September 24, 2012

மனைவி


வீட்டின் உள்ளே நுழைந்ததும் கூடத்தில் அமர்ந்திருந்த மாமனார் தலையை கீழ்நோக்கி அசைத்து வெற்றுப் பார்வை பார்த்தார். மைத்துனன் உதடு பிரியாமல் புன்னகை போன்ற ஒன்றால் வரவேற்றான். சென்று அவனருகில் உட்கார்ந்து

“வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சா? எதுவும் வாங்கி வரணுமா? என பேச்சைத் தொடங்கினேன்.

இல்ல மாமா. எல்லாம் வாங்கியாச்சு. நாளைக்கு எட்டு மணிக்கு அய்யர் வர்றேன்றிருக்கார் என்றான். பேச்சு சப்தம் கேட்டு ஐந்து நிமிடம் கழித்து இறுகிய முகத்துடன் காப்பிக் குவளையுடன் வந்தார் மாமியார்.

பாவம் அவரும் என்ன செய்வார்?. மகளின் முதல் திவசத்துக்கு வந்திருக்கும் மாப்பிள்ளையை எப்படி வரவேற்க வேண்டும் என்ற முறை சாஸ்திரத்தில் இல்லையே.

காப்பியைக் குடித்தவாறே பிளாஸ்டிக் மாலை அணிவித்திரிந்த பிரேமுக்குள் சிரித்த முகத்துடன் இருந்த பிரியாவைப் பார்த்தேன். சில நிமிடங்களில் ஒரு சங்கடமான மௌனம் எங்களுக்குள் நிலவியது.

கல்யாணமாகி ஒரே ஆண்டில் விபத்தில் செத்துவிட்ட பிரியா எனக்கும் அவர்கள் வீட்டிற்கும் இருந்த தொடர்பையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டாளோ எனத்  தோன்றியது. இதே வீட்டிற்கு மறு வீட்டிற்கு வந்த நேரம் எப்படி இருந்தது?. குழைந்து பேசும் மைத்துனன், மருமகனுக்கு சமைப்பதற்காகவே இத்தனை ஆண்டுகள் பயிற்சி செய்தவளைப் போல இயங்கிய மாமியார், அவர் மேலதிகாரிக்கு கொடுத்த மரியாதையை விட அதிக மரியாதை கொடுத்த மாமனார்.

இப்போது, கொடுத்த கடனை திருப்பி கேட்க வந்தவனுக்கு செய்வதைப் போன்ற சம்பிரதாய உபசரிப்புகள்.

“கடை வீதி வரை போய் விட்டு வருகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினேன், அப்படியாவது மனப்புழுக்கம் குறையுமா, என்று. போன முறை இங்கு வந்தது தலை தீபாவளி மாப்பிள்ளையாக. இதே தெருவில்தான் பிரியா ஓடி ஓடி அலங்காரப் பொருட்களை அன்று வாங்கினாள். எதிலும் ஓட்டம் தான் அவளுக்கு. படிப்பு முடித்து வேலை, அதில்  உயர்வு பின் கல்யாணம் என. பிறந்ததில் இருந்தே ஓடிக் கொண்டுதான் இருந்திருப்பாள் போல. போதும் என ஒரு நாள் நிறுத்திக் கொண்டாள்.

அவள் எங்கே நிறுத்தினாள். விடுமுறைக்கு இங்கே வந்தவள், ஒரு விசேஷத்துக்கு சித்தி மகனுடன் பைக்கில் போனாள். அவள் தான் வேகமாக போகச் சொன்னதாக கேள்வி.  இருக்கும். அவன் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொள்ள, இங்கே நான் பெரும் மனக் காயத்துடன் நிற்கிறேன்.

29 வருடம். யாரிடமும் பகிராத காதலை அவள் மீது கொட்டினேன். அவளுக்குத்தான் அதை வாங்கிக்கொள்ள நேரமே இல்லை. ஹனிமூன்? வேண்டாம். இந்த பிராஜக்ட் முடியும் லெவலில் இருக்கிறது. திருப்பதி? வேண்டாம். பி எம் ஆகிட்டு போலாம். மகாபலிபுரம்? முன்னமே பார்த்தாச்சு.

அப்பாவிற்கு போன் செய்தேன். நாளைக்கு எட்டு மணிக்கு என்றேன். சிரத்தை இல்லாமல், நாளைக்கு அவனுக்கு லீவ் இல்லடா. கைலாஷுக்கு ஸ்கூல்ல ஏதோ மீட்டிங்காம். நான் தான் போறேன். என்றார்.

என் மனைவியின் முதல் திவசம் இவர்களுக்கு பைசா பெறாத விஷயம் ஆகி விட்டிருக்கிறது. கல்யாணத்துக்கு முன் என் சின்ன பையன் சின்ன பையன் என என்னைத் தூக்கி வைத்து ஆடியவர், கல்யாணத்துக்குப் பின் அப்படி இல்லை. பிரியாவின் மறைவுக்குப் பிறகு இன்னும் சுத்தம். பிரியா வீட்டாரே என்னை அன்னியனாய் நினைக்கத் துவங்கி விட்ட பின் மாமனரா மருமகள் திவசத்துக்கு வருவார்?

இரவு ஆனதும் மாமனார் வீட்டிற்கு திரும்பினேன். நாளை திவசம் முடிந்ததும் கோவையிலுள்ள எங்கள் வீட்டிற்குப் போய், ஒரு நாள் தங்கி விட்டு சென்னைக்கு புறப்படுவதாக ஏற்பாடு. 

காலையில் இயந்திர தனமாக எல்லா நிகழ்வுகளும் நடந்து முடிந்தது. அய்யர் கிளம்பிய உடன் விரதம் முடித்து சாப்பிட்டேன். அடுத்து என்ன? என்பது போலவே அனைவர் பார்வையும் இருந்தது. அதை சகிக்க முடியாமல் உடனே கிளம்பினேன்.

பஸ் ஸ்டாண்ட் வந்து கோவை பஸ்ஸுக்காக காத்திருந்த போது, அக்காவிடம் பேசலாம் எனத் தோன்றியது. எடுத்தவள் இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன் என்று வைத்து விட்டாள்.

போன மாதம் அவள் பையன் பத்தாவது பரிட்சை நன்கு எழுத, யோக ஹயகிரீவரிடம் சென்று அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது, அவள் செய்த போன் கால்கள் அத்தனையும் ஞாபகத்துக்கு வந்தன. ஒவ்வொரு மணி நேரமும் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் காரியம் என்றால் மட்டும் தான் இந்த சில ஆண்டுகளில் பேசுகிறாள்.

கோவை பஸ் வர ஏறிக் கொண்டேன்.  இந்த ஒராண்டில் எத்தனை புறக்கணிப்புகள்?  அவள் விதி அவள் போய்ச் சேர்ந்து விட்டாள். நானென்ன செய்வது? அபார்ட் மெண்டில் நடந்த குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்கள், வெட்டிங் டே பார்ட்டிகள் எதற்கும் அழைப்பில்லை.

அவர்களை விடுங்கள். அலுவலகத்தில் மாதம் ஒரு முறை குடும்பத்துடன் கெட் டு கெதர் போபவர்கள் என்னை புறக்கணித்து விட்டுப் போகிறார்கள். பேச்சிலர்களும் அவர்கள் ஜமாவில் என்னை சேர்ப்பதில்லை. சமீபத்தில் கல்யாணம் நிச்சயமான நண்பன் அவன் உட்பியிடம் இருந்து போன் வந்தால் எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறான். ”கண்ணு வச்சிடுவான்” என்று இன்னொருவனிடம் கமெண்ட் வேறு.


கோவை வந்தது. இறங்கி அன்னபூரணாவில் காபி குடிக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது. நேற்று நான் பேசியபிறகு, ஒரு போன் கூட இன்னும் வீட்டில் இருந்து வரவில்லை. இன்று வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். என்ன என்று கேட்க கூட நாதியில்லை. சரி என்னதான் செய்கிறார்கள் பார்ப்போம் என மனதில் கறுவிக் கொண்டு, மாலைக் காட்சிக்கு ராகம் தியேட்டருக்கு பேக்குடன் கிளம்பினேன்.

படம் முடிந்தும் போன் வரவில்லை. ஆட்டோ பிடித்து, ஆம்னி பஸ் நிறுத்தத்துக்கு வந்தேன். சென்னை பஸ் கிடைத்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, காலை 7 மணி. பல் துலக்கிவிட்டு, காலண்டரில் தேதி கிழித்தேன். நல்ல நேரம் ஏழரையில் இருந்து ஒன்பது என அது சொன்னது.

லேப்டாப்பை ஓப்பன் செய்து, கூகுளுக்குள் போனேன். கை அனிச்சையாக மேட்ரிமோனி என டைப்பத் தொடங்கியது.

September 13, 2012

அன்னப் பட்சி நெக்லஸ்


பத்த வைத்த, பாலிஷ் போட்ட, திருகாணி போட்ட உருப்படிகளை எல்லாம் மீண்டும் எடை போட்டு, சிட்டையில் எழுதிவிட்டு நிமிர்ந்தபோது மணி பத்தரை ஆகி இருந்தது. கருநீல சபாரி அணிந்த சூப்பர்வைசர் முத்தண்ணனிடம் கொடுத்து பேரேட்டில் ஏற்றும் போது பதினொன்னைத் தொட்டுவிட்டது மணி.

“சண்முகம், நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வந்திருப்பா. முகூர்த்த நாளு. பழைய நகை எல்லாம் நிறைய வரும். சாயங்காலத்துக்கு மேல ரிப்பேர் வேலை பார்த்துக்கிடலாம்” என்றார் முத்தண்ணன்.

ஆடி தொடங்கி தீபாவளி வரையிலான இந்த சீசன் நகைக்கடைகளுக்கு அருமையான சீசன். தள்ளுபடியில் தொடங்கி, சுபமுகூர்த்தங்களுக்கு வாங்க, நல்ல நாளுக்கு வாங்க என தீபாவளி வரை வியாபாரம் அனல் பறக்கும்.

என்னுடைய பிரச்சினைகளும் இந்த தீபாவளிக்குள் தீர்ந்துவிடும். 35 வயதிலும் தனிமை, கொடுமை. முன்னெல்லாம் வேலையில் மட்டுமே இருக்கும் கவனம் இப்போது சுற்றுப்புறத்தையும் நோட்ட மிட வைக்கிறது. மாநகர கலாச்சாரம் பெண்களின் அழகை வெளிச்சமிடவைக்கிறது. அவர்கள் தி நகர் மாதிரி ஏரியாவிற்கு வரும்போது மினுமினுக்க வைக்கிறது. அந்த மினுமினுப்பு உள்ளச் சூட்டை உமி போட்ட தணலாய் தகிக்க வைக்கிறது. வயிற்றுப்பசி தீர்ப்பதற்கு இந்தத் தொழில் இருக்கிறது. ஆனால் இந்தப் பசி தீர்க்க? அவமானங்களுக்கு பயந்து ஒழுக்கமாய் இருக்க வேண்டியிருக்கிறது.

இரண்டு லட்ச ரூபாய் சீட்டின் கடைசித் தவணை நேற்றோடு முடிந்தது. கசர், கமிசன் பிடித்துக் கொண்டு நாளை  கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். வாங்கிக் கொண்டு ஊருக்குப் போய் பெரியகுளத்தம்மா கடனை அடைக்க வேண்டும். அதோடு முடிந்துவிடும். பின் தீபாவளி வரை பார்க்கும் வேலை, ஓட்டி, போனஸ் எல்லாம் சேர்த்து ஒரு ரூபாய் வரும். அப்பாவுக்கு புதுச் சட்டை, வேட்டி எடுத்துக் கொடுத்து பெண்பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும்.

பாருங்க, நான் பாட்டுக்கு மனசுல வர்றத சொல்லிக்கிட்டே போறேன். நான் யாரு என்னன்னு சொல்லாமலேயே!.

