Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts

December 01, 2013

விகடன் 3டி அவசியமா?

மூன்று வாரங்களுக்கு முன் விகடன் 3டி எஃபெக்டில் படங்களைப் பிரசுரித்து, அதைக் காண கண்ணாடியும் கொடுத்த போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. இரண்டாவது இதழ் வந்தபோது, இதற்கு என்ன அவசியம்? எனத் தோன்றியது. மூன்றாவது இதழ் எரிச்சலே ஊட்டியது எனலாம்.

முதல் காரணம், கண்ணாடி அணிந்து பார்த்தால் எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. எழுத்துக்களை மட்டும் படிக்கலாம் என்று பார்த்தால் அருகில் 3டி எஃபெக்டுக்காக பிரிண்ட் செய்யப்பட்ட  படம் உறுத்துகிறது. ஒரு வேளை இதழ் முழுக்க முழுக்க 3டி எஃபெக்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்னவோ?

இரண்டாவது, படங்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் கண்டெண்ட் குறைவாக உள்ளது. இரண்டு வரி ஜோக்கிற்காக ஒரு பக்கம், ஏன் இரண்டு பக்கம் கூட ஒதுக்கியுள்ளார்கள். சினிமா பிரபலங்களின் பேட்டியிலும் படங்களே பெரிதும் ஆக்ரமித்துள்ளன. நான்கு ரூபாய் கொடுத்து வாங்கும் தி இந்து தினசரியை படித்து முடிக்கும் நேரத்தை விட, 20 ரூபாய் விகடனை விரைவில் வாசித்து முடித்து விட முடிகிறது.

மூன்றாவது கண்டெண்ட் குவாலிட்டி :
இதுதான் மிக கவலையூட்டும் அம்சமாக இருக்கிறது. பொக்கிஷம் என கொஞ்சம் பக்கம் போய்விடுகிறது. வலைபாயுதே, இன்பாக்ஸ் என இணையத்தில் இருந்து சில பக்கம், ஐம்பது கிலோ அஸ்கா, குழைந்து விட்ட குஸ்கா என நாயகிகளை வர்ணித்து டெம்பிளேட் சினிமா செய்திகள் என பாதி பக்கத்துக்கு மேல் ஃபில் அப் செய்கிறார்கள். முன்பெல்லாம் விகடனைப் படித்தால் நமக்கு ஏதாவது, தகவல் கிடைக்க வரும். ஆனால் இப்போதோ தகவல் பிழைகள் தான் கண்ணுக்குத் தெரிகின்றன.

நான் வழக்கமாக விகடன் வாங்கும் கடைக்காரரிடம் விசாரித்த போது, இதனால் ஒரு புத்தகம் கூட அதிகம் விற்கவில்லை என்று சொன்னார். புது வாசகர்கள் வேண்டாம். இருக்கிற வாசகர்களையாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள் விகடனாரே.

இப்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், 1950ல் இருந்து 1990 வரை பிறந்தவர்கள் தான் விகடனை வாங்கிப் படிக்கிறார்கள். 90க்குப் பின் பிறந்த யாரும் புத்தகம் அதுவும் விகடன் வாங்கிப் படிப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னும் ரயிலில், பஸ்ஸில் படிக்கும் நடுத்தர வர்க்கமே விகடனை தாங்கிப் பிடிக்கிறது. இளைஞர்கள் கைபேசியைத்தான் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வைக்க என்ன வழி? விகடனை கையில் வைத்திருந்தால் பெருமை என அவர்களை உங்களால் எண்ண வைக்க முடியுமா?


ஒரு நல்ல கதையோ, கட்டுரையோ கொடுக்கும் வாசிப்பின்பத்தை இந்த 3டி ஜில்லாக்கி வேலை கொடுத்து விடுமா? என்ன?.

December 28, 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

இதுவரை தமிழில் விளம்பர உலகம் தொடர்பாக வந்திருக்கும் புத்தகங்கள் எத்தனை என்று பார்த்தால் அது தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்க்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை விட குறைவாகவே இருக்கும். பெரும்பாலானோர் ஞாபகத்திற்க்கு உடனே வருவது எப்படி ஜெயித்தார்கள் என்ற ரமேஷ்பிரபாவின் புத்தகம். இது விகடன் குழும பத்திரிக்கையில் தொடராக வந்து பின் புத்தக வடிவம் பெற்ற ஒன்று. இது பெரும்பாலும் விளம்பரங்களின் வெற்றியை அலசிய ஒன்று என்று சொல்லலாம். விளம்பரத்துறையின் ஆணிவேரான ஏஜென்சிகளின் பங்கு, அவை செயல்படும் விதம், விளம்பர நுணுக்கங்கள், அடிப்படை விதிகள் ஆகியவற்றை அலசிய புத்தகம் என்று பார்த்தால் அது பிஜேபி தமிழ்நாட்டில் தனியாக நின்று ஜெயிக்கும் நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையிலேயே இருக்கும். அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் யுவகிருஷ்ணா எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்பது பாமக திருமங்கலத்தில் தனித்து நின்றால் ஜெயிக்காது என்பதைப் போன்ற நிதர்சனம்.

இந்த புத்தகத்தின் சிறப்பசம்மே விளம்பரத்துறையின் எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் கவர் செய்திருப்பதேயாகும். முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ விளம்பரம் துவங்கி எதிர்காலத்தில் எந்த மாதிரியான விளம்பர உத்திகள் நடைமுறைக்கு வரும் என்பதுவரை ஒரு முழுமையான கவரேஜ் இந்த புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களும் தக்க உதாரணத்துடனுடம், நூலாசிரியருக்கே உரித்தான நகைச்சுவையுடனும் கொடுக்கப்பட்டுள்ளது. பியர்ஸ் சோப் பற்றிய செய்தியில், மாமனாரின் கம்பெனிக்கான மருமகனின் விளம்பரம் அதுவென்றும், அந்த வெற்றிக்காக அவருக்கு தலைதீபாவளிக்காக எக்ஸ்ட்ரா மோதிரம் கிடைத்ததா என்பது தெரியவில்லை என்று சொல்லுவது அவருக்கே உரித்தான டிரேட்மார்க். இந்திய விளம்பரத்துறையின் தந்தை ஆர் கே ஸ்வாமி என்பதில் தொடங்கி முதன்முதலில் தொலைக்காட்சியில் வண்ணத்தில் ஒளிபரப்பான விளம்பரம் பாம்பே டையிங் என்பதுவரை தகவகல்கள் கொட்டிகிடக்கின்றன இப்புத்தகத்தில். பெருவெற்றியடைந்த விளம்பரங்கள் என்று தரப்பட்டுள்ள விளம்பரங்கள் எல்லாமே மிக சுவையானவை.

அரசியல் கட்சிகளின் விளம்பர யுக்திகள் பற்றியும் நூலாசிரியர் தகவல்களை கொடுத்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என்ற பிஜேபியின் விளம்பரம் உருவான விதம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் இறுதிசெய்து வைத்துள்ள விளம்பர ஏஜென்ஸி என சுவையான தகவல்கள்களும் உண்டு. என்னை இப்புத்தகத்தில் மிகவும் கவர்ந்தபகுதிகள் என்றால் எதிர்மறை விளம்பரம், விதிவிலக்குகள் ஆகிய அத்தியாயங்கள். மிக மிக கவர்ந்த பகுதி என்றால் அது நூலாசிரியரின் கற்பனை வெளிப்படும் எதிர்காலம் என்ற அத்தியாயமே. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் விளம்பரம் வரும் என்று அவர் விவரித்திருப்பது இப்படியெல்லாம் நடக்குமா என்று படிக்கும் போது நினைக்க வைத்தாலும், பின்னர் யோசிக்கும்போது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. பின்னினைப்பாக விளம்பரத்துறையின் பிதாமகன்கள் மற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுச்சேவை,அரசு விளம்பரங்கள், கண்காட்சி, ஈவெண்ட் மானேஜ்மெண்ட்,பிராண்டிங் என இப்புத்தகம் எதையும் விட்டு வைக்கவில்லை. இப்புத்தகத்தின் குறையாக நான் கருதுவது விளம்பரம் என்றவுடன் நம் கண்ணில் தோன்றுவது அழகு மாடல்களே. அவர்களைப்பற்றி சுப்ரமணியம் சுவாமி கட்சிக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அளவுக்கு கூட தகவல் இல்லை என்பது மன்னிக்க முடியாத குற்றம். சத்தியமூர்த்தி பவன் கூட்டங்களுக்கு செல்லும் காங்கிரஸ்காரர்களுக்கு இறுக்கமாக வேட்டி கட்ட தெரிவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் விளம்பர துறைக்கு வர துடிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டியதும்.

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்

நூலின் பெயர் : விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை : ரூ 70.

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

ரகுவம்சம் – அ வெ சுப்பிரமணியன்



ராமாயனம்,மஹாபாரதம் என்ற இரண்டு பெயர்ச்சொற்களை கேட்காமல் நம் நாட்டில் யாரும் பள்ளிப் படிப்பை கடக்க முடியாது. செவி வழியாகவும், நாடகங்கள் மூலமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இந்த காப்பியங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. 75 ஆண்டுகளாக திரைப்படங்கள் மூலமாகவும் இவை ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சினிமா எடுக்கப்பட்ட முதல் பத்தாண்டுகளில் ராமாயன,மஹாபாரத உப கதைகள் பெரும் இடத்தைப் பிடித்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இந்த இரண்டு காப்பியங்களின் சிறு சிறு உப கதைகளும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்சி வடிவிலும் சென்றடைந்தன. இரண்டு காப்பியங்களும் விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்பட்டவையாக உள்ளதால் மத ரீதியாகவும் இதை படிப்பவர்கள் தங்கள் சுற்றத்தால் உற்சாகப்படுத்தப் பட்டார்கள்.

இந்த இரண்டு காப்பியங்களில் எது சிறந்தது என்று கேட்டால் பலரிடம் உடனே வரும் பதில் மஹாபாரதம் தான். ராமாயனத்தை விட அதிகமான கிளைக்கதைகளும், கதாபாத்திரங்களும், சுவையான சம்பவங்களும் மஹாபாரதத்தில் தான் அதிகம். ஆனால் இலக்கியசுவை என்று பார்த்தால் கம்பர் எழுதிய ராமாயனத்தின் அருகில் கூட மஹாபாரதத்தால் வர முடியாது. எந்த இலக்கியத்தையுமே அது உருவாகிய மொழியில் படித்தால் தனிச் சிறப்பாக இருக்கும். கிரேக்க காப்பியங்களான இலியட்,ஒடிஸி போன்றவற்றை ஆங்கிலத்தில் படிப்பதைவிட கிரேக்க மொழியில் படித்தால் இன்னும் அதன் இலக்கிய செழுமை புலப்படும்.

மகாகவி காளிதாஸ் எழுதிய சாகுந்தலம்,மாளவீகம், விக்கிரமன்ஊர்வசி ஆகிய காவியங்களையும் ரகுவம்சம் ,குமார சம்பவம் போன்ற பாடல் வடிவில் எழுதப்பட்ட புராணங்களையும், மேகதூதம் போன்றவற்றையும் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் அதை ருசிக்க வேண்டுமென ஆவல் எழுவதுண்டு. இவற்றில் எதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன், ஆனால் வர்ணனைகளைப் படித்ததில்லை. நியு ஹொரைசன் மீடியாவின் ஒரு அங்கமான வரம் பிரிவு வெளியிட்டிருக்கும் ரகுவம்சம் மிக எளிய நடையில் அந்த வர்ணனைகளைத் தருகிறது.

ராமன், அவனுக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், அவன் பின் ஆண்டவர்கள் ஆகியோரது சிறப்புகளை சொல்வதே இந்த ரகுவம்ச காவியம். ரகு வம்சத்தின் முதல் மன்னர் வைவஸ்த மனு, கடைசி மன்னர் அக்கினிவர்ணன். முக்கியமாக திலீபன்,ரகு,அஜன், தசரதன் மற்றும் ராமன் ஆகிய மன்னர்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்த ரகுவம்ச புத்தகத்தின் சிறப்பே இதன் வர்ணனைகள்தான். பல இடங்களில் வர்ணனைகள் நம் கற்பனைகளுக்கு அப்பால் செல்கின்றன. திலீபன் குழந்தைவரம் வேண்டி தன் மனைவி சுதட்சிணையுடன் வசிஷ்டர் ஆசிரமத்தில் தங்கி நந்தினி பசுவுக்கு பணிவிடை செய்தல், திலீபன் மகன் ரகு திக்விஜயம் செய்தல், ரகுவின் மகன் அஜனின் அழகை காண இளம்பெண்கள் ஓடி வருதல், அஜனின் மகன் தசரதன் வேட்டையாட செல்லுதல், புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது கீழே காணும் காட்சியை ராமன், சீதாவுக்கு விளக்கிக் கொண்டு வரும் காட்சி ஆகியவை வர்ணனைகளின் உச்சம் என சொல்லலாம்.

இந்த வம்சத்திற்க்கு ரகுவம்சம் என பெயர் வர, சிறப்பாக ஆட்சி செய்த ரகு காரணம் என இங்கு சொல்லப்படுகிறது. ஆனால் சூரியவம்சத்தை சார்ந்த அரசவம்சம் என்பதால் இப்பெயர் என கர்ணபரம்பரையாக ஒரு செய்தி நம்மிடையே புழங்கி வருகிறது. எது சரி என்பது தெரியவில்லை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத குசன்,அதிதி,நிஷிதன் ஆகியோரைப் பற்றியும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் மிக குறைந்த அளவே.
இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இதில் சொல்லப்பட்டுள்ள உவமைகளே. இந்துமதியின் சுயம்வரத்திற்க்கு அஜன் செல்லுகிறான். நகர மக்கள் அனைவரும் அங்கு வந்திருக்கும் மற்ற அரசர்களை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள். அஜன் உள்ளே நுழைந்ததும் அனைவரின் கண்களும் அவனையே நோக்குகின்றன. எப்படி இருந்தது என்றால் ”காட்டிலிருந்து மதநீரை பெருகவிட்டுக் கொண்டுவரும் யானையைக் கண்டதும், வண்டுகள் பூக்களை எல்லாம் விட்டு விட்டு யானையிடம் செல்வது போல”

ரகுவின் திக்விஜயத்தில் ஒரு காட்சி “ கலிங்க நாட்டை வெற்றிகொண்டபின் ரகுவின் படை காவிரியாற்றின் கரையை அடைந்தது. அஙு சில நாட்கள் டரகு தன் படையுடன் தங்கியிருந்தான். மதநீர் பெருகும் யானைகள் அந்த நதியில் குளித்ததால், அவற்றின் மதநீர் பெருமளவில் ஆற்றின் நீருடன் கலந்துவிட்டது. இதன் விளைவு என்ன தெரியுமா? கடலரசனுக்கு ஆறுகள் எல்லாம் மனைவிகள் ஆகும். காவிரி ஆறு யானைகளின் மதநீருடன் கலந்த கலப்பினால், கடலரசனுக்கு மனைவியின் கற்பு ஒழுக்கத்தின்மீதே சந்தேகம் எழுந்துவிட்டதாம்”

தசரதன் வேட்டையில் ஒரு காட்சி, “ அவன் கையில் ஏந்தியிருந்த வில் அம்பைப் பார்த்து மிரண்டன மான்கள். அவைகளின் அழகிய கண்கள் சஞ்சலமாக அங்குமிங்கும் உருட்டி விழித்த காட்சி, தசரதனுக்கு தன் அந்தப்புற பென்களை ஞாபகம் ஊட்டியதால் அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டான்”

ரகுவம்சத்தை தமிழில் இங்கு மொழிபெயர்த்திருப்பவர் அ வெ சுப்பிரமணியன். மிக மிக சரளமான நடை. சமஸ்கிருதமும், தமிழும் இவருக்கு இரு கண்கள் என்கிறார்கள். இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வராது. ரகுவம்சத்தின் இலக்கிய செழுமையை ருசிக்க வைத்த அவருக்கு நன்றிகள்.

நூலின் பெயர் : ரகுவம்சம்

ஆசிரியர் : அ வெ சுப்பிரமணியன்

பக்கங்கள் : 136

விலை : ரூ 60.

ரகுவம்சம் ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701


நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

November 27, 2008

வண்ணநிலவனின் கடல்புரத்தில்



அதிகாரம் என்பதே ஒருவன் வாழ்வதற்க்கான பலத்தையும், மன திடத்தையும் தருகிறது. அந்த அதிகாரம் குறையும் போது அவன் வாழ்வதற்க்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முற்றிலும் அதை இழக்கும்போதோ கிட்டத்தட்ட நடைப்பிணமாகிறான். நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான அலுவலக அதிகாரிகள்/ஊழியர்களிடம் நாம் காண்பது, இதை உறுதிப்படுத்துகிறது. இது இவர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?. ஆட்சியாளர்கள், கலைத்துறையினர், வர்த்தகர்கள், விவசாயிகள், நெசவாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இது பொருந்துகிறது.



வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் புதினத்தில் இதுபோல் அதிகாரம் குறையும் ஒரு மீனவனுடைய குடும்பத்தார் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டிருகிறது. இங்கே அவனது அதிகாரமாக இருப்பது அவனுடைய மீன்பிடி படகும், அதை செலுத்தக்கூடிய உடல் வலிமையும் தான். இயந்திரப்படகுகள் வருகையால் நாட்டுப்படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் அடையும் பின்னடைவும் இதில் ஊடுபாகாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வூர் மீனவர்களின் காதல்,காமம், பாசம், ஏமாற்றம், அரவணைப்பு ஆகியவை இக்கதை மாந்தர்கள் மூலம் நம்மனதில் படியவைக்கப்படுகிறது.




எனக்கு கடலும் மீனவர்களும் அவ்வளவு பரிச்சியமில்லை. தென் தமிழ்நாட்டில் ஒரு விவசாய கிராமத்தில் பிறந்த எனக்கு விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமே அறியப்பட்டிருந்தது. சிறு விவசாயத்திற்க்கு செய்யும் செலவு ஒரு வழிப்பாதை ஆனபின், வாரிசுகள் வேறு இடத்திற்க்கு பிழைப்புக்கு சென்றபின் மீதமுள்ள பெண்ணின் திருமணத்திற்க்கோ, விட்டுப்போன சீர்வரிசைக்காகவோ பூர்விக நிலத்தை விற்க டவுனுக்கு வரும் பலரை பார்த்திருக்கிறேன், பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் இருக்கும் பாலமுருகன் பிரியாணி ஸ்டாலில். பதிவு முடிந்தவுடன் அங்கே அரை பிளேட் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தார்க்கு பார்சல் வாங்கி டவுன் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போதுகூட அவர்கள் முகத்தில் சலனம் இருக்காது.



மறுநாள் காலை உடல் கடிகாரம் ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டுவிட, வழக்கம் போல் கருவிகளை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி நாலடி வைத்தவுடன் உண்மை உறைத்து தோள் துண்டால் வாயைப் பொத்தி கேவும் போது, மனதளவில் இறந்துவிடுவார். அடுத்து யார் பாலமுருகன் கடையில் பிரியாணி சாப்பிடப்போகிறார்கள் என்பது ஊர் சாவடியில் வருத்ததுடன் பேசிக்கொள்ளப்படும். அதே போல் இங்கும் கதையின் நாயகன் மிக்கேல் குரூஸ் தன் பூர்விக படகையும் வீட்டையும் விற்றுவிட்டு மகளுக்கு விருப்பமானதை வாங்கிக்கொண்டு வருவதும் அதை தொடரும் நிகழ்வுகளும் குறிஞ்சி,முல்லைக்கு மட்டுமல்ல நெய்தலுக்கும் இதே நிலைதானோ என வருந்த வைக்கிறது.


எங்கள் ஊர் பக்கம் சேனைத்தண்ணீர் வைப்பது என்னும் பழக்கம் உண்டு. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருக்கும் என நினைக்கிறேன். பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கலந்த நீரை கொடுப்பதுதான் அது. அதை கொடுப்பவருடைய குணாதியசங்கள் குழந்தைக்கு வரும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே நன்கு படித்த, வாழ்வில் வெற்றியடைந்தவர்களையே சேணை வைக்கச் சொல்வார்கள். சில சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவனை சிலாகிக்க இப்படி சொல்வார்கள் "அவனுக்கு சேணை வச்சது யாரு?, நம்ம கிழக்கு வீட்டுக்காரரில்ல" என்று. இங்கும் சேணை வைக்கிறார்கள். சர்க்கரை நீரை அல்ல, கடல் நீரை. ஆணாயிருந்தால் அவனுக்கு கடலில் பிழைப்பதற்க்கான உடல் வலுவையும், பெண்ணாய் இருந்தால் எந்த கஷ்டத்தையும் தாங்கும் மனத்திடத்தையும் கடலம்மா தருவாள் என்ற நம்பிக்கை இங்கே. உண்மையிலேயே இங்கே பெண்ணுக்குத்தான் அதிக மனதிடம் வேண்டும். சென்றவன் என்ன ஆனான்? என ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டுமே?



கடல்புரத்தில் வரும் பெண்களில் முக்கியமானவர்கள் மிக்கேல் குருஸ்ஸின் கடைசி மகள் பிலோமினாவும், அவளது தோழி ரஞ்சியும். இருவருக்கும் காதல் தோல்வி இருக்கிறது. ஆனால் அதை கடக்கும் மன உறுதியும் வாய்க்கப்பட்டவர்கள். இவர்களை வண்ணதாசன் வர்ணிக்கும் விதம் அலாதியாக இருக்கும். அவர்களை வர்ணிக்கும் போது சொல்வார், "பிலோமியின் உடல் நிறம் கறுப்பாக இருந்தாலும் உதடுகள் மின்னும் கறுப்பாக இருக்கும்" என்று. பொதுவாக தமிழர்களுக்கு வெள்ளை நிற பெண்ணும் பிடிக்காது, கறுப்பு நிற பெண்ணும் பிடிக்காது. மாநிற மேனி என்றால் மயங்கி விடுவார்கள். எங்கள் ஊர்பக்கம் அதை புதுநிறம் என்பார்கள். அந்த நிறத்தில் முகம் லட்சணமாக இருக்கும் பெண்கள் திருவிழா காலங்களில் தாவணி அணிந்து வளைய வரும் போது ஊரே வெறிக்கும். ஆனால் முழு கறுப்பு என்றால்???. பிலோமி சொல்கிறாள் " ரஞ்சி உன் சிரிப்புல என்னவோ இருக்குடி, இல்லாட்டி இந்த கறுப்பிய யாரு கட்டிக்கிருவா?" இதைப் படித்தபின் யோசித்துப் பார்த்தேன் கடைசியாக நம்மை கவர்ந்த கறுப்பான பெண் யார்? டி ஆர் ராஜகுமாரி,ரோஜா முதல் சினேகா வரை புதுநிறத்து பெண்கள் தானே?. நாம் ரசிக்கும் அழகுகூட சமுதாயத்தின் கருத்தாகவே நம்மீது படிகிறதோ?. சுற்றம் நட்பு என எல்லோரும் கறுப்புதான் அழகு என கற்பித்திருந்தால் நமது ரசனை மாறியிருக்குமோ?


இயந்திரப்படகுகள்வந்ததால் தொழில் நசிந்து வெளியேறுகிறார்கள் நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள். உடனே நமக்குள்ளே கேள்வி வருகிறது. ஏன் இவர்கள் வருங்காலத்தை மனதில் வைத்து வாழ்க்கை நடத்தியிருக்க கூடாது? இந்த எண்ணமே பொருளை மட்டுமே பார்க்கும் பலருக்கும் முதலில் தோன்றும். இயந்திரப்படகுகள் இல்லாமல் வல்லத்தில் மட்டும் சென்று எல்லோரும் மீன் பிடித்தால்? யாவரும் நலமாய் இருக்கலாமே?. அரிய மீன் வகைகள் அழியாது.சுற்றுச்சூழல் நிலை நிறுத்தப்படும். இதைதான் அவர்கள் கடலம்மா கோபித்துக்கொள்வாள் என்ற எளிய மொழியில் சொல்லுகிறார்கள். உண்மையில் இருப்பதோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதில் வரும் தலைமுறைக்கு உலகத்தை தருகிறார்கள். தொழிலில் இம்ப்ரூவ்மெண்ட் என்று பேச ஆரம்பிக்கும் போது, நாம் செய்யும் எந்த முயற்சியும் சூழலை பாதிப்பதாகவோ இருக்கும் சமனிலையை சிதைப்பதாகவோதானே முடிகிறது. அதற்கு பாதிப்பில்லமல் செய்ய வழி இருந்தாலும் பொருள் கண்ணை மறைக்கிறதே. அதற்க்கு இந்த கடல்புரத்து வல்லத்துக்காரர்கள் எவ்வளவோ மேல்.




கதையில் வரும் மற்ற பாத்திரங்களான செபஸ்டி,ஐசக்,சிலுவை,வாத்தி, பவுலுபாட்டா போன்றவர்களின் பிம்பத்தை குறைவான வர்ணனைகள் மூலமே ஆசிரியர் நம் மனதில் ஏற்றிவிடுகிறார். அந்த கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.
கதையின் மையக்கதாபாத்திரமான மைக்கேல் குருஸ்ன் மனைவி மரியம்மை- ஊர் வாத்தி இடையேயான இலை மறை காய் மறை உறவு, அது தெரிந்திருந்தும் குறைந்துவிடாத மைக்கேலின் மனைவி பாசம், பிலோமிக்கும் தரகருக்கும் இடையே நடக்கும் ஒளிவுமறைவில்லாத பேச்சு, ரஞ்சிக்கும் அவளது கொளுந்தனுக்கும் இடையேயான பாசம் என பல காட்சிகளின் மூலம் அம்மக்களிடையே இருந்த நீக்கு போக்கான தன்மையும் வெளிப்படுகிறது.
இந்த கதை நடக்கும் காலகட்டம் 1970 என்பதால் இதில் சொல்லப்படும் படகின் விலை 350 ரூபாய், திருவிழாகாசு 10 பைசா என்பதெல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்துபவை. மேலும் அக்காலத்திலேயே ஆசிரியர்கள் உபதொழில்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. அப்போதைய முக்கிய லாபம் தரும் வியாபாரங்களில் ஒன்றாக சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் கடை சொல்லப்படுகிறது.

இந்த நாவலின் சிறப்பே, இதில் வரும் சம்பவங்கள், குடும்பத்தில் நடக்கும் வாத பிரதி வாதங்கள் எல்லாம் எந்த சமூகத்திற்க்கும் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருப்பதேயாகும். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் கடலைப் பார்த்தேன். இன்றுவரை கடற்கரையை தாண்டி எதையும் யோசித்ததில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது, கடல்புர மக்களின் பேச்சுவழக்கு, உடல்மொழி ஆகியவை என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. இனி எப்பொழுதாவது மீனவர் குடியிருப்பு பக்கம் போனால் அங்கே குரூஸையும், பிலோமியையும், பவுலுபாட்டாவையும் என் கண்கள் தேடும்.


நூலின் பெயர் : கடல்புரத்தில்


ஆசிரியர் : வண்ணநிலவன்


பக்கங்கள் : 128


விலை : ரூ 75.


வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,


ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்



நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

November 09, 2008

நான் படித்த புத்தகங்கள்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அத்திரிக்கு நன்றிகள்

எங்கள் தெருவில் சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்னும் கம்யூனிஸ இயக்கத்தின் நகர அலுவலகம் இருந்தது. அவர்கள் தட்டி எழுதுவதை வேடிக்கை பார்ப்பது என் சிறுவயது பொழுதுபோக்கு. அப்போது அவர்கள் எனக்கு சோவியத் யூனியன் தயாரித்து, மொழி மாற்றம் செய்யப்பட்ட சிறுவர் கதை புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள். எங்கள் வீட்டில் விகடன்,சாவி,குமுதம்,இதயம் போன்ற பத்திரிக்கைகளை வாங்குவதால் இயல்பாகவே எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது.

என் வயதையொத்த நண்பர்கள் எனக்கு அமையாததால் நூலகத்துக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு ஸ்டெல்லா புருஸ்,சுஜாதா, பாலகுமாரன் போன்றோரை விரும்பி படித்தேன். இந்த கால கட்டத்தில் ஜூனியர் விகடன் வேகமாக வளர ஆரம்பித்தது. அதனுடன் தராசு, நக்கீரன், நாரதர், கழுகு போன்ற அரசியல் புலனாய்வு பத்திரிக்கைகள் வெளியாயின. எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.

1989 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பூத் ஸ்லிப் எழுதுவது, டோர் கேன்வாஸிங் என (10 ஆம் வகுப்பில்) களப்பணியில் ஈடுபட்டேன். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு முன் அமைக்கப்படும் (பூத் ஸ்லிப் வினியோகிக்க உதவும்) கீற்று பந்தலில் அமர்ந்து ஸ்டெல்லா புருஸ்ஸின் (அது ஒரு நிலா காலம் என நினைக்கிறேன்) நாவலையும், நக்கீரனின் கருத்து கணிப்பையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்த ஒரு தோழர், இதையெல்லாம் ஏன் படிக்கிறாய்? என கடிந்து கொண்டு தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

அவர் எனக்கு வாழ்வின் அலைகள் (மாக்சிம் கார்க்கி), வால்கா முதல் கங்கை வரை (ராகுல சாங்கிருத்தியன்), அன்டோன் செகாவ் சிறுகதைகள் மற்றும் லெனினின் புத்தகங்கள் ஆகியவற்றை தந்தார். படித்தேன். எதுவும் புரியவில்லை.

பின் 1991 கல்லூரி விடுதியில், உடனிருந்த மற்றவர்கள் ஸ்டார் டஸ்ட், பிலிம் பேர், வீக், இந்தியா டுடே என படித்ததால் நானும் அவற்றை படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தி படவுலகம் குறித்தும், தேசிய அரசியல் குறித்தும் முதன்முறையாக அறிந்து கொண்டேன்.

பின் படிப்பு முடிந்து, வாழ்க்கையில் அடிபட்டு சென்னையில் அலைந்து கொண்டு இருந்தபோது எனக்கு ஆதரவளித்தது சென்னை கன்னிமாரா நூலகம். காலையில் நுழைந்தால் பசி உணரும் வரை படிக்க வேண்டியது. வெளியில் சென்று ஒரு பிரட் ஆம்லேட் பின்னர் விட்ட இடத்தில் தொடர வேண்டியது. இக்காலத்தில் தான் எனக்கு சிறுவயதில் புரியாததெல்லாம் புரிய ஆரம்பித்தது. கு அழகிரிசாமி, அசோகமித்திரன், லாசரா, புதுமைப்பித்தன், சி சு செல்லப்பா (வாடிவாசல்) ஆகியோரது படைப்புகள்அனைத்தும் படித்தேன். தி ஜா வின் மோகமுள், மரப்பசு, கல்கி,தேவனின் பெரும்பாலான படைப்புகள், ஆதவனின் என் பெயர் ராமசேஷன், சு ராவின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகனின் குறு நாவல்கள் (ரப்பர்), என கலந்து கட்டி படித்தேன்.

அதன்பின் மேல்படிப்பு,திருமணம், குழந்தை என சமூக அந்துஸ்துக்காக ஓடிக்கொண்டிருருப்பதால் படிப்பது குறைந்து விட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாரு,ஜெமோ,கீற்று,சென்னை லைப்ரரி, வலைப்பதிவுகள் என வலையில் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1.தமிழ்பறவை

2.புதுக்கோட்டை விலேகா

3. அக்னி பார்வை

September 02, 2008

பாலபாரதி இப்படி செய்யலாமா?


பதிவர் சந்திப்புகள் எப்போதும் இரண்டு நாட்களுக்கான உற்சாகத்தைக் கொடுக்கும். வாழ்வதன் மீதான காதலை அதிகப்படுத்தும் அந்த ஒத்த அலை வரிசையினரின் சந்திப்பு. இந்த ஞாயிறு அப்படியில்லை. காரணம் பாலபாரதி.



நான் படித்த சிற்றூரில் நிறத்தாலும் அதிர்ந்து பேசா குணத்தாலும் என் தெருப்பையன்களிடம் நான் அன்னியப்பட்டுபோயிருந்தேன். வகுப்பிலும் வீட்டிலும் செல்லப்பிள்ளை, ஆனால் தெருவில் கிடைக்காத அங்கீகாரம் என்னை அலைக்கழித்தது.என்னை அவர்களிடம் நிரூபிப்பதற்க்காக பலான படங்கள்,சிகரட் என திசை மாறத்தொடங்கினேன். என் தந்தையின் இடமாறுதல் எனக்கு ஏற்படவிருந்த விபத்துக்களை தடுத்து நிறுத்தியது.
ஒரு சிறுகுழுவிடம் எனக்கு கிடைக்காத அங்கீகாரமே என்னை துவளச்செய்தது.



திருநங்கைகள் தங்கள் வாழ்வில் எங்குமே அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்கிறார்கள். ஒவ்வொருமுறை அது மறுக்கப்படும்போதும் ஒரு காயத்தை அது அவர்கள் மனதில் உண்டாக்குகிறது. வாழ்வின் மீதான காதல்தானே அவர்களை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளச்செய்கிறது. பாலபாரதியின் அவன் - அது = அவள் படித்தபின் எனக்குத் தோன்றியதெல்லாம் மன வலி என்றால் என்னவென்றே உணராமல் அடிக்கடி மனசு கஷ்டமா இருக்கு என்ற பதத்தை உபயோகிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சிதான்.



இனி திருநங்கைகளை காணும் போதோ அவர்களிடம் உரையாடும் போதோ என்னிடம் அனுதாபத்தொனி இருக்காது. தோழமைத்தொனி மட்டுமே. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.இந்த புனைவு என் மனத்தில் விதைத்ததும் அதைத்தான்.

ஆசிரியர் : யெஸ். பாலபாரதி

தோழமை வெளியீடு விலை: ரூ. 120 பக்கங்கள் : 184


தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்

தோழமை 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை