September 09, 2008

ரோபோ ஆரம்பம் - மர்மயோகி குழுவினர் நிம்மதி

ரஜினியின் ரோபோ ஆரம்பிக்கப்பட்டவுடன் எல்லோர் கவனமும் அதை நோக்கி திரும்பிவிட்டது. இணைய தளங்கள்,பத்திரிக்கைகள்,பிளாக்குகள் என அனைவரும் அதைப்பற்றியே பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கும் 365 நாட்களுக்கும் செய்தி வேண்டுமல்லவா?


இந்த விஷயத்தில் அதிக சந்தோஷம் அடைந்திருப்பது மர்மயோகி வட்டாரமே. தசாவதார வெற்றியாலும், குசேலன் சுருண்டதாலும் மர்மயோகி பற்றி எழுத வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டன. ஏனென்றால் எல்லாத்தரப்பும் இவர்களைப் பற்றிய செய்தியைத்தான் அதிகம் படிக்கிறார்கள்.


ரஜினிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் கமலை விட ரஜினிக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். இனி மர்மயோகியைப் பற்றி பிரஸ் ரிலீஸ் கொடுத்தால் கூட போடுவார்களா என்பது சந்தேகமே. அதனால் தேவையற்ற செய்திகள் வெளியாகது. ஹைப்பும் எழும்பாது. அந்த படம் எடுக்கப்படும் 2 வருடங்களில் சத்தமில்லாமல் நம் படத்தை முடித்துவிடலாம் என அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

September 08, 2008

விஜய், ஜெயம் ரவி இது நியாயமா?

முன்னெல்லாம் கொறஞ்சது வருஷத்துக்கு பத்து தெலுங்கு டப்பிங் படம் வரும். அதப்பார்த்துட்டு வெளிய வந்தமுன்னா என்னடா தமிழ்நாடு இவ்வளவு அமைதியா இருக்கேன்னு தோணும்.

சோபன்பாபு,கிருஷ்ணா,விட்டலாச்சார்யா இவங்கள்ளாம் ஓஞ்ச பின்னாடி சிரஞ்சீவியும்,விஜயசாந்தியும் வந்தாங்க. இதுதாண்டா போலிஸ், இதயத்தை திருடாதேக்கு அப்பறம் கொஞ்சம் ராஜசேகர் படமும், நாகார்ஜூனா படமும் வந்துச்சு.

இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டது நம்ம ரோஜா. செம்பருத்தில நம்ம ஆளூக பூராம் மட்டையாகவும், சுதாருச்சுக்கிட்ட நம்ம டப்பிங் ஆளூக வரிசையா ரோஜா படத்த இறக்கிட்டாங்க. அதனால பாலகிருஷ்ணா,வினோத்குமார் மாதிரி ஆளூக படத்தையும் பார்க்க வேண்டியதாப்போச்சு.

இப்பல்லாம் பாருங்க டப்பிங் படத்தயே காணோம்.

ஜெயிக்கற படம்தான் டப்பாகும். அங்க ஜெயிக்கிறது முக்கியமா மூணு டைப்பு.

பக்கா நேட்டிவிட்டி படம். அத இங்க டப் பண்ணா ஆப்பரேட்டர் வேலய விட்டுட்டு ஓடிப்போயிருவாரு

அப்புறம் இங்கன இருந்து சுட்டு எடுக்கிறது. கருவாடு மீனாகுமா? கறந்த பால் மடிபுகுமான்னு? காளிமுத்து டயலாக்தான் ஞாபகம் வருது.

அடுத்தது அவங்களே தெரியாம எடுத்துற்ற நல்ல படம். இத நம்ம விஜய் கோஷ்டி அப்படியே அமுக்கீருது. இதுக்காக தனி உளவுத்துறையையே நம்ம டாக்டர் வச்சிருக்காரு. இப்ப ரவியும் அதுக்கு போட்டியா வந்துட்டாரு.

இனிமே தெலுங்கு படத்த ஜெமினியிலயும், ஈ லயும் தான் பார்க்கணும் போல. அத போட்டாலே வீட்டுல கொன்னுற்றாங்க. யாராச்சும் திருப்பதி போனா சொல்லுங்க. உங்க கூடவே வர்றேன். நீங்க லட்டு வாங்க நிக்கும் போது நான் ரெண்டு படம் பார்த்துட்டு வந்துர்றேன். எனக்கு ரெண்டு லட்டு குடுத்தீங்கன்னா அடில இருந்து தப்பிச்சுக்கிருவேன்.

September 07, 2008

ரஜினிக்கு தலைமைப்பண்பு இருக்கிறதா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பலரும் விவாதித்து விட்டார்கள். அரசியலுக்கு அவசியமான தலைமைப்பண்பு அவரிடம் உள்ளதா என்பதை நாம் முதலில் பார்க்கலாம். பொது பிரச்சினைகளை விட்டு விடுவோம். அவர் சார்ந்த திரைஉலகில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை அவர் அணுகிய விதத்தை மட்டும் பார்க்கலாம்.

96-97 ல் திரை உலகத்தை உலுக்கிய பிரச்சினை பெப்சிக்கும் இயக்குநர்களுக்குமான பிரச்சினை. ராமன் அப்துல்லா படத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆட்கள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பேக்கப் சொன்னதால் ஆரம்பித்த இந்த பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு வருடம் திரைஉலகை காயப்போட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர பலரும் பாடுபட்டனர். ஆனால் இதை ரஜினி வேடிக்கை மட்டுமே பார்த்தார். அவரின் கருத்தாக ஒரு அ னா கூட இப்பிரச்சினையில் பதிவாகவில்லை.

90 களின் மத்தியில் ஆரம்பித்து, ஜெயலலிதா 2004 ல் தடுப்பு சட்டம் கொண்டு வரும் வரை குத்தாட்டம் போட்டது திருட்டு விசிடி பிரச்சினை. பல தியேட்டர்களை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிய பெருமைக்குரியது இது. இந்த காலகட்டத்தில் இரண்டு பேர் சில படங்களை எடுத்தார்கள். அதை உப்புமா படம் என்றால், அதற்கு முன்னால் உப்புமா படம் எடுத்தவர்கள் சண்டைக்கு வருவார்கள். அத்தகைய படங்களை எடுத்தவர்கள் கே.ராஜன் மற்றும் பாபு கணேஷ். அவர்கள் கூட திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். அவர்கள் படங்களை விசிடியுடன் 100 ரூபாய் கொடுத்தாலும் யாரும் பார்க்கமாட்டார்கள். பர்மா பஜாரில் பல தடவை இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இந்த காலகட்டத்தில் தான் (1996- 2004) முத்து, அருணாசலம்,படையப்பா மற்றும் பாபா ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டுகளில் திருட்டு விசிடி யை எதிர்த்து எந்த வாய்ஸ்ம் ரஜினியால் கொடுக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்? நாம இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் தர்றோம். எப்படியும் ஓடிடும். எதுக்கு அனாவசியமா வாய்ஸ் என்ற எண்ணமா?

தன்னை உயர்த்திய துறைக்கு வந்த பிரச்சினைகளை தீர்க்க துரும்பைக் கூட தூக்கிப்போடாத ரஜினிக்கு தலைமைப் பண்பு எந்த அளவுக்கு இருக்கிறது?.