December 08, 2025

விராட் கோஹ்லி

 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கப் போகும் சமயத்தில் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கை நோக்கி இந்தியாவே காத்துக் கொண்டிருந்த நேரம்‌. கிங்பிஷர் எப்படி தனக்கு வேண்டிய ஒரு கொழுத்த மீனை குறி பார்த்து கவ்வுமோ அப்படி விஜய் மல்லையா தனது பெங்களூர் அணிக்காக கவ்விய மீன் விராட் கோலி.

அப்போது 19 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் உலகச் சாம்பியன் ஆகி இருந்தது இந்தியா. அதன் கேப்டனை தனது அணிக்காக தட்டி தூக்கினார் மல்லையா.
முதல் சில போட்டிகளில் அவர் விளையாடும் பொழுது ஒரு ஹைப்பர் ஆக்டிவ் டீனேஜர் போன்ற பிம்பம் தான் மனதில் விழுந்தது.
அதன் பின்னர் அவரது திறமைகள் வெகுவாக புகழப்பட்டாலும், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காம்பீர் உடன் சேர்ந்து, சேவாக் சச்சின் விக்கெட்டுகள் போயிருந்த நிலையில் ஒரு இக்கட்டான சூழலில் அவர் ஆடிய ஆட்டம், அட போட வைத்தது.
சச்சின் சேவாக் யுவராஜ் காம்பீர் ஆகியோர் தங்கள் முழுத் திறமையுடன் விளையாடிக் கொண்டிருந்த காலம்‌ அந்த உலகக்கோப்பை. அதில் தனித்து தெரிவதற்கே ஒரு தனித்திறமை வேண்டும்.
அதன் பின்னர் தான் கோலியின் உண்மையான விஸ்வரூபம் தெரியவந்தது. ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கிய பின்னர் ஒவ்வொரு அணிக்கும் மிடில் ஆர்டரில் ரொட்டேட் செய்து தேவையானபோது அதிரடி காட்டி வெற்றி கோட்டிற்கு அழைத்துச் செல்ல
மேற்கு இந்திய தீவில் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தானில் மியான்டாட் இலங்கையில் அரவிந்த டி சில்வா
ஆஸ்திரேலியாவிற்கு முதலில் டீன் ஜோன்ஸ் பின்னர் ரிக்கி பாண்டிங் என ஜாம்பவான்கள் இருந்தார்கள்.
இந்திய அணியில் அசாருதீன் இருந்தாலும் அவரை முழுமையாக நம்ப முடியாது. தவறான ஷாட்கள் அடிக்கடி ஆடுவார். டிராவிட் வேகத்தடையாகவே இருப்பார். அவர் சூழல் அப்படி. யுவராஜ் ஆட்டத்தின் பிற்பாதிக்கு தூணாக இருப்பார்‌
ஆனால் மேற்கூறியவர்களை போல எதிரணியை அச்சமூட்டி இவர்கள் இருக்கும் வரை வெல்ல முடியாது என்கிற எண்ணத்தை கொடுக்கும் அளவிற்கு நம்மிடம் அந்த No.3 பொசிஷனில் ஆட ஆளில்லை.
அந்த இடத்திற்கு வராது வந்த மாமணியாக வந்தவர் தான் கோலி. அதுவும் முக்கியமாக சேஸிங்கில்‌. அதில் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் அடிக்கடி சொதப்பும்.
பிரஷர் எல்லாம் எனக்கு பிரியாணி மாதிரி என்று சேசிங்கின் அத்தனை பிரஷரையும் தான் வாங்கிக்கொண்டு, இந்திய அணியை எத்தனையோ மகத்தான சேஸ்களில் வெற்றி கோட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
கபில்தேவ் நம்மாலும் ஜெயிக்க முடியும் என்று இந்தியாவிற்கு காட்டியவர். கங்குலி நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை எதிர்க்க வேண்டும் என்றவர். தோனி எந்த சூழலிலும் பதறாமல் எப்படி வெற்றியைப் பெற வேண்டும் என்பதை செய்து காட்டியவர்.
கோலி இந்தியர்களுக்கு கடத்தியது ஒன்று. வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி. அவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. அந்த உத்வேகம் இந்தியாவிற்கு பல டெஸ்ட் வெற்றிகளை வெளிநாடுகளில் பெற்றுக் கொடுத்தது.
இந்த இளைய தலைமுறைக்கு, வெற்றி ஒன்றுதான் இலக்கு அதில் சமரசமே கூடாது, உணர்ச்சிகளை போட்டி களத்தில் காட்டுவதில் தவறே இல்லை என்கிற செய்தியை கடத்தியவர் கோலி.
ஆனால் அதற்கு எதிர் மாறாக களத்தை விட்டு வெளியே வந்தவுடன் இயல்பான ஒரு மனிதராக இருப்பார். அதுதான் நாமும் பின்பற்ற வேண்டியது. விளையாட்டோ,தொழிலோ, வேலையோ அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி உடனேயே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பின்னான நம்முடைய குடும்ப மற்றும் சமூக வாழ்வில் Down to earth ஆக இருக்க வேண்டும்.
கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு பண்பு, தன் வாழ்க்கை இணையரை வெகுவாக மதித்தல். எந்த சூழலிலும் அவர் தன் மனைவிக்கு கொடுக்கும் மதிப்பு என்பது எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது.

No comments: