May 17, 2025
மீனாட்சி சுடர்விழி
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றி ஒரு வாரம் கழித்து, மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கும் நாளில் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரை எங்கள் செட் பசங்கள் எல்லோரும் கீழ சித்திரை வீதி,மேல
சித்திரை வீதி, அம்மன் சன்னதி பகுதிகளில் தான் சுற்றிக்கொண்டே இருப்போம்.
அந்த டீன் ஏஜ் பருவத்தில், மீனாட்சி அம்மனைப் பற்றி பேசுகிறோமோ இல்லையோ, மீனாட்சி சுடர்விழியைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டோம்.
மீனாட்சி என்பது மதுரையில் சாதாரணமாக வைக்கப்படும் பெயர் என்றாலும், மீனாட்சி சுடர்விழிகள் அரிதாகத்தான் இருப்பார்கள். அவர் தந்தை எப்படி இந்தப் பெயரை அவருக்கு வைத்தார் என்று எங்களுக்கு இன்னமுமே ஆச்சரியம் தான். அவர் அப்போது மதுரை பி ஆர் சி யில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
சில சிவன் கோயில்களில் கருவறை சிறியதாக இருக்கும். மின்விளக்கு கூட இருக்காது. வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் லிங்கம் மட்டும் இருக்கும். அதிகபட்சம் தண்ணீரால் கழுவி மட்டும் தான் விட்டிருப்பார்கள். அந்தக் கருவறையில் தொங்கும் ஒரு விளக்கில் ஒரு சுடரை ஏற்றி இருப்பார்கள். அந்த சுடர் தீர்க்கமாக எரிந்து, அந்தக் கருவறையையே அழகாக்கும்.
சிவனை தரிசிப்பதை விட அந்த சுடர் நம் மனதை இழுக்கும். அப்படிப்பட்ட கண்களை உடையவள் தான் மீனாட்சி சுடர் விழி. பிறந்த போது எல்லாம் அப்படி ஒரு தீர்க்கம் அவள் கண்களில் தென்பட்டதில்லை. பருவ வயதை அடைந்த பின்னர் அவளைப் பார்க்கும் யாராலும் அவள் கண்களை விட்டு அகல முடியாதபடி அழகு சுடர் விடும் கண்கள் அவளுக்கு அமைந்தன.
எல்லா நாளும் மீனாட்சி மீது கிரேஸோடு அலைந்து கொண்டிருந்த எங்கள் தெரு பையன்கள், மீனாட்சி பட்டாபிஷேகத்தன்று இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார்கள்.
மதுரையின் ராணியாக இன்று முடி சூட்டிக் கொண்டாயே
என் இதய ராணியாக என்று முடி சூட்ட வருகிறாய்
என்று கவிதை எழுதுவதில் துவங்கி,
மீனாட்சி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இன்னைக்கு பட்டாபிஷேகமாமே? எங்கே கிரீடத்தை காணோம் என்று கமெண்ட் அடிப்பது வரை அவரவர் ஸ்டைலில் கவர முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.
கண்களின் தீர்க்கம் அவள் படிப்பிலும் இருந்தது. பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள். எங்கள் தெரு பையன்களுக்கு எல்லாம் அவளால் வலுவாக வீட்டில் திட்டு விழுந்தது. ஒரு பொம்பள புள்ள, வீட்டு வேலை எல்லாத்தையும் அவங்க அம்மா கூட சேர்ந்து பார்த்துகிட்டு, ஸ்கூல் ஃபர்ஸ்ட்டும் எடுக்குறா?
கொட்டிக்கிற வேலை மட்டும்தான் உனக்கெல்லாம் கொடுத்து இருக்கு. எங்க போச்சு உனக்கு அறிவு? எங்க தல விதி உன்னைய பெத்துட்டோம். என்பது அப்போது மீனாட்சியால் எங்கள் தெரு பையன்கள் எல்லோர் வீட்டிலும் அவரவர்களுக்கு கிடைத்த திட்டு.
சில தந்தைகள் இருப்பார்கள். அவர்களை ஏதாவது ஒரு அதிகாரி அல்லது மருத்துவர் போன்றோர் கவர்ந்திருப்பார்கள் தங்கள் பிள்ளை அதேபோல வர வேண்டும் என்று அதற்காகவே மெனக்கிடுவார்கள். சொல்லி சொல்லி வளர்ப்பார்கள்.
மீனாட்சி சுடர்விழியின் தந்தையை அப்படி வசீகரித்தவர், அவரது சொந்த ஊரில் ஸ்டேட் பாங்க் பீல்ட் ஆபிசராக இருந்த ஒரு பெண் அதிகாரி.
