September 20, 2008

மறக்கப்பட்ட இயக்குனர் கே ரங்கராஜன்

80 களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர்களில் இவரும் முக்கியமானவர். இவரின் முக்கிய படங்கள் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளிவந்தன. குடும்ப உறவுகளை மையப்படுத்தி, இனிமையான பாடல்கள்,நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இவரது படங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றன. பெரும்பாலும் உ என்ற எழுத்தில் இவரது படங்கள் தொடங்கும்.

உதயகீதம்

இளையராஜாவின் 300 ஆவது படம். மோகன்,ஆனந்த்பாபு,ரேவதி,லட்சுமி மற்றும் கவுண்டமணி நடித்தது. சகோதரனின் கொலைக்கு பழிவாங்க நினைக்கும் பெண், நிரபராதி, சிறை அதிகாரியாக நிரபராதியின் தாயார் என அமைந்த கதை. போலிச்சாமியார்,சிறைக் கைதி என பல கெட்டப்புகளில் கவுண்டமணி கலக்கிய படம். நான் சிகப்பு மனிதன், காக்கிச்சட்டை போன்ற படங்களுடன் வெளியாகி வெற்றி பெற்ற படம். தேனே தென்பான்டி, மானே தேனே, என்னோடு பாட்டு பாடுங்கள், உதய கீதம் பாடுவேன், பாடு நிலாவே என தேனான பாடல்கள் நிறைந்தது.


உயிரே உனக்காக

பியாரிலால் இசையில் மோகன்,நதியா, சுஜாதா,மீசை முருகேஷ், விஜயகுமார் நடிக்க உருவானது. இதை ரோமன் ஹாலிடே படத்தின் தழுவல் என்றும் கூறுவார்கள். கட்டுப்பாடுகள் பிடிக்காத ராஜ வம்சப்பெண் அங்கிருந்து தப்பி ஒரு சிற்றூரில், நடுத்தர குடும்பத்தில் அடைக்கலம் புகுதலும், அதன் தொடர்ச்சியும் என கதை. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க என்று தொடங்கி நதியா பாடுவதாக அமைந்த பாடல் ஒன்றும் மெல்லப் போடு மெல்லப் போடு என்று ஆரம்பிக்கும் குடும்ப கலாட்டா பாடலும் அமைந்தது.


உன்னை நான் சந்தித்தேன்

சிவகுமார், சுரேஷ்,ரேவதி,சுஜாதா நடித்தது. இதில் கவுண்டமனியும் உண்டு. சிவகுமார் கல்லூரி ஆசிரியர், அவரது பழைய காதலியாக ரேவதியின் தாய் சுஜாதா, பின்னர் அவர்கள் சந்திக்கையில் ஏற்படும் நிகழ்வுகள் என செல்லும் கதை. ஏ ஐ லவ் யூ என்னும் பாடல் இடம்பெற்றது (இளையராஜா ஏராளமான அருமையான பாடல்களை கொடுத்துவிட்டார், அவற்றுக்கு ஏற்ற அட்ஜெக்டிவ்கள் என்னிடம் குறைவு. எப்படி வேறுபடுத்தி காட்டுவேன்? எல்லாவற்றுக்கும் இனிமையான,தேனான என்று போட வேண்டியதுதான்)

உனக்காகவே வாழ்கிறேன்
சிவகுமார், நதியா நடித்தது. இளையராஜா இசை, பெரிய வெற்றி இல்லை.

இதுபோக கற்பூர தீபம், கீதாஞ்சலி, கிராமத்து மின்னல், பாடு நிலாவே, போன்ற படங்களையும் இயக்கினார். பெரும்பாலும் இவர் படங்களில் சிவகுமார்,மோகன்,ரேவதி,நதியா,லட்சுமி,சுஜாதா போன்றோரே நடித்தனர்.

மாறிவரும் ரசனையை கருத்தில் கொள்ளாது ஒரே பாணியில் படமெடுத்து தங்கள் கடைசி படங்களில் தோல்வி கண்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

வித்தியாசமான பாத்திரப்படைப்புகள் மற்றும் மாறுபட்ட கதைக்களன் இல்லாமை, இவரின் ஆஸ்தான நடிகர்களின் சரிவு போன்றவற்றால் இவர் துறையில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.

அண்ணா ஒருமுறை சொன்னார் "ஆதரவற்ற பெண்களுக்கு தமிழ்நாட்டில் இட்லிக்கடை தானே தாசில்தார் உத்தியோகம்" என்று. அதைப்போல இன்று வாய்ப்பில்லா இயக்குனர்களுக்கு தொலைக்காட்சி.

16 comments:

narsim said...

உதயகீதம்.. மிக அருமையான படைப்பு..(கமல் உதவி செய்கிறேன் என்று "மகராசன்" நடித்து கொடுத்தது இவருக்குதானா??‍ பாவ‌ம்!)



அச‌த்துகிறீர்க‌ள் முர‌ளி க‌ண்ண‌ன்.. சினிமா ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ உங்க‌ள் அனைத்து ப‌திவுக‌ளையும் தொகுத்தால் விஜ‌ய் டி.வி 4 வார‌த்திற்கு ந‌ல்ல‌ நிக‌ழ்ச்சியாக‌ ந‌ட‌த்திவிடுவார்க‌ள்..

அச‌த்துங்க‌ள்!!

ந‌ர்சிம்

கானா பிரபா said...

//நானே ராஜா நானே மந்திரி
விஜயகாந்தின் நல்ல நகைச்சுவை படம். இன்னும் பலராலும் நினைக்கப்படுவது//

இந்தப் படம் இவரின் படம் இல்லை, ஆர் சுந்தரராஜனின் அசிஸ்டெண்ட் பாலு ஆனந்த் எடுத்தது.


கே ரங்கராஜனின் இன்னும் நல்ல படங்கள்

கீதாஞ்சலி, கிராமத்து மின்னல், பாடு நிலாவே, நினைவே ஒரு சங்கீதம்

முரளிகண்ணன் said...

ஆதரவுக்கு நன்றி நர்சிம்

முரளிகண்ணன் said...

\\இந்தப் படம் இவரின் படம் இல்லை, ஆர் சுந்தரராஜனின் அசிஸ்டெண்ட் பாலு ஆனந்த் எடுத்தது\\
கானா பிரபா தகவலுக்கு மிக நன்றி. திருத்திக் கொள்கிறேன்.


\\கே ரங்கராஜனின் இன்னும் நல்ல படங்கள்

கீதாஞ்சலி, கிராமத்து மின்னல், பாடு நிலாவே, நினைவே ஒரு சங்கீதம்\\

உங்கள் தகவல்களை பதிவில் இணைத்துக்கொள்கிறேன்

நல்லதந்தி said...

நினைவே ஒரு சங்கீதம் படத்தில் ராசையா! ராக ரகளையே நடத்தியிருப்பார்!.

புருனோ Bruno said...

இளையராஜாவின் 500, 600, 700 படங்கள் என்னவென்று தெரியுமா

அஞ்சலி, தளபதி எல்லாம் எத்தனையாவது

புருனோ Bruno said...

இவரை பற்றி இது வரை எனக்கு தெரியாத தகவல்கள்

நன்றி மு.க

initial நல்லாயிருக்கா :) :)

முரளிகண்ணன் said...

கமல் உதவியது ஜி.என். ரங்கராஜனுக்கே.

தங்ககம்பி, வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்

வெட்டிப்பயல் said...

//அண்ணா ஒருமுறை சொன்னார் "ஆதரவற்ற பெண்களுக்கு தமிழ்நாட்டில் இட்லிக்கடை தானே தாசில்தார் உத்தியோகம்" என்று.

இது பராசக்தில வர டயலாக்காச்சே... அண்ணா சொன்னதை கலைஞர் பயன்படுத்திக்கிட்டாரா?

புதுகை.அப்துல்லா said...

அண்ணா ஒருமுறை சொன்னார் "ஆதரவற்ற பெண்களுக்கு தமிழ்நாட்டில் இட்லிக்கடை தானே தாசில்தார் உத்தியோகம்" என்று. அதைப்போல இன்று வாய்ப்பில்லா இயக்குனர்களுக்கு தொலைக்காட்சி
//

இந்த வரிகளைப் படித்து இரசித்துச் சிரித்தேன் :))

anujanya said...

மீண்டும் தகவல்கள் நிறைந்த பதிவு. தான் இருப்பது தெரியாமலே இயக்கும் பல இயக்குனர்களில் அவரும் ஒருவர் போலும்.

என்னதான் ரசனைகள் மாறுபடும் என்றாலும், எனக்குப் பிடித்த, உங்கள் பதிவில் இல்லாத பாடல்கள்:

உதய கீதம் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

உன்னை நான் சந்தித்தேன் : தேவன் தந்த வீணை

அவரது சரிவுக்கு நீங்கள் தந்த காரணங்கள் கச்சிதம். கீதாஞ்சலி இளையராஜாவின் தயாரிப்பா? நல்ல பாடல்கள் இருந்ததாக ஞாபகம்.

அனுஜன்யா

rapp said...

//உயிரே உனக்காக
//
இந்தப் படத்துல ஒரு குடும்பப் பாட்டு இருக்கே, அது இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்குங்க. ஒலியும் ஒளியும்ல அந்தப் பாட்டு போடுவாங்க. இப்போ ராஜ் டிஜிட்டலில் இந்தப் படத்தையும் பாட்டையும் ஒளிபரப்புறாங்க.

rapp said...

//பழைய காதலியாக ரேவதியின் தாய் சுஜாதா//
அவங்க அந்தப் படத்தில் மனைவியா வந்தாங்கன்னு நினைக்கறேன்.

rapp said...

//இளையராஜா ஏராளமான அருமையான பாடல்களை கொடுத்துவிட்டார்//

ஆஹா ரொம்ப ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க. அவரோட எண்பதுகளின் பாடல்களைக் கேட்டால் அதுதான் சொர்கம். அதற்கப்புறமும் அவர் இசையமைப்பில் நல்ல பாடல்கள் எக்கச்சக்கமா வந்திருந்தாலும், எண்பதுகளின் பாடல்கள் அவரோட பொற்காலப் பாடல்கள்னு சொல்லணும்:):):)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வெட்டிபயல்,புதுகை அப்துல்லா,அனுஜன்யா,ராப்

vaasu said...

மீசை முருகேஷ் பற்றி ஒர் பதிவு போடுங்கள்...