May 17, 2025

நானும் மகனும்

ஞாயிறு பிற்பகலில் வைகை எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, மகன் தங்கி இருந்த திருவல்லிக்கேணி மேன்சனை சென்றடைந்த போது, அவன் தூங்கிக் கொண்டிருந்தான். நான் சாப்பிட்டு விட்டேன். நீங்கள் பக்கத்தில் ஏதும் சென்று சாப்பிட்டு வருகிறீர்களா? என்றான்.ட்ரெயின்ல வரும்போது சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி அறையில் இருந்த மகனின் ரூம் மேட் பெட்டில் படுத்து கொண்டேன். ஐம்பதை கடந்தாகி விட்டது. இதுவே 5-10 வருடம் முன்னால் என்றால் கூட, இப்படி வைகையில் இருந்து இறங்கினால் நாயர் மெஸ் அல்லது ஒரு நல்ல ஆந்திர மெஸ்ஸில் சாப்பாடு. முடித்தவுடன் அப்படியே பொடி நடையாக நடந்து தேவி தியேட்டரில் நாலு மணி ஷோ. படம் முடிந்ததும் சின்ன சமோசாவும் இராணி டீயும். இப்போது படுத்தால் போதும் என்று இருக்கிறது. ஆறு மணி அளவில் எந்திரித்தேன். மகன் லேப்டாப்பில் அவன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு டீ சாப்பிட்டு வருவோமா? கிரவுண்டுக்கு எதுத்தாப்புல ஒரு கடையில நல்லா இருக்கும் என்றேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க எனக்கு வேலை இருக்கிறது என்றான். டீ சாப்பிட்டு வந்ததும் பையில், குறிப்பு எடுத்து வைத்திருந்த பேப்பர்களை புரட்ட துவங்கினேன். நல்லா பிரிப்ஃபேர் பண்ணிட்டீங்களா? நாளைக்கு கிடைச்சிருமா? என்றான் மகன். 25 வருஷமா பார்த்துக்கிட்டு இருப்பது தானே? இப்ப லேட்டஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அப்டேட் மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்றேன். இரவு 8 மணி ஆனது. ஏதாச்சும் ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடலாமா என்று கேட்டேன்‌. அரை மனதுடன் உடன் வந்தான். சாப்பிட்டு முடித்ததும், அப்படியே பீச்சுல போய் கொஞ்சம் அலைகளை பார்த்துட்டு காத்து வாங்கிட்டு வரலாம் என்றேன். சரி என்று தலையசைத்து உடன் நடக்க துவங்கினான். அப்போது சிறிய மகனிடம் இருந்து அழைப்பு. சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான். ஆச்சு நீ என்ன பண்ற ..என்ன.. அவனிடம் பேசிக் கொண்டே நடந்தேன்... கடற்கரையை நெருங்கி மணலில் நடக்க ஆரம்பித்தோம். அப்போது மகன் கேட்டான். என்னை விட அவன் மேல தானே உங்களுக்கு பாசம் அதிகம் என்று. எனக்கு ரெண்டு பேர் மீதும் ஒரே பாசம் தான். உனக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். உனக்கு நாங்கள் செய்ததெல்லாம் உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தம்பிக்கு செய்ததை நீ பார்த்துக் கொண்டு இருந்தாய். அதனால் உனக்கு அப்படி தோன்றுகிறது என்றேன். அது மட்டும் வச்சு சொல்லல. ஒரே செயலுக்கு நீங்க என்ன தண்டிக்கிற விதமும், அவன தண்டிக்கிற விதமும் வேற. அவ்வளவு ரியாக்ஷன் மாறுறது பார்த்திருக்கிறேன் என்றான். சில நிமிடம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. அப்படி இல்லடா. நான், நீ வளர்ந்து வரும் போது என் அப்போதைய வயதோடு உன்னை கம்பேர் செய்து பார்த்தேன். நான் செய்வது போலவே வேலைகள், ஒழுங்காக படிக்க வேண்டும், சேட்டை செய்யக் கூடாது என்று. அதனால் உன் மேல் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அது நடக்காத போது மிகக் கேவலமாக கூட உன்னை அடித்திருக்கிறேன் ‌ அத நெனச்சு இப்போ தினமும் மனசு கஷ்டப்படுகிறேன். ஆனால் உன் தம்பி வளர்ந்து வரும் போது உன்னைத்தான் அவனுக்கு பெஞ்ச் மார்க்காக மனம் நினைத்தது. அவன மாதிரி தானே இருக்கான் அல்லது அவனைவிட பரவாயில்லை என்று தோண ஆரம்பித்தது. அதனால், நீ செய்த அதே தவறுக்கு அவனை குறைவாக தண்டித்திருக்கிறேன் ‌ என்னுடைய தவறுதான் என்றேன். நாளை காலை உங்களுக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்று கேட்டான். பத்து மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றதும், சீக்கிரம் தூங்குங்க ட்ரெயின் டயர்ட் வேற இருக்கும். காலைல எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பனும் என்றான். திரும்பி ரூமுக்கு வரும்போது, நான் நல்லாத்தான் உங்கள பாத்துகிட்டேன், எங்க அப்பாவ கம்பேர் பண்ணும் போதெல்லாம் நான் எவ்வளவோ மடங்கு மேல் என்றேன். ஆத்திரமான குரலில் பேச ஆரம்பித்தான். இப்படி கம்பேர் பண்ணாதீங்க. அவர் அந்தக் கால ஸ்டாண்டர்டுக்கு உங்கள பாத்துகிட்டார். நடத்தினார். ஒரு தலைமுறை தாண்டி எவ்வளவோ மாறிவிட்டது. நீங்கள் அவரை விட கொஞ்சம் பெட்டர் என்று தான் சொல்லலாமே தவிர, இந்தத் தலைமுறை பெற்றோர்களோடு ஒப்பிட்டால் நீங்கள் மோசம் தான் என்றான். இப்படித்தான் தாத்தா அந்த காலத்தில், பாட்டியை நடத்தியதை விட நான் நல்லாத்தான் வச்சிருக்கேன் என்று என் அம்மாவையும் நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. உங்கள் ஒப்பீடு இந்த தலைமுறையில் தங்கள் மனைவியை, குழந்தைகளை பார்ப்பவர்களோடு இருக்க வேண்டுமே தவிர போன தலைமுறையோடு அல்ல என்றான். மேன்சனை நெருங்கினோம். அப்படியே, இந்தப் பக்கம் ஒரு கடை இருக்கும் இல்ல அங்க பால் குடிச்சிட்டு போயிடலாம் என்றேன். இதுதான் இதுதான் உங்ககிட்ட பிடிக்காதது. வந்ததுல இருந்து உங்க சுகத்தை பத்தியே தான் யோசிக்கிறீங்க, பேசுறீங்களே தவிர, எனக்கு என்ன வேணும்? எனக்கு என்ன பிடிச்சிருக்கு? சாப்பிடறியான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா என்றான். இல்லப்பா நான் நல்லதா தானே செலக்ட் பண்ணி சொல்றேன். அது உனக்கும் பிடிக்கும்ல என்றேன். அதுதான், எல்லாத்தையுமே உங்க கோணத்திலேயே தான் பாக்குறீங்க. ஒரு தலைமுறை மாறிடுச்சு. என்னோட விருப்பம் என்ன?எது தேவையா இருக்கும்னு கூட உங்களுக்கு தோணல. அதுதான் இந்த குடும்பத்தை இப்படி சரியில்லாம வச்சிருக்கு. இந்த வயசுலயும் இருக்கிற வேலையோடு சேர்த்து வேற என்ன சம்பாதிக்கலாம்னு நினைக்காம, சம்பளம் பத்தல, மெட்ராஸ்ல வேலை தேடுறேன்னு வர்றீங்க. குடும்பத்தோடையும் இப்ப இருக்க சூழலில் வர முடியாது. அப்படி வந்தா பத்தவும் செய்யாது. இங்க மேன்சனில் தங்கிட்டு வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு ஜாலியா இருக்கலாம் என்று தான் உங்கள் மனசு சொல்லுது என்றான். சத்தியமா இல்லடா. அங்க குடுக்குற சம்பளம் பத்த மாட்டேங்குது. விலைவாசி கூடிக்கிட்டே போகுது. சம்பளம் ஏறுற மாதிரியே தெரியல. உன் தம்பியை இன்னும் நாலு வருஷம் எப்படியும் படிக்க வைக்கணும். அதனாலதான் இந்த முயற்சி என்றேன். இந்த யோசனை எல்லாம் வயசு காலத்தில் இருந்திருக்கணும். அப்ப சுகமா ஊரிலேயே இருந்து நல்லா தின்னுட்டு இப்ப பத்தல பத்தலன்னா எப்படி என்றான்? ரூமுக்கு திரும்பி சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தேன். அவன் முறைத்துப் பார்ப்பது போலவே உள்ளுணர்வு சொல்லியது. காலை எழுந்ததும், இப்ப டிஃபன் எங்க நல்லா இருக்கும் என்ற கேள்வி நாக்கு வரை வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனுடனேயே சென்றேன். அவன் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் ஒரு தோசை வாங்கி கொடுத்து பஸ் ஏற்றி விட்டான். இன்டர்வியூ முடிந்தது. பெரிய திருப்தி இல்லை. மேன்சனுக்கு திரும்பி, அவன் வரவுக்காக காத்திருந்தேன்.‌ வேலை முடிந்து களைப்பாக வந்தான். நைட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு. இப்போ கிளம்பி போனா சரியா இருக்கும். கிளம்புகிறேன் என்றேன். ஸ்டேஷனுக்கு நான் வருகிறேன் என்றான். உங்களுக்கு சங்கீதா தானே பிடிக்கும் இங்கே சாப்பிடுவோம் என்றான். இல்ல உனக்கு பிடிச்ச இடத்தில் சாப்பிடுவோம் என்றேன். பரவாயில்ல சங்கீதாவே போவோம் என்றான். சாப்பிட்டு பிளாட்பாரத்திற்கு வந்தோம். நான் ஒரு சூப்பர் அப்பான்னு நினைச்சுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டேன். ரொம்ப ஸாரி என்றேன்.‌ அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் சூப்பர் மகன் இல்லை. எனக்கு சூப்பர் அப்பாவும் தேவையில்லை. எங்க அப்பா மாதிரி இல்ல நான். எல்லாத்தையும் உங்களுக்காக விட்டுக் கொடுத்தேன் என்று மட்டும் இனி நினைத்துக் கொள்ளாமல் முக்கியமாக சொல்லாமல் இருங்கள் போதும் என்றான். சரி என்று கம்மிய குரலில் சொல்லிவிட்டு, தலை குனிந்தவாறு ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தேன். ட்ரெயின் கிளம்பியதும் ஹெட் செட்டில் பாடல் கேட்போமே பேக்கை திறந்தேன். எனக்கு பிடித்த பாஷா அல்வா பாக்கெட் இருந்தது.

No comments: