July 18, 2016

ராஜாதி ராஜா

கேபிள் மூலம் வரும் சானல்களையே பெரும்பாலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த 90களின் இறுதியில் இப்படி ஒரு கதை சொல்வார்கள். ஒருவன் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆக்ஸிடெண்ட் ஆகி, தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று விட்டானாம். பல ஆண்டுகள் கழித்து குணமான அவனுக்கு, பழைய ஞாபகங்கள் ஏதும் இல்லாமல் போனதாம். ஒரு கைக்குழந்தைக்கு மூளையில் இருக்கும் தகவல் அளவுக்கே அவன் மூளையில் தகவல்கள் இருந்ததாம். எனவே தொடர்ந்து, ஞாபகத்தை வரவழைக்க எவ்வளவோ சிகிச்சைகள் செய்தார்களாம். எந்தப் பலனும் இல்லையாம். அதனால் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவன் வீட்டுக்கு வந்ததும் ஓ இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையா என்றானாம். வீட்டாருக்கு, ஆஹா நினைவு திரும்பிவிட்டதே என்று ஒரே சந்தோஷம். ஆனால் வேறு எதுவும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை. அப்பா, அம்மா, அவன் பெயர் கூட தெரியவில்லை. அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமை என்பதை மட்டும் சரியாகச் சொன்னான் என எல்லோருக்கும் குழப்பம். சிறிது நேரம் கழித்துத்தான் அதற்கு பதில் தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா ஓடிக்கொண்டிருந்தது.

ஆம் அந்த அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது. ஒரு மனிதனுக்கு எது வேண்டுமானாலும் மறந்து விடும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பகலில் ராஜாதி ராஜா போடுவது மட்டும் மறக்காது. அவன் ஜீனில் கூட அந்த செய்தி கலந்து விடும் என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.

முதன் முதலில் ராஜாதிராஜா படம் அறிவிக்கப் பட்ட போது ஓரளவு எதிர்பார்ப்பே இருந்தது. அப்போதெல்லாம் ஆண்டுக்கு மூன்று நான்கு ரஜினி படங்கள் வரும். இப்போது போல மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அல்ல. எனவே பட அறிவிப்பு வரும் போது ஏற்கனவே ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். இந்தப் பட அறிவிப்பின் போது கொடி பறக்குது படம் திரையரங்குகளில் இருந்தது. அந்தப் படமும் சரி, அதற்கு சற்று முன்னர் வெளியாகி இருந்த, ரஜினி நடித்த முதல் ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோனும் சரி பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் “ராஜாதி ராஜா” என்ற செய்தி கேள்விப்பட்டதும், இந்த டைரக்டர் ரஜினிக்கு செட் ஆவாரா எனவே ரஜினி ரசிகர்கள் பலரும் சந்தேகப்பட்டனர். பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச் சிமிழ், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே என ரிப்பீட் ஆடியன்ஸ் வரும் சில்வர் ஜூபிலிகளை அவர் கொடுத்திருந்தாலும் ரஜினியின் ஏரியாவான ஸ்டைல், சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் அவர் வீக். நல்ல திரைக்கதை, இளையாராஜாவின் பாடல்கள், நகைச்சுவை இதுதான் அவரது கோட்டை. எனவே எப்படியும் பாட்டு நல்லா இருக்கும். இளைய ராஜா சொந்தப் படம் வேறு, சரி பார்ப்போம். என்ற சராசரி எதிர்பார்ப்பே அந்தப் படத்துக்கு இருந்தது.

1989 ஐ தமிழ்சினிமாவின் தங்க வருடம் எனச் சொல்லும் அளவுக்கு ஏராளமான வெள்ளி விழாப் படங்களும், நூறு நாள் படங்களும் வெளிவந்தன. பிப்ரவரியில் வருசம் 16 வெளிவந்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மார்ச்சில் ராஜாதி ராஜா வெளியானது, வழக்கமான ஆள் மாறாட்டக் கதை என்றாலும் பாடல்கள், ரஜினி, நகைச்சுவை என மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிலாக்ஸாகப் போயி உட்கார்ந்து வரலாம்பா என பேசிக் கொள்வார்கள். அதற்கடுத்த மாதம் அபூர்வ சகோதர்கள், இரண்டு மாதம் கழித்து கரகாட்டக்காரன் என ஆல் டைம் பிளாக் பஸ்டர்களாக தொடர்ந்து இறங்கினாலும், ராஜாதி ராஜா சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. மதுரையில் ஒரே சமயத்தில் இந்த நான்கு படங்களும் வெவ்வேறு மூலைகளில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆர் சுந்தர்ராஜன் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்ற விதியை இந்தப் படம் மெய்ப்பித்து மேலும் ஒரு படி மேலே சென்றது. அந்த சமயத்தில் தான் கொடைக்கானலில் இருந்து தூர்தர்ஷன் ஒளிபரப்பு துவங்கி ஏராளமான வீடுகளில் கலர் டிவி வாங்கினார்கள். அவர்கள் அவ்வப்போது விசேஷ நாட்கள், உறவினர் வருகையின் போது வீடீயோ பிளேயர் மற்றும் சில கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் பார்ப்பார்கள். எங்க வீட்டுல ”டெக்கு” வாடகைக்கு எடுத்து படம் பார்த்தோம் என்று சொல்வது அந்நாளைய நடுத்தர வகுப்பு மக்களின் ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தது.

எப்படி அந்தக் காலத்தில் மக்கள் புது டேப் ரிக்கார்டர் வாங்கும் போது, ஒரு சுப்ரபாத கேசட்டை வாங்கிக் கொள்வார்களோ அது போல, இந்த டெக் எடுக்கும் போதெல்லாம் ராஜாதி ராஜா கேசட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்த டெக் கடையில் நான்கைந்து ராஜாதி ராஜா கேசட் வைத்திருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் வருசம் 16, அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரனோட ஒப்பிட்டால் ராஜாதி ராஜா சிறந்த படம் அல்ல. ஆனாலும் ரஜினி என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தப் படங்களுக்கு ஈடு கொடுத்து அந்நாட்களில் ஓடியது மட்டுமல்லாமல் தொடர்ந்து ரிப்பீட் ஆடியன்ஸ்களை பல ரூபத்தில் பெற்று வந்தது ராஜாதி ராஜா. அந்தப் படத்தில் ரஜினி ”மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி” பாடலில் அணிந்து நடித்த வெள்ளை சட்டை, வெள்ளை பேகி பேண்ட், சின்ன பெல்ட்,கூலிங்கிளாஸ் பள்ளி மாணவர்களிடையே செம ஹிட். பெரும்பாலானவர்கள் அடுத்த ஆண்டு வெள்ளைச் சீருடையை பேகி மாடலிலேயே தைத்தார்கள்.

பத்தாம் வகுப்பு வரை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடும் படி அருகில் உள்ள பள்ளியிலேயே படித்த நான், பதினொன்றாம் வகுப்பிற்கு ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன். முதல் ஒரு வாரம் எல்லாமே புதிதாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. எல்லோரும் சகஜமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு வாரம் கழித்து குரூப் குரூப்பாக பிரிந்து கொண்டார்கள். ஆறாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டலில் இருப்பவர்கள் தங்களுக்குள் சில குரூப்புகளாகவும், ஒன்பதாம் வகுப்பில் இருந்து படிப்பவர்கள் அவர்களுக்குள் சில பிரிவுகளாகவும் பிரிந்து கொண்டார்கள். பதினொன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்தவர்கள் ஊர் மற்றும் படித்த பள்ளி அடிப்படையில் தங்களுக்குள் சில பிரிவாக பிரிந்து கொண்டார்கள். நான் கிட்டத்தட்ட தனி மரமாக விடப்பட்டேன்.

பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் சில நாட்களிலேயே ஹாஸ்டல் வாழ்க்கை வெறுத்துப் போனது. டேஸ்காலர் மாணவர்களிடம் கிளாஸ் நேரத்தில் அரட்டை அடிக்க முடியாத படி ஆசிரியர்கள் எல்லாம் மிலிடரி ஆபிசர்களாய் இருந்தனர். என்னை வீட்டுக்கு அழைத்துப் போய் விடுங்கள் என கதறி வீட்டுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரும் எழுதிவிட்டேன். வீட்டில் இருந்து வந்து, சில நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விடும் இல்லையென்றால் ஊருக்கு கூட்டிப்போய் விடுகிறோம் என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

இந்நிலையில் தான் சரவணன் என்னும் நண்பன் கிடைத்தான். அவனும் பதினொன்றாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்தவன் தான். ஓரிரு வாரம் கழித்தே சேர்ந்திருந்ததால் அவனும் எந்த குரூப்புடனும் ஐக்கியமாகாமல் இருந்தான். மாலை வேளைகளில் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தது மனதை இலகுவாக்கியது. ஹாஸ்டல் பிடித்துப் போனது. சரவணன் நல்ல கலகலப்பான சுபாவம் கொண்டவன், சுயநலம் குறைவாக பொதுநலம் அதிகமாக எண்ணுபவன். நாளடைவில் எங்கள் குரூப்பில் இன்னும் ஒரு நண்பனும் சேர்ந்தான். நான் கமல் ரசிகன்,சரவணன் ஒரு அதி தீவிர ரஜினி ரசிகன். புதிதாய் சேர்ந்த சேகரும் ரஜினி ரசிகன். ஆனாலும் எனக்கும் சரவணனக்கும் இருந்த நட்பு நாள்தோறும் கூடிக் கொண்டே வந்தது. ரஜினி,கமல் சண்டை வந்தாலும் பரஸ்பரம் கிண்டல் கூட செய்து கொள்ள மாட்டோம். எங்களின் நட்புக்கு அடுத்துதான் சேகருக்கு இடம் இருந்தது.

எங்கள் ஹாஸ்டலில் அப்போது மாதம் ஒருமுறை வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து படம் திரையிடுவார்கள். அந்த மாதம் ராஜாதி ராஜா திரையிட்டார்கள். இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்தாச்சு என்று நான் ரூமிலிலேயே ரெக்கார்ட் எழுதிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். சரவணனும், சேகரும் படம் பார்த்துவிட்டு வந்தார்கள். ரூமிற்கு வந்தும் அவர்களிடையேயான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக நான் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன்.

அவர்களுக்கிடையே சிலாகித்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. தொடர்ந்து ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பணக்காரன்,அதிசயபிறவி, தர்மதுரை என இரண்டு ஆண்டுகளில் ரஜினி படங்கள் வந்து கொண்டே இருந்தன. அவர்களுக்கிடையேயான பேசு பொருளும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இருவருக்கிடையேயான நட்பில் மூன்றாவது ஆளாய் வருபவர் யாராவது ஒருவருடன் மிக நெருங்கி விட்டால் இன்னொருவருக்கு ஏற்படும் மனத்துயரம் அதிகமாக இருக்கும். ஏறக்குறைய காதலி, இன்னொருவனை காதலிப்பது போல சொல்லொண்ணா மனத்துயரத்தில் ஆழ்த்தும். அந்த துயரை அப்போது நான் அனுபவித்தேன்.

ஒரு வழியாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஹாஸ்டலில் சக மாணவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது அப்போது பெரிய சம்பிரதாயமாய் இருந்தது. ஒரு தாய் வயிற்றில் அடுத்துப் பிறப்போம் ரேஞ்சுக்கு எழுதிக் கொடுப்பார்கள். ஸ்டடி ஹவர்சில் இந்த கொஸ்டினைப் படிச்சிட்டு நாலு ஆட்டோகிராப் எழுதிட்டு அடுத்து அந்த கொஸ்டினைப் படிக்கணும் என்று ஷெட்யூல் போட்டெல்லாம் ஆட்டோகிராப் எழுதுவார்கள். பொதுவாக முதலில் பொது நண்பர்களிடம் வாங்கிவிட்டு, மிக நெருக்கமான நண்பர்களிடம் கடைசி நாள் அன்றுதான் வாங்குவார்கள்.

எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. சரவணன் நிச்சயம் சேகரை விட எனக்குத்தான் அதிக உணர்வுடன் எழுதித்தருவான் என. கடைசிப் பரிட்சையான பயாலஜியை முடித்துவிட்டு ஆட்டோகிராப் நோட்டை நீட்டினேன். அவன் நோட்டில், அவன் இல்லாவிட்டால் நான் ஊருக்கே திரும்பி இருப்பேன் என்பது முதற்கொண்டு என் நட்பையெல்லாம் கொட்டி இருந்தேன். அவனும் சம்பிரதாய வார்த்தைகளாய் சிலாகித்து எழுதி இருந்தான். அடுத்து நான் ஒரு குறுகுறுப்பில் சரவணன், சேகருக்கு என்ன எழுதி இருக்கிறான் என்று பார்த்தேன். ”இந்த விடுதியிலேயே என் ஆத்ம நண்பன் நீதான்” என்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தான்.

எனக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது. அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது.

May 31, 2016

விடுதியில் மாணவர்களை சேர்ப்பதன் அவசியம்

பத்தாண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது குறைந்து கொண்டு வருகிறது. –பெரும்பாலானவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடங்களில் இருந்து பேருந்தில் சென்று திரும்பும் தூரத்திலேயே கல்வி நிறுவனங்கள் அமைந்திருப்பதும் ஒரு காரணம். என்னைப் பொறுத்தவரையில் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் சேர்ந்து படிப்பது நல்ல பலனைத் தரக்கூடிய ஒன்று.

நம்முடைய மூளையின் உள்வாங்கும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம் ஆகியவை 21 வயது வரை மிகச் சிறப்பாக இருக்கும். அதன்பின்னர் சற்று குறையத் துவங்கும். எனவே இந்த 21 வயதிற்குள் நேரத்தை வீணடிக்காது பாடங்களைக் கற்றுக்கொள்வது அந்தத்துறையில் விற்பன்னராவதற்கு உதவும். விடுதியில் இருந்தால் நாம் கற்றுக் கொள்வதற்கான நேரம் அதிகமாகக் கிடைக்கும்.

இப்பொழுது மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுவர சராசரியாக இரண்டு மணி நேரம் ஆகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமும் ஆகின்றது. இந்த பயண நேரத்தில் ஆக்கபூர்வமாக படிக்க முடியாது. இந்த பயணத்தினால் உண்டாகும் உடல் அலுப்பால் வகுப்பில் பாடங்களை கவனித்தலும் குறையும், மாலையில் கவனமாகப் படிக்கவும் முடியாது.

மேலும் இந்த வயதுதான் நன்றாகப் பசியெடுக்கும் வயதும் கூட. இதில் காலை வேளையில் அவசர அவசரமாக சாப்பிட்டு ஓடுவதாலும், மதியம் டப்பாவில் கொண்டு சென்ற சாப்பாட்டை சாப்பிடுவதாலும் மாலையில் பயங்கர பசியெடுக்கும். இந்த நேரத்தில் அதிகமான நொறுக்குத்தீனிகளை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் இரவில் அதிக அளவு உணவினைச் சாப்பிடுகிறார்கள். இது அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள். உடலை உறுதி செய்ய வேண்டிய வயதில் இதைச் செய்வது, நாற்பது வயதிற்கு மேல் அவர்களை நோயாளியாக்கி விடும். மாறாக விடுதியில் இருக்கும் போது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஒழுங்கான கால வேளையில் சரியான உணவினைச் சாப்பிட்டு வருவது ஜீரண மண்டலத்தை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து விடும்.

அடுத்ததாக பல வீடுகளில் பிள்ளைகள் அடிப்படை வேலைகளைக் கற்றுக்கொள்வது கூட இல்லை. என் பொண்ணு சாப்பிட்ட தட்டைக் கூட தூக்கி வைக்க மாட்டா என்பதை பெருமையாகக் கூட சிலர் சொல்லுகிறார்கள். சில விவாகாரத்தான திருமணங்களிலோ கணவன் ஒரு டம்ளர் தண்ணி கூட தானே பிடிச்சுக் குடிக்காத சோம்பேறி போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. விடுதியில் இருக்கும் போது நமக்கான சில வேலைகளையாவது நாமே செய்து கொள்ளும் படி இருக்கும். முக்கியமாக ஆண்களுக்கு. அடிப்படை வேலைகளை செய்து, இந்த வயதில் முதுகு வளையாவிட்டால் பின் எந்த வயதிலும் முதுகு வளையாது.

விட்டுக் கொடுத்தல் என்பதும் இப்போது அருகிவரும் பழக்கமாக இருக்கிறது. நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்? என்ற மனப்பான்மையிலேயே பலரும் இருக்கிறார்கள். விடுதியில் ஒரே அறையில் இரண்டு மூன்று பேருடன் தங்கி இருக்கும் போது மற்றவர்களைப் பார்த்து விட்டுக் கொடுக்கும் மனோபாவம் வரும். மற்றவர்களின் குடும்ப நிலை, பழக்க வழக்கங்கள் தெரியவரும் போது அதனுடன் நம் குடும்பத்தை ஒப்பிட்டு நாம் எதில் பின் தங்கியிருக்கிறோம்? எந்த குணநலம் நம்மிடம் இல்லை என்ற ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளலாம். நாம் தனியே இருக்கும் போது நம் மூளை நம்மை அறியாமலேயே இதைச் செய்யும். இந்த சிந்தனைக்கான நேரம், வாய்ப்பு எல்லாம் டேஸ்காலராக இருக்கும் போது கிடைக்காது.

பையன்களுக்கு இன்னொரு வகையிலும் விடுதி வாழ்க்கை ஒரு நன்மையைக் கொடுக்கும். பதின்பருவத்தில் தந்தையின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு வரும். அது வளர்ந்து கொண்டே செல்லும். திருமணத்திற்குப் பின் மனைவி, என்ன உங்க வீட்டுல இப்படி பண்ணுறாங்க என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கும் போது அந்த வெறுப்பு இன்னும் அதிகமாகும். திருமணத்திற்கு முன்னால் பெற்றோரிடம் இருந்து சில ஆண்டுகள் பிரிந்திருப்பது நல்லது அது கல்லூரி காலகட்டமாயிருந்தால் இன்னும் நல்லது. ஏனென்றால் வேலை பார்க்கும்போது பிரிந்திருந்தால் கூட வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமை போன்றவற்றாலும் நம் காசில் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணம் வருவதாலும் பெற்றோர்களைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்யமாட்டார்கள். ஆனால் கல்லூரி விடுதியில் இருக்கும் போது அவர்கள் மீதான புரிதல் வரும். எந்த உறவிலுமே சிறு பிரிதல்கள் உறவை வலுவாக்க அவசியம்.

எல்.கே.ஜி தொடங்கி பணி ஓய்வு பெறும் வரை கூட காலையும் மாலையும் ஒரு செவ்வகத்தின் வழியாகவே உலகைப் பார்த்துக் கொண்டு போகிறவர்கள் அதிகம். பள்ளி வேன் தொடங்கி, கல்லூரி பேருந்து, அலுவலகப் பேருந்து, பெரிய பதவிக்கு வந்த பின்னர் கார் என அந்த ஜன்னலின் வழியாகப் பார்த்தே நாம் பல ஆண்டுகளைத் தொலைத்து விடுகிறோம். சில ஆண்டுகளாவது பிரயாணம் இல்லாமல் நடந்து கொண்டு 360 டிகிரியிலும் சூழலை அனுபவித்துக் கொண்டு வாழ்வது நல்லதுதானே?

May 26, 2016

தமிழ்சினிமா நடனம் - 90களில்

தமிழ்சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து பல ஆண்டுகள் வரை கதாநாயகனுக்கு தேவையான முக்கிய தகுதியாக நடனம் இருந்ததில்லை. எம்.கே.தியாகராஜா பாகவதர், பி யூ சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் என ஆரம்ப காலகட்டத்தில் பாடல்களைப் பாடுவது தகுதியாகவும், பின்னர், எம்ஜியார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்,எஸ் எஸ் ராஜேந்திரன் காலத்தில் நடிப்பு, தோற்றம், வாள் வீச்சு போன்ற சண்டைக்காட்சிகள் அறிந்திருத்தல் ஆகியவை தகுதியாகவும் பார்க்கப்பட்டன. நடனத் திறமையானது ஒரு நடிகனுக்கு தேவையான முக்கிய திறமையாக பார்க்கப்படவில்லை. கதாநாயகி ஆடும்போது தேவையான முக பாவனைகளை காட்டினால் போதும் என்ற நிலை இருந்தது.

வைஜெயந்தி மாலா, லலிதா- பத்மினிராகினி என நன்கு நடனம் ஆடத்தெரிந்த கதாநாயகிகள் திரையுலகில் இருந்த போது அவர்களுக்கு ஈடாக நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் அப்போது இல்லை. சந்திரபாபு, நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மட்டும்  மேற்கு உலக நடன பாதிப்பில் நடனமாடி வந்தார்கள்.
அடுத்து வந்த கமல்ஹாசன்ரஜினிகாந்த் காலகட்டத்தில் பொதுவாக நடனத்தை நாயகிகளுக்கும், சண்டைக்காட்சிகளை நடிகர்களுக்கும் பிரித்துக் கொடுத்திருந்தார்கள் அப்போதைய இயக்குநர்கள். இந்தச் சூழ்நிலையில் நன்கு நடனம் ஆடத்தெரிந்த கமல்ஹாசன் போன்றோர் கூட அதை ஒரு தனித் திறமையாக புரஜெக்ட் செய்ய முடியவில்லை. சலங்கை ஒலி போல ஓரிரு படங்களில் மட்டும் அதைக் காட்ட முடிந்தது. சுற்றியுள்ள அனைத்து நடிகர்களும் நாயகி ஆடிக் கொண்டிருக்கும் போது  நடந்து கொண்டோ,உடற்பயிற்சி செய்து கொண்டோ அல்லது முகத்தால் மட்டும் நடனமாடிக் கொண்டிருக்கும் போது, அவரும் தன் எல்லையை சுருக்கிக் கொண்டார்.

80களின் இறுதி வரை இந்தப் போக்குதான் இருந்தது. புலியூர் சரோஜா, தாரா, கிரிஜா, கலா மாஸ்டர் போன்றவர்கள் ஹீரோயின் ஆடும் நடனத்திற்குத்தான் பெரும்பாலும் ஸ்பெசலிஸ்டாக இருந்தார்கள். ஜோதி லட்சுமி, ஜெயமாலினி,சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி நடனம் ஆடும் நடிகைகள் தொடர்ந்து பீல்டில் இருந்து கொண்டே இருந்தார்கள். சின்னா போன்ற மாஸ்டர்கள் கூட கதாநாயகிகளுக்கு நடனம் அமைக்க முயற்சி எடுத்துக் கொண்ட அளவுக்கு நாயகர்களுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஜான் பாபு, சுந்தரம் மாஸ்டர் மட்டும் ஓரளவு நாயகர்களுக்கும் சிரத்தை எடுத்துவந்தனர்.

இந்நிலையில் தான் 90கள் துவங்கியது. சுந்தரம் மாஸ்டரின் மகன்கள் பிரபுதேவாவும், ராஜு சுந்தரமும் நடனம் அமைக்கத் தொடங்கினார்கள்.

91 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தில்ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லேபாடலுக்கு பிரபுதேவாவும் ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் பாடலுக்கு ராஜு சுந்தரமும் ஆடியிருந்தார்கள். ஏப்ரல் மேயிலே பாடலில் வந்த நடனம் எல்லோருக்கும் பிடித்தமானதாய், புதிதாய் இருந்த்து. பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதுதான் அப்போது பேச்சாய் இருந்த்து.

92 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு வெளியான சூரியன் மற்றும் ரோஜா ஆகிய படங்கள் புதுவிதமான மூவ்மெண்ட்களோடு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. அதிலும் குறிப்பாக சூரியனின்லாலாக்கு டோல் டப்பி மாபாடலில் பிரபுதேவா ஆடிய நடனம் எல்லோரையும் கவர்ந்தது. சூரியன் படத்தின் ஹைலைட்டாக அந்த நடனம் அமைந்தது. ரோஜாவில் ராஜு சுந்தரம் ஆடிய ருக்கு மணியே ருக்கு மணியேவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த பாடலில் பாட்டிகளை ஆட வைத்த்தாக பலர் முகம் சுளித்தாலும் இளைஞர்கள் ஆடிய  ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

இதற்கடுத்த வெளியான வால்டேர் வெற்றிவேலில் பிரபுதேவா ஆடிய சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது பாடலும், ஜெண்டில்மேனில் ஆடிய சிக்கு புக்கு ரயிலேவும் தமிழ்சினிமாவின் ஆட்டத்தரத்தை ஒரு படி உயர்த்திவிட்டன. அதன் பின்னர் தமிழ் ரசிகர்களுக்கு நடனத்தில் நளினமும், வேகமும் அத்தியாவசியமாகின.

பெண்கள் நடனம் ஆடும் போது நளினம் தான் முக்கியம் அங்கே வேகத்துக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அதி வேகத்துடன் ஆடினால் சில அசைவுகள் விரசமாகக் கூட முடியும். ஆனால் ஆணின் ஆட்டத்தில் வேகம் அதிகமாக அதிகமாக பார்ப்பவரும் எழுந்து ஆடிவிடுவார்கள். பிரபுதேவா ஆண்களின் ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார். பெண்களின் ஆட்டத்
திலும் நளினம் கெடாது வேகத்தைக் கூட்டினார்.

இந்து மற்றும் காதலன் ஆகிய படங்கள் பிரபுதேவாவின் நடனப் புகழை இன்னும் ஒரு படி உயர்த்திய படங்கள். இந்தப் படங்களில் கிளாசிக்கல், கானா உள்ளிட்ட எல்லா விதமான நடனங்களையும் ஆடியிருப்பார். அப்போதைய கல்லூரி விழாக்களில் கடவுள் வாழ்த்து கூட இருக்குமோ என்னவோ தெரியாது ஆனால் முக்காபுலா கண்டிப்பாய் இருக்கும்.

இதனால் அதுவரை டான்ஸ் என்று பெயர்பண்ணிக்கொண்டிருந்த பல நடிகர்கள் கேலிக்குள்ளானார்கள். மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் அவ்வாறு மெதுவாக ஆடுபவர்களை மேடையில் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். ஒரு நாயகன் வந்தால் அவனுக்கு நடனம் ஆடத் தெரியுமா என்று பார்க்கும் நிலையும் இவர்களால் வந்தது.

90கள் ஆரம்பித்த போது இன்னொரு மாற்றமும் நடந்தது. அதுதான் 35 எம் எம்மில் படம் எடுத்துக் கொண்டிருந்த பலரும் சினிமாஸ்கோப்புக்கு மாறினார்கள். அகன்ற திரையில் நாயகனும் நாயகியும் ஆடினால் ஏகப்பட்ட காலியிடம் மீதமிருக்கும். நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர்கள் என்றால் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.  ஆனால் ஆவரேஜாக ஆடினால் கூட பிரேம் நன்றாக வராது. எனவே இடைவெளியை நிறைக்க குரூப் டான்சர்களைப் பயன்படுத்தினார்கள். 90களை குரூப் டான்சர்களின் பொற்காலம் என்று கூடச் சொல்லலாம். படத்திற்கு குறைந்தது மூன்று பாடல்களாவது குரூப் டான்சர்கள் உள்ள பாடல்களாக அமைந்து விடும்.

இந்த 90களில் ரஹ்மான் அறிமுகமாகி வேகமான பீட் உள்ள பல பாடல்களை அளித்தார். அந்த பாடல்களுக்கு நல்ல நடனம் ஆடத்தெரிந்த  நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதே போல தேவாவும் வேகமான பீட்கள் உடைய கானா பாடல்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். இதற்கும் நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர்கள் தேவைப்பட்டார்கள், இதனால் நாயகனுக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் நன்கு நடனம் ஆடும் நடன உதவியாளர்கள் ஆட்த் தொடங்கினார்கள், இந்த காலகட்டத்தில் சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் வந்துவிட்ட படியால் மீண்டும் மீண்டும் அந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகத் துவங்கின, இதனால் மக்கள் மனதில் உதவியாளர்களின் முகம் பதியத்துவங்கியது. அந்தப் பாட்டுல ஆடினானே அவன் தான் இதுலயும் ஆடுறான் என்றெல்லாம் பேசத் துவங்கினார்கள்.

இந்த கியுரியாசிட்டியை அறிந்த பத்திரிக்கைகள் கூட அவர்களைப் பேட்டி எடுத்து போடத்துவங்கினார்கள்., மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, நினைவிருக்கும் வரை என பிரபுதேவாவின் நடனங்கள் தொடர்ந்து ஹிட்டாக எல்லா நடிகர்களும் நடனம் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நினைவிருக்கும் வரையில் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பாடலும், காத்தடிக்குது காத்தடிக்குது பாடலும், படச் சூழலில் கற்பனையைக் கலந்து படமாக்கப்பட்டிருந்தது.

இந்த மாற்றத்தை பி சி ஸ்ரீராமால் ஒளிப்பதிவுத் துறைக்கு 80களின் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்துடன் ஒப்பிடலாம். பாலுமகேந்திரா, அசோக் குமார் போன்ற திறமையான கேமிராமேன்கள் இருந்தும் ஸ்ரீராமின் வருகைக்குப் பின்னரே யார் காமிரா என்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்ட்து. பட ஒளிப்பதிவின் தரமும் படிப்படியாக கூடியது. அதே போலத்தான் கமல்ஹாசன் போன்றோர் இருந்தாலும் பிரபுதேவாவின் வருகைக்குப் பின்னரே நடன இயக்குநர்களும் தமிழக வீடுகள் அறிந்த பெயரானார்கள்.
90களின் மத்தியில் இன்னொரு போக்கும் தொடங்கியது. அதுதான் கிளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பாடலை வேகமான தாளக்கட்டில்  வைப்பது. மெதுவான தாளக்கட்டாய் இருந்தால் எந்தரித்து புகை பிடிக்க போய்விடுவார்கள் என இந்த தந்திரத்தைக் கையாண்டார்கள் இயக்குநர்கள். இந்தப் பாடலை நாயகனே ஆடினால்தான் ரசிகர்களை உட்கார வைக்க முடியும் என்ற நிலையில் நாயகனுக்கு நடனத்திறமை அவசியமாகிப் போனது.

இந்த நடன மறுமலர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் பதிந்த நாயகர்களில் விஜய் முக்கியமானவர். வேகமான நடனமே அவருக்கு ஆரம்பகாலத்தில் ஒரு அடையாளத்தைத் தந்தது. இந்த மாஸ்டர்களால் நடந்த இன்னொரு மாற்றம், கவர்ச்சிப் பாடல்களுக்கு ஆட என இருந்த நடிகைகள் குறைந்தது. 80களில் எல்லாம் கமர்சியல் படங்களில் நிச்சயம் ஒரு கவர்ச்சி நாயகி ஆடும் பாடல் இருக்கும். படம் இரண்டாம், மூன்றாம் ரவுண்ட் ஓடும் இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அவர்களின் படமே பிரதானமாய் இருக்கும். ஆனால் 90களில் நாயகிகளே அவர்களுக்கு இணையாக கவர்ச்சியாக ஆட ஆரம்பித்ததால் கவர்ச்சி நாயகிகளுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. ரம்பா,சிம்ரன் போன்ற நாயகிகளுக்கு இவ்வகை நடனம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது.
இந்த நடனங்கள் சமூகத்தில் எல்லாப் பகுதியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். கல்லூரி கலைவிழாக்களில் போக் டான்ஸ், வெஸ்டர்ன் டான்ஸ் போன்றவை மிக முக்கியம் என்ற நிலை ஏற்பட்ட்து. அதற்கு முன் நாடகம்,இசை நிகழ்ச்சி, பட்டி ம்ன்றம், வழக்காடு மன்றம்,கரகாட்டம் என இருந்த கோவில் திருவிழாக்களில் ஆட்லும் பாடலும் நிகழ்ச்சி அத்தியாவசியமான ஒன்றாயிற்று. திருவிழாக்களின் ஹைலைட்டே ஆடல் பாடல் நிகழ்ச்சிதான் என மாறியது. நாயகர்களைப் போல வேடமிட்டு அவர்களின் மேனரிசங்களோடு ஆடினாலும், நல்ல நடனங்களை ஆட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது

இந்த நடன மறுமலர்ச்சியால் பல பாதிப்புகளும் உண்டு. முந்தைய கால கட்டப் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஆடும் போது சிறு இடைவெளி இருக்கும். 90களுக்குப் பிறகு அது வெகுவாக குறைந்தது. ஏன் இல்லாமல் கூடப் போனது. அங்கங்கள் உரசுதல் போன்றவை மட்டுமல்லாது ஏராளமான விரசமான அசைவுகளும் புகுத்தப்பட்டன. தொலைக்காட்சியில் சத்தமில்லாமல் இந்த நடனங்களைப் பார்க்கும் போது விரசம் அதிகரித்துத் தோன்றும். தொடர்ச்சியாக இந்நடனங்களைப் பார்க்கும் சமுதாயத்தில் கலாச்சார மதிப்பீடு சற்று குறைந்து விடுகிறது. உதாரணத்திற்கு ஆண்/பெண்களின் பின்புறத்தை பார்வையாளனை நோக்கி ஆபாசமாக அசைக்கும் நடனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பிரபுதேவா, ராஜு சுந்தரத்தின் உதவியாளர்களான திணேஷ், ஏபெல். ஜான் மட்டுமல்லாது  ராகவேந்திரா லாரன்ஸ், கல்யாண் என தொடர்ச்சியாக புது நடன இயக்குநர்கள் தொடர்ந்து அறிமுகமாகி, அதை ஒரு பாரம்பரியமாகவே ஆக்கிவிட்டார்கள். தற்போது தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடனத்தின் அடிப்படையிலான ரியாலிட்டி ஷோக்களுக்கும் இந்த 90களில் நடனத்துறையில் ஏற்பட்ட மாற்றமும்தான் காரணம்.