August 09, 2021

காதல் கோட்டை

1996 ஆம் ஆண்டு. ஜூலை மாதம்.எப்போதும் திருவல்லிக்கேணி மேன்ஷன்களுக்கு மே முதல் ஜூலை வரை புது வரவு நிறைய இருக்கும். தமிழகம் முழுக்க கல்லூரி இறுதி ஆண்டு முடித்தவர்கள் சென்னைக்கு வேலை தேடி வந்து இந்த மாதங்களில் மேன்சனில் அடைக்கலம் புகுவார்கள். அந்நாட்களில் சனிக்கிழமை இரவுகள் மேன்சன் மொட்டை மாடிகள் களைகட்டும். சிகரெட், மதுபானம் என தங்கள் அலைவரிசைக்கு செட் ஆகிறவர்களுடன் இணைந்து ஜோதியில் ஐக்கியமாகி அரட்டை அடித்துக் கொண்டு கொண்டு இருப்பார்கள். புதிதாக வந்தவர்களும் தயக்கத்துடன் தங்களுக்கு ஏற்ற குரூப்பில் சேர்வார்கள். இல்லை புதுக் குழுக்களை உருவாக்குவார்கள். அந்த நேரத்தில் தான் எந்தப் படம் இப்போ செகண்ட் ஷோ போகலாம், நாளைக்கு என்ன படம் போகலாம் போன்ற பேச்சுக்களும் கிளம்பும். அந்த வார சனிக்கிழமை, கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் ஒரு படத்தின் பெயர்தான் அடிபட்டது. காதல் கோட்டை. படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்கடா, விகடன்ல கூட அட்டைப்படத்தில போட்டு அம்பது மார்க் கொடுத்த்கிருக்காங்க, வித்தியாசமான கதையாம் போலாமா என்று ஒருமித்த குரல்கள் கேட்டன. ஆசை, வான்மதில நடிச்சிருக்காப்லேல அந்த அஜீத் தான் ஹீரோவாம், இங்க தேவிகலால தான் போட்டிருக்கான். பொட்டி மாதிரி இருக்கும். டிக்கெட் கிடைக்குமான்னும் தெரியலை. அப்பிடியே ஒரே ரோடு, திருவான்மியூர் தியாகராஜாக்கு போயிடலாம் என்று ஒரு குரூப் கிளம்பியது. உடன் சென்றாயிற்று. தியேட்டர் நெருங்க நெருங்க திருவிழா கூட்டம். அவ்வளவு பைக்குகள். எல்லாம் 21-25 வயது வாலிபர்கள். இத்தனைக்கும் அது படம் வெளியாகி மூன்றாவது சனிக்கிழமை என நினைவு. அஜீத்தின் முதல் படமான அமராவதியையும் தியேட்டரில் பார்க்கவில்லை, அடுத்து அவர் சிறிய வேடங்களில் நடித்த பாசமலர்கள், பவித்ரா, விஜய்யுடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படங்களையும் தியேட்டரில் பார்க்கவில்லை. ஆசை படம்தான் முதலில் தியேட்டரில் பார்த்த அஜீத் படம். மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்கம், பாடல்கள் ஹிட், எல்லாப் பக்கமும் நல்ல ரிவ்யூ வரவும் போய் பார்த்த படம். அதில் உடன் இருந்தது எல்லா வயதினரும் இருந்த கலவையான ஆடியன்ஸ். அடுத்து வந்த வான்மதி படம் மதுரை நாட்டியா திரையரங்கில் பார்த்தது. அதில் பள்ளி மாணவர்கள்,இளைஞர்கள் என இரண்டு கேட்டகிரி மட்டும் இருந்தார்கள். பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா… லியோ கப்பாசா பாடலுக்கு செம ஆட்டம் போட்டார்கள். அடுத்தடுத்து ரெண்டு படம் இவருக்கு நல்லா போகுதே என நினைக்கும் போதே கல்லூரி வாசல் வந்தது. அதில் பிரசாந்த் ஹீரோ. அஜீத் இரண்டாம் நாயகன். படம் சொதப்பியது. அதைவிட மோசம் அடுத்து வந்த மைனர் மாப்பிள்ளை. இந்த நிலையில் தான் காதல் கோட்டை வந்திருந்தது. முழுக்க முழுக்க இளைஞர் கூட்டம். சரி. ஹீரோவா பார்ம் ஆயிட்டாப்ல என தோன்ற வைத்தது. எப்படியோ டிக்கெட் வாங்கி உள்ளே போயாகி விட்டது. முதல் அரை மணி நேரம் படம் எதுவும் ஈர்க்கவில்லை. அதே சமயம் நெளியவும் வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் நுழைந்து, பின் கடைசி அரை மணி நேரம் கை நகத்தையெல்லாம் கடித்து, உலக கோப்பை இறுதிப்போட்டி இந்தியா சேஸிங்கைப் பார்ப்பது போல பரபரத்து இறுதியில் சுபமாய் முடிந்தது படம். படம் முடிந்து வெளியே வரும் போது, செட்டில் சிலர் அடுத்த வாரம் திரும்ப வரலாமா எனக் கேட்டனர். நிச்சயமா என்பதே பதிலாய் இருந்தது. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். படம் வெள்ளி விழா கொண்டாடியது. இத்தனைக்கும் அந்த வருடம் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் வந்தன. விஜய்யின் பூவே உனக்காக, கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித் தா, கமல்ஹாசனின் இந்தியன் என முக்கிய நடிகர்களின் மைல்கல் படங்கள் எல்லாம் அப்போது வந்திருந்தன. காதல் கோட்டை வெளியான பின் வந்த தீபாவளிக்கும் அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை என ஹிட் படங்கள் வந்தன. அத்தனையையும் மீறி தொடர்ந்து எங்காவது ஓடிக்கொண்டே இருந்தது காதல் கோட்டை. காதல் கோட்டை ஏராளமானவர்களுக்கு ஒரு திருப்பு முனையைத் தந்த படம். அஜீத்திற்கு ஏராளமான இளைஞர்களை ரசிகர்களாக பெற்றுத்தந்து இனி அவர் ஒரு நட்சத்திரம். அவரை நம்பி படம் எடுக்கலாம் என்ற அந்தஸ்தை வாங்கித் தந்தது. அந்நாட்களில் சென்னையில் பார்த்தால் சாப்ட்வேர் இளைஞர்களுக்கு இணையாக ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், மேக்ஸ்வொர்த் ஆர்சார்ட்ஸ், ஆர் பி ஜி செல்போன் விற்பனை பிரதிநிதிகள், பேஜர் விற்பனை பிரதிநிதிகள், மற்றும் அனைத்து மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள், மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ்கள் என ஏராளமான விற்பனைப் பிரதிநிதிகள் சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். காதல் கோட்டை அஜீத்தின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் அவர்களிடையே இன்ஸ்டண்ட் ஹிட். அஜீத் அணிந்து வரும் வெள்ளை முழுக்கை சட்டை, க்ரீம் கலர் பேண்ட், ஷூ என அவர்களுக்கும் எளிதாக செட் ஆனது. அஜீத்தும் அப்போது புரசைவாக்கம் போன்ற ஏரியாக்களில் ரெடிமேட் ட்ரஸ் ஷோ ரூம்கள் திறக்க அழைக்கப் பட்டார். யோசித்துப் பார்த்தால் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி மூன்று படங்களும் அஜீத்திற்கு கொடுத்த இளைஞர் படை இன்று வரை அவரைக் காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.காதல் கோட்டைக்கு அடுத்தே அவர் பல சுமார் படங்களைக் கொடுத்தாலும் அஜீத் என்ற பிராண்ட் அடி வாங்காமல் காதல் கோட்டை சில ஆண்டுகள் அவரைக் காத்தது. அகத்தியன் இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் சொன்ன போது, அவர் நான் உங்களோட மதுமதி படம் வாங்கி இருந்தேன். நல்ல லாபம். அது போல ஒரு கதை சொல்லுங்க எனக் கேட்டு வான்மதி படம் எடுத்தார். வான்மதி கமர்சியல் ஹிட் ஆகவும், துணிந்து காதல் கோட்டைக்கு ஒப்புக் கொண்டார். பலரும் ஒப்புக்கொள்ளத் தயங்கிய கதை, என்னய்யா பார்க்காமலேயே லவ்வா என நிராகரிக்கப்பட்ட கதை அது. வான்மதியின் வெற்றியே சரி பார்ப்போம் என சிவசக்தி பாண்டியனை ஒப்புக் கொள்ள வைத்தது. காதல் கோட்டை படத்தின் வெற்றி அகத்தியனுக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித்தரவில்லை, அடுத்தடுத்து பெரிய தயாரிப்பாளர்களை அவரை நோக்கி வரச் செய்தது. சிவசக்தி பாண்டியனை ஒரு நல்ல தயாரிப்பாளராக நிலை நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானுக்கும் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. இலக்கியவாதியான தங்கர் பச்சான், அஜீத் பத்திரிக்கை படிப்பது போல் வரும் காட்சியில் “காலச்சுவடு” புத்தகத்தைப் படிப்பது போல் அமைத்திருப்பார். பின்னர் இன்னொரு படத்தில் அவரது “ஒன்பது ரூபாய் நோட்டு” புத்தகம் இருக்கும். கதாநாயகி தேவயானிக்கும் காதல் கோட்டை தான் மிகப்பெரிய ப்ரேக். இன்று வரை கமலி கதாபாத்திரம் பேசப்படுகிறது. இதற்கடுத்து தொடர்ந்து நிறைய பெரிய படங்கள் கிடைத்து சில ஆண்டுகள் ராசியான கதாநாயகியாக வலம் வந்தார். இயக்குநர் மணிவண்ணனுக்கும் கூட இந்தப் படம் ஒரு திருப்பு முனை. ரங்கீலா ஊர்மிளா தெரியாம வயசுப்பையன் இருக்கலாமாடா என சமுதாய கிண்டலுடன் கூடிய அவர் கேரக்டர் ஹிட்டாக, அதன்பின் ஏராளமான படங்களில் அதே பாணியில் வலம் வந்தார். தலைவாசல் விஜய், கரண் ஆகியோருக்கும் காதல் கோட்டையின் வெற்றி பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இதையெல்லாம் விட காதல் கோட்டை படத்தின் வெற்றியை அளக்கும் இன்னொரு கருவி இருக்கிறது. பார்க்காமலேயே காதலுக்குப் பின் காதலுக்காக நாக்கை அறுப்பது உள்ளிட்ட ஏராளமான வித விதமான காதல் படங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இறங்கிக் கொண்டே இருந்தன, அவ்வளவு ஏன் படத்தலைப்பிலேயே அத்தனை காதல்கள். காத்திருந்த காதல், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலுக்கு மரியாதை, காதல் பள்ளி என. காதல் கோட்டை படத்தை 1996ன் காலப் பதிவு என்று சொல்லலாம். எஸ் டி டி பூத்கள், அப்போது பிரபலமாயிருந்த இரண்டே கார்களான மாருதி 1000, சியல்லோ, லேசாக ஊடுருவ ஆரம்பித்த செல்லுலார் என காட்சிப்படுத்தப்பட்ட படம். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் இந்தப் படத்தைப் பார்த்தால் இது சாத்தியமா எனத் தோன்றும். நிறைய காட்சிகள் ரெலவண்ட் ஆக இல்லாதது போல் தோன்றும். ஆனால் படத்தின் ஆன்மா, இதயத்தில் தொடங்கி கண்ணில் முடிவடையும் காதல். அது இக்காலத்திலும் சாத்தியம் தான். சமூக வலைதளங்களில் ஒருவரின் கருத்துக்களால் மட்டும் ஈர்க்கப்பட்டு பார்க்காமலும் காதல் வந்து கொண்டுதான் இருக்கிறது. பின்னர் நேரில் பார்த்து சுபமாகவும் முடிகிறது.

No comments: