August 18, 2012

2004 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி



விருமாண்டி

கமல் ஹேராமுக்கு அப்புறம் இயக்கிய இரண்டாவது படம். கமலுக்கு இயக்குநராக வசூல் ரீதியில் வெற்றியைக் கொடுத்த முதல் தமிழ் படம். தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கும் என்று செய்திகள் அடிபடும் சூழலில், தன் கிணற்றில் இருக்கும் வற்றாத தண்ணீருக்காக ஒரு வெள்ளந்தி இளைஞன் சந்திக்கும் சூழ்ச்சிகளும், பிரச்சினைகளும் தான் கதை. தூக்குதண்டனைக்கு எதிரான கருத்துகளும் படத்தில் முன்வைக்கப்பட்டன.

சத்யராஜ் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியது. ஆனால் அவர் மறுத்து விடவே அந்தக் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்தார். பசுபதி, சண்முகராஜ் ஆகியோருடன் நாசர், ரோகிணி ஆகிய ராஜ்கமல் கம்பெனி கலைஞர்களும் நடித்திருந்தார்கள். பசுபதி அனைவரையும் கவர்ந்தார் என்றாலும் சண்முகராஜ் சர்பிரைஸ் பேக்கேஜ்.

கமல் நாயகி அபிராமியிடம் பேசும் சில வசனங்கள் பஞ்ச் டயலாக்குகளாக இப்போது மாறிவிட்டன.

மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

ஒருவன் தான் சந்தோஷமா இருக்குறத அந்தக் காலகட்டத்துல உணர்றதில்ல.

ட்ரைலாஜி வரிசையில் தேவர்மகன், விருமாண்டிக்கு அப்புறம் அடுத்த படம் என்னவாயிருக்கும்?

ஆயுத எழுத்து
மணிரத்னம் தமிழ்  ஆடியன்சுக்கு மட்டும் படம் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் படங்கள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் எப்போது நேஷனல் ஆடியன்ஸ்ஸை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தாரோ அன்றுடன் அது குறைந்துவிட்டது. அதன்பின் அலைபாயுதே மட்டும் தான் தப்பித்தது. ஆயுத எழுத்துக்கும் அதே கதிதான். கல்லூரி மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்துடன் (ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?) எடுக்கப்பட்ட படம். சூர்யாவின் அம்மா,ஈஷா தியோல் ஆகியோர் படத்துடன் ஒன்றவிடாமல் தடுத்தனர். பாரதிராஜாவுக்கு கெட்ட அரசியல்வாதி (என்னைய்யா ஒரு பொருட் பன்மொழி என்றெல்லாம் கேட்கப்படாது) வேடம். சித்தார்த், அவரின் அப்பா ஆகியோர் மணிரத்னம் படத்தில் வழக்கமாக வரும் கதாபாத்திரங்கள். மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு நேரம் என்பதை உணரவைத்த படம்.

கண்களால் கைது செய்

பட்டைச் சாரயம் போரடிக்கும் போது பாரின் ஸ்காட்சுக்கு போவது போல கிராமப் படங்கள் போரடிக்கும் போது திரில்லர் பக்கம் எட்டிப் பார்ப்பார் பாரதி ராஜா. சிகப்பு ரோஜாக்கள், டிக் டி டிக் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் கேப்டன் மகள் படு தோல்வி. மீண்டும் பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கினார். கிளப்டோமேனியா இருக்கும் நாயகன் ஒரு கண்காட்சியில் இருக்கும் வைரத்தை சுட்டுவிட, சேல்ஸ் கேர்ள் மீது சந்தேகம் எழுகிறது. அப்பெண்ணின் காதலனான போலிஸ் அதிகாரி அப்பெண்ணையே தூண்டிலாக வைத்து அவனைப் பிடிக்க நினைக்கிறார். பின்னர்தான் நாயகனுக்கு மனச்சிதைவும் இருப்பது தெரிய வருகிறது. சுஜாதா வசனம், ரஹ்மான் இசை என பல அயிட்டங்கள் இருந்தும் படம் மக்களை கவரவில்லை.

எதிரி

கே எஸ் ரவிகுமார் இயக்கி மாதவன் நடிப்பில் வெளியான படம். விவேக் காமெடி, சதா, பூமிகா, டெல்லிகணேஷ் நல்ல விகிதத்தில் கலந்து கொடுத்திருந்தார் இயக்குநர்.

கோவில், அருள்

சாமி வெற்றிக்குப் பின் வந்த இந்த இரண்டு ஹரி படங்களும் ஆவரேஜ்தான்.

ஏய்

வடிவேலுவின் காமெடியும், நமீதாவின் கவர்ச்சியும் இந்த சரத்குமார் படத்தை காப்பாற்றியது. இயக்குநர் வெங்கடேஷ்க்கு இந்தப் படமும், இதே ஆண்டில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான குத்து படமும் முதலுக்கு மோசமில்லாமல் போனது.

மகா நடிகன்

நமீதாவாலும் லொல்லு சபா டைப் காமெடியாலும் காப்பாற்றப்பட்ட சத்யராஜ் படம். சக்தி சிதம்பரம் இயக்கம். இந்த ஆண்டில் சேட்டை, செம ரகளை, ஜோர், அடிதடி என பல காமெடிப் படங்களில் நடித்திருந்தார் சத்யராஜ்.

கிரி
வடிவேலுவால் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட இன்னொரு படம். சுந்தர் சி இயக்கம், அர்ஜூன் சண்டை, ரீமா சென் மற்றும் குத்து ரம்யா கவர்ச்சி, பிரகாஷ் ராஜ், தேவயானி நடிப்பு என குஷ்பு தயாரிப்பில் ஒரு அக்மார்க் மசாலா படம். சிங்கம் சிங்கிளாத்தன் வரும் என்ற பஞ்ச் டயலாக் முதன் முதலில் பேசப்பட்ட படம்.

அரசாட்சி
தமிழுக்கு வந்த உலக அழகிகள் வரிசையில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று லாரா தத்தாவை கூட்டி வந்து மகராஜன் இயக்கிய படம். அர்ஜூன், நாசர், பி வாசு, மன்சூர் அலிகான் என தேவையான நடிகர்கள், எஸ் வி சேகர், விவேக் காமெடி இருந்தும் படம் கவரவில்லை. தப்புச் செய்ய்றவனுக்கு வாதாடும் வக்கீலை போட்டுத்தள்ளினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று ஷங்கர் தனமான தீர்வைச் சொன்ன படம்.

அட்டகாசம்

சில மன வருத்தங்களுக்குப் பின் அஜீத் சரண் இணைந்த படம். அஜீத்துக்கு இரட்டை வேடம். அஜீத்துக்கு கொஞ்சம் இமேஜ் பில்ட் அப் செய்ய மட்டும் உதவியது. ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் அஜீத் நடித்த ஜனா படமும் இந்த ஆண்டு வெளியாகி ஜண்டு பாம் விறபனையை அதிகரித்தது. நியாயப் படி இந்தப் படத்தை ரீமேக் (பாட்ஷா) லிஸ்டில் தான் சேர்த்திருக்க வேண்டும்.

சுள்ளான்

திருமலை வெற்றிக்குப்பின் இயக்குநர் ரமணா இயக்கிய படம். தனுஷ் நாயகன். எறும்பின் தலையில் இமயமலை. புதுக்கோட்டையிலிருந்து சரவணனும் இந்தப் படமும் தனுஷின் ஆரம்பகால வெற்றிப் பயணத்தின் தடைக்கற்கள்.

மதுர

கில்லியின் வெற்றிக்குப் பின் வந்த விஜயின் படம். ஷங்கரின் இணை இயக்குநர் மாதேஷ் இயக்கிய படம். தம் ரக்‌ஷிதா, சோனியா அகர்வால், தேஜா ஸ்ரீ என நாயகிகள், வடிவேலு நகைச்சுவை, பசுபதி வில்லத்தனம் என அம்சங்கள். விமர்சகர்கள் கிழித்தாலும் தயாரிப்பாளர் டவுசர் கிழியவில்லை.

வானம் வசப்படும்

பி சி ஸ்ரீராம் இயக்கம். படமும், வந்த நேரமும் சரியில்லை. பார்க்க போனவர்களுக்கும் தான்.

ஜெய்
முதலில் மாதேஷ் இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகிக் கொள்ள நாராயணன் என்பவர் இயக்கிய பிரசாந்த் படம். அந்த ஆண்டு வெளியான பாட்டம் பத்தில் இதற்கு நிச்சய இடம் உண்டு.

இந்த ஆண்டில் வடிவேலு தான் காமெடியில் டாப். ஏய், சத்ரபதி, அருள், கோவில், கிரி, எங்கள் அண்ணா, ஜோர், மதுர என கொடிகட்டிப் பறந்தார்.

விவேக்கும் தன் பங்குக்கு செல்லமே, எம் குமரன் சன் ஆப் மகா லட்சுமி, எதிரி, அரசாட்சி என கலக்கினார்.

நீங்கள் இன்று சிரிப்பொலி அல்லது ஆதித்யா பாருங்கள். மேற்கூறிய படங்களில் இருந்து நிச்சயம் கிளிப்பிங்ஸ் இருக்கும்.

தமிழர்களின் கனவை   இந்த ஆண்டில் அதிகம் ஆக்ரமித்தது நமீதா தான். ஏய், மகா நடிகன், எங்கள் அண்ணா படங்களில் சித்தப்பூ நடிகர்களுக்கு துணையாக வந்தார்.

இந்த ஆண்டில் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில் ரிச்சர்ட் மதுரம் நடித்த காமராஜர் படம் வெளியானது.

ரீமேக் படங்களும் காதல் படங்களும் கலக்கிய 2004


தமிழ்சினிமா உலகுக்கு ரீமேக் ஒன்றும் புதிதில்லை என்றாலும், ஓர் ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலானவை ரீ மேக் படங்களாய் இருந்தது இந்த ஆண்டில்தான். அதுதவிர சில வித்தியாச காதல் படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன.

முதலில் ரீமேக்குகளைப் பார்ப்போம்.

கில்லி

கதாநாயகனாக நடிக்க வந்த காலத்தில் இருந்தே நிறைய ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு சாப்ட் கேரக்டர் படங்களே நிறைய வெற்றியைத் தந்திருந்தன. அதனால்தான் எஸ் ஏ சந்திரசேகர் கூட நெஞ்சினிலே படத்தை இயக்கும் போது, இது என் மகனுக்கு நான் வைக்கும் ஆசிட் டெஸ்ட் என்று சொல்லியிருந்தார். விஜய் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி பெற்ற படம் என்றால் திருமலை திரைப்படத்தைத் தான் சொல்ல வேண்டும். அந்தப் படம் அதற்கு முன் வந்த சில படங்களால் தள்ளாடிக் கொண்டிருந்த விஜய் மார்க்கெட்டை ஸ்டெடி செய்தது. தெலுங்கில் பெரு வெற்றி பெற்ற ஒக்கடுவின் ரீமேக்கான கில்லி விஜயின் மார்க்கெட்டை பல படிகள் தூக்கியது. கில்லியின் இயக்குநர் தரணிக்கு இதுதான் இன்றைய தேதி வரை வெற்றிப்படமாக இருக்கிறது. திருட்டு விசிடியையும் மீறி, உதயம் காம்ப்ளக்ஸின் எல்லா திரைகளிலும் இந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல நாட்களுக்கு ஓடியது. ரஜினிக்கு ஒரு பாட்ஷா, கமலுக்கு ஒரு நாயகன் என்று சொல்வது போல விஜய்க்கு ஒரு கில்லி.

வசூல் ராஜா எம் பி பி எஸ்

மருத்தவமனை/மருத்துவர்கள் மனிதாபிமானமாய் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் வந்த இந்திப் படம் முன்னாபாய் எம் பி பி எஸ்ஸின் ரீமேக்கான இது வசூலிலும் ராஜாவானது. இந்தப் படத்தில் கமலின் அப்பாவாக நடிக்க பாலசந்தரை அணுகியபோது அவர் மறுக்க நாகேஷ் அந்த கேரக்டரில் நடித்தார். ஆனால் பாலசந்தர் அதற்குப் பின் டிவி சீரியல், தாமிரா இயக்கிய ரெட்டை சுழி  என நடிப்பு அவதாரம் எடுத்தார். இதுவரை தனது கேரியரில் கிரேஸி மோகன் அழுத படம் இதுவாகத்தான் இருக்க முடியும். டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ண காதலி இப்போது பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா, சலீம் கௌஸ், அதுல் குல்கர்னி என பல வேற்று மொழி கலைஞர்களை தமிழுக்கு கொண்டுவந்த கமல் இதில் காந்தி படத்தில் கஸ்தூரிபாயாக நடித்த ரோஹிணி ஹட்டாங்குடியை தன் அம்மா வேடத்தில் நடிக்க வைத்தார். காகா ராதாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

எங்கள் அண்ணா

குரோனிக்கில் பேச்சிலர் என்ற மலையாளப் படத்தின் ரீ மேக் இந்தப் படம். விஜயகாந்தின் அரைத் தங்கை சொர்ணமால்யாவின் காதலர் வேடத்தில் முதலில் கார்த்திக் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த வேடத்தில் பிரபுதேவா நடித்தார். வடிவேலுவின் காமெடியும் நமீதாவின் அழகும் இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட்.

பேரழகன்

திலீப் நடித்த குஞ்சிக்கூனன் படத்தின் ரீமேக். சூர்யாவுக்கு இரட்டை வேடம். ஜோதிகாவுக்கும்.  பெரும்பாலான தமிழ்படங்களில் மாற்றுத் திறனாளி ஹீரோ என்றாலே அவரைச் சுற்றி ஒரு சோக வளையம் இருக்கும். இந்தப் படத்தில் அங்க ஹீனமுள்ள நாயகனைச் சுற்றி நவரசமும் நடை போடும். ஓரளவு ஓடியது. அன்பு நண்பர் கேபிள் சங்கர் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். (பாக்ஸிங் சீன்).

குமரன் சன் ஆப் மகாலட்சுமி
ரீமேக் ராஜா தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்த படம். அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இந்தப்படம் அசினை ராசியான ஹீரோயினியாக்கியது. இயக்குநர் தரணி இப்படத்தின் படப்பிடிப்பின் போது ராஜாவிடம் “நதியா நடிக்கிறாங்கண்ணா நான் உதவி இயக்குநரா வர்றேன்” என்றாராம். அப்படி ஒரு தலைமுறையை கவர்ந்திருந்த நதியா ரீ எண்டிரி ஆன படம்.

கஜேந்திரா

ராஜமவுலியின் சிம்மாத்ரி பட ரீமேக் இது. சுரேஷ் கிருஷ்ணா கமலுக்கு ஆளவந்தானையும், ரஜினிக்கு பாபாவையும் கொடுத்த பின்னரும் விஜயகாந்த் துணிந்து இறங்கிய படம். படு தோல்வி.

ஷாக்

இந்தி திகில் படமான பூட் ஐ தழுவி எடுக்கப்பட்ட படம். தியாகராஜனும் தன் மகன் நன்றாக வர வேண்டுமென என்னென்னவோ செய்கிறார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆக மாட்டென் என்கிறது.

இது தவிர அன் அபீசியலாக ட்ரு மேன் ஷோவை தழுவி பார்த்திபன் குடைக்குள் மழையையும், பிக் படத்தை தழுவி எஸ் ஜே சூர்யா நியூ படத்தையும் கொடுத்தார்கள். நியூ ரஹ்மானின் ஹிட் பாடல்களாலும், ஸ்ட்ரக்சர் குயின் சிம்ரனாலும், எஸ் ஜே சூர்யா பிராண்ட் காட்சிகளாலும் நன்கு கல்லா கட்டியது.

காதல் படங்கள்

ஆட்டோகிராப்

அழகி பட வெற்றிக்குப் பின் பல நாஸ்டால்ஜியா படங்கள் வந்தன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படம் ஆட்டோகிராப். ஒரு ஆணின் பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் அவன் சந்திக்கும் காதல் பற்றிய கதை. இது பெண்ணின் பார்வையில் எடுக்கப்பட்டிருந்தால் பல விளைவுகளைச் சந்தித்து இருக்கும்.

காதல்

ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் படம் சாமுராயில் சறுக்கி இருந்தாலும் தன் குரு தயாரித்த இந்தப் படத்தின் மூலம் நிமிர்ந்தார். உண்மைக் கதையை தழுவிய படம் என்ற விளம்பரத்துடன் வந்தது. மெக்கானிக் ஷெட் ஹீரோ ஒயின் ஷாப் ஓனர் மகளை காதலிக்கும் கதை. ஜாதிய பிரச்சினையும் உண்டு. எதிர்பாராத முடிவு கலங்க வைத்தது. ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்தின் இசை அறிமுகம். ஆனால் இப்படத்திற்குப் பின் அதிகம் பிரகாசிக்கவில்லை. காதல் தண்டபாணி, காதல் சுகுமார், காதல் சந்தியா என்ற அடைமொழிகளே இப்படத்தின் பெரு வெற்றியைச் சொல்லும்.  

7ஜி ரெயின்போ காலனி

இது கே கே நகரின் காதல்கதை என்ற டேக் லைனுடன் வந்த படம். ஏ எம் ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணாவுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்த படம். காதல் கை கூடாத நிலையில் காதலி தன்னை அவனுக்கு பரிசாக கொடுத்துவிட்டு பிரிய நினைக்கிறாள் என்ற கருத்துடன் வந்த படம். செல்வராகவனின் இயக்கமும், யுவனின் இசையும், முத்துக்குமாரின் வரிகளும் படத்தை தூக்கி நிறுத்தின. நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் ஒன்றே இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல போதும்.

அழகிய தீயே

என் பிரண்ட் ராதா மோகன் இயக்கிய  படத்தை நான் பார்க்கணும். அதுக்கு டிக்கட் ரெண்டு கோடின்னு நினைச்சிட்டுப் போறேன் என்று சொல்லி  பிரகாஷ் ராஜ் தயாரித்த படம். நம்பிக்கையை காப்பாற்றினார் ராதாமோகன். சினிமா வாய்ப்பு தேடும் இளைஞன், பணத் தேவைக்காக பணக்காரப் பெண்ணின் காதலனாக நடிக்கப் போய் பின் உணமையாகவே காதலில் விழுகிறான். பிரசன்னா, நவ்யா நாயர் இணை. ஆனால் படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது பிரசன்னாவின் நண்பனாக வரும் குமரவேலுவும், அண்ணாச்சியாக நடித்த எம் எஸ் பாஸ்கரும். படத்தின் பிளஸ் பாயிண்ட் விஜியின் வசனங்கள்.   

செல்லமே

இந்தியன் பட இணை இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கிய படம்.  அடுத்து கமல் இவர் படத்தில்தான் நடிக்கப் போகிறார் என்ற வதந்தி இந்தியன் வெளியானபோது இருந்தது. பின் இவர் அரவிந்த்சாமி, மாதுரி தீட்சித் காம்பினேஷனில் எஞ்சினியர் என்னும் படம்  இயக்கப் போவதாக விளம்பரங்கள் வந்தன. அணை கட்டப் படும் களத்தில் படம் இயங்கும் என்ற ஹேஸ்யத்துடன் பல அருமையான ஸ்டில்கள் வெளியாகின. மாதுரி தீட்சித் மொட்டை போடப்போவதாக கூட செய்திகள் வெளியாகின. ஆனால் படம் எடுக்கப்படவில்லை. பின் இவர் நிலாக்காலம் என்னும் படத்தை எடுத்தார். அதன்பின் இயக்கிய இப்படம் மூலம் விஷால் அறிமுகமானார்.

ஒரு பையனுக்கு தன்னிடம் பாசம் காட்டும் தன்னை விட மூத்த பெண்ணுடன் வரும் காதல், அவள் திருமணம் செய்து கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அல்லாடுவது, அதற்காக கடத்தல் வரை இறங்குவது என கதைக் களம். பரத்திடம் அன்பு காட்டும் பெண்ணாக ரீமாசென், அவளின் விஷால். விவேக்கின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள், சுஜாதாவின் வசனம், கேவி ஆனந்தின் ஒளிப்பதிவு ஆகியவை பிளஸாக அமைந்தன.

சுஜாதாவுக்கு இவர் மேல் எப்போதும் ஒரு ஷாஃப்ட் கார்னர் இருந்து வந்திருந்தது. எஞ்சினியரிலும் அவர் பங்கிருந்தது. நிலாக்காலமும் சுஜாதா உடையதே. பின் இவர் இயக்கிய ஆனந்த தாண்டவமும் (பிரிவோம் சந்திப்போம்) சுஜாதாவே.

தென்றல்

ஜெயகாந்தன் டைப் இலக்கியவாதி பார்த்திபனை காதலிக்கும் அப்பாவி பெண், தன்னையே அவரிடம் இழக்கிறாள். குழந்தை பிறக்கிறது. அது தன் குழந்தை என அவருக்கு தெரியவரும் சிக்கல்கள் என்ற கதைக்களம். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பெரிதாக போகவில்லை. ராகவேந்திரா லாரன்ஸ் ஆடிய பறை பாடல் நன்றாக படமாக்கப்பட்டிருந்தது.

மன்மதன்

இதை ரீமேக் வகையிலும் (சிகப்பு ரோஜாக்கள்) சேர்க்கலாம். கோடாம்பாக்க ரேஸில் இப்போதுதான் குதிரையில் ஏறியிருக்கிறார் சிம்பு என விகடன் சிலாகித்தது. காதலில் துரோகம் செய்யப்பட்டு தற்கொலை செய்யும் தம்பிக்காக அண்ணன் துரோகம் செய்யும் பெண்களையெல்லாம் பழிவாங்கும் கதை.

அடிதடி

திருமணம் செய்து கொள்ளாத தாதா சத்யராஜுக்கு இளம் பெண் ரதி மீது காதல் வந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்களும், பின் அவர் திருந்துவதும் தான் கதை. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு லொல்லு சபா டைப் காமெடியால் நல்ல வசூல் கொடுத்த படம்.

அழகேசன்

இதுவும் சத்யாரஜ் படமே. சிப்பிக்குள் முத்து போல ஒரு காதல். ஆனால் அது பட வெற்றிக்கு கைகூடவில்லை.


August 16, 2012

தேவர் மகன் – சில நினைவுகள்



தீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ் பேச/எழுதப் படும் இடங்களிலெல்லாம் அடிபட்டுக்கொண்டே தான் இருந்து வருகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன் வந்த இரண்டு கமலின் படங்களும் (குணா, சிங்காரவேலன்) எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனால் இதே நேரத்தில் ரஜினியின் தளபதி, மன்னன், அண்ணாமலை ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வெற்றி பெற்றிருந்தன. பார்வையாளராக இருந்து ரசிகராக மாறும் வயதில் இருந்த சிறுவர்கள் எல்லாம் ரஜினியை நோக்கி மட்டும் சென்று கொண்டு இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் எஸ் பி முத்துராமன் யூனிட் பெனிபிட் பண்டுக்காக ரஜினி நடித்துக் கொண்டிருந்த படம் பாண்டியன்.
92 தீபாவளிக்கு இந்த இரு படங்களுடன் திருமதி பழனிச்சாமி, ராசுக்குட்டி ஆகிய படங்களும் வெளிவர இருந்தன.

சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடிப்பது, இஞ்சி இடுப்பழகி பாடல் பதிவு பற்றிய குமுதம் அட்டைப்படக் கட்டுரை, பொள்ளாச்சியில் தேர் செட், கண்மாய் செட் என வழக்கமான பில்ட் அப்புகள் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு பட பாடலின் வெற்றியை அப்போது தீர்மானிக்க இருந்த வழி கேசட் விற்பனை. 60 நிமிடம் ஓடும் கேசட்டில் 12/13 பாடல்கள் பதியலாம் என்பதால் இரண்டு படங்களின் பாடல்களைப் பதிந்து தருவார்கள். கிட்டத்தட்ட இது திருட்டு வி சி டி போலத்தான். ஆனால் அதை அப்போது (இப்போதும்) அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே செய்து வருகிறார்கள். (பாழாய்ப் போன காப்பிரைட் லா). ஒரு படத்தின் பாடல் பயங்கர ஹிட் எனில் அதனுடன் காம்பினேஷனாக லொப்பை பாடல்கள் உள்ள படங்களையே பதிந்து விற்பார்கள்.

தேவர்மகன் பாடல்கள் வெளியான போது அது எங்கள் ஏரியாவில் அவ்வளவு ஹிட்டாகவில்லை. (ஆனால் ஒரு பாடல் மட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் தேசிய கீதமாய் ஆனது). எங்கு பார்த்தாலும் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலாவும், ஜும்பா ஜெயிப்பது இந்த பாண்டியனேவும் தான். காம்பினேசன் கேசட்டுகளில் எல்லாம் பாண்டியன் ஏ சைடிலும்  மற்ற படங்கள் பி சைடிலும் இருந்தன.

படம் வெளியானது. ஊர்க்காரர்களுடன் சேர்ந்து தீபாவளியன்று அதி காலையில் காக்கிச் சட்டை கமல் மன்ற டிக்கட்டுகளை வினியோகிப்பதற்காக தியேட்டருக்கு போயாகிவிட்டது. உடன் நாலு பைகள். அதில் சீராக கிழிக்கப்பட்ட ராயல் பூடான், சிக்கிம் லாட்டரிச்சீட்டுகள்.

கமலின் ரயில்வே ஸ்டேஷன் எண்டரிக்கு சீட்டுக்களை வீச ஆரம்பித்தோம். சிவாஜியைக் கண்டவுடன் பம்மியது கமல் மட்டுமல்ல நாங்களும்தான். அதன்பின் இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் போது ஒரு முறை வீசினோம்.

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா என்னும் போது இரண்டு பைகள் மீதம் இருந்தன. அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம்.

மதியம் தீபாவளியின் முக்கிய சடங்கான ஜே பி ஹோட்டல் வான் கோழி பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து டேபிளில் ராஜபந்தா ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் உட்கார்ந்திருந்தார். பாண்டியன் எப்படி என்று கேட்டதற்கு “அண்ணாமலை அளவுக்கு இல்லை” என்றார்.  சிங்காரவேலனை விட தேவர் மகன் நல்லாயிருக்கு என்று அவர் கேள்விக்கு பதில் சொன்னோம்.

பின் கல்லூரி நண்பர்களுடன் இரண்டாம் முறை பார்த்தபோதுதான் கவனிக்காமல் விட்ட பல விஷயங்கள் தென்பட்டன.

அதுவரை நகரப் படங்களுக்கே பெரும்பான்மையாக ஒளிப்பதிவு செய்த பி சி ஸ்ரீராம் பணிபுரிந்த கிராமப்படம். சிட்டி பேஸ்டு கதைகளிலேயே நடித்துக் கொண்டிருந்த நாசர் செய்த கிராமப் படம், வடிவேலு தன் கெப்பாசிட்டியை காட்டிய படம் என்பது போக வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

கண்மாய் உடைந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஆனதால் கவலை அடைந்திருக்கும் மக்களைப் பார்த்து கமலும் சாப்பிடாமல் இருப்பார். அப்போது சிவாஜி சொல்வார்

“இவளைப் பாரு, குழந்தயப் பறி கொடுத்தவ. ஏன் சாப்பிடுறா? நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை சுத்தியுள்ளவங்கள காப்பாத்த முடியும்.”

என் தந்தைக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலை ஏழு மணி அளவில் ஒரு ஆப்பரேசன் நடந்தது. நான் 4 மணிக்கெல்லாம் எழுந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தேன். ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அவர் கூட்டிச் செல்லப்பட்டதும் என் அம்மா, தங்கை எல்லோரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு பசி. ஆனால் தயக்கம். அப்போது இந்த வசனம்  ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரி கேண்டினுக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தேன். 

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன் என் மகனை ஐ சி யூவில்  அனுமதித்து விட்டு மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சாப்பிடச் சென்றேன்.

ஆனால் இந்தப் படத்தில் கமல் தமிழ்சினிமாவிற்கு செய்த இன்னொரு நல்லதும் உண்டு. அதுதான் காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் ஆகியோருக்கு கொடுத்த வேடம். காகா ராதாகிருஷ்ணன் அதன்பின் பல படங்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு இந்த ஆண்டு மறைந்தார். ரேவதியின் தந்தையாக அந்த படத்தில் வாழ்ந்திருந்த கள்ளபார்ட் நடராஜன் சில ஆண்டுகள் மேலும் பல படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் தந்தையும் கள்ளபார்ட் வேடத்தில் விற்பன்னர்.

கமல் ராஜபார்வைக் காலத்தில் இருந்தே இது போல பல ஆட்களை ஞாபகத்தில் வைத்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பல திறமைகளை இறக்குமதி செய்திருக்கிறார்.

இந்த சமயத்தில் 96 வாக்கில் பெப்ஸி ஸ்டரைக்கைத் தொடர்ந்து நடந்த சில கூட்டங்கள் ஞாபகம் வருகின்றன். அதிலொன்றில் கமல் பேசும் போது சொன்னது இது

”பல நடிகர்களை நாம் மறந்து வருகிறோம். சில கதாபாத்திரங்களுக்கு அவர்கள் பொருத்தமாய் இருப்பார்கள். ஆனால் நம் நினைவுக்கு அப்போது வராது”. எனவே நடிகர் நடிகைகளைப் பற்றிய ஒரு கம்ப்ளீட் டேட்டா பேஸ் தயார் செய்ய வேண்டும். அதில் அவர்களது முக்கிய புகைப்படங்கள், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும். அது நடிகர் சங்கத்தில் இருந்தால் நலம். டைரக்டர்கள் அதை புரட்டிப் பார்த்து நல்ல முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.

இப்போது தில்லு முல்லு பட ரீமேக் என்றதும் தேங்காய் சீனிவாசனுக்கு யார், சௌகார் ஜானகிக்கு யார் என்று விவாதித்தார்கள் இணையத்தில். ஆளா இல்லை. அம்பிகா, நளினி கூட அதைச் செய்யலாமே?

எனவே தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு டேட்டா பேஸை விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன்  அருமையாக தயார் செய்யலாம். எல்லோரும் பி ஆர் ஓ வைத்துக் கொள்ள முடியாது. படியேறி வாய்ப்புக் கேட்கவும் தன்மானம் தடுக்கும். அதனால் இரு தரப்புக்கும் இழப்பே.

நடிகர் சங்கம் இதை முன்னெடுத்துச் செய்து கொண்டிருப்பதாய் இப்போது செய்திகள் வருகின்றன.