நான் ஒரு பொற்கொல்லர். பரம்பரையாக புகழ்பெற்ற குடும்பம். நிலக்கோட்டை ஆசாரி என்றால் சுத்தி இருக்குற நாலஞ்சு தாலுகாவுக்கும் தெரியும். தாத்தா கல்யாண நகை ஆர்டர் மட்டும்தான் செய்வாராம். கைராசிக்காரர்ன்னு கூட்டம் அலைமோதும். நல்ல முறையில சம்பாதிச்சவங்களுக்கு மட்டும்தான் செய்வாராம்.அவர் செஞ்சு கொடுத்த நகை பரம்பரை பரம்பரையா அந்தக் குடும்பத்தில இருக்குமே தவிர, அடகுக்கடை வாசலைக் கூட மிதிக்காது என்பார்கள்.  அப்பா தலை எடுத்த பின்னாடி தொழிலை நல்லா விரிவுபடுத்தினார். மதுரைக்கு ஜாகையை மாத்தினார். பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு திருட்டு எங்க வாழ்க்கையையே பொரட்டி போட்டிருச்சு.

இன்சூரன்ஸ் மாதிரி யெல்லாம் பண்ணாம கூட இருக்குற ஆளுங்களையும், இரும்பு லாக்கரையும் நம்பி இருந்தார் அப்பா. ரெண்டுமே அடிக்கிற மாதிரி அடிச்சா வளையறதுதானே. அட்வான்ஸ் வாங்கி, செஞ்சு வச்சிருந்த நகை, தங்கம் எல்லாம் போயிடிச்சு. சொத்தை வித்து எல்லோருக்கும் திருப்பி கொடுத்தார் அப்பா. அப்படியும் பத்தலை. தாத்தா எடுத்து வச்சிருந்த நல்ல பெயர்னால யாரும் நெருக்கலை. ஆனா அம்மா அந்த அதிர்ச்சியிலேயே கொஞ்ச நாள்ல போயி சேர்ந்துட்டா. நான் பத்து வருஷமா இங்க வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சுக்கிட்டு வர்றேன். கடன் அடையிறவரைக்கும் புதுத்துணி எடுக்கக்கூடாது, நல்ல சாப்பாடு சாப்பிடக்கூடாது அப்படின்னு அப்பாவுக்கு ஒரு வைராக்கியம்.

இந்த கடன கட்டிட்டாப் போதும். அப்பா முகத்துல ஒரு நிம்மதியப் பார்த்துடலாம். என்னோட தாபமும் தீரும். எந்த கெட்ட வழிக்கும் என்னைய கொண்டு போயிராதன்னு தினமும் தாத்தாவத்தான் வேண்டிக்கிருவேன்.


என் கூட வேலை பார்க்கிற ஆளுங்க எல்லாம் சேர்ந்து ரூம் எடுத்து தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்னறை. அந்த நேரத்துலயும் ஹவுஸ் ஓனர் முழிச்சுக்கிட்டுத்தான் இருந்தார். ரெண்டு விரல்லயும் நல்ல உருட்டா ஒண்ணரைப் பவுனுக்கு மோதிரம், அஞ்சு பவுன் பிரேஸ்லட், ஏழு பவுன் சங்கிலி போட்ட வாட்ச், பத்து பவுனுக்கு எட்டுப் பிடியில் மைனர் செயின் அப்படின்னு ஆளு ஜம்முனு இருந்தார். 25 பவுன் நகை போட்டும் அது தெரியாத மாதிரி ஆகிருதியான பாடி.

”சண்முகம்” எனக் கூப்பிட்டு வீட்டிற்குள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே போனதும்,

என்னோட இன்னொரு காம்பவுண்ட்ல குடியிருக்கிறவர் ஒருத்தர் இருக்காரு. நல்ல மனுசன். பணமுடை. நகை ஒண்ணை விக்கணும்னாரு. போயிப் பாரேன் என்றார்.

”சரிங்க” என தலையசைத்து விலாசம் கேட்டுக் கொண்டேன்.

காலையில் அங்கு போய் விவரம் சொன்னதும், உள்ளே கூப்பிட்டு போய், விசாலாட்சி காப்பி போடும்மா என்று சமையல்கட்டு பார்த்து குரல் கொடுத்தார். அவர் கையிலும், விரலிலும் நகை அணிந்திருந்த அடையாளங்கள் மிச்சம் இருந்தன. காப்பியோடு வந்த அம்மாளைப் பார்த்தேன். எண்ணெய் ஏறிய கல் மூக்குத்தி, பவுனைவிட அரக்கு அதிகமாய் இருந்த அரைப்பவுன் தோடு, கவரிங் வளையல், மஞ்சக் கயிற்றில் கோர்த்திருந்த தாலி.

அவர் செருமிக் கொண்டே, பேரனுக்கு ஒரு  ஆப்பரேஷன் பண்ணவேண்டியிருக்கு. அதான். என்று சொல்லி நகையை எடுத்து வரச் சொன்னார். இரண்டு அன்னப்பட்சிகள் கொண்ட கல் நெக்லஸ். அன்னப்பட்சியின் பொருத்தமான இடங்களில் சின்ன சைஸ் வெள்ளை, சிகப்பு, பச்சைக் கற்கள் வைத்து உயிரோட்டமாய் இருந்தது. அவை காதலுடன் ஒன்றையொன்று பார்ப்பதாகவே தோன்றியது. பட்சியின் பின்புறம் நல்ல முறுக்கான செயின். அதில் முக்கால் இஞ்சு இடைவெளியில் அரை இஞ்சு விட்டமுள்ள கல் பதக்கம். பக்கத்துக்கு ஆறாய் பன்னிரண்டு கல் பதக்கங்கள். அருமையான் பெரிய சைஸ் வெள்ளைக்கல் பதக்கங்களில் பதிக்கப்படு இருந்தது.

சூழ்நிலை மறந்து அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.

“நாங்க வசதியா இருந்தப்ப, எங்க தெருவில பொண்ணு பார்க்க ஆள் வந்தாங்கண்ணா, பொண்ணு வீட்டுகாரவுங்க இந்த நெக்லஸ் வாங்கிட்டு போயி, அவங்க பொண்ணுக்கு போட்டு விடுவாங்க. ராசியானதுன்னு அப்ப பேரு. புள்ளைத் தாச்சி பொண்ணுங்கல்லாம் வளைகாப்பு அன்னைக்கு இதப் போட்டுக்கிட்டு போயித்தான் போட்டோ பிடிக்கும்க.”

பின்ன பையன் ஒரு ஆட்டம் ஆடி, ஓஞ்சு போயி, காதலிச்சு, அதுல ஒரு பிரச்சினையாகி  ஏகப்பட்ட விரயம் தம்பி.

எந்தப் புண்ணியமோ தெரியலை. இப்ப நாலு வருஷமா திருந்தி தொழில் பண்ணிக்கிட்டு இருக்கான். ரெண்டு வருசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. பொண்ணு வசதியில்லாத குடும்பம், ஆனா நல்லவங்க. போன வருசம் பேரன் பொறந்தான். ஹார்ட் பிராப்ளமாம், ஒரு பைபாஸ் சர்ஜரி பண்ணனும். ரெண்டு லட்சம் அவசரமா தேவைப்படுது அதான் என்று முடித்தார்.

இப்போது எங்கு செய்தது என்ற முத்திரையைப் பார்க்க லேசாக திருப்பிப் பார்த்தேன்.

அந்த அம்மாள் வருததமான குரலில் சொல்லத் தொடங்கினார்,

“அந்தக் காலத்துல நிலக்கோட்டை ஆசாரின்னு ஒருத்தர் செஞ்சது. ரொம்ப கைராசிக்காரராம். எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார். அவர் கையால செஞ்சு கொடுக்கிற நகை  லட்சுமிகரமானதும்மா. இது இருக்க வரைக்கும் லட்சுமி உன்னைய விட்டு போகமாட்டா அப்படின்னு.” அதனால தான் இதை மட்டும் எந்த கஷ்டம் வந்தப்பவும் விக்காம இருந்தேன். இப்ப பேரனுக்காகத்தான் இதை வெளியவே எடுக்கிறேன் என்றார்.

நகையின் பின்புறத்தில் பதிந்திருந்த என் தாத்தாவின் முத்திரை என்னைப் பார்த்து ஏதோ சொல்வது போல் இருந்தது.

”இந்த நெக்லஸ் இங்கேயே இருக்கட்டும், இது எந்தக் காலத்துக்கும் அடகுக்கோ, விக்கவோ போக வேணாம்.  நான் சாயங்காலம் ரெண்டு லட்ச ரூபா கொண்டு வந்து கடனா தர்றேன்”  கொஞ்சம் கொஞ்சமா அடச்சாப் போதும் என்று சொல்லியபடி கிளம்பிய என்னை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.



August 26, 2012

சின்னதம்பி திரைப்படம் – சில நினைவுகள்


எவ்வளவோ படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு இருக்கும். மேலும் ரீப்பீட்டட் ஆடியன்ஸும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு சகலகலா வல்லவன், கரகாட்டக்காரன், பாட்ஷா, உள்ளத்தை அள்ளி தா மற்றும் கில்லி போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் இடம்பெற்ற படம்தான் சின்னதம்பி. அதுவும் இப்படம் வெளியான போது 60 ஆண்டுகால தமிழ் சினிமா வசூல் சாதனையை இது உடைத்து விட்டதாகவே பேசிக்கொண்டார்கள்.

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்த சந்தான பாரதியும் வாசுவும் அவரிடம் இருந்து வெளிவந்து, இணைந்து இயக்கிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல் (பன்னீர் புஷ்பங்கள் தவிர) போக, அவர்களின் பிரிவு தவிர்க்க முடியாமல் ஆனது.

பி வாசு தனித்து இயக்கிய முதல் தமிழ்படம் என் தங்கச்சி படிச்சவ. இந்தப் படத்தின் வெற்றி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சத்யா மூவிஸ் வீரப்பன், தான் ரஜினியை வைத்து அடுத்து தயாரிக்க இருந்த பணக்காரன் திரைப்படத்திற்கு வாசுவை ஒப்பந்தம் செய்தார். வாசுவின் தந்தை பீதாம்பரம் எம்ஜியாரின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞர் என்பது அவருக்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1990ல் பணக்காரன் மட்டுமில்லாமல் வேலை கிடைச்சுடுச்சு மற்றும் நடிகன் ஆகிய படங்களை சத்யராஜை வைத்து இயக்கினார்.

வேலை கிடைச்சுடுச்சு படமே கதாநாயகனாக சத்யராஜுக்கு ஒரு திருப்புமுனைப் படம். அதற்கு முன் வந்த படங்களில் எல்லாம் அவரை முழு ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இந்தப் படத்தில் ஏற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து வந்த நடிகன் படம் சத்யராஜின் மார்க்கெட்டையே உயர்த்தியது.

இந்த நிலையில் தான் பி வாசு சின்னதம்பி பட வேலைகளை ஆரம்பித்தார். அவருக்கு இப்படி ஒரு கதை எப்படி தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின் பல பத்திரிக்கைகள் ப்ரெட்டி வுமன் என்னும் ஆங்கிலப் படத்தை சுட்டுத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று பேசிக்கொண்டார்கள். படகோட்டியைப் பார்த்து டைட்டானிக் எடுக்கப்பட்டது என்பதற்கு இணையான கம்பேரிசனே இது என பின்னாளில் விளங்கியது.

சின்னதம்பி படம் ஆரம்பிக்க நினைத்த உடனேயே அவர் கால்ஷீட் கேட்டது சத்யராஜிடமும், கௌதமியிடமும். சத்யராஜ் கதையைக்கேட்டு இதுக்கு நான் சரிப்பட மாட்டேன். பிரபு செட்டாவார் என்று சொன்னாராம் (இது ஜூனியர் விகடன் பாணி சொன்னாராம் இல்லை. பி வாசுவே ஒரு பேட்டியில் சொன்னது).
சத்யராஜ் தன்னை நன்றாகவே எடை போட்டுத்தான் வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் அவர் அழகேசன் படத்தில் அறியாதவன் வேஷம் போட்டதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களை சினிமா உலகம் அறியும்.

