும்பாலோனோர் அவர் உசிலம்பட்டி அல்லது தேனிப் பக்க பெண்ணாக இருப்பார் என்றே நினைத்தார்கள். அந்தப் பட நாயகன் பாண்டியன் மதுரையைச் சார்ந்தவர். அவர் இயல்பாக அந்தக் கதைக்கு பொருந்திப் போனார். ஆனால் ரேவதி, கேரளாவைச் சேர்ந்தவர், ராணுவ அதிகாரியின் மகள், பரதநாட்டியம் கற்றவர் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மிக இயல்பான கிராமத்துப் பெண்ணாக அந்தப் படத்தில் பொருந்திப் போயிருந்தார் ரேவதி.

மண்வாசனையின் பெரிய வெற்றிக்குப் பின் அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் தமிழ்சினிமாவின் இளவரசியாக கோலோச்சினார் ரேவதி. இளவரசி என்று பெயருக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே. மகேந்திரன், மணிரத்னம், சுந்தர்ராஜன், ரங்கராஜன் போன்ற இயக்குநர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜய்காந்த், பிரபு, கார்த்திக்,சுரேஷ்,மோகன் போன்ற முன்வரிசை நடிகர்கள், பாண்டியராஜன் போன்ற புது இயக்குநர்கள், ஏவிஎம் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள், புதிய சிறிய தயாரிப்பாளர்கள் என அனைவரின் சாய்ஸாகவும் ரேவதி இருந்தார்.

போஸ்டர்களில் ரேவதி படம் இருந்தால் பேமிலி ஆடியன்ஸ் வருவார்கள் என்ற நம்பிக்கை திரையுலகில் நிலவியது. ரேவதியின் முகத்தை பெரியதாகப் போட்டு போஸ்டர்கள் அடிக்கப்பட்டது. ஏவி எம் தயாரித்து, பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண்ணில் ரேவதியின் படம் மட்டுமே போடப்பட்டது.
பொதுவாக ஒரு ஹீரோயின் புதிதாக வந்தால் இளவயது ஆண்களுக்கு உடனே பிடித்துப் போகும். பெண்களுக்கு ஹீரோயின்களை உடனடியாகப் பிடித்துப்போகாது. ஆனால் ரேவதியைப் பொறுத்த வரையில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த நடிகையாக இருந்தார். எல்லோரும் அவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்த்தார்கள்.

எல்லோரும் நதியா தோடு. நதியா கம்மல் என்று பிரபலமாக இருந்ததையே நினைவு கூறுவார்கள். ஆனால் அதற்கு முன்னாலேயே ரேவதியின் ஆஸ்தான உடையான முட்டிக்காலை தாண்டி சிறிது நீளம் இருக்கும் மிடி மிகவும் பேமஸ். ரேவதி அணிந்த மாடல்களில் அப்போது தமிழ்நாடு முழுவதும் அந்த உடை அதிகமாக விற்றது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அப்போது பாவாடை சட்டை அணிவார்கள், அந்த வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தாவணி அணிவார்கள். இந்த 15 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாவாடை சட்டையில் இருந்து மாற்றியது ரேவதியின் ட்ரேட் மார்க் மிடிதான். அதற்கு முன் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களே எனத் தயங்கிய பெண்கள் அது கௌரவமான/சௌகர்யமான உடை என நம்பியது அதை ரேவதி அணிந்து நடித்த பின்னர் தான்.

ரேவதி சுட்டித்தனமான பாத்திரங்களில் இயல்பாக நடிக்கக் கூடியவர். ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன், உன்னை நான் சந்தித்தேன், பகல் நிலவு போன்ற படங்களில் அவர் சுட்டித்தனம் எல்லோரையும் கவர்ந்தது. அதுவும் புன்னகை மன்னனில் ஸ்ரீவித்யாவிடமே அவரைப் போலவே மிமிக்ரி செய்து காண்பிக்கும் இடம், மௌன ராகம் படத்தின் ஆரம்ப காட்சிகள் மட்டும் கார்த்திக் உடனான பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் மனதை விட்டு மறையாதவை.
ஆனால் ரேவதியை அழுத்தமாக குடும்பங்களில் பதிய வைத்தது அவர் ஏற்று நடித்த கஷ்டத்தில் உழலும் கதாபாத்திரங்களே. அறிமுகமான மண்வாசனையில் முறை மாமனுக்காக காத்திருந்து மணமாகாத பெண், கை கொடுக்கும் கையில் கண் தெரியாத பெண், வைதேகி காத்திருந்தாளில் கணவனின் முகத்தைப் பார்க்காமலேயே விதவையான பெண், புதுமைப்பெண்ணில் கணவன் சிறைக்குச் செல்ல அவனை மீட்க போராடும் பெண், குங்குமச்சிமிழில் வரதட்சனை கொடுக்க இயலாமல் திருமணம் தடைப்பட்ட பெண், ஆண் பாவத்தில் திருமணம் தடைப்பட்டதால் கிணற்றில் விழுந்து ஊமையான பெண், உதயகீதத்தில் அண்ணன் சாவுக்கு பழி வாங்கத்துடிக்கும் பெண், லட்சுமி வந்தாச்சுவில் தனக்கு வந்திருக்கும் உயிர்க்கொல்லி நோயைப்பற்றி அறிந்திருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண், இலங்கேஸ்வரனில் சீதை என அழுத்தமான கதாபாத்திரங்கள் அவருக்கு வாய்த்தன.

அந்த மூன்றாண்டுகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம் என்றாலே இயக்குநர்களுக்கு ரேவதிதான் ஞாபகத்துக்கு வருவார். குறுகிய காலத்தில் நல்ல கேரக்டர்களை அதிகமாக நடித்த நடிகை தமிழ்சினிமாவில் சாவித்திரிக்கு அடுத்து ரேவதியாகத்தான் இருக்கும். ரேவதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்தன.

இந்தச் சூழ்நிலையில் தான் திடீரென ஒரு வதந்தி பரவியது. ரேவதி கேமிரா மேன் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக. அது உண்மை எனவும் ஆனது. திரையுலகத்துக்கே அதிர்ச்சி. தன்னுடைய பீக் பீரியடில் ஒரு நடிகை இப்படி செய்துகொள்வாரா என.

ரேவதி திருமணத்துக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து நடிக்க வந்தார். பொதுவாக ஒரு நடிகையைப் பற்றி கிசுகிசு வந்தாலே மார்க்கெட் குறையும் காலம் அது. இப்போது போல காதல்கள் இருந்தாலும் அதற்கேற்ப வாய்ப்பு கூடும் காலமில்லை.

ரேவதி, இரண்டு வருடங்களுக்கு மேலான காலம் கழித்து வந்தும் அவருக்கான நாயகி வேடங்கள் கிடைத்தன. அக்கா.அண்ணி வேடங்கள் அல்லாது படத்தைத் தாங்கும் கதைநாயகி வேடங்கள் கிடைத்தன. அதுதான் அவர் நடிப்பின் மீது திரையுலகம் வைத்திருந்த நம்பிக்கை. பிரபுவுடன் உத்தமபுருஷன், அரங்கேற்ற வேளை ஆகிய படங்களும் கார்த்திக்குடன் இதய தாமரை படத்திலும் நாயகியாக நடித்தார்.

ஆர் வி உதயகுமாருக்கும், ஏன் கார்த்திக்குக்கூட ஒரு திருப்புமுனையாக அமைந்த கிழக்கு வாசல் படத்தில் தாயம்மா என்னும் தாசியாகப்போகும் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து மணிரத்னத்தின் அஞ்சலி, முரளியுடன் இணைந்து நடித்த சின்னப் பசங்க நாங்க என பெயர் சொல்லும் கேரக்டர்கள்.
அதையடுத்து இன்னும் ஒரு சிறப்பாக தேவர் மகனில் பஞ்சவர்ணம் என்னும் கேரக்டரில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் மறுபடியுமில் கணவனை விவகாரத்து செய்யும் பெண்ணாக, தன் கணவர் சுரேஷ்மேனனுடன் புதியமுகத்தில் குறும்பு பெண்ணாக , நாசர் இயக்கிய அவதாரத்தில் பார்வை இழந்த பெண்ணாக, கே எஸ் அதியமான் இயக்கத்தில் வெளியான தொட்டாச்சிணுங்கியில் தன் மீது அன்பாக இல்லையோ என கணவர் சந்தேகப்படும் மனைவியாக என அடுத்தடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

ரேவதியின் சிறப்பே அதுதான். கிராமத்துப் பெண் வேடமானாலும் சரி, அல்ட்ரா மார்டன் பெண்ணாகவும் சரி அவரால் அந்தப் பாத்திரத்துக்குள் புகுந்து விட முடியும். தேவர் மகன் பஞ்சவர்ணம் பாத்திரத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மீனா. ஆனால் அவரால் அந்த கேரக்டருடன் ஒன்றி நடிக்க முடியவில்லை. உடனே கமல்ஹாசன் அவரை அனுப்பிவிட்டு ரேவதியை அழைத்தார். இன்றளவும் அந்தப் படத்தில் அவர் அப்பாவியாக பேசிய ”வெறும் காத்துத்தாங்க வருது” மறக்க முடியாததாக இருக்கிறது.

1995-96 வாக்கில் அவர் சமுதாயப்பணிகளில் ஈடுபட்டார். 96 தேர்தலில் தென் சென்னைத்தொகுதி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று சுமார் 43,000 வாக்குகள் பெற்றார். தொடர்ந்து அவரது மனமொத்த சினேகிதிகளான ரோஹினி,கமீலா நாசருடன் இணைந்து பான்யான் என்னும் அமைப்பை நடத்தி வந்தார்.
அதன்பின்னர் மணிரத்னத்தின் இருவர், பாரதிராஜாவின் தாஜ்மஹால் என அம்மா வேடங்களுக்கு மாறினார். கண்ட நாள் முதல், ஒஸ்தி ஆகிய படங்களில் வழக்கத்துக்கு மாறான அம்மா வேடங்களில் நடித்தார்.

90களில் புதிதாக நடிகைகளை பேட்டி எடுக்கும் போது சம்பிரதாயமாக கேட்கும் கேள்விகளில் நீங்கள் யாரைப்போல் வர விரும்புகிறீர்கள் எனக் கேட்பார்கள். பெரும்பாலான பதில் ரேவதி என்பதாகத்தான் இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரேவதி. எப்படி 60களுக்கு ஒரு சாவித்திரியோ அதுபோல 80களுக்கு ஒரு ரேவதி.

March 28, 2016

விவியன் ரிச்சர்ட்ஸ்மென்பொருள் துறையில், மனித வள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டேன்டெக்னிக்கல் இண்டர்வியூ ஓக்கே. ஆனா பர்சனல் இண்டர்வியூவில எப்படி ஆள செலக்ட் பண்ணுவீங்கஎன்று.
கிட்டத்தட்ட பாதி கேண்டிடேட்டுகள அவங்க உள்ள நுழையும் போதே செலக்ட் பண்ணிவிடுவோம் என்றார். எனக்கு அதிர்ச்சி. தொடர்ந்து அவர், சிலர் பரபரப்பாக உள்ளே நுழைவார்கள், வழியெல்லாம் இடித்துக் கொண்டு வருவார்கள், சிலர் வலிந்து வரவழைக்கப்பட்ட புன்னகையோடு கால்குலேட்டிவ்வாக அளந்து நடந்து வருவார்கள். ஆனால் யார் ரிலாக்ஸாக உள்ளே நுழைகிறார்களோ அவர்களை எங்களுக்கு உடனே பிடித்துவிடும் என்றார்.

தன் திறமைக்கு ஏற்ற இடம் இது, இதற்கான முன் தயாரிப்புகள் என்னிடம் உண்டு. இங்கே என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியும். என்னை எடுக்காவிட்டால் இழப்பு இவர்களுக்குத்தான் என்ற எண்ணம் உடையவர்களே ரிலாக்ஸாக இண்டர்வியூ அறைக்குள் நுழைய முடியும். உண்மையாகவே அப்படி இல்லாமல் நடித்துக்கொண்டு நுழைபவர்களை இரண்டு மூன்று கேள்விகளில் கண்டுபிடித்துவிடுவோம் என்றார்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பேட்ஸ்மெனின் ஞாபகம் மனதிற்குள் வந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மெனும் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் புகும் போது ஒவ்வொரு மாதிரி உள்ளே வருவார்கள். சிலர் பேட்டை கையால் சுழட்டி காற்றில் வட்டம் போட்டுக்கொண்டு வருவார்கள். சிலர் குடுகுடுவென ஓடி வருவார்கள். சிலர் பேட்பிடிக்கும் முன் பலவகையான உடற்பயிற்சிகளையும் செய்து காண்பிப்பார்கள். நமது ஸ்ரீகாந்த் சூரியனைப் பார்த்துவிட்டு வருவார். டே நைட் போட்டிகளின் சேஸிங்கில் அவர் எதைப்பார்த்து விட்டு வருவார் எனத் தெரியவில்லை.
ஆனால் அவரோ, வேலை ஏதுமில்லாத ஞாயிற்றுக்கிழமையில் மிக லேட்டாக எழுந்தரித்து பல் துலக்க பிரசுடன் ஒரு சோம்பல் நடை நடப்போமே அதுபோலத்தான் மைதானத்துக்குள் நுழைவார். என்ன எதிரணி கேப்டனுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும்தான் பதட்டமாய் இருக்கும். மைதானத்துக்குள் நுழைவதை விடுங்கள். அடுத்து விக்கெட் விழுந்த உடன் இறங்குவதற்கு தயாராக இருக்கும் பேட்ஸ்மென்கள் எல்லாவிதக் கவசங்களையும் அணிந்து ஸ்டிஃப்பாக உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவரோ மதிய சாப்பாடு முடிந்த கல்யாண வீட்டில் சேர்களை வட்டமாக எடுத்துப்போட்டு சோம்பலாக அரட்டையடித்துக் கொண்டிருப்பார்களே அது போல கேசுவலாகத் தான் உட்கார்ந்திருப்பார்.

அவர் அறிமுகமான நாள் துவங்கி ஓய்வு பெறும் வரையிலும் எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஆடுவதற்கு சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட்தில்லை. அவருக்கு பந்து வீச பவுலர்களும், பீல்டிங் வியூகம் அமைக்க கேப்டன்களும் தான் ஓவர்டைம் எடுத்து யோசித்தார்கள்.

அவர்தான்  இந்த நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் பிளேயர்களுள் ஒருவராக கிரிக்கெட் வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், விஸ்டனால் இந்த  நூற்றாண்டின் சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், சர் பட்டம் பெற்றவரும், தன் அபார ஆட்டத்தால் முதல் இரண்டு ஒருநாள் உலக கோப்பை பைனல்களில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவரும், 50 டெஸ்டுகளுக்கு கேப்டனாக பணிபுரிந்து ஒரு தொடரைக் கூட இழக்காதவருமான சர் ஐசக் விவியன் அலெக்ஸாண்டர் ரிச்சர்ட்ஸ்.

உண்மையில் மேற்கூறிய பாரா ஏற்படுத்தும் பிரமிப்பை விட விவியன் ரிச்சர்ட்ஸின் ஒரு அருமையான ஆப் ட்ரைவ் ஏற்படுத்தும் பிரமிப்பு அதிகமாக இருக்கும் என்பதே அவரின் சிறப்பு.

ரிச்சர்ட்ஸ் 1974ல் மேற்கிந்தியத் தீவுகளுக்காக களமிறங்கி ஓய்வு பெற சில ஆண்டுகள் இருக்கும் வரை கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மெனாக இருந்தார். 1975ல் நடைபெற்ற முதல் ஒருநாள் உலக்கோப்பை பைனலில் மூவரை ரன் அவுட் செய்தும், அடுத்த் 79 உலக கோப்பை பைனலில் சதமடித்தும் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 83 உலக்கோப்பையிலும் இந்தியாவின் 183 ரன்களை சேஸ் செய்யும் போது 33 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கும் போது அப்போதைய காலகட்டத்தின் சிறந்த கேச்சாக கருதப்பட்ட கபில்தேவி கேச்சால் ஆட்டமிழந்தார்.
ரிச்சர்ட்ஸின் பேட்டிங் ஸ்டைலானது மிக சிம்பிளானது. வெகு ரிலாக்ஸாக கிரீஸில் நிற்பார். பந்தைக் கணித்து அதற்கேற்ற கிரிக்கெட் ஷாட்டை ஆடுவார். ரிச்சர்ட்ஸின் உடல் வலு அபாரமானது. அந்த வலு கரெக்டான ஷாட்டுடன் இணையும் போது பந்து தெறித்துப் பறக்கும்.
ரிச்சர்ட்ஸ் பெரும்பாலும் ஸ்ட்ரெயிட் பாட்டால் தான் ஆடுவார். ரன் சேர்ப்பதற்காக அன் கன்வென்சனல் ஷாட்டுகளை ஆடியதில்லை. ஏன் ஸ்வீப் ஷாட்கூட ஆடமாட்டார். தான் ஆடிய எந்த மேட்சிலும் ஹெல்மெட் அணியாத ரிச்சர்ட்ஸ் துளிக்கூட தயங்காமல் புல் மற்றும் ஹூக் ஷாட்டுகளை ஆடுவார்.