நல்ல காட்டன் சேலை கட்டிக்கிட்டு, கையில லெதர்வாட்ச் கட்டிக்கிட்டு, சின்ன கண்ணாடி போட்டு கிட்டு ஜீப்ல எல்லா ஊருக்கும் சுத்தி சுத்தி வந்து லோன் கொடுப்பாங்க. பீல்ட் ஆபிசர் வராங்க பீல்ட் ஆபிசர் வர்றாங்கன்னு எங்க ஊரே காத்து கிடக்கும்.
அது மாதிரி ஒரு பேங்க் ஆபீஸரா மீனாட்சியை ஆக்கிரனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காகவே மீனாட்சி, தான் பிஎஸ்சி அக்ரி படிக்க வேண்டும் என்று, பிளஸ் ஒன் பிளஸ் டூவில் வெறித்தனமாக படித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் என்ட்ரன்ஸ் தேர்வுகள் இருந்தன. அதற்கான கோச்சிங் கிளாசிற்காக தினமும் காலையில் மீனாட்சியை கூட்டிக்கொண்டு போய்விட்டு கூட்டி வருவதற்காகவே அவர் தந்தை இரண்டு மாதம் விடுமுறை எடுத்தார்.
மீனாட்சி எதிர்பார்த்தபடியே பிஎஸ்சி அக்ரி கிடைத்தது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அவர் தந்தை மீனாட்சியை சேர்த்து விட்டார்.
தன்னுடைய கனவு நனவாக அதற்கடுத்தும் ஏராள முயற்சிகளை மீனாட்சியின் தந்தை எடுத்தார்.அவரது வேலை நாள் போக மற்ற நாள்களில் வேன் ஓட்டுவது, திருவிழா, டூர் பஸ்கள் ஓட்டுவது என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்.
பேங்க் எக்ஸாம் படிப்புக்கும் கோச்சிங் எல்லாம் இருக்கு. நல்ல சென்டர்ல சேர்த்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது அம்மாவும் சளைத்தவர் இல்லை. அந்த சமயத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஏராள கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் கேஷியராக பணிபுரிந்தார்.
நானும் எங்கள் செட் பையன்களும் டிகிரியை ஒரு வழியாக முடித்தோம். மதுரையை சுத்துன கழுதை வேறு எங்கேயும் போகாது. அதனால இங்கேயே இருந்து சுகம் கண்டுறாதிங்க என்று எங்கள் எல்லோரையும் சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்தார்கள்.
தீபாவளி,பொங்கல், சித்திரை திருவிழா இவற்றிற்க்கு மட்டுமே வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டோம்.
அப்படி ஒரு சித்திரை திருவிழாவிற்கு வந்த போது, மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று எங்கள் தெரு பையன்கள் அனைவரின் கண்களும் தேடியது மீனாட்சி சுடர்விழியைத் தான்.
ஒருவேளை பேங்க் வேலை கிடைத்து போய்விட்டாரா என்று விசாரித்த போது தான் தெரிந்தது.
மீனாட்சிக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள், அதனால் அவள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. செய்வினை எடுப்பதற்காக அவரது பெற்றோர்கள் அவரை சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்று.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். எங்கெல்லாம் செய்வினை எடுக்கிறார்கள் என்று தகவல் வருகிறதோ அங்கெல்லாம் மீனாட்சி சுடர்விழியை அழைத்துச் சென்றனர் அவர் பெற்றோர்கள். நாகூர் தர்கா, பிரத்தியங்கரா தேவி, படவேடு அம்மன் என எல்லா திசைகளிலும் சென்றார்கள். எந்தப் பயனும் ஏற்படவில்லை.
பின்னர் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி, பேய் விரட்டும் ஆட்களிடம் தொடர்ச்சியாக அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். பேய் ஓட்டுபவர்கள் வேப்பிலையால் அடி அடி என்று அடித்து மயக்கம் அடையவே செய்து விடுவார்கள். பின்னர் மயக்கம் தெளிந்து விழித்த பின்னரும் மீனாட்சி அப்படியே தான் இருந்தார்.
மீனாட்சிக்கு அப்போதைய அந்த ஏரியா அதிகபட்ச திருமண வயதான 30 தாண்டியது. அவரது தந்தையும் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். ஒரு நாள் மீனாட்சியை பார்க்க சென்று இருந்தேன்.
அவர் தந்தை நீண்ட நேரம் என்னிடம் மனம் விட்டு பேசினார். காலேஜ் முடிச்சு வந்த உடனே,
என் காதில் ஏதோ குரல் கேட்கிறது கேட்கிறது என்று சொன்னாள். முதலில் ஈ என் டி டாக்டரிடம் கூட்டி போனேன். அவர் காதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
அவள் தொடர்ச்சியாக, என்னை வெளியில் இருந்து ஒருவன் பேசி மயக்க பார்க்கிறான், என்னை தப்பானது எல்லாம் செய்யச் சொல்கிறான், இல்லாவிட்டால் என்னை சாகச் சொல்கிறான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
திடீர் திடீரென இரவில் எந்திரித்து உட்காருவாள். சில நாட்கள் தற்கொலைக்கு முயன்றாள்.
எனக்கு எதுவும் புரியாமல் செய்வினை தான் வைத்து விட்டார்கள் என்று சில வருடங்கள் வீணடித்தேன். பின்னர் பேய் பிடித்து இருக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி அதில் பல வருடங்களை வீணடித்தேன்
பின்னர், என் மேனேஜர் தான் சொன்னார் இது மனநோயாக இருக்கும். சீஷோபெர்னியாவாக இருக்கலாம் என்று. மீனாட்சிக்கு இப்படியான சில வருடங்களிலேயே ஒருவர் இதை சொன்னார். நான் தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னொரு பக்கம் மனநோய் என்று வெளியில் சொல்லி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று பயந்தேன். செய்வினை, பேய் பிடித்து இருக்கிறது என்பதை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. எனவே என் மனமும் அதை நோக்கியே சென்றது.
இப்போதுதான் ஆனது ஆகட்டும் என்று மனநல மருத்துவரிடம் காட்டி வருகிறேன் என்றார்.
10- 12 ஆண்டுகள் மீனாட்சி அனுபவித்த வேதனை நரகத்திற்கு இணையானது. ஒருவனுக்கு கை கால் அடிபட்டால் அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். எல்லோருக்கும் சொல்கிறார்கள். ஆறுதல் சொல்ல அனைவரும் வருகிறார்கள்.
ஆனால் மனநோய் என்பதை மூன்றாவது ஆள் அறியாமல் பூட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கிறது. உடல் குறைபாடை போலத்தான் அதுவும் என்பதை யாருமே ஏற்றுக் கொள்வதில்லை.
சீஷோபெர்னியா பாதித்தவர்களை குடும்பம் மூன்றாம் நபர் அறியாமல் பொத்தி பாதுகாக்க நினைக்கிறது. அதனால் பல கஷ்டங்களை எதிர்கொள்கிறது. அந்தக் கஷ்டங்களை வேதனைகளை வேறு வேறு யாரிடமும் காட்ட முடியாமல் அந்த நோயாளியின் மீது காட்டும் அவலமும் நடைபெறுகிறது.
ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு மீனாட்சியின் பெற்றோர் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க துவங்கினார்கள்.
இந்த சமயத்தில், திடீரென வீட்டில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் கடைகளுக்கு மீனாட்சி செல்வார். அங்கே போய் உட்காருவார். ஒரு ஆண் அப்படி போகும்போது பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி போய் உட்காருவது சமுதாயத்தில் கேலி பொருளானது.
மாத்திரைகளின் வீரியம் அவரை தூங்க வைத்துக் கொண்டே இருக்கும். மீனாட்சியின் பெற்றோரும் வயது முதிர்வின் காரணமாகவும், இவ வீட்டுக்குள்ளேயே இருந்தா போதும் என்ற நிலைப்பாட்டின் காரணமாகவும், தூங்கிட்டே இருந்தா கூட போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
மீனாட்சி நன்றாக சாப்பிடுவார். மாத்திரை போட்டுக் கொண்டு நன்றாக தூங்குவார். இதனால் உடல் பருமன் அதிகமாகிக் கொண்டே போனது. உடல் பொலிவு இழந்தது. மீனாட்சியின் தாயாரால் ஓரளவிற்கு தான் அவருக்கு சிருட்சைகள் செய்ய முடிந்தது.
சில வருடங்களில் மீனாட்சியின் தந்தையார் காலமானார். அவரது தாய் மட்டும், நானும் போயிட்டா இவ என்ன ஆவா? என்கிற மனநிலையில் வைராக்கியமாக தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஏழு எட்டு வருடங்களாக நான் மதுரைக்கே வரவில்லை. மிகவும் ஆச்சரியமாக தந்தை அழைத்தார். இந்த வருஷம் மண்டகப்படி நம்ம பங்காளிகள் செய்ய வேண்டியது. ஏற்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது, நிச்சயம் குடும்பத்தோட வந்துவிடு என்றார்.
வந்து இறங்கிய நாள் மீனாட்சி பட்டாபிஷேகம். ரெண்டு நாள் கழிச்சு தேரோட்டம். நம்ம கீழ சித்திர வீதி,மேல சித்திர வீதி ஆட்கள் எல்லாம் இருந்தா இந்த தடவை வடம் பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில்தான், என்னப்பா இப்படி ஆகிப்போச்சு என்ற குரல் கேட்டது. மீனாட்சி இறந்துவிட்டார் என்று தகவல் சொன்னார்கள்.
உடனடியாக அவர்கள் வீட்டிற்கு போனோம். அவரது தாயார் அழுவதற்கு கூட சக்தியற்று சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
மீனாட்சியில் முகத்தைப் பார்த்தேன். சிவன் கோவில் கருவறை சுடர் போல ஒரு காலத்தில் ஒளிந்த அந்த கண்கள், எந்த ஜீவனும் இல்லாமல், பீளையோடு நிலைகுத்தி இருந்தது.
கனத்த மனதோடு கண்களை மூடிய போது, பக்கத்து வீட்டு டிவியில் லோக்கல் கேபிள் சேனலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
குட்ட பெரியப்பா
எங்கள் செட் பங்காளி பையன்களால் குட்ட பெரியப்பா என்றும், சூப்பர் சீனியர் பங்காளிகளால் பொடி மட்ட என்றும், கட்சிக்காரர்களால் வதிலை அண்ணாத்துரை என்றும் அழைக்கப்பட்டவர் என்னுடைய பெரியப்பா.
அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜா பிரஸ்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர்.
அப்போது தனித்தனியாக இருக்கும் எழுத்துக்களை கோர்த்து, பிரிண்டிங்கிற்கான மேட்டரை உருவாக்குவார் கம்பாசிட்டர். அதை ப்ரூப் பார்த்த பின்னர் அச்சடிக்க துவங்குவார்கள்.
விசேஷ பத்திரிகைகள், நோட்டீஸ் என எதுவாக இருந்தாலும், மேட்டரை தெளிவாக ரெடி பண்ணுவதில் பெரியப்பா கில்லாடி.
எங்கே ஒற்று வர வேண்டும், ன, ண எங்கே வரவேண்டும் தமிழ் ஆண்டு, அவரவர் ஜாதிக்கு ஏற்ப போட வேண்டிய வாசகங்கள், தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பாமார் புரோட்டோகால்கள் என எல்லாவற்றையும் சரிபார்த்து கொடுப்பார்.
கட்சி நோட்டீஸ்கள் அடிக்கும் போதும், மாவட்டம், ஒன்றியம், கிளை பிரதிநிதி வரை சரியான புரோட்டோ கால் இருக்கிறதா என்று சரி பார்த்து பிழை திருத்தி கொடுப்பார்.
பேரை முன்னாள் போடவில்லை என்பதால் நின்று போன கல்யாணங்களும் வெட்டுக்குத்து வரை போன அரசியல் கட்சி கூட்டங்களும் எங்கள் ஏரியாவில் மிக அதிகம்.
எனவே எதற்கும் அவரிடம் ஒருமுறை சரிபார்த்து விடுவோம் என்று அவர் ஒப்புதல் அளித்த பின்னால் தான் அச்சுக்கே போவார்கள்.
நான் ஆறாம் வகுப்பிற்கு சென்றபோது, தெருவில் இருந்த அண்ணன் ஒருவரின் பழைய புத்தகங்களை தந்தை வாங்கி கொடுத்தார்.
புது புத்தகம் தான் இல்லை. பைண்டிங் ஆவது பண்ணிக் கொடுங்கள் அட்டை கூட இல்லாமல், அழுக்காக இருக்கிறது என்றேன்.
ராஜா பிரஸ்ல உங்க பெரியப்பா இருப்பாரு. பைண்டிங் எல்லாம் வேணாம். ஏதாவது ஒரு அட்டையை வைச்சு டொய்ன் நூல் போட்டு தைச்சு கொடுக்க சொல்லு என்று அனுப்பினார்.
புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவரை பார்த்தேன். நான்கரை அடி உயரம். சற்று பருமனான உருவம், மாநிறம். எப்போதும் அரை கை வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி.
வேட்டி இடுப்பு மடிப்பில் அவரது ஜீவ சக்தியான ஒரு பொடி மட்டை.
எழுதும் பொழுதோ அல்லது ப்ரூப் பார்க்க துவங்கும் போதோ அந்த பொடி மட்டையை எடுப்பார். வலது கை பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஒரு சிட்டிகை எடுத்து, இடது கை ஆள்காட்டி விரலால் இடது மூக்கை மூடிக்கொண்டு, வலது மூக்கில் பொடியை சர் என்று இழுப்பார். அடுத்த உடனே அடுத்த சிட்டிகை எடுத்து, வலது கை நடு விரலால் வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது முக்கால் பொடியை ஒரு இழு இழுப்பார்.
