January 29, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1

பண்டைய காப்பியங்களில் இருந்து தற்கால சினிமா வரை நாயகனை நல்லவனாக, வல்லவனாக சித்தரிக்க எதிர் நாயகர்கள் தேவைப் படுகிறார்கள். எதிர் நாயகர்கள் இல்லாத கதையில் என்ன சுவராசியம் இருந்துவிட முடியும்?. நாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து இயங்கும் தமிழ் சினிமா, அந்த நாயகர்களை அவதாரமாக காட்ட வித விதமான எதிர் நாயகர்களை பயன்படுத்தி வந்திருக்கிறது. தன் பிம்பமாக நாயகனை பார்க்கும் ரசிகன், தன் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எதிர் நாயகனின் ரூபத்தில் காட்சிப்படுத்துகிறான்.காதலியின் தந்தையை, பெண் கொடுக்காத தாய்மாமனை, சொத்து பிரித்தலில் ஏமாற்றிய பங்காளியை, துரோகம் செய்த சினேகிதனை, தன்னால் தட்டி கேட்க முடியாத சமூக விரோத செயல்களை செய்பவனை, தப்பான அரசியல்வாதியை அவன் எதிர் நாயகனின் உருவத்தில் ஏற்றுகிறான். அவனை கதாநாயகன் வெல்லும் போது தானே வென்றதாய் மகிழ்கிறான். கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும், நாயகனுக்கும் ஏற்ப பல எதிர் நாயகர்கள் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.உலக தரத்திற்க்கு நடிப்பை வெளிக்காட்டிய எம் ஆர் ராதா, பாலையா உருவத்திலேயே மிரட்டும் பி எஸ் வீரப்பா, செய்கைகளிலும் பேச்சிலும் மிரட்டிவிடும் நம்பியார், அசோகன், மனோகர், நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர், ரவிசந்திரன், வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். மாறுபட்ட நடிப்பை வழங்கும் நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ், தற்போது கலக்கிவரும் கிஷோர் (ஜெயம் கொண்டான், பொல்லாதவன்), டேனியல் பாலாஜி (வேட்டையாடு விளையாடு), சமுத்திரக்கனி (சுப்ரமணியபுரம்) என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டாலும் வில்லன் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை.


கேரளாவில் இருந்து திலகன்,முரளி,கலாபவன் மணி, ஆந்திரத்தில் இருந்து ராமிரெட்டி, கோட்டா சீனிவாசராவ், கன்னடத்தில் இருந்து தேவராஜ், உபேந்திரா என அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நாயகிகளையும், வில்லன்களையும் மட்டும் தாராளமாய் தந்து கொண்டிருக்கின்றன. இந்தித் திணிப்பும் இதில் ஒரு பொருட்டே கிடையாது. அம்ரீஷ் பூரி, ஆசிஷ் வித்யார்த்தி என சகலரையும் ஏற்றுக் கொன்டிருக்கிறோம். பால் தாக்கரே கோபித்துக் கொள்வாரே என்று, மராத்தி நாடகங்களில் கலக்கி திரையுலகில் புகுந்த அதுல் குல்கர்னி, சாயாஜி ஷின்டே போன்றோரையும் தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது.


நரசிம்மராவும் மன்மோகனும் 91ல் தான் உலகமயமாக்கலை கொண்டு வந்தார்கள். ஆனால் அதை 80 களிலேயே பாப் கிரிஸ்டோ மூலம் (விடுதலை,காக்கி சட்டை) தமிழ் சினிமா கொண்டு வந்து விட்டது.
யாரை விடுவது யாரை எழுதுவது?


இந்த பதிவு எழுத எனக்கு தூண்டுகோலாகவும் ஊக்கமருந்தாகவும் இருக்கும் கார்பொரெட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.

பி எஸ் வீரப்பா

சென்ற தலைமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லன் என்றாலே நினைவுக்கு வருபவர் பி எஸ் வீரப்பாதான். வில்லனுக்கு ஏற்ற உடல் வளமும், குரல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றவர் இவர். 1948 ஆம் ஆண்டு வெளியான ராஜமுக்தி என்னும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான இவர் பின்னாளில் சிறந்த வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுபட்ட எம் கே தியாகராஜ பாகவதர் தன் செல்வாக்கை நிலைநிறுத்த ஆரம்பித்த படம் ராஜமுக்தி. இதில் வி என் ஜானகி, பானுமதி, சிறு வேடத்தில் எம்ஜியார், எம் ஜி சக்கரபாணி, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாகஸ்வரம்) ஆகியோரும் நடித்திருந்தனர். புதுமைப்பித்தன் வசனம் எழுத, எம் எல் வசந்தகுமாரி தன் முதல் திரைப்பாடலை பாட பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. ஆனால் பி எஸ் வீரப்பாவின் திரைப் பிரவேசத்துக்கு காரணமாய் அமைந்தது. இதன்பின் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான எம்ஜியார்,வி என் ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசியில் (1950) நடித்தார்.

1953 ஆம் ஆண்டு எம்ஜியார்,கருணாநிதி,காசிலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாம் என்னும் படத்தை பி எஸ் வீரப்பா தயாரித்தார். இது மேகலா பிக்சர்ஸ் பேனரில் வெளியானது. இதில் பி எஸ் வீரப்பா வீட்டு வேலைக்காரன் வேடத்தில் எம்ஜியார் நடித்திருப்பார். எம்ஜியாரை காலால் எட்டி உதைப்பதுபோல கூட காட்சி அமைப்பு இருக்கும். அதன்பின் வெளியான எம்ஜியார் படங்களில் இது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டதில்லை. இந்த காலகட்டத்தில் எம்ஜியார் உச்ச நட்சத்திரமாக மாறி பல சரித்திர படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலான படங்களில் பி எஸ் வீரப்பா வில்லனாக நடித்தார். இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, மந்திரி,ராஜகுரு போன்ற வேடங்களுக்கு பொருத்தமாய் இருக்கும். லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

சக்கரவர்த்தி திருமகள் (1957)

மகாதேவி (1957)

பூலோக ரம்பை (1958)

நாடோடி மன்னன் (1958)

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)

சிவகங்கை சீமை (1959)

மன்னாதி மன்னன் (1960)

ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அலிபாபாவும் 40 திருடர்களில் திருடர்கள் தலைவனாக குதிரையில் அவர் பவனி வரும் காட்சி கண்களை விட்டு அகலாதது. மகாதேவியில் அவர் பேசிய "அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி" வசனமும் வஞ்சிக்கோட்டை வாலிபனில் அவர் பேசிய " சபாஷ் சரியான போட்டி" வசனமும் தமிழ் சினிமா டாப் டென் பஞ்ச் டயலாக்குகளில் எப்போதும் இடம் பிடிக்கும். நாடோடி மன்னனில் வஞ்சக ராஜ குருவாக அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவகங்கை சீமை திரைப்படத்தில் சின்ன மருதுவான எஸ் எஸ் ராஜேந்திரன் தன் அண்ணனான டி கே பகவதியிடம் இவரை நம் படையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார். அப்போது அவையினர் சந்தேகமாகப் பார்க்க உடனே எஸ் எஸ் ஆர் இவரது வீரத்தை பரிட்சை செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்பார். அதற்க்கு டி கே பகவதி சொல்வார் "வேண்டாம் இவரைப் பார்த்தாலே இவரது வீரம் தெரிகிறது" என்பார்.

1960 க்குப் பின் சரித்திர கதைகளை தயாரிப்பது குறைந்து போனது. இந்த காலகட்டத்தில் வந்த ஸ்ரீதர், பாலசந்தர் ஆகியோரது படங்களில் பெரும்பாலும் சம்பவங்களே வில்லன்களாய் அமைந்தன. மற்ற சமூக கதையமைப்புள்ள படங்களிலும் பண்னையார், உள்ளூர் நகரசபைத் தலைவர் போன்ற உப்பு சப்பில்லாத திறமைக்கு அதிகம் வேலை வைக்காத வேடங்களே வில்லன்களுக்கு வாய்த்தன. இதுபோன்ற கேரக்டர்களுக்கு பி எஸ் வீரப்பா தேவையேயில்லை. ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு?

