May 31, 2009

என்னுடைய ட்ரீம் கிரிக்கெட் டீம்

நான் கிரிக்கெட் பார்த்த வரைக்கும், எனக்குப் பிடிச்ச ஆளுங்களை எல்லாம் சேர்த்து உருவாக்குனது இந்த டீம்.

ஆஸ்திரேலிய பெர்த் பிட்ச்சா இருந்தாலும் சரி, ஐதராபாத் டெத் பிட்ச்சா இருந்தாலும் சரி

செஞ்சூரியன் மாதிரி வட்டமா இருந்தாலும் சரி
வெலிங்டன் மாதிரி அஷ்டகோணலா இருந்தாலும் சரி.

லார்ட்ஸ் மாதிரி ஸ்விங் ஆனாலும் சரி, பிரேமதாசா மாதிரி ஸ்பின் படமெடுத்து ஆடினாலும் சரி

பேட்ஸ்மென் உயிரக் கொடுத்து அடிச்சாத்தான் சிக்ஸ் போகும்கிற மாதிரி இருக்குற மெல்போர்ன் ஆனாலும் சரி. பேட்ஸ்மென் தும்முனாலே சிக்ஸ் போயிடுற டாண்டனா இருந்தாலும் சரி


டெஸ்ட்டானும் சரி ஒன் டே ஆனாலும் சரி

20 20 ஆனாலும் சரி இனிமே வரப்போற 10 10 ஆனாலும் சரி

என்னோட டீம் இதுதான்.

இது பெஸ்ட் லெவன் இல்லை. என்னோட இஷ்ட லெவன்.


1. கார்டன் கிரினீட்ஜ்

கிரினீட்ஜ் அடிச்சா பால் பவுண்டரி எட்ஜ்ஜு.
வலது கால தரையில அழுத்தமா ஊணி, இடது கால தூக்கி இவர் அடிக்கிற ஹுக்குக்கும் புல்லுக்கும் நான் அடிமை.
(செல்லமா, நடராஜர் ஷாட்).

2. விரேந்திர சேவாக்

வாக் பண்ணி உள்ள வந்தா எதிரணி பவுலர்களுக்கெல்லாம் கதக்குன்னு இருக்கும்.

3. விவியன் ரிச்சர்ட்ஸ் (கேப்டன்)
ஓப்பனர்கள் எப்படா அவுட் ஆவாங்கண்ணு எதிரணி கேப்டனுக்கு பயமாவும் இருக்கணும். ஐயையோ அப்படி அவுட்டாயிட்டா இவன் வந்துடுவானேன்னு பீதியாவும் இருக்கணும். அதுக்கு நம்மாளை விட்டா வேற யாரு இருக்கா?


4. ஜாவிட் மியாண்டாட்


பிவோட்டல் ரோல் இவருக்குத்தான். வண்டி எந்த நிலைமையில இருந்தாலும் ஸ்டேஷனுக்குள்ள பாதுகாப்பா கரெக்ட் டயத்துக்கு போயிடும், இந்த இஞ்சின் ட்ரைவர் இருந்தா.

5.அரவிந்த டி சில்வா

ஆளப் பார்த்தா அஞ்சடி. அடிச்சா பால் பஞ்சர்டி.
மினி பவர் ஹவுஸ். சிட்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி எதிரணிக்கு அடி விழும்.

6.இயன் போத்தம்

இயன் போத்தம் இல்ல. அடுத்த டீம் போதும் போதும்னு சொல்லற வரைக்கும் அயன் பண்ற போத்தம்.
ஆல் ரவுண்டர் ஸ்லாட் இவருக்குத் தான். சாதாரண மேட்ச் வின்னர் இல்ல. அசாதாரண சீரிஸ் வின்னர்.

7. ஆடம் கில்கிரிஸ்ட்

நான் மட்டுமில்ல, யாரு வேணூம்னாலும் எப்ப வேணூம்னாலும் லெவன் போட்டா இவர்தான் கீப்பிங்குக்கு ஆட்டோமேட்டிக் சாய்ஸ்.

8. ரிச்சர்ட் ஹேட்லி

இந்த சுல்தான் ஆப் சீம் அன்ட் சுவிங் தான் நம்ம டீமோட ஒன் சேஞ் பவுலர். இவர் போடுற லெக் கட்டர பார்த்தா அடுத்து உக்கார்ந்திருக்குற பேட்ஸ்மெனோட வாய் நெயில் கட்டரா ஆயிடும்.

9. வாசிம் அக்ரம்

நாலஞ்சு ரீப்ளே பார்த்தாத்தான் பால் எப்படி ஸ்விங் ஆச்சுன்னே சொல்ல முடியும் கமாண்டேட்டரால. இந்த டெயில் எண்ட் டெர்மினேட்டர் இருக்குற வரைக்கும் எந்த டீம் வாலும் ஆடாது.

10. ஷேன் வார்னே

பாம்புப் புத்துக்குள்ள கையை விட்ட படையப்பாவ பார்த்துருக்கோம். ஆனா புத்துக்குள்ள காலை விட்ட மாதிரி நடுங்குற பேட்டப்பாக்களை பார்க்கலாம் இவர் பவுலிங் பண்ணுறப்போ.

11. கர்ட்லி அம்புரோஸ்

பெர்த்துல இவர் பவுலிங் போட்டா விக்கெட் கீப்பர் தேர்ட் மென்லதான் நிக்கணும். 22 யார்ட் என்ன 44 யார்டுல பிட்ச் இருந்தாலும் லென்த்துல போடுவாரு எங்காளு.

மீண்டும் ஒரு தொடர் பதிவு

இது ஒரு தொடர் பதிவு. அருமை நண்பர் ஹாலிவுட் பாலா அழைப்பு விடுத்தார்.

விதிகள் எப்பவும் போலத்தான். கீழே இருக்கிற 32 கேள்விகளுக்கும் (ஏதும் நியுமராலஜியா?) பதில் சொல்லணும். மூணு பேரைக் கூப்பிடணும்.

ரெடி ஸ்டார்ட்.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பெற்றோர் வைத்த பெயர்தான். எல்லா இடங்களிலும் முரளி கிருஷ்ணாவா எனக் கேட்கும்
போது மட்டும் அப்படிக்கூட இருந்திருக்கலாமா எனத் தோன்றும்.2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம்ஹூம்.

4).பிடித்த மதிய உணவு என்ன?

பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

விண்டவர் கண்டிலர் ரேஞ்சுல உடனே.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி. அதிலயும் குற்றாலத்தில புலியருவினு ஒன்னு இருக்கும். நம்ம தலைக்கு ரெண்டடி
உய்ரத்தில இருந்து விழும். அதுமாதிரி உயரம் கம்மியான அருவியா இருக்கணும். ஹோன்னு தலையில அடிக்கிற மாதிரி விழுகிற அருவிக்கு நோ.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்களின் பேச்சு.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: அடாப்டபிலிட்டி
பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம் : அன்பு

பிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

நண்பர்கள்.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீலம்.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எதுவும் இல்லை.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பிங்க் (அப்போதான் பெண்கள் எடுத்துக்கிடுவாங்க)

14.பிடித்த மணம்?

காலைத் தேநீரின் மணம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

SUREஷ் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்.


டி வி ராதாகிருஷ்ணன் :பதிவர்களிடம் மிகப் பிரியமாக பழகுவார்


கார்த்திகைப் பாண்டியன் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்

காரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


ஹாலிவுட் பாலா : அவருடைய எல்லா திரை விமர்சனங்களும்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ரொமாண்டிக் காமெடி

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்

21.பிடித்த பருவ காலம் எது?

விண்டர்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இந்தவார ஜூனியர் விகடனும், ரிப்போர்டரும்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கடந்த மூன்று வருடமாக ஒன்றே (என் பையனின் படம்)


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : சிரிப்பு

பிடிக்காத சப்தம் : அழுகை


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கணும்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்ன தப்பு செஞ்சேன்னே சொல்லாம நண்பர்கள் என்னை ஒதுக்கும்போது.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

அப்படி எதுவும் ஸ்பெசிபிக்கா இல்லை.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இதுக்கு நான் நீட்சேவைத் தான் துணைக்கழைக்கணும்


31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

பதிவு போடுறது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வேற வழியில்ல. வாழ்ந்துதான் கழிக்கணும்

1947 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் - ஒரு பார்வை.

இந்த ஆண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் மறக்க முடியாத ஆண்டாக இருப்பது ஏன்? என்று கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்ட அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவுக்கும் இது ஒரு மறக்க முடியாத ஆண்டுதான். இதற்க்கு முன் சில வருடங்களாக பிலிம் ரோலுக்கு கடும் தட்டுப்பாடு (இரண்டாம் உலகப்போர் காரணமாக) இருந்ததால் வருடத்துக்கு 15க்கும் குறைவான படங்களே தயாரிக்கப்பட்டு வந்தன். இந்த ஆண்டில் தான் தமிழ் சினிமா வீறுகொண்டு எழுந்து 32 படங்களைத் தயாரித்தது.

இதைவிட முக்கியமான சம்பவம், அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்டிப்படைத்தவர் ஹீரோவாக பதவிஉயர்வு அடைந்ததுதான். ஆம் அதுவரை கேரக்டர் ரோல்களிலும், இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்துவந்த எம்ஜியார் இந்த ஆண்டில்தான்
ராஜகுமாரி படத்தின் மூலம் கதாநாயகனானார். அதுவரை பாடத்தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்கள் ஆக முடியும் என்றிருந்த மாயையையும் உடைத்தார்.

இந்த ஆண்டில் வெளியாகிய சில படங்களைப் பார்ப்போம்.

துளசி ஜலந்தர்

இந்தப் படத்தின் கதை வடிவேல் நாயக்கர். இசை எம் டி பார்த்தசாரதி. ஒளிப்பதிவு தம்பு. இயக்கம் நாகபூஷணம். பூலோகத்தில் வசிக்கும் ஜலந்தர் என்னும் அசுரன் (பி யு சின்னப்பா) பாதாள உலகை வெற்றிகொள்கிறான். மமதையால் தன் மனைவி பிருந்தையை (கண்ணாம்பா) வெறுத்து ஒதுக்குகிறான். அவரை ஆறுதல் படுத்துகிறார் அசுரகுரு சுக்கிராச்சாரியார். ஜலந்தரின் சேஷ்டைகள் தொடருகின்றன. ஒரு பிராமணரின் மனைவியை மானபங்கப் படுத்துகிறான். இதனால் பேராபத்து வரும் என்று குரு எச்சரிக்கிறார். கேட்பதாயில்லை ஜலந்தர். ஜலந்தரின் மனைவி தன் கணவனுக்கு கெட்டது எதுவும் வரக்கூடாது என சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறாள்.

சிவன் தோன்றி, ஜலந்தரின் சடையில் இருக்கும் விஜய சங்கு அங்கு இருந்து விழாத வரையிலும், உன் கற்புக்கு பங்கம் வராத வரையிலும் அவனுக்கு ஆபத்து நேராஅது என வரமளிக்கிறார்.

ஜலந்தரின் பார்வை இப்போது இந்திரலோகம் நோக்கித் திரும்புகிறது. பாதாள லோக அரசனை தளபதியாகக் கொண்டு இந்திரலோகம் மீது போர் தொடுக்கிறான். இந்திரன் அலறி ஓட இந்திராணியை மானபங்கப் படுத்தப் பார்க்கிறான். அப்போது அங்கு தோன்றும் ஜலந்தரின் மனைவி கெஞ்சவே, விட்டு விடுகிறான்.

வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது, குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் இந்திரலோக அழகிகளைப் பார்க்கிறான். காமம் தலைகேற அவர்களை விரட்டுகிறான்.ஒரு கன்னி மாட்டிக்கொள்கிறாள். அப்போது நாரதர் தன் சித்து விளையாட்டால் அவளைவிட அழகியாக தோன்றுமாறு மன்மதனை மாற்றி ஜலந்தர் கண்ணில் பட வைக்கிறார். உடனே ஜலந்தர் மன்மதனிடம் செல்ல, அவனோ இவனை மயக்கி அவன் தலையில் இருக்கும் விஜய சங்கை கவர்ந்து கொண்டு கைலாயத்துக்கு ஓடிவிடுகிறான்.

ஜலந்தரும் விடாமல் துரத்திக் கொண்டு கைலாயம் செல்ல, அவன் கண்ணுக்கு பார்வதி தேவியே அந்த அழகியாக தெரிய தொட்டு விடுகிறான். சும்மா இருப்பாரா சிவன்?. நெருப்பில் தூக்கியெறிகிறார். அதே சமயத்தில் மன்மதன் ஜலந்தர் வேடத்தில் உருவெடுத்து அவன் மனைவி பிருந்தையின் கற்புக்கு பங்கம் விளைவிக்கிறான். ஜலந்தரைக் கொல்ல இருக்கும் இரண்டு தடையும் நீங்கிவிட்டதால் சிவபெருமான் ஜலந்தரைக் கொல்கிறார். அவன் தலை விழுந்து துளசி செடியாக மாறுகிறது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் கிடைக்கிறது.

என்னா கதைப்பா?.

ராஜகுமாரி

கதை வசனம் - கருணாநிதி, இயக்கம் ஏ எஸ் ஏ சாமி, தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். இதற்க்கு முந்தைய ஆண்டுகளில் வெளியான பட்டி விக்கிரமாதித்தன் படத்தில் ரஞ்சன் கதாநாயகன், எம்ஜியார் வில்லன். ஆனால் இருவருக்கும் இடையேயான கத்திச் சண்டைகள் படு பிரபலமாய் இருந்தன. ஜூபிடர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, எம்ஜியாரை கருணாநிதி தான் ரெக்கமண்ட் செய்ததாக சொல்வார்கள்.கருணாநிதியை ரெக்கமெண்ட் செய்தது இயக்குநர் சாமி. எம்ஜியார் தன் பங்கிற்க்கும் ஒரு
ரெக்க்மண்ட் செய்தார். அவர்தான் சண்டைப் பயிற்சி அளித்த சின்னப்பா தேவர்.

ஒரு நாட்டு ராஜகுமாரியை (தவமணி தேவி), மந்திரவாதி ஒருவர் (எம் ஆர் சுவாமி நாதன்)கடத்தி செல்கிறார் ஏழு கடல் ஏழு மலை தாண்டி. ராஜகுமாரியை மாயக் கம்பளத்தின் உதவியுடன் பறந்து சென்று மீட்கிறார் நாயகன் எம்ஜியார். எம்ஜியாருக்கு பிண்ணனி பாடியது எம் எம் மாரியப்பன் என்னும் பாடகர். இந்தப் படத்திலும் எம்ஜியாரின் கத்திச் சண்டைக் காட்சிகள் பல இடம்பெற்றிருந்தன. மாயாஜாலம், சண்டை, பாடல்கள் என கமர்சியல் ஐட்டங்களால் படம் நல்ல வெற்றி.


நாம் இருவர்

கதை வசனம் - ப நீலகண்டன், இசை -சுதர்சன், இயக்கம்,தயாரிப்பு - ஏ வி மெய்யப்ப செட்டியார். பாடல்கள் அனைத்தும் சுப்பிரமணிய பாரதி. ஆம் அவரின் பாடல்கள் முழுவதையும் ஏவிஎம் ஒரு தொகை கொடுத்து (10000) வாங்கியிருந்தது. பின்னர் பாரதியாரின் பாடல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியபோது, இவர்களின் அனுமதி பெற்றே அதைச் செய்ய முடிந்தது.

பி ஆர் பந்துலு அண்ணன், டி ஆர் மகாலிங்கம் தம்பி. அன்புச் சகோதரர்கள். ஆனால் பந்துலுவின் குடிப்பழக்கத்தாலும், தவறான நண்பர்களாலும் இருவரிடையே பிரிவினை ஏற்படுகிறது. பின்னர் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதை. டி ஆர் மகாலிங்கத்தின் ஜோடி டி ஏ ஜெயலட்சுமி.

இந்தப் படத்துக்காக காரைக்குடியிலேயே (தேவகோட்டை) ஸ்டியோ உருவாக்கப் பட்டது. ஸ்டியோ என்றால்? வெறும் கீற்றுக் கொட்டகைதான். முழுக்க முழுக்க கீற்றுக் கொட்டகை போட்டு படம் எடுத்தார் ஏவிஎம். இந்தப் பட நாயகன் தேசாபிமானம் கொண்டவன். அதனால் பாரதியாரின் தேசபக்திப் பாடகல்கள் பயன்பட்டன. இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் இப்பட பாடல்களே அடிக்கடி ஒளிபரப்பப்பட்டன.


மிஸ் மாலினி

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர் கே நாராயணன் கதையில் எஸ் எஸ் வாசன் தயாரித்த படம். மாலினி (புஷ்பவல்லி) அழகிய இளம்பெண். தன் உடல்நிலை சரியில்லாத தந்தையுடன் ஏழ்மையில் வாடி வருகிறாள். அவள் தோழி சுந்தரியின் பேச்சைக் கேட்டு கலாமந்திரம் என்னும் குழுவில் சேருகிறாள். நாயகியாகி பெரும்புகழ் அடைகிறாள். அப்போது சம்பத் (கொத்தமங்கலம் சுப்பு) என்பவன் அவளை காதலிப்பது போல நடித்து அவள் பணத்தை சுருட்டி விடுகிறான். இதற்கிடையே தோழி சுந்தரியுடன் பிணக்கு வேறு.ஆனால் தோழி பின்னால் கை கொடுக்கிறாள். மீண்டும் கலாமந்திரம் ஆரம்பிக்கப்பட்டு முன்னேறுகிறார்கள்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

ஒளிப்பதிவு - டபிள்யூ ஆர் சுப்பாராவ், இயக்கம், தயாரிப்பு - மார்டன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம்.

அரசி சிந்தாமணி (மாதுரி தேவி) மூன்று கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொன்னால்
அவரை திருமணம் செய்து கொள்ளலாம்,நாடும் கிடைக்கும். பதில் தெரியாவிட்டால் தலையை வெட்டி விடுவார். நாயகனின் தந்தை (ஆசையைப்பாரு), அண்ணன்கள் அனைவரும் பதில் தெரியாமல் தலையை இழக்கிறார்கள். நாயகன் தன் நண்பன் உதவியுடன் முதலில் கேள்விகளுக்கான பதிலை தேடிச் செல்கிறான்.

அந்த மூன்று கேள்விகளின் விடையும் மூன்று கதையாய் இருக்கிறது. அந்தக் கதைக்கான முடிச்சை அவிழ்க்கச் சென்றால் அங்கும் ஒரு கதை சொல்லப்பட்டு கேள்வி கேட்கப்படுகிறது.(கதைக்குள் கதை உத்தி)

ஒரு வழியாக எல்லா முடிச்சையும் அவிழ்க்கிறான் நாயகன். அத்தனை கதைகளுமே அவன் வாழ்க்கையோடு தொடர்பு உடையவையே. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மாண்டேஜ் உத்தியில் படமாக்கப்பட்டவை. கேமிராமேன் பெரும் புகழ் பெற்றார் இப்படத்தின் மூலம்.

கடகம்

ராஜகுமாரியைத் தயாரித்த ஜூபிடர் இதே ஆண்டில் தயாரித்தது தான் இந்தப் படமும். நாயகனாக அறிமுகமானார் ஜெயகுமார் என்ற பட்டதாரி. கட்டுமஸ்தான உடல், அழகிய முகத்துடன் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அற்புத் சக்தி வாய்ந்த கடகம் (பிரேஸ்லெட்) ஒன்று. அதற்க்காக ஹீரோவும் வில்லனும் மோதுகிறார்கள் (டி எஸ் பாலய்யா). எதற்க்கு? அப்போதுதான் இளவரசி (சூர்யகுமாரி) கிடைப்பார். இதற்க்கிடையில் ஒரு கோமாளி வில்லனும் (டீ ஆர் ராமசந்திரன்) கடகத்துக்காக மோதுகிறான். இவன் குயுக்தி படைத்தவனும் கூட. கடைசியில் தமிழ்சினிமா வழக்கப்படி ஹீரோவுக்கே கடகம்.

ஆனால் நிஜத்தில் ஹீரோ பாவம். இப்படத்தின் தோல்வியால் அடுத்த வாய்ப்பு எதுவும்
கிடைக்காமலேயே திரையுலகை விட்டு விலகினார்.

மதனமாலா

நாயகன் - ஸ்ரீராம்(அறிமுகம்), நாயகி - ரஜனி, வில்லன் - சி எஸ் டி சிங். ஏராளாமான கத்திச் சண்டைகள் நிறைந்த வழக்கமான சாகசப் படம். பின்னாட்களில் ஸ்ரீராம் குணசித்திர நடிகராக மாறினார்.

சண்பகவல்லி

கந்தர் பிலிம்ஸ் தயாரிப்பு. டி எஸ் பாலய்யா நாயகன். விஜயாள், ஏ எவ் பெரியநாயகி ஜோடிகள். கூடு விட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தனாக டி எஸ் பால்ய்யா நடித்திருந்தார். சில பாடல்களையும் இப்படத்தில் அவர் பாடினார்.

May 30, 2009

தேவர் மகன் ஸ்டைலில் ஒரு பதிவர் சந்திப்பு

தேவர் மகன் படத்தின் புகழ்பெற்ற சிவாஜி கணேசன் - கமல்ஹாசன் காட்சியின் உல்டா இது.


மூத்த பதிவர் ஒருவர், சிற்றிலக்கிய உலகில் தூள் கிளப்பி வரும் எழுத்தாளரை பதிவுலகுக்கு
அழைத்து வருகிறார். எழுத்தாளர் எழுதிய பின்னவீனத்துவ கட்டுரையைப் படித்த மொக்கை பதிவர் ஒருவர் தன் தலையால் மானிட்டரை முட்டி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப் படுகிறார். பதிவுலகம் அல்லோல கல்லோலப் படுகிறது.

அதைத் தொடர்ந்து பின்னவீன எழுத்தாளார் மூத்த் பதிவரை சந்திக்க வருகிறார்.

மூ ப : எடுத்த உடனேயே பின்னவீனத்துவம் எழுதாதேன்னு சொன்னேனே கேட்டியா?
ஜோல்னாப் பையை மாட்டிக்கிட்டு, தாடி வளர்த்துக்கிட்டு நீட்ஷேவைப் பேசுற ஆளு
நான் சொல்றதக் கேட்பியா?

பி ந : சார், நான் என் தப்பை உணர்ந்துட்டேன்.சிற்றிலக்கிய உலகத்துக்கே போறேன்.
இனிமே என்னால இங்க எழுத முடியாது.

மூ ப : தாராளமா போ. ஆனா நீயெல்லாம் இப்போ எழுத்தாளர்னு சொல்லிக்கிறதுக்காக
ஆயிரம் ஆயிரமா சந்தாக் கட்டி அதை படிக்க முடியுமா பழைய பேப்பர் கடைக்குப்
போட்டானே, அவனுக்கு ஏதாச்சும் செஞ்சுட்டுப் போ.

இப்போ நான் எழுதுறேன். அதைப் படிச்சு பின்னாடி நல்ல கருத்து உருவாகி, நாடு
நல்லாயிருக்கும். ஆனா அதப் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனா கருத்து நான்
சொன்னது. இது பெருமையா? இல்லேய்யா கடமை. அதப்போல நீயும் நல்ல கருத்த
எழுதேன்யா.

பி ந : இல்ல சார். கும்மியும் எதிர்ப்பதிவுமா இருக்க இந்த மொக்கக் கூட்டத்தில எத
எழுதுனாலும் அது உருப்படியா வராது சார்.

மூ ப : உனக்கு மொதோ பின்னூட்டம் போட்ட நானும் அந்த மொக்கக் கூட்டத்துல ஒருத்தன்
தான்கிறதா நல்லா ஞாபகம் வச்சுக்கப்பூ

பி ந : இலக்கியமே படிக்காம பிந்தங்கியிருக்கிற இந்த மொக்கைக் கூட்டத்துல என்னோட
படைப்புகள வேஸ்ட் பண்ண விரும்பலை சார்.

மூ ப : மொக்கக் கூட்டம்தான். ஆனா பிளாக்குன்னு ஒண்ணு ஆரம்பிச்சப்ப இடுகையப்
போடு, பின்னூட்டத்தப் போடுன்னு ஓடிப்போய் பிளாக் ஆரம்பிச்சவங்கள்ள பாதிப் பய
நம்ம பயதான்,நம்ம பயதான். அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். நீ தான்
அவன படிக்க வைக்கணும்.

பி ந : அதுக்குள்ள எனக்கு ரைட்டர்ஸ் பிளாக் வந்துடும் போல இருக்கே சார்?

மூ ப : வரட்டும். எனக்கு வராதா? இல்ல இப்ப எழுதுக்கிட்டு இருக்கிற யாருக்கும்
வராமயேவா போயிடும்?

பி ந : சார், நீங்க பிளாக்க உட்டுட்டு எங்கூட வந்துறங்க. நான் ஆரம்பிக்கிறப் போற சிறு
பத்திரிக்கைக்கு உங்களை எடிட்டராக்குறேன்.

மூ ப : இந்தக் கட்டை இதே வலையுலகத்துல பின்னூட்டம் போட்டே சாகுமே தவிர, சிறு
பத்திரிக்கைக்கு வராதுய்யா.

பி ந : சார், நான் ஏதாச்சும் நல்லது எழுதுவேன் சார்.

மூ ப : உன்னையத்தான்யா நான் நம்ப முடியும். வேற யாரை நம்ப முடியும்.


பி ந : சரி சார் நான் போறேன்.

மூ ப : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க. உடனே கிளம்புறங்கிளா, உங்கள கூட்டிட்டு
வந்து பதிவு போட வச்சு, அதுக்குப் பின்னூட்டம் போட்ட எனக்கு, நாலு
பின்னூட்டம் போட்டுட்டு போகலாம்ல.

பி ந : சரி சார். கூடவே தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலயும் ஓட்டுப் போட்டுறேன்

சிறு நகர காதலின் சிரமங்கள்

1. நம் தெருப் பிகர் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது. ஏனென்றால் நாம் சின்ன வயதில் கிழிந்த டவுசர் போட்டு, சளி ஒழுகிக் கொண்டு சுற்றியது முதல், பரிட்சையில் பெயிலாகி, திருட்டு தம் கட்டி அடிவாங்கியது வரை அவர்களின் மனதில் பதிந்திருக்கும். என்னதான் பின்னாளில் நாம் ஓரளவு பெர்சனாலிட்டி மெயிண்டைன் பண்ணினாலும் கதைக்காகாது. அடுத்த தெரு பையன்களுக்கு சான்ஸ் அதிகம்.அல்லது வாலிப வயதில் அந்த தெருவுக்கு புதிதாக குடிவரும் பையனுக்கும் வாய்ப்பு உண்டு.

2. சிறு நகரங்களில் வசிக்கும் மாத சம்பளக்காரர்கள் தவணை முறையில் வீடு கட்டுவார்கள். அதில் தங்களுக்கு 650 சதுர அடியும், வாடகைக்கு விடுவதற்க்கு 550 சதுர அடியிலும் கட்டுவார்கள். (அப்போத்தானே லோனை அடைக்க வசதியா இருக்கும்). அங்கே பிள்ளைகளுக்கு தனி அறை என்பது வைரஸ் இல்லாத சிஸ்டம் போல. தனிமையில இருந்தாத்தானே பீல் பண்ண முடியும்?


3. அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போற ஆளா இருந்தாலும் கஷ்டம். வீட்டிலே எந்நேரமும் லௌகீக பேச்சுத்தான். அவன் அங்க அரை கிரவுண்டு வாங்கிட்டான். இவன் இங்க சீட்டு போட்டிருக்கான். நீ நல்லா படி. அப்பதான் இங்க வேலை கிடைக்கும், இங்க வேலை கிடைக்கும்னுதான் உரையாடலே இருக்கும். இந்த சூழ்நிலையிலே ஒருத்தனுக்கு எப்படி காதல் துளிர்க்கும்?

4.கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு,உறியடி என ஹீரோவாக மாறும் வாய்ப்பு அதிகம். இங்கே அதிகபட்சம் ஒரு விக்கிபால் டோர்ணமெண்ட் நடக்கும். அதில் மேன் ஆப் தி சீரிஸ் விருது வாங்கினால் கூட 32 ரூபாய்க்கு ஒரு வெங்கலக்கிண்ணி தருவார்கள். அதை தூக்கிக் கொண்டு தெருவில் வந்தால் அஞ்சு, பத்து காசு தர்மம் தான் கிடைக்கும்.

5. கிராமங்களில் திருவிழாவில் பெண்களை இம்பிரஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும். இங்கே திருவிழாக்கள் சுருங்கிவிட்டன. அதிகபட்சம் ஒரு மெல்லிசைக் கச்சேரி. இப்போது ஆடல் பாடல். இங்கே என்ன வாய்ப்பு கிடைக்கும்?

6. இதையும் மீறி கம்ப்யூட்டர் செண்டர்லயோ, காலேஜிலயோ, கஷ்டப்பட்டோ கால்ல விழுந்தோ யாரையாச்சும் கரெக்ட் பண்ணீட்டாலும் ஈஸியா அத வளர்த்துற முடியுமா?

7. முன்னால சொன்ன மாதிரி சின்ன வீடுங்கிறதால பிரைவசி கிடைக்காது.
எப்படி கவிதை எழுதுறது? எதிர் பார்ட்டிக்கிட்ட இருந்து போன் வந்தா பிரீயா பேசுறது?

8. அனேகமாக ஒன்னொரு தெருவிலும் குறைந்தது ஒரு வீடாவது இருக்கும் பின்வரும் வகையில். அந்த வீட்டின் வாரிசுகள் திருமணமாகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளியூரில் இருப்ப்பார்கள். கணவர் ரிட்டயராகும் வயதில் இருப்பார். மனைவியிடம் லீனியண்ட்டாகவும் இருப்பார். அம்மாதிரி வீடுகளில் பிற்பகல் முதல் முன்மாலை வரை (உச்சிக்காலம் முதல் சந்தியாகாலம் வரை) தெருப் பெண்கள் கூடி கும்மியடிப்பார்கள். அதில் கோல நோட் எக்சேஞ், சமையல் குறிப்பு ஆகியவை 1 சதவிகிதமும், புறணி 99 சதவிகிதமும் இருக்கும். யார் யாரை பார்க்கிறர்கள் முதல் பலவும் அலசப்படும். இந்த ரா அதிகாரிகளிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலிப்பது கடினம்.

9. கிராமங்களில் வயல், காடு என பல மறைவிடங்கள். பெருநகரங்களில் பீச்,பிளாசாக்கள்.
சிறு நகரத்தில் மூன்று நான்கு தியேட்டர்கள் தான் இருக்கும். அங்கே காதலியை கூட்டிப் போனால் அடுத்த நாள் ஐ நா சபை வரைக்கும் தெரிந்துவிடும். லைப்ரரி என்று ஒன்று இருக்கும். அங்கு கூட்டிப் போனால் காதல் வராது. ஆஸ்துமா தான் வரும்.

10. பேரூராட்சி, நகராட்சி என்ற பெயரில் ஒரு பூங்கா ஒன்றை அமைத்து இருப்பார்கள். அது நம் தமிழ்மணப் பூங்கா போல ஆரம்பத்தில் அட்டகாசமாக துவங்கி பின் வழக்கொழிந்து போயிருக்கும். அங்கேயும் சென்று காதல் செய்ய முடியாது.

இவ்வளவு பிரச்சினையையும் மீறி சிறு நகரங்களில் காதலிப்பவர்களுக்கு வந்தனங்கள்.

May 29, 2009

திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் - ஒரு ஒப்பீடு

திமுக

திமுக என்பது அரசாங்க வேலையைப் போன்றது.

1.அரசாங்கத்தில் படிப்படியாக பதவிவுயர்வு கிடைக்கும். அதுபோல இங்கேயும் கிளைச் செயலாளர், நகரம், ஒன்றியம் என படிப்படியாகக் கடந்தே மாவட்டச் செயலாளர் பதவியை அடையமுடியும்.

2. ராணுவ வாரிசுகளுக்கு முதலிடம் என்பதுபோல கட்சியில் சீனியர் தலைகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை உண்டு.

3.வேலையில் இருக்கும்போது இறந்தால் அரசாங்கத்தில் வாரிசுகளுக்கு வேலை உண்டு. அதுபோல் இங்கேயும் (தங்கப்பாண்டியன் - தங்கம் தென்னரசு, புதுக்கோட்டை - பெரி.அரசு)

4. விளையாட்டுத்துறை கோட்டா அரசாங்கத்தில் உண்டு. அதுபோல் இங்கே கலையுலக கோட்டா உண்டு (நெப்போலியன், சந்திரசேகர், ரித்தீஷ்)

5.அரசாங்கத்தில் சில சமயம் பதவிஉயர்வுக்கு, மாறுதலுக்கு கடுமையான முயற்சி செய்து ஆள் பிடிக்க வேண்டும். அதுபோல் இங்கேயும் சரியான ஆளைப்பிடித்து முயற்சி செய்யாவிட்டால் அதே இடத்திலேயே ஆயுள் முழுக்க இருக்க வேண்டியதுதான்.

6. அரசாங்கத்தில் நல்ல பசையுள்ள பதவி கிடைத்துவிட்டால் வசூலில் பெரும் சதவிகிதம் நமக்கே. மேலேயும், கீழேயும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கொடுத்தால் போதுமானது. இங்கேயும் அப்படித்தான்.அதிமுக என்பது சாஃப்ட்வேர் கம்பெனியைப் போன்றது

1.படிச்சவுடனே ஓரளவுக்கு வேலை கிடைப்பது மாதிரி, கட்சியில சேர்ந்தவுடனே பெரும்பாலும் பதவி கிடைக்கும்.

2. கஷ்டப்பட்டு திறமையைக் காட்டுனா, பிரமோஷன் கிடைக்கிறது மாதிரி இங்கயும் வேகமா
பிரமோஷன் கிடைக்கும்.

3. என்னதான் வேலை தெரிஞ்சாலும் மேலெ இருக்குறவங்கள அனுசரிக்காட்டி எப்படி அப்ரைசல்ல போட்டுப் பார்ப்பங்களோ அதுமாதிரி இங்கயும் சில உப தெய்வங்கள மதிக்காட்டி ஆப்பு வச்சுருவாங்க.

4. ரிசெசன் வந்தா தூக்கியெறியிறது மாதிரி, கட்சி தோத்தாலோ இல்ல பிடிக்காட்டாலோ உடனே தூக்கியெறிஞ்சுவாங்க.அங்க ஹெச் ஆர் மெயில வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கணும். இங்க நமது எம்ஜியார வாட்ச் பண்ணிக்கிட்டெ இருக்கணூம். எப்போ கட்டம் கட்டுவாங்கண்ணு.

5. நமக்கு சம்பளம் வந்தாலும், பெனிபிட்ஸ் வந்தாலும் லாபத்துல பெரும்பங்கு மேலிடத்துக்குத்தான்.

6. வேலை போச்சுன்னா கம்பெனிக்குள்ள நுழைய முடியாதுங்கிறமாதிரி, இங்க லாயிட்ஸ் ரோடுக்குள்ளேயே நுழைய முடியாது. வேலையில இருந்து வந்துட்டம்னா கம்பெனி எப்படி நம்ம மதிக்காதோ,அதே நிலைமைதான் இங்கயும். கட்சியில இருந்து வெளிய வந்துட்டா, செத்தாக்கூட யாரும் வந்து பாக்க மாட்டாங்க.

7. வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போடுறானான்னு அப்பப்போ ஹெச் ஆர் செக் பண்ற மாதிரி, இங்கயும் பல செக்கிங்குகள் உண்டு. உலகத்திலேயே அதிக பேக்ஸ் ரிசீவ் பண்ண பேக்ஸ் மெசின் தலைமைக் கழகத்துல தான் இருக்கு. விரைவில் கின்னசுக்கு அப்ளை பண்ண போறதா கேள்வி.

8. கம்பெனியில வாரிசு எல்லாம் ஷேர் வச்சுருக்குவங்களுக்குத்தான். எம்ப்ளாயிக்கு இல்லை. அதுபோல இங்கயும் இரண்டாம் மட்ட மூன்றாம் மட்ட தலைகளுக்கு அந்த பவர் இல்லை.

9. சாப்ட்வேர்ல பிள்ளைக்கு வேலை கிடச்சவுடனே குடும்பம் சந்தோஷப் படும். அப்புறம் போச்சேன்னு வருத்தப்படும். அது இங்கேயும் உண்டு. (இந்தப் பாயிண்டு ரிப்பீட்டா இருக்குண்ணு பார்க்குறீங்களா வேற ஒண்ணும் இல்ல. அம்மாவோட ராசி நம்பர் ஒன்பதாச்சே)

காங்கிரஸ் கட்சி விவசாயம் மாதிரி

1. அதிக நிலம் வச்சிருந்தா தான் விவசாயிக்கு மதிப்பு. அதுபோல அதிக எண்ணிக்கையில கோஷ்டி ஆளுங்க இருந்தாத்தான் இங்க கட்சியில மதிப்பு.

2. பரம்பரை பெருமை விவசாயத்துக்கு அதிகம். அதுபோல இங்கயும்.

3. விவசாய நிலத்தை ரொம்ப நாள் வச்சிருந்தா ஒரு காலத்துல ரியல் எஸ்டேட் ஆகி செம வருமானம் கிடைக்கும். அதுமாதிரி இங்க சும்மாவே வேலை செய்யாம படுத்துக் கிடந்தாலும் பின்னாடி பதவி கிடைக்கும்.

4. எப்பயும் தண்ணியை நம்பித்தான் பொழப்பு. இங்க டெல்லித்தலைமையை நம்பி

5.இப்ப இருக்கிற நிலைமையில புதுசா ஒரு ஆளு எந்தப் பிண்ணனியும் இல்லாம நிலம் வாங்கி விவசாயம் பண்ணி சாதிக்க முடியாது. அதுபோல காங்கிரஸ்ஸுலயும் புதுசா ஒரு ஆளு நுழைஞ்சு சாதிக்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சாலை மாதிரி

1. யார் வேணூம்னாலும் லேபரா சேரலாம். வேலை பார்க்கலாம். சுமாரான வருமானம்.
வாழ்க்கையை ஓட்டலாம். வசதி வரவே வராது.

2. விடாம வேலை செஞ்சா போர்மேன் வரைக்கும் போகலாம். அப்படியும் வருமானம் கம்மிதான்.

3. போனஸ்சுக்கு போராடுற மாதிரி அடிக்கடி போராட வேண்டியது இருக்கும். பலன்?

எம் எம் ஏ சின்னப்பா தேவர் - ஒரு பார்வை

சமுதாயத்தில் சினிமாவின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டால், இப்படிப்பட்ட பதில்கள் வரும்.

சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகம், எனவே அதில் நல்ல கருத்துக்கள் மட்டுமே வரவேண்டும். கலை அழகு மிளிர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்வார்கள்.

போங்கப்பா, சினிமான்னா பொழுது போக்குத்தான். அதில எது வேணும்னாலும் சொல்லலாம் எப்படி வேணும்னாலும் சொல்லலாம் என்று ஒரு சாரார் சொல்வார்கள்.

ஆனால் பெரும்பான்மையோரின் கருத்து எப்படி இருக்கும் தெரியுமா?

சினிமா பொழுது போக்குக்குத்தான். அதில நல்ல கருத்து சொன்னா சந்தோஷம். சமுதாயத்துக்கு ஏதும் கெடுதல் செய்யாம இருந்தாப் போதும்.

இந்தப் பெரும்பான்மையோரின் கருத்துக்கு ஏற்ப படங்களைத் தயாரித்தவர்களே தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் தயாரிப்பாளர்களாக விளங்கிய்ருக்கிறார்கள்.

ஜெமினி எஸ் எஸ் வாசன், ஏ வி எம் மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார் ஆகியோர் வரிசையில் இதே கருதுகோள்களோடு தமிழ் திரையுலகில் தடம் பதித்தவர் தான் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.

அவர் மற்ற மூவரைப்போல இன்றளவும் மனதில் நிற்க்கும் பிரமாண்டப் படங்களை தயாரித்தவர் இல்லை.

ஆனால் அவர்களை விட இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

ஒளிவிளக்கு (ஜெமினி), அன்பே வா (ஏவிஎம்), எங்க வீட்டு பிள்ளை (விஜயா) என ஆளுக்கொரு படங்களையே இவர்களால் அப்போது சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்ஜியாரைக் கொண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால் தேவர், யாராலும் கணிக்கவோ அடக்கவோ முடியாத சூப்பர் ஈகோவுக்கு சொந்தக்காரரான எம்ஜியாரை வைத்து 17 படங்கள் தயாரித்தார்.

கோவையில் 1940 ஆம் ஆண்டு வாக்கில் ஜூபிடர் ஸ்டியோ இயங்கி வந்தது. பல படங்களின்
படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. எம்ஜியார், கருணாநிதி ஆகியோர் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்கள். அதே கால கட்டத்தில் அங்கே பாடி பில்டராகவும், மில் தொழிலாளியாகவும், முருக பக்தராகவும் விளங்கிய தேவர், சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டு துணை நடிகரானார்.பின் எம்ஜியாரின் நட்புக் கிடைத்து 20 படங்கள் வரை பல கேரக்டர்களில் நடித்தார். பின் தயாரிப்பாளராக மாறினார். முதல் படத்தை சிலருடன் சேர்ந்து தயாரித்தார். தோல்வி. பின் தேவர் பிலிம்ஸை துவக்கி எம்ஜியாரை நாயகனாக்கி தன் இன்னிங்ஸை ஆரம்பித்தார். அடுத்து சில படங்களை ரஞ்சன், உதய குமார்,ஜெமினி கணேசன்,ஆனந்தன் போன்றாரை வைத்து தயாரித்தார்.

சில வருட இடைவெளிக்குப் பின் எம்ஜியாரும், தேவரும் இணைந்து தொடர்ந்து படங்களைத் தந்தார்கள். எம்ஜியார் கிடைக்காத காலங்களில் அவர் ஆன்மீகப் படங்களையும்,மிருகங்களை வைத்து வணிக ரீதியான படங்களையும் எடுத்து வெற்றி கண்டார். அவற்றை தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்னும் பேனரில் தயாரித்தார். தமிழ் மட்டுமே தெரிந்த அவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்னும் பெரும் வெற்றிப்படத்தை இந்தியிலும் எடுத்தார்.

எந்த வித பின்புலமும் இல்லாமல், படிப்பும் இல்லாமல், ஆங்கில அறிவும் இல்லாமல் உழைப்பாலேயே ஒருவர் பெரிய அளவுக்கு வரமுடியும் என்று தமிழ்நாட்டுக்கு நிரூபித்தவர்களில் தேவரும் ஒருவர்.

படம் பூஜை போட்டு அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவார். அதற்க்கு முன்னரே கதை வசனம், நடிகர்கள் கால்ஷீட் என எல்லாமும் பக்காவாக ரெடி செய்து கொள்வார். திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து,அதற்க்கேற்ற வகையில் கதை,வசனத்தை அமைப்பார்.

அவர் படங்களில் கலை அழகு மிளிராது, இலக்கண தர வசங்கள் இருக்காது. ஆனால் கட்டிப்போடும் தொய்வில்லாத திரைக்கதை இருக்கும்.அதற்க்கு காரணம் அவரது பிரத்யேக கதை இலாகா.

இந்தப் பகுதியில் அவர் எம்ஜியார் இல்லாமல் தயாரித்த சில படங்களை பார்க்கலாம்.

தெய்வம்

இந்தப்படம் முருகனின் தலங்களை அடிப்படையாக கொண்ட பாடல்களைக் கொண்ட படம். முத்துராமன், கே ஆர் விஜயா நடித்தது. இப்படத்தின் இசை குன்னக்குடி வைத்தியநாதன். பாடல்கள் கண்ணதாசன்.இன்றுவரை கிராமப்புற டூரிங் தியேட்டர்களில் காட்சி துவக்கப்போவதற்க்கான அறிவிப்பாக வரும் பாடலான மருதமலை மாமணியே (மதுரை சோமு) பாடல் இடம்பெற்ற திரைப்பபடம் இதுவே. அதுதவிர குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம் (ரமணியம்மாள்), திருசெந்தூரின் கடலோரத்தில் (சீர்காழி கோவிந்தராஜன்), வருவாண்டி தருவாண்டி (சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி) திருசெந்தூரில் போர்புரிந்து (ராதா ஜெயலக்‌ஷ்மி), நாடறியும் (பித்துக்குளி முருகதாஸ்)என கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களே அனைத்துப் பாடல்களையும் பாடினார்கள். படம் பார்த்த மக்கள் அனைவரும் சிலிர்த்துப் போனார்கள்.

துணைவன்

இதுவும் முருக பக்திப் படமே. ஏவி எம் ராஜன், சௌகார் ஜானகி நடித்தது. தங்கள் குழந்தை பிணி தீர முருகன் தலங்களுக்குச் சென்று வேண்டுவதை அடிப்படையாகக் கொண்ட கதை. இப்படத்தின் சிறப்பு கிருபானந்த வாரியார் இதில் நடித்தது. அவரின் கதா காலேட்சபம் கேட்டு ஒருவன் திருந்துவது போல காட்சி அமைப்பு. இச்சிறப்பால் படம் நன்கு ஓடியது.

ஆட்டுக்கார அலமேலு

1972 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் தமிழ்சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது. ராமு என்னும் ஆடு ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டாரானது. தியேட்டர் தியேட்டராக அந்த ஆட்டை கூட்டிச் சென்று படம் பார்க்க வந்தவர்களுக்கு காட்டினார்கள். நமது விஜயகாந்த் கூட தன் நண்பர் வினியோகஸ்தர் மன்சூக் என்பவருக்காக் அப்பணியை செய்திருக்கிறார். சிவகுமார்,ஸ்ரீபிரியா நடித்த படம். ஸ்ரீபிரியாவையும் நம்பர் ஒன் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. பின் ஐந்து வருடங்கள் அவர் உச்சத்தில் இருந்தார். பொதுமக்கள் ஆட்டின் சாகஸங்களான டேப் ரிக்கார்டர் ஆன் செய்வது, கடிதம் கொடுப்பது போன்றவற்றில்
மெய்மறந்தனர்.


வெள்ளிக்கிழமை விரதம்


அதுவரை இணை நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் நாயகனாக ப்ரமோஷன் ஆன படம். ஜெயசித்ரா கதாநாயகி. ஆனால் பாராட்டுக்களை அள்ளிக் கொண்டது முக்கிய வேடத்தில் நடித்த பாம்பு.ஏறக்குறைய இந்தி நாகினின் தமிழாக்கமான இந்தப் படமும் நன்கு ஓடியது. படம் பார்த்த எம்ஜியார் தன் ஜோடிகளில் ஒருவராக நவரத்தினம் என்னும் படத்தில் ஜெயசித்ராவை புக் செய்யுமளவுக்கு நன்கு நடித்திருந்தார்.

ஹாத்தி மேரா சாத்தி

ராஜேஷ்கண்ணா நாயகன், தனுஜா நாயகி.லட்சுமி காந்த் பியாரிலால் இசை, தேவரின் தம்பி
எம் ஏ திருமுகம் இயக்கம். சென்னையில் விஜயா வாகினியில் படப்பிடிப்பு. ஏற்கனவே மேஜர் சுந்தர் ராஜனை வைத்து தேவர் எடுத்திருந்த தெய்வச்செயல் என்னும் படத்தையே சீர் படுத்தி கதை செய்திருந்தார்கள். படம் இந்தியில் ஓடு ஓடு என ஓடியது. பட வெற்றியைக் கண்டு அதே கேரக்டரில் எம்ஜியாரை வைத்து நல்ல நேரம் என ரீமேக்? செய்தார்கள். இப்பட்த்தின் பாடல்களும் பெரும்புகழ் பெற்றவை.

அடுத்த பகுதியில் தொடருகிறேன்

May 28, 2009

ஒளிப்பதிவாளர் கர்ணன் - சில நினைவுகள்

தனிமனித வாழ்க்கையின் தலையாய சோகங்களை பட்டியலிடச் சொன்னால் எவருடைய பட்டியலிலும் இடம் பிடிக்கும் சோகம் ஒன்று இருக்கிறது. அதுதான் அங்கீகாரம் கிடைக்காமை. அதிலும் கொடுமையான சோகம் என்னவென்றால் சிறப்பான செயல்களைச் செய்யும் போது அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் அதைவிட மாற்றுக் குறைந்த செயல்களைச் செய்யும்போது ஒரு எதிர்மறை அங்கீகாரம் கிடைப்பது.


தமிழ்சினிமா பல தரம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்கி வந்துள்ளது. முதன் முதலில் தமிழ்நாட்டில் ஸ்டுடியோ வசதி இல்லாதபோது கல்கத்தா,மும்பை ஆகிய இடங்களிலேயே தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் இங்கு ஸ்டுடியோ வசதி வந்தவுடன் அதில் பணிபுரிவதற்க்காக அங்கிருந்து பல தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னை வந்தார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்கள் சைலன் போஸ், கமால் கோஸ், ஜித்தென் பானர்ஜி போன்றவர்கள்.இந்த கலைஞர்கள் தொழில்நுட்ப வசதி குறைவான காலத்திலேயே வித்தியாசமான காட்சிகளை அமைத்தவர்கள்.

இவர்கள் வரிசையில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கியவர் டபிள்யூ ஆர் சுப்பாராவ். இவர் அபிமன்யூ,ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி, சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன் முதலான பல படங்களுக்கு ஒளிப்பதிவாளர். தந்திர காட்சிகளை அமைப்பதில் சாமர்த்தியமானவர். மாண்டேஜ் உத்தியில் இவர் ஏராளமான தந்திரகாட்சிகளை அபிமன்யூ,மனோன்மணி,ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிய படங்களில் அமைத்துள்ளார்.

இவரது உதவியாளராக பணிபுரிந்தவர்தான் கர்ணன். இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் கற்பகம்,சாரதா உட்பட கிட்டத் தட்ட அவரின் எல்லாப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் கர்ணனே. கே எஸ் ஜியின் படங்கள் எல்லாமே குடும்ப உறவு சார்ந்த சிக்கல்களை மையமாகவே கொண்டிருக்கும். சாரதாவில் (1962), கணவன் தனக்கு ஆண்மையில்லை என்பது தெரிந்தவுடன் மனைவியை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவான். பலத்த மனப் போராட்டங்கள் நடைபெறும்.

இதுபோலவே அவரின் எல்லாப் படங்களிலும் ஒரு பிரச்சினை, அதனால் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டம் என்றே கதை நகரும். சில படங்களில் கிளைமாக்ஸ் மட்டும் 30 நிமிடம் இருக்கும். எல்லாமே வசனம்தான். ஆனால் அதை போரடிக்காமல் காட்சிப் படுத்தியிருப்பார்கள். அதற்கு உறுதுணையாக விளங்கியது கர்ணனின் ஒளிப்பதிவே.

சாரதாவில் பல புகழ்பெற்ற பாடல்கள் உண்டு. மணமகளே மருமகளே வா, ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? ஆகியவை அமரத்துவம் பெற்றவை. இதில் ஒருத்தி ஒருவனை பாடலில் எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரது உருவங்கள் கலைந்து பின் அதே வேகத்தில் ஒன்று சேரும். அப்போதைய வசதிகளலோடு ஒப்பிடுகையில் அது சாதனையே.

கற்பகம்(1963) படத்தின் பிரபல பாடல் மன்னவனே அழலாமா (இது பின்னர் மேட்டுக்குடி(1996) படத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டது). இப்பாடல் இறந்து போன மனைவி, கணவன் ஜெமினி கணேசனை ஆறுதல் படுத்தப் பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் அந்த ஆவியின் உருவம் பட பிரேம் முழுவதும் மேலும் கீழும், குறுக்கும் நெடுக்கும் போய் வருவது போல படமாக்கப்பட்டிருக்கும். இது அப்போதைய காலகட்டத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. கர்ணனின் குருவான சுப்பாராவே இதை வியந்து பாராட்டியிருக்கிறார்.

இதுபோல பல சாதனைகளைச் செய்த கர்ணன், தான் இயக்குநரானவுடன் பல கௌபாய் டைப் படங்களை இயக்கினார். அவை இன்றும் ரீ ரிலீஸ் வேல்யு உடன் உள்ளன. அதற்கு அப்படங்களில் இடம்பெற்ற தாராளமான கவர்ச்சிக் காட்சிகளும் ஒரு காரணம். கவர்ச்சிக் காட்சிகள் இருந்தால் மட்டும் போதுமா? ஒரு படம் ஓடிவிடுவதற்கு? சராசரி ரசிகனுக்கு தேவைப்படும் ஆடல், அதிபயங்கர சண்டைக்காட்சிகள், தொய்வில்லாத திரைக்கதை ஆகியவற்றின் கலவையாகவே அந்தப் படங்கள் இருந்தன.

கங்கா, எங்க பாட்டன் சொத்து,ஜம்பு, புதிய தோரணங்கள்,ரெட்டைக்குழல் துப்பாக்கி,ஜான்ஸி, இது எங்க பூமி ஆகிய படங்கள் அவர் இயக்கியதில் வெற்றி பெற்ற படங்கள்.

கங்கா

தமிழில் கடைசியாக வந்த முழு கவ்பாய் டைப் படம். சிம்புதேவன் இயக்கத்தில் வந்த “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”  ஸ்பூஃப் வகையறா. இதில் வரும் சண்டைக்காட்சிகளை இப்போது பார்த்தாலும் மிகப் பிரமிப்பாக இருக்கும். குதிரையின் கால்களில் மனிதனைக் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்வது போல காட்சிகள் இருக்கும். குதிரையின் வேகம் அசாத்தியமாக இருக்கும். கால்களின் வேகத்தையும், அதில் கட்டி வைக்கப்பட்டு வதைபடும் மனிதனின் வேகத்தையும் டைட் குளோசப்பில் எடுத்திருப்பார். சேஸிங் காட்சிகளின் கோணமானது நாமும் அந்தக் காட்சியில் பயணப்படுவது போலவே அமைக்கப் பட்டிருக்கும். ஜிம்மி ஜிப், அகேலா, ஸ்டெடி காம், மானிட்டர் வசதி போன்ற எதுவுமே இல்லாமல் எப்படித்தான் எடுத்தார்களோ? என்று வியக்கும்படியே இப்படத்தின் ஒளிப்பதிவு இருக்கும். தன் படங்களில்
உபயோகப்படுத்த நல்ல குதிரைகளை வாங்கி அவரே சொந்தமாக வளர்த்து வந்ததாகவும் கூறுவார்கள்.


எங்க பாட்டன் சொத்து

இந்தப் படத்தின் சிறப்பு ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள். இந்தியா ஒரு உப கண்டம் என்று மெய்பிப்பது போல இந்த படத்தில் எல்லாவித நிலப்பரப்புகளும் காட்டப்படும். பாலைவனம், நீர் வீழ்ச்சி, பனிப்பாறை,வளமான சமவெளி,சரளைக்கல், செம்மண் பூமி என எல்லா இடங்களிலும் காட்சிகள் இருக்கும். அங்கே ஆக்ரோஷமான சண்டையும் இருக்கும். அந்தக் சண்டைக் காட்சிகளின் வேகமும், கோணமும் நம்மை பார்வையாளர் ஸ்தானத்தில் இருந்து போட்டியாளர் ஸ்தானத்திற்க்கு உயர்த்திவிடும். கர்ணனின் சிறப்பு தெரிந்ததால்தான் எம்ஜியார் தன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய கர்ணனை பணியமர்த்திக் கொண்டார்.

ஜம்பு

இந்தப் படம் முழுக்க ஒரு தீவில் நடைபெறுவதாக அமைந்திருக்கும். இதில் பல மிருகங்கள் வந்து போகும்.அவை எல்லாமே தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து பெறப்பட்ட பிலிமில் இருப்பவை. அவற்றை இடைச்செருகலாக இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பார். படக் கதாநாயகன் அவற்றை அணுகும் கோணமும்,அவை நாயகனை பார்க்கும் கோணமும் அற்புதமாக மேட்ச் செய்யப்பட்டிருக்கும்.ஆனால் இரண்டு காட்சிகளும் வெவ்வேறு இடங்களில், காலகட்டத்தில்,ஒளியில்,பிலிமில் எடுக்கப் பட்டதால் அந்த வேறுபாடு எளிதாகத் தெரியும். ஆனால் அது இரண்டாம் முறை பார்க்கும்போதே.அந்த அளவுக்கு முடிந்த வரையில் இரண்டு காட்சிகளையும் மேட்ச் செய்திருப்பார் கர்ணன். டிஜிடல் இமேஜிங் இல்லாத காலமல்லாவா அது?

ரெட்டைகுழல் துப்பாக்கி

இதிலும் கற்பனைக்கு எட்டாத பல சண்டைக்காட்சிகள் உண்டு. ஒரு பாக்கு மரத்தில் ஹீரோவும், அருகில் உள்ள மரங்களில் வில்லனின் அடியாட்களும் தொங்கிக் கொண்டு பலத்த சண்டை போடுவார்கள்.சர்க்கஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் போல மரத்துக்கு மரம் தாவி நடக்கும் சண்டை அது.

ஜான்ஸி

இந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் கார் சேஸிங் சிறப்பாக படமாக்கப் பட்டிருக்கும். ஒரு கார் பறந்து ஒரு குடிசைக்குள் புகும். குடிசையில் இருக்கும் இருவர் பக்கவாட்டில் பறப்பார்கள். கார் இன்னொரு வழியாக வெளியே வந்து விடும். இது அத்தனையும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்.


கற்பனைக்கு எட்டாத கோணங்களில் கேமராவை வைத்து படம் எடுத்தவர் கர்ணன். அதுமட்டுமில்லாது எந்த காட்சியையும் கவனச் சிதறல் இல்லாமல் பார்வையாளன் பார்க்கும்படி அமைக்கத் தெரிந்தவர்.

தமிழ்சினிமா கேமெராமேன்களைப் பற்றி எழுதும் எவரும் முதலில் ஆரம்பகாலப் படங்களின்  கேமெராமேன்களைப் பற்றி எழுதுகிறார்கள். பின்னர் பாலுமகேந்திரா,அசோக்குமார்,பி சி ஸ்ரீராம், கே வி ஆனந்த், ரவி கே சந்திரன், ரவி வர்மன்,மணிகண்டன் என தாவிவிடுகிறார்கள்.

குறிப்பிடத்தக்க பணியாற்றிய கர்ணன் போன்றோருக்குரிய அங்கீகாரத்தை அவர்கள் கொடுப்பதில்லை.பெண்களை எக்ஸ்பிளாய்ட் செய்து படமெடுத்தவர் என்ற ஒற்றை வரியில் அவரை அடக்கி விடுகிறார்கள்.

அங்கீகாரம் பெறாமல் கூட இருந்து விடலாம். ஆனால் எதிர்மறை அங்கீகாரம் பெருஞ்சோகம்.

May 27, 2009

குட் புட் பேட் புட் கலந்துரையாடல்

இப்போதுள்ள தாத்தாக்கள் எல்லாம் பேரன்களிடம் இருந்து பிஸ்ஸா,பர்கர் என்று வாங்கி மொக்கிக் கொள்கிறார்கள். பீச்சில் வாக்கிங் போய் அருகம்புல் ஜூஸ் குடிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு ஆயாவிடம் சுண்டல் கடலை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாட்டின் இறந்தகாலச் சொத்து.அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை என்று கொள்ளுப்பாட்டிகளின் வலைப்பூவில் சுப்புணி பாட்டி என்னும் பதிவர் ஒரு இடுகையை வெளியிட பற்றியெறிகிறது பதிவுலகம்.

அதைப்படித்து அண்டார்டிகாவில் வசிக்கும் பதிவர் ஆர்கே, சென்னை வலைப்பதிவர்களுக்கு மெயில் அனுப்பி, ஒரு கருத்தரங்கு நடத்துங்களேன் என்று கேட்டுக்
கொண்டதையடுத்து, வலைப்பதிவர்கள் கான்பரன்ஸ் காலில் ஆலோசிக்கத் தொடங்குகிறார்கள்.


நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.


லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.


கார்க்கி : சகா, என்னைக்கு வேணும்னாலும் நடத்துங்க. ஆனா ஞாயிறு வேண்டாம். ஆறு மணி டிரெயின்ல ஹைதை ரிட்டர்ன் போகும் போது வறுத்துக்கிட்டே போக, கஷ்டப்பட்டு யாரையாச்சும் கரெக்ட் பண்ணி வைக்கிறேன். ஆனா நீங்க நிகழ்ச்சியெல்லாம் ஞாயித்துக் கிழமை நடத்துறீங்க. முடிய மணி எட்டாயிடுது. வேற வழியில்லாம
காசினி ட்ராவல்ஸ்ல போக வேண்டியிருக்கு.

கேபிள் சங்கர் : ஏன் கார்க்கி, அதிலயும் டக்கர் பிகர்லாம் வருமே.


அப்துல்லா : அதெல்லாம் அவன்கிட்ட பேசாதில்லண்ணே.


நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.


முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.


அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.


முரளிகண்ணன் : அப்புறம் எஜமான்ல,பிஸ்தாவுல


ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?


கேபிள் சங்கர் : என்க்குத் தெரிஞ்சு சரவண பவன்ல சாப்பாடு சுத்தமா, ஆரோக்கியமா இருக்கும்.

அதிஷா : ஆமாமா உடனே அண்ணாச்சிய கூப்பிடுங்க. மனசுக்குள் : அப்பாடா எப்படியாச்சும் அவர்கிட்ட பேசி நாலஞ்சு குட்டிக்கதைக்கு மேட்டர் தேத்திரணும்.


லக்கிலுக் : நீ என்ன நினைக்கிறய்னு எனக்குத் தெரியும் அதிஷா. அவரே இப்ப களி திண்ணுக்கிட்டு இருக்காரு.


புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.

நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது?


முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்‌ஷன் இருக்கும்.


அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?


லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.


முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.

அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.


அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?

கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?

நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.


லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.

அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.


நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?


ஆதி : பைத்தியக்காரன், ஜியோவ்ராம் மாதிரி ஆளுங்களுக்கு கால் போடுங்கப்பா. அவங்க ஏதாச்சும் உருப்படியா சொல்லுவாங்க.


லைனில் வருகிறார் பைத்தியக்காரன். விவரம் சொல்லப்படுகிறது.


பைத்தியக்காரன் : இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்றது அதிகாரத்தின் உரையாடல். அதுவும் சாகப் போற வயசில இருக்குறவங்கள அதை சாப்பிடு,
இதை சாப்பிடாதேன்னு சொல்றது உச்சபட்ச வன்முறை. இதற்க்கு எதிராத்தான் என்குரல் ஒலிக்கும். என்னால் முடியாவிடடாலும் ஜ்யோவ்ராம் துணையுடன்
இந்த கட்டமைப்பை தகர்ப்பேன்.

இப்போ நான் சொல்லும் விஷ்யம் கூட உங்கள் மீதான என் அதிகாரத்தின் உரையாடல்தான். அதை எதிர்க்க உங்களுக்கும் உரிமை உண்டு.


பதிவர்கள் : நல்லா புரிஞ்சிடுச்சு சார். ஆட்டையைக் கலைச்சிடுறோம்.

எனக்கு ஏன்?

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஆனாலே, இரவு வைபவத்துக்கு எங்கள் ரூம் தயாராகத் தொடங்கிவிடும். பாரிஸ் கார்னருக்குப் போய் ஆப்பிள், பப்பாளி, கொய்யா,திராட்சை, தர்பூசணி என கலந்து கட்டி கிலோ கணக்கில் வாங்கி வருவோம். பொறுமையாக அதைக்கழுவி பின் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு அதைச் சுற்றி வட்ட வடிவில் அமர்ந்து கொள்வோம். அதுமட்டுமே இரவு உணவு. ஆளுக்கொரு பழத்துண்டை கையில் எடுத்து கொரித்துக்கொண்டே பிக்பாஸ், எட்டு வழிச்சாலை, விராட் கோலி என சம்பிரதாயமாக ஆரம்பிப்போம்.

சரியாக பதினைந்தாவது நிமிடத்தில் அரட்டை அலுவலக மற்றும் தெருப் பெண்களிடத்தில் வந்து நிற்கும். அப்போது அதுவரை சப்பென்றிருந்த ஹைப்ரிட் பப்பாளி கூட கொல்லிமலைத்தேனில் ஊறவைக்கப்பட்ட பண்ருட்டி பலா போல இனிக்கத் தொடங்கும்.

இந்த பழக்கத்தை எங்கள் ரூமில் ஆரம்பித்து வைத்தவன் ரகு. ரசனைக்காரன். முற்போக்குவாதி. அவன் பாணியில் சொன்னால்

“மச்சான், இது ராஜ போதைடா. நாலு கிலோ பழத்தைச் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருக்கும் போது யாராச்சும் அடிச்சாக்கூட சிரிக்கத் தாண்டா தோணும். மதுரைப் பக்கம் பாரு மதியம் மட்டன் குழம்பு, ராத்திருக்கி புரோட்டா சால்னான்னு காரமாத் தின்னு என்னேரமும் சுர்ருன்னே இருப்பாங்க. ஆ வூன்னா அரிவாளத் தூக்குவாங்க. பழம் சாத்வீகம்டா”.

ரகுவிற்கு நாலு மாதத்திற்கு முன் திருமணம் நடந்து இப்போது ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்கிறான். இந்தவார சண்டே ப்ருட் டின்னரின் கடைசி ரவுண்டில் இருந்தபோது, கதவைத் தட்டி உள்ளே வந்தான்.

என்னடா இன்னேரத்தில என்று ஆரம்பித்தவுடன், இந்த வாரமும் என் மாமனார்,மாமியார் வந்து தொலைஞ்சுட்டாங்கடா என்று புலம்பினான்.

ஆமாம். ரகுவின் மாமனார் வீடு செங்கல்பட்டு. ஞாயிற்றுக்கிழமையானால் காலையில் மின் தொடர் வண்டியைப் பிடித்து மாமனார் மாமியார் இருவர்ம் ரகுவின் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ரகுவோ ஞாயிறை அனுபவிக்கத் துடிப்பவன்.


“ஆறு நாளும் கஷ்டப்படுறோம். ஞாயிற்றுக்கிழமையாச்சும் காலைல பத்து பததரை வரைக்கும் தூங்கணும். அப்புறம் மெதுவா எந்தரிச்சு பொறுமையா எல்லா வேலையையும் செஞ்சிட்டு, லைட்டா சாப்பிட்டுட்டு, கதவு ஜன்னல எல்லாம் மூடிட்டு ஹால்ல பெட்டை போடணும். நெருக்கமா படுத்துக்கிட்டே சேனல் சேனலா மாத்தி டிவி பார்க்கணும். விளம்பர இடைவேளை மாதிரி அப்பப்போ கொஞ்சிக்கணும்.”

இதெல்லாம் ஒரு பிள்ளை பெறக்கிறவரைக்கும் தான். அப்புறம் கனவுதான். இதை அனுபவிக்க விடாம ஞாயித்துக் கிழமையானா பெட்டியத்தூக்கிட்டு வந்துடுறாங்க. இவ என்னடான்னா, எங்க அப்பா வந்திருக்கிறாரு, மரியாதையில்லாம தூங்குறீங்கன்னு ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விடுறாடா. போதாக்குறைக்கு இதெல்லாம் எங்கப்பாவுக்கு வாங்கிட்டு வாங்கன்னு லிஸ்ட் வேற என்று புலம்பிக் கொண்டேயிருப்பான்.

இந்தமுறை புதன்கிழமை ஆப்பர்சூனிட்டி பேப்பரோடு வந்து, இதெல்லாம் அப்ளை பண்ணீட்டிங்களா என்று வேறு கடுப்பேற்றினாராம்.

டேய், எங்க பெரியக்கா மாப்பிள்ளைலாம் வீட்டுக்கு வரப்போறார்னு தகவல் வந்த உடனேயே ஒட்டடை அடிக்க ஆரம்பிச்சுடுவோம், போர்வை, தலகாணி உறையெல்லாம் துவைச்சிருவோம். அவர் வந்த உடனே ஒரு அண்ணன் அயிரை மீன் வாங்க ஆத்துக்கு ஓடுவான், இன்னோரு அண்ணன் விரால் மீன் வாங்க கண்மாய்க்கு ஓடுவான். அப்படியா இப்பல்லாம் எதிர்பார்க்குறோம்? சம உரிமை கூட கிடைக்க மாட்டேங்குதே என்று தன் மராத்தான் புலம்பலை தொடர்ந்தான்.

சரி விடுடா, நீதான் ஆணும் பெண்ணும் சமம்னு சொல்ற முற்போக்குவாதியாச்சேடா. நீ ஆசைப்பட்ட சமத்துவம் இப்பவாவது நடக்க ஆரம்பிச்சிருக்கேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதானே? என்று கேட்டேன்.

அதெல்லாம் சரி. ஆனா அது என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கணும்? என்றான் பட்டென்று.

May 26, 2009

இயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் – கே சுப்ரமணியம் பகுதி -2

இந்த பகுதியில் சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய புராணங்களின் அடிப்படையிலான படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பவளக்கொடி (1934)

அப்பொழுது தமிழிலும்,இந்தியிலும் புகழ்பெற்று விளங்கிய ராஜா சாண்டோ அவர்களிடம் தான் கே சுப்ரமணியம், பட உருவாக்கத்தை கற்றுக் கொண்டார். அதன்பின்னர் இவர் இயக்கிய படம் இது. அப்பொழுது (இப்பொழுதும்) பவளக்கொடி கதை நாடகமாக நடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாடகத்தில் நடித்தவர்கள் எம் கே தியாகராஜ பாகவதர் மற்றும் எஸ் டி சுப்புலக்‌ஷ்மி. இவர்களை வைத்தே படமும் எடுக்கப்பட்டது. படத்திற்க்கு பாடல்கள் மற்றும் இசை பாபநாசம் சிவன். 55 பாடல்கள். தயாரிப்பு காரைக்குடி அழகப்பா செட்டியார்.

அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்த மகன் புலேந்திரன். அவன் பவளத்தீவில் இருக்கும் தேரைக் கேட்டு அடம் பிடிக்கிறான். அதனால் அர்ஜுனன் தேரை கவர்ந்துவர செல்கிறான். அந்தத் தீவின் இளவரசி பவளக்கொடிக்கும் அர்ஜுனனுக்கும் காதல் வர அங்கேயே தங்கிவிடுகிறான் அவன். கணவன் வராததால் சந்தேகப்பட்டு அல்லி அங்கு வருகிறாள். அர்ஜுனனின் காதல் விவகாரம் தெரிந்தால் பிரச்சினையாகிவிடுமே என்று கிருஷ்ணர் பல தந்திரங்களை செய்து அனைவரையும் ஒன்று சேர்க்கிறார்.

இந்தப்பட நாயகி எஸ் டி சுப்புலக்‌ஷ்மியையே பின்னாட்களில் சுப்ரமணியம் திருமணம் செய்துகொண்டார்.
.
நவீன சதாரம் (1935)

மன்னரின் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க முயல்கிறார் மந்திரி. நிச்சயமும் ஆகிவிடுகிறது. ஆனால் அவர் மகனோ ஒரு வணிகரின் மகளைக் காதலிக்கிறான். வெகுண்டெழுந்த மந்திரி அரசகுமாரனை சிறையில் அடைக்கிறான். கொத்திதெழுந்த மக்கள் இளவரசனின் ஆசையை நிறைவேற்றுகிரார்கள்.

நவீன சாரங்கதாரா (1936)

நவீனம் என்றால் வேறொன்றுமில்லை. ஏற்கனவே ஒரு கதை படமாக்கப்பட்டிருந்து, வேறொருவரும் அதை படமக்க நினைத்தால் அப்பட பெயருக்குமுன் ஏதாவது இணைத்துக் கொள்வார்கள். அல்லது தங்கள் கம்பெனியின் பெயரை படத் தலைப்புடன் இணைத்துக் கொள்வார்கள். எல்லோரும் அறிந்த கதை என்பதால் வேறு தலைப்பு வைக்கத் தயங்கினார்கள்.

சாரங்கதாரன் (எம் எஸ் மணி பாகவதர்) அழகிய இளவரசன். அவன் படத்தை வரைந்து பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி பெண் கேட்கிறார்கள். அவன் அழகில் மயங்கிய பேரழகி சித்ராங்கி *எஸ் டி சுப்புலக்‌ஷ்மி), அவனைக் காண்பதற்க்காக அவன் நாட்டுக்கெ வருகிறாள். ஆனால் மன்னர் அவளை முதலில் பார்த்து, மயங்கி மணக்க முறபடுகிறார். அவளும் பல சாக்கு போக்குகளை சொல்லி தப்பிக்கிறாள். ஒரு வழியாக சாரங்கதாரனைப் பார்த்து, காதலைச் சொல்லும் வேளையில் மன்னர் பார்த்து விடுகிறார். மகனின் மீது கோபப்பட்டு அவன் கைகளை வெட்டுமாறு ஆணையிடுகிறார். அங்கே ஓடிச்செல்லும் சித்ராங்கி கை வெட்டுப்பட்டவனை அணைத்தபடியே மயங்கிவிழுகிறாள். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மன்னரை எதிர்க்கிறார்கள். அப்போது வரும் ஒரு பெண் சன்னியாசி (இந்து பாலா) சாரங்கதாரனின் கைகளை இணைக்கிறார். சுபம்.

இதில் வரும் பெண் சன்னியாசி பாத்திரம் மூலக்கதையில் இல்லை. சுப்ரமணியத்தால் இணைக்கப்பட்டது.

பக்த குசேலன் (1936)

இந்தப்பட கதையை சொல்ல வேண்டுமா என்ன?. குசேலனாக நடித்தவர் பாபநாசம் சிவன். குசேலரின் மனைவியாகவும், கிருஷ்ணனாகவும் இருவேடத்தில் நடித்தவர் எஸ் டி சுப்புலக்‌ஷ்மி. ஒரே படத்தில் ஆண்,பெண் என இருவேடத்தில் ஒரு நடிகர்/நடிகை நடித்தது இதுவே முதல் முறையாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தப்படத்திற்க்கு ஒளிப்பதிவாளர் சைலன் போஸ் என்னும் வங்காளி. இவர் அப்பொழுது பெரும்புகழுடன் விளங்கியவர். குசேலன் கிருஷ்ணரைப் பார்ப்பதற்க்காக பாடிக் கொண்டே செல்லும் காட்சிகளை சில் அவுட் உத்தியில் அழகாக படமாக்கியிருந்தார்.

கச்ச தேவயானி (1941)

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டி ஆர் ராஜகுமாரி அறிமுகமான படம். முதலில் இப்படத்தில் நடிக்க மற்றொறி நாயகியையே தேர்வு செய்திருந்தார்கள். புக் செய்யப் போனபோது, அந்த வீட்டில் இருந்த வேலைக்காரியை கவனித்த சுப்டமணியம் தன் மனதை மாற்றிக் கொண்டார். பலத்த எதிர்ப்புக்கிடையே வேலைக்காரியையே நாயகியாக்கினார்.

அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தை தெரிந்தவர். அவர் மகள் தேவயானி. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் போரில், எத்தனை அசுரர்கள் இறந்தாலும் சுக்கிராச்சாரியார் அவர்களை உயிர்ப்பித்து விடுகிறார். கடுப்பான தேவர்களின் குரு பிரகஸ்பதி, அந்த வித்தையை கற்று வர கசன் (கொத்தமங்கலம் சீனு) என்பவனை அனுப்புகிறார். யார் வந்து கேட்டாலும் அட்மிஷன் ஓகே, ஆனால் சிலபஸ் என் சாய்ஸ் தான் என்று அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுக்காமல் காலம் கடத்துகிறார் சுக்கி.

இதற்க்கிடையில் கசனுக்கும் தேவயானிக்கும் காதல் மலருகிறது.

அசுரர்களுக்கு கசனின் நோக்கம் தெரிந்து, அவனை கொல்கிறார்கள். ஆனால் தேவயானி தன் தந்தையிடம் மன்றாடி அவனை உயிப்பிக்கிறாள். இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டு அடிக்கடி தொடருகிறது. கடுப்பான அசுரர்கள் கசனை எரித்து, சாம்பலாக்கி தண்ணியில் கலந்து குருவை குடிக்க வைத்து விடுகிறார்கள்.

குருவுக்கு தர்மசங்கடம். ஒருபக்கம் மகள். இன்னொரு பக்கம் அவனை உயிர்ப்பித்தால் தன் வயிற்றையல்லவா கிழித்துக் கொண்டு வெளியே வருவான் என்று பயம். அதனால் உள்ளே இருப்பவனிடம் அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

அப்பா, சாமி வெளியே வந்ததும் என்னை உயிர்ப்பித்து விடடா என்று. கசனும் வெளியே வந்து சுக்கியை உயிர்ப்பிக்கிறான். ஓடிவருகிறள் தேவயானி.

கசன் அவளிடம், “உன் அப்பாவுக்கு உயிர் கொடுத்ததால் நான் உனக்குத் தாத்தா, எனவே உனக்கு டாட்டா” என்று கூறிவிட்டு தேவலோகம் செல்கிறான்.

காதல் தோல்வி என்றாலே படம் வெற்றிதானே.

ராஜா பிர்த்துஹரி (1944)

ஒரு ராஜா வுக்கு சாகாவரம் தரும் மாங்கனி கிடைக்கிறது. அதை அவர் தன் ஆசைநாயகிக்கு தருகிறார். அவளோ தன் கள்ளக் காதலனுக்கு தருகிறாள். அது அப்படியே பல கை மாறி ராஜாவுக்கே வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என்று நிரூபிக்கிறது.

சமூகத்தின் மீதான நம்பிக்கையும், மதிப்பீடுகளும் தகரவே துறவியாகிறார் ராஜா பிர்த்துஹரி. இவர் வரலாற்றில் வாழ்ந்த வட இந்திய மன்னர். பின்னர் திருவள்ளுவரைப் போல மூன்று பால்களில் (சிருங்கார சதகம், வைராக்கிய சதகம், நீதி சதகம்) என உலக நீதியை பாடல்களாக எழுதுகிறார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய தம்பு என்பவர் பின்னாட்களில் பிரபல ஒளிப்பதிவாளராக மாறினார்.


கே சுப்ரமணியம் அவர்களின் ஏனைய சமூகப் படங்கள், அவரது தொழில் நுட்பக் கலைஞர்கள் அடுத்த பகுதியில்.

May 25, 2009

இயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் - கே சுப்ரமணியம் பகுதி -1தமிழ் என்னும் மொழியை திரைப்படம் பேசத் தொடங்கி 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. 31 ஆம் ஆண்டு ஒரு படம் மட்டுமே வெளியானது. பின் வருடத்திற்க்கு வருடம்
எண்ணிக்கையில் கூடிக்கொண்டே சென்று 40 களில் வருடத்திற்கு 30 படம் என்ற நிலையை அடைந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய கால கட்டத்தில் பிலிம் ரோல்
தட்டுப்பாடு காரணமாக 11000 அடியில் முழுப் படத்தையும் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திரையுலகம் தள்ளப்பட்டது. மேலும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக
ஒரு போர் ஆதரவு படம் எடுத்தால் மட்டுமே அடுத்த இரண்டு படங்களுக்கு பிலிம் தரப்படும் என்ற நிபந்தனையையும் அரசு விதித்தது.

எனவே அந்தக்காலகட்டத்தில் வருடத்துக்கு நான்கு படங்கள் மட்டுமே வந்தன. சுதந்திரம் அடைந்த பின் திரைத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு தற்போது வருடத்துக்கு
குறைந்தது 80 படங்கள் வெளிவருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 இயக்குநர்களாவது தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார்கள். எனவே
குறைந்தபட்சம் 1000 இயக்குநர்களாவது தமிழ்சினிமாவில் இருந்திருக்கிறார்கள்.

இதில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? நம் தலைமுறை இயக்குநர்களை விட்டு விடுங்கள். முந்தைய தலைமுறை இயக்குநர்கள் எத்தனை பேரை தெரியும்?


சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்றாலும், அதன் அடிப்படை ஒரு இயக்குநர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தன் பார்வையில்
எப்படி சொல்கிறார் என்பதே. அவர் அறியாமல் ஒரு ஓளித்துணுக்கு கூட படததில் இடம் பெறக்கூடாது. ஒரு நடிகரானாவர் தன் புருவத்தைக்கூட இயக்குநர்
சொன்ன அளவுக்கு மேல் தூக்கிவிடக் கூடாது. அந்த அளவுக்கு ஆளுமைத்திறன் பெற்ற இயக்குநர்களின் பெயர்களை நாம் மறந்து விடுகிறோம்.

சில இயக்குநர்களே தலைமுறைகளைக் கடந்தும் மக்களால் நினைவு கொள்ளப்படுகிறார்கள். அதற்க்கு முக்கிய காரணமாக விளங்குவது அவர்களின்
கலை ஆளுமையும்,கருத்து ஆளுமையுமே. அப்படிப்பட்ட சிறப்பான இயக்குநர்களை நாம் நட்சத்திர இயக்குநர் என்று அழைத்தோமானால் இயக்குநர் கே சுப்ரமணியம்
அவர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்க வேண்டும்.

கே சுப்ரமணியம் அவர்களுக்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கின்றன.


தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர், எஸ் டி சுப்புலக்‌ஷ்மி, எம் எஸ் சுப்புல‌ஷ்மி, டீ ஆர் ராஜகுமாரி, வி என் ஜானகி போன்றவர்களை
அறிமுகப்படுத்தியவர்.

பாபநாசம் சிவனின் இசையையும்,பாடல்களையும் பெருவாரியாகப் பயன்படுத்தியதோடு நில்லாமல் அவரை நன்கு நடிக்கவும் வைத்தவர்.

தமிழின் முதல் குழந்தைகள் படத்தை இயக்கியவர்.

மிகப்பெரும் எழுத்தாளர்களான பிரேம்சந்த் முன்சி, கல்கி ஆகியோரது படைப்புகளை திரைப்படமாக்கியவர்

காடாக இருந்த தேனாம்பேட்டையை திருத்தி காங்கிரஸ் மைதானம் அமையக் காரணமாய் இருந்தவர்.

பல திரைப்படம் சார்ந்த சங்கங்களை துவக்கியவர்.

ஆனால் இதனாலா அவரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்? இல்லை.

70 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இயக்கிய சமுக சீர்திருத்த கருத்துக்கள் உடைய படங்களுக்காகவே.

அவர் 20 படங்களை இயக்கியுள்ளார். அதில் புராண படங்களை தவிர்த்து 10 சமூக கருத்துள்ள படங்களை இயக்கியுள்ளார்.


அந்தப் படங்களைப் பற்றிய ஒரு பார்வையே இந்தப் பதிவு.


பாலயோகினி (1937)

ஒரு சப் கலெக்டர், அவருக்கு ஒரு மகள், ஒரு விதவை சகோதரி. தன் தந்தையை காவலர்கள் அழைத்து சென்றுவிட்டார்கள், காப்பாற்றுங்கள் எனக்கேட்டு
சப் கலெக்டர் வீட்டுக்கு வருகிறாள் ஒரு சிறுமி. வயதான காவல்காரரும் பரிதாபப்பட்டு அந்த பெண்ணை உள்ளே விடுகிறார். உள்ளே சப் கலெக்டர் இன்னொரு பெண்ணுடன்
உல்லாசமாய்.சிறுமியையும், காவல்காரரையும் விரட்டி விடுகிறார் சப் கலெக்டர். அவர்கள் மேல் பரிதபம் கொண்டு ஆதரிக்கிரார்கள் கலெக்டரின் மகளும், சகோதரியும்.
கோபப்படும் கலெக்டர் இவர்களையும் வீட்டை விட்டு துரத்துகிறார். வேறு வழியில்லாமல் இவர்கள் காவல்காரருடன் சேரியில் சென்று தங்குகிறார்கள். அதனால்
கோபப்படும் கலெக்டரின் சமூகமான பிராமணர்கள் பல தொல்லைகளை சேரி மக்களுக்கு தருகிறார்கள். கலெக்டரின் மகள் எப்படி எல்லாவற்றையும்
மாற்றுகிறாள் என்பதே கதை.இதில் கலெக்டரின் மகளாக நடித்தவர் பேபி சரோஜா. தமிழ்நாட்டின் ஷெர்லி டெம்பிள் என மக்களால் புகழப்பட்டார்.


சேவா சதனம் (1938)

பிரபல எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் எழுதிய நாவலின் உரிமையை வாங்கி எடுக்கப்பட்ட படம். அந்நாட்களில் வயதானவர்களுக்கு குழந்தைகளை
திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி மணமுடிக்கப்பட்ட குழந்தையை மாப்பிள்ளை வீட்டார் மிகவும் கொடுமைப் படுத்துவார்கள்.
மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கும். இந்தப் படத்தின் நாயகியும் அதுபோல திருமணம் செய்விக்கப் பட்டு கொடுமைப் படுத்தப் படுகிறாள்.
பின் அங்கிருந்து துணிச்சலாக வெளியேறி பிரபல பாடகியாக மாறுகிறாள். சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு சேவா சதனம் என்னும் அபலைப் பெண்களுக்கான
அமைப்பைத் தொடங்குகிறாள். அவளின் முன்னாள் கணவரோ நம் சம்பிரதாயங்களே இதற்க்குக் காரணம் என்று உணர்ந்து பூணூலை அவிழ்த்தெறிகிறார்.
அவரது சகோதரி பைத்தியமாகிறாள்.இந்தப் படத்தின் நாயகி எம் எஸ் சுப்புலக்‌ஷ்மி.


தியாகபூமி (1939)

இதுவும் பிராமண சமுதாயத்தின் குறைபாடுகளைச் சொன்ன படம்தான். முந்தைய இரண்டு படங்களுக்காகவும் அவரை ஜாதிப் பிரஸ்டம் செய்ததாக ஒரு தகவல் உண்டு.

சாஸ்திரி ஒருவர் தன் மகளை கல்கத்தாவில் இருக்கும் ஒருவனுக்கு திருமணம் செய்விக்கிறார். அவனோ ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் தொடர்பு
கொண்டு கட்டுப்பெட்டியான மனைவியை சித்திரவதை செய்கிறான். ஒரு குழந்தையும் பிறக்கிறது. மனம் வெறுத்து அவள் தன் தந்தையை தேடி வருகிறாள்.

ஆனால் சாஸ்திரியும் பிரச்சினையுடன் இருக்கிறார். தன் ஊரில் வெள்ளம் ஏற்படும் போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவுகிறார் அவர். சாதிப் பிரஸ்டம் செய்யப்பட்டு தற்போது
அவர் சேரியில்.தன் குழந்தையை அவர் மெய்மறந்து பாடிக்கொண்டிருக்கும் போது அருகில் வைத்து விட்டு மும்பை செல்கிறாள் மகள்.

அங்கே அவள் வேலைக்கு சேருமிடம் அவளது நெருங்கிய உறவினர் வீடு. சொத்துக்கள் அனைத்தும் அவளுக்கே. பின் சென்னை திரும்புகிறாள் புதுப்பெயருடன். தான தர்மங்கள்
செய்து பிரபலமாகிறாள். தன் குழந்தையை தற்செயலாக கண்டுபிடிக்கும் அவள் தன்னுடனே வைத்து வளர்க்கிறாள். அந்தக் குழந்தையோ உண்மை தெரியாததால்
தாத்தா வீட்டிற்க்கே ஓடிப் போகிறாள். போலிஸ், புகார், பத்திரிக்கை செய்தி என இவளது புகைப்படம் வெளியாக அதை பழைய கனவன் பார்த்து விடுகிறான்.

சேர்ந்து வாழுமாறு கணவன் கோர்ட்டுக்கு செல்ல, இவல் மறுக்கிறாள். வேண்டுமானால் நான் ஜீவனாம்சம் தருகிறேன் என்று சொல்கிறாள். எல்லோரும்
சேர்ந்து வழுமாறு கட்டாயப் படுத்த அதை மறுத்து சுதந்திரத்துக்கு பாடுபடும் இயக்கத்தில் இணைகிறாள்.

மனம் திருந்திய கணவனும் அதே இயக்கத்திக் சேர்ந்து விடுதலைக்கு போராடுகிறான். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய அரசால் முதலில் தடை செய்யப்பட்டு பின்னர் வெளியானது.


பக்த சேதா (1940)

இதுவும் தீண்டாமைக் கொடுமையை பேசிய படம். சேதா என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவர் பக்தியை மெச்சி விஷ்ணு தினமும் அவருக்கு காட்சி கொடுக்கிறார்.
இதைக் கண்ட கௌரவர்களின் குரு துரோணரின் மகள் வியப்படைகிறாள். சேதாவின் மகன் சேவாவை காதலிக்கிறாள். இதை அறிந்த துரோணர் பல இடைஞ்சல்களைத்
தருகிறார். இறுதியில் அவர்கள் இருக்கும் சேரியை கொளுத்தச் சொல்கிறார். பின்னர்தான் தெரிகிறது அவர் மகளும் அங்கேதான் இருக்கிறாள் என்று. பதறி ஓடுகிறார்.
ஆனால் அவர்கள் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இறைதுதி செய்து கொண்டிருக்கிரார்கள். பின்னர் அனைவரும் சமம் என உணருகிறார்கள்.


பவளக்கொடி,கச்ச தேவயானி, ராஜா பிர்த்துஹரி போன்ற புராண படங்கள் அடுத்த பகுதியில்.References

1. வலம்புரி சோமனாதன் எழுதிய ”தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்ரமணியம்” அல்லயன்ஸ் வெளியீடு

2. விட்டல்ராவ் எழுதிய ”தமிழ்சினிமாவின் பரிமாணங்கள்”.

நட்சத்திரங்களுக்கு வணக்கம்

2006ல் தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமானது. அப்போதிருந்து நான் பதிவுகள் எதுவும் எழுதாமல் பின்னூட்ட பதிவராகவே இருந்து வந்தேன். 2007களில் பதிவர் சந்திப்புகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டபோது பாலபாரதியும் லக்கிலுக்கும் பதிவு எழுத ஊக்குவித்தார்கள். நானும் எழுத ஆரம்பித்தேன். அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில்.

சினிமாவில் சிறுநகரங்கள் என்னும் என் பதிவை படித்து பைத்தியக்காரன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து ஊக்குவித்தார். அது ஒரு திருப்புமுனையாக எனக்கு அமைந்தது.
புருனோ,ராப்,வெட்டிப்பயல் ஆகியோரும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

இடையில் சில நாட்கள் பதிவு எழுதாத போது, நர்சிம் அவர்கள் அழைத்து ஏன் எழுதவில்லை? என்று கேட்டார். ஆஹா நம்மையும் நம்பி படிக்கிறாங்களே என்று மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

அதிஷா, SUREஷ், பரிசல், கேபிள் சங்கர்,கார்க்கி, அப்துல்லா மற்றும் பலரும் (விடுபட்டவர்கள் மன்னிக்க) தொடர்ந்து ஆதரவளித்து இன்று நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு என்னை ஆளாக்கியிருக்கிறார்கள்.

என் வாழ்க்கைக்கு வானமாய் இருக்கும் வலையுலகுக்கும், அதில் சந்திரனாய் குளிர்விக்கும் தமிழ்மணத்திற்க்கும், வாழ்க்கையை வசந்தமாக்கும் பதிவர்கள் என்னும் நட்சத்திரங்களுக்கும் என் நட்சத்திர வார வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

May 14, 2009

கேபிளும்,பரிசலும்

சென்ற ஆண்டு ஜூலை மாதம். இந்த படம் வந்துருச்சா? அல்லது இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறதா என்று ஆச்சரியம் ஏற்படுத்தும்படி ஒரு பதிவர் சுடச்சுட விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தார். யாருப்பா இது? என்ற ஆச்சரியத்துக்கு விரைவில் விடை கிடைத்தது.

மெரினாவில் நடந்த ஒரு பதிவர் சந்திப்புக்கு வந்து அவர் கலந்து கொண்டார். பின்னர்தான் தெரிந்தது அவர் பல திரைப்படங்களுக்கு இயக்கத்திலும், ஸ்க்ரிப்டிலும் பிண்ணனியாக இருப்பது. அதைத் தவிர பலபடங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க வேறு செய்து இருக்கிறார்.

ஆச்சரியம் அடங்கும்முன் அவர் பெயர்க்காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.

“என் பெயரில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரை யாரும் திட்டிவிடக்கூடாதே என்று என் தொழில் பெயரையும் இணைத்துக் கொண்டேன்” என்று.

ஆம். அவர் சென்னை நகரத்தில், முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கேபிள் நிறுவனங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். இன்றும் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.

அதுபோல், இந்த வார ஆனந்த விகடன் 39ஆம் பக்கத்தில் பதிவர் கேபிள் சங்கரின் விளையாட்டு வியூகம் என்ற கதை வெளியாகி உள்ளது. இது அவர் இயற்பெயரான சங்கர் நாராயணன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அச்சில் அவரது படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் சாக்லேட் கிடைத்து விட்டது. இனி அவரின் முழு முதற் நோக்கமான இயக்குநர் பதவியும் விரைவில் கூடிவர அனைத்துப் பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.


பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.

பரிசலின் படைப்புகள் இதுவரை பல இதழ்களில் வெளிவந்துள்ளன. இந்த வார ஆனந்த விகடனில் அவரது நட்சத்திரம் கதை 50 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இம்முறை பரிசல் கிருஷ்ணா என்ற புனைப் பெயரில் வந்துள்ளது விசேஷம். தொடர்ந்து அவரது படைப்புகள் வெளியாகி பதிவர்களையும், தமிழ் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் மகிழ்சிப்படுத்த வாழ்த்துகிறேன்.

May 13, 2009

கோமாளியான ஷாருக்கான்

ஐபிஎல் தொடங்குவதாக அறிவிப்பு வந்தவுடன், யார் யார் அணிகளை ஏலம் எடுப்பார்கள் என்று பல ஹேஸ்யங்கள் நிலவின. ஆனால் ஷாருக்கான் ஏலம் எடுக்க வந்தது எனக்கு மிக ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் ஷாருக், ஜூஹி, ஜெய்மேத்தா ஆகியோரது கூட்டணியானது மற்ற அணி உரிமையாளார்களை விட நிர்வாக அனுபவம் குறைவானது.

மற்ற அணி உரிமையாளர்கள் எல்லாம் தொழில் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள். பஞ்சாப் அணி பிரீத்தி ஜிந்தாவை முன்னிறுத்தினாலும் அதன் முக்கிய உரிமையாளரான நெஸ் வாடியா பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இதில் மற்ற உரிமையாளர்களுடைய தொழில் அணியின் தோல்வியினால் பாதிக்கப் படாது. மும்பை அணி தோற்றால் யாரும் ரிலையன்ஸ் பிரஸ் கடையில் கொத்தமல்லி வாங்குவதை நிறுத்தப் போவதில்லை. பெங்களூர் தோற்றுவிட்டதே என்று யாரும் கிங்பிஷர் பீரை குடிப்பதிலிருந்து பின் வாங்கப்போவதில்லை. ஆனால் ஷாருக்கின் முக்கிய தொழிலான பிராண்ட் அம்பாசிடர் என்பது வெற்றி தோல்வியை அடிப்படையாகக் கொண்டது.


அமிதாப்புக்கு கோன் பனேகா குரோர்பதியில் கிடைத்த இமேஜே, அவருக்கு விளம்பர காண்டிராக்ட் கிடைக்க காரணம். அதற்க்கு முன் அவரது ஏ பி சி எல் நிறுவனம்
திவாலாகி இருந்தபோது யாராவது அவரை அணுகினார்களா என்ன?

ஷாருக்கைவிட இந்தியாவில் அதிகமானவர்களுக்கு தெரிந்தவர் டெண்டுல்கர்.கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரணமாகவும், மற்ற வீரர்களின் எழுச்சி காரணமாகவும்
அணி வெற்றியில் டெண்டுல்கரின் பங்கு குறைந்துபோனது. அதனாலும், வயதானதாலும் பல விளம்பர காண்டிராக்டுகள் நீட்டிக்கப்படாமல் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளன.


ஷாருக்குக்கு முக்கிய வருமானமாக இருப்பது விளம்பரங்களில் அவர் தோன்றுவதால் கிடைக்கும் பணமே. நம் விளம்பரத்துறையில் இருப்பவர்கள் வாய்ப்பு கொடுப்பது வெற்றியாளர்களுக்கே. இப்போது கல்கத்தா நைட் ரைடர்சின் தொடர்தோல்வி ஷாருக் ஒரு தோல்வியாளர் என்ற பிம்பத்தை பார்வையாளன் மத்தியில் விதைக்கிறது. ஐபிஎல் பேக் பிளேயர் வலைப்பதிவும் அவரது இமேஜுக்கு பங்கம் விளைவித்து வருகிறது.

அணியின் வெற்றியை தன் வெற்றிபோல் கொண்டாடுவதும், தோல்வியை தன் தோல்விபோல் எடுத்துக் கொள்வதும் ரசிகனுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம். ஆனால் ஒரு நிர்வாகிக்கு? தன் தொழிலில் ஏற்படும் வெற்றிக்கும், தோல்விக்கும் தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும். ஐ பி எல் என்பது தொழிலைத் தாண்டி கௌரவம்,பிராண்ட் பார்மேஷன் என பல சிக்கலான கூறுகளைக் கொண்டது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எடுத்துக் கொள்ளலாம். சென்ற முறை படுதோல்வி, ஆனால் இந்த முறை அரைஇறுதி வாய்ப்பு பெறும் நிலையில் உள்ளார்கள். அவர்களது உரிமையாளார்கள் தோல்வியின் போது எப்படி ரியாக்ட் செய்தார்கள்?. தங்கள் முகத்தைக் காட்டிக்கொள்ளாமலேயே அணியைக் கட்டமைத்தார்கள். ஆனால் ஷாருக் முதல் ஐபிஎல்லின் முதல் போட்டியில் மெக்கல்லம் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ஆடி ஏதோ தானே அடிப்பது போல பில்ட் அப் செய்து கொண்டார். அணி தோல்வி அடையும் போது சோகமான முகத்துடன் சிகரெட் பிடிக்கிறார். இதுதான் இப்போது வினையாகி விட்டது.
அணியின் தோல்வியும் அவரது சொந்த தோல்வியாகவே பார்க்கப்பட்டு, அவரது விளம்பர நிறுவனங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியுள்ளன.

பஞ்சாப் தோற்றால் பிரீத்தியை அது பாதிக்காது. ஏனென்றால் அவருக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அவர் அழகுக்கு. வயதாகும் போது அது எப்படியும் குறைந்துவிடும்.

அவர் இந்த துறையில் கால் வைத்தது முதல் தப்பென்றால், அடுத்த தவறு அணி கோச் செலக்‌ஷன். அணி வீரர்களும், கோச்சையும் காட்டிதான் விளம்பரதாரர்களை பிடிக்க முடியும். எனவே தான் இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கோச்சான ஜான் புக்கானனை பிடித்தார்.

ஆனால் அதற்க்குமுன், அவரது முறைகளைப் பற்றி ஷேன் வார்னே பல முறை கமெண்ட் அடித்துள்ளார். அவரது கோச்சிங்கிக்கான வெற்றி என்பதைவிட தனிப்பட்ட பிளேயர்களின் பங்களிப்பே காரணம் என்று வார்னே தெரிவித்திருந்தார். அந்த ஆஸ்திரேலிய கனவு அணியில் இருந்த வார்னே, லேமன் ஆகிய இருவரும் இப்போது கோச்சாக இருந்து வெற்றி பெறுகிறார்கள் என்பதில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம்.

தவறான கோச் தேர்வு, அவரை முழுமையாக நம்பி வீரர்களை நம்பாமை, வெற்றி வேண்டுமென அதிகப்படியான நெருக்குதலை வீரர்களுக்குத் தருவது போன்றவை தோல்விக்குக் காரணம். ஆனால் மீடியாக்களில் அதை தன் தோல்விபோல காட்டி, தன்னையே கோமாளியாக்கிக் கொண்டார் ஷாருக்.

May 10, 2009

எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகியவை இனி தமிழக சிறுநகர,கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா?

சமீபத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு) , ஏ ஐ ஈஈஈ (அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு) நடந்த தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தேன். ஒன்று மதுரையிலும் மற்றொன்று திருச்சியிலும்.

இரண்டு மையங்களிலும் கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம், தன் வாழ்நாளில் பொய்யே பேசாதவர்களின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது. சிறுநகர மாணவர்களின் சதவிகிதம் உண்மை மட்டும் பேசும் அரசியல்வாதிகளின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது.

ஏன் அவர்கள் இந்த தேர்வுகளில் பங்கெடுத்துக் கொள்வதில்லை?

1. இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லை.


2. இதைப் பற்றி சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு
போதுமான விழிப்புணர்வு இல்லை.

3. கிராமப்புற மாணவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி, படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் ஆகியவை இதைப் பற்றி பெரிய அளவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை அரிதாக சில பக்கங்களை ஒதுக்குகின்றன (கேரியர் கைடன்ஸ் என்ற பெயரில்). ஆனாலும் அவை உற்சாகப் படுத்தும்படி எழுதுவதில்லை. தொடர்ச்சியாகவும் அவர்கள் இப்பணியைச் செய்வதில்லை. எனவே இதழ்களை தவறவிடுபவர்களுக்கு செய்திகள் சேர்வதில்லை.

4. நாளிதழ்கள் தேர்வு பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அதன் முக்கியத்துவம், வாய்ப்பு பற்றி அவை வாய் திறப்பதில்லை.

5. இம்மாதிரியான தேர்வுகள் அனைத்தும் கேந்திரிய வித்யாலயா மாதிரியான பள்ளிகளில் மட்டும் நடத்தப் படுகின்றன. எனவே அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வு எளிதாக ஏற்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிகளையும் மையங்களாகக் கொண்டு இந்தத் தேர்வுகளை நடத்தினால் அங்குள்ளவர்களுக்கும் இது எதற்க்கு நடக்கிறது, படித்தால் என்னவாகலாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படும். இது மற்றவர்களுக்கும் பரவும்.

6. தமிழக அரசின் நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்க்காக பலரும் படித்தார்கள். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேச்ச மாதிரியும் ஆச்சு என்ற கணக்கில் அப்போது பலர் இந்த தேர்வுகளுக்கும் படித்தார்கள். ஆனால் இங்கே நுழைவுத் தேர்வு தளர்த்தப் பட்டதும் இதற்க்கு மட்டும் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து விட்டது.

7. மேலும் தமிழக அரசின் நுழைவுத் தேர்வு காரணமாக பல கோச்சிங் செண்டர்கள் இங்கே இருந்தன. தொழில் போட்டியின் காரணமாக அவர்கள் குறைந்த கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் இப்போது அவை அருகி விட்டன. மதுரை,திருச்சி ஆகியவற்றில் ஏ ஐ ஈ ஈ ஈ நுழைவுத் தேர்வு கோச்சிங்கிக்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள். இவற்றை கிராமப் புற மக்களால் செலுத்த முடிவதில்லை.

8. மேலும் அப்போது சிறு நகரங்களிலும் கோச்சிங் செண்டர்கள் இருந்தன. சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் எளிதில் அங்கு சென்று படித்தார்கள். அவைகள் இப்போது மூடப்பட்டுள்ளதால் எல்லோரும் மாவட்டத் தலைநகருக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அவர்களின் பொருளாதாரம் சம்மதிப்பதில்லை.

ஏன் கோச்சிங் செண்டர்கள் பற்றி அதிக கவலை எனில்,

சமீபத்தில் ஐஐடி சென்னையின் டீன் அவர்கள் அளித்த பேட்டியில் “ இப்போது தேர்வாகிவரும் மாணவர்களிடம் ரா இண்டலிஜெண்ஸ் இல்லை, பயிற்றுவிக்கப்பட்ட திறமையே காணப்படுகிறது? என சொல்லியிருந்தார். எனவே நம் மாணவர்களும் முயற்ச்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அறியாமையின் காரணமாக மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கற்க்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....


1) நமது எம் பிக்களிடம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை பரவலாக கொண்டுவரச் சொல்லி வற்புறுத்தலாம். மக்கள் தொகைக்கு ஏற்பவும், மத்திய அரசு பணியாளர்களின் என்னிக்கைக்கு ஏற்பவும் தான் அப்பள்ளிகள் அமைக்கப்படும். ஆனால் அந்த விகிதத்திலாவது பள்ளிகள் இங்கு அமைக்கப் பட்டுள்ளனவா என்று சரிபார்க்கச் சொல்லலாம்.


2) ஏனெனில் இதுவரை அர்ஜூன் சிங், முரளி மனோகர் ஜோசி என வட மாநிலத்தவர்களே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் அந்த துறையின் செயல்பாடுகள், அதன் பலம் ஆகியவை நம் எம் பிக் களுக்கு தெரிவதில்லை. அந்த துறையில் உள்ள ஓட்டைகள் மூலம் வட மாநில மக்கள் நமக்குச் சேரவேண்டியவற்றை அபகரிப்பது நடந்து வருகிறது.

3) பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கு தேர்தல் நடைபெறும்போது நம் எம்பிக்கள் ரயில்வே,தொலைத் தொடர்பு போன்ற பசையுள்ள நிலை குழுக்களுக்கே முன்னுரிமை கொடுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் மனதுடையோர் மனித வள மேம்பாட்டு அமைச்சக நிலைக்குழுக்களுக்கு போட்டியிடலாம்.

4) எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் சர்வ சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்களை இங்கு ஆக்க பூர்வமாக செயல்படுத்தலாம். புது திட்டங்களையும் நமக்கு கொண்டு வரலாம்.

5) சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது எம் பிக்கள் சாதனைப் பட்டியலைப் பார்த்தேன். அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நிழற்குடை, பள்ளி கட்டடம், தெரு விளக்கு போன்ற உள்ளாட்சித் துறைப் பணிகளை. அவை மத்திய அரசின் எம் பி நிதியில் செய்யப் படும் கடமைகள். எப்படியும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். கமிசனும் கிடைக்கும். ஆனால் ஒரு எம் பி என்பவர் தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்களைப் பெற்றுத் தருபவராகவே இருக்க வேண்டும். அம்மாதிரி எம்பிக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

6) எனவே வெற்றி பெறும் எம்பிக்களை சந்தித்து, மத்திய அரசின் துணையுடன் இங்கு கல்வியை வளர்க்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

7) தற்போது புதிதாக மூன்று ஐஐடிக்கள், ஐஐஐடி டி&எம் ஆகியவை அமைக்கப் படவுள்ளன. இதிலும் ஓபிசிக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. எனவே மத்திய அரசின் ஓபிசி சான்றிதழை வாங்கி விண்ணப்பிக்கவும். நான் சந்தித்த பலர், தமிழக அரசின் பிசி, எம்பிசி சான்றிதழ்கள் போதுமென நினைத்து மத்திய அரசின் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பித்துள்ளார்கள்.

8) உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இதைப் பற்றிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

May 08, 2009

துப்பு

மதியத்திலிருந்து இது பத்தாவது போன். ரெண்டு நாளாச்சு இன்னுமா முடியல என்று மேலதிகாரி காய்ச்சுகிறார். அவரும் என்ன செய்வார்? பாவம். போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியைப் பற்றிய விபரம் அது. அவரை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் மொத்த கும்பலையும் வளைத்துவிடலாம். வெயிட் வெயிட் நான் யாரென்று சொல்லவில்லையே?. நான் ராஜி. நார்காட்டிக்ஸ் பீரோவில் அசிஸ்டெண்ட் கமிசனர்.

என் டீகோடிங் டீமைப் பார்த்தேன். அவர்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனபாடில்லை. அனைவர் கண்களிலும் சோர்வு. ஓக்கே கைய்ஸ், வீ வில் டேக் அ திரி அவர்ஸ் பிரேக். ஆஃப்டர் தட் வி வில் மீட் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

கணவர் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். கல்லூரி பேராசிரியர். உள் அறையை எட்டிப் பார்த்தேன். அருமைப் புத்திரன் கம்ப்யூட்டரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ஏதோ பிளாக் எழுதுகிறேன் பேர்வழி என்று கடந்த மூன்று மாதமாக அதையே கட்டிக் கொண்டு அலைகிறான். தூக்கத்தில் பின்னூட்டம், இடுகை என புரியாத மொழியில் புலம்புகிறான்.

நான் வந்ததைக் கவனித்தவன், அம்மா ஒரு டீ என்று ஆர்டர் போட்டான். வெளியிலே அதிகாரி என்றாலும் வீட்டிலே சமையல்காரிதானே என்று புலம்பியபடியே போட்டு எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றேன்.

அவன் கீ போர்டில் ஏதோ ஸ்டிக்கர் ஒட்டியிருக்க என்ன எனக் கேட்டேன்?. அவன் அதற்க்கு அம்மா இது தமிழ் 99 ஸ்டிக்கர். எந்த ஆங்கில எழுத்துக்கு எந்த தமிழ் எழுத்து என்பது என தெரிவதற்க்காக என்றான். பொறி தட்டியது. வேகமாக ஓடி கைப்பையில் இருந்த அந்த காகிதத்தை எடுத்துக் கொடுத்து டைப் அடிக்கச் சொன்னேன்.

திரையில் பார்த்தால் எல்லாம் பெயர்களாய் வந்தன. இடையிடையே ரைனா, தோனி என கேள்விப் பட்ட பெயர்களும் இருந்தன. எங்கள் பரபரப்பை பார்த்தபடியே அருகே வந்தார் என் கணவர்.

மானிட்டரைப் பார்த்தவர், ”என்னடா ஏதோ அம்மாவும் மகனும் சீரியஸ்சா டிஸ்கஸன் பண்ணுறேங்கிளேன்னு வந்தா ஐ பி எல் பிளேயர்ஸ் பெயரை டைப் பண்ணி விளையாடிக்கிட்டு இருக்கீங்க?. என்றார்.

உடனே சுதாரித்த நான் கணவரிடம் இவங்க எல்லாம் ஐ பி எல் பிளேயரா? இது முக்கியமான தடயம், இதை டீகோட் பண்ணிதான் ஒருத்தனை பிடிக்கணும் என்று விளக்கினேன்.

சற்று நேரம் அதையே உற்றுப்பார்த்தவர், இவங்க எல்லாருமே வேற வேற டீம். குறிப்பிட்டு சொல்ற ஒற்றுமையும் இல்லை. பனியன் நம்பர் பார்த்தாக் கூட ரைனா 3, தோனி 7 என்றார்.

ஆஹா, அப்படியே எல்லார் நம்பரையும் பார்த்துச் சொல்லுங்க பார்ப்போம் என்றேன். கிடைத்தது ஒரு சௌகார் பேட்டை லேண்ட்லைன் நம்பர்.

உடனே மேலதிகாரியிடம் பேசினேன். சார் கண்டுபிடிச்சாச்சு. ஆளு சௌகார்பேட்டை. முக்கியமா அவன் இருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஒரு பிரவுஸிங் செண்டர் இருக்கும்.

May 06, 2009

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் தமிழ்சினிமாவும்

தமிழ்சினிமாவில் இதுவரை குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இரண்டு சதவிகிதம் கூட இருக்காது. அவர்களை மகிழ்விக்கும் படங்களே குறைவு என்னும் போது அவர்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் எத்தனை இருந்து விடக் கூடும்?. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் என்றால் கருவேலம் பூக்கள், குட்டி போன்ற படங்களைச் சொல்லலாம்.

திருமதி பழனிச்சாமி, காதல் கொண்டேன் போன்ற வணிக ரீதியிலான படங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் படும் சித்திரவதை, சமூகம் அவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஆகியவை காட்டப்பட்டன. பாதிக்கப் பட்டவர்கள் போராடினால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற ரீதியிலேயே இப்படங்கள் அமைந்திருந்தன.

குழந்தைகள் மீதான அடுத்த தாக்குதல் அவர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றுவது. இந்த அவலத்தை சாடி காதலர் தினம், வில்லன், நான் கடவுள் ஆகிய படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் இதே விஷயத்தை நகைச்சுவைக்காக உபயோகப் படுத்துவது. சமூக அக்கறையுள்ள கலைஞர் என்று அறியப்படும் கமல்ஹாசன் நடித்த படமான காதலா காதலாவிலும் இதை நகைச்சுவையாக பயன்படுத்தியிருந்தார்கள். சமூக அக்கறை எனக்குள்ளது என பிரகடனப் படுத்திக்கொள்ளூம் விவேக்கும் இந்த விஷயத்தை காமெடியாகவே பல படங்களில் அணுகுகிறார்.

குழந்தைத் தொழிலாளார் விஷயத்திலும் கூட டீக்கடைகளில் வேலை செய்வது, மெக்கானிக் செட்டுகளில் வேலை செய்வது ஆகியவை குற்றம் இல்லை என்ற தொனியிலேயே காட்சிகள் அமைந்து வந்திருக்கின்றன. இதில் நமக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல், குழந்தைகளின் மீதான பாலியல் வக்கிரங்களை நியாயப் படுத்தாமல் அது மிகப்பெறும் தவறு என்னும் நோக்கில் காட்சிகளை தமிழ்சினமா இயக்குநர்கள் அமைத்து வருவதுதான்.


அந்த நோக்கில் பார்த்தால் அரண்மனை காவலன், காதல் கொண்டேன் ஆகிய இருபடங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அரண்மனை காவலன்

இந்தப் படத்தில், ஊர் பெரிய மனிதர் ஒருவர் தன் பள்ளியில் படிக்கும் சிறு பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறார். கொதித்தெழுந்த இன்னொரு குடும்பம் அவரை எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறது. இதனால் அவர் மற்றவர்களை பழிவாங்க என படம் செல்கிறது. இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம், அது மிகப்பெரிய தவறு என காட்சிப்படுத்தியிருப்பதுதான்.

காதல் கொண்டேன்

மிக உக்கிரமாக இந்த பிரச்சினையை காட்டிய படம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இது பிரச்சினை தான் என முதன் முதலாக தமிழில் சொன்ன படம். மார்பிள் கல் தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் சிறுவர்,சிறுமியரை முதலாளி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள் பொங்கியெழுந்து முதலாளிகளை கொன்று தப்பிக்கிறார்கள்.

இதுதவிர குருதிப்புனல், துள்ளுவதோ இளமை ஆகிய படங்களிலும் இது குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்கள்.

ஆனால் இதைவைத்து குழந்தைகளுக்கு இது குறித்து நம்மால் ஏதும் புரிய வைக்க முடியுமா?

நிச்சயம் முடியாது. இதுதவிர

வேறென்னென்ன வகைகளில் அவர்கள் தாக்கப்படுவார்கள்?

அவர்களுக்கு அதற்க்குரிய பாதுகாப்பை நம்மால் வழங்க முடியுமா?

நாம் என்ன செய்து நமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்?

இதுபற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் மே 10 ஆம் தேதி கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. மன நல மருத்துவர்கள் டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்கு விதையாய் அமைந்த தீபா அவர்களுக்கும், இதை மரமாக்கினால் நாலு பேர் பயனடைவார்களே என்று சிந்தித்த அமிர்தவர்ஷினி அம்மாவுக்கும், விதைக்க இடம் கொடுத்த கிழக்கு பதிப்பகத்துக்கும், விதையை நாற்றாக்கி, மண் கிளறி, உரமிட்டு,நீர் பாய்ச்சிய நர்சிம் அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்க்கும் லக்கிலுக்,எஸ்கே,அதிஷா முதலானோருக்கும், வளர உதவும் சூரிய வெளிச்சமாய் விளங்கும் டாக்டர்கள் ருத்ரன்,ஷாலினி ஆகியோருக்கும், வளர்வதற்க்கு அவசியமானது காற்று, ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது. அந்த காற்றைப் போல் இந்த நிகழ்வுக்கு உழைக்கும் ஏனையோருக்கும் மிகுந்த நன்றி.

மரமானால் மட்டும் போதுமா? அந்த கனிகள் மக்களை சென்றடைந்தால்தானே மரத்துக்கு மதிப்பு?

கனி வேண்டுவோர், இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


weshoulddosomething@googlemail.com

May 04, 2009

எல்லோரும் வாழ்ந்த 1983

83ஆம் வருடம் இந்தியர்களுக்கு இன்னும் மறக்க முடியாததாய் இருப்பதற்க்கு காரணம் புருடென்சியல் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது எனலாம். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தத்துவத்திற்கேற்ப்ப மாநில எல்லைகளைக் கடந்து வீரர்களை மக்கள் ஆராதித்தார்கள். அதே தத்துவத்தில்தான் தமிழ்சினிமாவும் வேற்று மொழி நடிகைகளை தொடர்ந்து ஆராதித்து வருகிறது. இந்த ஆண்டில் திறமைவாய்ந்த ரேவதி, ஊர்வசி போன்ற திறமைவாய்ந்த அயல் மாநில நடிகைகள் தமிழில் அறிமுகமானார்கள். நளினி, சசிகலா போன்ற நடிகைகளும் அறிமுகமானது இந்த ஆண்டில்தான்.

ஆனால் இந்த ஆண்டின் சிறப்பு என்பது கிட்டத்தட்ட 20 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியதேயாகும். மசாலா படம், கதையுள்ள படம், சதையுள்ள படம் என் எல்லாவகைப் படங்களும் ஓடின. கோமல் சுவாமினாதனின் ஒரு இந்திய கனவு படமும் வந்தது, சில்க் நாயகியாய் நடித்து சில்க் சில்க் சில்க், என்னைப் பார் என் அழகைப் பார், போலிஸ் போலிஸ் ஆகிய படங்களும் வந்தன. இனி இந்த ஆண்டின் சில முக்கிய படங்களைப் பார்ப்போம்.


முந்தானை முடிச்சு


கே பாக்யராஜ் இயக்கம். ஏவிஎம் தயாரிப்பு. கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கற்பகம் என்னும் படத்தின் நாட்டில் இருந்து டெவலப் செய்யப்பட்ட படம். பாக்யராஜ் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் நன்கு மெருகேற்றியிருந்தார். ஊர்வசி அறிமுகம். வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் என்றாலே மற்றவர்கள் வில்லங்கமாய் பார்க்கும் அளவுக்கு ஒரு காட்சியை அமைத்திருந்தார். முதியோர் கல்விக்கு கவர்ச்சி டீச்சர், சிறுபையன்களின் குறும்புகள் என பாக்யராஜ் டச்சுடன் அமைந்த படம். தவக்களை இந்த படத்தில் அறிமுகம். இந்தப் படத்தின் வெற்றியினால் பாக்யராஜின் அடுத்த படமான தாவணிக் கனவுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டது அப்போதைய தலைப்புச் செய்தி.

மலையூர் மம்பட்டியான்

இதற்க்கு முன் சரிதா நடிக்க அம்மா என்னும் சராசரி குடும்பப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜசேகர். அதற்க்கு எதிர்ப்பதமாக இந்த ராபின் ஹூட் டைப் கதையை அடுத்ததாக எடுத்தார், படம் பெரு வெற்றி. பெற்றோரைக் கொன்றவர்களை பழிவாங்கி, பின் காட்டில் மறைந்து வசதியானவர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் வேடத்தில் தியாகராஜன். அவரால் கடத்தப் பட்டு பின் அவரையே காதலிக்கும் வேடத்தில் சரிதா. இந்தப் படம் பின் ரஜினி நடிக்க கங்குவா என்னும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிக்க தமிழிலும் ரீமேக் செய்யப் படுகிறது. காட்டு வழி போற பொண்ணே, சின்னப் பொண்ணு சேலை, வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு போன்ற இளையராஜாவின் இனிமையான பாடல்கள் நிரம்பியது. எப்படி நாட்டாமை வெற்றிக்குப் பின் கே எஸ் ரவிகுமாருக்கு ரஜினி,கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததோ அதுபோல ராஜசேகருக்கு இப்பட வெற்றிக்குப் பின் அந்த வாய்ப்பு கிடைத்தது.


மண்வாசனை


பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி அறிமுகமான படம். தென் மாவட்டங்களில் குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் ஈகோ சிக்கல்களை வைத்து எடுக்கப்பட்ட படம். மாடு பிடித்தல், பந்தயம், முறை மாப்பிள்ளை என பலமுறை பார்த்த விஷயங்கள்தான் என்றாலும் இளையராஜாவின் இசை, யதார்த்தமான காட்சி அமைப்புகள் போன்றவற்றால் வெற்றியடைந்த படம்.

உயிருள்ள வரை உஷா

தற்போது சீரியல்களில் நடித்து வரும் கங்கா, நளினி ஆகியோர் அறிமுகமான படம். அதைவிட முந்தைய படங்களில் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டிய டி ராஜேந்தர் குறிப்பிடத்தக்க செயின் ஜெயபால் என்னும் வேடத்தில் நடித்து அடுக்கு மொழி பேசிய படம். காதலியின் அண்ணன் வசதியான முரடன். காதலுக்கு உதவும் காதல் தோல்வி அடைந்த் ஒருவன் என்னும் சாதாரணமான கதை. ஆனால் பாடல்களால் பெரிய வெற்றியைப் பெற்றது. வாடா என் மச்சி வாழக்காய் பச்சி போன்ற பன்ச் டயலாக்குகள் நிறைந்த படம். டீ ஆரின் தங்கைக்கோர் கீதமும் இதே ஆண்டு வெளியானது.

உருவங்கள் மாறலாம்

சிவாஜி,ரஜினி,கமல் இணைந்து நடித்த படம். ஒய் ஜி மகேந்திரா தீவிர கடவுள் பக்தர். கடவுளான சிவாஜி அவருக்கு பின் நடக்கப் போவதை யெல்லாம் சொல்லி அருள் பாலிக்கிறார். பின்னர் ஒய் ஜி மகன் இறந்து விடுவான் என அருள் வாக்கு சொன்னதும் கடவுளுக்கு எதிராக மாறுகிறார் ஒய் ஜி. கடவுள் ரஜினி, கமல் வேடங்களிலும் காட்சி தந்தார் இந்தப் படத்தில். ஆழ்வார்பேட்டை ஆண்டவாக்கு முதல்படி இதுதானோ என்னவோ?

பொய்க்கால் குதிரை

கவிஞர் வாலி முக்கிய வேடத்தில் நடித்த படம். கமல்ஹாசனுக்கு போட்டோ பிரேமுக்குள் இருந்து பேசும் பாத்திரம். வாலி கதாநாயகியின் தந்தை. நாயகனுக்கும் வாலிக்கும் ஒரு பந்தயம். என்ன தகிடுதத்தம் செய்தாவது உன் மகளை காதலித்து காட்டுகிறேன், ஆனால் உன் மகளிடம் அதை சொல்லக்கூடாது என சவால் விடுகிறான் நாயகன். வாலியும் சம்மதிக்கிறார். தொடரும் சம்பவங்கள் பாலசந்தரின் கைவண்ணத்தில் நம்மை கவலை மறந்து சிரிக்க வைக்கக் கூடியவை. கதைக் களம் பெரும்பாலும் நாயகனின் நண்பனான ரவீந்திரனின் சிகை அலங்கார நிலையத்திலேயே இயங்கும். ரவீந்திரன் கமல் ரசிகன் ஆனதால் அங்கே கமலின் போட்டோ மாட்டப்பட்டிருக்கும். சிச்சுவேஷனுக்கு ஏற்ப கமல் உயிர்பெற்று கமெண்டுகளை அள்ளி வீசுவார். வழக்கப் போல் கடைசியில் சுபம்.

ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது

மௌலி இயக்கிய படம். இதன் பின்னர் சில படங்களை இங்கே இயக்கினாலும் பின்னர் தெலுங்கு பட உலகத்திற்க்கு சென்று வெற்றி பெற்றார். அங்கே அஸ்வினி நாச்சப்பாவை வைத்தும் சில படங்கள் இயக்கினார். விட்ட குறை தொட்ட குறையாக இங்கே அவ்வப்போது தலைகாட்டி நள தமயந்தி, பம்மல் கே சம்பந்தம் என தன் பணியை தொடருகிறார்.

இளமை காலங்கள்

மோகன், சசிகலா நடிக்க மணிவண்ணன் இயக்கிய படம். தண்ணீரில் மூள்காது காற்றுள்ள பந்து என கே ஜே யேசுதாஸ் பாட அவரை பலமுறை திருத்தினாராம் வைரமுத்து. ஜேசுதாஸ் கோபப்பட தமிழ் மூழ்கி விடக்கூடாது என விளக்கமளித்தாராம் கவிஞர். ஆனால் உதித் நாராயணன் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் பெரியம்மா (பிரியமான) பெண்ணை ரசிக்கலாம் என பாடிய போது தலைக்கு மேலே போயாச்சு இனி ஜான் போனா என்ன முழம் போனா என்ன என்று விட்டு விட்டார்.

தோடிராகம்

மியுசிக்கல் சூப்பர் மார்க்கட் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த படம். ஜனரஞ்சகமாக தனக்கு இசையமைக்கத் தெரியும் என காட்ட அவர் போட்ட பாடல் கொட்டாம் பட்டி ரோட்டிலே ஹே ஹே குட்டி போற ஷோக்கிலே ஹே ஹே. படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறந்து போனாலும் பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது.

டௌரி கல்யாணம்

ஒரு பெண்ணின் திருமணத்துக்கு என்னென்ன செலவுகள் ஆகும் என கேண்டிட் கேமெரா போல் பெரும்பகுதி எடுக்கப்பட்ட படம். கல்யாண மண்டபத்தில் சாப்பிடுவதற்க்காக உறவினர் என பொய் சொல்லி இருக்கிற எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டு செய்வார் டெல்லி கணேஷ். பின் உண்மை தெரிந்த உடன் அவரை சாப்பிட விடாமல் வெளியேற்றுவார்கள், எவ்வளவோ செலவு பண்ணி கல்யாணம் செய்பவர்கள். இந்தப் படத்தில் டெல்லி கணேஷின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். விசுவின் கம்பெனி நடிகர்கள் தங்கள் பங்கிற்க்கு வழக்கம் போல் நடித்த படம்.

சிவாஜி கணேசன்

சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய படங்கள் நல்ல வெற்றியும், மிருதங்க சக்கரவர்த்தி ஓரளவு வெற்றியும், நீதிபதி முதலுக்கு மோசமில்லாமலும் போனது

ரஜினிகாந்த்

அடுத்த வாரிசு, தங்கமகன், பாயும்புலி,தாய் வீடு,துடிக்கும் கரங்கள் போன்ற டிரேட் மார்க் மசாலா படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.

கமல்ஹாசன்

சட்டம், தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்கள் வெற்றி

விஜயகாந்த்

பி எஸ் வீரப்பா தயாரித்த சாட்சி படத்தின் மூலம் சரிந்து கிடந்த விஜயகாந்தின் மார்க்கட் நிமிர்ந்தது.

பிரபு

முந்தைய ஆண்டில் அறிமுகமான பிரபு தன் தந்தையுடன் இணைந்து சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி,நீதிபதி போன்ற படங்களிலும், சூரக்கோட்டை சிங்கக் குட்டி, முத்து எங்கள் சொத்து, ராகங்கள் மாறுவதில்லை ஆகிய படங்களில் தனி ஹீரோவாகவும் நடித்தார்.


சிவகுமார்

அப்பாவி பணக்கார வாலிபனாக சாட்டை இல்லாத பம்பரம் படத்திலும், போலிஸ் இன்ஸ்பெக்டராக தங்கைக்கோர் கீதம் படத்திலும், இன்று நீ நாளை நான் படத்திலும் நடித்தார்.

சில்க்

முன்னர் குறிப்பிட்ட படங்கள் தவிர, சூரக் கோட்டை சிங்கக் குட்டியில் பிரபுவுக்கு ஜோடியாகவும், அடுத்த வாரிசு, பாயும் புலி படங்களில் கிட்டத்தட்ட ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார்.