October 06, 2014

படையப்பா

படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது.

அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், குமுதம் அரசு பதிலில், அவர் எதையோ (கோட்டை) பிடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க, அவர் எதைப் பிடிக்கிறார் பாருங்கள் என்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எப்போது படம் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் அவர்களுக்கு.. 96ல் வெளியான முத்து மெகா ஹிட். ஆனால் அடுத்த படமான அருணாசலம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாங்கள் அப்போது அருப்புக்கோட்டையில் இருந்தோம். எங்கள் தெரு ஒரு ரஜினி கோட்டை. அதிலும் என் உயிர் நண்பன் ரமேஷ் பாபு ரஜினியை தெய்வமாகவே கொண்டாடுபவன். டிடியில் அண்ணாமலை போட்டபோது, சுத்த பத்தமாக குளித்து பட்டையடித்து, விளம்பரத்துக்கு கூட அசையாமல் அவன் படம் பார்த்ததைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறேன். அதற்குமுன் குறைந்தது 50 முறையாவது அந்தப் படத்தை அவன் பார்த்திருப்பான்.

அவனே ஆச்சரியப்படும் ரஜினி ரசிகன் ஒருவனும் அருப்புக்கோட்டையில் இருந்தான். முத்துக்குமார். அருணாச்சலம் படத்தை அந்தப் படம் ஓடிய 45 நாட்களும் குறைந்தது ஒரு ஷோவாவது பார்த்தவன். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னம்பலத்தின் பஞ்சு டயாலாக்கான “நாலு கொலை, ஏழு ……, பண்ணின அம்பலம், பொன்னம்பலம்” தைக்கூட மனப்பாடம் செய்தவன்.  அவனுக்கும் கூட அருணாசலம் பற்றிய அதிருப்தி இருந்தது. எனவே படையப்பாவை, பத்தாண்டு ஜெயிலில் இருந்தவன் ரிலீஸை எதிர்பார்ப்பதைவிட அதிகம் எதிர்பார்த்தான். படையப்பா பற்றி எந்த செய்தி எந்தப்பத்திரிக்கையில் வந்தாலும், அதை வாங்கிவிடுவான். பாடல்கள் வெளியான தினத்தன்று , தெருவையே அலறவிட்டார்கள் இருவரும் சேர்ந்து.

இந்நிலையில் என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக நாங்கள் கோவைக்கு குடிபெயர்ந்தோம். எங்கள் குடும்பம் அந்த நேரத்தில் சில பிரச்சினைகளால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வுற்று இருந்தது. செல்போன் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம். திடீரென்று ஒருநாள் ரமேஷும், முத்துக்குமாரும் என்னைப் பார்க்க வந்தார்கள். ரெண்டு மாசமாச்சு, பார்த்து அதான் வந்தோம் என்றார்கள். உண்மையிலேயே நான் அன்றிருந்த நிலைக்கு கடவுள்களே நேரில் வந்தது போல் இருந்தது. என் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக வர என்று அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆறுதலும் சொன்னார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் கிளம்புகிறோம், நாளன்னிக்கு படையப்பா ரிலீஸ் என்று சொன்னார்கள்,

என் தந்தை, இன்னும் நாலு நாள் இருந்திட்டுப் போங்கப்பா. இங்கயே படையப்பா பாருங்களேன் என்றார். மதுரை, திண்டுக்கல், விருதுநகரில் எல்லாம் தலைவர் படம் ரிலீஸைப் பார்த்திருக்கோம். கோயம்புத்தூர்ல பார்த்தது இல்லை, பார்த்துடுவோம் என அவர்களும் உற்சாகமானார்கள்.
கோவையில் ராகம் தியேட்டரிலும், நடிகை அம்பிகாவுக்கு ஒரு காலத்தில் சொந்தமாயிருந்த அம்பாலிகா காம்ப்ளக்ஸிலும் படம் வெளியானது. ஒரு பட்டாலியனே வந்து கியூவை மேனேஜ் செய்ய வேண்டியிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு படம் முதலில் பிடிக்கவில்லை. என்னடா இது பயங்கர பிற்போக்குத்தனமா இருக்கே என நினைத்தேன். ஆனால் 50 நாட்கள் ஆகியும் ராகம் தியேட்டரில் சனி, ஞாயிறுக்கு டிக்கட் வாங்குவது பெரிய விஷயமாக இருந்தது.

படையப்பா படத்தின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல என இன்றுவரைக்கும் அந்தப் படம் காட்டிக்கொண்டேயிருக்கிறது. சிவாஜி படம் ஓடி முடிந்த போது, கே எஸ் ரவிகுமாரிடம் அதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார், “உணமையில் படையப்பா படத்தை சிவாஜியை விட அதிகமானோர் பார்த்துள்ளார்கள். இது டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் பார்த்தால் தெரியும் என்றார்”. மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் கோவை புறநகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் நூறு நாட்களுக்கு பின்னர் படையப்பாவை திரையிட்டார்கள். இரண்டு வாரம் ஹவுஸ்புல். மூன்றாம் வார முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் நூறு பேருக்கு மேல் திரும்பினார்கள். என்னய்யா இந்தப் படம் இந்த ஓட்டம் ஓடுது என்று தியேட்டரைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் பேசிக்கொண்டதைப் பார்த்து, ஏரியா ரஜினி மன்ற நிர்வாகி, ஒரு மூட்டை மிளகாயை வாங்கி வந்து, நெருப்பில் போட்டு படத்திற்கு திருஷ்டி கழித்தார். ஏரியாவே கமறி விட்டது. அகில உலகிலேயே ஒரு திரைப்படத்திற்கு திருஷ்டி கழிக்கப்பட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.

அப்போது எங்கள் தெருவில் இருந்த சிலர், திருப்பதிக்கு போனார்கள். திரும்பிவந்த அவர்கள், இங்கதான் கூட்டம் அம்முதுன்னா, அங்க நரசிம்மான்னு டப் பண்ணியிருக்கான், அத விட கூட்டம் என்று சிலாகித்தார்கள். படையப்பா கூல் ட்ரிங்ஸ், படையப்பா சோப்பு என ஏராளமான லோக்கல் மார்க்கெட்டுகு தயாராகும் பொருட்கள், எல்லா காலேஜ் பங்சன்களிலும் மைம் பண்ணுபவர்கள், மாணவன் திருந்தி படிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதைக் குறிக்க போடும் “வெற்றிக் கொடு கட்டு” பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம். சன் குழுமத்திற்கு பெரும் செல்வத்தை கொடுத்த படையப்பா, அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நல்லதையே கொடுத்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழகம் முழுவதுமே ஒரு நல்ல வைப்ரேசனை ஏற்படுத்தியது என்றே சொல்லத் தோணுகிறது.

படம் வெளியாகி 60 நாட்கள் சென்றிருக்கலாம். என் அம்மாவின் அக்கா, அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். இருவரும் தற்போதைய தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் பெரியகுளத்தில் இருந்த ரஹீம் தியேட்டருக்கு வண்டி கட்டி சென்று படம் பார்த்தவர்கள், எம்ஜியார் மற்றும் சிவாஜியின் ரசிகைகள். அடுத்த காலகட்ட நடிகர்களில் ரஜினியை மட்டுமே அவர்களுக்குப் பிடிக்கும். அந்த வாரம் அவர்கள் இருவரையும் மாலைக்காட்சி படையப்பா படத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். லயித்து படம் பார்த்தார்கள். படம் முடிந்து தியேட்டர் அருகேயிருந்த மெஸ் ஒன்றிற்கு சாப்பிடப் போனோம். என் அம்மா “மொதோ பாட்டில பொண்ணு மாப்பிள்ளையும் கூடச் சேர்ந்து ஆடுறதுதான் பிடிக்கல. ஆனா படம் அப்பப்பா” என்று ஆரம்பித்தார். இருவரும் படத்தைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தனர். கேட்டுக் கொண்டிருந்த சர்வர், கெட்டிச் சட்னி, பொடி என சிறப்பாக கவனிக்கத் தொடங்கினார். எதிரில் ஒரு ஆட்டோக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுடனே வெளிவந்த அவரிடம், டாடாபேட் போகணும் என்றேன். 65 ரூபா வாங்குவேன், நீங்க 40 கொடுங்க, என்று சொன்னார்.


வீட்டிற்கு வந்தும் அவர்கள் சிலாகிப்பு நிற்கவில்லை. என் பெரியம்மா சில வருடங்கள் முன்புதான் கணவனை இழந்திருந்தார். சொத்து பிரச்சினை ஒன்றில் ஏமாற்றப்பட்டதாக/ஏமாந்ததாக நம்பும் குடும்பம். நம்ம சொத்து நம்மளைவிட்டுப் போகாது, பிள்ளைக கொண்டுவந்து சேர்த்திடும் என்று படையப்பாவை உதாரணமாக காட்டி பேசினார். நீ கவலைப் படாதடி, உன் பிள்ள இருக்கான், ரஜினி மாதிரி, அவன் பார்த்துக்கிடுவான் என்று தேத்தினார்.  அடடா நாம ரஜினி ரசிகனா இருந்திருக்கலாமே என என்னை இரண்டாவது முறையாக எண்ண வைத்தது என் அம்மாவின் முகத்தில் தோன்றிய நிம்மதி.

8 comments:

தமிழ் பையன் said...

சுவையான பதிவு. எப்போதும் போலவே மறந்தே போன பல நினைவுகளை (குமுதம் பதில்) சேர்த்து, சொந்த சரக்கையும் கலந்து ஒரு நல்ல காக்டெயில்.

முரளிகண்ணன் said...

நன்றி தமிழ்பையன்

Cable சங்கர் said...

வருத்தப்படாதீங்க தலைவரே.. ஒரு கமல் ரசிகனால் மட்டுமே சிறந்ததாய் தெரியும் விஷயத்தை பாராட்டி சிலாகிக்க முடியும்..:)

Anonymous said...

லைவ் கமாண்டிங் பார்த்த‌ மாதிரி இருக்கு சார், நீங்க கமல் ரசிகரா, ஒரு ரஜினி ரசிகர் போலவே எழுதியிருக்கிறீர்கள்... செம போஸ்ட் சார்,,,

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பல தகவல்களை தந்து ஒரு சினிமாவைப் பற்றி எழுதமுடியும என்று கற்றுக்கொடுத்தது பதிவு! நன்றி!

முரளிகண்ணன் said...


நன்றி தலைவரே

நன்றி ஜெயசீலன்

நன்றி தளிர் சுரேஷ்

Unknown said...

பாட்சா, அண்ணாமலை, முத்து - இவை எல்லாம் ரஜினி படங்கள். படையப்பா ஒரு KS.ரவிக்குமார் படம். இது ஒரு ரஜினி படம் அல்ல. இந்த படம் சரத்குமார் நடித்திருந்தால் கூட வெற்றி பெற்று இருக்கும்.

சந்திரமுகி - ரஜினி படம், இந்திரன் - ஷங்கர் படம். ரஜினியின் மிகப் பெரிய பலம் இது. இன்னும் கூட ஒரு டைரக்டரின் நடிகனாக நடிக்க முடிகிறது. (கமல் அப்படி நடித்த கடைசி படம் இந்தியன்?)

படையப்பாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் - நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன். என்னால் படையப்பாவை ரஜினி இல்லாமல் கற்பனை செய்ய முடிகிறது. ரம்யா கிருஷ்ணன் இல்லாமல் முடியாது. ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்.

Kasthuri Rengan said...

நல்லதோர் வாசிப்பனுபவம்...
ஒருபடம் ஒருமூட்டை மிளகா, அருபதுரூபாய்க்கு, நாற்பது ரூபாய் ... நம்பவே முடியாத விஷயங்கள்,
அப்புறம் இந்த மேட்டரை வைத்தே ஒரு குறும்படம் பண்ணிவிடலாம்போல~!
பசங்களுக்கு இன்னும் ஸ்ட்ரைக் ஆகல...