December 08, 2025

ராகேஷ்

 தீபாவளிக்கு முதல் நாள் இரவு மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து தனியே சென்னைக்கு பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்,

அலுவலக அரசியல், குடும்ப அரசியல் போன்றவற்றினால் ஒதுக்கப்பட்டவர்கள், அதற்கு முன்னதான தங்கள் வாழ்க்கையில் சில தவறுகளை இழைத்தவர்கள், தற்போதைய சூழலில் பிழைக்க தெரியாதவர்கள் என்றே இருப்பார்கள்.
பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் கூட அன்று ஃப்ரீயாக டிக்கெட் கிடைக்கும் சூழல் நிலவும். அது மாதிரியான ஒரு பயணத்தில், யாரை முதலில் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டேனோ, அதன் பின் சந்திக்கவே கூடாது என நினைத்தேனோ அவனை சந்திக்க‌ நேர்ந்தது.‌
ராகேஷ். கிட்டத்தட்ட 10 வயது இளையவன். எங்கள் ஊர் வத்தலகுண்டு. முன்னர் கூடைப்பந்து விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்ற ஊர். பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைபெறும் மாநில அளவிலான சில சமயம் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அங்கே மிக பிரபலம்.
வேலை போன்ற காரணங்களுக்காக வேறு ஊருக்கு சென்ற பழைய ஆட்டக்காரர்கள் கூட, அந்த சமயத்தில் பொங்கல் திருவிழாவிற்காக வருகிறார்களோ இல்லையோ இந்த போட்டிகளைப் பார்க்க வருவார்கள். All star match என்று சொல்வதைப் போல, அதுவரை விளையாடிய, தற்போது விளையாடும் நிலையில் உள்ள ஆட்டக்காரர்களை எல்லாம் சேர்த்து, கலந்து போட்டு நான்கு அணிகளை தேர்வு செய்வார்கள்.
ஒரிஜினல் டோர்னமெண்ட் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போன பின்னர், அடுத்த நாள் அந்த ஆல் ஸ்டார் டீம்களுக்கு இடையில் ஒரு லீக் போட்டி நடக்கும். உண்மையில் அந்தப் போட்டியை ஆடத்தான் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக சென்று செட்டில் ஆனவர்கள் திரும்பி வருவார்கள். 40 வயது வரை இருப்பவர்கள் ஆடுவார்கள். அதற்கு மேல் இருப்பவர்கள் கோச்சாக, ரெப்ரியாக பார்வையாளர்களாக இருப்பார்கள்.
அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நாம் பார்த்து வியந்த சீனியர்கள், நம்மை மிரட்டிய ஜூனியர்கள் என எல்லோரும் ஒரு டீமில் இருப்பார்கள். காலம் முழுவதும் நம்முடனே ஆடியவன் எதிரியாக ஆடும் பொழுது பார்ப்பது, அவனை பார்வையாளனாக இருந்து பார்ப்பது என பல சுவாரசியங்கள் கிட்டும்.
அப்படிப்பட்ட ஒரு பொங்கல் டோர்னமெண்ட்டின் போது, நண்பன் ஒருவன் சொன்னான். நாலஞ்சு வருஷமா நீ இந்த பக்கம் வரல இல்ல. ராகேஷ்னு ஒருத்தன் செமையா ஆடுறான்டா. உங்க சீனியர் செட்டில் சொல்லுவீங்களே வினையத்தான், வெள்ளத்துரை, ரங்கராஜ், ரமேஷ்.. அப்புறம் உங்க செட்டுல ஆடுனாங்களே முத்துக்கருப்பன், சீனிவாசன், மணிகண்டன் அவங்களை எல்லாம் மிஞ்சுற ஒரு பிளேயர்.
அவன எதிர் டீம்ல இப்ப யாராலயும் அவன மேன் எடுக்கவே முடியல. வேகமான காத்துல கோழி றெக்க பறக்கும் போது அதை பிடிக்க நாலு அஞ்சு சின்ன பசங்க ஓடி கைக்கு அகப்படாமல் திணறுவாங்களே, அதுபோல அவன் பால தட்டி வரும்போது அவன் பின்னாடியே ஓடுறாங்க. ஒன்னும் முடியல‌ அவன் பேஸ்கட் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கான்.
பழைய செட்டு ஆள் ஒருத்தர் ,
பிச்சமணி, ஓம் முருகேசன் அப்படின்னு அவங்க செட்டு ஆளுக தான் வத்தலகுண்டிலேயே பெரிய பேஸ்கட்பால் தலைக்கட்டுன்னு நினைச்சாராம்‌‌. இந்தப் பையன் இப்பவே அவங்கள தாண்டி ஆடுறான் அப்படின்னு சொன்னாரு.
