February 07, 2012

தமிழ்நாட்டு கண்டக்டர்கள்

பேருந்துகளில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து 25 வருடங்களாகிறது. எத்தனை விதமான கண்டக்டர்கள்! இடத்தோல் பட்டையிலே தோல் பையைத் தொங்கவிட்டு, அக்கையிலேயே எல்லா டிக்கட் புத்தகங்களையும் அடுக்கிக் கொண்டு விரலிடுக்கில் ஐந்து, பத்துக்களை மடித்து வைத்துக் கொண்டு, வலக்கையில் நீள நகங்களை வளர்த்துக் கொண்டு வாயிலேயே விசில் கொடுக்கும் மதுரை ஏரியா கண்டக்டர்கள், நீள் செவ்வக அட்டையில் ரேட் வாரியாக டிக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டு மெதுவாக இயங்கும் நாஞ்சில் ஏரியா கண்டக்டர்கள், மரியாதையாக நடத்தி மணி அடித்து பஸ்ஸை வழிநடத்தும் கொங்கு ஏரியா கண்டக்டர்கள், பில்கேட்ஸே ஏறினாலும் பிச்சைக்காரனைப் போல் மதிக்கும் சென்னை கண்டக்டர்கள் என டவுன் பஸ்களில் மட்டும் எத்தனை வகை?

மினி பஸ், ஷேர் ஆட்டோ/டாடா மேஜிக் கண்டக்டர்களில் இருந்து தொலைதூர பேருந்து கண்டக்டர்கள் வரை பல ஜாதியினர் இருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் இரண்டே பிரிவுகளில் தான் அடங்குவார்கள். கவர்மெண்ட், பிரைவேட்.

கவர்மெண்ட் கண்டக்டர்கள் என்றால், எப்படியாவது சாம, பேத, தண்டங்களைப் பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழகங்களில் நுழைந்து விடுபவர்கள். அவ்வளவுதான். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதிதான். இவர்களுக்கும் பிரைவேட் கண்டக்டர்களுக்கும் திறமை அளவில் பெரிய வேறுபாடு இருக்காது. சொல்லப்போனால் பிரைவேட் கண்டக்டர்களின் ஸ்மார்ட்னெஸ் இவர்களிடம் அறவே இருக்காது.

அரசு கண்டக்டர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது அந்த வக்காபுலரி ஒரு இருபது சொச்ச வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். நைட் டூட்டி, சொச்சக்காசு, எல்பிஎஃப், சிஐடியு, ஐஎண்டியூசி, பி எம், கலெக்‌ஷன் பேட்டா, செக்கரு, போனஸ், டொச்சு ரூட்டு போன்றவையே அவை.

இன்னொரு வகையான பிரைவேட்டில் தான் மினி பஸ் கண்டக்டர் முதல் ஆம்னி பஸ் கண்டக்டர் வரை அடங்குவார்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் எந்த வாகனமாய் இருந்தாலும் இவர்களின் சம்பளத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மாவுக்கேத்த பனியாரம் என்பது போல கலெக்சனுக்கு ஏற்பவே இவர்கள் சம்பளம்.

இவர்களின் கனவே எப்படியாவது அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து விட வேண்டும் என்பது தான்.

இந்தக் கூட்டத்தில் தான் பல வகையான பர்சனாலிட்டிகளைப் பார்க்கலாம். இசை அமைத்தவர் கூட மறந்து விட்ட பாடல்களை ஞாபகமாக வைத்து, சிச்சுவேஷன் பாடல் கேசட் தயாரிப்பவர்கள், காக்கியாக இருந்தாலும் பூட் கட், ஷார்ட் குர்தா என டிரெண்டுக்கு ஏற்ப தைத்துப் போடுபவர்கள், வாகனத்தில் ரெகுலராக வரும் கல்யாணமாகாத பெண்களுக்கு இடம் போட்டு மனதில் இடம் பிடிப்பவர்கள், கூட்டம் எவ்வளவு இருந்தாலும், பாடல் எவ்வளவு சத்தமாக ஒலித்தாலும், அரை டிக்கட் பிரச்சினை, லக்கேஜ் பிரச்சினை என எல்லாவற்றையும் சமாளித்து கடைசி டிக்கட் கிழித்த உடனேயே அசிஸ்டெண்ட் கண்டக்டரிம் கணக்கை சொல்லும் அளவுக்கு தசாவதானிகள் என பல வகை உண்டு.

70-90 களில் கண்டக்டர் வேலைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தந்தை, உறவினர்களைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருந்தார்கள். பி யூ சி யோ, பத்தாம் வகுப்போ பெயிலாகியோ, நூல் பிடித்து பாஸ் செய்தவர்களுக்கோ போக்கிடம் போக்குவரத்து துறையாகத்தான் இருந்தது. 90களுக்குப் பின் கண்டக்டராக வந்தவர்களை குடும்ப வறுமையே உள்ளே தள்ளியிருக்கும். இப்போது கூட புதிதாக எந்த வாகனத்திலாவது கண்டக்டராக ஏறுபவர்களின் பின்னால் வசதிக் குறைவே முக்கிய காரணியாக இருக்கிறது.

இக்கால இளைஞர்களின் விருப்பத் தொழில்களில் கண்டக்டர் பணிக்கு கடைசி வரிசையில் தான் இடம் தான் இருக்கிறது. கவர்மெண்டில் கிடைக்காட்டி என்ன பண்ணுவது? என்பதே இவர்களின் முன்னால் இருக்கும் கேள்விக்குறி.

ட்ரைவராக வருபவர்களுக்கு இந்த பிரச்சினை பெரிய அளவில் இல்லை. நல்ல தொழில் தெரிந்தவர்களுக்கு வழக்கமான நேரம் போக, டூரிஸ்ட் பஸ் ஓட்டுதல், நீண்ட தூரப் பயணங்களுக்கு இணையாகப் போகுதல் என பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். 60 வயதானால் கூட பொறியியல் கல்லூரிகள், பள்ளிகளின் வாகன ஓட்டுநராக இருந்து சமாளிக்குமளவுக்கு சம்பளம் பெறலாம்.

72க்குப் பின் தான் இந்த கவர்மெண்ட், பிரைவேட் பிரிவு. அப்போதைய காங்கிரஸுக்கு ரத்தம் பாய்ச்சியவர்கள் பண்ணையார்களும், பெரும் பஸ் முதலாளிகளான மதுரை டி வி எஸ், பொள்ளாச்சி மகாலிங்கம், திருச்சி, தஞ்சையில் கோலோச்சிய ராமன், சக்தி விலாஸ் போன்றவர்களும்தான். காங்கிரஸின் பெரும்பாலான எம் எல் ஏக்கள் பஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் தான். திமுகவின் 67 தேர்தல் அறிக்கையில் ரூபாய்க்கு படி அரிசி போன்ற கவர்ச்சிகர அம்சங்கள் இருந்தாலும், பஸ்களை அரசுடையாக்குவோம் என்ற கோஷமும் இருந்தது. எம்ஜியார் பிரச்சாரம் என்ற பிரம்மாஸ்திரம், இந்தி எதிர்ப்பால் மாணவர் ஆதரவு என்ற நாகாஸ்திரம் ஆகியவையே அண்ணாவுக்கு போதுமானதாக இருந்தது அந்த தேர்தலில்.

அம்புறாத்துணியில் தூங்கிக் கொண்டு இருந்த பஸ் அரசுடமையாக்கம் என்ற அஸ்திரத்துக்கு வேலை கொடுத்தவர் கருணாநிதிதான். 67 அமைச்சரவையில் போக்குவரத்து, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவியேற்று அண்ணா மறைவுக்குப் பின் 69ல் முதல்வரான பின் காங்கிரஸின் பொருளாதார மூலத்தை அசைக்க அதை எய்தார்.

50 பேருந்துகளை மட்டும் முதலாளிகள் வைத்துக் கொள்ளலாம், அதற்கு மேல் உள்ளவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற ஆணையால் வெறுப்புற்ற மதுரை டி வி எஸ் நிர்வாகம், எனக்கு பஸ்ஸே வேணாம், பார்சல் சர்வீஸ் நடத்திக்கிறேன் என்று மொத்தத்தையும் ஒப்படைத்துவிட்டது.

இந்த நிகழ்வு தமிழகத்தில் ஓரளவுக்கு சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்த ஒன்று. தனியார் வேலைகள் குறைவாகவும், மிக மிக குறைவான சம்பளத்துடனும் இருந்ததால் 80,90 களில் ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் மாப்பிள்ளைகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.

91-96 ஜெயலலிதா ஆட்சியில் ஒருமுறை பஸ் கட்டணம் உயர்த்தப் பட்டது. அப்போதைய நிதி அமைச்சரான நெடுஞ்செழியன் நிருபர்களிடம் பேசும் போது சொன்னார், கோயம்புத்தூர்ல நாலு பஸ் வச்சிருக்கவங்க நாலஞ்சு வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுறாங்க. இவ்வளோ பஸ் வச்சுக்கிட்டு நாம நஷ்டத்துக்கு ஓட்டுறோம் என்று.

கார்பொரேஷன் கண்டக்டர்கள் நீ ஏறினா என்ன, ஏறாட்டி என்ன என்ற முக பாவத்துடனே பெரும்பாலும் காணப்படுவார்கள். காரணம் அவர்களுக்கு கிடைக்கும் கலெக்‌ஷன் பேட்டா, மற்ற அலவன்ஸுகளுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைவுதான்.

ஆனால் தனியார் பேருந்துகளிலோ, சம்பளம் என்பது பேருக்குத்தான். கலெக்‌ஷன் பேட்டாதான் கண்டக்டர்களின் முக்கிய வருமானம். அதனால் அவர்கள், ஆள் ஏற்றுவது, டயத்தை நெருக்கி வண்டி எடுப்பது என்று சகல வித்தைகளையும் காட்ட வேண்டியுள்ளது.

ஆனால் இவற்றை வைத்து கார்பொரேஷனின் நஷ்டத்திற்கு கண்டக்டர்கள் தான் காரணம் என்ற முடிவுக்கு யாரும் வர வேண்டாம். அவர்களின் பங்கு இதில் ஓரளவே.

தற்போது அதிக அளவில் டிக்கெட் விலை ஏறியபோதும், ஜெயவிலாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், பெரிதும் விலை ஏற்றவில்லை. சொல்லப் போனால் இந்த ரேட்டுக்கு வண்டி ஓட்டினால் திவாலாகிப் போய்விடுவோம், நான் எங்கே போவது என ஜெயலலிதா மடிப்பிச்சை கேட்ட சமயத்தில் தனியார் பஸ் முதலாளிகள் எல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தனியார் முதலாளிகள் எல்லாம் ரேடியல் டயர் போட்டு, டீசல் உபயோகத்தை குறைக்கிறார்கள். ஆனால் கார்பொரேஷனில் கமிஷன் காரணமாக தொடர்ந்து டயர்களுக்கு ரீ பட்டன் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எஞ்சின் ஆயில் வாங்குவதில் இருந்து, சகல உதிரிப்பாகங்களுக்கும் கமிஷன். இதில் இரண்டு வண்டிகளுக்கு இடையே பாகங்களை மாற்றிப் போட்டு இரண்டு செட் உதிரிப்பாகங்கள் வாங்கியதாக மோசடி பில்கள் வேறு.

போக்குவரத்து விஜிலன்ஸ் அதிகாரி பதவியிடமானது, பழிவாங்கப்படும் இடமாகப் பார்க்கப்படுவதால் அங்கே வருபவர்களும் டீமாரலைஸ் ஆகி விடுகிறார்கள். பஸ் டி ஜி பி என்று திரைப்படங்களில் கிண்டல் செய்யப்படும் அளவுக்கு அந்தப் பதவி இருக்கிறது.

பஸ் இரவு நேரங்களில் ஓட ஜீவாதாரமானது ஹெட் லைட். அதைக்கூட மாற்றுவதில்லை நம் ஆட்கள். எனவே பெரும்பாலான ட்ரைவர்கள், தனியே பல்பு வாங்கி வைத்துள்ளார்கள். இரவு ட்ரிப் எடுக்கப் போகும்முன் அதை மாட்டி விட்டு, இறங்கும் போது கழட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

ஆட்சியில் உள்ள தொழிற்சங்கங்க நிர்வாகிகள் வேலை செய்யத் தேவையில்லை என்ற உயரிய வழக்கமும் இங்கேயிருக்கிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு டூட்டி போடும் அதிகாரமும் இவர்கள் கையில் உள்ளதால் எந்த சங்கத்திடமாவது அடைக்கலம் ஆக வேண்டிய கட்டாயமும் உண்டு.

இததனை குறைகள் இருந்தாலும் குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஏழை மாணவர் இலவச பஸ் பாஸ், அரசு சம்பளத்தினால் பல குடும்பங்களுக்கு ஏற்பட்ட உயர்வு என்ற அம்சங்களும் உள்ளன. முழுக்க முழுக்க போக்குவரத்து தனியாரிடமே இருந்தால் இவையெல்லாம் கனவாகவே இருக்கும்

இந்தக் குறையெல்லாம் நல்ல அக்கவுண்டபிலிடி உள்ள சிஸ்டத்தாலும், கடுமையான விஜிலன்ஸ் முறை மூலமும் சரி செய்யக்கூடியவையே.

சில மாதங்களுக்கு முன் பெரும் மனக் கிலேசத்தில் இருந்த நாளொன்றின் இரவில் அதை அதிகப்படுத்தும் விதமாக நெருங்கிய உறவினரின் இறப்புச் செய்தி வேறு வந்தது. தனியார் பேருந்தில் பயணிக்கையில் முதல் 15 நிமிடங்கள் ஒலித்த பாடல்களை சரியாக கவனிக்கவில்லை. பின்னர் தான் அவை ஒரே கருத்துப் பிண்ணனியில் அமைந்த பல்வேறு காலகட்டத்தில் வெளியான பாடல்கள் என்று உணர்ந்தேன். இரண்டு மணி நேரப் பயணத்தில் சுமார் 20 பாடல்கள். காலை முதல் இருந்த மனச் சோர்வு நீங்கி ஒரு தெளிவான மன நிலை பேருந்தை விட்டு இறங்கும் போது கிடைத்தது.

அந்த கண்டக்டரைப் பார்த்தேன். பெரும்பாலான கண்டக்டர்களைப் போலவே பிளஸ் டூ பெயிலாகி, வேன், மினி பஸ் என ஒரு சுற்று சுற்றி பின் இன் ஆடி ஓடி தனியார் பேருந்தில் இடம் பிடித்து, லைசென்ஸ் எடுத்து வைத்து கார்பொரேஷனுக்கும், கல்யாணத்துக்கும் காத்திருக்கும் வயதில் இருந்தார். அடுத்த போஸ்டிங்கின் போது ஏதாவது உப தெய்வத்துக்கு சில லட்சங்கள் கொடுத்து, அமைச்சர் அருள் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவராய் தோன்றினார்.

அவருக்கு அரசு கழகத்தில் வேலை கிடைக்காவிட்டால்? 50 வயது வரை அவர்கள் பாஷையில் சொன்னால், ரூட்டில் ஓடுவார். பின்னர் சரியா ஆள் ஏத்தத் தெரியல, வேகம் பத்தலை என கமெண்டுகள் வரும். ஒரு சுபயோகமில்லாத தினத்தில் அவரை கழட்டி விடுவார்கள். ஒரு நாளில் பஸ்ஸிற்குள்ளேயே 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடந்த அவர் கால்கள் எங்காவது அடைக்கலம் புகும்.

கிடைத்து விட்டால், மாதம் தவறாத சம்பளம், பயணப்படி, பஞ்சப் படி, ஸ்டிரைக் செய்யாமலே கிடைக்கும் போனஸ், போதும் போதும் எனும் அளவுக்கு கிடைக்கும் ஓய்வு, கல்யாண மார்க்கட்டில் கௌரவமான இடம், பிள்ளைக்கு கூட ஐ ஆர் டி டி யில் இட ஒதுக்கீடு, தமிழகம் முழுக்க குடும்பமே இலவசமாக பயணிக்கும் வசதி, சென்னையில் வசிக்கும் பாவப்பட்டர்கள் பொங்கல், தீபாவளிக்கு வர செய்யும் டிக்கட் ரெக்கமண்டேஷன்கள்.

சரியான பூசாரியைப் பிடிக்காததும், ஓரளவு வசதி இல்லாததும் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை வாழ்வில் ஏற்படுத்தி விடுகிறது



பண்புடன் இணைய இதழில் வெளியான கட்டுரை

நன்றி

பிப்ரவரி 1 இதழின் பொறுப்பாசிரியர் கார்த்திகை பாண்டியன்

பண்புடன் இதழ் ஆசிரியர் குழு

13 comments:

துளசி கோபால் said...

ஒரு காலத்தில் டிவிஎஸ் பஸ்களில் பயணம் போனது நினைவுக்கு வருது.

அருமையான கண்டக்டர்களும் ட்ரைவருமாக இருப்பார்கள் எனக்காக அப்பப்போ வண்டியை அங்கங்கே ரெண்டு நிமிசம் நிறுத்தவும் செய்வார்கள். பயணம் முழுசும் வாந்தி எடுப்பேனே!

சென்னை வாழ்க்கையில் ஒரு கண்டக்டர் (உண்மையான) செந்தமிழில் பேசுவார். அவருக்கு ஈடாக நாங்களும் நடத்துனரே நிறுத்துங்கள். நிறுத்தம் வந்துவிட்டது என்று கலாய்ப்போம். (வயசு அப்படி....ஹிஹி)

அருமையான தகவல்கள் உள்ள கட்டுரை. ரசித்தேன்.

நாடோடி இலக்கியன் said...

கண்டக்டர்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் நல்ல படைப்பு.

இப்படியான கட்டுரைகளை ரசனையோடு எழுதும் உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் முரளி.

தமிழ்நாட்டு கண்டக்டர்கள்,பூவும் பூ சார் இடங்களும் அடுத்து?

முரளிகண்ணன் said...

நன்றி டீச்சர்


ஊக்கப்படுத்தலுக்கு நன்றி நாடோடி இலக்கியன்.

கோவி.கண்ணன் said...

கண்டக்டர் என்ற பதிவில் ரஜினி இல்லையேன்னு நினைச்சேன், பிறகு தலைப்பை மீண்டும் படிக்கையில் 'தமிழ்நாட்டு கண்டக்டர்கள்"

எங்க ஊரு பக்கம் ஓடிய சத்திவிலாஸ் பேருந்துகள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிங்க, சத்திவிலாஸ் ஏன் காணாமல் போச்சு என்றால்.......அதெல்லாம் பழைய புன்னகை அரசிக்குத்தான் தெரியும் என்கிறார்கள்

முரளிகண்ணன் said...

கோவிஜி :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான சப்ஜெக்ட், எல்லாருமே தினமும் பார்த்துட்டு இருக்க விஷயம்தான், ஆனால் யாருக்கும் தோனாதவை. ரொம்ப நேர்த்தியான கட்டுரை...!

CS. Mohan Kumar said...

Well written. Surprised how you know so many details. Any relative in transport division?

முரளிகண்ணன் said...

Thanks Ramasamy

Thanks Mohankumar

By observing when they were talk between them in tea shops and other public places &

conversed with some of the drivers and conductors while travelling

கோபிநாத் said...

நல்ல பகிர்வு அண்ணே ;-)

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

WordsBeyondBorders said...

உங்கள் அனுபவம் மற்றும் பஸ் கம்பெனிகள்/கண்டக்டர்கள் பற்றிய தகவல்களின் கோர்ப்பு மிக சுவாரஸ்யம்.

முரளிகண்ணன் said...

Thanks Words Beyond Borders

சாவி said...

அண்ணே, பண்புடன் இணையதளத்திலேயே படித்து விட்டேன். நன்றி.

சாவியின் தமிழ் சினிமா உலகம்

ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்