மகாநதி திரைப்படம் பற்றி பட வெளியீட்டுக்கு முன்னர் பெரிய செய்திகள் வரவில்லை.
December 08, 2025
மகாநதி
வந்தவற்றில் முக்கியமான ஒன்று. குமுதம் அரசு பதில்களின் நடு எழுத்து ,
'ர' வும், ஆசிரியர் குழுவின் முக்கிய தூணுமான ரா.கி. ரங்கராஜன் அவர்கள் வசனம் என்பது.
ரா.கி.ரங்கராஜன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் நிறைய மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் எழுதியவர். பட்டாம்பூச்சி, லாரா ஆகியவை அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு ஆக்கங்கள். ”எப்படி கதை எழுதுவது” என்கிற நூலும் அவர் எழுதி இருந்தார்.
1970களின் பிற்பகுதியில் மகேந்திரன், தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாலு மகேந்திரா, ருத்ரய்யா என புதிய அலை இயக்குனர்கள் வந்தபோது, அதுவரை தமிழ் சினிமாவில் வராத எதார்த்த கதைகள் வந்தன. அத்தனை படங்களுக்கும் முதுகெலும்பாக இளையராஜா வேறு இருந்தார்.
அந்த சமயத்தில், கமல்ஹாசன் அவர்கள் ரா.கி. உங்களுக்கான களம் இருக்கிறது வாருங்கள் என்று அழைத்தார். அவர் வந்து சேர 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
1994 பொங்கலுக்கு மகாநதி படம் வெளியானது. அதனுடன் வெளிவந்த படங்களில் ரிலீசுக்கு முன்னர் அதிகம் பேசப்பட்ட படங்கள் சேதுபதி ஐபிஎஸ் மற்றும் அமைதிப்படை.
வால்டர் வெற்றிவேல் வெற்றி களிப்பில் பி வாசு மற்றும் விஜயகாந்த், ஏவிஎம் என ஒரு வலுவான கமர்சியல் கூட்டணி. கடிகார செட் போட்டு இருக்கிறோம் பாதாள சாக்கடை செட் போட்டிருக்கிறோம் என ஏராள விளம்பரங்கள்.
அமைதிப்படை படத்தைப் பொறுத்தவரை, Back to Basics என்பது போல சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என பேட்டிகள்.
பிரபுவின் நூறாவது படம் ராஜகுமாரன். ஆர்வி உதயகுமார் இயக்கம், நதியா ஒரு இடைவேளைக்குப் பிறகு நடிக்கிறார் என ஒரு ஆவல். வழக்கமாக இளையராஜாவின் ஹிட் பாடல்கள். என ராஜகுமாரனுக்கும் ஒரு எதிர்பார்ப்பு.
ஜென்டில்மேன் பட வெற்றியில், தன்னை ஒரு பிராண்டாக மாற்றிவிட வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோன், ஜென்டில்மேன் குஞ்சுமோன் வழங்கும் என கொண்டு வந்த சிந்துநதிப் பூ. அவரும் விளம்பரத்திற்கு ஏராளமான பணத்தை வைத்து இருந்தார். ஆனால் அந்த விளம்பரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட கலக்கப்போவது ராமர் பாடிய அந்தப் படத்தின் பாடலான ”ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்க பச்சை நரம்பு” வரிகள் அதிக பிரபலத்தை அந்த படத்திற்கு கொடுத்துவிட்டன.
பாக்யராஜ் நடித்து இயக்கிய வீட்ல விசேஷங்க படமும் இந்த பொங்கலுக்கு வந்தது.
ராமநாராயணன் இயக்கத்தில் அவரது கம்பெனி ஆர்டிஸ்ட்கள் மற்றும் விசு நடித்த வாங்க பார்ட்னர் வாங்க. படம். இதில் தோல்வியடைந்த தொழில் முனைவோர்கள் விநாயகரை ஒரு பார்ட்னராக சேர்ப்பார்கள். பணம் வந்தவுடன் அவருக்குரிய பங்கை தர மாட்டார்கள். அவர் எப்படி அவர்களிடமே காரியதரிசியாக வந்து சேர்ந்து அவர்களை திருத்துகிறார் என்று ஒரு கதை.
1994 பொங்கலுக்கு இந்த படங்கள் மகாநதியுடன் வெளியான போது, பி&சி சென்டர்களில் சேதுபதி ஐபிஎஸ்க்கு வலுவான கூட்டம். ஆனால் பொங்கல் விடுமுறை முடிவதற்குள் அமைதிப்படைதாம்பா நல்லா இருக்கு என்கிற பேச்சுக்கள் வந்து, அந்தப் படத்திற்கு கூட்டம் எகிறியது.
மகாநதி பார்த்த கமல் ரசிகர்கள், ரொம்ப சோகமா இருக்குப்பா என்று முடித்துக் கொண்டார்கள். எனவே அந்த வயதில் அந்த படத்திற்கு போக சிறிய மனத்தடை இருந்தது.
அமைதிப்படை, சேதுபதி ஐபிஎஸ், ராஜகுமாரன், வீட்ல விசேஷங்க ஏன் வாங்க பார்ட்னர் வாங்க படம் கூட பார்த்தாகிவிட்டது. மகாநதிக்கு அந்த பொங்கல் விடுமுறையில் போகவில்லை.
ஒரு வாரம் கழித்து, திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டரில் இரண்டாம் காட்சிக்கு போனேன்.
பொதுவாக படம் முடிந்ததும், முண்டியடித்து வெளியேறுவார்கள். ஆனால் மகாநதி படம் முடிந்ததும் பொறுமையாக, வரிசையாக, கனத்த மவுனத்துடன் வெளியேறினார்கள்.
அப்போதெல்லாம் இப்போது போல எல்லோரும் கார், பைக்குகளில் வர மாட்டார்கள் நடந்து வருபவர்கள் தான் 80- 90% இருக்கும். திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டரில் இருந்து பேருந்து நிலையம் வரை கிட்டத்தட்ட 300 பேர் வரை நடந்து வந்தோம். இன்னொரு எதிர் வழியில் ஒரு 200 பேர் வரை சென்றார்கள்.
பொதுவாக படம் முடிந்து வரும்போது, அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுகள், அடுத்து எந்த படம் போகலாம், எதுவும் சாப்பிடலாமா, பஸ் இருக்குமா என்றெல்லாம் கலவையான பேச்சுக்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் எந்தவித பேச்சுக்களும் இல்லை எல்லோரும் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.
பொதுவாக இரண்டாம் காட்சி ஆர்த்தி தியேட்டரில் முடிந்து வரும்போது, YMR பட்டி சந்திப்பில் கார்னரில் ஒரு நல்ல டீக்கடை இருக்கும். அங்கே கூட்டமாக நின்று டீ குடித்துவிட்டு தான் கலைவார்கள்.
அன்று யாருக்கும் அந்த கடையில் நின்று டீ குடிக்க கூட விருப்பமில்லை. பேருந்து நிலையம் வரை ஒரு அமைதி ஊர்வலமாக அது நடந்தது.
இன்றும் யோசித்துப் பார்த்தால், இதுபோல ஒரு கனத்த மவுனத்துடன் எந்த படம் முடிந்து இப்படி வெளியேறி வந்தோம் என்று நினைத்துப் பார்த்தால் மிக சில படங்களே நினைவுக்கு வருகின்றன.
படம் பார்க்க வந்த ஒரு கூட்டத்தையே, அமைதியாக்கி இப்படி ஆகிவிட்டால் என்னாவது என்கிற யோசனைக்கு தள்ளி நம் வாழ்க்கையை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வைத்த படங்கள் மிகக் குறைவே. அதில் மகாநதியும் ஒன்று.
அந்த இரவு தாண்டி இன்று வரை அந்தப் படத்தை முழுதாக பார்க்க நினைத்ததே இல்லை.
4G வந்த பிறகு, அந்தப் படத்தின் ஒளி துண்டுகள் நிறைய பகிரப்பட்டன. முக்கியமாக கல்கத்தா சோனாகாச்சி பகுதியில் இருந்து கமல் தன் மகளை மீட்டு வரும் காட்சி. அதை மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
அந்த படத்திற்குரிய ஆகப்பட்ட விருதாக நான் நினைப்பது அன்று இரவுக்காட்சி முடிந்ததும் பொதுமக்கள் நடத்திய அமைதி ஊர்வலம் தான்.
சுத்தம்
பட்டன் ஃபோன் காலத்தில் பணியாற்றிய ஒரு அலுவலகத்தில் உடன் சில ஆண்டுகள் பணியாற்றிய நண்பர். டச் ஸ்கிரீன் வந்தவுடன், மீண்டும் நட்பு துளிர்விட்டது.
பெரிய உரையாடல்கள் எதுவும் இருக்காது. வாட்ஸ் அப்பில் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வோம்.
வேலை முடிந்து, ஒரு பேபி கிஃப்ட் செட் வாங்கிக்கொண்டு, மருத்துவமனையை அடைந்து அந்த ப்ளோர் நர்சிங் ஸ்டேஷனில் ரூம் நம்பர் சொல்லி கேட்டபோது அங்கே இருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
ரூம் கதவைத் தட்டி, அந்த கிப்ட் செட்டை நண்பரிடம் கொடுத்து விட்டு, இரண்டு வார்த்தைகள் சம்பிரதாயமாக பேசிவிட்டு கிளம்ப யத்தனித்த போது,
தாழ்ந்த குரலில் எனக்காக ஒரு மணி நேரம் இங்கே இருக்க முடியுமா என்று கேட்டார். நானும் மனைவியும் வீடு வரை சென்று விட்டு வருகிறோம். அதுவரை இங்கே இருக்க முடியுமா என்றார்.
எனக்கு சங்கடமாக இருந்தது. நண்பரின் மகள் எனக்கு பழக்கம் இல்லாதவர். பேசியதே கிடையாது.
உங்கள் பெண்ணிற்கு ஓகேவா என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்றேன். அவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் இல்லையென்றால் கூடுதலாக அரை மணி நேரத்தில் வந்து விடுவோம். பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
எனக்கு ஒரு பக்கம் சங்கடம் என்றால் இன்னொரு பக்கம் ஆச்சரியம். குழந்தை பிறந்து சில நாட்கள் ஆகிறது. யாராவது உறவினர்கள் கூட இருப்பார்கள்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தையின் தந்தை உடன் இருப்பாரே அவரையும் காணவில்லை.
சுற்றத்தினர் யாரும் இல்லாவிட்டாலும் கூட நண்பர் மனைவியின் தோழிகள் கூட யாரும் உதவிக்கு இல்லையா என்று ஒரு கேள்வி வந்தது.
இதை எப்படி கேட்பது என்று யோசித்து விட்டு, மாப்பிள்ளை என்னம்மா பண்றார் என்று ஆரம்பித்தேன். அவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு,
அங்கிள் நீங்கள் ரொம்ப தயங்கவெல்லாம் வேண்டாம். அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். நீங்கள் ரிலாக்ஸாக மொபைல் பார்த்துக் கொண்டிருங்கள். என்று சொல்லிவிட்டு, குழந்தையின் பக்கம் திரும்பி படுத்தார்.
அரை மணி நேரம் சென்றது. எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய மவுனம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஏதாவது காபி, டீ வாங்கி வரட்டுமா என்று கேட்டேன்.
வேண்டாம் அங்கிள். இரவு சாப்பாடு நேரடியாக சாப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஒரு மணி நேரம் கடந்தது. அவர்கள் இருவரும் வரவில்லை.
கையில் மொபைல் இருக்கும்போது கடிகாரம் என்னை எதுவுமே செய்வதில்லை.
சிறிது நேரம் கழித்து அவராகவே ஆரம்பித்தார்.
அங்கிள், உங்களுக்கு அம்மாவுடைய பிராப்ளம் தெரியும் இல்லையா என்று கேட்டார்.
இல்லையம்மா உங்க அப்பா எதுவும் சொன்னதில்லை என்றேன்.
அம்மாவுக்கு ஓசிடி ப்ராப்ளம் இருக்கு. ரொம்ப எக்ஸ்ட்ரீம் லெவல்.
பயங்கரமா சுத்தம் பார்த்துட்டே இருப்பாங்க. குளிக்கிற சோப்பு, துவைக்கிற சோப்பு, ஷாம்பு எல்லாத்தையும் மிக்ஸியில் போட்டு அடிச்சு, ஒரு சொல்யூஷனாக்கி, ஒரு பெரிய வாளி தண்ணீரில் கலந்து வைத்து விடுவார்கள். நாங்கள் வெளியில் சென்று வரும்போது அதில் குளித்துவிட்டு, வேறு உடை மாற்றிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளே செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் டென்ஷனாகி விடுவார்கள். நானும் அப்பாவும் மட்டுமல்ல வீட்டு வேலைகளுக்கு உதவிக்கு வரும் அக்காவும் அப்படித்தான் செய்ய வேண்டும். இதனால் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவே அந்தப் பகுதி பெண்கள் தயங்குவார்கள். தினமும் வீட்டை துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் எல்லாமே அசுத்தமாகிவிட்டன தூக்கி எறியுங்கள் என்பார். புதிதாக எல்லாமே வாங்க வேண்டும்.
தன்னுடைய உடைகள் அனைத்தும் அழுக்காகி விட்டன.எல்லாவற்றையும் தூக்கி போட வேண்டும் என்று அடம் பிடிப்பார். புது செட் எடுக்க வேண்டி இருக்கும்.
வீடே மிக அசுத்தமாக இருக்கிறது இங்கே இருந்தால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர் விட்டு அழுவார்.
உடனே நாங்கள் வேறு வீடு தேட வேண்டிய நிலை உருவாகிவிடும். அந்த காலகட்டத்தை சமாளிப்பதற்காக சில சமயம் ஹோட்டல்களில் ரூம் எடுத்துக் கூட தங்கி இருக்கிறோம்.
பின்னர் அப்பா நிறைய முயற்சி எடுத்து, நிறைய கவுன்சிலிங் எல்லாம் கூட்டி போனார். அங்கே மருத்துவமனைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடப்பிடிப்பார் அம்மா. கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். பின்னர் திடீரென அதிகரித்து விடும்.
உறவினர்கள் யாராவது வந்துவிட்டால், அவர்களும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பார். அதனால் யாருமே வரமாட்டார்கள்.
ஒருமுறை எங்கள் தாய் மாமா குடும்பத்துடன் வந்தார். அவர் குழந்தை செருப்புடன் படியேறிவிட்டது என்று பயங்கரமாக ஆக்ரோசப்பட்டார். அத்தோடு, அத்தை இனிமேல் இந்த வீடு இருக்கும் திசையிலேயே நாங்கள் முழிக்க மாட்டோம் என்று குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
இது போன்ற சம்பவங்களால், அக்கம்பக்கத்து விட்டார்கள், உறவினர்கள் என்று யாருமே எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. என் அம்மாவும் யார் வீட்டுக்கும் போக மாட்டார் எந்த விசேஷங்களுக்கும் போக மாட்டார். இவ்வளவு ஏன், என் கணவரின் வருகையே அவருக்கு பிடிக்காது. வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்வார். அவர் கிளம்பிய உடன் எல்லாவற்றையும் அலசி விட சொல்வார். எனக்கெல்லாம் அவ்வளவு வருத்தமாக இருக்கும்.
ஆனால் என் கணவர் பெருந்தன்மையானவர். அதை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் அத்தை, மாமா சங்கடப்பட்டுக்கொண்டு வர மாட்டார்கள் என்றார்.
அப்போதுதான், நர்சிங் ஸ்டேஷனில் இந்த அறை எண்ணை கேட்டதற்கு ஏன் ஆச்சரியப்பட்டார்கள் என்று தெரிந்தது.
தொடர்ந்து அவர், என் அம்மா தன்னுடைய கழிவறையை மட்டும்தான் உபயோகிப்பார். வேறு எங்குமே உபயோகிக்க மாட்டார். அதனால் சற்று தூர பிரயாணங்கள் என்றால் டயாபர் அணிந்து கொள்வார.
நாங்களும் கூட அவர் கழிவறைக்கு செல்ல மாட்டோம். இந்த மருத்துவமனை கழிவறை அவருக்கு அலர்ஜி. அதனால் காலையிலிருந்து தண்ணீர் கூட அதிகம் குடிக்காமல் இருந்தார்.
இப்போது அப்பா அவரை அழைத்துச் சென்று இருப்பது கூட வீட்டில் இருக்கும் கழிவறையை பயன்படுத்தத்தான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
இரண்டு மணி நேரம் கழித்து நண்பர் வந்தார். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். கீழே வரை வருகிறேன் என்று உடன் வந்தார் நண்பர்.
அவரிடம் உண்மையிலேயே நீங்கள் பெரிய மனிதர். பெரிய தியாகி என்றேன்.
அதற்கு அவர் உனக்கு சுகர் இருக்கிறது என்று சொன்னாயே எத்தனை வருடமாக இருக்கிறது என்றார்?
12 வருடமாக இருக்கிறது என்றேன். அதற்கு முன்னர், அடிக்கடி கேசரி கொண்டு வருவாயே, வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் என்று செய்தார்கள் என்று. மிக சுவையாக இருக்கும்.
அதை இப்போதும் உன் மனைவி அடிக்கடி செய்கிறாரா என்று கேட்டார்.
எனக்கு சுகர் வந்த பின்னால் அதை செய்வதில்லை பிள்ளைகளின் பிறந்தநாள் அன்று மட்டும் கொஞ்சம் செய்வார் என்றார்.
முன்னர் வேலை பார்க்கும் இடத்தின் அருகில் இருந்த ஒரு சர்பத் ஃபேக்டரியில் நன்னாரி சர்பத் வாரம் வாரம் வாங்கிக் கொண்டு செல்வாயே உன் மனைவிக்கு பிடிக்கும் என்று இப்போதும் அப்படியா என்று கேட்டார்.
இல்லை எனக்கு சுகர் வந்த பின்னால் அவர் அதை குடிப்பதில்லை. நான் அதைப் பார்த்து குடித்து விடுவேன் என்று என்றேன்.
அதே போல சாப்பாடு உனக்கு ஏற்ற மாதிரி தானே எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்? அவருடைய விருப்ப உணவுகள் எதையாவது சமைக்கிறாரா? என்று கேட்டார்.
இல்லை எல்லாமே எனக்கு ஏற்ற மாதிரி தான். எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு விட்டார் என்றேன்.
உனக்கு சுகர் வந்த பின்னால் அவருடைய நடவடிக்கைகள் எப்படி மாறின என்றார்.
முன்னர் அவ்வப்போது வீட்டு வேலைகளில் உதவி செய்வேன். கடைகளுக்கு எல்லாம் சென்று வருவேன். இப்போது பெருமளவு வேலைகளை அவரே பார்த்துக் கொள்கிறார்.
வேலை செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக ரிலாக்ஸாக நடந்து போய் வாருங்கள், உடலுக்கு நல்லது என்று சொல்கிறார். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாளுவது போல தான் என்னை என் மனைவி பாதுகாக்கிறார் என்றேன்.
அதுபோலதான். உனக்கு உடல்நல குறைபாடு. என் மனைவிக்கு லேசான மனநல குறைபாடு. உன்னை எப்படி கவனம் எடுத்து பாதுகாக்கிறார்களோ அதுபோல தான் நானும் என் மனைவியை பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
பைக் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம். பைக்கை கிளப்பினேன்.
அப்போது சொன்னார்.
நான் செய்வது தியாகம் அல்ல. அவர் என் மனைவி என்று.
ராகேஷ்
தீபாவளிக்கு முதல் நாள் இரவு மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து தனியே சென்னைக்கு பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்,
அலுவலக அரசியல், குடும்ப அரசியல் போன்றவற்றினால் ஒதுக்கப்பட்டவர்கள், அதற்கு முன்னதான தங்கள் வாழ்க்கையில் சில தவறுகளை இழைத்தவர்கள், தற்போதைய சூழலில் பிழைக்க தெரியாதவர்கள் என்றே இருப்பார்கள்.
ராகேஷ். கிட்டத்தட்ட 10 வயது இளையவன். எங்கள் ஊர் வத்தலகுண்டு. முன்னர் கூடைப்பந்து விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்ற ஊர். பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைபெறும் மாநில அளவிலான சில சமயம் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அங்கே மிக பிரபலம்.
வேலை போன்ற காரணங்களுக்காக வேறு ஊருக்கு சென்ற பழைய ஆட்டக்காரர்கள் கூட, அந்த சமயத்தில் பொங்கல் திருவிழாவிற்காக வருகிறார்களோ இல்லையோ இந்த போட்டிகளைப் பார்க்க வருவார்கள். All star match என்று சொல்வதைப் போல, அதுவரை விளையாடிய, தற்போது விளையாடும் நிலையில் உள்ள ஆட்டக்காரர்களை எல்லாம் சேர்த்து, கலந்து போட்டு நான்கு அணிகளை தேர்வு செய்வார்கள்.
ஒரிஜினல் டோர்னமெண்ட் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போன பின்னர், அடுத்த நாள் அந்த ஆல் ஸ்டார் டீம்களுக்கு இடையில் ஒரு லீக் போட்டி நடக்கும். உண்மையில் அந்தப் போட்டியை ஆடத்தான் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக சென்று செட்டில் ஆனவர்கள் திரும்பி வருவார்கள். 40 வயது வரை இருப்பவர்கள் ஆடுவார்கள். அதற்கு மேல் இருப்பவர்கள் கோச்சாக, ரெப்ரியாக பார்வையாளர்களாக இருப்பார்கள்.
அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நாம் பார்த்து வியந்த சீனியர்கள், நம்மை மிரட்டிய ஜூனியர்கள் என எல்லோரும் ஒரு டீமில் இருப்பார்கள். காலம் முழுவதும் நம்முடனே ஆடியவன் எதிரியாக ஆடும் பொழுது பார்ப்பது, அவனை பார்வையாளனாக இருந்து பார்ப்பது என பல சுவாரசியங்கள் கிட்டும்.
அப்படிப்பட்ட ஒரு பொங்கல் டோர்னமெண்ட்டின் போது, நண்பன் ஒருவன் சொன்னான். நாலஞ்சு வருஷமா நீ இந்த பக்கம் வரல இல்ல. ராகேஷ்னு ஒருத்தன் செமையா ஆடுறான்டா. உங்க சீனியர் செட்டில் சொல்லுவீங்களே வினையத்தான், வெள்ளத்துரை, ரங்கராஜ், ரமேஷ்.. அப்புறம் உங்க செட்டுல ஆடுனாங்களே முத்துக்கருப்பன், சீனிவாசன், மணிகண்டன் அவங்களை எல்லாம் மிஞ்சுற ஒரு பிளேயர்.
அவன எதிர் டீம்ல இப்ப யாராலயும் அவன மேன் எடுக்கவே முடியல. வேகமான காத்துல கோழி றெக்க பறக்கும் போது அதை பிடிக்க நாலு அஞ்சு சின்ன பசங்க ஓடி கைக்கு அகப்படாமல் திணறுவாங்களே, அதுபோல அவன் பால தட்டி வரும்போது அவன் பின்னாடியே ஓடுறாங்க. ஒன்னும் முடியல அவன் பேஸ்கட் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கான்.
பழைய செட்டு ஆள் ஒருத்தர் ,
பிச்சமணி, ஓம் முருகேசன் அப்படின்னு அவங்க செட்டு ஆளுக தான் வத்தலகுண்டிலேயே பெரிய பேஸ்கட்பால் தலைக்கட்டுன்னு நினைச்சாராம். இந்தப் பையன் இப்பவே அவங்கள தாண்டி ஆடுறான் அப்படின்னு சொன்னாரு.
என சொல்ல சொல்ல எனக்கு ராகேஷ் ஆட்டத்தை காண வேண்டும் என்று பயங்கர ஆவல். அந்த ஆல் ஸ்டார் மேட்ச்சுக்கு காலையில் டீம் பிரிக்கும் போது, என்னிடம் கேட்டார்கள் நாலஞ்சு வருஷமா வரல பிராக்டிஸ்ல ஏதும் இருக்கியா இல்ல கீழே விழுந்து வாரிருவாயா என்று. எனக்கும் சந்தேகம். இல்ல நான் ஆடல என்று ஒதுங்கிக் கொண்டேன்.
ஆட்டம் ஆரம்பித்தது. நண்பன் ராகேஷ் பற்றி சொன்னது மிகை இல்லை. சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னாலும் அழகாக இருப்பார்கள், பின்னாலும் அழகாக இருப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேரழகாக இருப்பார்கள்.
அந்த சமயத்தில் அவர்களை ரசிக்க கிடைப்பது ஒரு பேரனுபவம். அதுபோல தான் ஆட்டக்காரர்களுக்கும். சில ஆண்டுகள் தான் அவர்கள் உச்சத்தில் இருப்பார்கள். அப்போது அவர்களின் ஆட்டத்திறனை ரசிப்பது ஒரு பேரனுபவம்.
அதுபோல பல ஆட்டக்காரர்களின், உச்சகட்ட பார்ம் பார்த்த அனுபவத்தில், ராகேஷ் அவர்களை விட சிறப்பாக இருந்ததாகவே தோன்றியது. ஆட்டம் முடிந்ததும் நேரடியாக பாராட்டி மகிழ்ந்தேன்.
நான் மதுரையில் தான் இருக்கிறேன். அந்தப் பக்கம் மேட்ச் விளையாட வந்தாலே எனக்கு தகவல் கொடுத்துவிடு. நான் வந்து விடுகிறேன் என்று சொன்னேன். வாய்ப்பிருக்கும்போதெல்லாம் அவன் விளையாடும் மேட்ச்களைப் போய் பார்ப்பேன். ஆட்டம் முடிந்ததும் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி விடுவேன்.
மனதுக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிட்டான் ராகேஷ். அவன் திருமணத்திற்கு கூட, முதல் நாளே சென்றுவிட்டேன். அவனுக்கு, குழந்தை பிறந்த போதும் உடனே போய் பார்த்துவிட்டு வந்தேன்.
சில ஆண்டுகள் போனது. 40 வயதுக்கு பின்னர் அதீத தனித்திறமை இல்லாத, தனியாரில் வேலை பார்க்கும் ஒருவருக்கு, அந்த வேலை போனால் வரக்கூடிய சிக்கல்களை உணர்ந்து, வேலையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து, காலம் போன காலத்தில் அலுவலக அரசியலையும் பழகத் துவங்கினேன். நேரத்திற்கு வீட்டிற்கு வந்து பிள்ளைகளை படிக்கச் சொல்லும் பொழுது தான் தெரிந்தது, எத்தனை ஆண்டுகள் என்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக, ஆசைக்காக, எவ்வளவு நாட்கள் வெளியிலேயே அலைந்து ரசித்து வாழ்ந்திருக்கிறேன். அதனால் வீட்டில் மனைவி நாள் முழுவதும் பாடுபட்டு அவர்களை பார்க்க வேண்டி இருந்திருக்கிறது என்று.
அது உறைத்த பின்னர், வீடு- அலுவலகம் என்று இருக்கலானேன். எங்கேயாவது வெளியில் போனாலும் குடும்பத்துடன் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். தவிர்க்க முடியாத போது தான் தனியாக செல்வது என்பதையும்.
அந்த நேரத்தில்தான் ஒரு அதிர்ச்சியான தகவல் வந்தது. ராகேஷுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது என்று. அவனிடம் எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. ஒருவருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவது மிக எளிது. ஒரு சிறு சிரிப்பு போதுமானது. ஆனால் ஒருவரிடம் துக்கம் கேட்க செல்லும் பொழுது பலருக்கு தயக்கங்கள் இருக்கும். எனக்கும் அது போல தான்.
சில மாதங்கள் கழித்து, நான் பணிபுரியும் அலுவலகத்தில் தன் உறவினரைப் பார்க்க வந்திருந்தார் ராகேஷ் மனைவி.
அவரிடம் பின்னர் சென்று பேசினேன்.
அவர் சொன்ன விஷயங்கள் என்னை மிகவும் அதிர்ச்சியாக்கின. திருமணமான புதிதில் இருந்து, அவனுக்கு மிகவும் சந்தேகம். வெளி ஆண்களிடம் சிரித்து பேசக்கூடாது, பணிபுரியும் இடத்தில் சகஜமாக யாரிடமும் பேசக்கூடாது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பானாம். மனைவியின் போனை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பானாம். அதில் ஆண் பெயரில் காண்டாக்ட் இருந்தாலே ஏன், எதற்கு என்று கேட்பானாம். கால் ஹிஸ்டரி முழுவதும் பார்ப்பானாம்.
முதலில் அந்தப் பெண்ணும் இவன் மிகவும் பொசசிவாக இருக்கிறான் என்று நினைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டாராம். பின்னர் விசேஷ வீடுகளுக்கு செல்லும் பொழுது, பிரயாணம் செல்லும் பொழுது இள வயது ஆண் ஒருவன் இருந்து எதேச்சையாக இந்தப் பெண் அவன் பக்கம் திரும்பினால் கூட வீட்டிற்கு வந்ததும் சண்டை போட ஆரம்பிப்பானாம்.
அதற்கெல்லாம் உச்சகட்டமாக குழந்தை பிறந்து சில மாதம் கழித்து, அந்த பெண்ணின் பள்ளி, கல்லூரி புகைப்பட ஆல்பத்தை எடுத்து வைத்து, உடன்படித்த ஒவ்வொரு மாணவர்களின் முகத்தையும் வைத்து இந்த குழந்தை யார் ஜாடையில் இருக்கிறது என்று இரவு முழுவதும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருப்பானாம்.
இதற்கு மேல் தாங்க முடியாது என விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்து, சில ஆண்டுகள் கழித்து விவகாரத்து கிடைத்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டவுடன் ராகேஷ் மீதான பிம்பம் முழுவதும் உடைந்து, அவனை இனி பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
சில ஆண்டுகள் கழிந்த பின்னர், அந்த பெண்ணிற்கு ஏதும் உதவி தேவைப்படுகிறதா என்று அந்த உறவினரிடம் கேட்டேன். அவங்க பையன ஆறாம் வகுப்பிற்கு நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும்னு ஆசைப்படுறாங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஸ்கூல்ல எதாச்சும் இருந அட்மிஷன் வாங்கி கொடுங்க என்றார்.
எங்கள் செட்டுக்கு முந்தைய செட்டிலும் என் செட்டிலும் கூடைப்பந்து ஆடிய பலர் வங்கிகள், ரயில்வே, போக்குவரத்து கழகங்கள் என்எல்சி,போர்ட் டிரஸ்ட் என பல இடங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை பார்த்தார்கள். பலர் எம்பிஎட் முடித்து பிஈடி மாஸ்டர்களாக இருந்தார்கள்.
பிரபல தனியார் பள்ளிகளில் பல நண்பர்கள் பிஈடி மாஸ்டர்களாக வேலை பார்த்தார்கள். பொதுவாக இந்த மாதிரி வேலையில் இருப்பவர்கள் நிர்வாகத்திடம் மிகுந்த பழக்கத்தில் இருப்பார்கள் ஆசிரியர்களை விட. அவர்கள் மூலம் முயற்சித்து ஒரு நல்ல தனியார் பள்ளியில் அந்த பெண்ணின் மகனுக்கு ஒரு சீட் வாங்கிக் கொடுத்தேன்.
இன்னும் சில ஆண்டுகள் போனது. அலுவலக நண்பரும், ராகேஷ் மனைவியின் உறவினருமானவரின் வீட்டில் ஒரு விசேஷம். அதற்கு சென்று இருந்தேன். விவாகரத்தான ராகேஷின் மனைவியும் வந்திருந்தார். உங்கள் வேலை எப்படி போகிறது? பையன் நன்றாக படிக்கிறானா என்று வழக்கமான விசாரிப்பைத் துவங்கினேன்.
இரண்டு நிமிட உரையாடலுக்கு பின்னர் அவர் மனம் உடைந்து அழலானார். சிங்கிள் மதர் என்று இந்த சமூகத்தில் வாழ்வது மிகவும் கஷ்டமான விஷயம் அண்ணே. விவகாரத்து ஆவதற்கு முன்னாலாவது ஒரு ராகேஷ் தான். ஆனால் விவகாரத்து ஆன நாளிலிருந்து, எத்தனை பேர் மனரீதியாக துன்பம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு அளவே இல்லை.
எனக்காக வாதாடிய வக்கீல், அவர் ஜூனியரில் இருந்து தொடங்கி, நான் வேலை பார்க்கும் இடம், வசிக்கும் தெரு, காய் வாங்கும் கடை, சூப்பர் மார்க்கெட் என எல்லா இடங்களில் இருந்தும், அங்கு இருக்கும் ஆண்கள் என்னை பார்க்கும் விதமே வேறாகி விட்டது.
விவகாரத்து ஆன சிங்கிள் மதர் மிகவும் vulnerable ஆக இருப்பார். முயற்சிப்போம் என ஒவ்வொருவர் வந்து பேசும் பொழுதும் மனம் ரண வேதனைப்படுகிறது.
இவர்கள்தான் இப்படி என்றால் பையன் படிக்கும் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் கூட அந்த கண்ணோட்டத்தில் தான் பேசுகிறார்கள். சிங்கிள் மதர் என்பதை, பாலியல் தொழில் செய்யும் பெண்ணை விட மோசமாக இந்த சமூகத்தில் பார்க்கிறார்கள்.
எத்தனை பேரை தான் சமாளிப்பது? இதற்கு விவாகரத்து ஆகாமல் கூட இருந்திருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றும் என்றார்.
அண்ணே, நான் யார்கிட்டயும் சொன்னது இல்ல. நீங்க என்கிட்ட நேரா பேசாம கூட பையனுக்கு சீட்டு வாங்கி கொடுத்தீங்க. அதுக்கப்புறமும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினதில்லை. இன்னைக்கு நேர்ல பார்த்துட்டனால விசாரிச்சீங்க. அதனால சொல்றேன்.
விவாகரத்து ஆன சில வருஷத்தில் இருந்து, இந்த ஆம்பளைங்க புத்தி தெரிஞ்ச பின்னாடி, வருஷா வருஷம் நேர்த்திக்கடன் என்று சொல்லி மொட்டை போட்டுக்குறேன். பவுடர் பூசுறது இல்ல, பூ வைக்கிறது இல்ல விரதம் இருக்கிறவங்க மாதிரி சாமி மஞ்ச சேலை கட்டிக்கிட்டு நெத்தியில பட்டை அடிச்சுக்கிட்டு வேலைக்கு போயிட்டு வரேன். இந்த பையன் ஆளாகிற வரைக்கும் உயிரோட இருக்கணுமே என்று தான் இவ்வளவு போராடுகிறேன் என்றார்.
தைரியமாக இருங்கள். பையன் படிப்பு சம்பந்தமாக எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். பதவியில் இருக்கும் நல்ல நண்பர்கள் மூலம் முடிந்தவரை உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கனத்த மனதுடன் கிளம்பினேன்.
அந்த ராகேஷைத் தான், இன்று ரயிலில் மீண்டும் சந்திக்கிறேன். எதுவும் பேசத் தோன்றவில்லை. இது போன்ற சமயங்களில் சிறந்த ஆயுதமான போனை எடுத்து தலைகுனிந்து பார்க்கத் துவங்கினேன். அவன் அருகில் வந்து உட்கார்ந்தான்.
இருவருக்கும் இடையே கனத்த மவுனம் நிலவியது. ஒரு கட்டத்தில் அவனாகவே, அண்ணே நான் செஞ்ச தப்பு உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். எனக்கு அதை ரியலைஸ் பண்ண பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அதுக்கப்புறம் நான் நிறைய அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு செய்தி அனுப்பினேன். தொடர்ச்சியா கடிதங்கள் எழுதி அனுப்பினேன். ஆனா அவங்க எதுக்கும், சமாதானம் ஆகல என்றான்.
நீ செஞ்சது பெரிய தவறு. யாரும் சுலபமா மன்னிக்க மாட்டாங்க. இப்ப அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கு தெரியுமா? என்றேன்.
இப்போதுதான் அவனை முழுவதுமாக பார்த்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தானோ, அதே போன்ற உடல் கட்டு. பிராண்டட் உடைகள் என இப்போது போனாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்கும் என்பது போல இருந்தான்.
சரி அது பற்றி பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை. வேற பேசுவோம். சென்னைக்கு போகிறாயா என்று கேட்டேன். அங்க தாண்ணே இப்ப இருக்கேன். ஒரு பிரபல பள்ளியின் பெயரைச் சொல்லி அங்கே பிடி மாஸ்டராக இருக்கிறேன். காலை மற்றும் மாலை நேரங்களில் வேறு ஒரு தனியார் அகாடமியில் கோச்சாக பணிபுரிகிறேன்.
அவர்கள் நடத்தும் விண்டர் கேம்ப், சம்மர் கேம்ப் எல்லாவற்றிற்கும் பேஸ்கட்பால் கோச்சிங் நான் தான் என்றான். அவன் பிம்பம் உடையாமல் இருந்திருந்தால், நிறைய அதுபற்றி விசாரித்துக் கொண்டே இருந்திருப்பேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் வெறும் செய்தியாக ஒரு ரேடியோ கேட்பது போலவே அணுகிக் கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். கல்யாணமான புதிதில் எனக்கு அந்த விஷயத்தில் கான்ஃபிடன்ஸ் இல்லை. நம் செட்டில் இருப்பவர்கள் சொல்லியது, பல தவறான தகவல்கள் இவற்றால் எனக்கே என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதுவும் கூட நான் அப்படி நடந்து கொண்டிருந்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.
என்று பலவாறு கன்பெஃஸ் செய்தான். நீ சொல்வதையெல்லாம் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதை சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் கூட மாற்றிக் கொண்டிருந்தால் கூட போதும்.
ஆனால் நீ குழந்தை பிறந்தும் மாறவில்லை. அந்தப் பெண் விவாகரத்திற்கு சென்றபோதும் கூட உன் மனம் மாறவில்லை. உன்னை நீ சுய பரிசோதனை செய்து கொள்ளவே இல்லை. வழக்கிற்கு சென்ற போதாவது கொஞ்சம் சிந்தித்து, நீ கவுன்சிலிங் சென்று இருந்திருக்கலாம்.
இத்தனை வருடம் கழித்து, மனம் மாறுவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்றேன்.
நம் ஜெனரேஷன் ஆண்கள் எல்லோருமே, ஒரு விதத்தில் சுயநலமாகவே யோசிப்போம் செயல்படுவோம். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் குடும்பம் உடைவதற்கு முன்னர் அதை ரியலைஸ் செய்து மாறிவிட்டால் தப்பித்து விடுவோம். இல்லையென்றால் சிக்கல்தான். உன் கேஸ் மிகவும் அதீதம்.
பெண்களின் மனம் எவ்வளவு காயப்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டே இருக்கும். அது அவர்களின் டிஎன்ஏவிலேயே இருக்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், அது காயம்பட்டு காயம்பட்டு வைரம் போல உறுதி ஆகிவிடும். அதன் பின்னர் எதையும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
அந்த அளவிற்கு நீ அந்த பெண்ணை காயப்படுத்தி விட்டாய். என்று முடித்தேன்.
தீபாவளி அன்று காலை சென்னை வந்து இறங்கி, அலுவலக எம் டிக்கு வேண்டப்பட்டவர்களிடம் பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு, வீட்டுக்கு கால் செய்தேன். போனை எடுத்த மனைவி, இங்கே தீபாவளி முடிந்துவிட்டது. சாப்பிட்டு புது டிரஸ் போட்டு பசங்க சினிமாவிற்கு போய் விட்டார்கள் என்றார்.
அப்போது ராகேஷை சந்தித்ததை சொன்னேன். மனைவி என்னிடம், அந்தப் பையன் திருந்தி விட்டான் என்று அந்த பெண்ணிடம் சொல்லப் போகிறீர்களா என்று கேட்டார்.
இல்லை இல்லை. இத்தனை வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பையனை ஓரளவிற்கு வளர்த்து விட்டார். இன்னும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டால் போதும். தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அவர் தன் வாழ்வில் வெற்றி பெற்றார் என்கிற மகிழ்ச்சி அவருக்கு இருக்கும்.
எத்தனையோ கஷ்டங்களை கண்ட அவருக்கு, இந்த ஒரு மன திருப்தி எல்லாக் காயங்களையும் ஆற்றவல்லது.
மீண்டும் இவர்கள் ஒருவேளை சேர்ந்து விட்டால், என்ன இருந்தாலும் ஆண் துணை இல்லாமல் அவரால் சமாளிக்க முடியவில்லை என்கிற அவப் பெயர் தான் வந்து சேரும். அது ராகேஷ் போல இருக்கும் ஆண்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுக்கும்.
நான் ராகேஷை சந்தித்ததை பற்றி அவரிடம் சொல்லவே போவதில்லை என்றேன். போனை வைக்கும் முன், மீண்டும் உன்னிடம் ஒரு சாரி என்று கேட்டுக் கொண்டேன்.
விராட் கோஹ்லி
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கப் போகும் சமயத்தில் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கை நோக்கி இந்தியாவே காத்துக் கொண்டிருந்த நேரம். கிங்பிஷர் எப்படி தனக்கு வேண்டிய ஒரு கொழுத்த மீனை குறி பார்த்து கவ்வுமோ அப்படி விஜய் மல்லையா தனது பெங்களூர் அணிக்காக கவ்விய மீன் விராட் கோலி.
அப்போது 19 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் உலகச் சாம்பியன் ஆகி இருந்தது இந்தியா. அதன் கேப்டனை தனது அணிக்காக தட்டி தூக்கினார் மல்லையா.
அதன் பின்னர் அவரது திறமைகள் வெகுவாக புகழப்பட்டாலும், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காம்பீர் உடன் சேர்ந்து, சேவாக் சச்சின் விக்கெட்டுகள் போயிருந்த நிலையில் ஒரு இக்கட்டான சூழலில் அவர் ஆடிய ஆட்டம், அட போட வைத்தது.
சச்சின் சேவாக் யுவராஜ் காம்பீர் ஆகியோர் தங்கள் முழுத் திறமையுடன் விளையாடிக் கொண்டிருந்த காலம் அந்த உலகக்கோப்பை. அதில் தனித்து தெரிவதற்கே ஒரு தனித்திறமை வேண்டும்.
அதன் பின்னர் தான் கோலியின் உண்மையான விஸ்வரூபம் தெரியவந்தது. ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கிய பின்னர் ஒவ்வொரு அணிக்கும் மிடில் ஆர்டரில் ரொட்டேட் செய்து தேவையானபோது அதிரடி காட்டி வெற்றி கோட்டிற்கு அழைத்துச் செல்ல
மேற்கு இந்திய தீவில் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தானில் மியான்டாட் இலங்கையில் அரவிந்த டி சில்வா
ஆஸ்திரேலியாவிற்கு முதலில் டீன் ஜோன்ஸ் பின்னர் ரிக்கி பாண்டிங் என ஜாம்பவான்கள் இருந்தார்கள்.
இந்திய அணியில் அசாருதீன் இருந்தாலும் அவரை முழுமையாக நம்ப முடியாது. தவறான ஷாட்கள் அடிக்கடி ஆடுவார். டிராவிட் வேகத்தடையாகவே இருப்பார். அவர் சூழல் அப்படி. யுவராஜ் ஆட்டத்தின் பிற்பாதிக்கு தூணாக இருப்பார்
ஆனால் மேற்கூறியவர்களை போல எதிரணியை அச்சமூட்டி இவர்கள் இருக்கும் வரை வெல்ல முடியாது என்கிற எண்ணத்தை கொடுக்கும் அளவிற்கு நம்மிடம் அந்த No.3 பொசிஷனில் ஆட ஆளில்லை.
அந்த இடத்திற்கு வராது வந்த மாமணியாக வந்தவர் தான் கோலி. அதுவும் முக்கியமாக சேஸிங்கில். அதில் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் அடிக்கடி சொதப்பும்.
பிரஷர் எல்லாம் எனக்கு பிரியாணி மாதிரி என்று சேசிங்கின் அத்தனை பிரஷரையும் தான் வாங்கிக்கொண்டு, இந்திய அணியை எத்தனையோ மகத்தான சேஸ்களில் வெற்றி கோட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
கபில்தேவ் நம்மாலும் ஜெயிக்க முடியும் என்று இந்தியாவிற்கு காட்டியவர். கங்குலி நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை எதிர்க்க வேண்டும் என்றவர். தோனி எந்த சூழலிலும் பதறாமல் எப்படி வெற்றியைப் பெற வேண்டும் என்பதை செய்து காட்டியவர்.
கோலி இந்தியர்களுக்கு கடத்தியது ஒன்று. வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி. அவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. அந்த உத்வேகம் இந்தியாவிற்கு பல டெஸ்ட் வெற்றிகளை வெளிநாடுகளில் பெற்றுக் கொடுத்தது.
இந்த இளைய தலைமுறைக்கு, வெற்றி ஒன்றுதான் இலக்கு அதில் சமரசமே கூடாது, உணர்ச்சிகளை போட்டி களத்தில் காட்டுவதில் தவறே இல்லை என்கிற செய்தியை கடத்தியவர் கோலி.
ஆனால் அதற்கு எதிர் மாறாக களத்தை விட்டு வெளியே வந்தவுடன் இயல்பான ஒரு மனிதராக இருப்பார். அதுதான் நாமும் பின்பற்ற வேண்டியது. விளையாட்டோ,தொழிலோ, வேலையோ அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி உடனேயே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பின்னான நம்முடைய குடும்ப மற்றும் சமூக வாழ்வில் Down to earth ஆக இருக்க வேண்டும்.
கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு பண்பு, தன் வாழ்க்கை இணையரை வெகுவாக மதித்தல். எந்த சூழலிலும் அவர் தன் மனைவிக்கு கொடுக்கும் மதிப்பு என்பது எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது.
செல்லம் பெரியப்பா
எனக்கு அங்க யாரையுமே தெரியாது. எப்படி கல்யாணத்துக்கு போயி முறை செஞ்சிட்டு வர சொல்றீங்க? தனியா எப்படி போவேன்? என ஒரு முறை நான் பெற்றவர்களிடம் கேட்டு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகி இருக்கும்.
அப்போது என் அண்ணன் சொன்னான். நம்ம செல்லம் பெரியப்பா இருக்காரு இல்ல.. அவர் எப்படியும் அங்கு இருப்பாரு. அவர போய்ப் பாரு அவரு எல்லாம் பாத்துக்குவாரு என்றான்.
அவர் ஒரு காய்கறி கமிஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார். எங்கள் ஊரைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து, தக்காளி, வாழை என்ற எந்த விளைச்சலாக இருந்தாலும், அங்கே வரும்.
சாயந்திர நேரத்திலிருந்து உள்ளூர் வெளியூர் வியாபாரிகள் அங்கே வருவார்கள். தக்காளி போன்றவை ஏல முறையில் விற்கப்பட்டு, வாங்கிக் கொண்டு போவார்கள். வெளியூர் வியாபாரிகள் அங்கு இருந்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டு போவார்கள்.
இவர் அந்த மண்டியில் ஒரு மேனேஜர் போல இருந்தார். கை சுத்தமானவர் என்பதால், கமிஷன் மண்டி உரிமையாளரிடம் நல்ல பெயர். வழக்கமாக காய்கறி கொண்டு வரும் விவசாயிகள், களை எடுக்க, மருந்து அடிக்க என கடன் கேட்டால் உரிமையாளரிடம் சொல்லி வாங்கித் தருவார். வியாபாரிகளிடம் நைச்சியமாக பேசி அட்வான்ஸ் பணத்தை வாங்குவார். எந்த சூழலிலும் கடுகடுவென இருக்க மாட்டார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் நல்ல பெயர்.
அதைவிட அவர் திருமண வீடுகளில் நடந்து கொள்வது. பொதுவாக நிறைய பேர் மணமேடை ஏற, சாப்பிடச் செல்ல கொஞ்சம் சங்கோஜப்படுவார்கள்.
ஆனால் பெரியப்பா அப்படி வருபவர்களிடம் கலகலவென பேசி மணமேடையில் ஏற்றி, போட்டோ எடுக்க வைத்து, அங்கே ஒரு சுமூகமான சூழலை உருவாக்குவார்
அதேபோல பந்தி தொடங்கியதும் அங்கே நடு நாயகமாக நின்று கொள்வார். எப்பா ரசம் இங்க ஊத்து. என் மருமகனுக்கு பாயாசம் ஊத்துப்பா.. ராசக்கா பேரன், சின்ன பையன் அவன் இந்த காயெல்லாம் வச்சு சாப்பிடுவானா இன்னொரு அப்பளம் வைப்பா.. என பந்தி விசாரித்துக் கொண்டே இருப்பார்.
துக்க வீடுகளிலும், பலருக்கு எப்படி கேட்பது, என்பது போன்ற சங்கடங்கள் இருக்கும். பெரியப்பா அவர்களை அழைத்துச் சென்று அவரே பேசத் துவங்கி விடுவார். உடன் சொல்பவர்கள் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக் கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தால் போதும்.
இதே போல உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைகளில் இருப்பவர்களை பார்க்க போகவும் அவர் ஒரு பெரிய துணை. Ice breaking என்கிற வார்த்தை எல்லாம் பின்னாளில்தான் கேட்டது. ஆனால் அவர் சொந்தங்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய ஐஸ் பிரேக்கராக இருந்து வந்திருக்கிறார்.
கமிஷன் மண்டியில் மாலையில் இருந்து இரவு வரை தான் என்பதால் பகல் நேரங்களில் பெரிதும் இந்த மாதிரி உதவிகர வேலைகளைச் செய்வார்.
தீபாவளி நேரங்களில் பட்டாசு கடை போடுபவர்கள், பண்டு பொருள்களை பிரித்துக் கொடுப்பவர்கள் என எல்லோரும் அவர் வந்தால் நல்லா இருக்குமே என்று உதவிக்கு அழைத்துக் கொள்வார்கள். அவ்வளவு ஏன் ஞாயிற்றுக்கிழமை கறிக்கடை போடும் ஒருவர் கூட அவரை துணைக்கு வைத்துக் கொள்வார். கலகலவென பேசி வியாபாரம் பார்த்துக் கொடுத்து விடுவார்.
மனித மனம், எங்கு சென்றாலும் ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறது. என்னப்பா நல்லா இருக்கியா, வீட்ல யாரும் வரலையா, என எந்தவித உள்குத்தலும் இல்லாமல் சரளமாக பேசத் துவங்கும் ஒருவரிடம் அவர் சொல்வதை கேட்டுக் கொள்வோம் என்று சரணடைந்து விடுகிறது.
அன்றும் அப்படித்தான். என்னைப் பார்த்ததும் பேசி மணமேடைக்கு அழைத்துச் சென்று, யார் தெரியும்ல இன்னாரு பேரன்.. என்று அறிமுகப்படுத்தி நிற்க வைத்து போட்டோ எடுத்து, பந்தி துவங்கும் போது அழைத்துச் சென்று உட்கார வைத்து, வேற என்னய்யா வேணும் பால் கூட்டு கொஞ்சம் வைக்க சொல்லவா என்றெல்லாம் அவ்வப்போது வந்து கேட்டு.. மிகவும் எளிதாக கடந்தது அந்த நாள்..
அதிலிருந்து, எந்த நிகழ்வானாலும் அவரிடம் போய் நின்று விடுவது. ஆனால் அவருடைய பையன், அவருக்கு அப்படியே ஆப்போசிட். இப்போதுதான் இன்டரவெர்ட் என்கிற சொல்லை எல்லாம் கேள்விப்படுகிறேன். அப்போது ஊமை கோட்டான் என்று சொல்வார்கள். யாரிடமும் மிகவும் பழக மாட்டான். எங்கே சென்றாலும் தன் இருப்பைக் காட்டாமல் இருந்து கொள்வான்.
என் பாட்டியிடம் ஒரு முறை இதைப் பற்றி நான் கேட்டபோது. இப்பத்தான்டா உன் பெரியப்பன் சோழிய உருட்டி விட்ட மாதிரி கலகலன்னு இருக்கான். சின்ன வயசுல அவனும் அவன் மகன் மாதிரி தான் இருந்தான். எதுக்கும் ஒரு காலம் வரணும் இல்ல என்றார். இன்னொரு விஷயம்
சின்ன வயசுல அவனை கடைக்கு எல்லாம் அனுப்புனா, கடைக்காரர் கிட்ட எதுவும் கேட்காம, முழிச்சுக்கிட்டே நிப்பான். அப்ப எல்லாம் ஆள் மாறி மாறி வந்துகிட்டே இருக்கும். கடைக்காரரா பார்த்து என்ன வேணும்னு கேட்டு சாமான் கொடுத்து விட்டால் தான் உண்டு..
ஆனா அப்படி இருந்தவன் இப்ப எப்படி மாறிட்டான் பாரு என்றார்.
ஆனால் எனக்கு என்னவோ பெரியப்பா மகன் அந்த மாதிரி மாற மாட்டான் என்றே தான் தோன்றியது. அப்போது அவனுக்கு திருமண பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தன. அவன் திருமணத்தின் போதும் சரி திருமணம் முடிந்து அவன் பிள்ளைகளுக்கு மொட்டை காதுகுத்து என பல விசேஷங்களுக்கு சென்றபோதும் சரி, அவன் தன் இயல்பிலேயே அமைதியாகத்தான் இருந்தான். வருடங்கள் பல கடந்து விட்டன.
சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, மண வீட்டார், உறவினர்கள் என்றாலும் அந்த கூட்டமே புதிதாக இருந்தது. அப்போது ஒரு குரல். என்னடா இப்பதான் வந்தியா? வீட்ல வரலையா? எனக் கேட்டது
ஆச்சரியமாக திரும்பினால் செல்லம் பெரியப்பாவின் மகன். அவனுடனே மண மேடைக்குச் சென்று,பந்திக்குச் சென்று அதன் பின்னர் விசேஷம் முடிந்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது, ரொம்ப நேரமாக மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டேன்..
என்ன பாபு, முன்னெல்லாம் ரொம்ப அமைதியா இருப்ப என ஆரம்பித்தேன்.
என் கேள்வியை புரிந்து கொண்டு,
இல்லடா.. முன்னெல்லாம் எனக்கு எல்லோரிடமும் பேச பழக கொஞ்சம் சங்கடமா இருக்கும். என்ன நினைப்பாங்களோ என்று. அப்புறம், ஒரு கட்டத்துக்கு மேல யார நம்பி நாம இருக்கோம் எதுக்கு எல்லாரிடமும் போயி நாமளே பேசணும் அப்படின்னு ஒரு எண்ணம் வந்துச்சு.. அப்படி நாம வலியப் போய் பேசுறதால என்ன நமக்கு வந்திரப் போதுஅப்படி எல்லாம் கூட ஒரு எண்ணம்.
கிட்டத்தட்ட வேலை பார்க்கிற இடத்துலயும் அப்படித்தான் இருந்தேன். நான் வேலை செய்றேன் சம்பளம் வருது வேணுங்கறத வாங்கி என் பாட்டுக்கு இருந்துக்கிறேன். ஏன் மத்தவங்க எல்லாம் அவங்களா வந்து என்கிட்ட பேச கூடாதா? அவங்க கிரீடம் குறைஞ்சிடுமா? என்றெல்லாம் நினைப்பேன்.
அஞ்சு ஆறு வருஷம் இருக்கும். அப்ப திடீர்னு வேலை போயிருச்சு. வேற வேலை தேடி அலையும் போது தான், நான் யார்கிட்டயும் அதிகமா பழகாததோட கஷ்டம் தெரிஞ்சது. கிட்டத்தட்ட ஆறு மாசம். கையிருப்புல கொஞ்சம் காசு இருந்ததால பணக் கஷ்டம் இல்லை. ஆனா இப்படியே ரொம்ப நாளைக்கு இருக்க முடியாதுங்கிற சூழல். அந்த சமயம் பையனுக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருந்தேன். நானா, என்னோட கஷ்டத்தை அனுபவிக்கிற மாதிரியே ஒரு ஃபீல். மன அழுத்தமா இருந்துச்சு.
அப்ப, முன்னாடி கூட வேலை பார்த்த ஒருத்தர் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அவர் என்ன செய்யுது ஏது செய்யுது எனக் கேட்டு கூட இருந்தார். அவ்வளவு ஆறுதலா இருந்துச்சு. அப்ப அவரு முன்னாடி நம்ம கூட வேலை பார்த்தவங்க எல்லாம் எங்க எங்க இருக்கார் அப்படின்னு சொன்னார்.
அவங்க நம்பருக்கு எல்லாம் அப்புறம் பேசினேன். உடனே வேலை கிடைக்கவில்லை என்றாலும் பெரிய ஆறுதலா இருந்துச்சு. அந்த ஆறுதல் இல்லாம இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்னே தெரியல. அப்புறம் இன்னும் சில மாதங்கள்ல எனக்கு ஒரு வேலைய ஒருத்தர் ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்.
அப்பதான் எனக்கு புரிந்தது. நாம தனி ஆள் கிடையாது. நாம பிறந்ததிலிருந்து நாம கடத்துற ஒவ்வொரு நாளுக்கும் எத்தனையோ பேர் மறைமுகமா வேலை செய்றாங்க. ஆனா அவங்கள்ள யாரையுமே நாம பார்க்கப் போறதில்ல. அதற்கான பணத்தை கொடுத்து விடுகிறோம்.
அதனால நான் வேலை பார்க்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் என்று தனியாக இருக்கிறது என்பது சிலருக்கு கடைசி வரைக்கும் வாய்க்கும். ஆனா அப்படி இருந்துட்டு போறதில்ல என்ன சந்தோசம் இருந்திட போது? ஒரு பிரச்சனை என்று வரும் பொழுது நாலு ஆறுதல் வார்த்தைகள் கொடுக்கிற தைரியம் வேற எதுவும் கொடுக்காது.
இப்பல்லாம் நானா போய், எல்லோர்கிட்டயும் பேசுறேன் விசாரிக்கிறேன். உதவி தேவைப்படும்னு தெரிஞ்சா வாலண்டியரா போய் செய்கிறேன்.
எத்தனையோ பேர் நம்ம வாழ்க்கைக்கு மறைமுகமாக உதவி இருக்காங்க. அவர்களைத் தேடி செய்வதற்கு பதிலா, கண் முன்னாடி தெரியுறவங்களுக்கு செய்திட்டு ஆறுதலா இருக்கிறது நல்லது..
என்று முடித்தான்.
பஸ்ஸில் ஏறியவுடன், கண்டக்டர், இந்தப் பக்கம் வந்து நில்லுங்க. இவர் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவார், உட்கார்ந்துக்கலாம் என்று கூறி அழைத்தார்.
தங்கள் வேலையிலோ, உறவுகளிலோ குடும்பங்களிலோ காட்டும் ஒரு துளி கூடுதல் அக்கறை, மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்து விடுகிறது..
Subscribe to:
Comments (Atom)