September 30, 2015

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக தொடர் கோப்பையின் போதுதான். இந்து பேப்பரில் ஒரு பத்தி அளவு மட்டுமே அப்போது அந்த போட்டிகளைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். ஸ்கோர்கார்டில் தென்பட்ட புதுப்பெயரான வாசிம் அக்ரம் அப்போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரவி சாஸ்திரியும் அசாருதீனும் என்ன செய்தார்கள் எனப்பார்ப்பதில் தான் ஆர்வம்.   முதன் முதலில் வாசிம் அக்ரத்தின் பந்துவீச்சைப் பார்த்தது 86 ஷார்ஜா கோப்பை போட்டிகளில் தான்.

ஸ்கோர்கார்ட் என்பது ஒரு பிளேயர் களத்தில் என்ன செய்தார் என்பதை அப்படியே பிரதிபலிக்காது என்பார்கள். அது வாசிம் அக்ரம் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. 86ல் நடைபெற்ற அந்த ஷார்ஜா கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட போட்டி. இந்தியா,பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு கோப்பை. தனியே பைனல் எல்லாம் கிடையாது. இதன் கடைசிப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆகியிருந்தார்கள்.

வெற்றி பெறும் அணிக்கு இரண்டாம் இடம் என்ற இலக்குடன் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்கின. இந்தியா முதல் பேட்டிங். அக்ரம் பந்து வீசுவதைப் பார்த்த எங்கள் தெரு அண்ணன்கள் இவன் என்னடா ஒரு டைப்பா போடுறான் என கமெண்ட் அடித்தார்கள். அப்போதெல்லாம் பாகிஸ்தான் மீது பெரும் வன்மம் இருந்த காலம். ”எறியுறாண்டா அதான் அடிக்க முடியலை” என்ற ஒற்றை வரியில் அக்ரத்தை கடந்து விட்டோம்.

ஆனால் அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வாசிம் அக்ரம் யார் எனப் புரிய வைத்தது. மிகக்குறைந்த ரன் – அப். ஆனால் பந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல்.
ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீச அதிக தொலைவு ஓடி வந்து, அதன் மூலம் கையில் வேகமான அசைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் வாசிம் அக்ரமின் தோள்பட்டை வலிமையானது. அவரது குறைந்த ரன் அப்பிலேயே அந்த வேகத்தை கொண்டுவந்து விடுவார். அவருடைய மணிக்கட்டும் அந்த அசைவுக்கு அபாரமாக ஒத்துழைக்கும். அந்த ரிஸ்ட் ஆக்சனின் மூலம் அவர் பந்து ஸ்விங் ஆகும் திசையை எளிதில் மாற்றிவிடுவார்.

பெரும்பாலான பந்துகள் குட்-லெந்த்தில், மிடில் அண்ட் ஆப்ஸ்டெம்ப் லைனில் விழும். அதே இடத்தில் அதே வேகத்தில் விழுந்த பந்து எந்த திசையை நோக்கித் திரும்பும் என பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட பந்துகள் இந்திய ஆடுகளங்களிலேயே நெஞ்சுக்கு மேல் எழும்பின. அதில் ஒன்று ஸ்ரீகாந்தின் மண்டையை பிளந்தது. 14 தையல்கள் போட்டார்கள். இது போக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விழும் யார்க்கர் வேறு. பத்தும் பத்தாததிற்கு ரிவர்ஸ் ஸ்விங்.

பந்து புதிதாக இருந்தாலும் பிரச்சினை, பழசாகி விட்டாலும் பிரச்சினை என்று பேட்ஸ்மென்கள் அலுத்துக் கொண்டார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.
அதன்பின் வாசிம் அக்ரமின் புகழ் எந்தக் காலத்திலும் குறையவில்லை. ஹெர்குலிஸே வந்து பந்தை எறிந்தாலும் முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத ஆசிய ஆடுகளங்கில் வித்தை பழகியவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் உற்சாகத்தைக் கொடுத்தன.
ஒரு சிறந்த பேட்ஸ்மென் நம்மை எதிர்த்து ஆடுகிறார் என்றால் அவருக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்போம். பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவோம். அப்போது ஆட்டமானது அந்த பேட்ஸ்மென் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அக்ரம் தனது பிரைம் பார்மில் இருக்கும் போது, அவர் பந்து வீசும் போது ஆட்டமானது பவுலர் சார்ந்ததாக இருக்கும். பேட்ஸ்மென்கள் தான் தங்கள் ஆட்டத்திற்கு வியூகம் அமைப்பார்கள். இந்த பேட்ஸ்மென் இவருக்கு இப்படி போட வேண்டும் என்ற வியூகமெல்லாம் அக்ரம் அப்போது பயன்படுத்தியதில்லை.
நான் பாட்டிற்கு ஓடி வந்து அப்போது என் மனநிலை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பந்தை வீசுவேன். களத்தின் நிலை, பருவ நிலை, பந்தின் நிலை தான் என் கணக்கு. அதற்கேற்ற படி ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ. நீ ஆடு பார்ப்போம் என்று தான் வீசுவார். சச்சின், லாரா, ஸ்டீவ் வாவ்வாக இருந்தாலும் சரி, மெக்ராத்,ஸ்ரீநாத்,வால்ஸ் ஆக இருந்தாலும் சரி ஒரே எஃபர்ட்தான்.
.
நினைத்துப் பாருங்கள். நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மென்களே அக்ரமின் குட் லெந்த் அவிட் ஸ்விங்கர்களுக்கும், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களுக்கும் திணறுவார்கள். டெயில் எண்டர்கள் என்ன ஆவார்கள்?.

டெஸ்ட் மேட்சுகளில் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் அக்ரமின் முதல் ஸ்பெல்லை கடத்திவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளே வருவார்கள். ஓவருக்கு ஒரு அப்பீலாவது இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்லிப் பீல்டர்கள் ஏன் விக்கெட் கீப்பர்கள் கூட அக்ரமின் பந்து வீச்சில் பல கேட்சுகளை தவற விட்டுவிடுவார்கள். பார்க்கும் போது நமக்கே வயிற்றெரிச்சலாக இருக்கும். என்னடா ஒருத்தன் உயிரைக்கொடுத்து போட்டுக்கிட்டு இருக்கான். இவுங்க இப்படி பண்ணுறாங்க என்று அலுத்துக் கொள்வோம்,

ஒரு போட்டியின் நேரலையின் போது வக்கார் யூனுஸ் மிகக்குறைந்த டெஸ்டுகளிலேயே 200 விக்கெட் எடுத்தார் எனச் சொல்லி அது சம்பந்தமாக ஒரு அனாலிசிஸ் போட்டார்கள். அந்த 200 விக்கெட்டுகளில் 85 போல்டு, 85 எல்பிடபிள்யூ. இதைப் போலவே தான் வாசிம் அக்ரமும். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் போல்டு மற்றும் எல்பிடபிள்யூதான்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஸ்லிப் பீல்டர்கள் பத்து நாள் பட்டினி கிடந்த ராஜபாளையம் நாயைப் போன்றவர்கள். பத்துநாள் கழித்து வீசப்படும் எலும்புத்துண்டை எப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் கவ்வுமோ அதைப் போல பந்தை கேட்ச் செய்வார்கள். விக்கெட் விழுவதற்கான அரை சந்தர்பத்தைக்கூட முழுதாக மாற்றி விடுவார்கள்.  ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுத்தாலும் தட்டி விடும் பணக்கார குழந்தைகள் போல, கையில் விழும் பந்தை தட்டி விடுபவர்கள். அவர்கள் மட்டும் ஒழுங்காக பீல்டிங் செய்திருந்தால் அக்ரமின் விக்கெட் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும்.

89 நேரு கோப்பை வெற்றி, பல ஷார்ஜா கோப்பைகள், 92 உலக கோப்பை, நிறைய டெஸ்ட் வெற்றிகள் என வாசிம் அக்ரம் பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம். 92ல் உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான் ஓய்வு பெறவும்,கேப்டன் பதவி மியாண்டாட், ரமீஸ்ராஜா, சலிம் மாலிக் என பல கை மாறியது. அது அக்ரமின் கைக்கும் வந்தது. கேப்டனாகவும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்தார். ஆனால் அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது. அவரின் திறமையாலும் சக வீரர்களின் திறமையாலுமே போட்டிகள் வெல்லப்பட்டன. வியூகங்கள் அமைத்து அதன் மூலம் பெறப்பெற்ற வெற்றிகள் மிகக்குறைவு.

அந்த விஷயத்தில் இம்ரான்கான் தான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அனாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்சமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை.

தர்மபுரியில் நக்சலைட்கள் தலை தூக்கியபோது அதை அடக்கியவர் வால்டேர் தேவாரம். ஆனால் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அப்போதைய ஐ.ஜி ஸ்ரீபால். அதே தேவாரம் காவல்துறை தலைவராக இருக்கும் போது வீரப்பனை பிடிக்க களமிறங்கி தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு திட்டங்கள் வகுத்துக் கொடுக்க ஆள் இல்லை. விஜயகுமார் வீரப்பனை வீழ்த்திய போது கூட அவருக்கு திட்டங்களை தீட்டிக் கொடுக்க அதிகார்களின் வலுவான துணை இருந்தது. இதே போலத்தான் வாசிம் அக்ரமமும்.  அர்ஜுனனைப் போல களத்தில் வாழ்பவர். பிரம்மாஸ்திரங்களும், நாகாஸ்திரங்களும் அவரிடம் ஏராளம் உண்டு.  அவரைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். இம்ரான் கேப்டனாக இருந்த வரையில் அவரை பேட்டிங் ஆர்டரில் மேலேற்றி விடுவார். பின்ச் ஹிட்டராக பயன்படுத்துவார். பந்து வீச்சின் போது முதலில் நான்கு ஓவர், பின்னர் ஓய்வு பின்னர் நான்கு ஓவர் எனப் பயன்படுத்துவார். பேட்ஸ்மென் அன்கம்பர்டபிளாக இருப்பது போல தோன்றினால் உடனே அக்ரத்திடம் தான் பந்தைக் கொடுப்பார். ஆனால் வாசிம் அக்ரமே கேப்டனாக இருக்கும் போது இவை நடக்க வாய்ப்பில்லாமல் போனது. இம்ரானைத் தவிர மற்ற கேப்டன்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் எல்லாக் கேப்டன்களும் (இங்கிலாந்து கவுண்டி கேப்டன்கள் உட்பட) செய்த விஷயம் ஒன்றுதான். அதுதான் டெயில் எண்டர்கள் வரும்போது அக்ரத்திடம் பந்தைக் கொடுப்பது. பாகிஸ்தானின் முஷ்டாக் அகமது கூட சொல்வார் “மிடில் ஆர்டர் விக்கெட் இரண்டு, மூன்று எடுத்திருப்பேன், பந்து நான் நினைத்த இடத்தில் விழுந்து, நினைத்த படி சுழலத் தொடங்கி இருக்கும். ஆனால் ஆறாவது விக்கெட் விழுந்து பவுலர்கள் வந்து விட்டால் எந்த கேப்டனும் அக்ரமிடம் பந்தை தூக்கி தந்துவிடுவார்கள்” என்று.

90களின் மத்தியில் அப்போது ஆக்டிவ்வாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் எல்லோருக்குமே அக்ரம் மீது பெரிய மரியாதை இருந்தது. அரவிந்த் டி சில்வா ஒரு பேட்டியில் சொன்னார் “ நான் அக்ரம் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த பின்னால் தான் என்னை சிறந்த பேட்ஸ்மெனாக எங்கள் அணி வீரர்கள் ஒத்துக் கொண்டார்கள்” என. 

கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, தெரு கிரிக்கெட் விளையாடியவர்கள், பார்க்க மட்டும் செய்தவர்களுக்கு கூட அக்ரமின் மீது ஒரு தனிப்பிரியம் இருந்தது. அப்போது இந்தியாவில் கல்லூரி விடுதிச் சுவர்களில் சச்சின் புளோ அப் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும். நான் பார்த்த பல அறைகளில் வாசிம் அக்ரமின் புளோ அப்பும் இடம் பிடித்திருக்கும். என்னுடன் தங்கியிருந்த வட இந்திய நண்பர் ஒருவர், அக்ரம் மட்டும் நம்ம நாட்டில் பிறந்திருந்தால் எப்படி கொண்டாடி இருப்போம் என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார். நான் என்ன நினைப்பேன் என்றால், நாமளே இவ்வளோ கிரேஸா இருக்கிறோமே, பாகிஸ்தான்காரர்கள் எவ்வளவு கிரேஸாய் இருப்பார்கள் என நினைத்துக் கொள்வேன்.
94ல் ஹம் ஆப்கே ஹெயின் கோன் வெளியாகி இங்கே மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம்  பாகிஸ்தானிலும் பெரிய ரசிகர்களைப் பெற்றது. முக்கியமாக மாதுரி தீட்சித்துக்கு. அந்தப் படத்தில் வரும் ஜூட்டே தோ பைசே லோ பாடலை (செருப்பைக் கொடுத்து பணத்தை வாங்கு) உல்டா செய்து மாதுரியை எங்களுக்கு கொடு அக்ரமை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் விலை மதிக்க முடியாததாக கருதியது அக்ரமைத்தான்.

வாழ்வில் காட்சி இன்பமாக ஏராளமானவற்றை அனுபவித்து உள்ளேன். சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்கு அதில் தனி இடமுண்டு. கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசித்தவைகளில் வாசிம் அக்ரமின் பவுலிங்கிற்கு முக்கிய இடமுண்டு. 92 உலக் கோப்பை பைனலில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லாம்ப்பையும், கிறிஸ் லீவிஸையும் வீழ்த்தியது, ராகுல் ட்ராவிட்டை ஒரு டெஸ்ட் மேட்சில் கதகளி ஆடவிட்டது, நேரு கோப்பை பைனலில் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர், சேப்பாக்கத்தில் அடித்த 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் அடித்த 53 ரன்கள், கணுக்காலில் இறங்கும் இன்சுவிங் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங்னா அது இப்படித்தான் இருக்கணும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடைசி ஓவர்களில் போடும் பவுலிங் என சொல்லிக் கொண்டே போகலாம்.


கிரிக்கெட் உலக முக்கியஸ்தர்கள் எல்லோருமே, இதுவரை தோன்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அக்ரம்தான் சிறந்தவர் என்று நேரிடையாகவும் மறைமுகவாகவும் ஒத்துக் கொண்டார்கள். எப்படி கிரிக்கெட் சமுதாயம் புதிதாக ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடினால் அவரை பிராட்மெனுடன் கம்பேர் செய்கிறதோ அதுபோல உலகில் எந்த மூலையில் ஒரு இடதுகை பந்து வீச்சாளர் நன்றாகப் பந்து வீசினாலும் அவரை வாசிம் அக்ரமுடன் தான் கம்பேர் செய்கிறார்கள். இதைவிட என்ன சாதிக்க வேண்டும் அவர்?.      

4 comments:

Nagendra Bharathi said...

அருமை

முரளிகண்ணன் said...

நன்றி நாகேந்திர பாரதி.

pradeep kumar said...

100 % sarriyaka solli irukirergal. The kings of swing.
My evergreen favorite.

pradeep kumar said...

sorry it is supposed to be The king of swing. In fact I was so excited while I read this