May 17, 2025
மீனாட்சி சுடர்விழி
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றி ஒரு வாரம் கழித்து, மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கும் நாளில் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரை எங்கள் செட் பசங்கள் எல்லோரும் கீழ சித்திரை வீதி,மேல
சித்திரை வீதி, அம்மன் சன்னதி பகுதிகளில் தான் சுற்றிக்கொண்டே இருப்போம்.
அந்த டீன் ஏஜ் பருவத்தில், மீனாட்சி அம்மனைப் பற்றி பேசுகிறோமோ இல்லையோ, மீனாட்சி சுடர்விழியைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டோம்.
மீனாட்சி என்பது மதுரையில் சாதாரணமாக வைக்கப்படும் பெயர் என்றாலும், மீனாட்சி சுடர்விழிகள் அரிதாகத்தான் இருப்பார்கள். அவர் தந்தை எப்படி இந்தப் பெயரை அவருக்கு வைத்தார் என்று எங்களுக்கு இன்னமுமே ஆச்சரியம் தான். அவர் அப்போது மதுரை பி ஆர் சி யில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
சில சிவன் கோயில்களில் கருவறை சிறியதாக இருக்கும். மின்விளக்கு கூட இருக்காது. வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் லிங்கம் மட்டும் இருக்கும். அதிகபட்சம் தண்ணீரால் கழுவி மட்டும் தான் விட்டிருப்பார்கள். அந்தக் கருவறையில் தொங்கும் ஒரு விளக்கில் ஒரு சுடரை ஏற்றி இருப்பார்கள். அந்த சுடர் தீர்க்கமாக எரிந்து, அந்தக் கருவறையையே அழகாக்கும்.
சிவனை தரிசிப்பதை விட அந்த சுடர் நம் மனதை இழுக்கும். அப்படிப்பட்ட கண்களை உடையவள் தான் மீனாட்சி சுடர் விழி. பிறந்த போது எல்லாம் அப்படி ஒரு தீர்க்கம் அவள் கண்களில் தென்பட்டதில்லை. பருவ வயதை அடைந்த பின்னர் அவளைப் பார்க்கும் யாராலும் அவள் கண்களை விட்டு அகல முடியாதபடி அழகு சுடர் விடும் கண்கள் அவளுக்கு அமைந்தன.
எல்லா நாளும் மீனாட்சி மீது கிரேஸோடு அலைந்து கொண்டிருந்த எங்கள் தெரு பையன்கள், மீனாட்சி பட்டாபிஷேகத்தன்று இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார்கள்.
மதுரையின் ராணியாக இன்று முடி சூட்டிக் கொண்டாயே
என் இதய ராணியாக என்று முடி சூட்ட வருகிறாய்
என்று கவிதை எழுதுவதில் துவங்கி,
மீனாட்சி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இன்னைக்கு பட்டாபிஷேகமாமே? எங்கே கிரீடத்தை காணோம் என்று கமெண்ட் அடிப்பது வரை அவரவர் ஸ்டைலில் கவர முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.
கண்களின் தீர்க்கம் அவள் படிப்பிலும் இருந்தது. பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள். எங்கள் தெரு பையன்களுக்கு எல்லாம் அவளால் வலுவாக வீட்டில் திட்டு விழுந்தது. ஒரு பொம்பள புள்ள, வீட்டு வேலை எல்லாத்தையும் அவங்க அம்மா கூட சேர்ந்து பார்த்துகிட்டு, ஸ்கூல் ஃபர்ஸ்ட்டும் எடுக்குறா?
கொட்டிக்கிற வேலை மட்டும்தான் உனக்கெல்லாம் கொடுத்து இருக்கு. எங்க போச்சு உனக்கு அறிவு? எங்க தல விதி உன்னைய பெத்துட்டோம். என்பது அப்போது மீனாட்சியால் எங்கள் தெரு பையன்கள் எல்லோர் வீட்டிலும் அவரவர்களுக்கு கிடைத்த திட்டு.
சில தந்தைகள் இருப்பார்கள். அவர்களை ஏதாவது ஒரு அதிகாரி அல்லது மருத்துவர் போன்றோர் கவர்ந்திருப்பார்கள் தங்கள் பிள்ளை அதேபோல வர வேண்டும் என்று அதற்காகவே மெனக்கிடுவார்கள். சொல்லி சொல்லி வளர்ப்பார்கள்.
மீனாட்சி சுடர்விழியின் தந்தையை அப்படி வசீகரித்தவர், அவரது சொந்த ஊரில் ஸ்டேட் பாங்க் பீல்ட் ஆபிசராக இருந்த ஒரு பெண் அதிகாரி.
நல்ல காட்டன் சேலை கட்டிக்கிட்டு, கையில லெதர்வாட்ச் கட்டிக்கிட்டு, சின்ன கண்ணாடி போட்டு கிட்டு ஜீப்ல எல்லா ஊருக்கும் சுத்தி சுத்தி வந்து லோன் கொடுப்பாங்க. பீல்ட் ஆபிசர் வராங்க பீல்ட் ஆபிசர் வர்றாங்கன்னு எங்க ஊரே காத்து கிடக்கும்.
அது மாதிரி ஒரு பேங்க் ஆபீஸரா மீனாட்சியை ஆக்கிரனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காகவே மீனாட்சி, தான் பிஎஸ்சி அக்ரி படிக்க வேண்டும் என்று, பிளஸ் ஒன் பிளஸ் டூவில் வெறித்தனமாக படித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் என்ட்ரன்ஸ் தேர்வுகள் இருந்தன. அதற்கான கோச்சிங் கிளாசிற்காக தினமும் காலையில் மீனாட்சியை கூட்டிக்கொண்டு போய்விட்டு கூட்டி வருவதற்காகவே அவர் தந்தை இரண்டு மாதம் விடுமுறை எடுத்தார்.
மீனாட்சி எதிர்பார்த்தபடியே பிஎஸ்சி அக்ரி கிடைத்தது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அவர் தந்தை மீனாட்சியை சேர்த்து விட்டார்.
தன்னுடைய கனவு நனவாக அதற்கடுத்தும் ஏராள முயற்சிகளை மீனாட்சியின் தந்தை எடுத்தார்.அவரது வேலை நாள் போக மற்ற நாள்களில் வேன் ஓட்டுவது, திருவிழா, டூர் பஸ்கள் ஓட்டுவது என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்.
பேங்க் எக்ஸாம் படிப்புக்கும் கோச்சிங் எல்லாம் இருக்கு. நல்ல சென்டர்ல சேர்த்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது அம்மாவும் சளைத்தவர் இல்லை. அந்த சமயத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஏராள கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் கேஷியராக பணிபுரிந்தார்.
நானும் எங்கள் செட் பையன்களும் டிகிரியை ஒரு வழியாக முடித்தோம். மதுரையை சுத்துன கழுதை வேறு எங்கேயும் போகாது. அதனால இங்கேயே இருந்து சுகம் கண்டுறாதிங்க என்று எங்கள் எல்லோரையும் சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்தார்கள்.
தீபாவளி,பொங்கல், சித்திரை திருவிழா இவற்றிற்க்கு மட்டுமே வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டோம்.
அப்படி ஒரு சித்திரை திருவிழாவிற்கு வந்த போது, மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று எங்கள் தெரு பையன்கள் அனைவரின் கண்களும் தேடியது மீனாட்சி சுடர்விழியைத் தான்.
ஒருவேளை பேங்க் வேலை கிடைத்து போய்விட்டாரா என்று விசாரித்த போது தான் தெரிந்தது.
மீனாட்சிக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள், அதனால் அவள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. செய்வினை எடுப்பதற்காக அவரது பெற்றோர்கள் அவரை சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்று.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். எங்கெல்லாம் செய்வினை எடுக்கிறார்கள் என்று தகவல் வருகிறதோ அங்கெல்லாம் மீனாட்சி சுடர்விழியை அழைத்துச் சென்றனர் அவர் பெற்றோர்கள். நாகூர் தர்கா, பிரத்தியங்கரா தேவி, படவேடு அம்மன் என எல்லா திசைகளிலும் சென்றார்கள். எந்தப் பயனும் ஏற்படவில்லை.
பின்னர் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி, பேய் விரட்டும் ஆட்களிடம் தொடர்ச்சியாக அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். பேய் ஓட்டுபவர்கள் வேப்பிலையால் அடி அடி என்று அடித்து மயக்கம் அடையவே செய்து விடுவார்கள். பின்னர் மயக்கம் தெளிந்து விழித்த பின்னரும் மீனாட்சி அப்படியே தான் இருந்தார்.
மீனாட்சிக்கு அப்போதைய அந்த ஏரியா அதிகபட்ச திருமண வயதான 30 தாண்டியது. அவரது தந்தையும் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். ஒரு நாள் மீனாட்சியை பார்க்க சென்று இருந்தேன்.
அவர் தந்தை நீண்ட நேரம் என்னிடம் மனம் விட்டு பேசினார். காலேஜ் முடிச்சு வந்த உடனே,
என் காதில் ஏதோ குரல் கேட்கிறது கேட்கிறது என்று சொன்னாள். முதலில் ஈ என் டி டாக்டரிடம் கூட்டி போனேன். அவர் காதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
அவள் தொடர்ச்சியாக, என்னை வெளியில் இருந்து ஒருவன் பேசி மயக்க பார்க்கிறான், என்னை தப்பானது எல்லாம் செய்யச் சொல்கிறான், இல்லாவிட்டால் என்னை சாகச் சொல்கிறான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
திடீர் திடீரென இரவில் எந்திரித்து உட்காருவாள். சில நாட்கள் தற்கொலைக்கு முயன்றாள்.