என சொல்ல சொல்ல எனக்கு ராகேஷ் ஆட்டத்தை காண வேண்டும் என்று பயங்கர ஆவல். அந்த ஆல் ஸ்டார் மேட்ச்சுக்கு காலையில் டீம் பிரிக்கும் போது, என்னிடம் கேட்டார்கள் நாலஞ்சு வருஷமா வரல பிராக்டிஸ்ல ஏதும் இருக்கியா இல்ல கீழே விழுந்து வாரிருவாயா என்று‌. எனக்கும் சந்தேகம். இல்ல நான் ஆடல என்று ஒதுங்கிக் கொண்டேன்.
ஆட்டம் ஆரம்பித்தது. நண்பன் ராகேஷ் பற்றி சொன்னது மிகை இல்லை. சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னாலும் அழகாக இருப்பார்கள், பின்னாலும் அழகாக இருப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேரழகாக இருப்பார்கள்.
அந்த சமயத்தில் அவர்களை ரசிக்க கிடைப்பது ஒரு பேரனுபவம். அதுபோல தான் ஆட்டக்காரர்களுக்கும். சில ஆண்டுகள் தான் அவர்கள் உச்சத்தில் இருப்பார்கள். அப்போது அவர்களின் ஆட்டத்திறனை ரசிப்பது ஒரு பேரனுபவம்.
அதுபோல பல ஆட்டக்காரர்களின், உச்சகட்ட பார்ம் பார்த்த அனுபவத்தில், ராகேஷ் அவர்களை விட சிறப்பாக இருந்ததாகவே தோன்றியது. ஆட்டம் முடிந்ததும் நேரடியாக பாராட்டி மகிழ்ந்தேன்.
நான் மதுரையில் தான் இருக்கிறேன். அந்தப் பக்கம் மேட்ச் விளையாட வந்தாலே எனக்கு தகவல் கொடுத்துவிடு. நான் வந்து விடுகிறேன் என்று சொன்னேன். வாய்ப்பிருக்கும்போதெல்லாம் அவன் விளையாடும் மேட்ச்களைப் போய் பார்ப்பேன்‌. ஆட்டம் முடிந்ததும் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி விடுவேன்.
மனதுக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிட்டான் ராகேஷ். அவன் திருமணத்திற்கு கூட, முதல் நாளே சென்றுவிட்டேன். அவனுக்கு, குழந்தை பிறந்த போதும் உடனே போய் பார்த்துவிட்டு வந்தேன்.
சில ஆண்டுகள் போனது. 40 வயதுக்கு பின்னர் அதீத தனித்திறமை இல்லாத, தனியாரில் வேலை பார்க்கும் ஒருவருக்கு, அந்த வேலை போனால் வரக்கூடிய சிக்கல்களை உணர்ந்து, வேலையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து, காலம் போன காலத்தில் அலுவலக அரசியலையும் பழகத் துவங்கினேன். நேரத்திற்கு வீட்டிற்கு வந்து பிள்ளைகளை படிக்கச் சொல்லும் பொழுது தான் தெரிந்தது, எத்தனை ஆண்டுகள் என்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக, ஆசைக்காக, எவ்வளவு நாட்கள் வெளியிலேயே அலைந்து ரசித்து வாழ்ந்திருக்கிறேன். அதனால் வீட்டில் மனைவி நாள் முழுவதும் பாடுபட்டு அவர்களை பார்க்க வேண்டி இருந்திருக்கிறது என்று.
அது உறைத்த பின்னர், வீடு- அலுவலகம் என்று இருக்கலானேன். எங்கேயாவது வெளியில் போனாலும் குடும்பத்துடன் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். தவிர்க்க முடியாத போது தான் தனியாக செல்வது என்பதையும்.‌
அந்த நேரத்தில்தான் ஒரு அதிர்ச்சியான தகவல் வந்தது. ராகேஷுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது என்று. அவனிடம் எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. ஒருவருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவது மிக எளிது. ஒரு சிறு சிரிப்பு போதுமானது. ஆனால் ஒருவரிடம் துக்கம் கேட்க செல்லும் பொழுது பலருக்கு தயக்கங்கள் இருக்கும். எனக்கும் அது போல தான்.‌
சில மாதங்கள் கழித்து, நான் பணிபுரியும் அலுவலகத்தில் தன் உறவினரைப் பார்க்க வந்திருந்தார் ராகேஷ் மனைவி.
அவரிடம் பின்னர் சென்று பேசினேன்.
அவர் சொன்ன விஷயங்கள் என்னை மிகவும் அதிர்ச்சியாக்கின. திருமணமான புதிதில் இருந்து, அவனுக்கு மிகவும் சந்தேகம். வெளி ஆண்களிடம் சிரித்து பேசக்கூடாது, பணிபுரியும் இடத்தில் சகஜமாக யாரிடமும் பேசக்கூடாது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பானாம். மனைவியின் போனை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பானாம். அதில் ஆண் பெயரில் காண்டாக்ட் இருந்தாலே ஏன், எதற்கு என்று கேட்பானாம். கால் ஹிஸ்டரி முழுவதும் பார்ப்பானாம்.
முதலில் அந்தப் பெண்ணும் இவன் மிகவும் பொசசிவாக இருக்கிறான் என்று நினைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டாராம். பின்னர் விசேஷ வீடுகளுக்கு செல்லும் பொழுது, பிரயாணம் செல்லும் பொழுது இள வயது ஆண் ஒருவன் இருந்து எதேச்சையாக இந்தப் பெண் அவன் பக்கம் திரும்பினால் கூட வீட்டிற்கு வந்ததும் சண்டை போட ஆரம்பிப்பானாம்.
அதற்கெல்லாம் உச்சகட்டமாக குழந்தை பிறந்து சில மாதம் கழித்து, அந்த பெண்ணின் பள்ளி, கல்லூரி புகைப்பட ஆல்பத்தை எடுத்து வைத்து, உடன்படித்த ஒவ்வொரு மாணவர்களின் முகத்தையும் வைத்து இந்த குழந்தை யார் ஜாடையில் இருக்கிறது என்று இரவு முழுவதும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருப்பானாம்.
இதற்கு மேல் தாங்க முடியாது என விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்து, சில ஆண்டுகள் கழித்து விவகாரத்து கிடைத்திருக்கிறது‌. இதைக் கேள்விப்பட்டவுடன் ராகேஷ் மீதான பிம்பம் முழுவதும் உடைந்து, அவனை இனி பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
சில ஆண்டுகள் கழிந்த பின்னர், அந்த பெண்ணிற்கு ஏதும் உதவி தேவைப்படுகிறதா என்று அந்த உறவினரிடம் கேட்டேன். அவங்க பையன ஆறாம் வகுப்பிற்கு நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும்னு ஆசைப்படுறாங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஸ்கூல்ல எதாச்சும் இருந அட்மிஷன் வாங்கி கொடுங்க என்றார்.
எங்கள் செட்டுக்கு முந்தைய செட்டிலும் என் செட்டிலும் கூடைப்பந்து ஆடிய பலர் வங்கிகள், ரயில்வே, போக்குவரத்து கழகங்கள் என்எல்சி,போர்ட் டிரஸ்ட் என பல இடங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை பார்த்தார்கள். பலர் எம்பிஎட் முடித்து பிஈடி மாஸ்டர்களாக இருந்தார்கள்.
பிரபல தனியார் பள்ளிகளில் பல நண்பர்கள் பிஈடி மாஸ்டர்களாக வேலை பார்த்தார்கள். பொதுவாக இந்த மாதிரி வேலையில் இருப்பவர்கள் நிர்வாகத்திடம் மிகுந்த பழக்கத்தில் இருப்பார்கள் ஆசிரியர்களை விட. அவர்கள் மூலம் முயற்சித்து ஒரு நல்ல தனியார் பள்ளியில் அந்த பெண்ணின் மகனுக்கு ஒரு சீட் வாங்கிக் கொடுத்தேன்.
இன்னும் சில ஆண்டுகள் போனது. அலுவலக நண்பரும், ராகேஷ் மனைவியின் உறவினருமானவரின் வீட்டில் ஒரு விசேஷம். அதற்கு சென்று இருந்தேன். விவாகரத்தான ராகேஷின் மனைவியும் வந்திருந்தார். உங்கள் வேலை எப்படி போகிறது? பையன் நன்றாக படிக்கிறானா என்று வழக்கமான விசாரிப்பைத் துவங்கினேன்.
இரண்டு நிமிட உரையாடலுக்கு பின்னர் அவர் மனம் உடைந்து அழலானார். சிங்கிள் மதர் என்று இந்த சமூகத்தில் வாழ்வது மிகவும் கஷ்டமான விஷயம் அண்ணே.‌ விவகாரத்து ஆவதற்கு முன்னாலாவது ஒரு ராகேஷ் தான். ஆனால் விவகாரத்து ஆன நாளிலிருந்து, எத்தனை பேர் மனரீதியாக துன்பம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு அளவே இல்லை.
எனக்காக வாதாடிய வக்கீல், அவர் ஜூனியரில் இருந்து தொடங்கி, நான் வேலை பார்க்கும் இடம், வசிக்கும் தெரு, காய் வாங்கும் கடை, சூப்பர் மார்க்கெட் என எல்லா இடங்களில் இருந்தும், அங்கு இருக்கும் ஆண்கள் என்னை பார்க்கும் விதமே வேறாகி விட்டது.
விவகாரத்து ஆன சிங்கிள் மதர் மிகவும் vulnerable ஆக இருப்பார். முயற்சிப்போம் என ஒவ்வொருவர் வந்து பேசும் பொழுதும் மனம் ரண வேதனைப்படுகிறது.
இவர்கள்தான் இப்படி என்றால் பையன் படிக்கும் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் கூட அந்த கண்ணோட்டத்தில் தான் பேசுகிறார்கள். சிங்கிள் மதர் என்பதை, பாலியல் தொழில் செய்யும் பெண்ணை விட மோசமாக இந்த சமூகத்தில் பார்க்கிறார்கள்.
எத்தனை பேரை தான் சமாளிப்பது? இதற்கு விவாகரத்து ஆகாமல் கூட இருந்திருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றும் என்றார்.
அண்ணே, நான் யார்கிட்டயும் சொன்னது இல்ல. நீங்க என்கிட்ட நேரா பேசாம கூட பையனுக்கு சீட்டு வாங்கி கொடுத்தீங்க. அதுக்கப்புறமும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினதில்லை. இன்னைக்கு நேர்ல பார்த்துட்டனால விசாரிச்சீங்க. அதனால சொல்றேன்.
விவாகரத்து ஆன சில வருஷத்தில் இருந்து, இந்த ஆம்பளைங்க புத்தி தெரிஞ்ச பின்னாடி, வருஷா வருஷம் நேர்த்திக்கடன் என்று சொல்லி மொட்டை போட்டுக்குறேன். பவுடர் பூசுறது இல்ல, பூ வைக்கிறது இல்ல விரதம் இருக்கிறவங்க மாதிரி சாமி மஞ்ச சேலை கட்டிக்கிட்டு நெத்தியில பட்டை அடிச்சுக்கிட்டு வேலைக்கு போயிட்டு வரேன். இந்த பையன் ஆளாகிற வரைக்கும் உயிரோட இருக்கணுமே என்று தான் இவ்வளவு போராடுகிறேன் என்றார்.
தைரியமாக இருங்கள். பையன் படிப்பு சம்பந்தமாக எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். பதவியில் இருக்கும் நல்ல நண்பர்கள் மூலம் முடிந்தவரை உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கனத்த மனதுடன் கிளம்பினேன்.
அந்த ராகேஷைத் தான், இன்று ரயிலில் மீண்டும் சந்திக்கிறேன். எதுவும் பேசத் தோன்றவில்லை. இது போன்ற சமயங்களில் சிறந்த ஆயுதமான போனை எடுத்து தலைகுனிந்து பார்க்கத் துவங்கினேன். அவன் அருகில் வந்து உட்கார்ந்தான்.
இருவருக்கும் இடையே கனத்த மவுனம் நிலவியது. ஒரு கட்டத்தில் அவனாகவே, அண்ணே நான் செஞ்ச தப்பு உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். எனக்கு அதை ரியலைஸ் பண்ண பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அதுக்கப்புறம் நான் நிறைய அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு செய்தி அனுப்பினேன். தொடர்ச்சியா கடிதங்கள் எழுதி அனுப்பினேன். ஆனா அவங்க எதுக்கும், சமாதானம் ஆகல என்றான்.
நீ செஞ்சது பெரிய தவறு. யாரும் சுலபமா மன்னிக்க மாட்டாங்க. இப்ப அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கு தெரியுமா? என்றேன்.
இப்போதுதான் அவனை முழுவதுமாக பார்த்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தானோ, அதே போன்ற உடல் கட்டு. பிராண்டட் உடைகள் என இப்போது போனாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்கும் என்பது போல இருந்தான்.
சரி அது பற்றி பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை. வேற பேசுவோம். சென்னைக்கு போகிறாயா என்று கேட்டேன். அங்க தாண்ணே இப்ப இருக்கேன். ஒரு பிரபல பள்ளியின் பெயரைச் சொல்லி அங்கே பிடி மாஸ்டராக இருக்கிறேன். காலை மற்றும் மாலை நேரங்களில் வேறு ஒரு தனியார் அகாடமியில் கோச்சாக பணிபுரிகிறேன்.
அவர்கள் நடத்தும் விண்டர் கேம்ப், சம்மர் கேம்ப் எல்லாவற்றிற்கும் பேஸ்கட்பால் கோச்சிங் நான் தான் என்றான். அவன் பிம்பம் உடையாமல் இருந்திருந்தால், நிறைய அதுபற்றி விசாரித்துக் கொண்டே இருந்திருப்பேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் வெறும் செய்தியாக ஒரு ரேடியோ கேட்பது போலவே அணுகிக் கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். கல்யாணமான புதிதில் எனக்கு அந்த விஷயத்தில் கான்ஃபிடன்ஸ் இல்லை. நம் செட்டில் இருப்பவர்கள் சொல்லியது, பல தவறான தகவல்கள் இவற்றால் எனக்கே என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதுவும் கூட நான் அப்படி நடந்து கொண்டிருந்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.
என்று பலவாறு கன்பெஃஸ் செய்தான். நீ சொல்வதையெல்லாம் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதை சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் கூட மாற்றிக் கொண்டிருந்தால் கூட போதும்.
ஆனால் நீ குழந்தை பிறந்தும் மாறவில்லை. அந்தப் பெண் விவாகரத்திற்கு சென்றபோதும் கூட உன் மனம் மாறவில்லை. உன்னை நீ சுய பரிசோதனை செய்து கொள்ளவே இல்லை. வழக்கிற்கு சென்ற போதாவது கொஞ்சம் சிந்தித்து, நீ கவுன்சிலிங் சென்று இருந்திருக்கலாம்.
இத்தனை வருடம் கழித்து, மனம் மாறுவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்றேன்.
நம் ஜெனரேஷன் ஆண்கள் எல்லோருமே, ஒரு விதத்தில் சுயநலமாகவே யோசிப்போம் செயல்படுவோம். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் குடும்பம் உடைவதற்கு முன்னர் அதை ரியலைஸ் செய்து மாறிவிட்டால் தப்பித்து விடுவோம். இல்லையென்றால் சிக்கல்தான். உன் கேஸ் மிகவும் அதீதம்.
பெண்களின் மனம் எவ்வளவு காயப்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டே இருக்கும். அது அவர்களின் டிஎன்ஏவிலேயே இருக்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், அது காயம்பட்டு காயம்பட்டு வைரம் போல உறுதி ஆகிவிடும். அதன் பின்னர் எதையும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
அந்த அளவிற்கு நீ அந்த பெண்ணை காயப்படுத்தி விட்டாய். என்று முடித்தேன்.
தீபாவளி அன்று காலை சென்னை வந்து இறங்கி, அலுவலக எம் டிக்கு வேண்டப்பட்டவர்களிடம் பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு, வீட்டுக்கு கால் செய்தேன். போனை எடுத்த மனைவி, இங்கே தீபாவளி முடிந்துவிட்டது. சாப்பிட்டு புது டிரஸ் போட்டு பசங்க சினிமாவிற்கு போய் விட்டார்கள் என்றார்.
அப்போது ராகேஷை சந்தித்ததை சொன்னேன். மனைவி என்னிடம், அந்தப் பையன் திருந்தி விட்டான் என்று அந்த பெண்ணிடம் சொல்லப் போகிறீர்களா என்று கேட்டார்.
இல்லை இல்லை. இத்தனை வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பையனை ஓரளவிற்கு வளர்த்து விட்டார். இன்னும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டால் போதும். தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அவர் தன் வாழ்வில் வெற்றி பெற்றார் என்கிற மகிழ்ச்சி அவருக்கு இருக்கும்.
எத்தனையோ கஷ்டங்களை கண்ட அவருக்கு, இந்த ஒரு மன திருப்தி எல்லாக் காயங்களையும் ஆற்றவல்லது.
மீண்டும் இவர்கள் ஒருவேளை சேர்ந்து விட்டால், என்ன இருந்தாலும் ஆண் துணை இல்லாமல் அவரால் சமாளிக்க முடியவில்லை என்கிற அவப் பெயர் தான் வந்து சேரும். அது ராகேஷ் போல இருக்கும் ஆண்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுக்கும்.
நான் ராகேஷை சந்தித்ததை பற்றி அவரிடம் சொல்லவே போவதில்லை என்றேன். போனை வைக்கும் முன், மீண்டும் உன்னிடம் ஒரு சாரி என்று கேட்டுக் கொண்டேன்.

No comments: