நேற்று அலுவலகம் முடிந்து பேருந்திலிருந்து இறங்கும் பொழுது மெலிதான சாரல். அவ்வப்போது நண்பர்களுடன் இணைந்து குடிக்கும் டீக்கடையில் ஒதுங்கினேன். வடை,பஜ்ஜி எல்லாம் புயல் வேகத்தில் போயிருச்சு இந்த கிளைமேட்டுக்கு. பஜ்ஜி மாவு மட்டும் இப்போ கரைச்சு வச்சிருக்கோம். வாழைக்காய் கிடைக்கல கத்திரிக்காய் பஜ்ஜி போடப் போறோம் என்றார்.
இல்ல கத்திரிக்காய் பஜ்ஜிக்கு, நல்ல காரமா மிளகாய் சட்னி இருந்தா அதை தொட்டு சாப்பிட்டால் அப்படி இருக்கும் என்றேன். கடைக்காரரோ, சட்னி சாம்பார் எல்லாம் காலி என்றார்.
சரி ரெண்டு டீ மட்டும் போடுங்க என்று சொல்லிவிட்டு, கத்திரிக்காய் எல்லாம் ஒரு காயா என்று மட்டும் சொல்லாதீர்கள். எனக்கு காய்கறி வகைகளிலேயே மிகவும் பிடித்த காய்களில் அதுவும் ஒன்று.
சாம்பாருக்கு அடுத்து ஊற்றும் கார குழம்பு வகைகளிலேயே, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை அடித்துக் கொள்ள எதுவும் கிடையாது. கொட்டப்பட்டி கத்தரிக்காய் போட்டு வைக்கும், கறி குழம்பாக இருந்தாலும் சரி தால்சாவாக இருந்தாலும் சரி, அது உடன் இருக்கும் உணவின் சுவையையே உயர்த்தி விடும்.
சாதாரணமா, நாட்டு சின்ன சுண்டல் போட்டு வைக்கும் கத்திரிக்காய் புளிக்குழம்புக்கு ஒரு ஆம்லெட்டோ அப்பளமோ கூட போதும். வேலூர் முள் கத்திரிக்காய் எல்லாம் வதக்கல் செய்து சாப்பிட்டவர்களுக்கு அதன் அருமை தெரியும்.
இவ்வளவு ஏன்? கும்பகோணம் கொத்சு என்று ஒரு ஐட்டம் கத்திரிக்காயில் செய்வார்கள். இட்லிக்கு உருவான காம்பினேஷன்களிலே அதுவும் சிறந்த ஒன்று. ஒரு பங்கு கத்திரிக்காயும் ஒரு பங்கு வெங்காயமும் போட்டு அங்கே செய்வார்கள். கொஞ்சம் தள்ளி சிதம்பரத்திற்கு போனால் அங்கே வெங்காயம் இல்லாமல் செய்வார்கள். அங்கே மங்களாம்பிகா பவனில், ஒரு பங்கு கத்திரிக்காய்க்கு நான்கு பங்கு சின்ன வெங்காயம் போட்டு கொத்சு செய்வார்கள். அதையெல்லாம் சாப்பிட்டு பார்த்திருந்தால் கத்திரிக்காய் மேல் உனக்கு காதலே வந்திருக்கும் என்றேன்.
இருந்தும் அவர் மனம் சமாதானமாகவில்லை. டீ குடித்து முடித்ததும் சாரலும் நிற்க நடக்கத் துவங்கினோம்.
கத்திரிக்காய் காதல் என்ற அந்த வார்த்தைகளை சொல்லும் போதே நான் கடந்த காலத்திற்கு சென்றிருந்தேன்.
எங்கள் உறவு வட்டாரத்தில், சித்ரா என்றொரு பெண் இருந்தார். அந்த சமயத்தில் ஏராளமான சித்ராக்கள் இருந்ததால், ஒவ்வொரு சித்ராவிற்கும் ஒரு அடைமொழி இருந்தது. அத்தனை சித்ராக்களுக்கும் கூட அடைமொழி இருந்தாலும் ஒரு சித்ராவிற்கு மட்டும் அடைமொழியே இல்லாமல் வேறு மொழி வழங்கப்பட்டது. காரணம் அவர் குட்டையாக இருந்தது. குட்டை என்றால் மாயாஜால படங்களில் வரும் சித்திரக்குள்ளன் ரேஞ்சிற்கு நினைத்து விட வேண்டாம்.
கிட்டத்தட்ட தற்போதைய மமீதா பைஜூ, ராணி முகர்ஜி, முன்னாளைய நாயகி வினோதினி இவர்களைவிட சற்று உயரம் குறைவாக இருப்பார். என்ன பிரச்சனை என்றால், எங்கள் உறவு வட்டாரத்தில் எல்லோருமே நல்ல உயரமாக இருப்பார்கள்.
அதனால் அவருக்கு சின்ன வயதிலேயே குள்ள கத்திரிக்காய் என்கிற அடைமொழியை கொடுத்து விட்டார்கள். உயரம் குறைவான பெண்களுக்கு, முழுமதி போன்ற அழகான வட்ட முகம் வாய்த்து, அவ்வளவு லட்சணமாக இருப்பார்கள். அந்த முக லட்சணத்தை எல்லாம், இந்த உலகம் எங்கே பார்க்கிறது? குள்ளம் குள்ளம் என்று அவரை ஒரு தாழ்வு மனப்பான்மைக்கி உள்ளாக்கி விட்டார்கள்.
ஏதாவது திருமணங்களின் போது உறவினர்களுக்கு எல்லாம் துணி எடுக்கப் போகும் போது, அவருடைய வீட்டாரே, மத்தவங்களுக்கு எல்லாம் எது எடுத்தாலும் நல்லா இருக்கும். இந்த குள்ள கத்திரிக்காய்க்குத்தான் பார்த்து பார்த்து எடுக்கணும். என்பார்கள். அது ஒரு பெண்ணை எவ்வளவு மனரீதியாக பாதிக்கும் என்றே அறியாதவர்கள்.
அவர் வயதுக்கு வந்த போது, சீர் செய்வதற்கு வெண்கல பானை, அண்டா என எடுத்துக் கொண்டிருந்தபோது, இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு பெரிய பானை,அண்டா எதுக்கு? தண்ணி தூக்குறேன்னு அதுக்குள்ள விழுந்துருவா, சின்ன சட்டிபானையா வாங்கி கொடுங்கப்பா என்று கிண்டலடித்தார்கள்.
அவரின் அம்மாவை பிடிக்காத நாத்தனார் ஒருவர் இருக்கிறார். ஒரு திருமணத்தில் மதிய சாப்பாடு முடிந்து மண்டபம் காலி பண்ணும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் சேரை வட்டமாக போட்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்களே, அப்போது, என் பிள்ளைகளுக்கு எல்லாம், ஏழாம் நம்பர் செருப்பு போடுற பொண்ணாச்சும் வேணும் என குத்திக்காட்டி கிண்டலடித்தார்.
நான் கூட அவரிடம், என்ன பெரியம்மா நேருக்கு நேரா இப்படி பேசுறீங்க? என கேட்டதற்கு, இதுல என்னடா இருக்கு?
பானை வாங்கும் போது தட்டிப் பார்த்து தாண்டா வாங்குவாங்க. உன் வேலைய பாருடா என்றார்.
பானையும் பொண்ணும் ஒண்ணா? என வந்த கேள்வியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். அடுத்து அவர் என்ன மாதிரி பேசுவாரோ என்பதை விட, பொதுவாகவே பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு பூஞ்சை மனது.
சித்ராவிற்கு அப்போது மாப்பிள்ளை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். அப்போது அவருக்கு செட் ஆகும் கல்யாண வயது மற்றும் வேலையில் இருந்த உறவுப் பையன்கள் யாரும், அவரை மணந்து கொள்ள விரும்பவில்லை.
பொதுவாகவே உறவுக்குள்ளேயே திருமணம் செய்வது, சரியல்ல என்பது என்னுடைய கருத்து. அதனால் ஒரு விதத்தில் அவர்கள் செய்தது சரிதான் என்று நினைத்தேன். மற்றவர்களோ என்ன இருந்தாலும் தேவையில்லாம ஒரு பெண்ணை ஒதுக்குகிறார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.
இது இன்னும் அதிகமான மன அழுத்தத்தை சித்ராவிற்கு கொடுத்தது எனலாம். இதைப் பற்றி எல்லாம் அவர்களிடம் பேசி அவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் அளவிற்கு எனக்கு அப்போது வயதாகவில்லை.
அப்போது மணமகன் பார்க்கும் தரகர்களிடம், ஒன்றை மட்டும் சித்ரா சொன்னதாக அவர் தாயார் கூறியிருந்தார். மாப்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். வேலை,குணம் எதுவும் தேவையில்லை. ஆனால் உயரமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் என்று.
இப்போது யோசித்துப் பார்த்தாலும், எப்படிப்பட்ட உளவியல் தாக்கத்திற்கு ஒரு பெண் ஆளாக்கப்பட்டு இருந்தால், இப்படி ஒரு கோரிக்கையை வைப்பார் என்று தோன்றி கொண்டே இருக்கும். நிறைய குடும்பங்கள் இப்படித்தான், எந்த காரணத்தால் நிராகரிக்கப்படுகிறோமோ அதையே வென்று காட்டுவது என்று உடும்புப்பிடியாக இருப்பார்கள்
உறவில் இருக்கும் அரசாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் உங்கள் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால், என் பொண்ணுக்கு கவர்மெண்ட் மாப்பிள்ளை தான் கட்டுவேன் என்று கங்கணம் கட்டி இறங்கி விடுகிறார்கள். உங்கள் பையன் அழகில்லை என் பெண் முன்னால் நிற்க முடியாது என்று சொல்லிவிட்டால், சீமையிலேயே இல்லாத அழகிய என் பையனுக்கு கட்டி வருகிறேன் பார் என்று தலைகீழாக குதிக்கிறார்கள்.
இது போன்ற தேவையில்லாத சபதங்கள் எல்லாம் தேவையில்லை அது சில சமயம் ஒர்க் அவுட் ஆனாலும் சில சமயம் அவர்களின் குடும்ப வாழ்க்கையையே பாதிக்கும் அளவிற்கு போகும். ஆனால் அதையெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. அவர்களுக்கு தேவை நாம் பதிலுக்கு ஒரு அடியை கொடுத்தே ஆக வேண்டும் என்பதே.
சித்ராவிற்கும் அவர் விரும்பியது போலவே நல்ல உயரமான ஒரு மாப்பிள்ளை கிடைத்தார். குடும்ப புகைப்படம் எடுக்கும் போது, சித்ரா என்னைப் பார்த்து தன் கண்ணாலேயே அவர் உயரத்தைப் பார் என்று சைகை செய்தார். நானும் புன்முறுவலுடன் அவரை வாழ்த்தி விடைபெற்றேன்.
அதன்பின், அவரைப் பற்றி அவ்வளவாக கேட்டுக் கொண்டதில்லை. வெளியூரில் வசித்துக் கொண்டிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஒரு உறவினரின் விசேஷத்திற்கு தன் கணவரோடு வந்திருந்தார். மிகவும் எளிமையாக, எந்த ஆபரணங்களும் இன்றி. நல்லா இருக்கீங்களா என கேட்டு பேசத் துவங்கினேன். தொடர்ச்சியான உரையாடலில், அவர் கணவர் திருமணத்திற்கு பின்னர் சரியாக வேலைக்கு செல்வதில்லை. அவ்வப்போது சில மாதங்கள் செல்வார். பின்னர் வீட்டிலேயே உட்கார்ந்து, ரிலாக்ஸ் ஆக படம் பார்த்துக் கொண்டே இருப்பார். நான் இந்த அலுவலகத்தில் வேலை செய்கிறேன் என்று சொன்னார்.
பேச்சு முழுவதும் கவனித்தபோது, அவரிடம் வலிய வரவழைத்துக் கொண்ட குதூகலம் இல்லை. இயல்பாகவே மிக மகிழ்ச்சியாக இருந்தது போலவே இருந்தது.
மாப்பிள்ளை நல்ல வேலையில் இல்லை என்று உனக்கு ஏதும் கவலையா என கேட்டேன்? இல்லவே இல்லை. இது நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த வாழ்க்கை. முதலில் அதுவே எனக்கு சந்தோசம். உங்க அண்ணன்களில் யாரையாவது கட்டி இருந்தால், காலத்திற்கும் நான் குள்ள கத்திரிக்காய் தான். என்ன எத்தனை பவுன் வாங்கி கொடுத்திருப்பார்கள்? எத்தனை வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பார்கள்? எத்தனை லட்சங்கள் என் பெயரில் போட்டிருக்கப் போகிறார்கள்?
அத்தனையும் வைத்துக்கொண்டு அவர்களின் கிண்டலுக்கு ஆளாகி இருப்பதை விட, இப்போது எனக்கு என ஒரு குடும்பம். நான் தான் அங்கே ராணி. நாம தேர்ந்தெடுத்த வாழ்க்கையை விடவா ஒரு பெரிய சந்தோஷம் எந்த காலத்திலும் யாருக்கும் இருந்து விடும் என்று கேட்டார்?
ஏகப்பட்ட திறப்புகளை அவர் கேள்வி உருவாக்கியிருந்தது.
மற்றவர்களின் நிராகரிப்புக்காக, அது போன்ற ஒரு வாழ்க்கையை எத்தனை கஷ்டத்திலும் ஏற்றுக் கொள்வதா? நீ நிராகரித்துக் கொள் ஆனால் எது சரியானதோ அதைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்பது சரியா என்று?
கத்தரிக்காய் சுவை போலவே. பிடித்தவர்களும் உண்டு. பிடிக்காதவர்களும் உண்டு.
No comments:
Post a Comment