1977க்குப் பின் பாரதிராஜா,பாலுமகேந்திரா,மகேந்திரன் படங்களிலும் வில்லனுக்கு பெரிய தேவை ஏற்படவில்லை. இவர்கள் சித்தரித்த வில்லன்களுக்கு 40க்கும் குறைவான வயதுள்ளவர்களே தேவைப்பட்டர்கள். இக்காலத்தில் அலாவுதீனும் அற்புத விளக்கு படத்தில் (1979) நடித்தார்.முரட்டுக்காளைக்கு பின் ஜெய்சங்கர், அதன்பின் சத்யராஜ் என அடுத்த தலைமுறை வில்லன்கள் வந்த பின்னர் பி எஸ் வீரப்பாவின் தேவை குறைந்து போனது. பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), வி சேகர் இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் (1990) ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார்.

நீங்களும் ஹீரோதான் படம் சினிமா துறையை எள்ளல் செய்து எடுத்த படம். அதில் ஒரு காட்சியில் படபிடிப்புக்காக வரும் பி எஸ் வீரப்பாவையும் நம்பியாரையும் மக்கள் சபிப்பார்கள். நம்பியார் கூட தூறல் நின்னு போச்சு படத்துக்ப் பின் குணசித்திர நடிகராக மாறினார். ஆனால் வீரப்பா வீரப் பா தான். வீரப்பாவின் இன்னொரு முகம் தயாரிப்பாளர். தனது பி எஸ் வி பிக்சர்ஸ் மூலம் ஆனந்த ஜோதி,ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, ஆத்மி(இந்தி),வீரக்கனல்,பிள்ளைக்கனியமுது ஆகிய படங்களை தயாரித்தார். 1980 களில் சாட்சி,வெற்றி,கடமை,நட்பு ஆகிய படங்களை தயாரித்தார்.


(தொடரும்)

23 comments:

அக்னி பார்வை said...

சபாஷ் சரியான பதிவு...

மஞ்சூர் அலிக்கான் பற்றியும் எழுதுங்கள்.ஒரு நேரத்தில் கலக்கியவர்.

Cable Sankar said...

முரளி.. கமல், ரஜினி, சத்யராஜ், ஏன் சிவாஜி கூட வில்லனாக நடித்திருக்கிறார்கள். அவர்களை பற்றியும், நீங்கள் இந்த தொடரில் எழுதுங்கள்.

Divyapriya said...

தலைவர் பத்தி போடல :(

நசரேயன் said...

கலக்கல் முரளி. நல்ல தகவல்கள்

புருனோ Bruno said...

// நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர்//

சாயாஜி ஷிண்டே கூட முதல் தமிழ் படத்தில் கதாநாயகன் தானே ;)

--
உங்களின் இந்த இடுகைத்தொடரில் ப்ரியமுடன் போன்ற படங்கள் வருமா

கோபிநாத் said...

நாயகர்களை மட்டும் எழுதி கலக்கமால் எதிர் நாயகர்களையும் எழுதி கலக்குறிங்க அண்ணாச்சி ;))

\\\ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு? \\

அட அட சூப்பர் உவமை ;))

அருண்மொழிவர்மன் said...

பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), //

நல்ல்தொரு படம் இது...

படத்ஹ்டின் இறுதியில் நல்லவர்கள் இறக்க வில்லன்கள் தப்புவதாக படம் முடியும்...

பிரபு ரகுவரன் நடித்த நல்ல படம்

narsim said...

//இந்த பதிவு எழுத எனக்கு தூண்டுகோலாகவும் ஊக்கமருந்தாகவும் இருக்கும் கார்பொரெட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.

//

நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு..

narsim said...

//லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.//

//"அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி" வசனமும் வஞ்சிக்கோட்டை வாலிபனில் அவர் பேசிய " சபாஷ் சரியான போட்டி" வசனமும் தமிழ் சினிமா டாப் டென் பஞ்ச் டயலாக்குகளில் எப்போதும் இடம் பிடிக்கும். //

கலக்கலாக தொடங்கியிருக்கிறீர்கள்..

முரளிகண்ணன் said...

அக்னிபார்வை, கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கு நன்றி.

கட்டாயம் எழுதுகிறான் சங்கர் சார்

முரளிகண்ணன் said...

திவ்யப்பிரியா தலைவர் யார் என்று சொல்லுங்கள். எழுதிவிடுவோம்

நசரேயன், புருனோ,கோபிநாத், அருண்மொழிவர்மன் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

\\நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு..\\

ஊக்கம் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டும்?

வித்யா said...

என்னை மாதிரி இளைய தலைமுறைக்கு:) பிளாக் & ஒயிட் வில்லன்களை பற்றி தெரிந்துகொள்ள சூப்பர் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள் முரளி. Eagerly waiting for the next part.

SUREஷ் said...

70களுக்குப் பிறகு பெரும்பாலான நாயகர்கள் எதிர்மறையானவர்களே...


பிக் பாக்கெட், கொள்ளைக் காரன் , குடிகாரன், போன்றோரே நாயகர்களாக அமைந்து இருக்கிறார்கள்.

வில்லனுக்கும் நாயகனுக்கும் ஏற்படும் பிரச்சனையில் மட்டுமே நாயகன் பக்கம் நியாயம் இருக்கும். மற்றபடி இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது.


வசந்தமாளிகை நாயகனை நாயகனாக ஒப்புக் கொள்ளமுடியுமா..... (சிவாஜியைப் பார்க்காதீர்கள். நான் சிவாஜியைக் கேட்கவில்லை)

நினைத்ததை முடிப்பவன் ரஞ்சித் நல்லவரா.. கெட்டவரா...

தீ, விடுதலை, நாயகர்கள் நிஜமாகவே நாயகர்களா...

SUREஷ் said...

கொலை செய்வது ஒரு கலை என்று வசனம் பேசிய நடராஜனைப் பற்றியும் எழுதுங்கள் தல..


சந்திரலேகா வில்லன் ரஞ்சன் பற்றிக் கூட நெறயாப் பேருக்கு தெரியாது பாருங்க...

அசோக் குமாருல சாமி அவுக சைடு வில்லனாமே....

முரளிகண்ணன் said...

வித்யா, சுரேஷ் வருகௌக்கு நன்றி.

சுரேஷ் நிச்சயம் எழுதுகிறேன்

T.V.Radhakrishnan said...

//அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நாயகிகளையும், வில்லன்களையும் மட்டும் தாராளமாய் தந்து கொண்டிருக்கின்றன.//

:-)))))))))

புருனோ Bruno said...

//ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு?
//

அருமை அருமை :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

டாக்டர் மீள் வருகைக்கு நன்றி

முத்து தமிழினி said...

///இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, மந்திரி,ராஜகுரு போன்ற வேடங்களுக்கு பொருத்தமாய் இருக்கும். லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.//

நல்ல ஃப்லோ..கலக்குங்க

முரளிகண்ணன் said...

முத்து தமிழினி தங்கள் வருகைக்கு நன்றி

அனுஜன்யா said...

என்ன ஒரு சரளமான, சுவாரஸ்யம் கூடிய நடை!

"தண்ணீர் தராத அண்டை மாநிலங்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்" என்று முரளி டச் பளிச்.

"மணந்தால் மகாதேவி; இல்லையேல் (அடையாவிட்டால் என்று இல்லை என்று ஞாபகம்) மரணதேவி" என்று நினைவு. பஞ்ச் வரிகளில் தவறு இருக்கக் கூடாதல்லவா :)

வீரப்பா (அவர் மகன் பெயரில்) 'திசை மாறிய பறவைகள்' என்ற படமும் தயாரித்த ஞாபகம்.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அனுஜன்யா,

அந்த வசனம் பலரால் மாற்றப்பட்டு (அவர்களுக்கேற்ப்ப : அடைந்தால் மாதுரி தீட்சித், அடையாவிட்டால் மனிஷா கொய்ராலா, மருத்துவம் படிக்க விரும்பிய போது , பிடிச்சா ஸ்டெத்து இல்லாட்டி டெத்து) என கேட்டுக்கொண்டிருப்பதால் மாற்றி எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். திருத்தி விடுகிறேன்.

\\வீரப்பா (அவர் மகன் பெயரில்) 'திசை மாறிய பறவைகள்' என்ற படமும் தயாரித்த ஞாபகம்.

\\

ஆம் அவர் மகன் பிஎஸ்வி ஹரிஹரன் பெயரில் தயாரித்தார்.