ஆமாம். கவுண்டமணிக்கு ஜென் துறவி வேஷம் கொடுத்தால் கூட அதில் ஒரு வில்லங்க மனிதர் தெரிவார். செந்திலுக்கு மாபியா லீடர் வேடம் கொடுத்தாலும் மஞ்ச மாக்கான் தான் நம் கண்ணுக்கு தெரிவார். அதுபோலத்தான் சத்யராஜும்.

கௌதமிக்கு கால்சீட் பிரச்சனையோ என்னவோ? தெரியவில்லை. குஷ்புவுக்கு அந்த வேடம் வந்தது. முதலில் வாசு இரு மனநிலையில் இருந்தாராம். ஏனென்றால் அதற்கு முன் தான் மைடியர் மார்த்தாண்டன் திரைப்படம் வெளிவந்திருந்தது. ரோமன் ஹாலிடே பட கதையை தட்டி உல்டா செய்திருந்த அந்தப் படத்தில் பிரபு விவரம் தெரியா ராஜகுமாரனாகவும், குஷ்பு நவ நாகரீக மங்கையாகவும் நடித்திருந்தார்கள். மேலும் குஷ்பு கவர்ச்சியின் எல்லையை அந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் தொட்டிருந்தார். பின் ஒரு வழியாக சமாதானமாகி பிரபு-குஷ்பு-கவுண்டமணி-மனோரமா-ராதாரவி என படையுடன் அவுட்டோருக்கு கிளம்பினார்.

அப்போது மூன்று முக்கியமான சினிமா பத்திரிக்கைகள் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ், பிலிமாலயா மற்றும் வண்ணத்திரை. இதில் பிலிமாலயாவும், வண்ணத்திரையும் கிளிவேஜ் தெரியும் படங்களைத்தான் அட்டைப்படமாகப் போட வேண்டும் என்ற கொள்கையில் இயங்கி வந்ததால் அவை பேட் புக்ஸ் கேட்டகிரியில் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ் மட்டும் ஓரிரு வண்ணப்பக்கங்களுடன் வெளிவரும். அதில் சின்னதம்பி பட அவுட்டோரை கவர் செய்திருந்தார்கள். குஷ்புவின் கன்னங்களில் சந்தனம் தடவி மொக்கையான ஸ்டில்களுடன் அது வெளிவந்தது. படம் பார்க்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பையும் தூண்டாத ஆவரேஜ் கவரேஜ்.

ஆனால் அதே நேரத்தில் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் பற்றி பரபரப்பு செய்திகள் வந்து கொண்டிருந்தன. 91 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு படங்களும் ரிலீஸ். அப்போது மதுரையின் முக்கிய தியேட்டரான நடனாவில் கேப்டன் பிரபாகரன் ரிலீஸ். சின்னதம்பி சக்தி தியேட்டரிலும் அப்போது அவுட்டரில் இருந்த பத்மா என்னும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆனது. மதுரை ராமநாதபுரம் வினியோக ஏரியா முழுவதும் ஆவரேஜ் தியேட்டர்களிலேயே சின்னதம்பி ரிலீஸானது.

போஸ்டர் டிசைனும் குப்பையாக இருந்தது. ஒரு உருட்டுக்கட்டையோடு பிரபு நிற்க, ஓரத்தில் குஷ்பூ, கவுண்டமணியின் தலையளவு புகைப்படம் மட்டும். என் நண்பர்களுடன் சேர்ந்து கேப்டன் பிரபாகரனை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு ஊர் திரும்பியாகிவிட்டது.

ஒரு வாரம் இருக்கும். சின்னதம்பி படம் நல்லாயிருக்குடா . என்றான் ஒரு நண்பன். அவன் அக்காவை தேனியில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அங்கு சென்ற போது அங்கே சுந்தரம் தியேட்டரில் பார்த்திருக்கிறான்.

“படம் முடிஞ்சு வெளியே வர்றோம்டா, தெருவில இருக்குற கடை, வீடு எல்லாமே அந்தப் பட பாட்டுத்தாண்டா” என்று சிலாகித்தான். (அங்கு அந்தப் படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது). நாங்கள் உடனே அந்தப் படம் பார்க்க கிளம்பினோம். அருகில் இருந்த திண்டுக்கல்லில் படம் அப்போது ரிலீஸாகவில்லை. எனவே அடுத்த நாள் மதுரைக்கே வண்டி ஏறினோம். சக்தி தியேட்டர் இருப்பதே ஒரு  பிஸியான வணிகத் தெரு. இந்தப் பட கூட்டமும் சேர்ந்து கொள்ள தெருவே திணறியது. பின் பத்மா திரையரங்குக்கு போனோம் (இப்போது இது மதுரையில் ரிலையன்ஸ் பிரெஷ் கடையாக மாறிவிட்டது).

இப்படி ஒரு கூட்டத்தை அந்த தியேட்டர் அதற்கு முன்னும் கண்டதில்லை. பின்னரும் கண்டதில்லை. அருகில் இருந்த டீக்கடையில் அந்த வாரம் மட்டும் தினமும் 400 லிட்டர் பால் எடை கட்டி அடித்ததாக கடைக்காரர் நண்பரிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.  

படம் பார்த்தாகி விட்டது. எந்த அம்சம் கவர்ந்தது எனத் தெரியவில்லை. இளையராஜாவின் இசையா, குஷ்புவின் இளமையா, கவுண்டமணியின் காமெடியா என பிரித்தறியத் தெரியவில்லை. ஆனால் படத்தை மட்டும் பல தடவை பார்த்தாகி விட்டது. திண்டுக்கல் சோலைஹால், பெரியகுளம் அருள், விருதுநகர்- செண்ட்ரல்,வத்தலக்குண்டு பரிமளம் என அப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அட்டெண்டென்ஸ் போட்டாகி விட்டது. அப்போதைய கால கட்டத்திற்கு நல்ல ஆக்‌ஷன் படமான கேப்டன் பிரபாகரனையே கான்ஸ்டபிள் ஆக்கியது இந்தப் படம்.

இன்னும் கூட எனக்கு ஏன் இந்தப் படத்தை இத்தனை முறை பார்த்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை. பத்திரிக்கைகளில் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் இல்லை. தீப்பொறி ஆறுமுகம் கூட இந்தப் படத்தை வைத்துத்தான் சிவாஜி குடும்பத்தை நக்கலடிப்பார்.

“அவங்கப்பா ஏன் பிறந்தாய் மகனே? ந்னு பாட்டுப் பாடுவார். மகனுக்கு தாலி தெரியல. என லாஜிக் இல்லா மேஜிக்காய் அடித்து விடுவார்.

முன்னர் குறிப்பிட்ட மற்றும் பெரும்பாலான வசூல் சாதனை படங்களையெல்லாம் பார்த்தால் அவற்றின் மேஜிக் சில ஆண்டுகளுக்காவது நிலைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தின் மேஜிக் ஆறு மாதங்களுக்குள் காலாவதியாகி விட்டது. ஒரு படத்தின் வெற்றியை ரீ ரிலிஸ் மற்றும் திருவிழா காலங்களில் உபயதாரர் மூலம் திரையிடல் போன்றவற்றின் வழியாக கணக்கிடலாம். ஆனால் இந்தப் படம் அந்த ஆறுமாதத்துக்குப் பின் அவுட் டேட்டட் ஆகி விட்டது.

அப்படியென்றால் எந்த அம்சம் இந்தப் படத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்க்கும் படி தூண்டியது? இந்தப் படம் வெளியாவதற்கு ஒரு மாதம்  முன் என் ராசாவின் மனசிலே படம் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. உடன் வெளியான கேப்டன் பிரபாகரனும் நல்ல படம்.

ஒருவேளை தமிழ் ஆண்களுக்கு நல்ல வசதியான குடும்பத்தில் கொப்பும் குலையுமான பெண்ணைக் கைபிடிக்க வேண்டும் என்ற ஆழ் மன ஆசை காரணமாக இருக்குமா?    

எது எப்படியோ? இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும் என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.