அதுவும் ரிச்சர்ட்ஸ் ஆடிய காலத்தில் டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், ஹேட்லி, இம்ரான் கான், போத்தம் என சிறப்பாக பவுன்சர்கள் வீசும் பவுலர்கள் இருந்தார்கள். அவர்கள் கூட ரிச்சர்ட்ஸ்க்கு பவுன்சர் வீச பயப்படுவார்கள்

ரிச்சர்ட்ஸ் ஸ்பின்னர்களை ஆடும் விதமும் சிறப்பாக இருக்கும். ஆப் ஸ்பின் எனில் பந்தை சுழலச் செய்து, உள்ளே வரும் போது லெக் ஸ்டெம்பிற்கு வெளியே பேக் புட்டில் கால்களை கொண்டு வந்து, பந்தை ஓங்கி ஒரு அறை அறைவார். அதற்கடுத்து சில்லி பாயிண்ட், சில்லி மிடாப் பீல்டர்கள் எல்லாம் தெறித்து ஓடி விடுவார்கள். லெக் ஸ்பின்னர்களை அழகாக ஆன் ட்ரைவ் ஆடுவார். ஷார்ட் ஆம் புல் ஷாட்கள் அவரது ஸ்பெசாலிட்டி.

ரிச்சர்ட்ஸின் ஷாட்டுகளிலேயே பிடித்தமான ஷாட் என்றால் நடராஜா ஷாட் தான். ஷார்ட் பிட்ச்சாக விழுந்து இடுப்பு வரை எகிறும் பந்துகளை தன் வலதுகாலை தரையில் திடமாக ஊன்றி இடது காலை நடராஜரைப் போல மடக்கி முழு உடல் ஆற்றலையும் பேட்டிற்கு தோள்கள் மூலம் கடத்தி ஒரு வீசு வீசினார் என்றால், எங்கே பந்து உடைந்து விடுமோ என்று தோன்றும்.  

ரிச்சர்ட்ஸின் பலமே எந்த சூழ்நிலையிலுமே தன்னுடைய ஆட்டத்தைத் தான் ஆடுவாரே தவிர சிச்சுவேசனுக்கு ஏற்றார் போல ஆடமாட்டார். இரண்டு ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இறங்கினாலும் சரி, 200 ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இறங்கினாலும் சரி பபுள்கம்மை மென்றுகொண்டே ரிச்சர்ட்ஸ் தன்னுடைய வழக்கமாக ஆட்டத்தைத் தான் ஆடுவாரே தவிர ஓவர் டிபன்சிவ்வாகவோ, ஓவர் அக்ரசிவ்வாகவோ ஆடமாட்டார்

கிளைவ் லாயிட் கேப்டனாக இருந்த காலம் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கடைசிக்கட்ட பொற்காலம் எனலாம். ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல் என அதி பயங்கர வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்வின் காளிச்சரன், கிரினீட்ஜ், ஹெய்ன்ஸ் என பேட்ஸ்மென்கள் ஜெஃப் துஜான் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என ஜாம்பவான்களால் ஆன டீம். அந்த டீமிலேயே ரன் மெஷின் என அன்போடு அழைக்கப்பட்டவர் விவியன் ரிச்சர்ட்ஸ். கிளைவ் லாயிட் வைத்திருந்த ஆயுதங்களிலேயே வஜ்ராயுதம் ரிச்சர்ட்ஸ்தான்.
ரிச்சர்ட்ஸ் மேற்கு இந்திய தீவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அந்த அணி வெல்ல முடியாத அணியாக இருந்தது. மற்ற அணிகள் டெஸ்டில் ட்ராவுக்குத்தான் முயற்சி செய்யும். ஆனால் தொடர்ந்து அணியின் சிறந்த வீரர்கள் முக்கியமான கார்னர், ஹோல்டிங்,ராபர்ட்ஸ் ஆகியோரின் ஓய்வும் கிரினீட்ஜ் போன்றோரின் வயது முதிர்வும் அணிக்கு சற்று இறக்கத்தை ஏற்படுத்தியது. ரிச்சி ரிச்சர்ட்சன், கார்ல் ஹூப்பர், லோகி, வால்ஸ், பேட்ரிக் பேட்டர்சன் ஆகியோரது வருகை டெஸ்ட் அணியைத் தாங்கிப் பிடித்தது என்றாலும் ஒரு நாள் போட்டிகளில் அணிக்கு வெற்றி சதவிகிதம் குறையத் தொடங்கியது

இந்த காலகட்டத்தில் மேற்கிந்திய தீவிலிருந்து ஏன் முன்பு போன்று மிகச்சிறந்த பவுலர்கள் வரவில்லை என்பதற்கு காரணம் உண்டு. மேற்கிந்திய தீவுகளின் திறமைசாலிகள் எல்லாம் பணம் கொழிக்கும் விளையாட்டான பேஸ்பால் மற்றும் பேஸ்கட் பால் விளையாடப் போனார்கள். ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்புதான் கர்ட்லி அம்புரோஸ் என்ற மிகச்சிறந்த பவுலர் வெஸ்ட் இண்டீஸுக்கு கிடைத்தார்.
ரிச்சர்ட்ஸ் கேப்டனாக இருந்த 10 ஆண்டுகளில் அணி தேய்ந்து கொண்டே வந்தது. இன்றும் கூட அது தன்னுடைய 1960,70களிலும் 80களின் ஆரம்பத்திலும் அடைந்த சிறப்பை கனவு கூட காண முடியவில்லை. ஆனால் இன்றும் கூட அந்த அணியை வெறுப்பவர் யாருமில்லை. இதற்கு  பல ஆண்டுகளாகவே அந்த அணியினர் அரகண்டாக எதிர் அணிகளிடம் நடந்து கொள்ளாததும் ஒரு காரணம். ஸ்லெட்ஜிங் போன்றவற்றை அவர்களாக எப்போதும் ஆரம்பிப்பதில்லை. எங்கள் விளையாட்டை நாங்கள் அனுபவித்து விளையாடுகிறோம் என்ற உணர்வுடன் மட்டுமே அவர்கள் விளையாடி வந்தார்கள்.

அணி வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்த போது கண்ணியமாக நடந்து கொள்வது ஒன்றும் பெரிதில்லை. ஆனால் இறங்குமுகத்தில் இருக்கும் போதும் அதே கண்ணியத்துடன் அவர்கள் நடந்து கொண்டார்கள். அந்தப் பாரம்பரியத்தைக் காக்கும் கண்ணியாக ரிச்சர்ட்ஸ் இருந்தார்.  விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்ப்போம். அதுதான் எங்கள் கொள்கை என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு ஒரு மிக முக்கிய எடுத்துக்காட்டு 1987 உலக கோப்பைப் போட்டிகள்.

அதில் பி பிரிவில் பாகிஸ்தான்,இங்கிலாந்து,மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு முக்கியமான போட்டியில் பாகிஸ்தானும் மேற்கு இந்திய தீவுகளும் மோதின. ஆட்டத்தின் கடைசி ஓவர். பாகிஸ்தான் வெற்றிபெற சில ரன்களே தேவை. ஆனால் அப்போது களத்தில் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் திறமைசாலியான அப்துல் காதிர் மறுமுனையில் இருந்தார். அவர் பந்து வீசும் முன்பே பல அடிகள் ஓடிவந்து விடுவார். கோர்ட்னி வால்ஸ் பந்து வீச வந்தபோது அப்துல் காதிர் கிட்டத்தட்ட பாதி பிட்ச் வரை ஓடி வந்துவிட்டார். வால்ஸ் நினைத்திருந்தால் அந்தப் பந்தை வீசாமல் எளிதாக ரன் அவுட் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் ஸ்போர்ட்மென் ஸ்பிரிட்டுடன் உள்ளே வந்து நில் என கண்ணால் சொல்லிவிட்டு அடுத்த பந்தை வீசினார். அதை ஆமோதித்தார் ரிச்சர்ட்ஸ். அந்தப் போட்டியில் இதனால் மேற்கு இந்தியத்தீவுகள் தோல்வி அடைந்து அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது. அப்போதும் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் சூயிங்கத்தை மென்று கொண்டே நிதானமாக களத்தை விட்டு வெளியேறினார் ரிச்சர்ட்ஸ்.   
எல்லோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்த அணியில் பகுதிநேர ஸ்பின்னராக இருந்தவர் ரிச்சர்ட்ஸ். ஆப் ஸ்பின் வீசுவார். தேவையில்லாமல் அம்பயரிடம் அப்பீல் செய்ய மாட்டார். அதே போல எல்பிடபிள்யூ தவிர, அவருக்கு அவுட் எனத் தெரிந்து விட்டால் களத்தை விட்டு வெளியேறி விடுவார்

வேலை/தொழிலைப் பொறுத்தவரை கட்டாயம் ஜெயிக்க வேண்டிய அவசியம் உண்டு. ஆனால் விளையாட்டில் வெற்றி முக்கியமா? ஆட்டம் முக்கியமா? வெற்றி மற்றுமே முக்கியம் எனும் போது நாளடைவில் அந்த விளையாட்டின் தனிப் பண்புகள் மாறிவிடும். எப்போதும் தோல்வி அடைந்து கொண்டிருந்தாலும் அந்த விளையாட்டே சலிப்புத் தட்டிவிடும். அது ஒரு சிக்கலான கேள்விதான். வெற்றியை மட்டுமே நோக்கிய ஆட்டம், சூதாட்டம் போன்றவை 90க்குப் பின்னால் கிரிக்கெட்டை ஆக்ரமித்தன. ரிச்சர்ட்ஸ் அந்த காலகட்டத்திற்கு முன்னரே ஓய்வு பெற்றுக்கொண்டார்

ஒரு ராஜாவுக்குரிய மரியாதையை அப்போதைய கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் ரிச்சர்ட்ஸ்க்கு கொடுத்து வந்தார்கள். இப்போதும் கூட கிரிக்கெட்டின் ராஜா என்றால் அந்த செட் மக்கள் அனைவருக்கும் ரிச்சர்ட்ஸ்தான் ஞாபகம் வருவார்.

March 27, 2016

இயக்குநர் ஹரி2002 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டுக்கு விக்ரமின் ஜெமினி, விஜய்யின் தமிழன், பிரசாந்தின் தமிழ் ஆகிய படங்கள் வெளியாகின. ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வந்த ஜெமினிக்கு ஏவிஎம் வழக்கம் போல ஏராளமான விளம்பரங்களைச் செய்தது. விஜய்க்கு அதற்கு முந்தைய ஆண்டுப்படங்களின் வெற்றியால் உருவாகியிருந்த கூட்டம் துணையாய் இருந்தது. சரணின் உதவி இயக்குநரான ஹரி இயக்கிய தமிழுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் படம் வெளியாகி ஒரு வாரத்தில் படம் பற்றிய நல்ல அபிப்ராயம் பரவி படம் வெற்றி பெற்றது. ஒரு தாதாவால் ஒரு எந்த வம்புதும்புக்கும் போகத் தலைப்படாத குடும்பத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதில் இருந்து எப்படி அக்குடும்பம் வெளிவருகிறது என்பதும்தான் கதை. மதுரைப் பிண்ணனியில் அமைந்த கதை. அந்தப் படத்தில் மதுரைப் பகுதிப் பெயர்கள் மற்றும் இட விபரங்கள் துல்லியமாக உபயோகப் படுத்தப்பட்டிருந்தன.

ஹரி படங்களின் முக்கிய அம்சமே இதுதான். தொடர்ந்து அவர் படங்களில் ஏதாவது ஒரு ஊர் முன்னிறுத்தப்படும். அந்த ஊரிலேயே பல ஆண்டுகள் தங்கி இருந்தவர் போல அந்த நிலப்பரப்பு படங்களில் உபயோகப் படுத்தப்படும். சாமி (திருநெல்வேலி), கோவில் (நாகர் கோவில்), அருள், பூஜை (கோவை), தாமிரபரணி, சிங்கம் (தூத்துக்குடி), ஆறு (சென்னை), வேல் (திண்டுக்கல்) என கதை நடைபெறும் களம் அந்த வட்டார சொல்லாடல்களோடு, பழக்க வழக்கங்களோடு இடம் பெறும்.
தமிழ் படத்தின் வெற்றி, ஹரிக்கு பாலசந்தர் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. விக்ரமின் கேரியருக்கு பூஸ்டாய் அமைந்த சாமி தான் அது. சாமியே ஹரியின் இத்தனை ஆண்டுகால தாக்குப் பிடித்தலுக்கு அஸ்திவாரமாய் அமைந்த படம். படத்தின் வெற்றிவிழாவில் ஆறுச்சாமி கேரக்டர் எனக்கு அமைந்திருந்தால் எப்படி அமைந்திருக்கும் என்று ரஜினிகாந்தே சிலாகித்த படம். ஷங்கர், சாமி படத்தைப் பார்த்த பின்னர்தான் அந்நியன் படத்திற்கு விக்ரம் சரியாக வருவார் என தீர்மானித்தார்.

அடுத்து சிம்புவை வைத்து இயக்கிய கோவிலும், விக்ரமை வைத்து இயக்கிய அருளும் சுமாரான வெற்றியையே பெற்றது. ஹரி திட்டமிட அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாலும் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி முடித்துவிடுவார். அதனால் படம் குறைவான நாட்கள் ஓடினாலும் நஷ்டத்தை தந்துவிடாது.

2005ஆம் ஆண்டில் சரத்குமார் இருவேடங்களில் நடிக்க ஐயா படத்தை இயக்கினார். இதில் தான் நயன்தாராவை அறிமுகம் செய்தார். இந்தப்படம் விஜய்யின் திருப்பாச்சியோடு இணைந்து வெளியானது. பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு லாபம் கொடுத்த படம். அதே ஆண்டில் சூரியாவை வைத்து ஹரி இயக்கிய ஆறு படமும் வெளியானது. சாக்லேட் பாயாக இருந்த சூர்யாவுக்கு ஆக்சன் அவதாரம் கொடுத்தவர் பாலா என்றால், ஒரு கமர்சியல் ஹீரோவுக்குரிய இமேஜ் ஏற்பட காரணமாய் இருந்தவர்களில் முக்கியமானவர் ஹரி. அதன்பின் 2007ல் விஜயின் போக்கிரியோடு ஹரியின் தாமிரபரணி மோதியது. மிகப்பெரும் வெற்றி பெற்ற போக்கிரியோடு வெளியானாலும் விஷால் நடித்த தாமிரபரணியும் களத்தில் நின்றது. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து வேல் படத்தை இயக்கி வெளியிட்டார் ஹரி. இப்போதும் விஜயின் அழகிய தமிழ்மகனுடன் போட்டி. இதில் வேலுக்கே ஜெயம். இதன்பின் பரத்தை வைத்து சேவல் படத்தை இயக்கினார்.இப்படம் மக்களை கவரவில்லை.
அதன்பின்னர் இரண்டாண்டுகள் ஸ்கிரிப்ட் ஒர்க் செய்து ஹரி இயக்கிய படம் சிங்கம். ஹரி படப்பிடிப்புக்குப் போகும் முன் செய்யும் முன் தயாரிப்பே அவர் வெற்றிகரமான கமர்சியல் இயக்குநராக தாக்குப்பிடிக்க காரணம். சிங்கம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். அதன்பின் தனுஷை வைத்து இயக்கிய வேங்கை நன்றாகப் போகவில்லை. பின் சிங்கம் 2 இதுவும் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. சென்ற ஆண்டு மீண்டும் விஷாலை வைத்து  பூஜை படத்தை இயக்கினார். அது விஜய்யின் கத்தி படத்தோடு வெளியானது. ஆனால் பெரிய வெற்றி பெறவில்லை.

ஹரி 13 ஆண்டுகளில் 13 படங்களை இயக்கியுள்ளார். 2000க்குப் பின் வந்த இயக்குநர்களில் 10 படங்களுக்கு மேல் இயக்கிய மிகச்சிலரில் ஹரியும் ஒருவர். ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,அஜீத்,விஜய் என்று இந்த 13 ஆண்டுகளில் முண்ணனியில் இருந்த ஒருவரைக்கூட இயக்காமல் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.
கமர்சியல் படங்கள் பார்க்கும் போது நம் மூளையை சிந்திக்க டைரக்டர் விடக்கூடாது என்பது மிக முக்கியம். ஹரி அதனை செவ்வனே செய்யக்கூடிவர். ஆனால் மூளை சிந்திக்கும் அவகாசமானது வருடங்கள் ஓட ஓட குறைந்து கொண்டே வருகிறது. 80 மற்றும் 90 களில் தனி காமெடி டிராக், கதைக்குச் சம்பந்தமில்லாத காட்சிகள் வந்தால் கூட யாரும் யோசிக்கவில்லை. ஆனால் தற்போது சிறிய இடைவெளி கிடைத்தாலும் இது சாத்தியமா என யோசிக்கும் மூளையுடைவர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே கமர்சியல் படத்துக்கு காட்சி நகரும் வேகம் மிக அத்தியாவசியமாகிவிட்டது. இங்குதான் ஹரி தன்னை மாற்றிக் கொண்டே வருகிறார். அவரது ஆரம்ப கால படங்களான தமிழ்,சாமி,கோவில் போன்றவற்றில் காட்சி நகரும் வேகம் குறைவாகவே இருக்கும். ஆறு படத்தில் காட்சி நகரும் வேகம் அதிகமாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் மித வேகமாகவே காட்சி நகர்ந்தது.

சிங்கம் படத்தில் இருந்து ஹரி டாப் கியருக்குச் சென்றார். அடுத்த காட்சியின் வசனம் முந்தைய காட்சி தொடங்குமுன்னே ஒலிக்கத் தொடங்கியது. யாரும் நடக்கவில்லை. ஏறக்குறைய ஓடினார்கள். வேங்கை படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் கூட வெகு வேகமாக இருந்தன. சிங்கம் 2 வில் இன்னும் வேகம் கூடியது. அதில் செண்டிமெண்ட் காட்சிகள் கூட வேகமாக இருந்தன.

பூஜை இதில் உச்சம் எனலாம். படமே பாஸ்ட் பார்வர்ட் மோடில் எடுக்கப்பட்டது போல் இருந்தது. பொதுவாக பாடல்கள் நான்கு முதல் நான்கரை நிமிடங்கள் இருந்தால் ஹரியின் படங்களில் அதிகபட்சம் மூன்று-மூன்றரை நிமிடத்தில்  பாடல்காட்சிகள் முடிந்து விடும். பாடலின் கடைசி வரியும் அடுத்த காட்சியின் முதல் வரியும் சில சமயம் ஒன்றாகக் கூட ஒலிக்கும்.

ஆனால் இப்போதைய, படம் பார்க்கும்போதே ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் தலைமுறைக்கு இதுதான் சரி. அவர்கள் தங்கள் போனை உபயோகிக்காமல் இருக்கச் செய்வதில்தான் படத்தின் வெற்றியே இருக்கிறது. ஹரி வேகமாக காட்சிகளை கடத்தி அதை சாதிக்கிறார். ஸ்மார்ட் போன் என்றவுடன் ஹரியின் கதாநாயகர்கள் போனை உபயோகிக்கும் லாவகம்தான் நினைவுக்கு வரும். உண்மையிலேயே போனை ஸ்மார்ட்டாக உபயோகிப்பவர்கள் ஹரியின் நாயகர்கள்தான். ஹரி பட டிஸ்கசனின் போது எது இருக்குமோ இல்லையோ பலவித போன்களின் மேனுவல்கள் நிச்சயம் இருக்கும் போல.

ஹரியின் கதாநாயகிகளிலும் காலத்திற்கு ஏற்ப மாற்றம் வந்து கொண்டேயிருக்கிறது. ஆரம்ப காலப் படங்களில் தாவணி அணிந்த நடுத்தர குடும்பத்துப் பெண்களையே தொடர்ந்து நாயகியாக்கினார். பின்னர் காலமாற்றத்தில் படம் பார்க்க வரும் நவீன இளைஞர்களின் உருவகத்திற்கு ஏற்ப நவீன உடை அணியும் பணக்கார பெண் கேரக்டர்களை நாயகியாக்கினார். ஆனால் அந்த நாயகியரை குடும்பப்பாங்காகவே சித்தரிப்பார். நாயகனை குடும்பத்திற்கு மிக அடங்கியவராக சித்தரிப்பார்.

ஹரியின் படங்களில் சேவல் படத்தைத் தவிர எல்லாப்படங்களிலும் நாயகனானவன் குடும்பத்திற்கு அடங்கி, அவர்களின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பவனாகவே பாத்திரப்படைப்பு இருக்கும். சேவல் தோல்வி அடைந்ததில் இருந்து ஹரி இன்னும் அழுத்தமாக அவரின் பாத்திரப்படைப்பை பிடித்துக் கொண்டார். ஒரு வகையில் ஹரி தமிழக குடும்ப அமைப்பை காப்பாற்றும் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது அவரின் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் வருகைக்கும் காரணமாக இருக்கிறது.

 ஹரி இயக்கிய படங்களின் வசனங்களும் தமிழ்நாடு முழுவதும் ஊடுருவி விடும். சாமி படத்தின் ஒருச்சாமி இருச்சாமி”, ”அவன் பேசும் போது காது ஆடுதில்லே அவன் நம்ம சாதிக்காரன்லே”, “துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்போன்ற மாஸ் வசனங்கள்  ஆகட்டும், ஆறு படத்தில் போகிற போக்கில் வரும் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” ஆகட்டும் தமிழகத்தின் எல்லா மட்டங்களிலும் பேசப்படுபவை. சிங்கம் படத்தின் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் பஞ்ச் டயலாக்கான சிங்கத்த காட்டுல பார்த்திருப்ப பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறது.  
ஹரியின் பலம் தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்திருப்பது மற்றும் தனக்கு என்ன தேவை என்று உணர்ந்திருப்பது. அதனால் தான் ஒரு இயக்குநரின் வேலையைப் பற்று அறிந்து, அதை சப்போர்ட் செய்ய சினிமா பிண்ணனியில் இருந்து வந்த பெண் தான் வேண்டும் எனச் சொல்லி சினிமா குடும்பத்தில் வந்த பிரித்தா விஜயகுமாரை மணந்து கொண்டார். தன் படத்தை பார்க்க வருகிறவர்கள் யார்? அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதிலும் தெளிவானவர் ஹரி.
இப்போது சூர்யாவை வைத்து சிங்கம் 3 படத்தை இயக்கிக்கொண்டு உள்ளார். சூர்யாவுக்கும் இந்த இரண்டாண்டுகளாக சிங்கம் 2 விற்குப்பின்னர் சொல்லிக் கொள்ளும் படி வெற்றிப்படம் கிடைக்கவில்லை. சமீபத்தில் சிங்கம் 3 யின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. வெளியாவதற்கு முன் எப்படி இருக்குமோ என பலரும் கற்பனை பண்ணிக்கொண்டிருக்க சிங்கமுகத்தில் சூர்யாவின் முகத்தை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டார். இணையவாசிகள் அதனை கிண்டல் செய்தார்கள், ஆனால் ஹரியின் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கும் மக்களுக்கு அது ரீச்சானது.

இரண்டு பாகங்களிலும் சூர்யா விற்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் ஆகவில்லை. இதிலாவது ஆகுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள், கூடுதல் அட்ராக்‌ஷனாக போலிஸ் அதிகாரி வேட்த்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். என்ன கதையாக இருந்தாலும் சிங்கம் 3 யிலும் குடும்பத்திற்கு அடங்கிய, பெண்களை மதிக்கக்கூடிய, மொபைலை இன்னும் லாவகமாகப் பயன்படுத்தக்கூடிய, ஓட மட்டுமே தெரிந்த ஒரு போலிஸ் அதிகாரியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

March 23, 2016

இயன் போத்தம்

1987 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ரிலையன்ஸ் உலககோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது அந்த நாட்டு மக்களை விட அதிக வருத்தப்பட்டவர் எங்கள் ஏரியா கிரிக்கெட் டீம் கேப்டன் குமார் அண்ணன் தான். ஏனென்றால் அவர் இயன் போத்தமின் தீவிர ரசிகர். அந்நாள் வரை அவர் போத்தம் ஆடிய எந்த மேட்சையும் நேரடியாகவே தொலைக்காட்சியிலோ பார்த்ததில்லை. ஆனாலும் அவர் இங்கிலாந்து அணி ஆடிய ஆட்டங்களின் வர்ணனையை பிபிசி ரேடியோவில் கேட்டும், அது தொடர்பான செய்திகளையும் படித்தே போத்தத்தின் பெரிய ரசிகராய் மாறி இருந்தார்.

அப்போது லைப்ரரிக்கு வரும் காப்பி தவிர எங்கள் ஊருக்கு  மூன்றே மூன்று ஸ்போர்ட்ஸ்டார் புத்தகங்கள் தான் வரும். அதில் ஒன்றை குமார் அண்ணனும் இன்னொன்றை ஸ்டேட் பாங்க் மேனேஜர் ஒருவரும் வாங்குவார்கள். மூன்றாவது காப்பி பஸ்ஸ்டாண்ட் கடையில் தொங்கிக்கொண்டேயிருக்கும். வெளியூர் பிரயாணிகள் யாராவது அதை வாங்குவார்கள். இல்லையெனில் ரிட்டர்ன் தான். அந்த வாரம் குமார் அண்ணன் வெளியூர் சென்றுவிட்டார். பஸ்ஸ்டாண்டில் இருந்த 2 காப்பிகளை எப்போதாவது, பாலோ ஆன் வாங்கியும் ஜெயிக்கும் அணியைப் போல இரண்டு பேர் வாங்கிச் சென்று விட்டார்கள். குமார் அண்ணன் ஊரிலிருந்து வந்ததும் புத்தகம் இல்லையென தெரிந்து டென்சன் ஆகிவிட்டார், ஏனென்றால் அந்த வாரம் நடுப்பக்க நாயகன் போத்தம். அடுத்த பஸ்ஸிலேயே மதுரைக்குச் சென்று காலேஜ் ஹவுஸ் புத்தகக் கடையில் ஒன்றுக்கு இரண்டு காப்பியாக வாங்கி வந்தார்.

போத்தம் ஆறடிக்கும் சற்று கூடுதலான உயரம், ஆனால் அந்த உயரம் சட்டென தெரியாதபடி சற்று பருமனான உடல்வாகு. ஹாலிவுட் ஹீரோ போன்ற முகவெட்டு. அந்த நடுப்பக்கப் படத்தில் நீல நிற ஜீன்ஸும், சிவப்பு சட்டையும் அணிந்து அதற்கு மேல் ஜீன்ஸால் ஆன சட்டையை ஜெர்கின் போல பட்டன் போடாமல் அணிந்திருப்பார். சீரான தாடி, கூலிங் கிளாஸ், கழுத்தில் தொங்கும் கேமரா உடன் ஒரு மலைப்பாறையில் ஸ்டைலாக அவர் உட்கார்ந்திருக்கும் அந்த போஸ்  யாரையும் வசீகரித்துவிடும்.

அந்த போஸ்டரை வீட்டில் ஒட்டி தினமும் சூடம் காண்பிக்காத குறை தான். அந்த அளவுக்கு போத்தமின் மீது பிரியம் கொண்டிருந்த குமார் அண்ணனுக்கு உலக கோப்பை போட்டிக்கு போத்தம் வராதது பெரிய மன வருத்தம் கொடுத்தது. 

இதுவரை இங்கிலாந்துக்கு விளையாடிய ஆல் ரவுண்டர்களில் போத்தமின் இடத்தை நிரப்ப இன்று வரை ஆள் இல்லை. பொதுவாகவே எந்த துறையிலும் எதிர் எதிர் துருவங்களாக இருமுனைப் போட்டிதான் பெரிதும் பேசப்படும். சினிமா மற்றும் கிரிக்கெட்டில் இது அதிகம். கிரிக்கெட்டில் சச்சின்லாரா, வார்னேமுரளிதரன் என பல உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பேர் ஒரே துறையில் ஒரே சமயத்தில் போட்டியாளர்களாக இருந்தது எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த இம்ரான் கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் கபில்தேவ் தான். இந்த ஆல்ரவுண்டர்களை ரீ பிளேஸ் செய்ய அந்த அந்த நாட்டில் யாரும் உருவாகவில்லை. ஏன் உலக அளவில் கூட யாரும் உருவாகவில்லை.

குமார் அண்ணன் போத்தமை பற்றி சொல்லும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் 81 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரைப் பற்றித்தான். அந்த தொடருக்கு போத்தம் தான் கேப்டன். ஒரு டெஸ்டில் தோல்வியும், ஒன்றில் டிராவையும் செய்து இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருந்தது. சில சூழ்நிலைகளால் போத்தம் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார்.  மைக் பியர்லி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்றாம் டெஸ்டில் சோதனையாக பாலோ ஆன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. பேட்ஸ்மென்கள் அனைவரும் பெவிலியன் திரும்பி விட்டனர். பந்து வீச்சாளர்களுடன் இணைந்து போத்தம் ஒரு 145 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. பின் ஆஸ்திரேலிய அணியை அந்த ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அடுத்த 2 டெஸ்டுகளையும் போத்தமின் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் வென்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கிட்டத்தட்ட தனி ஒருவனாக நின்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டினார் போத்தம். இதே போலத்தான் ட்ராவிட்டும் லக்‌ஷ்மணனும் இணைந்து கல்கத்தாவில் பாலோ ஆன் வாங்கிய அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிராய் ஜெயிக்க வைத்தார்கள்.

போத்தமின் பேட்டிங் ஸ்டைலானது மிகவும் சிம்பிளானது. ஸ்டைலான பேட்ஸ்மென் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவரது அணி சக வீரர் டேவிட் கோவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு பக்கத்தில் கூட அவரால் வரமுடியாது. ஆனால் எஃபெக்டிவான பேட்ஸ்மென். பந்தை சரியாக கணித்து போர்ஸாக அடிக்கக்கூடியவர், பெரும்பாலும் மிட் ஆன் மற்றும் மிட் ஆப் திசையில் பவர் ஷாட் ஆடுவார். நல்ல லெங்தில் வீசப்படும் பந்தைக்கூட அந்த திசையில் பறக்க விட்டு விடுவார். ஹூக் அண்ட் புல் ஷாட் அடிப்பதில் கில்லாடி. கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் ட்ரைவ் ஸ்டைலிஷாக இருக்காது ஆனால் ஸ்கொயர் கட் பொறி பறக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ரிவர்ஸ் சுவீப்பை அப்போதே ஆடியவர். அதை வேகப்பந்து வீச்சாளரிடமே ஆடுவார் என்பது இன்னும் விசேஷம்.

மார்ஷல், தாம்சன் போல போத்தம் அதி வேக பந்து வீச்சாளர் கிடையாது. ஆனால் பந்தை அருமையாக சுவிங் செய்யக்கூடியவர். செட்டிலான பேட்ஸ்மென்களையே எளிதில் திணறடித்து விடுவார். 70களில் நல்ல வேகத்தில் வீசிக்கொண்டிருந்த போது, பந்தையும் சுவிங் செய்வதால் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 80களின் மத்திக்குப் பிறகு அவரது விக்கெட் எடுக்கும் திறமை சற்று குறையத் தொடங்கி இருந்தது.

போத்தமின் பீல்டிங்கும் சிறப்பான ஒன்று. ஒருமுறை அவர் ஆப் அண்ட் மிடிலில் வீசிய பந்தை பேட்ஸ்மென் ரன்னரின் தலைக்கு மேலே அதி வேகத்தில் அடித்தார். பந்தை  வீசி விட்டு  லேண்ட் ஆகி கண் இமைப்பதற்குள் தன் வலது கைப்பக்கம் பாய்ந்து அந்த கேட்சைப் பிடிப்பார். போத்தமைத் தவிர அதை யாருமே நம்பவில்லை. ஒரு அதிசயம் போலவே அதை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஒரு வழியாக குமார் அண்ணன் 91ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பை நேரடி ஒளிபரப்பில் தான் போத்தமைக் கண்டார். அந்த தொடரில் கேப்டன் கூச்சுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் போத்தம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து 53 ரன்களையும் அடித்தார். இத்தனைக்கும் அது அவரின் அந்திமக்காலம். இந்தியாவுடன் ஆடிய மேட்சிலும் நல்ல பார்மில் ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கரை திணறடித்து அவுட் ஆக்கி வெற்றிக்கு வழி வகுத்தார். தெண்டுல்கர் அவுட் ஆன உடன் அவர் ஆடிய ஸ்டைலான ஆட்டம் அந்த கோப்பையின் சிறந்த வெற்றி ஆட்டங்களில் தலையாயது. இங்கிலாந்து பைனல் வரை போக முக்கிய காரணமாக இருந்ததே  போத்தமின் ஆல் ரவுண்டர் திறமைதான். ஆனால் பைனலில் இறுதிச் சிரிப்பு அவரது சக ஆல்ரவுண்டர் போட்டியாளரான இம்ரான் கானுக்கே வாய்த்தது.

அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து போத்தம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கடுத்து யாராவது நன்கு பந்து வீசி, நாலு மேட்ச் ஒழுங்காக பேட்டிங் ஆடிவிட்டாலே வந்து விட்டார் புதிய போத்தம் என்று இங்கிலாந்து  பத்திரிக்கைகள் கூக்குரலிடும். அப்படித்தான் டொமினிக் கார்க் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு ஹேட் டிரிக் எடுத்து 50 ரன்கள் எடுத்தவுடன் அடுத்த போத்தம் என்றார்கள். பிளிண்ட் ஆப் 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் கிட்டத்தட்ட போத்தம் போலவே பெர்பார்ம் செய்து பெரிய பெயர் பெற்றார். வந்து விட்டார் புது போத்தம் என்றார்கள், அவராலும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

போத்தம் ஒரு சண்டைக்கோழி டைப் கேரக்டரும் கூட. ஒரு முறை ஆசியர்களை வம்பிழுத்த போது, இம்ரான்கான் அதற்கு பதிலடியாக “நீங்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த போதே வடிகால் வசதிகளுடன் நாகரீக வசிப்பிடங்கள் கட்டி வாழந்தவர்கள் நாங்கள்’ என பதிலடி கொடுத்தார். இப்போது ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறார் போத்தம்.

ஆளையே பார்க்காமல், செய்திகள் வர்ணனைகள் மூலமே போத்தமின் மீது பெரும் அபிமானம் கொண்டவர்கள் இந்தியாவில் அப்போது அதிகம் இருந்தார்கள். அப்படியென்றால் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட ஹீரோவாய் அவர் அப்போது இருந்திருப்பார்?.

March 21, 2016

இம்ரான் கான்

1992ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட்டில் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தை பிரித்த நிகழ்வு எனச் சொல்லலாம். 1970களுக்கு பின்னர் அறிமுகமான நட்சத்திர வீரர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை நிறுத்தி அல்லது குறைத்துக் கொண்ட காலம் அது. பல அணிகள் தங்கள் அணிவரிசையை இந்த போட்டிக்குப் பின்னர் மாற்றிக்கொண்டார்கள். புதிய ஹீரோக்கள் உருவானார்கள். இந்த போட்டியின் இன்னொரு சிறப்பு, பங்கேற்ற ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடனும் ஒரு முறை மோதும் படி அமைக்கப்பட்டிருந்தது. செமிபைனலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் விளையாடும்.


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கோப்பையை வெல்ல எல்லா தகுதிகளுடன் களம் இறங்கிய இங்கிலாந்து ஆகிய அணிகளின் மீதுதான் ஆரம்ப கவனம் இருந்தது. பாதி போட்டிகள் முடிந்த நிலையில் 20 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிகளை குவித்து கவனம் ஈர்த்தது, நியூசிலாந்து, கேப்டன் மார்ட்டின் குரோவ்வின் வியூகங்களால் வெற்றிப்பாதையில் சென்றது. ஆஸ்திரேலியாவோ தோல்வி முகத்தில் இருந்தது, இங்கிலாந்து தன் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தது,


இந்நிலையில் நான்காவது அணியாக யார் தேர்வு பெறுவார்? யார் கோப்பையை வெல்வார் போன்ற ஹேஸ்யங்களை பலரும் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். அப்போது கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தார் “எந்த அணி வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம், பாகிஸ்தான் அணியைத் தவிர என்று சொல்லி இருந்தார்,


அது அன்றைய நிலைமைக்கு சத்தியமான உண்மை. ஆடிய ஐந்து ஆட்டங்களில் ஒரே வெற்றி. மூன்று தோல்வி, ஒரு ட்ரா. அந்த ட்ராவும் எப்படி? பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர்கள் ஆடி 70 சொச்சம் ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இங்கிலாந்து எத்தனை ஓவர்களில் வெல்லும் என்பது பற்றி மட்டும் பெட்டிங்குகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் வந்தது மழை. தப்பித்தோம் பிழைத்தோம் என மூன்றாவது பாயிண்டை எடுத்திருந்தது பாகிஸ்தான்.


அது மட்டுமல்ல, அந்த அணியில் அறிமுகமான உடனேயே நட்சத்திரப்பந்து வீச்சாளராக மாறி, வாசிம் அக்ரமுடன் இணைந்து டபுள் டெவில்ஸ் எனப் பெயர் பெற்ற வக்கார் யூனிஸ் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அருமையான ஸ்ட்ரோக் மேக்கரான சயீத் அன்வரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இம்ரான்கானால் அடுத்த தலைமுறையின் சூப்பர் பேட்ஸ்மென் என ஆரவாரமாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்த இன்சமாம் ஒற்றைப்படையைத் தாண்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அணியின் பீல்டிங் மகா மோசம். இன்னும் சொல்லப்போனால் அந்த உலக கோப்பைத் தொடரிலேயே பீல்டிங்கில் மோசமான அணி பாகிஸ்தான் தான்.


ஒரு கிரிக்கெட் அணியினுடைய கேப்டனுக்கு எவ்வளவு திறமைகள் தேவைப்படுமோ அதைவிட அதிகமான திறமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு தேவை. நிலையில்லாத அரசியல் சூழல் நிலவும் நாடு. கிரிக்கெட் வாரியத்தலைமை, உறுப்பினர்கள் எல்லாம் அட்-ஹாக் முறையிலேயே பெரும்பாலும் நியமிக்கப் படுவார்கள். கேப்டனை மாற்றுவது எல்லாம் சாதாரணம். ஆஸ்திரேலியா அணியில் கடந்த 30 ஆண்டுகளில் பார்டர், டெய்லர் ,ஸ்டீவ் வாவ், ரிக்கிபாண்டிங், கிளார்க்,ஸ்மித் என விரல்விட்டு எண்ணும்படியான கேப்டன்கள்தான். கேப்டன் பதவியை விட்டு இறங்கிவிட்டால் அணியிலேயே இருக்க மாட்டார்கள். ரிக்கி பாண்டிங் விதிவிலக்கு. ஆனால் பாகிஸ்தான் அணி, அதிகபட்சம் ஆறு முன்னாள் கேப்டன்களுடன் கூட விளையாடி இருக்கிறது.

அணியில், ஒரு கேப்டனுக்கு சமமான திறமை உள்ளவர், முக்கியமாக முன்னாள் கேப்டனாகவோ, அல்லது அடுத்த வாய்ப்பில் உள்ள ஒருவராகவோ இருப்பின் அவரைச் சமாளிப்பது கேப்டனுக்கு சிக்கலான விஷயம். அணியே இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும். அவர்கள் மனம் கோணாமல் ஒருங்கினைக்க வேண்டும், சரியாக ஆடாதவர்களை திறமையாக கையாள வேண்டும்.


இம்ரான் கானுக்கு அடுத்து அணியில் நுழைந்தவர்தான் ஜாவித் மியாண்டாட். ஆனால் தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கால் மிளிர்ந்து 79-80களில் கேப்டன் பதவியைப் பெற்றார். அவர் ஸ்டீரிட் ஸ்மார்ட் கிரிக்கெட்டர் மட்டுமல்ல. ஸ்டீரீட் பைட்டரும் கூட. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் டென்னிஸ் லில்லியை பேட்டால் அடிக்கச் சென்று பிரச்சினையை உண்டாக்கினார். அதனால் அணியின் மற்ற வீரர்கள் அவர் தலைமையில் விளையாட மறுத்தார்கள். எனவே இம்ரான் கான் அணிக்கு கேப்டன் ஆனார். அந்த நேரத்தில் தான் அவர் தன் பந்து வீச்சு பொற்காலத்தில் இருந்தார். டெஸ்டில் அந்த இரண்டாண்டுகளில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்னுக்கு குறைவாகவே கொடுத்துக் கொண்டிருந்தார். இம்ரான் தலைமையில் அணி தலை நிமிரத் தொடங்கியது. இருந்தாலும் மியாண்டாட்டை சமாளிப்பது ஒரு தலைவலியாகவே இருந்தது இம்ரானுக்கு. போதாக்குறைக்கு இன்னொரு சீனியர் பேட்ஸ்மென் ஜாகிர் அப்பாஸ் வேறு, இந்த நேரத்தில் இம்ரானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மியாண்டாட், ஜாகிர் அப்பாஸ் என கேப்டன் பதவி மாறி மாறிச் சென்று கொண்டு இருந்தது.


ஆனாலும் இம்ரான் அணியைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். மிட் ஆனில் நின்று கொண்டு பந்து வீச்சாளர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார். வாய் வார்த்தைகள் குறைவுதான். இம்ரானின் சின்ன கண்கள் அவர் உணர்ச்சியை துல்லியமாக காட்டிவிடும். ஒயிட், நோபால் வீசினால், பீல்டிங் மிஸ்டேக் செய்தால் ஒரு முறை முறைப்பார். அந்த கண்ணில் புலியின் சீற்றம் தெரியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்போது இன்னொரு பிரச்சினை சம்பள விவகாரம். மற்ற நாட்டு வீர்ர்களைவிட குறைவான சம்பளம் தான். இந்திய அணி வீரர்கள் பலரும் ஸ்டேட் பாங்க், தனியார் நிறுவனங்களில் கௌரவ சம்பளம் பெற்று வந்தார்கள். விளம்பர வாய்ப்புகளும் உண்டு. பாகிஸ்தான் வீர்ர்களுக்கு அது கூட கிடையாது. எனவே அவர்களை வேறு எந்த வழிக்கும் சென்றுவிடாமல் மோட்டிவேசன் செய்ய வேண்டிய வேலை வேறு.


இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நட்த்திய 87 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெற்றி பெற எல்லாவித சாத்தியங்களோடும் அணியை உருவாக்கியிருந்தார் இம்ரான். அதோடு ஓய்வு பெறும் திட்டமும் வேறு, ஆனால் அரை இறுதியில்ஆஸ்திரேலியாவோடு தோற்று வெளியேறியது. இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார் இம்ரான். அடுத்ததாக அணியில் மியாண்டாட்டுக்கும் ரமீஸ் ராஜாவுக்கும் பிரச்சினை உண்டாக அணி தொடர்ந்து பல தோல்விகளைக் கண்டது. மக்கள் இம்ரானே மீண்டும் கேப்டனாய் வரவேண்டும் என போராட்டம் நடத்தாத குறை. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கே இம்ரானை அழைத்து மீண்டும் கேப்டனாக்கினார்.


அதன்பின்னர் நேரு கோப்பை வெற்றி, மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட் வெற்றி என பீடு நடை போட்டார். கடைசியாக 92 உலக கோப்பை. இம்ரானுக்கும் 41 வயது ஆகியிருந்தது. கடைசி உலக கோப்பை வேறு.


இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்துத்தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை. எந்த கேப்டனும் துவண்டு போவார். ஆனால் இம்ரான் துவளவில்லை. மூலையில் சிக்கவைக்கப்பட்ட புலியைப் போல் நாம் எதிர்வினை காட்டவேண்டும் என்று அணியினரை உற்சாகப் படுத்தினார்..

இம்ரான் கேப்டன்ஷிப் பன்முகத்தன்மை கொண்டது என்றால் அதில் ஒரு முகம் பிரச்சினைகளை சந்திக்க தளபதிகளை அனுப்பாமல் தானே களத்தில் இறங்குதல். பாகிஸ்தானுக்கு நிலையில்லாத பேட்டிங்தான் அந்த உலக்கோப்பையில் பிரச்சினை. பொதுவாக மத்திய வரிசையில் இறங்கும் இம்ரான் முதல் விக்கெட் விழுந்த உடன் இறங்கத் துவங்கினார். காரணம் பந்து ஸ்விங் ஆகும். மற்றவர்கள் சொதப்பி விடுவார்கள் என. எல்லாப் பந்துகளையும் பிரண்ட் புட்டில் ஆடி ஸ்விங் எஃபெக்ட்டை குறைத்தார். நல்ல உயரமான வீரர் ஆகையால் அதை எளிதாக செய்ய முடிந்தது. அடுத்து ஏதாவது விக்கெட் விழுந்தால் மியாண்டாட் வருவார். இருவரிம் சேர்ந்து 40 ஓவர் ஆடிவிடுவார்கள். பின்னர் கடைசி 10 ஓவர்களில் ருத்ர தாண்டவம் தான்.


இதே இம்ரான் தான் முன்னாட்களில் பின்ச் ஹிட்டர் என்னும் கான்செப்டை திறம்பட கையாண்டவர். முக்கியமான மேட்சுகளில் வாசிம் அக்ரமை ஒன் டவுன் இறக்கி கன்னா பின்னாவென சுத்தச் சொல்வார். ஆனால் நிலைமையை அனுசரித்து பாஸிவ் ஹிட்டர் என்பதை 92 உலக்கோப்பையில் கொண்டுவந்தவரும் இவர்தான்.

இம்ரானின் இந்த அணுகுமுறையால் மீதமிருந்த அனைத்துப் போட்டிகளையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான். இன்சமாம், மியாண்டாட், அக்ரம் எல்லோரும் தேவையான போது பெர்பார்ம் செய்த்து முக்கிய காரணம் என்றாலும் அந்த எபர்டை வெற்றியாக மாற்ற இம்ரான் தேவையாக இருந்தார்.


கேப்டன்ஷிப், பந்துவீச்சு, பேட்டிங் இதுதான் அவரின் தர வரிசை எனலாம். இம்ரான் தன் இளமையில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர், பின்னர் அபாரமான இன்ஸ்விங்கர், பின்னர் ஆபத்தான ரிவர்ஸ் ஸ்விங்கர். இன்சுவிங் யார்க்கரும் போடுவார், முட்டி அளவு வரும் இன்சுவிங் புல்டாஸும் போடுவார், நெஞ்சுக்கும் பந்தை எகிறவிடுவார். ரிவர்ஸ் சுவிங்கின் ஸ்தாபகர்களில் ஒருவர். இவரும் சர்பராஸ் நவாஸும் சேர்ந்துதான் இதை பிரபலப்படுத்தினார்கள். ஆரம்ப காலங்களில் இது பந்தை சேதப்படுத்தியதால் ஆகிறது என குற்றம் சாட்டப்பட்டாலும் பின்னர் ஒரு கலையாகவே பரிமளித்தது.


இம்ரான் ஒரு முறை, தான் சோடா மூடியால் பந்தைத் தேய்த்து ரிவர்ஸ் சுவிங் செய்த்தாகவும், ஆனால் அது ஒரு நல நிதி மேட்ச், மேட்சை சுவராசியமாக்க அப்படி செய்ததாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்கு ஆளானார்.

அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல 360 டிகிரியிலும் காமிரா வைக்க மாட்டார்கள். இரண்டே காமிரா தான். அதுவும் அம்பயரின் தலைக்கு நேர் மேலே வைத்திருப்பார்கள். பேட்ஸ்மென் பேட்டை டொக் டொக் என தட்டிக்கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். திடீரென பவுலர் வந்து பந்தை வீசுவார். அதை பேட்ஸ்மென் அடிப்பார். கிரிக்கெட் தெரிந்த காமிராமேன் என்றால் காமிராவை பந்தை நோக்கி திருப்புவார். சில கேமிராமேன்கள் பேட்ஸ்மென் அருமையான கவர் ட்ரைவ் அடிக்கும் போது மிட் விக்கெட்டை நோக்கி காமிராவை திருப்பி நம்மை நோகடிப்பார்கள். இதாவது பரவாயில்லை. சில மேட்சுகளில் ஒரே ஒரு காமிரா மட்டும் இருக்கும். ஒரு ஓவரில் பேட்ஸ்மென்னை முன்னாலும், அடுத்த ஓவரில் பின்னால் இருந்தும் தரிசிக்கலாம்.


எனவே பந்தை யார் கண்ணிலும் படாமல் சேதப்படுத்த வாய்ப்பு அதிகம். ஆனால் இதே வாய்ப்பு எல்லா அணிகளுக்கும் தான் இருந்த்து. ஆனால் அவர்களால் ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியவில்லையே? கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டு அணியினர் கூட பல ஆண்டுகள் கழித்தே ரிவர்ஸ் சுவிங்கை பாகிஸ்தானிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். இன்றுவரை பாகிஸ்தான் ஒரு சவால் மிக்க அணியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர்களின் வேகப் பந்துவீச்சும், ரிவர்ஸ் ஸ்விங்கும் தான். அதற்கு விதை போட்டவர்களில் ஒருவர் இம்ரான்கான்.


இம்ரான்கானுக்கும் சத்யம் சிவம் சுந்தரம் ஜீனத் அமனுக்கும் காதல் என அப்போது பாலிவுட் பத்திரிக்கைகளில் பலமான கிசுகிசு அடிபட்டுக் கொண்டிருந்த்து. இம்ரானும் அந்நாட்களில் ஒரு செக்ஸ் சிம்பலாக விளங்கியவர்தான். ஆனால் உலக கோப்பையை வென்றபிறகே தன் 42ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். தன் தாய் புற்று நோயால் இறந்ததால் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். பின் அரசியலுக்கு வந்தார். இயல்பாகவே அவரிடம் இருக்கும் தலைமைப் பண்பு அதற்கு கை கொடுத்தது.


நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது பேசிக்கொள்வோம் “நாங்கள்ளாம் பாகிஸ்தான் டீம் மாதிரி. முதல்ல படிக்க மாட்டோம், எக்ஸாமுக்கு கடைசி நாள் படிச்சு தட்டி தூக்கிடுவோம்” என்று. உண்மை. அந்நாட்களில் ஏராளமான மேட்சுகளை கடைசி நேர பேட்டிங்காலோ, பௌலிங்காலோ அந்த அணி ஜெயித்தது. அதன்பின்னால் இம்ரானின் எதையும் செய்யலாம் என்ற மன உறுதி இருந்தது.


இன்றும் கூட நாட்கள் கடந்து விட்டது. ஒன்றும் சாதிக்க வில்லையே? தோற்று விடுவோமோ என்கின்ற நினைப்பு வரும்போதெல்லாம். ஐந்து மேட்சுகளின் முடிவில், டோர்னமெண்டை விட்டு வெளியேறும் நிலையில் இம்ரான் கான் காட்டிய அந்த தைரியமும் நிதானமும் மனதில் தோன்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.