May 17, 2025

தக் லைஃப்

87 சமயத்தில் எங்கள் ஊர் பகுதியில் கல்லூரிகள் இல்லை. பெரும்பாலும் மதுரையில் இருக்கும் அமெரிக்கன், மெஜூரா, தியாகராஜா ஆர்ட்ஸ் மற்றும் வக்ஃப் போர்டு கல்லூரிகளில் தான் எங்கள் ஊர் காரர்கள் சென்று படிப்பார்கள். ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவர்கள் சனி ஞாயிறு வரும்போது, அவர்கள் பார்த்த படங்களைப் பற்றி சொல்வது தான் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு நூறு நாள் கழித்து தான் வரும். 87 தீபாவளி சமயத்தில் போடப்பட்ட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், மனிதன் படத்தின் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், உழவன் மகன் படத்தின் செம்மறியாடே செம்மறியாடே பாடல்கள் கொடுத்த தாக்கத்தை, நாயகனின் நான் சிரித்தால் தீபாவளி கொடுக்கவில்லை. என்னடா பாட்டு வரியே காதுக்குள்ள போக மாட்டேன் என்கிறதே என்பதுதான் அப்போது பேச்சாக இருந்தது. தீபாவளி முடிந்து அதிரசம் முறுக்கு ரவா லட்டு வாளிகளோடு ஹாஸ்டல் சென்ற சீனியர் அண்ணன்கள், திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தோம். நான் கமல் ரசிகன் என்பதால் அண்ணே நாயகன் எப்படி இருக்கு என்று எல்லோரிடமும் போய் கேட்டேன். டேய் அதை கதை மாதிரி சொல்ல முடியாதுடா. அது பாட்டுக்கு போகும். கவனமா பாக்கணும். அவ்வளவுதான் என்றார்கள். சிலர் படம் புரியவில்லை என்றும் சொன்னார்கள். எங்கள் ஊருக்கு படம் வந்தபோது, ஊர் தியேட்டரில் சுமாரான சவுண்ட் சிஸ்டம். சில டயலாக்குகள் காதில் கேட்கவே இல்லை. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொருவராக நாயகனை பற்றி பேச ஆரம்பித்ததும் தான் அந்தப் படத்தின் பிரம்மாண்டம் உறைத்தது. அந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த பல பென்ச் மார்க்குகளை உடைத்து போட்டு புதிதாக பலவற்றை நிறுவியது. ஆர்ட் டைரக்சன் எப்படி இருக்க வேண்டும், ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் முக்கியமாக வயதானவர் என்று காட்ட வேண்டும் என்றால் தலை முடிக்கு சுண்ணாம்பு அடித்து விட்டு ஒரு கோட் மாட்டி விடக்கூடாது. உருவம்,குரல், நடை முதற்கொண்டு அப்படியே மாற வேண்டும் என்று தமிழ் சினிமாவிற்கு பாடம் எடுத்தது. சினிமா என்பது காட்சி ஊடகம். முடிந்தவரை வசனங்கள் குறைவாக இருக்க வேண்டும். அந்த வசனங்களும் அம்பு போல பாய வேண்டும். என்று பலவற்றை சொல்லாமல் சொல்லியது. அதன் பின்னர், மணிரத்னம் கமல் அடுத்து இணைவார்களா என்ற எதிர்பார்ப்பிற்கு, பதிலாக வந்தது ஆனந்தம் திரைப்படம். அதில் நானா படேகரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் - மணி creative difference காரணமாக, கமல் அதிலிருந்து விலகினார். நானாவும் விலகினார். பின்னர் அதே ஸ்கிரிப்ட்டை, மோகன்லால் பிரகாஷ்ராஜ் வைத்து இருவர் என இயக்கினார் மணி. கிட்டத்தட்ட நாயகன் வெளியாகி முப்பத்தி எட்டாவது வருடம். எவ்வளவோ மாற்றங்கள். அந்த சமயத்தில் பிறந்தவர்கள் தற்போது சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டுமா என்று தயக்கம் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது. வெகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முரட்டுத்தனமான இயக்குனர்- நடிகர் காம்போ. இன்று மாலை 5 மணிக்கு Thug life படத்தின் டிரைலர் வருகிறது. மீண்டும் அந்த மேஜிக் நடக்க வேண்டும் என்பது ஒரு கமல் ரசிகனாக எதிர்பார்ப்பு. அன்று ஒவ்வொரு அண்ணனாக சென்று, படம் எப்படி இருக்கிறது என்று கேட்ட மனம், இன்று ஜூன் 5ஆம் தேதி வரும் ஆன்லைன் விமர்சனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

No comments: