மகாநதி திரைப்படம் பற்றி பட வெளியீட்டுக்கு முன்னர் பெரிய செய்திகள் வரவில்லை.
வந்தவற்றில் முக்கியமான ஒன்று. குமுதம் அரசு பதில்களின் நடு எழுத்து ,
'ர' வும், ஆசிரியர் குழுவின் முக்கிய தூணுமான ரா.கி. ரங்கராஜன் அவர்கள் வசனம் என்பது.
ரா.கி.ரங்கராஜன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் நிறைய மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் எழுதியவர். பட்டாம்பூச்சி, லாரா ஆகியவை அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு ஆக்கங்கள். ”எப்படி கதை எழுதுவது” என்கிற நூலும் அவர் எழுதி இருந்தார்.
1970களின் பிற்பகுதியில் மகேந்திரன், தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாலு மகேந்திரா, ருத்ரய்யா என புதிய அலை இயக்குனர்கள் வந்தபோது, அதுவரை தமிழ் சினிமாவில் வராத எதார்த்த கதைகள் வந்தன. அத்தனை படங்களுக்கும் முதுகெலும்பாக இளையராஜா வேறு இருந்தார்.
அந்த சமயத்தில், கமல்ஹாசன் அவர்கள் ரா.கி. உங்களுக்கான களம் இருக்கிறது வாருங்கள் என்று அழைத்தார். அவர் வந்து சேர 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
1994 பொங்கலுக்கு மகாநதி படம் வெளியானது. அதனுடன் வெளிவந்த படங்களில் ரிலீசுக்கு முன்னர் அதிகம் பேசப்பட்ட படங்கள் சேதுபதி ஐபிஎஸ் மற்றும் அமைதிப்படை.
வால்டர் வெற்றிவேல் வெற்றி களிப்பில் பி வாசு மற்றும் விஜயகாந்த், ஏவிஎம் என ஒரு வலுவான கமர்சியல் கூட்டணி. கடிகார செட் போட்டு இருக்கிறோம் பாதாள சாக்கடை செட் போட்டிருக்கிறோம் என ஏராள விளம்பரங்கள்.
அமைதிப்படை படத்தைப் பொறுத்தவரை, Back to Basics என்பது போல சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என பேட்டிகள்.
பிரபுவின் நூறாவது படம் ராஜகுமாரன். ஆர்வி உதயகுமார் இயக்கம், நதியா ஒரு இடைவேளைக்குப் பிறகு நடிக்கிறார் என ஒரு ஆவல். வழக்கமாக இளையராஜாவின் ஹிட் பாடல்கள். என ராஜகுமாரனுக்கும் ஒரு எதிர்பார்ப்பு.
ஜென்டில்மேன் பட வெற்றியில், தன்னை ஒரு பிராண்டாக மாற்றிவிட வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோன், ஜென்டில்மேன் குஞ்சுமோன் வழங்கும் என கொண்டு வந்த சிந்துநதிப் பூ. அவரும் விளம்பரத்திற்கு ஏராளமான பணத்தை வைத்து இருந்தார். ஆனால் அந்த விளம்பரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட கலக்கப்போவது ராமர் பாடிய அந்தப் படத்தின் பாடலான ”ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்க பச்சை நரம்பு” வரிகள் அதிக பிரபலத்தை அந்த படத்திற்கு கொடுத்துவிட்டன.
பாக்யராஜ் நடித்து இயக்கிய வீட்ல விசேஷங்க படமும் இந்த பொங்கலுக்கு வந்தது.
ராமநாராயணன் இயக்கத்தில் அவரது கம்பெனி ஆர்டிஸ்ட்கள் மற்றும் விசு நடித்த வாங்க பார்ட்னர் வாங்க. படம். இதில் தோல்வியடைந்த தொழில் முனைவோர்கள் விநாயகரை ஒரு பார்ட்னராக சேர்ப்பார்கள். பணம் வந்தவுடன் அவருக்குரிய பங்கை தர மாட்டார்கள். அவர் எப்படி அவர்களிடமே காரியதரிசியாக வந்து சேர்ந்து அவர்களை திருத்துகிறார் என்று ஒரு கதை.
1994 பொங்கலுக்கு இந்த படங்கள் மகாநதியுடன் வெளியான போது, பி&சி சென்டர்களில் சேதுபதி ஐபிஎஸ்க்கு வலுவான கூட்டம். ஆனால் பொங்கல் விடுமுறை முடிவதற்குள் அமைதிப்படைதாம்பா நல்லா இருக்கு என்கிற பேச்சுக்கள் வந்து, அந்தப் படத்திற்கு கூட்டம் எகிறியது.
மகாநதி பார்த்த கமல் ரசிகர்கள், ரொம்ப சோகமா இருக்குப்பா என்று முடித்துக் கொண்டார்கள். எனவே அந்த வயதில் அந்த படத்திற்கு போக சிறிய மனத்தடை இருந்தது.
அமைதிப்படை, சேதுபதி ஐபிஎஸ், ராஜகுமாரன், வீட்ல விசேஷங்க ஏன் வாங்க பார்ட்னர் வாங்க படம் கூட பார்த்தாகிவிட்டது. மகாநதிக்கு அந்த பொங்கல் விடுமுறையில் போகவில்லை.
ஒரு வாரம் கழித்து, திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டரில் இரண்டாம் காட்சிக்கு போனேன்.
பொதுவாக படம் முடிந்ததும், முண்டியடித்து வெளியேறுவார்கள். ஆனால் மகாநதி படம் முடிந்ததும் பொறுமையாக, வரிசையாக, கனத்த மவுனத்துடன் வெளியேறினார்கள்.
அப்போதெல்லாம் இப்போது போல எல்லோரும் கார், பைக்குகளில் வர மாட்டார்கள் நடந்து வருபவர்கள் தான் 80- 90% இருக்கும். திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டரில் இருந்து பேருந்து நிலையம் வரை கிட்டத்தட்ட 300 பேர் வரை நடந்து வந்தோம். இன்னொரு எதிர் வழியில் ஒரு 200 பேர் வரை சென்றார்கள்.
பொதுவாக படம் முடிந்து வரும்போது, அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுகள், அடுத்து எந்த படம் போகலாம், எதுவும் சாப்பிடலாமா, பஸ் இருக்குமா என்றெல்லாம் கலவையான பேச்சுக்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் எந்தவித பேச்சுக்களும் இல்லை எல்லோரும் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.
பொதுவாக இரண்டாம் காட்சி ஆர்த்தி தியேட்டரில் முடிந்து வரும்போது, YMR பட்டி சந்திப்பில் கார்னரில் ஒரு நல்ல டீக்கடை இருக்கும். அங்கே கூட்டமாக நின்று டீ குடித்துவிட்டு தான் கலைவார்கள்.
அன்று யாருக்கும் அந்த கடையில் நின்று டீ குடிக்க கூட விருப்பமில்லை. பேருந்து நிலையம் வரை ஒரு அமைதி ஊர்வலமாக அது நடந்தது.
இன்றும் யோசித்துப் பார்த்தால், இதுபோல ஒரு கனத்த மவுனத்துடன் எந்த படம் முடிந்து இப்படி வெளியேறி வந்தோம் என்று நினைத்துப் பார்த்தால் மிக சில படங்களே நினைவுக்கு வருகின்றன.
படம் பார்க்க வந்த ஒரு கூட்டத்தையே, அமைதியாக்கி இப்படி ஆகிவிட்டால் என்னாவது என்கிற யோசனைக்கு தள்ளி நம் வாழ்க்கையை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வைத்த படங்கள் மிகக் குறைவே. அதில் மகாநதியும் ஒன்று.
அந்த இரவு தாண்டி இன்று வரை அந்தப் படத்தை முழுதாக பார்க்க நினைத்ததே இல்லை.
4G வந்த பிறகு, அந்தப் படத்தின் ஒளி துண்டுகள் நிறைய பகிரப்பட்டன. முக்கியமாக கல்கத்தா சோனாகாச்சி பகுதியில் இருந்து கமல் தன் மகளை மீட்டு வரும் காட்சி. அதை மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
அந்த படத்திற்குரிய ஆகப்பட்ட விருதாக நான் நினைப்பது அன்று இரவுக்காட்சி முடிந்ததும் பொதுமக்கள் நடத்திய அமைதி ஊர்வலம் தான்.
No comments:
Post a Comment