May 17, 2025

குட்ட பெரியப்பா

எங்கள் செட் பங்காளி பையன்களால் குட்ட பெரியப்பா என்றும், சூப்பர் சீனியர் பங்காளிகளால் பொடி மட்ட என்றும், கட்சிக்காரர்களால் வதிலை அண்ணாத்துரை என்றும் அழைக்கப்பட்டவர் என்னுடைய பெரியப்பா. அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜா பிரஸ்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர். அப்போது தனித்தனியாக இருக்கும் எழுத்துக்களை கோர்த்து, பிரிண்டிங்கிற்கான மேட்டரை உருவாக்குவார் கம்பாசிட்டர். அதை ப்ரூப் பார்த்த பின்னர் அச்சடிக்க துவங்குவார்கள். விசேஷ பத்திரிகைகள், நோட்டீஸ் என எதுவாக இருந்தாலும், மேட்டரை தெளிவாக ரெடி பண்ணுவதில் பெரியப்பா கில்லாடி‌. எங்கே ஒற்று வர வேண்டும், ன, ண எங்கே வரவேண்டும் தமிழ் ஆண்டு, அவரவர் ஜாதிக்கு ஏற்ப போட வேண்டிய வாசகங்கள், தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பாமார் புரோட்டோகால்கள் என எல்லாவற்றையும் சரிபார்த்து கொடுப்பார். கட்சி நோட்டீஸ்கள் அடிக்கும் போதும், மாவட்டம், ஒன்றியம், கிளை பிரதிநிதி வரை சரியான புரோட்டோ கால் இருக்கிறதா என்று சரி பார்த்து பிழை திருத்தி கொடுப்பார். பேரை முன்னாள் போடவில்லை என்பதால் நின்று போன கல்யாணங்களும் வெட்டுக்குத்து வரை போன அரசியல் கட்சி கூட்டங்களும் எங்கள் ஏரியாவில் மிக அதிகம். எனவே எதற்கும் அவரிடம் ஒருமுறை சரிபார்த்து விடுவோம் என்று அவர் ஒப்புதல் அளித்த பின்னால் தான் அச்சுக்கே போவார்கள். நான் ஆறாம் வகுப்பிற்கு சென்றபோது, தெருவில் இருந்த அண்ணன் ஒருவரின் பழைய புத்தகங்களை தந்தை வாங்கி கொடுத்தார். புது புத்தகம் தான் இல்லை. பைண்டிங் ஆவது பண்ணிக் கொடுங்கள் அட்டை கூட இல்லாமல், அழுக்காக இருக்கிறது என்றேன். ராஜா பிரஸ்ல உங்க பெரியப்பா இருப்பாரு. பைண்டிங் எல்லாம் வேணாம். ஏதாவது ஒரு அட்டையை வைச்சு டொய்ன் நூல் போட்டு தைச்சு கொடுக்க சொல்லு என்று அனுப்பினார். புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவரை பார்த்தேன். நான்கரை அடி உயரம். சற்று பருமனான உருவம், மாநிறம். எப்போதும் அரை கை வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. வேட்டி இடுப்பு மடிப்பில் அவரது ஜீவ சக்தியான ஒரு பொடி மட்டை. எழுதும் பொழுதோ அல்லது ப்ரூப் பார்க்க துவங்கும் போதோ அந்த பொடி மட்டையை எடுப்பார். வலது கை பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஒரு சிட்டிகை எடுத்து, இடது கை ஆள்காட்டி விரலால் இடது மூக்கை மூடிக்கொண்டு, வலது மூக்கில் பொடியை சர் என்று இழுப்பார். அடுத்த உடனே அடுத்த சிட்டிகை எடுத்து, வலது கை நடு விரலால் வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது முக்கால் பொடியை ஒரு இழு இழுப்பார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் சிருங்கார ரசம் காட்ட மூக்குத்தியை சுற்றி ஒரு அடவு காட்டுவார். அதற்கு இணையாக வெகு நளினமாக மூக்குப்பொடி போடுவார் பெரியப்பா. விவரம் சொன்னதும், ரோடு தாண்டி, டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடை இருக்கும் அங்கே என் பெயரைச் சொல்லி பொடி வாங்கிட்டு வா என்றார். வாங்கி வருவதற்குள், ஒரு கெட்டி அட்டையை வைத்து டொய்ன் நூலால் அழகாக தைத்திருந்தார். கூடுதலாக ப்ரஸ்ஸில் மூன்று பக்கங்களிலும் அழகாக வெட்டி வைத்திருந்தார். அந்த அழுக்கெல்லாம் போய் புது புத்தகங்கள் போல இருந்தது. சந்தோசமாக வாங்கிக் கொண்டேன். காசு என இழுத்தேன். போடா போடா என்று விரட்டிவிட்டார். அதன் பின் அந்த வழியாக மேல்நிலை பள்ளிக்கு போகும் போது, அவ்வப்போது அவருக்கு பொடி வேண்டுமா என்று கேட்டு வாங்கி கொடுக்க தொடங்கினேன். எங்கள் இருவருக்கும் ஒரு நட்பு மலரத் துவங்கியது. அந்த ப்ரஸ்ஸில் ஏராளமான வேஸ்ட் பேப்பர்கள் வரும். ப்ரூப் பார்க்க எடுத்த பேப்பர்கள் நிறைய இருக்கும். அதில் மறுபக்கம் அச்சிட மாட்டார்கள். அதையெல்லாம் சேர்த்து, ஏதாவது கல்யாண பத்திரிக்கை ப்ரூப் எடுத்த அட்டையை போட்டு,தைத்து ஒரு நோட்டு போல தருவார். ரஃப் நோட் என்று அதை பெருமையாக எடுத்து எழுதுவேன். ஒருமுறை பொடிக்கடைக்கு சென்றபோது, கடைக்காரர், நீ தெற்கு தெரு பையன் தானே? பிரசிடெண்ட் வீட்டுல இந்த டப்பாவை கொடுத்துவிடு என்றார். அவருக்கு ஸ்பெஷல் பொடி. நேத்தே தீர்ந்து போச்சு. ‌ இப்பதான் திண்டுக்கல்ல இருந்து வந்துச்சு. அதை சொல்லிக் கொடு என்றார். வெள்ளியில் செய்யப்பட்ட அழகான ஒரு சிறிய பொடிடப்பா. எங்கள் தெருவில் இருந்தவர்கள் பிரசிடெண்ட் அம்மா என்ன வேலை சொன்னாலும் ஓடி செய்வோம். காரணம் அப்போது அவர்கள் வீட்டில் மட்டும் இருந்த கலர் டிவி. கடைக்கு போகிறவர்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்க அனுமதிப்பார்கள். அதனால் மிக மகிழ்ச்சியுடன், அதை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன். அப்போது அவர்கள் செட் ஆட்கள் மட்டும் தான் பொடி போட்டுக் கொண்டிருந்தார்கள். என் சித்தப்பா செட்டெல்லாம் பீடி, சிகரெட் என மாறிவிட்டார்கள். அடுத்த முறை பெரியப்பாவை பார்த்தபோது, உங்க வாத்தியார் சொன்னார்டா நல்லா படிக்கிறியாமே என்றார். அசடு வழிய சிரித்தேன். நல்லா படிடா. உனக்கு ரப்பர் ஸ்டாம்ப் நான் தான் அடிச்சு தருவேன். நம்ம பங்காளிகள்ல யாருமே விசிட்டிங் கார்டு எல்லாம் அடிக்கல. உனக்கு அதுவும் நான் அடிச்சு தருவேன் என்றார். உடனே நானும், பெரியப்பா, நான் வேலைக்கு போன உடனே, உங்களுக்கு ப்ரெசிடெண்ட் வச்சிருக்கிற மாதிரி ஒரு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி கொடுக்கிறேன் என்றேன். வருடங்கள் கடந்தன. கல்லூரி விடுதியிலும் சேர்ந்து விட்டேன். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, பிரஸ் பக்கம் சென்றால் அவர் இல்லை. போன வாரமே அவர் இறந்து போயிட்டாரே என்றார்கள். அதிர்ச்சி. அப்போது போன் போன்ற வசதி இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன் கூட இதை யாராவது சொல்லி இருக்கலாமே என எனக்கு ஒரு ஆதங்கம். அவருடன் பணியாற்றிய பிரஸ் ஊழியரிடம் பெரியப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன். வயசு ஆகுது இல்ல. சாப்பாடும் பல வருஷமாவே அவருக்கு சரி இல்லை. அவ்வளவுதான் உடம்பு தாங்கும் என்றார். பெரியப்பா பிறந்த சில மாதங்களிலேயே அவரது தாயார் இறந்துவிட, சரியான சாப்பாடு இல்லாமலேயே வளர்ந்தவர். படிப்பில் திறமைசாலி. அவர் வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தந்தையும் இறந்துவிட, கட்டிக் கொடுத்த அவரது மூத்த சகோதரிகள் வீட்டு பக்கமும் ஒதுங்க முடியாமல், கிட்டத்தட்ட அனாதை போலவே வாழ்ந்திருக்கிறார். அவருடன் படித்த நண்பருடைய பிரஸ் அது. அங்கேயே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, இரவும் அங்கேயே தூங்குவார். காலை எழுந்ததும் எந்த பம்ப்செட்டில் தண்ணீர் வருகிறது என்று பார்த்து குளித்துவிட்டு அவர் வேட்டி சட்டையை அங்கே காய போட்டு விட்டு வருவார். வரும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகளில் ஏதாவது சாப்பாடு. பிரஸ் வந்த பின்னர் ஏதாவது வடை, டீ சாப்பிட்டு ஒட்டி விடுவார். இரவும் ஏதாவது ஒரு நடைபாதை கடை. இப்படியே 40 வருடங்களுக்கும் மேலாக ஓட்டியிருக்கிறார். பெற்றோர்களும் இல்லாமல், வசதி வாய்ப்பும் இல்லாமல், குட்டையாகவும் இருந்ததால் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்பு அமையவில்லை. அவரது நண்பர் மேலும் சொன்னார், எங்க பங்காளிகளிலேயே இந்த பையனத்தான் எனக்கு பிடிக்கும், எனக்கு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி தரேன் என்று சொன்னான் என்று சொல்லி சிரித்தாராம். யாராவது கூப்பிட்டு விசேஷ நாட்களில் ஒரு வேளையாவது சாப்பாடு போடுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம். எனக்கு அப்படி எதுவுமே தோணல, அந்த அளவுக்கு வீட்டுச் சூழலும் எனக்கு இல்ல என்றேன். நீ சின்ன பையன். ஆனா உங்க பங்காளிக யாராவது அவரை விசாரிக்கவாவது செஞ்சிருக்கலாம். 40- 50 வருஷமா எத்தனையோ பேருக்கு கல்யாண பத்திரிக்கை அடிச்சு கொடுத்தவரு. அவருக்கு கல்யாணமும் ஆகல. ஆயிரக்கணக்குல கருமாதி பத்திரிகை அடிச்சு கொடுத்தவரு. அந்தக் கருமாதி பத்திரிகை அடிக்கவும் அவருக்கு ஆள் இல்லாம போயிருச்சு. அனாத பொணம் மாதிரி மாதிரி தூக்கி போட்டு போயிட்டாங்க. ஒண்ணுமே நடக்காத ஒருத்தனுக்கு ஒரு கருமாதி பத்திரிக்கையாவது அடிச்சு அன்னைக்கு நாலு பேருக்கு சோறு போட்டு இருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டார். இன்று பொடிக்கடைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. அந்த பழக்கம் தற்போது இளைய தலைமுறை இடம் இல்லாததால், பழைய ஆட்கள் மட்டுமே அந்த கடைகளுக்கு வருகிறார்கள். அது மாதிரி கடைகளை பார்க்கும் போதெல்லாம், எனக்கு பெரியப்பாவின் ஞாபகம் வந்து மனதை ரணமாக்கும். யாருக்கு எது தேவை என்பதை உணரும் ஒரு நுட்பமான மனம் தேவை. அந்த நுட்பமான மனம் இருக்கிறவர்கள், வாய்ப்பிருக்கும்போதே பிறரை மகிழ்விக்கிறார்கள். அது இல்லாதவர்கள் அதை உணரும் நாளில் வருத்தம் மட்டுமே அடைய முடிகிறது.

No comments: