பட்டன் ஃபோன் காலத்தில் பணியாற்றிய ஒரு அலுவலகத்தில் உடன் சில ஆண்டுகள் பணியாற்றிய நண்பர். டச் ஸ்கிரீன் வந்தவுடன், மீண்டும் நட்பு துளிர்விட்டது.
பெரிய உரையாடல்கள் எதுவும் இருக்காது. வாட்ஸ் அப்பில் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வோம்.
வேலை முடிந்து, ஒரு பேபி கிஃப்ட் செட் வாங்கிக்கொண்டு, மருத்துவமனையை அடைந்து அந்த ப்ளோர் நர்சிங் ஸ்டேஷனில் ரூம் நம்பர் சொல்லி கேட்டபோது அங்கே இருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
ரூம் கதவைத் தட்டி, அந்த கிப்ட் செட்டை நண்பரிடம் கொடுத்து விட்டு, இரண்டு வார்த்தைகள் சம்பிரதாயமாக பேசிவிட்டு கிளம்ப யத்தனித்த போது,
தாழ்ந்த குரலில் எனக்காக ஒரு மணி நேரம் இங்கே இருக்க முடியுமா என்று கேட்டார். நானும் மனைவியும் வீடு வரை சென்று விட்டு வருகிறோம். அதுவரை இங்கே இருக்க முடியுமா என்றார்.
எனக்கு சங்கடமாக இருந்தது. நண்பரின் மகள் எனக்கு பழக்கம் இல்லாதவர். பேசியதே கிடையாது.
உங்கள் பெண்ணிற்கு ஓகேவா என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்றேன். அவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் இல்லையென்றால் கூடுதலாக அரை மணி நேரத்தில் வந்து விடுவோம். பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
எனக்கு ஒரு பக்கம் சங்கடம் என்றால் இன்னொரு பக்கம் ஆச்சரியம். குழந்தை பிறந்து சில நாட்கள் ஆகிறது. யாராவது உறவினர்கள் கூட இருப்பார்கள்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தையின் தந்தை உடன் இருப்பாரே அவரையும் காணவில்லை.
சுற்றத்தினர் யாரும் இல்லாவிட்டாலும் கூட நண்பர் மனைவியின் தோழிகள் கூட யாரும் உதவிக்கு இல்லையா என்று ஒரு கேள்வி வந்தது.
இதை எப்படி கேட்பது என்று யோசித்து விட்டு, மாப்பிள்ளை என்னம்மா பண்றார் என்று ஆரம்பித்தேன். அவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு,
அங்கிள் நீங்கள் ரொம்ப தயங்கவெல்லாம் வேண்டாம். அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். நீங்கள் ரிலாக்ஸாக மொபைல் பார்த்துக் கொண்டிருங்கள். என்று சொல்லிவிட்டு, குழந்தையின் பக்கம் திரும்பி படுத்தார்.
அரை மணி நேரம் சென்றது. எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய மவுனம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஏதாவது காபி, டீ வாங்கி வரட்டுமா என்று கேட்டேன்.
வேண்டாம் அங்கிள். இரவு சாப்பாடு நேரடியாக சாப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஒரு மணி நேரம் கடந்தது. அவர்கள் இருவரும் வரவில்லை.
கையில் மொபைல் இருக்கும்போது கடிகாரம் என்னை எதுவுமே செய்வதில்லை.
சிறிது நேரம் கழித்து அவராகவே ஆரம்பித்தார்.
அங்கிள், உங்களுக்கு அம்மாவுடைய பிராப்ளம் தெரியும் இல்லையா என்று கேட்டார்.
இல்லையம்மா உங்க அப்பா எதுவும் சொன்னதில்லை என்றேன்.
அம்மாவுக்கு ஓசிடி ப்ராப்ளம் இருக்கு. ரொம்ப எக்ஸ்ட்ரீம் லெவல்.
பயங்கரமா சுத்தம் பார்த்துட்டே இருப்பாங்க. குளிக்கிற சோப்பு, துவைக்கிற சோப்பு, ஷாம்பு எல்லாத்தையும் மிக்ஸியில் போட்டு அடிச்சு, ஒரு சொல்யூஷனாக்கி, ஒரு பெரிய வாளி தண்ணீரில் கலந்து வைத்து விடுவார்கள். நாங்கள் வெளியில் சென்று வரும்போது அதில் குளித்துவிட்டு, வேறு உடை மாற்றிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளே செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் டென்ஷனாகி விடுவார்கள். நானும் அப்பாவும் மட்டுமல்ல வீட்டு வேலைகளுக்கு உதவிக்கு வரும் அக்காவும் அப்படித்தான் செய்ய வேண்டும். இதனால் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவே அந்தப் பகுதி பெண்கள் தயங்குவார்கள். தினமும் வீட்டை துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் எல்லாமே அசுத்தமாகிவிட்டன தூக்கி எறியுங்கள் என்பார். புதிதாக எல்லாமே வாங்க வேண்டும்.
தன்னுடைய உடைகள் அனைத்தும் அழுக்காகி விட்டன.எல்லாவற்றையும் தூக்கி போட வேண்டும் என்று அடம் பிடிப்பார். புது செட் எடுக்க வேண்டி இருக்கும்.
வீடே மிக அசுத்தமாக இருக்கிறது இங்கே இருந்தால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர் விட்டு அழுவார்.
உடனே நாங்கள் வேறு வீடு தேட வேண்டிய நிலை உருவாகிவிடும். அந்த காலகட்டத்தை சமாளிப்பதற்காக சில சமயம் ஹோட்டல்களில் ரூம் எடுத்துக் கூட தங்கி இருக்கிறோம்.
பின்னர் அப்பா நிறைய முயற்சி எடுத்து, நிறைய கவுன்சிலிங் எல்லாம் கூட்டி போனார். அங்கே மருத்துவமனைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடப்பிடிப்பார் அம்மா. கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். பின்னர் திடீரென அதிகரித்து விடும்.
உறவினர்கள் யாராவது வந்துவிட்டால், அவர்களும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பார். அதனால் யாருமே வரமாட்டார்கள்.
ஒருமுறை எங்கள் தாய் மாமா குடும்பத்துடன் வந்தார். அவர் குழந்தை செருப்புடன் படியேறிவிட்டது என்று பயங்கரமாக ஆக்ரோசப்பட்டார். அத்தோடு, அத்தை இனிமேல் இந்த வீடு இருக்கும் திசையிலேயே நாங்கள் முழிக்க மாட்டோம் என்று குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
இது போன்ற சம்பவங்களால், அக்கம்பக்கத்து விட்டார்கள், உறவினர்கள் என்று யாருமே எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. என் அம்மாவும் யார் வீட்டுக்கும் போக மாட்டார் எந்த விசேஷங்களுக்கும் போக மாட்டார். இவ்வளவு ஏன், என் கணவரின் வருகையே அவருக்கு பிடிக்காது. வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்வார். அவர் கிளம்பிய உடன் எல்லாவற்றையும் அலசி விட சொல்வார். எனக்கெல்லாம் அவ்வளவு வருத்தமாக இருக்கும்.
ஆனால் என் கணவர் பெருந்தன்மையானவர். அதை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் அத்தை, மாமா சங்கடப்பட்டுக்கொண்டு வர மாட்டார்கள் என்றார்.
அப்போதுதான், நர்சிங் ஸ்டேஷனில் இந்த அறை எண்ணை கேட்டதற்கு ஏன் ஆச்சரியப்பட்டார்கள் என்று தெரிந்தது.
தொடர்ந்து அவர், என் அம்மா தன்னுடைய கழிவறையை மட்டும்தான் உபயோகிப்பார். வேறு எங்குமே உபயோகிக்க மாட்டார். அதனால் சற்று தூர பிரயாணங்கள் என்றால் டயாபர் அணிந்து கொள்வார.
நாங்களும் கூட அவர் கழிவறைக்கு செல்ல மாட்டோம். இந்த மருத்துவமனை கழிவறை அவருக்கு அலர்ஜி. அதனால் காலையிலிருந்து தண்ணீர் கூட அதிகம் குடிக்காமல் இருந்தார்.
இப்போது அப்பா அவரை அழைத்துச் சென்று இருப்பது கூட வீட்டில் இருக்கும் கழிவறையை பயன்படுத்தத்தான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
இரண்டு மணி நேரம் கழித்து நண்பர் வந்தார். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். கீழே வரை வருகிறேன் என்று உடன் வந்தார் நண்பர்.
அவரிடம் உண்மையிலேயே நீங்கள் பெரிய மனிதர். பெரிய தியாகி என்றேன்.
அதற்கு அவர் உனக்கு சுகர் இருக்கிறது என்று சொன்னாயே எத்தனை வருடமாக இருக்கிறது என்றார்?
12 வருடமாக இருக்கிறது என்றேன். அதற்கு முன்னர், அடிக்கடி கேசரி கொண்டு வருவாயே, வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் என்று செய்தார்கள் என்று. மிக சுவையாக இருக்கும்.
அதை இப்போதும் உன் மனைவி அடிக்கடி செய்கிறாரா என்று கேட்டார்.
எனக்கு சுகர் வந்த பின்னால் அதை செய்வதில்லை பிள்ளைகளின் பிறந்தநாள் அன்று மட்டும் கொஞ்சம் செய்வார் என்றார்.
முன்னர் வேலை பார்க்கும் இடத்தின் அருகில் இருந்த ஒரு சர்பத் ஃபேக்டரியில் நன்னாரி சர்பத் வாரம் வாரம் வாங்கிக் கொண்டு செல்வாயே உன் மனைவிக்கு பிடிக்கும் என்று இப்போதும் அப்படியா என்று கேட்டார்.
இல்லை எனக்கு சுகர் வந்த பின்னால் அவர் அதை குடிப்பதில்லை. நான் அதைப் பார்த்து குடித்து விடுவேன் என்று என்றேன்.
அதே போல சாப்பாடு உனக்கு ஏற்ற மாதிரி தானே எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்? அவருடைய விருப்ப உணவுகள் எதையாவது சமைக்கிறாரா? என்று கேட்டார்.
இல்லை எல்லாமே எனக்கு ஏற்ற மாதிரி தான். எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு விட்டார் என்றேன்.
உனக்கு சுகர் வந்த பின்னால் அவருடைய நடவடிக்கைகள் எப்படி மாறின என்றார்.
முன்னர் அவ்வப்போது வீட்டு வேலைகளில் உதவி செய்வேன். கடைகளுக்கு எல்லாம் சென்று வருவேன். இப்போது பெருமளவு வேலைகளை அவரே பார்த்துக் கொள்கிறார்.
வேலை செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக ரிலாக்ஸாக நடந்து போய் வாருங்கள், உடலுக்கு நல்லது என்று சொல்கிறார். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாளுவது போல தான் என்னை என் மனைவி பாதுகாக்கிறார் என்றேன்.
அதுபோலதான். உனக்கு உடல்நல குறைபாடு. என் மனைவிக்கு லேசான மனநல குறைபாடு. உன்னை எப்படி கவனம் எடுத்து பாதுகாக்கிறார்களோ அதுபோல தான் நானும் என் மனைவியை பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
பைக் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம். பைக்கை கிளப்பினேன்.
அப்போது சொன்னார்.
நான் செய்வது தியாகம் அல்ல. அவர் என் மனைவி என்று.
No comments:
Post a Comment