பத்மா சுப்ரமணியம் அவர்கள் சிருங்கார ரசம் காட்ட மூக்குத்தியை சுற்றி ஒரு அடவு காட்டுவார். அதற்கு இணையாக வெகு நளினமாக மூக்குப்பொடி போடுவார் பெரியப்பா.
விவரம் சொன்னதும், ரோடு தாண்டி, டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடை இருக்கும் அங்கே என் பெயரைச் சொல்லி பொடி வாங்கிட்டு வா என்றார்.
வாங்கி வருவதற்குள், ஒரு கெட்டி அட்டையை வைத்து டொய்ன் நூலால் அழகாக தைத்திருந்தார். கூடுதலாக ப்ரஸ்ஸில் மூன்று பக்கங்களிலும் அழகாக வெட்டி வைத்திருந்தார். அந்த அழுக்கெல்லாம் போய் புது புத்தகங்கள் போல இருந்தது.
சந்தோசமாக வாங்கிக் கொண்டேன். காசு என இழுத்தேன். போடா போடா என்று விரட்டிவிட்டார்.
அதன் பின் அந்த வழியாக மேல்நிலை பள்ளிக்கு போகும் போது, அவ்வப்போது அவருக்கு பொடி வேண்டுமா என்று கேட்டு வாங்கி கொடுக்க தொடங்கினேன்.
எங்கள் இருவருக்கும் ஒரு நட்பு மலரத் துவங்கியது. அந்த ப்ரஸ்ஸில் ஏராளமான வேஸ்ட் பேப்பர்கள் வரும். ப்ரூப் பார்க்க எடுத்த பேப்பர்கள் நிறைய இருக்கும். அதில் மறுபக்கம் அச்சிட மாட்டார்கள். அதையெல்லாம் சேர்த்து, ஏதாவது கல்யாண பத்திரிக்கை ப்ரூப் எடுத்த அட்டையை போட்டு,தைத்து ஒரு நோட்டு போல தருவார்.
ரஃப் நோட் என்று அதை பெருமையாக எடுத்து எழுதுவேன்.
ஒருமுறை பொடிக்கடைக்கு சென்றபோது, கடைக்காரர், நீ தெற்கு தெரு பையன் தானே? பிரசிடெண்ட் வீட்டுல இந்த டப்பாவை கொடுத்துவிடு என்றார்.
அவருக்கு ஸ்பெஷல் பொடி. நேத்தே தீர்ந்து போச்சு. இப்பதான் திண்டுக்கல்ல இருந்து வந்துச்சு. அதை சொல்லிக் கொடு என்றார்.
வெள்ளியில் செய்யப்பட்ட அழகான ஒரு சிறிய பொடிடப்பா. எங்கள் தெருவில் இருந்தவர்கள் பிரசிடெண்ட் அம்மா என்ன வேலை சொன்னாலும் ஓடி செய்வோம். காரணம் அப்போது அவர்கள் வீட்டில் மட்டும் இருந்த கலர் டிவி. கடைக்கு போகிறவர்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்க அனுமதிப்பார்கள்.
அதனால் மிக மகிழ்ச்சியுடன், அதை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன்.
அப்போது அவர்கள் செட் ஆட்கள் மட்டும் தான் பொடி போட்டுக் கொண்டிருந்தார்கள். என் சித்தப்பா செட்டெல்லாம் பீடி, சிகரெட் என மாறிவிட்டார்கள். அடுத்த முறை பெரியப்பாவை பார்த்தபோது, உங்க வாத்தியார் சொன்னார்டா நல்லா படிக்கிறியாமே என்றார். அசடு வழிய சிரித்தேன்.
நல்லா படிடா. உனக்கு ரப்பர் ஸ்டாம்ப் நான் தான் அடிச்சு தருவேன். நம்ம பங்காளிகள்ல யாருமே விசிட்டிங் கார்டு எல்லாம் அடிக்கல. உனக்கு அதுவும் நான் அடிச்சு தருவேன் என்றார்.
உடனே நானும், பெரியப்பா, நான் வேலைக்கு போன உடனே, உங்களுக்கு ப்ரெசிடெண்ட் வச்சிருக்கிற மாதிரி ஒரு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி கொடுக்கிறேன் என்றேன்.
வருடங்கள் கடந்தன. கல்லூரி விடுதியிலும் சேர்ந்து விட்டேன். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, பிரஸ் பக்கம் சென்றால் அவர் இல்லை.
போன வாரமே அவர் இறந்து போயிட்டாரே என்றார்கள். அதிர்ச்சி. அப்போது போன் போன்ற வசதி இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன் கூட இதை யாராவது சொல்லி இருக்கலாமே என எனக்கு ஒரு ஆதங்கம்.
அவருடன் பணியாற்றிய பிரஸ் ஊழியரிடம் பெரியப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன்.
வயசு ஆகுது இல்ல. சாப்பாடும் பல வருஷமாவே அவருக்கு சரி இல்லை. அவ்வளவுதான் உடம்பு தாங்கும் என்றார்.
பெரியப்பா பிறந்த சில மாதங்களிலேயே அவரது தாயார் இறந்துவிட, சரியான சாப்பாடு இல்லாமலேயே வளர்ந்தவர். படிப்பில் திறமைசாலி. அவர் வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தந்தையும் இறந்துவிட, கட்டிக் கொடுத்த அவரது மூத்த சகோதரிகள் வீட்டு பக்கமும் ஒதுங்க முடியாமல், கிட்டத்தட்ட அனாதை போலவே வாழ்ந்திருக்கிறார்.
அவருடன் படித்த நண்பருடைய பிரஸ் அது. அங்கேயே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, இரவும் அங்கேயே தூங்குவார்.
காலை எழுந்ததும் எந்த பம்ப்செட்டில் தண்ணீர் வருகிறது என்று பார்த்து குளித்துவிட்டு அவர் வேட்டி சட்டையை அங்கே காய போட்டு விட்டு வருவார். வரும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகளில் ஏதாவது சாப்பாடு. பிரஸ் வந்த பின்னர் ஏதாவது வடை, டீ சாப்பிட்டு ஒட்டி விடுவார். இரவும் ஏதாவது ஒரு நடைபாதை கடை.
இப்படியே 40 வருடங்களுக்கும் மேலாக ஓட்டியிருக்கிறார். பெற்றோர்களும் இல்லாமல், வசதி வாய்ப்பும் இல்லாமல், குட்டையாகவும் இருந்ததால் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.
அவரது நண்பர் மேலும் சொன்னார், எங்க பங்காளிகளிலேயே இந்த பையனத்தான் எனக்கு பிடிக்கும், எனக்கு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி தரேன் என்று சொன்னான் என்று சொல்லி சிரித்தாராம்.
யாராவது கூப்பிட்டு விசேஷ நாட்களில் ஒரு வேளையாவது சாப்பாடு போடுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம்.
எனக்கு அப்படி எதுவுமே தோணல, அந்த அளவுக்கு வீட்டுச் சூழலும் எனக்கு இல்ல என்றேன்.
நீ சின்ன பையன். ஆனா உங்க பங்காளிக யாராவது அவரை விசாரிக்கவாவது செஞ்சிருக்கலாம்.
40- 50 வருஷமா எத்தனையோ பேருக்கு கல்யாண பத்திரிக்கை அடிச்சு கொடுத்தவரு. அவருக்கு கல்யாணமும் ஆகல. ஆயிரக்கணக்குல கருமாதி பத்திரிகை அடிச்சு கொடுத்தவரு. அந்தக் கருமாதி பத்திரிகை அடிக்கவும் அவருக்கு ஆள் இல்லாம போயிருச்சு.
அனாத பொணம் மாதிரி மாதிரி தூக்கி போட்டு போயிட்டாங்க. ஒண்ணுமே நடக்காத ஒருத்தனுக்கு ஒரு கருமாதி பத்திரிக்கையாவது அடிச்சு அன்னைக்கு நாலு பேருக்கு சோறு போட்டு இருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டார்.
இன்று பொடிக்கடைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. அந்த பழக்கம் தற்போது இளைய தலைமுறை இடம் இல்லாததால், பழைய ஆட்கள் மட்டுமே அந்த கடைகளுக்கு வருகிறார்கள்.
அது மாதிரி கடைகளை பார்க்கும் போதெல்லாம், எனக்கு பெரியப்பாவின் ஞாபகம் வந்து மனதை ரணமாக்கும். யாருக்கு எது தேவை என்பதை உணரும் ஒரு நுட்பமான மனம் தேவை. அந்த நுட்பமான மனம் இருக்கிறவர்கள், வாய்ப்பிருக்கும்போதே பிறரை மகிழ்விக்கிறார்கள்.
அது இல்லாதவர்கள் அதை உணரும் நாளில் வருத்தம் மட்டுமே அடைய முடிகிறது.
April 19, 2025
சுந்தர் கடை
நான் எதிர்கொண்ட அதிர்ச்சிகளிலேயே முக்கியமானது சுந்தர், கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள ஊரிலேயே வசதியான அவர்கள் வீட்டார் கேட்டு வந்தபோது மறுத்தது தான்.
அமைதியானவன்,தெளிவானவன் என்று பெயர் எடுத்தவன். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், எங்கள் செட்டில் எல்லோரும் பிளஸ் ஒன்றிற்கு மருத்துவம், பொறியியல், அக்ரி என சேர வேண்டும் என்று அதற்கேற்ற குரூப்புகள் கேட்டு முட்டி மோதிக் கொண்டிருந்த போது, எனக்கு எக்கனாமிக்ஸ் குரூப் தான் வேண்டும். எனக்கு மேத்ஸ் சரியாக வராது, பயாலஜியும் வேண்டாம். படம் வரையவும் வராது, அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வேண்டாம் என்று சொல்லி எக்கனாமிக்ஸ் குரூப்பில் சேர்ந்தான்.
பிளஸ் டூ முடித்ததும் அவனுடன் படித்த எல்லோரும் மதுரையின் முக்கிய கல்லூரிகளில் அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்தபோது, ஊருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கல்லூரியில் பி காம் சேர்ந்தான்.
என்னுடைய எய்ம், குரூப் 2 அல்லது குரூப் 4. அதற்காக மட்டும் தான் படிப்பேன் என்று, கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பித்தான். படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது தான்.
கல்லூரி முடிந்த உடனேயே அவன் செய்த செயல் எல்லோருக்கும் ஆச்சரியம். ஊரில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே இருந்த ஒரு காம்ப்ளக்ஸின் தரைத்தளத்தில் பத்துக்கு எட்டு சைஸில் ஒரு கடையை பிடித்தான். பெரிய பிராண்ட் இல்லாத வேஷ்டிகள், துண்டுகள், சட்டைகள், சேலைகள், உள்ளாடைகள் என வாங்கி வைத்தான்.
காலையில் ஐந்தரை மணிக்கு கடையை திறந்து வைத்து விடுவான். அவனது காரணம், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இறங்கி தான் சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் செல்கிறார்கள். குழந்தை பிறப்பு, திருவிழாக்கள், தீச்சட்டி, பிற விசேஷங்கள், துக்க நிகழ்வுக்கு வருபவர்கள் மலிவான விலையில் தான் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலும் ஒரு முறைக்கு செய்ய வேண்டியது. எனவே இந்தப் பக்கம் தேடுவார்கள். இப்படி ஒரு கடை இருக்கிறது என்றால் காலப்போக்கில் தொடர்ந்து எல்லோரும் வருவார்கள் என்றான்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் பெரிய ஓட்டம் இல்லை. ஆனால் அவன், அங்கே போனால் காலை ஐந்தரையிலிருந்து இரவு வரை இந்த வகை துணிகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருந்தான். கடையிலும் எந்நேரமும் படித்துக் கொண்டே தான் இருப்பான். எல்லா தேர்வுகளையும் போய் எழுதி விட்டு வருவான்.
இந்த சூழலில் தான் எங்கள் செட்டில் எல்லோரும் சைட் அடித்துக் கொண்டிருந்த, ”தெற்குத் தெரு ஷோபனா” என்கிற பட்டப்பெயர் கொண்ட கார்த்திகாவிற்கு திருமணம் செய்ய அவர்கள் வீட்டார் முடிவெடுத்தார்கள். இது நம்ம ஆளு படம் வந்திருந்த நேரம், அப்போது நாங்கள் டியூஷன் படிக்கும் தெருவில் ஒரு கோலாட்டம் நடந்தது. அதில் பச்சை கலர் பாவாடை சட்டை, சிகப்பு கலர் தாவணி அணிந்து ஒல்லியாக, நல்ல சிவப்பாக கிட்டத்தட்ட ஷோபனா முகச்சாடையில் ஆடிய கார்த்திகாவை பார்த்து எல்லோரும் மனதை பறி கொடுத்து, அந்தப் பெயரை சூட்டியிருந்தார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணை, சுந்தருக்கு கேட்டு வந்தபோது அவன் மறுத்து விட்டான்.
பொதுவாக, எங்கள் ஏரியா பெரிய திருமணங்களில், ஒரு லாட்ஜில் பல ரூம்களைப் பிடித்து வைத்து, ஒரு ரூமில் ஃபுல்லாக சரக்கு பாட்டில்கள், இன்னும் இரண்டு ரூம்களில் சாப்பாடு என அரேஞ்ச் செய்வார்கள். சரக்கு போடுவதற்கு சில பல ரூம்கள். இந்த நிர்வாகப் பொறுப்பை திருமணம் செய்பவர்கள் நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பார்கள். கார்த்திகா திருமணத்திற்கு, எல்லா செட்டிற்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃபுல் பாட்டில்களை கொடுக்கும் பொறுப்பில் இருந்தவன் சுந்தர்.
இரவு கடந்து எல்லோரும் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவனிடம் கேட்டேன். ஏண்டா என்று. அவன் சொன்னான்.
என்னுடைய பெர்சனாலிட்டிக்கு, எங்கள் வீட்டு வசதிக்கு, இனிமேல் எனக்கு கிடைக்கும் வேலைக்கு என எந்த விதத்திலும் கார்த்திகா மேட்ச் கிடையாது. அவள் வாழ வேண்டியது வேறு சூழல். கழுகிற்கு தேவை பரந்த வானம். கோழிகளை வேண்டுமானால் என் வீட்டில் வளர்க்கலாம் என்று.
பின்னர் அவனுக்கு திருமணம் நடைபெற்றது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் போராடிய சுந்தர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றான். எல்லோரும் விஏஓ போஸ்டிங்கிற்கு போராடிக் கொண்டிருந்தபோது, எந்தவித மேல் வரும்படியும் வராத ஒரு டிபார்ட்மெண்டை தேர்வு செய்தான்.
அவனுடைய மச்சினன் என்னிடம் இது குறித்து புலம்பினான். அப்போது சொன்னேன் அவன் 300 பவுன் நகை,3 வீடு, 30 ஏக்கர் நிலத்தோடு கார்த்திகா வந்த போதே மறுத்தவன். உன் தங்கையை, உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறான் என்பதில் குறை இருந்தால் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்றேன். எனக்குத் தெரியும் எல்லோருக்கும் பெய்யும் மழை போல அவன் எல்லோருக்கும் கொடுக்கும் சமமான மதிப்பு பற்றி.
அடுத்த சில வருடங்களில் சுந்தருக்கு ஊரில் ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. காலை ஐந்தரை மணிக்கு கடையை திறந்து விடுவான். கடைக்கு இரண்டு பேரை நியமித்திருந்தான். அவர்கள் 9 மணிக்கு வந்ததும் இவன் அலுவலகத்திற்கு கிளம்பி விடுவான். சாயங்காலம் அலுவலகத்தில் இருந்து வந்து அவர்களை ஆறு மணிக்கு அனுப்பி விடுவான். அதன் பின்னர் அவன் கடையை பார்த்துக்கொள்வான். வரை இருப்பான். இடையில் வீட்டிற்குப் போய் வர, துணைக்கு என அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வசதி இல்லாத பையன்கள் யாரையாவது மாலையில் பார்ட் டைமாக வேலைக்கு வைத்திருப்பான்.
சுந்தர் கடை என்பது எப்போது போனாலும் சரியான விலையில் நமக்குத் தேவையான அவசர துணிகள் கிடைக்கும் என்கிற பெயரை பெற்றது. அதுபோக அவன் செட்டில் படித்து வெளியூர் சென்று இருந்தவர்கள் மற்றும் உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அது ஒரு மையமாக விளங்கியது.
பொருட்களை கொடுத்து விடுவது, பேருந்து மூலம் வரும் பொருள்களை வாங்கி வைப்பது, அவ்வளவு ஏன் ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்வது என சுந்தர் கடை என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசிய மையமாக மாறியது.
அதைவிட, மாலை வேலைகளில் எங்கள் செட்டு ஆட்கள், உறவினர்கள் எல்லோரும் தங்கள் மனக்குமுறலை கொட்டவும், டென்ஷனாக இருக்கும்போது வந்து உட்காரும் இடமாகவும் மாறியது.
சொல்வதை அமைதியாக எந்த முக, உடல் சலனமும் இன்றி கேட்டுக் கொள்வான்.எந்தக் கருத்தும் சொல்ல மாட்டான். அதை யாரிடமும் பகிரவும் மாட்டான். கிளம்பும்போது எல்லாம் சரியாயிடும் பார்த்துக்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்புவான். எனவே சுந்தர் கடையில் மாலை வேலைகளில் வந்து உட்காருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது.
இந்த முறை ஊருக்கு சென்றபோது, சுந்தரை பார்த்துவிட்டு பஸ் ஏறலாம் என்று அவன் கடை பக்கம் போனேன். அங்கே கார்த்திகாவின் கணவர் உட்கார்ந்து, சுந்தரிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தார்.
Subscribe to:
Posts (Atom)