எனக்கு எதுவும் புரியாமல் செய்வினை தான் வைத்து விட்டார்கள் என்று சில வருடங்கள் வீணடித்தேன். பின்னர் பேய் பிடித்து இருக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி அதில் பல வருடங்களை வீணடித்தேன்
பின்னர், என் மேனேஜர் தான் சொன்னார் இது மனநோயாக இருக்கும். சீஷோபெர்னியாவாக இருக்கலாம் என்று. மீனாட்சிக்கு இப்படியான சில வருடங்களிலேயே ஒருவர் இதை சொன்னார். நான் தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னொரு பக்கம் மனநோய் என்று வெளியில் சொல்லி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று பயந்தேன். செய்வினை, பேய் பிடித்து இருக்கிறது என்பதை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. எனவே என் மனமும் அதை நோக்கியே சென்றது.
இப்போதுதான் ஆனது ஆகட்டும் என்று மனநல மருத்துவரிடம் காட்டி வருகிறேன் என்றார்.
10- 12 ஆண்டுகள் மீனாட்சி அனுபவித்த வேதனை நரகத்திற்கு இணையானது. ஒருவனுக்கு கை கால் அடிபட்டால் அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். எல்லோருக்கும் சொல்கிறார்கள். ஆறுதல் சொல்ல அனைவரும் வருகிறார்கள்.
ஆனால் மனநோய் என்பதை மூன்றாவது ஆள் அறியாமல் பூட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கிறது. உடல் குறைபாடை போலத்தான் அதுவும் என்பதை யாருமே ஏற்றுக் கொள்வதில்லை.
சீஷோபெர்னியா பாதித்தவர்களை குடும்பம் மூன்றாம் நபர் அறியாமல் பொத்தி பாதுகாக்க நினைக்கிறது. அதனால் பல கஷ்டங்களை எதிர்கொள்கிறது. அந்தக் கஷ்டங்களை வேதனைகளை வேறு வேறு யாரிடமும் காட்ட முடியாமல் அந்த நோயாளியின் மீது காட்டும் அவலமும் நடைபெறுகிறது.
ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு மீனாட்சியின் பெற்றோர் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க துவங்கினார்கள்.
இந்த சமயத்தில், திடீரென வீட்டில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் கடைகளுக்கு மீனாட்சி செல்வார். அங்கே போய் உட்காருவார். ஒரு ஆண் அப்படி போகும்போது பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி போய் உட்காருவது சமுதாயத்தில் கேலி பொருளானது.
மாத்திரைகளின் வீரியம் அவரை தூங்க வைத்துக் கொண்டே இருக்கும். மீனாட்சியின் பெற்றோரும் வயது முதிர்வின் காரணமாகவும், இவ வீட்டுக்குள்ளேயே இருந்தா போதும் என்ற நிலைப்பாட்டின் காரணமாகவும், தூங்கிட்டே இருந்தா கூட போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
மீனாட்சி நன்றாக சாப்பிடுவார். மாத்திரை போட்டுக் கொண்டு நன்றாக தூங்குவார். இதனால் உடல் பருமன் அதிகமாகிக் கொண்டே போனது. உடல் பொலிவு இழந்தது. மீனாட்சியின் தாயாரால் ஓரளவிற்கு தான் அவருக்கு சிருட்சைகள் செய்ய முடிந்தது.
சில வருடங்களில் மீனாட்சியின் தந்தையார் காலமானார். அவரது தாய் மட்டும், நானும் போயிட்டா இவ என்ன ஆவா? என்கிற மனநிலையில் வைராக்கியமாக தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஏழு எட்டு வருடங்களாக நான் மதுரைக்கே வரவில்லை. மிகவும் ஆச்சரியமாக தந்தை அழைத்தார். இந்த வருஷம் மண்டகப்படி நம்ம பங்காளிகள் செய்ய வேண்டியது. ஏற்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது, நிச்சயம் குடும்பத்தோட வந்துவிடு என்றார்.
வந்து இறங்கிய நாள் மீனாட்சி பட்டாபிஷேகம். ரெண்டு நாள் கழிச்சு தேரோட்டம். நம்ம கீழ சித்திர வீதி,மேல சித்திர வீதி ஆட்கள் எல்லாம் இருந்தா இந்த தடவை வடம் பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில்தான், என்னப்பா இப்படி ஆகிப்போச்சு என்ற குரல் கேட்டது. மீனாட்சி இறந்துவிட்டார் என்று தகவல் சொன்னார்கள்.
உடனடியாக அவர்கள் வீட்டிற்கு போனோம். அவரது தாயார் அழுவதற்கு கூட சக்தியற்று சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
மீனாட்சியில் முகத்தைப் பார்த்தேன். சிவன் கோவில் கருவறை சுடர் போல ஒரு காலத்தில் ஒளிந்த அந்த கண்கள், எந்த ஜீவனும் இல்லாமல், பீளையோடு நிலைகுத்தி இருந்தது.
கனத்த மனதோடு கண்களை மூடிய போது, பக்கத்து வீட்டு டிவியில் லோக்கல் கேபிள் சேனலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment