ஏகபோக அரசர்கள் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் ஜெயிக்கும் நடுவிலே என்று புதுவசந்தமாய் வந்த விக்ரமன் திரைஉலகில் பலருக்கும் திருப்புமுனையை தந்தவர்.
புதுவசந்தம்
ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கமுடியும் என்று சொன்ன கதை. ஆர்.பி. சௌத்ரி என்ற தயாரிப்பாளரை உருவாக்கிய படம். அவர் இதற்க்குப்பின் 50 படங்களுக்கு மேல் தயாரித்து, பல இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள்,இசைஅமைப்பாளர்கள்,நடிகர்களை. அறிமுகப்படுத்தினார். எஸ் ஏ ராஜ்குமார் (இசை) அவர்களுக்கும் இப்படம் பெரும் திருப்புமுனை. பாலம் என்னும் படத்தின் மூலம் மறுவாழ்வு பெற்றிருந்த முரளிக்கு இப்படம் நல்ல ஏற்றத்தை தந்தது. சித்தாராவை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. சித்தாரா சேலை,தோடு ஒரு ரவுண்டு வந்தது. சார்லியின் காமெடியும் பாராட்டுபெற்றது.
புதியமன்னர்கள்
ரஹ்மான் இசையமைத்த படம். வைரமுத்துவின் ஆதிக்கத்தில் இருந்து அவர் வெளிவந்த படம். பழனி பாரதியின் பாடல்களை ரஹ்மான் இப்படத்தில் பயன்படுத்தினார். இதன் பின்னரே பழனி பாரதி மற்றும் பல புதிய பாடலாசிரியர்களுக்கு கதவு திறந்தது. விக்ரம்,ஸ்ரீமன்,விவேக்,மோகினி,தாமு,பாபு கணேஷ் நடித்த மாணவர்கள் அரசியலுக்கு வரும் கதை. கட்டும் சேலை மடிப்பிலே நான் கசங்கி போனேனே என்ற கலக்கல் பாடல் இடம் பெற்ற படம்
நான் பேச நினைப்பதெல்லம்
ஆனந்த்பாபு,மோகினி,விவேக் நடித்த காத்லர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் முன்னேறி இணையும் கதை. விவேக் தனி காமெடியனாக புரமோசன் ஆன படம்
கோகுலம்
ஜெயராமை மக்களிடம் கொண்டு சென்ற படம். காதலி, காதலன் இறந்தபின் அவன் வீட்டிற்க்கு உதவும் கதை. சின்னி ஜெயந்த்/வடிவேலு காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது
பூவே உனக்காக
யுவராணி,சங்கவி,சுவாதி யின் புண்னியத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த விஜய்யின் வாழ்க்கையை மாற்றி அமைத்த படம். ஒரு மாதிரி படங்களில் நடிப்பவர் என்ற இமேஜ் மாறி பேமிலி ஆடியன்ஸ் விஜய்க்கு வந்தது இந்த படத்தில் இருந்துதான். இதன் பின்னரே காதலுக்கு மரியாதை மூலம் முண்னனி நடிகராய் மாறினார். காதல் என்பது எக்சாம் இல்லை வெற்றி தோல்வி பார்க்க, அது ஒரு பீலிங் என்பதே விஜய்யின் முதல் பன்ச் டயலாக்.
சூரிய வம்சம்
நாட்டமைக்குப்பின்
சரத்குமார்க்கு வெற்றிப்படம் இதுதான். அதன்பின் இன்னும் கூட இப்படி ஒரு வெற்றிப்படம் தரவில்லை. நாடாளுமன்றத்தேர்தலில் திருனெல்வேலித் தொகுதியில் இவர் போட்டி போட்ட போது, நாட்டாமையையும்,இதையும் நெல்லை செல்லும் எல்லா அரசு பேருந்துகளிலும் போட்டு வெளுத்தனர். இந்தியில் அமிதாப் நடிக்க ரீமேக் செய்யப்பட்டு ஊற்றிக்கொண்டது. தந்தைக்குப் பிடிக்காத மகன் முன்னேறும் கதை. காதல் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ஜா, தகுதி பார்த்து வர? என்ற வசனம் பல இளைஞர்களை அப்போது கனவில் ஆழ்த்தியது.உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
கார்த்திக்குக்கு கடைசி சூப்பர் ஹிட் படம். திணறிக்கொண்டிருந்த அஜீத்தை ரெப்ரெஸ் செய்த படம். துண்டு துக்கடா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ரமேஸ் கண்ணா வை முழு நீள காமெடியனாக மாற்றிய படம். நன்றி பாராட்டுதல் கதைக்கரு.
வானத்தை போல
சின்ன கவுண்டருக்குப்பின் பெரிய வெற்றி இல்லாமல் தவித்த விஜயகாந்துக்கு அதை கொடுத்தபடம். ஆஸ்கார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய படம். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இப்படம் வெற்றி பெற்றால் பத்து படமாவது எடுப்பேன் இல்லையென்றால் வினியோகத்துக்கே போய் விடுவேன் என்றார். படம் ஓடி ரமணா,அன்னியன்,தசாவதாரம் போன்ற மெகா பட தயாரிப்பாளராய் மாறினார்.
அதன்பின் இவர் எடுத்த உன்னை நினைத்து சுமாராய் ஓடியது. ப்ரியமான தோழி, சென்னைகாதல் போன்றவை தோல்வி அடைந்தது. இவரின் இரண்டாம் படமான பெரும் புள்ளி இவருக்கு கரும்புள்ளியாய் அமைந்தது. அது மாணவன் ஆசிரியையை காதலிக்கும் கதை. என் உயிர்த் தோழன் புகழ் பாபுவும்,சுமா ரங்கனாத்தும் நடித்தது.
இவரின் பலம்
பேமிலி ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் கதை பண்னுவது
இனிமையான பாடல்கள், நகைச்சுவை யுடன் அதை கொடுப்பது
எல்லோரும் நல்லவரே என்னும் வகையில் கதாபாத்திரங்களை அமைப்பது
இவரின் எல்லா படங்களும் தெலுங்கில் பெரு வெற்றி பெற்றவை. இங்கு அடிவாங்கிய ப்ரியமான தோழி அங்கே வசந்தம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி அடைந்தது. (இருமொழி படமாகவே இது எடுக்கப்பட்டது. இங்கே மாதவன், அங்கே வெங்கடேஷ்).
இவரின் பலவீனம்
பிண்னனி இசை. இன்னும் லலலா லலல்லா வையே பிடித்து தொங்குவது.புதிய தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தாது
தற்போது விஜயகாந்த்,மீரா ஜாஸ்மின் நடிப்பில் மரியாதை என்னும் படம் இயக்க உள்ளார். தன் குறைகளை களைந்து அதை வெற்றிப்படமாக கொடுக்க வாழ்த்துக்கள்.