November 27, 2013

அஜீத்தின் மாஸ்

ஆரம்பம் வெளியாகி இருவாரங்கள் கழித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வாரத்தின் முதல் வேலை நாள். மதியக் காட்சி. டிக்கட் வாங்கிக்கொண்டு அரங்கில் நுழைந்த எனக்கு ஆச்சரியம். ஏறத்தாழ 50% சதவிகித இருக்கைகள் நிரம்பியிருந்தன. தெருவுக்கு தெரு படம் ரிலீஸாகும் இந்நாட்களில் இவ்வளவு கூட்டமா என நினைத்துக் கொண்டிருக்கும் போதே படம் போடத் தொடங்கினார்கள்.  அதைவிட ஆச்சரியம்,  அஜீத்தின் அறிமுக காட்சியின் போது, ஐந்து நிமிடங்களுக்கு இடைவிடாமல் கைதட்டலும், விசிலும் தூள் பறந்தது.

அஜீத் அறிமுகமான அமராவதி, சோழா பொன்னுரங்கத்திற்காக பார்த்த படம். ஏனென்றால் அவர் தயாரிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த தலைவாசல். கிட்டத்தட்ட அதே டெக்னிக்கல் டீமுடன் அவர் களமிறங்கிய படம் என்பதால் போய் பார்த்த படம். அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான அஜீத் படங்களைப் பார்த்தாயிற்று. அவர் படங்களில் 25% அளவிற்கே வெற்றிப்படங்கள். மீதம் அனைத்தும் தோல்விதான். சில படங்களை எல்லாம் ஆயிரம் ரூபாயும் அனாசினும் கொடுத்தால் கூட பார்க்க முடியாது. ஆனாலும் இப்படி ஒரு மாஸ் எப்படி சாத்தியமாயிற்று?

அமராவதிக்குப் பின் பவித்ரா, பாசமலர்கள் போன்ற படங்களில் அஜீத் நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு வண்ணத்திரை கொடுத்த பட்டம் “ஏழைகளின் அரவிந்தசாமி”. ஆசை படம்தான் கேரியரில் குறிப்பிடத்தக்க முதல் படம் என்றாலும், அவருக்கு இளம் ரசிகர்களை பெற்றுத்தந்த படம் அகத்தியனின் வான்மதி தான். அதில் ஏற்றிருந்த கேஸுவலான இளைஞன் கேரக்டர் கல்லூரி மாணவ ரசிகர்களை பெற்றுத்தந்தது. பின் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை. அப்பட வெற்றிக்குப் பின்னரும் சுமாரான படங்களிலேயே அஜீத் நடித்து வந்தார்.

விஜய்,பிரசாந்த், விக்ரம்,கார்த்திக், ரஞ்சித்,சத்யராஜ்,பார்த்திபன்,அப்பாஸ் என அப்போது ஹீரோவாய் நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுடன் எல்லாம் சேர்ந்து நடித்தார்.

99ல் வெளியான வாலி, நல்ல திருப்புமுனை. அந்தப் படத்திற்குப் பின்னால் தான் எல்லா நகரங்களிலும் அஜீத் ரசிகர் மன்றங்கள் பெருமளவில் துவங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அஜீத் கொடுத்த சில பேட்டிகளால் “வாய்க் கொழுப்பு நடிகர்” என்ற கிசுகிசு அடைமொழி அவருக்கு கிடைத்தது. அமர்க்களம் படம் மூலம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ் மெல்ல மெல்ல உருவானது. முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மூலம் பேமிலி ஆடியன்ஸிடம் ரீச் கிடைத்தது.

2001ல் வெளியான தீனா தான் மிகப் பெரும் திருப்புமுனை ஆனது. ஏராளமான ரசிகர்களை அஜீத்துக்கு தந்து, தலை என்னும் பட்டத்தையும் தந்தது. அதன்பின்னரும் அவருக்கு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை தான் வெற்றிப்படம் கிடைத்தது. விஜய்யின் வெற்றிப்படங்களுடன் ஒப்பிட்டால் அஜீத், அதில் 40% தான் வெற்றி கொடுத்திருப்பார். அஜீத் தலையைக் காட்டினாலே போதும் படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, பார்க்க நாங்கள் ரெடி என்னும் ஒரு கூட்டமே இப்போது உருவாகியிருக்கிறது.

இவ்வளவு ரசிகர்களை அஜீத் பெற்றிருப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தோன்றிய சில காரணங்கள்.
இயல்பாகவே ஒரு நடிகர் மீது பார்வையாளர்களுக்கு வரும் ஈர்ப்பு. இதற்கு காரணங்கள் தேவையேயில்லை. ஆனால் அந்த ஈர்ப்பு காலாவதி ஆகாமல் அந்த நடிகன் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த 20 ஆண்டுகளில் அஜீத்துக்கு தன் பர்சனாலிட்டி மூலமும், ஏற்ற வேடங்கள் மூலமும் புதிது புதிதாய் ரசிகர்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தானே கையூன்றி, சுற்றத்தார் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையில் எழுந்தவர்களுக்கு அஜீத் தங்களைப் போல என்னும் ஓர் எண்ணம் இருக்கும். பல போராட்டங்களை/அவமதிப்புகளை வாழ்க்கையில் சந்தித்து எழுந்தவர்களுக்கு அஜீத் இடைக்காலத்தில் திரைஉலகம்/மீடியா மூலம் பட்ட கஷ்டம் ஒரு சார்பைக் கொடுத்திருக்கலாம்.

எந்த இடத்திலும் எதிர் அரசியல் என்று ஒன்று இருக்கும். திமுக பிடிக்காதவர்கள் எல்லாம் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுவது போல, விஜய்யைப் பிடிக்காதவர்கள் எல்லாம் அஜீத்தின் பக்கம் சாய்வது. மசாலா படம் தான் கொடுப்பேன்னு திமிரா சொல்லி நடிக்கிறான், டான்ஸைத்தவிர ஒண்ணும் இல்லை- அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு சொல்லுறாங்களேன்னு எரிச்சல் அடைபவர்கள் அஜீத்தை ஆதரிக்க தலைப்படுகிறார்கள். இதற்கிடையே என் பையன் தான் அடுத்த சி எம் என்னும் ரேஞ்சுக்கு விஜய்யின் தந்தையார் முன்னாட்களில் கொடுத்த ஸ்டேட்மெண்டுகள் பலருக்கும் கடுப்பைக் கிளப்பியிருக்கும்.

தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அஜீத்துக்கு தங்களது போஸ்டர்கள், பிளக்ஸ்களில் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் எதிர் அரசியலே.

நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம், தலை நிமிர்ந்து இருப்போம், எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை. என சிலர் இருப்பார்கள். அதுபோன்ற கெத்தை திரையிலும் ஓரளவு நிஜ வாழ்விலும் பிரதிபலிப்பவர் அஜீத். அதனால் அந்த வகையறாவும் அஜீத்துக்கு ரசிகராக இருக்கிறார்கள்.

இப்போது வரும் விளம்பரங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னராக வந்த விளம்பரங்களுக்கும் ஒரு வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஆக்ஸ் எஃபெக்ட், உள்ளாடை, ஆயத்த ஆடை வகையறா விளம்பரங்களைத் தவிர மற்ற விளம்பரங்களில் வரும் ஆண்கள் முன் வழுக்கையுடன், லேசான தொந்தியுடன் இருப்பதைக் கவனிக்கலாம். முகம் மட்டும் சிகப்பாக, ஓரளவு களையுடன் இருக்கும் (பற்கள் துருத்தாமல், கன்னம் டொக்கு விடாமல்). பல விளம்பரங்களில் ஆண்கள் கண்ணாடியுடனும் இருப்பார்கள். ஆனால் முன்னர் வந்த விளம்பரங்களில் எல்லாம் ஆண்கள் நல்ல சுருள் முடியுடன், தட்டை வயிறுடன் இருப்பார்கள்.
தற்போது ஆணுக்கு பார்க்க சகிக்கிற முகமும், நல்ல வேலையுமே ஒரு அடிப்படைத் தகுதியாக பார்க்கப்படுகிறது (திருமண மார்க்கட்டிலும்) முன் வழுக்கை, இளம் தொந்தி, இள நரை, பித்த நரை, சாளேசுவர கண்ணாடி யெல்லாம் அவன் உழைப்பின் அடையாளமாகப் பார்க்கப் படுகிறது.
தற்போது 30+ ஆண்கள் பெரும்பாலும் மேற்கூறிய டிராபேக்குகளுடன் தான் இருக்கிறார்கள். தொப்பை, நரை இவற்றுடன் பெரும் கமர்சியல் ஸ்டாராக பிரகாசிக்கும் அஜீத்தை அவர்களுக்கு ஆதர்சமாக பிடித்துப் போகிறது.

தமிழ்நாட்டில் பலர், நாங்கள் கஞ்சனாக இருப்போம், சுயநலமாக இருப்போம்,அடுத்தவனை மதிக்க மாட்டோம் ஆனால் நாங்கள் ஆதரிக்கும்/ரசிக்கும் நபர் கொடை வள்ளலாக, அடுத்தவர் துன்பத்தைக் கண்டு இரங்குபவராக, மனிதனுக்கு மதிப்பளிப்பவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள்.

எம்ஜியார் இதை சரியாக புரிந்து வைத்து, மக்களை ஈர்த்தார். அவரின் சினிமா போட்டியாளரான சிவாஜி கணேசனும், அரசியல் போட்டியாளரான கருணாநிதியும் இந்த விஷயத்தில் அவரிடம் தோற்றுப் போனார்கள். ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் எம்ஜியார் பார்முலாவை பின்பற்றினார். ஆரம்பத்தில் விஜய் இந்த பார்முலாவை பின்பற்றினாலும், பின்னர் அவரது சாயம் அவ்வப்போது வெளுத்தது.

ஆனால் அஜீத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த விஷயத்தில் நல்ல மைலேஜ் கிடைக்கிறது. பல பத்திரிக்கைகளில் அவர் செய்த உதவிகள் அடிக்கடி வெளிவருகின்றன. 15 நாட்களுக்கு ஒருமுறை அவர் யாருக்காவது பிரியாணி செய்து போட்டு விடுகிறார். படம் வெளியாகும் சில வாரம் முன்பு “எனக்கு விளம்பரம் பிடிக்காது/ பேட்டியெல்லாம் எதுக்கு” என்ற தொனியில் முண்ணனி பத்திரிக்கைகளில் பேட்டி வருகிறது. நலிவடைந்த தயாரிப்பாளர் பயன் பெற்றார் போன்ற செய்திகளும் எல்லா ஊடகங்களிலும் பிளாஷ் ஆகிறது. இதன் மூலமும் குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் அவருக்கு உருவாகிறார்கள்.
ரேஸ் ஓட்டுவது, பொம்மை விமானம் பறக்க விடுவது போன்ற சில செயல்களும் அஜீத்துக்கு நடிகரைத் தாண்டிய ஒரு இமேஜைக் கொடுத்துள்ளது. வேல்யூ ஆடட் கோர்ஸ் என்பதைப் போல இந்த தகுதிகளும், ரசிகர்கள் அஜீத்தைப் பின் தொடர, மற்றவர்களுடன் வாதிட ஒரு வாய்ப்பைத் தருகின்றன.

ஆரம்பத்தில் பக்க பலமாக இருந்து பின் உபத்திரமாக மாறிய நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் பிடியில் இருந்து அஜீத் வெளியேறியபின் அதிகப்படியான உயர்வு அஜீத்துக்கு.  நிக் ஆர்ட்ஸ்க்காக அஜீத் நிறைய கஷ்டப்பட்டதால், நண்பர்களுக்காக எதையும் செய்பவர், நட்பைப் பேணுவதில் வல்லவர் என்ற பிம்பம் அஜீத்துக்கு நன்கு உருவாகியிருந்தது. இதுவும் தம்ழ்நாட்டு மக்களுக்கு மிகப் பிடித்த பிம்பம். விஜய்க்கு செல்பிஷ் ஆனவர் என்ற பிம்பமே இப்போது இருக்கிறது (புவர் மார்க்கெட்டிங் டெக்னிக்ஸ்).

எனவே இயல்பாக உருவான ரசிகர் கூட்டம், மற்றும் இது போன்ற காரணங்களால் ஆதரிக்க தலைப்பட்ட கூட்டமும் சேர்ந்து அஜீத்தை மிகப் பெரும் கமர்சியல் ஸ்டார் ஆகிவிட்டார். தொடர்ந்து இதுபோல கவனமாக இருந்து வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் ரஜினி இப்போது இருக்குமிடத்தில் அஜீத் இருப்பார்.

November 25, 2013

பிரசாந்தும் ஆர்யாவும்

90ஆம் வருடம். தினமலர் துணுக்கு மூட்டையில் ஒரு செய்தி. மம்பட்டியான் மகன் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அறிமுகமாகிறார். சம்பளம் 50,000 ரூபாய். இதுவரை எந்த புது முகத்திற்கும் கிடைத்திராத தொகை இது என்று. படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது. பிரசாந்துக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

அதற்குப்பின் இரண்டு சுமாரான படங்களில் நடித்தாலும், பெரிய இயக்குநர்களின் கண்பார்வையில் பட்டார்.

பாலுமகேந்திரா, மணிரத்னம், அகத்தியன், ஷங்கர், மணிவண்ணன், செல்வமணி, சுசி கணேசன், வசந்த், சுந்தர் சி, ஹரி, பி வாசு, வெங்கடேஷ் என வெரைட்டியான இயக்குநர்கள்.

காவேரியில் ஆரம்பித்து, ரோஜா, சிம்ரன், லைலா, சிவரஞ்சனி,ஷாலினி, சினேகா, ரியா சென்,  rinky கண்ணா, நிலா என வெரைட்டியான நடிகைகள். சூப்பர் ஸ்டாரே 10 ஆண்டு காத்திருந்த ஐஸ்வர்யா ராயுடன் அசால்டாக நடித்தவர்.

என் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க மாட்டாரா என அவரின் செட் நடிகர்கள் ஏங்கும் போது, திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி என ஏ ஆர் ஆரின் அசத்தல் பாடல்களுடன் நடிக்கும் வாய்ப்பு.

இப்படி பல வாய்ப்புகள். நல்ல உயரம், சிகப்பு, வழுக்கையில்லாத தலைமுடி, மோசமென்று சொல்ல முடியாத முகம், நாலு பேரை அடித்தாலும் நம்பும் படியான ஆகிருதி, நடனமும் மோசமில்லை. பிண்ணனியில் படம் இயக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்ற தந்தை தியாகராஜன்

இத்தனை இருந்தும் பிரசாந்த்தை ஒரு நடிகராக ஏற்றுக் கொள்ளவே முடியாதபடிக்கே இருந்தது அவரின் பெர்பார்மன்ஸ். இளமை தேயத் தொடங்கியதும் அவருக்கான ரோல்களும் மறையத் தொடங்கி விட்டன. சாக்லேட் பாய்க்கு நடிப்பு தேவையில்லை. ஆனால் 35 வயதுக்கு மேல் ஏற்கும் கேரக்டர்களுக்கு நடிப்பு குறைந்தபட்ச அளவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் சினிமாவில் நிலைக்க முடியாது என்பதற்கு பிரசாந்த் தான் உதாரணம். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதில் தவறிவிட்டார் பிரசாந்த்.ஆர்யாவுக்கும் அப்படித்தான். பாலா, செல்வராகவன், விஷ்ணுவர்தன், ஜீவா என பல இயக்குநர்கள். நல்ல வாய்ப்புகள். ஆனால் இன்னும் நடிப்பில் முன்னேற்றம் எதுவுமில்லை.

 35 வயதை கடந்த பின் ஆர்யாவுக்கும் பிரசாந்தின் நிலைமைதான் வரும்.

November 05, 2013

மிஸ்டரி பீவர்

திடீரென பூபாலனுக்கு விழிப்பு வந்தது. எழ முயற்சித்தான். முடியவில்லை. பத்துபேர் கைகளையும், கால்களையும் பிடித்து அமுக்குவது போல் ஒரு உணர்ச்சி. பிரயத்தனப்பட்டு எழுந்தரித்துப் பார்த்தான். மருத்துமனையில் இருப்பது புரிந்தது. அருகில் யாருமில்லை. குரல் எழுப்ப யத்தனித்தும் பலவீனமானமாகவே எழும்பியது. அப்படியே விழித்தவாறே படுத்திருந்தான். கை,காலெல்லாம் தளர்ந்து தனக்கு நூறு வயது கூடியிருந்ததைப் போல் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்த செவிலிப்பெண் அவன் விழித்திருந்தைக் கண்டு, வியந்து இண்டர்காமில் மருத்துவருக்கு தகவல் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து சிறு மருத்துவர்கள் குழு ஒன்று வந்தது. பூபாலனைப் பரிசோதித்த பின்னர், தங்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள். சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு, உளவியல் ஆலோசனை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

பூபாலன் உளவியல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். அங்குதான் அவனுக்குத் தெரியவந்தது, தான் ஒரு கோமா நோயாளியாக 40 வருடங்கள் மருத்துவமனையில்  இருந்து வந்தது. ஒரு விபத்தில் சுயநினைவை இழந்திருந்த பூபாலனுக்கு  அப்போது 25 வயது. திருமணம் ஆகியிருக்கவில்லை. அவனது பெற்றோர்களும் 25 வருடம் அவனை கோமா நிலையிலேயே பராமரித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இறப்புக்குப் பின் அவனது கேர் டேக்கராக இருந்து வருபவன் அவன் நண்பன் சிவானந்தன். மாதமொருமுறை அவனை வந்து பார்த்து தேவையானவற்றை செய்து வருபவன். அவன் தற்போது வேறு ஊரில் வசித்து வருவதாகவும், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். பின் அவனது பல கேள்விகள்,சந்தேகங்களுக்கு பதிலளித்து, படிப்படியாக சாந்தப்படுத்தினார்.

அவனை கவனித்து வந்த மருத்துவர், படிப்படியாக பேச, நடக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். ஒரு வாரம் கழித்து மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் சிவானந்தனும் வந்து சேர்ந்தான். அவனின் முதிய தோற்றத்தைக் கண்டதும் தான் பூபாலனுக்கு சமாதானம் ஆனது. ஒரு வாரம் கழித்து பூபாலனை தன் வீட்டிற்கு அழைத்துப் போவதாகவும், ஓரிரு மாதங்களில் பூபாலனின் பழைய வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் கூறினான்.

மாலை நேரங்களில் மருத்துவமனை வளாகத்தை பூபாலன் சுற்றி வரும்போது, அது அரசு பொது மருத்துவமனை என்று அறியவந்தது. மிக குறைவான நோயாளிகளே இருப்பதும், அவர்களும் விபத்து, வயதானதால் வரும் பிரச்சினைகள் என்றே இருப்பதும் தெரியவந்தது. பிரசவத்துக்கு வந்தவர்களையும் பார்க்க நேர்ந்தது.  கேண்டீன் என்ற ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பூபாலன் நினைவு வந்த பின் மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் சத்து மாவு உருண்டையும், நீரும் மட்டுமே பணியாளர்கள் மூலம் கிடைத்தது.

ஒரு வாரம் கழித்து, மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், பேருந்தில் ஏறி சென்னையின் தெருக்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்த பூபாலனுக்கு இரண்டு விஷயங்கள் உறைத்தது. ஒன்று, தான் விபத்தில் அடிபட்ட 2013க்கும் இப்போதைய 2053க்கும் தொழில்நுட்பத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை. இன்னொன்று சென்னை நகரத்தின் வீதிகளில் ஒரு உணவகமோ  ஏன் ஒரு டீக்கடை கூட கண்ணுக்கு தென்படவில்லை.

சிவானந்தனின் ஊருக்கு  வந்த பின்னரும் அவனால் வித்தியாசம் உணரமுடிந்தது.அங்கும் உணவகங்களோ, டீக்கடைகளோ தென்படவில்லை.  பத்தாண்டுகளில் எப்படி தொழில்நுட்பம் வளர்ந்தது எனப் பார்த்தவன் பூபாலன். ஆனால் இந்த 40 ஆண்டுகள் அப்படியே தொழில்நுட்பச் சக்கரம் இயங்காமல் போய்விட்டது போல் உணர்ந்தான். மதிய உணவு நேரம் வந்தது. தட்டில் சில சத்து மாவு உருண்டைகளை எடுத்துக் கொண்டு வந்தார், சிவானந்தனின் மனைவி. என்னடா, சிவா, இன்னும் பத்தியம் இருக்கணும்னு சொன்னாரா? டாக்டர்?, என வினவினான் பூபாலன்.

மௌனமாக இருந்தான் சிவானந்தன். பின் அவர்கள் தங்கள் இளமைக்காலம், நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை ஆனது, டீ கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தான் பூபாலன். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான், அந்த வீட்டில் சமையலறையே இல்லை என அவனுக்கு உறைத்தது.
என்னடா சிவா இது? என்று வினவினான் பூபாலன்.

”உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன சில மாசத்திலேயே ஒரு விசித்திர காய்ச்சல் திடீர்னுன்னு பரவிச்சு. எந்த மருந்துக்கும் கட்டுப்படல. ரெண்டு மாசம் மூணு  மாசம் கூட ஒரே டெம்பரேச்சர்ல அப்படியே இருந்துச்சு. அதுக்கு விஞ்ஞானிகள் ஒரு மருந்து கண்டுபிடிச்சாங்க. அந்த இஞ்சக்‌ஷன் போட்ட உடனே படிப்படியா சரியாயிடுச்சு. அப்புறம் திரும்ப இன்னொரு குரூப்புக்கு அந்த காய்ச்சல் வந்தது. திரும்பவும் அதே இஞ்சக்‌ஷன். சரியாயிடுச்சு. அப்புறன் தெரிஞ்சது, ஒவ்வொரு பிளட் குரூப்புக்கா அந்தக் காய்ச்சல் வருதுன்னு. கிட்டத்தட்ட உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் அந்தக் காய்ச்சல் வந்து இஞ்சக்‌ஷன் போட்டுக்கிட்டாங்க. அதுக்கு மிஸ்டரி பீவர்ன்னு பேரும் வச்சாங்க. காய்ச்சல் வராதவங்க, முன் னெச்சரிக்கையா அந்த இஞ்சக்‌ஷன் போட்ட பின்னாடி காய்ச்சல் வரல்லை. அதனால அத பரிசோதிச்ச உலக சுகாதார நிறுவனம், அந்த இஞ்சக்‌ஷன தடுப்பு மருந்தா அறிவிச்சு, பிறந்த குழந்தைககளுக்கும் போடச் சொல்லி பரிந்துரை பண்ணுச்சு. பிறந்து 30 நாள்ல அந்த இஞ்சக்‌ஷன குழந்தைகளுக்கு உலகம் பூராம் போட ஆரம்பிச்சாங்க.

அப்புறம் சில மாதங்கள்ல தான் தெரிய வந்தது, அந்தக் குழந்தைகளுக்கு டேஸ்டே தெரியல்லைன்னு. உப்பா இருந்தாலும், சர்க்கரையா இருந்தாலும் எதையும் சாப்பிடுச்சுக. எந்த சாப்பாடையும் ஒதுக்கல. ஒரு வருசம் கழிச்சு, லேஸ் வேணும், குர்குரே வேணும், நூடுல்ஸ்,சிக்கன், மட்டன், பிட்சா,பர்கர் தான் சாப்பிடுவேன் அடம் பிடிச்சிக்கிட்டிருந்த பிள்ளைக கூட எதக் குடுத்தாலும் சாப்பிட ஆரம்பிச்சிருச்சுங்க. உலகம் பூராம் இருந்தும் பேஸ்புக், டிவிட்டர்ல எல்லாம், என்னோட குழந்தை மாறிட்டான். எதையும் சாப்பிடுறன்னு ஸ்டேட்டஸ் மெசேஜ்கள்.
கொஞ்சம் கொஞ்சமா, ஜங்க் புட்டோட விற்பனை சரிய ஆரம்பிச்சுச்சு. எல்லோர் வீட்டிலேயும் பிள்ளைக எந்த ருசியில குடுத்தாலும், ஒரே மாதிரிதானே சாப்பிடுறாங்கண்ணு சத்தான ஐயிட்டமா செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. தாங்களே அதையும் சாப்பிட ஆரம்பிச்சாங்க. சாக்லேட், பேக்கரி ஐயிட்டம்,கே எஃப் சி, சைனீஸ், காண்டினென்டல் புட்னு எல்லாத்தோட மார்க்கட்டும் குறைய ஆரம்பிச்சிருச்சு. பெரிய புட் செயினெல்லாம் லாபத்துல அடி வாங்குச்சு. பிள்ளைகளே ருசிச்சு சாப்பிடலைன்னு மக்கள் தங்களுடைய ஹோட்டல் விசிட்டுகளையெல்லாம் கொறச்சிக்கிட்டாங்க.

 பேச்சிலர்ஸ், ருசிய விட முடியாத சில குடும்பஸ்தர்கள் அப்புறம் ஆபிஸ் பார்ட்டிகள் போன்ற விழாக்கள்ல பங்கெடுத்தவங்க தான் ருசியான சாப்பாடு சாப்பிட்டாங்க.
அதுக்கப்புறம் சில வருஷத்துலேயே பெரியவங்களுக்கும் டேஸ்ட் பட் காலியாக ஆரம்பிச்சிச்சு. எத சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அறு சுவைங்கிறதெல்லாம் புத்தகத்துலயும் இண்டர்நெட்டுலயும் மட்டும் பார்க்கிற வார்த்தையாச்சு. எதச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதானே இருக்குன்னு, பெரிய ஹோட்டல்களுக்கு மக்கள் போகிறத நிறுத்த ஆரம்பிச்சாங்க. தினமும் மது குடிக்கிறவன்கூட, சைட் டிஸ் டேஸ்ட் இல்லைன்னு, குடிக்கிறத குறைக்க ஆரம்பிச்சாங்க.

புட் இண்டஸ்டிரியே ஸ்தம்பிச்சுப் போச்சு. அப்போதைய கவர்ன்மெண்ட் கொடுத்த விலையில்லா அரிசியை வாங்கி மாட்டுக்கு போட்டவன் கூட அதைச் சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சான்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எல்லோரும் கிடைச்ச உணவ சாப்பிட ஆரம்பிச்சாங்க. தலப்பாகட்டி,சரவண பவன், அடையார் ஆனந்த பவன் அப்படிங்கிற பிராண்ட்டெல்லாம் காலாவதி ஆச்சு.

தடுப்பூசி போட்டு வளர்ந்த ஜெனரேஷன் சிகரெட், மது பக்கமே போகலை. ஹோட்டல், டீக்கடைகள் இல்லாததால, அது தொடர்பான தொழில்களும் நடக்கலை. அதனால அரசாங்கத்துக்கு வரியெல்லாம் குறைஞ்சிடுச்சு.  அரசாங்கமே மக்களுக்கான உணவை, சத்து மாவு மாதிரி செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஒரே மாதிரி உருண்டை, வயசு கூட கூட எண்ணிக்கை கூடும். அப்புறம் 50 வயசுக்கு அப்புறம் எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வரும்.

வீட்டில சமையல் அறை, தேவையே இல்லாம போயிடுச்சு. ஒவ்வொரு உணவுக்கும், ருசிக்கும், நம்ம கோபம், இச்சைகளை தூண்டுற சக்தி உண்டு. ஆனா இந்த மாவு உருண்டைய சாப்பிடுறவனுக்கு பெரிய இச்சைகள் வர வாய்ப்பில்லாம போயிடுச்சு.பெரிசா சாதிக்கணும்கிற வெறி, நிறைய சம்பாதிக்கணும்கிற வெறி எல்லாம் குறைஞ்சிடுச்சு. சாப்பாட்டுக்கு பெரிய பிரச்சினை இல்லைன்ன உடனே அவன் அவன் தனக்கு பிடிச்சத மட்டும் செஞ்சான். சிலர் சோம்பேறி ஆனான்.

அதனால பெரிய கண்டுபிடிப்பு எல்லாம் அப்புறம் நடக்கவே இல்லை. ஒரே மாதிரி வாழ்க்கை ஓடிக்கிட்டி இருக்கு.இதுக்கெல்லாம் அந்த இஞ்சக்ஷன்தான் காரணம்னு, ஒரு குழு போராடி, பிறக்கிற குழந்தைகளுக்கு அதைப் போடக்கூடாதுன்னு முயற்சி பண்ணாங்க. இஞ்சக்‌ஷன் போடாத குழந்தைகளுக்கு அந்த காய்ச்சல் வரவும், எல்லோரும் பின் வாங்கிட்டாங்க.

என்று சிவானந்தன் சொல்லி முடித்தான்.

தலை சுற்றியது பூபாலனுக்கு. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தான். அவனுடைய சுவை மொட்டுக்கள் இரண்டு நாட்களாக தூண்டப்பட்டு இருந்து வந்தது. குறிப்பிட்ட ரத்த பிரிவிற்கான காய்ச்சல் வந்தபோது, அவன் ஐ சி யூவில் இருந்திருக்கிறான். காய்ச்சல் தாக்கவில்லை. அந்த இஞ்சக்‌ஷனும் அவனுக்கு போடப் படாமல் விட்டுப் போய் இருந்திருக்கிறது.

சில நாட்களுக்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ருசியில்லா உருண்டை அவன் தொண்டையில் இறங்கவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்குமா? என அலைய ஆரம்பித்தான். சாப்பாடு கூட வேண்டாம், ஒரு டம்ளர் டீ குடித்தால் கூட போதும் என்றானது அவனுக்கு. டீ என்றால் அப்படி ஒரு பிரியம் அவனுக்கு.
வீட்டில் காலை பல் விளக்காமல் குடித்த டீ, டீக்கடையில் மசால் வடையை கடித்துக் கொண்டு, அடுத்தவன் கையில் இருந்த தினத்தந்தியை எட்டிப்பார்த்துக் கொண்டே குடித்த டீ, ஸ்டடி ஹாலிடேஸ்களில் மதியம் தூங்கி, மாலை எழுந்தரித்து, விட்டத பிடிக்கணும்டா என்று சபதம் எடுத்துக் கொண்டே குடித்த டீ, எக்ஸாம் டைமில் பிளாஸ்கில் வாங்கி வைத்து குடித்த டீ, அலுவலகத்தில் மீட்டிங்குகளில் போது, அலங்காரக் கோப்பைகளில் பரிமாறப்பட்ட டீ எல்லாம் அவன் மூளையில் உட்கார்ந்து கொண்டு ஆட்டிப்படைத்தது.

சிவானந்தனிடம் டீக்காக கெஞ்சினான். ”நான் டீயை பார்த்து 20 வருடத்துக்கு மேல் இருக்கும் அதைப் பயிரிடுவதையே நிறுத்திட்டாங்க: என்றான். மாடெல்லாம் இப்போ ஜூல தான் இருக்கு. சிங்கம் புலி மாதிரி என்றான். அவனின்  அப்போதைய நண்பர்கள் அனைவரையும் சிவானந்தன் மூலம் அறிந்து ஒரு டீக்காக பெரு முயற்சி எடுத்தான். கிடைக்கவேயில்லை.

பால் அதிகம் சுரக்காத பெண்களின் கைக் குழந்தைகளுக்கு மட்டும், அரசாங்க பால் பண்ணையில் இருந்து முதல் மூன்று மாதங்களுக்கு பால் வினியோகிக்கப் படுவதாக ஒரு நண்பன் மூலம் அறிந்தான்.
அதைத தவிர வேறு எதுவும் கிடைக்காது, என்ற நிலையில் அந்த இஞ்சக்‌ஷனை தயாரிக்கும் கம்பெனியின் உயர் அலுவலரை பெரும் முயற்சிக்குப் பின் சந்தித்தான்.

மர்மக் காய்ச்சல் பரவியதும், அதை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டபோது, அந்த மருந்தைக் கண்டுபிடித்ததாகவும், அதன் பின் விளைவுகள் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை என்றும் அவன் அறிந்து கொண்டான். மேலும் அவர்களால், சுவை மொட்டுக்களை பாதிக்கும் குறிப்பிட்ட என்சைமை தனியே பிரித்து எடுக்க முடியவில்லை என்றும், வேறு எந்த புது காம்போசிஷனலாலும் அந்தக் காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்து கொண்டான்.
முன்னிலும் தளர்ந்த நடையுடன் வெளியே வந்தவனுக்கு மூளையில் ஒரு மின்னல் அடித்தது. இந்த ஒரு இஞ்சக்சன் நாட்டில் என்னவெல்லாம் நல்லவற்றை ஏற்படுத்தி உள்ளது என்று.

சமையல் என்ற ஒன்றே இல்லாததால், பெண்கள் சம உரிமையுடன் நடமாடினார்கள். அலுவலகம் சென்று வந்து சமைக்கத் தேவையில்லை.   தேவையில்லாத உணவு வகைகளை உண்டு, மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு நோய் வருவது குறைந்துள்ளது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. உணவுப் பழக்கத்தின் பெயரால் மக்களை பிரிப்பது நடக்கவில்லை. சொத்து சேர்க்கும் ஆர்வம் குறைந்து சுற்றுச்சூழல் பிழைத்துள்ளது. நாடுகளுக்கிடையே சண்டை இல்லை. இந்தக் காய்ச்சல் வராமல் இருந்திருந்தால் 2053 இப்படியா இருந்திருக்கும்?


மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்று, எனக்கு மிஸ்டரி பீவர்க்கான தடுப்பூசி ஒன்று போடுங்கள் என்று கேட்டுக் கொண்டான் பூபாலன்.