August 12, 2023

சேது மாமா

ஞாயிறு மாலை 5 மணி. மதுரை சென்ட்ரல் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். அலை பேசி ஒலித்தது. மகன். வரும் போது தெற்கு வாசல்ல உன் பிரண்ட் கடையில் பரோட்டா வாங்கிட்டு வந்துருப்பா. ரொம்ப நாளாச்சு. லாக்டவுன் போட்டதில் இருந்து மதுரைக்கே நீங்க போகலைல என்றான். ஆறேழு மாதம் கழித்து இன்று தான் மதுரைக்கு வந்திருக்கிறேன். மகனும் என்னைப் போலவே பரோட்டா பிரியன். எத்தனை ஊர், எத்தனை கடைகள். எத்தனை விதமான பரோட்டாக்களை சாப்பிட்டாயிற்று. ஆனால் முதன் முதல் பல நாள் ஏக்கமாக ஏங்கி பரோட்டா சாப்பிட துடித்த போது வாங்கித் தந்தவர் சேது மாமா தான். எத்தனையோ சிறப்புகள், சுகங்கள் வாழ்வில் அனுபவித்தாலும் அது கிடைக்காதா என ஏங்கிய போது, அதைக் கொடுத்தவர்களை மறக்க முடியுமா? அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டுமென்று பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறேன். அவருக்காகத்தான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்று சென்ட்ரல் தியேட்டரில் சிவாஜி படம். ஞாயிறு மாலைக் காட்சிக்கு வழக்கமாக சிவாஜியின் ரசிகர்கள் வந்து கூடுவார்கள் என்பதால் இன்றாவது சேது மாமா வந்து விடுவாரா என்று ஆவலுடன் நின்று கொண்டிருக்கிறேன். சேது மாமா ஒரு தீவிர சிவாஜி கணேசன் ரசிகர். தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், திரிசூலம் என்ற தி வரிசை சூப்பர் ஹிட்களானாலும் சரி, பாசமலர், பாவ மன்னிப்பு, பாகப் பிரிவினை போன்ற பா வரிசைப் படங்களானாலும் சரி. எதையுமே 20 முறைக்கு குறைந்து அவர் பார்த்ததே இல்லை. எங்கெல்லாம் சிவாஜி படம் ஓடுகிறதோ அங்கெல்லாம் அவர் இருப்பார். அது திருவிழா திரையிடலாக தெருவில் இருந்தாலும் சரி, தீபாவளி ரிலீஸாக இருந்தாலும் சரி. சிவாஜியின் உடைகள், சிவாஜியின் மேனரிசங்கள், அவரின் வசனங்கள் என்ரே வாழ்வார். பாசக்காரர். என் அம்மாவுடன் பிறந்தது 5 ஆண்கள், இரண்டு பெண்கள். என் அம்மா ஆறாவது. அவருக்குப் பின் பிறந்த இரண்டு தம்பிகளில் ஒருவர் தான் சேது மாமா. இன்னொருவர் சிவா மாமா. அப்போது எங்கள் தந்தை குடும்பம் வறுமையில் இருந்த காலகட்டம். ஊர் திருவிழாவிற்கு வரக்கூட என் தந்தை தயங்குவார். நானும் என் அம்மாவும் மட்டும் போவோம். உள்ளே நுழைந்ததும் பெரிய மாமா பசங்களும், பெரியம்மா பசங்களும் கூட கறிக்கு வந்துட்டாங்களா என்று நக்கல் அடிப்பார்கள். அப்போது அதற்கு கோபப்படும் அளவுக்கு கூட கூறில்லை. அசட்டு சிரிப்புடனேயே வளைய வருவேன். என் தாத்தா அப்போது இல்லை. பாட்டி மட்டும் தான். மூத்த மகன்களுக்கும், மகள்களுக்கும் நல்ல படிப்பு, திருமணம் என செய்து கொடுத்து விட்டு, வசதி குறைந்த நாளில் என் தந்தைக்கு மணம் செய்து கொடுத்திருந்தார்கள். எனக்கும் நல்லா செய்யலாம்ல எனக் கேட்க கூட தெளிவில்லாத பெண்ணாகவே அம்மா இருந்திருக்கிறார். இன்னும் இரண்டு மகன்களுக்கு வேறு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் அது பற்றி வேறு யாரும் கூட யோசிக்கவில்லை. சேது மாமா என் அம்மாவிற்கு இரண்டு வயது குறைவு. அவருக்கு அடுத்த சிவா மாமா அவரை விட இரண்டு வயது குறைவு. சேது மாமா தன் தாய் மாமா பெண்ணை காதலித்து வந்தார். அவர் அப்போது ஒரு உரக்கடையின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். எந்த ஊருக்குப் போனாலும் தன் மாமன் மகளுக்கு ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார். மாமன் மகளுக்கு மட்டுமல்ல யாருக்கு எது தேவையோ கேட்காமலேயே வாங்கிக் கொடுப்பார். அது போக ஊர் விசேஷமாய் இருந்தாலும் சரி, வீட்டு விசேசமாய் இருந்தாலும் சரி முன்னால் நிற்பார். இந்த திருவிழாவிற்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு கூட முன் கூட்டியே திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்து வைப்பார். சிவா மாமா அப்படியே எதிர். தான் உண்டு. தன் வேலை உண்டு. ஒரு தனியார் போக்குவரத்து அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். எதிலும் பட்டும் படாமல் இருப்பார். இறங்கிச் செய்ய மாட்டார். வீட்டு பொது செலவுகளுக்கு கூட காசு கொடுக்காமல் சேர்த்து வைப்பதாக கேள்வி. சரி. பரோட்டாவிற்கு வருவோம். எங்கள் தெருவில் சாயங்காலம் ஆனால் சில வீடுகளில் பரோட்டா பார்சல் வாங்கி வருவார்கள். அது பற்றி தெருவில் விளையாடும் போது பசங்கள் பேசிக் கொள்வதுண்டு. அப்போது முதலே பரோட்டா மீது ஆசை. வீட்டில் ரேசன் அரிசி சாப்பாடு தான். அதுவே அரை வயிற்றுக்கு. தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த மில் ஒன்று கைமாறி அவருக்கு வேலை இழப்பு. எந்த வேலையும் அமையாமல் சில மாதம் அலைந்து, பின்னர் ஒரு சைக்கிள் கடையில் வேலை. அம்மா அப்போது தான் டெய்லரிங் பழகிக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான் ஊர் திருவிழாவிற்குச் சென்றிருந்தோம். மாமா, பெரியம்மா பசங்கள் எல்லோரும் தத்தம் பெற்றோரிடம் காசு வாங்கிச் சென்று இரவு பரோட்டா சாப்பிட்டது கேள்விப்பட்டு வருத்தம்.அதை நினைத்து அடுத்த நாள் வருத்தமாய் இருந்த போது, சேது மாமா வந்தார். எப்படி யூகித்தார் எனத் தெரியவில்லை. வாடா, சைக்கிள்ள உட்காரு என கூட்டிச் சென்று கடையில் உட்கார வைத்து, நல்லா சாப்பிடுறா மருமகனே என பரோட்டா வாங்கிக் கொடுத்தார். அன்றிலிருந்து மாமா மனதுக்கு மிக நெருக்கமானவர் ஆகி விட்டார். மாமாவின் கல்யாணப் பேச்சு வந்தது. அவரின் தாய் மாமா, சிவாவுக்கு வேணா பொண்ணக் கொடுக்கிறேன், சேதுவுக்கு வேணாம் என்றார். எல்லோருக்கும் அதிர்ச்சி. அதற்கு அவர், உங்க வீட்ல பொதுவா இப்ப எதுவும் இல்ல, ஆள் ஆளுக்கு பிரிச்சு கொண்டு போயிட்டீங்க. சேது கருத்தாவே இல்ல. இன்னும் சினிமா பார்த்துக்கிட்டு, வீட்டுல எல்லாத்துக்கும் செஞ்சுக்கிட்டு இருக்கான். அவனை கட்டினா என் மக கஷ்டப்படும். சிவா தான் கருத்தான ஆளு. மக கஷ்டப்படக் கூடாதுல்ல என்றார். அதாவது தந்தையின் கோணம். ஆனால் அதற்கு மாமா பெண்ணும் ஒத்துக் கொண்டது எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி. நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் சேது மாமா யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விட்டார். தன் காதலி, தம்பி மனைவியாக இருக்கும் வீட்டில் எப்படி இருப்பது என. சரி. ஏதோ கோபத்தில் போய் விட்டார். வந்து விடுவார் என சில நாட்கள் நினைத்தார்கள். அது சில வருடம் ஆனது. இதில் மற்றவர்கள் யாரும் அவரைத் தேடக்கூட நினைக்க வில்லை. பாட்டியும் என் அம்மாவும் தான் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை இருவரும் சேர்ந்து, என் தந்தையிடம் சொல்லி, நாளிதழில் ஒரு விளம்பரம் கூட கொடுத்துப் பார்த்தார்கள். உபயோகம் இல்லை. பாட்டி இயற்கை எய்தினார். இரண்டாம் நாள் சடங்கில் இடுகாட்டில் காக்கைக்கு சாப்பாடு வைத்து, அது எடுத்த பின்னர் தான் சடங்கு முடிந்து, வீட்டிற்குப் போய் சாப்பாடு போடுவார்கள். ஒரு காக்காய் கூட அன்று வரவில்லை. ஒரு உறவினர் கூட கிண்டலடித்தார். நாலு பிள்ளைக தாண்டா வந்திருக்கீங்க, ஒன்ன காணோம்ல. அதான் அந்த அம்மாக்கு உங்க சாப்பாட வாங்க மனசில்ல போல என்று. எங்கயாச்சும் போய் பிடிச்சுட்டாவது வாங்கய்யா என உறவில் வயதானவர்கள் அலுத்துக் கொண்டார்கள். இது நடந்து, சில நாட்கள் கழித்து என் அம்மா, என்னை அழைத்து, சேதுக்கு நான் எதுவுமே பண்ணலைடா. நீ வயித்தில இருந்தப்ப, யாருமே என்னைக் கவனிக்கலை. தாத்தா வேற அதுக்கு முன்னதான் இறந்திருந்தார். பாட்டி இருக்கிறத செய்யும். வாய் எல்லாம் நம நமன்னு இருக்கும். சேது தான் அப்பவே அவன் சம்பாதிச்ச சொற்ப காசுலயும் எனக்கு பார்த்து பார்த்து வாங்கித் தந்தான். அவனுக்கு என் கையால நல்லது பொல்லது ஆக்கிப் போடனும்னு நெனைப்பேன், நாம தலை நிமிர்ற நேரம், கல்யாணப் பிரச்சினையால ஊர விட்டே போயிட்டான். எனக்கு ஒரே ஆசை தாண்டா. அவன எப்படியாச்சும் தேடிக் கண்டுபிடிச்சு, அவனுக்காக ஒரு அக்கா அழுதுக்கிட்டு இருக்கான்னு சொல்லி நல்ல சாப்பாடு அவனை சாப்பிட வைடா என்று சொல்லி தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தார். இது நான் தச்சு சம்பாதிச்ச காசுடா. இதுல தான் அவனுக்கு நீ செய்யனும் என்றார். அதன் பின் நானும் பல முயற்சிகள் எடுத்து விட்டேன். பண்பலைகளில் நேயர் விருப்பம் பேசும் போது சேது மாமாவை பற்றி குறிப்பிடுவேன். வாங்க என்பேன். மியூசிக் தொலைக்காட்சிகளின் நேரலையில் நேயர்கள் பேசும் போதும் சரி, வாழ்த்து தெரிவிக்கும் ஸ்குரோலிலும் சரி அவரைப் பற்றிச் சொல்லி வரச் சொல்கிறேன். சமூக வலை தளத்தில் கணக்கு தொடங்கிய நாள் முதல் அவர் புகைப் படத்தை அடிக்கடி போட்டு வருகிறேன். பயனங்களில் யாருடைய அலை பேசியிலாவது சிவாஜி பாடல் ரிங் டோனாக ஒலித்தால் குதித்தெழுந்து அதை நோக்கி விரைகிறேன். அவர் வெளிநாட்டில் இருக்கலாம், இல்லை வேறு மாநிலத்தில் கூட இருக்கலாம், தமிழ்நாட்டில் வேறு ஏரியாவில் கூட இருக்கலாம். எந்த நம்பிக்கையில் நான் அவர் மதுரையில் இருப்பார், சிவாஜி படத்திற்கு வருவார் என நம்புகிறேன் என எனக்கே தெரியவில்லை. வேறு வழி ஏதும் புலப்படாத நிலையில் கிடைத்த வழியை நம்பி நடப்போமே அது போலத்தான் நான் சென்ட்ரல் தியேட்டரருக்கு வந்து கொண்டிருக்கிறேன். மணி ஆறரை ஆகி விட்டது. பெல் அடித்து படம் துவங்கிய சத்தம் கேட்டது. இன்றும் அவர் வரவில்லை. அம்மா கொடுத்த காசு பல ஆண்டுகளாக பத்திரமாய் இருக்கிறது. பெயர் சேதுராமன், ஐந்தே முக்கால் அடி உயரம் இருப்பார். இப்போது 65 வயது இருக்கும். அவர் மொபைலில் ரிங் டோனாக ஏதாவது சிவாஜி பாட்டோ, இல்லை அவர் படிக்கும் பத்திரிக்கையில் சிவாஜி படம் போட்டிருந்தாலோ நீங்கள் சேதுராமனா, பெரியகுளமா எனக் கேளுங்கள். ஆமாம் என்றால் நீங்கள் இதில் தெரிவியுங்கள்.

No comments: