December 08, 2025

செல்லம் பெரியப்பா

 எனக்கு அங்க யாரையுமே தெரியாது. எப்படி கல்யாணத்துக்கு போயி முறை செஞ்சிட்டு வர சொல்றீங்க? தனியா எப்படி போவேன்? என ஒரு முறை நான் பெற்றவர்களிடம் கேட்டு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகி இருக்கும்.

அப்போது என் அண்ணன் சொன்னான்‌. நம்ம செல்லம் பெரியப்பா இருக்காரு இல்ல.. அவர் எப்படியும் அங்கு இருப்பாரு. அவர போய்ப் பாரு அவரு எல்லாம் பாத்துக்குவாரு என்றான்.
செல்லம் பெரியப்பா, எனக்கு தூரத்து உறவு முறையில் பெரியப்பா. ஆனால் சொல்லப்போனால் மற்ற பெரியப்பா சித்தப்பாக்களிடம் பேசிய, பழகிய நேரங்களை விட அவரிடம் பழகியது அதிகம். நான் மட்டுமல்ல எங்கள் உறவில் எல்லோருமே அவரிடம் பேசியது தான் அதிகமாக இருக்கும்.
அவர் ஒரு ‌ காய்கறி கமிஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார். எங்கள் ஊரைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து, தக்காளி, வாழை என்ற எந்த விளைச்சலாக இருந்தாலும், அங்கே வரும்.
சாயந்திர நேரத்திலிருந்து உள்ளூர் வெளியூர் வியாபாரிகள் அங்கே வருவார்கள். தக்காளி போன்றவை ஏல முறையில் விற்கப்பட்டு, வாங்கிக் கொண்டு போவார்கள். வெளியூர் வியாபாரிகள் அங்கு இருந்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டு போவார்கள்.
இவர் அந்த மண்டியில் ஒரு மேனேஜர் போல இருந்தார். கை சுத்தமானவர் என்பதால், கமிஷன் மண்டி உரிமையாளரிடம் நல்ல பெயர். வழக்கமாக காய்கறி கொண்டு வரும் விவசாயிகள், களை எடுக்க, மருந்து அடிக்க என கடன் கேட்டால் உரிமையாளரிடம் சொல்லி வாங்கித் தருவார். வியாபாரிகளிடம் நைச்சியமாக பேசி அட்வான்ஸ் பணத்தை வாங்குவார்‌. எந்த சூழலிலும் கடுகடுவென இருக்க மாட்டார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் நல்ல பெயர்.
அதைவிட அவர் திருமண வீடுகளில் நடந்து கொள்வது. பொதுவாக நிறைய பேர் மணமேடை ஏற, சாப்பிடச் செல்ல கொஞ்சம் சங்கோஜப்படுவார்கள்.‌
ஆனால் பெரியப்பா அப்படி வருபவர்களிடம் கலகலவென பேசி மணமேடையில் ஏற்றி, போட்டோ எடுக்க வைத்து, அங்கே ஒரு சுமூகமான சூழலை உருவாக்குவார்
அதேபோல பந்தி தொடங்கியதும் அங்கே நடு நாயகமாக நின்று கொள்வார். எப்பா ரசம் இங்க ஊத்து. என் மருமகனுக்கு பாயாசம் ஊத்துப்பா.. ராசக்கா பேரன், சின்ன பையன் அவன் இந்த காயெல்லாம் வச்சு சாப்பிடுவானா இன்னொரு அப்பளம் வைப்பா.. என பந்தி விசாரித்துக் கொண்டே இருப்பார்.
துக்க வீடுகளிலும், பலருக்கு எப்படி கேட்பது, என்பது போன்ற சங்கடங்கள் இருக்கும். பெரியப்பா அவர்களை அழைத்துச் சென்று அவரே பேசத் துவங்கி விடுவார். உடன் சொல்பவர்கள் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக் கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தால் போதும்.
இதே போல உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைகளில் இருப்பவர்களை பார்க்க போகவும் அவர் ஒரு பெரிய துணை. Ice breaking என்கிற வார்த்தை எல்லாம் பின்னாளில்தான் கேட்டது.‌ ஆனால் அவர் சொந்தங்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய ஐஸ் பிரேக்கராக இருந்து வந்திருக்கிறார்.
கமிஷன் மண்டியில் மாலையில் இருந்து இரவு வரை தான் என்பதால் பகல் நேரங்களில் பெரிதும் இந்த மாதிரி உதவிகர ‌வேலைகளைச் செய்வார்.
தீபாவளி நேரங்களில் பட்டாசு கடை போடுபவர்கள், பண்டு பொருள்களை பிரித்துக் கொடுப்பவர்கள் என எல்லோரும் அவர் வந்தால் நல்லா இருக்குமே என்று உதவிக்கு அழைத்துக் கொள்வார்கள். அவ்வளவு ஏன் ஞாயிற்றுக்கிழமை கறிக்கடை போடும் ஒருவர் கூட அவரை துணைக்கு வைத்துக் கொள்வார். கலகலவென பேசி வியாபாரம் பார்த்துக் கொடுத்து விடுவார்.
மனித மனம், எங்கு சென்றாலும் ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறது. என்னப்பா நல்லா இருக்கியா, வீட்ல யாரும் வரலையா, என எந்தவித உள்குத்தலும் இல்லாமல் சரளமாக பேசத் துவங்கும் ஒருவரிடம் அவர் சொல்வதை கேட்டுக் கொள்வோம் என்று சரணடைந்து விடுகிறது.
அன்றும் அப்படித்தான். என்னைப் பார்த்ததும் பேசி மணமேடைக்கு அழைத்துச் சென்று, யார் தெரியும்ல இன்னாரு பேரன்.. என்று அறிமுகப்படுத்தி நிற்க வைத்து போட்டோ எடுத்து, பந்தி துவங்கும் போது அழைத்துச் சென்று உட்கார வைத்து, வேற என்னய்யா வேணும் பால் கூட்டு கொஞ்சம் வைக்க சொல்லவா என்றெல்லாம் அவ்வப்போது வந்து கேட்டு.. மிகவும் எளிதாக கடந்தது அந்த நாள்..
அதிலிருந்து, எந்த நிகழ்வானாலும் அவரிடம் போய் நின்று விடுவது. ஆனால் அவருடைய பையன், அவருக்கு அப்படியே ஆப்போசிட்.‌ இப்போதுதான் இன்டரவெர்ட் என்கிற சொல்லை எல்லாம் கேள்விப்படுகிறேன். அப்போது ஊமை கோட்டான் என்று சொல்வார்கள்.‌ யாரிடமும் மிகவும் பழக மாட்டான். எங்கே சென்றாலும் தன் இருப்பைக் காட்டாமல் இருந்து கொள்வான்.
என் பாட்டியிடம் ஒரு முறை இதைப் பற்றி நான் கேட்டபோது. இப்பத்தான்டா உன் பெரியப்பன் சோழிய உருட்டி விட்ட மாதிரி கலகலன்னு இருக்கான். சின்ன வயசுல அவனும் அவன் மகன் மாதிரி தான் இருந்தான். எதுக்கும் ஒரு காலம் வரணும் இல்ல என்றார். இன்னொரு விஷயம்
சின்ன வயசுல அவனை கடைக்கு எல்லாம் அனுப்புனா, கடைக்காரர் கிட்ட எதுவும் கேட்காம, முழிச்சுக்கிட்டே நிப்பான். அப்ப எல்லாம் ஆள் மாறி மாறி வந்துகிட்டே இருக்கும். கடைக்காரரா பார்த்து என்ன வேணும்னு கேட்டு சாமான் கொடுத்து விட்டால் தான் உண்டு..
ஆனா அப்படி இருந்தவன் இப்ப எப்படி மாறிட்டான் பாரு என்றார்.
ஆனால் எனக்கு என்னவோ பெரியப்பா மகன் அந்த மாதிரி மாற மாட்டான் என்றே தான் தோன்றியது. அப்போது அவனுக்கு திருமண பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தன. அவன் திருமணத்தின் போதும் சரி திருமணம் முடிந்து அவன் பிள்ளைகளுக்கு மொட்டை காதுகுத்து என பல விசேஷங்களுக்கு சென்றபோதும் சரி, அவன் தன் இயல்பிலேயே அமைதியாகத்தான் இருந்தான்.‌ வருடங்கள் பல கடந்து விட்டன.
சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, மண வீட்டார், உறவினர்கள் என்றாலும் அந்த கூட்டமே புதிதாக இருந்தது.‌ அப்போது ஒரு குரல்.‌ என்னடா இப்பதான் வந்தியா? வீட்ல வரலையா? எனக் கேட்டது
ஆச்சரியமாக திரும்பினால் செல்லம் பெரியப்பாவின் மகன். அவனுடனே மண மேடைக்குச் சென்று,பந்திக்குச் சென்று அதன் பின்னர் விசேஷம் முடிந்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது, ரொம்ப நேரமாக மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டேன்..
என்ன பாபு, முன்னெல்லாம் ரொம்ப அமைதியா இருப்ப என ஆரம்பித்தேன்.
என் கேள்வியை புரிந்து கொண்டு,
இல்லடா.. முன்னெல்லாம் எனக்கு எல்லோரிடமும் பேச பழக கொஞ்சம் சங்கடமா இருக்கும்.‌ என்ன நினைப்பாங்களோ என்று.‌ அப்புறம், ஒரு கட்டத்துக்கு மேல யார நம்பி நாம இருக்கோம் எதுக்கு எல்லாரிடமும் போயி நாமளே பேசணும் அப்படின்னு ஒரு எண்ணம் வந்துச்சு.. அப்படி நாம வலியப் போய் பேசுறதால என்ன நமக்கு வந்திரப் போதுஅப்படி எல்லாம் கூட ஒரு எண்ணம்.
கிட்டத்தட்ட வேலை பார்க்கிற இடத்துலயும் அப்படித்தான் இருந்தேன். நான் வேலை செய்றேன் சம்பளம் வருது வேணுங்கறத வாங்கி என் பாட்டுக்கு இருந்துக்கிறேன்.‌ ஏன் மத்தவங்க எல்லாம் அவங்களா வந்து என்கிட்ட பேச கூடாதா? அவங்க கிரீடம் குறைஞ்சிடுமா? என்றெல்லாம் நினைப்பேன்.
அஞ்சு ஆறு வருஷம் இருக்கும். அப்ப திடீர்னு வேலை போயிருச்சு. வேற வேலை தேடி அலையும் போது தான், நான் யார்கிட்டயும் அதிகமா பழகாததோட கஷ்டம் தெரிஞ்சது. கிட்டத்தட்ட ஆறு மாசம். கையிருப்புல கொஞ்சம் காசு இருந்ததால பணக் கஷ்டம் இல்லை. ஆனா இப்படியே ரொம்ப நாளைக்கு இருக்க முடியாதுங்கிற சூழல். அந்த சமயம் பையனுக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருந்தேன். நானா, என்னோட கஷ்டத்தை அனுபவிக்கிற மாதிரியே ஒரு ஃபீல்.‌ மன அழுத்தமா இருந்துச்சு.
அப்ப, முன்னாடி கூட வேலை பார்த்த ஒருத்தர் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அவர் என்ன செய்யுது ஏது செய்யுது எனக் கேட்டு கூட இருந்தார். அவ்வளவு ஆறுதலா இருந்துச்சு. அப்ப அவரு முன்னாடி நம்ம கூட வேலை பார்த்தவங்க எல்லாம் எங்க எங்க இருக்கார் அப்படின்னு சொன்னார்.
அவங்க நம்பருக்கு எல்லாம் அப்புறம் பேசினேன். உடனே வேலை கிடைக்கவில்லை என்றாலும் பெரிய ஆறுதலா இருந்துச்சு. அந்த ஆறுதல் இல்லாம இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்னே தெரியல. அப்புறம் இன்னும் சில மாதங்கள்ல எனக்கு ஒரு வேலைய ஒருத்தர் ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்.
அப்பதான் எனக்கு புரிந்தது.‌ நாம தனி ஆள் கிடையாது. நாம பிறந்ததிலிருந்து நாம கடத்துற ஒவ்வொரு நாளுக்கும் எத்தனையோ பேர் மறைமுகமா வேலை செய்றாங்க. ஆனா அவங்கள்ள யாரையுமே நாம பார்க்கப் போறதில்ல. அதற்கான பணத்தை கொடுத்து விடுகிறோம்.
அதனால நான் வேலை பார்க்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் என்று தனியாக இருக்கிறது என்பது சிலருக்கு கடைசி வரைக்கும் வாய்க்கும். ஆனா அப்படி இருந்துட்டு போறதில்ல என்ன சந்தோசம் இருந்திட போது? ஒரு பிரச்சனை என்று வரும் பொழுது நாலு ஆறுதல் வார்த்தைகள் கொடுக்கிற தைரியம் வேற எதுவும் கொடுக்காது.
இப்பல்லாம் நானா போய், எல்லோர்கிட்டயும் பேசுறேன் விசாரிக்கிறேன். உதவி தேவைப்படும்னு தெரிஞ்சா வாலண்டியரா போய் செய்கிறேன்.
எத்தனையோ பேர் நம்ம வாழ்க்கைக்கு மறைமுகமாக உதவி இருக்காங்க. அவர்களைத் தேடி செய்வதற்கு பதிலா, கண் முன்னாடி தெரியுறவங்களுக்கு செய்திட்டு ஆறுதலா இருக்கிறது நல்லது..
என்று முடித்தான்.
பஸ்ஸில் ஏறியவுடன், கண்டக்டர், இந்தப் பக்கம் வந்து நில்லுங்க. இவர் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவார், உட்கார்ந்துக்கலாம் என்று கூறி அழைத்தார்.
தங்கள் வேலையிலோ, உறவுகளிலோ குடும்பங்களிலோ காட்டும் ஒரு துளி கூடுதல் அக்கறை, மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்து விடுகிறது..

No comments: